சாத்தன் கதைகள்/3. இலக்குமி

விக்கிமூலம் இலிருந்து



3. இலக்குமி

அசோதரம் எனும் நாட்டை இரவிவன்மன் எனும் அரசன் ஆண்டிருந்தான். அவன் தலைநகர் பல்வேறு துறையிலும் பணியாற்றும் மக்கள் பெருங்கூட்டமாய் வாழும் ஒரு பேரூர். அதனால் அம்மாநகர், ஒயாது ஒலிக்கும் கடலொலி போலும் பேரொலியை எப்போதும் பெற்றிருக்கும். அத்தகு பெருமை மிக்க அப்பேரூரில் இருந்து பாராண்ட இரவிவன்மன், அமுதபதி எனும் அழகிய நல்லாளை மணந்து மனையறம் மேற்கொண்டு வாழ்ந்தான். அவர்கள் ஆற்றிய அறத்தின் பயனாய், தாரை, வீரை, இலக்குமி எனும் மகளிர் மூவர் பிறந்தனர். மூவரும் முறைப்படி வளர்ந்து மனப்பருவம் பெற்றனர்.

இரவிவன்மன், மகளிர் மூவர்க்கும் மணம் முடிக்க முனைந்தான். அங்க நாட்டின் கச்சயநகர்க் காவலனாய துச்சயன் என்பான் வேந்தர் பலரை வென்று, வெற்றிக் கழல் புனைந்த வீரனாதல் அறிந்து, அவனுக்குத் தாரை வீரை இருவரையும் மணம் செய்தளித்தான். இளையளாகிய இலக்குமி பெற்றோர் இருவர்க்கும் துணையாய், அசோதர நகரத்து அரண்மனையின் செல்வச் சிறுமியாய் வாழ்ந்திருந்தாள். நிற்க.

காந்தாரம் எனும் பெயர் பூண்ட பெரிய நாடொன் றிருந்தது; அதன் உட்பகுதியாய்ப் பூருவதேயம் என்ற ஒரு சிறு நாடிருந்தது. அந் நாட்டை அத்திபதி எனும் அரசன் அறம் பிறழாது ஆண்டு வந்தான். அதனால் அவன் நாட்டில் பழி பாவங்கள் இலவாயின. அவன், சித்திபுரம் எனும் சிறந்த நகரத்தைச் சேர்ந்த சீதரன் எனும் சிற்றரசனுடைய மகளாய நீலபதி எனும் நிகரிலா அழகுடையாள அரசமாதேவியாய் அடைந்து இன்புற்றிருந்தான். அவர்களுக்கு இராகுலன் என்ற ஒரு மகன் பிறந்தான். கால ஞாயிற்றின் கவின் பெற்றுக் காளைப் போல் வளர்ந்து வரைவிற்குரியனாய் விளங்கினான். இரவிவன்மன், தன் இளைய மகள் இலக்குமிக்கு ஏற்ற கணவன் அவ்விராகுலனே எனத் தேர்ந்து, இருவர்க்கும் மணம் முடித்து வைத்து மகிழ்ந்தான்.

மனங்கொண்ட இலக்குமி பிறந்த நாட்டைப் பிரிந்து புகுந்த பூருவ நாடடைந்து பெருவாழ்வு வாழ்ந்திருந்தாள். அறவோர்க்கு அளித்தல், அந்தணர் ஒம்பல், துறவோர்க் கெதிர்தல், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடல் முதலாம் இல்லறக் கடமைகளை இனிதாற்றி, நல்லற மனவியாய் விளங்கினாள்.

இலக்குமி உண்மைக் காதலின் இயல்பை உணர்ந்திருந்தாள். அதனால் ஊடுதல் காமத்திற்கு இன்பம் என்ற காதலறத்தைக் கடைப்பிடிக்க விரும்பினாள். அவ்வாறே ஒரு நாள், கணவனோடு ஊடிக்கொண்டு ஒரு பொழில் அடைந்து மறைந்திருந்தாள். இராகுலன் அவள் ஊடலைத் தணித்து அவள் கருத்து மாறுபாட்டைப் போக்குதற்குத் துடித்தான். அதனால் அவள் தரும் காதல் இன்பத்தைப் பெற அவள் அடிபணியும் கருத்தோடு அவள் புகுந்திருந்த பூஞ்சோலைக்குச் சென்றான்.

அப்போது ஆங்கு அவன் கண்ட ஒருகாட்சி அவனுக்குச் சினமூட்டிவிட்டது. வானூடு செல்லும் வழக்கம் உடையோனும் செயற்கரிய செய்யும் பெரியோர்களையே சார்ந்து வாழ்வோனும், அதனால் சாதுசக்கரன் எனும் காரணப் பெயர் பெற்றோனும் ஆய ஒரு முனிவன் மணி பல்லவம் சென்று, அதற்கு அணித்தாக உள்ள சிறு திவில் இடம்பெற்ற சமந்தம் எனும் மலையுச்சியில் பொருந் தியிருந்தியிருக்கும் புத்தன் திருவடிகளை வணங்கி வழி பட்டு மீளுங்கால், உச்சிப் பொழுது ஆய்விட்டமை அறிந்து, இலக்குமி புகுந்திருந்த பூஞ்சோலையில் இறங்கினான். கணவனை எதிர் நோக்கியிருந்தவள், தன்முன் புதியான் ஒருவன் திடுமென, அதுவும் வானத்தினின்றும் இழிந்து வந்து தோன்றியதைக் காணவே, அவள் அறிவு மயங்கிவிட்டது. உள்ளத்தில் நடுக்கம் எழுந்தது; அது உடலயும் பற்றிக்கொண்டது; வாயினின்றும் சொற்கள் வெளிப்பட்டில. தன்னை அறியாதே அவன் தாளடி பணிந்தாள். இலக்குமியின் வாடிய நிலையினையும், வணக் கத்தையும், அவன் முன் வந்து நிற்கும் புதியோனையும் கண்டு, இராகுலன் கடுஞ்சினம் கொண்டான். உடனே மனைவியின் மனக்குறை தீர்த்து அவளை மகிழ்விக்க வந்த அவன், “ஏடி! நின்னால் வணங்கத்தக்க இவன் யாவன்? ஈங்கிவன் எவ்வாறு வந்தான்” எனக் கேட்டு வெகுண்டான்.

கணவனின் வெகுண்ட நிலைகண்டு இலக்குமி கலங்கினாள். அவன் கூறும் வெஞ்சொற்கள் அவன் வாயை விட்டு வெளிவராவண்ணம் அவன் வாயைப் பொத்தினாள். “காதல! வானுரடிழிந்த வான் புகழ் உடையவன் இம்முனிவன். இவன் மலரடி வணங்கும் மனம் நினக்கு இல்லாமை நாம் செய்த தீவினைப் பயன்போலும்; அத்தகையோனப் பழித்தல் பெருங்கேடளிக்கும் கொடுஞ் செயலாம்” எனக்கூறி அவன் சினத்தைத் தணித்தாள். பின்னர்க் கணவனேடு மாதவன் மலரடி வீழ்ந்து வணங்கினாள். “அமர முனிவ! யாங்கள் நின் பால் அன்பிலேமாயினும், எம்பால் அமுதுண்டு செல்லல் வேண்டும்” என முனிவனை வேண்டிக்கொண்டாள். மனயறத் தலைவியாய் மங்கையர் நல்லாளாய் விளங்கிய இலக்குமியின் வேண்டுகோளை முனிவன் ஏற்றுக் கொண்டான்; அவள் அளித்த அமிழ்து நிகர் உணவை உண்டு அவளை வாழ்த்தி வானூடெழுந்து சென்றான். ஆண்டுகள் சில சென்றன.

ஒரு நாள், பூருவதேயத்து அரசன் அத்திபதியின் மைத்துனனாய பிரமதருமன், தலைநகர் இடவயமா நகர்க்கு வந்தான். அறநூல்களை அறிந்தோனும், முக்கால நிகழ்ச்சிகளையும் முன்னின்றுணரவல்ல மூதறிவுடை யோனுமாய அவன், அரசனை அடைந்து அவனுக்கு அறவுரை பல வழங்கினான். இறுதியில், “அத்திபதி! இந்நாவலந் தீவில் இற்றைக்கு ஏழாம் நாள் நில நடுக்கம் உண்டாகும். அதன் பயனாய் உன் தலைநகராய இடவயம் எனும் இப்பேருரும், நாகநாட்டில் நானூறு யோசனை பரப்புள்ள பெருநிலமும் கடல் நீர் புகுந்து பாழுறும். ஆகவே, இந்நகரை விட்டு இன்றே நீங்கி வேற்றிடம் சென்று வாழ்க” எனக் கூறினான்.

மைத்துனன்பால் தான் கேட்ட செய்தியைத் தன்னுட்டு மக்களுக்குப் பறையறைந்து தெரிவித்தான். அது கேட்டு அந்நகர் வாழ் மக்கள் ஆவும் மாவும் கொண்டு வேற்றிடம் சென்றனர். அத்திபதி, தானையோடு புறப்பட்டு, வடதிசை நோக்கிச் சென்றான். இடை வழியில் காயங்கரை எனும் பேராறு குறுக்கிட்டது. அரசன், அதன், கரைக்கண் அமைந்த பொழிலில் பாடி அமைத்துச் சிலநாள் தங்கினான்.

அரசனைப் பின்பற்றி வந்த அரசிளங் குமரனோடு இலக்குமியும் ஆங்கு வந்திருந்தாள். மன்னனோடு வந்திருந்த மாதவமுனிவனாய பிரமதருமன் அனைவர்க்கும் அறம் உரைத்துக் கொண்டிருந்தான். முனிவனுக்கு உணவளித்துப் பேணும் பொறுப்பினை இலக்குமியும், இராகுலனும் ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொரு நாளும் முனிவன் விரும்பும் உணவை விடியற் காலத்திற்கு முன்பாகவே ஆக்கி அளித்து வந்தனர். ஒருநாள் அடிசிற்றொழிற்குத் துணைபுரியும் பணியாள், யாது காரணத்தாலோ உரிய காலத்தில் வந்திலன். காலங் கடந்து வந்த குற்றம் அவன் கருத்தை உறுத்திற்று. அவனைக் கண்ட பணியாளின் உடலும் நடுங்கிற்று. அந்நடுக்க மிகுதியால், கால்வழுக்கி வீழ்ந்தான். அவன் வீழ்ந்ததால் அடிசிற் காலம் உடைந்து அழிவுற்றது.

பணியாள் காலம் கழித்து வந்தமைக்கே இராகுலன் அவன்பால் கடுஞ்சினம் கொண்டிருந்தான். அந்நிலையில் பணியாள் கால் வழுக்கி வீழ்ந்து கலத்தைப் பாழாக்கவே, அவன் சினம் அளவிறந்துவிட்டது, அருகில் இருந்த, உடைவாளை எடுத்தான். வேலையாளத் தலை வேறு உடல் வேறாக வெட்டி வீழ்த்தினான்.

இராகுலன் சினம் மிக்குச்செய்த செயலக் கண்ணுற்ற பிரமதருமன், இலக்குமியை அழைத்து, “அரசிளங்குமரி, இராகுலன் அடாது புரிந்த இச்செயலால் இற்றைக்குப் பதினாறாம் நாள் திட்டிவிடம் எனும் பாம்பு தீண்ட இறந்துபோவான்; கணவனைப் பிரிந்து கைம்மை நோன்பு மேற்கொள்ளக் கருதாது நீ, அவனோடு அழல் புகுந்து உயிர் இழப்பாய்; இது நும் ஊழ்வினைப் பயன்; உள்ளம் கலங்காதே” என உணர்த்தினான்.

கணவன் கடுஞ்சினத்தால் நேர இருக்கும் கேட்டினை எண்ணி நடுங்கினாள் இலக்குமி. அந்நிலையில் முனிவன் கூறியவாறே, இடவயமும், நாகநாடும் நில நடுக்கத்தால் கடலில் ஆழ்ந்து போயின. முனிவன், முன்னறிந்து மொழிந்தனவற்றுள் ஒன்று உண்மை யானமை காணவே, இலக்குமி, அவன் உறைத்த மற்றொன்றும் மாறாது என்பதை அறிந்து மாளாத்துயரில் ஆழ்ந்தாள்.

தலைநகர் அழிவுற்றது என்பதை அறிந்த அத்திபதி, காயங்கரை நதியைக் கடந்து அவந்திமாநகர் அடைந்து, அதை அரசிருக்கையாகக் கொண்டு வாழ்ந்திருந்தான். பிரமதருமன் கூறிய நாளும் பிறந்துவிட்டது; அரசனும், அவன் சுற்றமும் எவ்வளவோ விழிப்பாயிருந்தும், திட்டிவிடம், இராகுலனை எவ்வாறோ தீண்டிவிட்டது. இராகுலன் இறந்து விட்டான். அவன் உடலை ஈமத்தில் இட்டு எரியூட்டினர். கணவனை இழந்த காரிகை பெருந்துயருற்றாள். பிறவியை வெறுத்தாள். ஊரும், உறவும் ஒன்றுகூடித் தடுக்கவும் கேளாது, தீப்பாய்ந்தும் உயிர்விட்டாள்.

இலக்குமி இறந்துவிட்டாள். ஆனல் அவளாற்றிய இல்லறப் பயன் அழியவில்லை. சாது சக்கரனுக்கு உணவூட்டிய நல்லறம் தனக்குரிய பயனை அவளுக்கு அளிக்க ஆர்வம் கொண்டிருந்தது. அதன் பயனாய், அவள் சோணாட்டில், காவிரிப்பூம்பட்டிணத்தில், பரத்தையர் குலத்தில் பிறந்தும் பலராலும் போற்றிப் புகழப்படும் மாதவியின் மகளாய் வந்து பிறந்தாள். பழம் பிறப்பில் ஆற்றிய பேரறப் பயனாய் தவநெறி மேற்கொண்டாள். அதன் பலனாகவே, உயிர்களின் பசி போக்கும், அமுதசுரபி யெனும் உயர்ந்த உண் கலத்தைப் பெற்றாள். அதன் பயனாகவே மணிமேகலா தெய்வத்தின் துணையும் புத்த பிடிகைக் காட்சியும் கிடைக்கப் பெற்றாள். அவற்றின் துணையால் தன் பழம் பிறப்பை உணர்ந்து கொண்டது அந்நல்லறப் பயனே; அதுவே, தன் மீது காதல் கொண்டு அதன் காரணத்தால் கொலையுண்ட அரசமகன் உதயகுமரன், பழம் பிறப்பில் தன் கணவனாகிய இராகுலனே என அறிந்து அவன்பால் மனம் நெகிழ்ந்து மாசுபடஇருந்த மணிமேகலையைத் தடுத்துத் தவநெறிகெடாத் தூயோளாகத் துணை புரிந்தது. பழம் பிறப்பில் தனக்குத் தமக்கையராய்த் தோன்றிய தாரையும் வீரையும் இப்பிறவியில் முறையே சதவியும், சுதமதியுமாகப் பிறந்து தனக்குத் தாயாகவும் தோழியாகவும் நின்று துணை புரியச் செய்ததும், இலக்குமி அன்று ஆற்றிய அறப்பயனே ஆகும்.

கணவன் செய்யும் கேட்டினைத் தவிர்க்க இயலும் காலத்தில் தவிர்த்து அவனுக்கு வரவிருந்த கேட்னைக் கொடுத்தும், அதைத் தவிர்க்கமாட்டாது போக, அவன் அக்கேட்டினைச் செய்து கெட்டழிந்த போது அவனோடு தானும் இறந்து, இறவாப்புகழ் பெற்ற இலக்குமி, பின்னர் எடுத்த பிறவியிலும், மணிமேகலை யுருவில் தவநெறி மேற்தொண்டு பவவினை அறுத்த பெரியோன் ஆயினாள். வாழ்க அவள் பெரும் பெயர்!