உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 15

விக்கிமூலம் இலிருந்து

15

ம்பீ! நன்றாக நீ யோசித்து பதில் சொல்லு. உஷாவை விட சகல அம்சத்திலும் உயர்ந்தவள்; மேல் நாடெல்லாம் சென்று, ஜெயத்துடன் திரும்பும் மேதாவி, உயர்ந்த குடும்பத்துப் பெண். ஆகையால், நான் அதை உன்னிஷ்டப்படி முடித்து வைக்கிறேன். நீயும் என்னுடன் அங்கு வா. நேருக்கு நேராகப் பேசி முடித்து விடலாம். உனக்குப் பல விதத்திலும் நன்மை உண்டு. உன்னுடைய நலனுக்கே, நானும் அம்மாவும் பாடுபடுகிறோம். தீர யோசனை செய்து, நாளைக் காலையில் தெரிவி. நிம்மதியாகத் தூங்கு”—என்று இரவே தம்பிக்கும் உபதேசித்துப் பின், தன் விடுதிக்குச் சென்றான்.

மறு தினம், காலையில் தனது வைத்ய சம்மந்தமான அலுவல்களை எல்லாம் முடித்துக் கொண்டு, கனவான் வீட்டிற்குப் போவதற்காக தாமோதரன் விடுதிக்கு வந்தான். தாமோதரன் ஸ்ரீதரன் வரவையே எதிர்பார்த்துக் கொண்டு, தடபுடல் அலங்காரத்துடன் இருப்பதைக் கண்டு, மிக்க சந்தோஷத்துடன் இருவரும் சென்றார்கள்.

டாக்டர் மட்டுந்தான் தனிமையில் வருவார் என்று துரைக்கண்ணன் எண்ணி, ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். சகோதரர்கள் ஜோடியாக வருவதைக் கண்டு, மிக்க சந்தோஷத்துடன், காரியம் கைகூடி விட்டதாகவே எண்ணி, வரவேற்றார்… “ஸார் ! நேற்றிரவு ஒரு அவஸரத் தந்தி வந்தது. என் மகள் இன்றே காலையில் வந்து விடுவதாயும், ப்ளேனில் பறந்து வந்து கொண்டிருப்பதாயும், என்உடல் நலம் சரியாக இல்லாததால், ப்ளேன் நிலையத்திற்கு வர வேண்டாம் என்றும் தந்தியில் கண்டிருக்கிறது. அதை உங்களிடம் டெலிபோனில் சொல்வதற்காக இரண்டு முறை கூப்பிட்டேன். நீங்கள் வீட்டிலில்லை என்று பதில் கிடைத்தது. இப்போதே வந்தாலும் வந்து விடலாம். சகலமும் வெகு சுபமாக முடிந்து விடலாம்”, என்று மளமளவென்று' தனது அபிப்ராயத்தை வெளியிட்டுப் பின், “டாக்டர்! இவர் யாரு?” என்றார்.

டாக்:- இவர் என் சகோதரர்; நல்ல குணசாலி, மகா மேதை… என்று சொல்லிக் கொண்டிருக்கையில் வாசலில் பெரிய கார் வந்து நின்றது கண்டு, துரைக்கண்ணன், “ஸார்! என் மகள் வந்து விட்டாள்; இதோ போய் அழைத்து வருகிறேன்” என்று கூறியவாறு வாசலுக்கு ஓடி வந்தார்.

அசல் ஆங்கிலேய மாதர் இருவரும், இரு வெள்ளைக்கார துரைமார்களும் மட்டும் வண்டியிலிருந்து இறங்கியதைக் கண்டு கண்ணபிரான் ஏமாற்றமடைந்து, “நம் மகளென்று எண்ணினோமே! இவர்கள் யாரோ தெரியவில்லையே” என்று விழித்தவாறு நிற்கையில், “ஹல்லோ! மை பாதர் குட்மார்ணிங்க்”… என்று கூறியவாறு வெள்ளைக்கார உடையிலுள்ள அவர் மகள், தகப்பனாரை சேர்த்துக் கட்டிக் கொண்டதைக் கண்டு திடுக்கிட்ட துரைக்கண்ணன், அப்படியே ப்ரமை பிடித்துப் போய், “இதென்ன பாமாவா?… என் கண்மணி பாமாவா?…” என்று ஒரு விதமான பதட்டத்துடன் கேட்டு, வெறிக்க வெறிக்க பார்த்தார். தன் செல்வி இங்கிருந்து சென்ற போது, இருந்த அழகென்ன, அலங்காரமென்ன, ஜாதி மத ஆசையின் ஆழமென்ன, இப்போது தொப்பியும், கவுனும் அணிந்து வந்துள்ள கோலமென்ன என்றதை அவராலேயே நம்ப முடியாமல், மீண்டும் பதறியவாறு… “இதென்னம்மா வேஷம்? இதென்ன கண்றாவி கோலம்…” என்று வாய் விட்டே உரக்கப் பதட்டத்துடன் கேட்டார்.

பாமா சிரித்துக் கொண்டே, “அப்பா உள்ளே போவோமே… ஏன் இத்தனை படபடப்பு அப்பா? காலத்திற்கேற்ற போக்கில், மனிதர்கள் வாழ்க்கை வண்டியை செலுத்தினால்தானே சுகமாய் வாழ முடியும்? அப்பா, இதோ இவர்தான் என் கணவர் மிஸ்டர் ஸ்டோன் துரையவர்கள். இவர்கள் எனது நாத்தனார் மிஸஸ் ஸ்மித், இவர் மிஸ்டர் ஸ்மித்” என்று கூறும் வார்த்தைகளைக் கேட்ட உடனே, பாவம் துரைக்கண்ணனுக்கு வானமே இடிந்து, தலை மீது விழுந்து விட்டது போன்ற மகத்தான அதிர்ச்சி உண்டாகி, “ஹா! டாக்டர்… டாக்டர் ஸ்ரீ தர்… இங்கு வாருங்கள்…” என்று கூவியபடியே மூர்ச்சித்து விழுந்து விட்டார்.

உண்மையில், தன் மகளுடன் ப்ரமாதமாய் குலாவி மகிழ்ந்தவாறு கனவான் வரப் போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீதரனுக்கு இந்த கூக்குரலின் அலறல் திடுக்கிடச் செய்தது; ஓட்டமாக ஓடி வந்தான்.

பக்கம் 100

நான்கு வெள்ளைக்காரர்கள் நிற்கிறார்கள்; இவர் மூர்ச்சையாகி விழுந்து கிடக்கிறார். விவரம் ஒன்றுமே புரியாத நிலைமையில், துரைக் கண்ணனை சோதித்துப் பார்த்தான். தாங்க மாட்டாத அதிர்ச்சியினால், இதயம் வெகு வேகமாய் அடித்துக் கொள்கிறது. நாடி துடிக்கிறது. நிலைமை திடீரென்று படுமோசமாய் விட்டதைக் கண்டு, ஒன்றுமே புரியாத ஸ்ரீதரன் தம்பியின் உதவியால், அவரை உள்ளே கொண்டு வந்து படுக்க வைத்து, சிகிச்சை செய்யத் துடங்கினான்.

“ஸார்! என் தகப்பனாருக்கு திடீரென்று எதனால் இப்படியாகி விட்டது. எனக்கு ஒன்றுமே தோன்றவில்லையே! தாங்கள் யாரோ தெரியாது. நான் இவருடைய மகள். என் கணவர் இவர்”… என்று அவள் சொல்வதைக் கேட்டு, உண்மையில் ஸ்ரீதரன் திடுக்கிட்டு அப்படியே அலறினான்… “இவருடைய மகள் பாமா என்பவரா தாங்கள்… சரிதான் இப்போது விஷயம் புரிந்து விட்டது. உங்களுடைய விஷயமே அவருடைய அதிர்ச்சிக்குக் காரணம். நான் இவருடைய டாக்டர்…ஸ்ரீதரன். இவருக்கு நான்தான் வைத்யம் செய்து குணப்படுத்தினேன்…” என்று சொல்லியபடியே, உயர்ந்த மருந்துகளை ஊசி குத்தி, பலமான சிகிச்சைகள் செய்தான்.

10 நிமிஷம் கழித்து துரைக்கண்ணன் கண்ணைத் திறந்தார். “ஐயோ! குடி.. முழுகி விட்டதே… டாக்டர் ஸ்ரீதரனுக்கு உன்னை மணம் செய்வித்துக் களிக்க, நான் கட்டிய என் மனக்கோட்டை எல்லாம் இடிந்து மண்ணோடு மண்ணாகி விட்டதே! ஐயோ உலகமே இருண்டு, என் வாழ்க்கையில், அந்தகாரம் குடி கொண்டு, என்னை நாசமாக்கி விட்டது. சகலமும் அழிந்து மண்ணோடு மண்ணாகி மங்கி விட்டது. த்ரோகி! குலநாசகீ! குடியைக் கெடுத்த சண்டாளி! நீயா என் மகள், நீயா என் பாமா! நீயா என் வாழ்க்கையின் தீபம்? இல்லை! இல்லை! ஒரு நாளுமில்லை. மானஹீனமற்ற படு பாவி! இனி அரை க்ஷணங் கூட இந்த இடத்தில் நிற்கக் கூடாது… போய் விடு! வெளியே தொலைந்து போய் விடு… ஏ சண்டாளா! பதிதா! போய் விடு… உம் போ! போ] போ!” என்று வீராவேசங் கொண்டு, தன்னை மீறிய ஆத்திரத்துடன் தன் மகளைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளியவாறு, முதுகிலும் நன்றாக அடித்துத் தள்ளி, அவளுடைய கணவன் என்று சொல்லிய வெள்ளைக்காரனையும் உதைத்துத் துரத்தினார். ஸ்ரீதரனும், தாமோதரனும் எத்தனை தடுத்தும், எங்கிருந்துதான் அவருக்கு அந்த சமயம் அந்த நிலையில், பத்து யானை பலம் வந்ததோ, அதை ஒருவராலும் அறிய முடியவில்லை. வெள்ளைக் காரனுக்கு வந்த அவமானத்திலும், ஆத்திரத்திலும் என்னதான் செய்து விடுவானோ என்கிற பயம் வேறு பாதித்து, ஸ்ரீதரனை நடுக்கலுறச் செய்கிறது.

துரைக்கண்ணனின் நிலைமை மறுபடியும் மோசமாகி விட்டது; எனினும் இந்த அக்ரமத்தைக் கண்டு தாளாமல், ஆவேசத்தை விடாமல், “என் வயிற்றில் பிறந்த பெண்ணை கப்பலேற்றிய அன்றே செத்து விட்டதாக எண்ணி விட்டேன். என் கண்மணிக்காக நான் செய்த த்யாகமும், அதற்காக அவள் செய்த த்ரோகமும் இனி என்னால் சகிக்க முடியாது! தன்னுடைய தாய்நாடு, தன்னைப் பெற்ற பிதா, தான் பிறந்த குலம், தன்னுடைய சிறந்த மதம், தன்னுடைய புனித கடமை எல்லாவற்றையும் மறந்து, துறந்து சிற்றின்பப் பேயிக்கு அடிமையாகி, மதம் விட்டு மதம் மாறி மானங்கெட்டு, என் முன்பு தைரியமாக வந்து நிற்கும் இவளை இப்போதே கொன்று விட்டு, நானும் தூக்கு மரத்தில் தொங்கலாடுகிறேன். பாவிப் பெண்ணைப் பெற்ற இந்தப் பாவியும் கொலை பாதச் சண்டாளனாகட்டும்! மிகச் சிறந்த பாரத நாட்டில் பிறந்த ஒரு இந்து பெண்மணி இப்படி செய்தாள் என்று உலகம் தூற்றும் போது, என்னையும் சேர்த்துத் தூற்றட்டும்! தன் தாய்நாட்டின் கண்ணியத்திற்காக, தன் மதத்தின் பெருமைக்காக, தன் ஜாதியின் சிறப்புக்காக, தன் பெண்ணைத் தானே கொன்றான். தன் கைகளாலேயே கொன்றான்—என்று உலகம் என்னைக் கொண்டாடட்டும்! எனக்குள்ள சகல சொத்துக்களையும், தர்ம ஸ்தாபன நிதிக்காக ஸ்ரீமான் டாக்டர் ஸ்ரீதரனிடம் ஒப்படைத்து விடுகிறேன். இந்த பங்களா ஒரு தர்ம வைத்யசாலையாக ஆகட்டும். மானங்கெட்ட மிருகங்களின் உபயோகத்திற்கு உதவாமல், இந்த சொத்துக்கள் பூராவும் ஒரு சிறந்த தர்மத்திற்கு உதவட்டும்… டாக்டர்! என் வக்கீல் வெங்கோபராவைக் கூப்பிடுங்கள்… போடா! முனியா! வெங்கோபராவைக் கூப்பிடு…” என்று பெரிதாகக் கத்தித் துள்ளி குதிக்கும் போது, ஏற்கெனவே இவருடைய குமாஸ்தாவினால், வக்கீலுக்கு இந்த ரகளையான விஷயம் போன் மூலம் அறிவிக்கப்பட்டதால், அவர் அலையக் குலைய ஓடி வந்தார்.

அதே சமயம், துரைக்கண்ணனை எத்தனை தடுத்தும், ஆத்திரத் தீ அடங்காமல் கொழுந்து விட்டு, ஜ்வாலை வீசி எரிந்ததால், அவர் தன் மகளை சுவருடன் வைத்து மோது மோது என்று மோதி உருட்டித் தள்ளினார். அதே சமயம் வந்த வக்கீலும் தடுக்க முயன்றும், வீணாகி விட்டது.

துரைக்கண்ணன் வக்கீலைப் பார்த்ததும், “வக்கீல் ஸார்… இந்த வீடு கொலை களமாகி விட்டது. அதோ! அதோ! ஸ்ரீதரனை இந்த வெள்ளைக்காரப் பாவி அடித்துத் தள்ளி இருப்பதை முதலில் கவனியுங்கள். என் சொத்துக்கள் பூராவும் துடப்பக்குச்சி முதல் சகலமும் ஸ்ரீமான் ஸ்ரீதரனின் தர்ம ஸ்தாபனத்திற்குக் கொடுத்து விட்டேன்… உம்… எழுதுங்கள்… ஸார் சாக்ஷி கையொப்பம் போடுங்கள்; என் மகள் குல த்ரோகி; மத த்ரோகி; தாய் நாட்டின் மதிப்பைக் குலைத்த சண்டாளி; அவளை நானே கொன்று விட்டேன். இதோ நானும் சாகப் போகிறேன். நான் ஸ்ரீதரனுக்கு சொத்துக்களை சத்யமாகச் சேர்த்து விட்டேன். காலணா சொத்துக் கூட இந்தப் பாவிகளுக்குச் சேரக் கூடாது. என் பெண்ணை ஏமாற்றி, மோசம் செய்து, கற்பழித்தது ஒன்று, ஸ்ரீதரனை அடித்துத் தள்ளியது ஒன்று. ஆக இரண்டு குற்றங்களுக்கும் இந்தச் சண்டாள நாயை கைது செய்து இழுத்துச் செல்லுங்கள்…” என்று படபடப்பாய், வெகு ஆவேசத்துடன் கூறியவாறு, வச்கீல் எழுதிய கடிதத்தைத் தானே படித்துப் பார்த்துக் கையொப்பமும் இட்டுக் கொடுத்தார்.

அடிபட்டு விழுந்து விட்ட ஸ்ரீதரனை, வக்கீலும், தாமோதரனும் மெல்லத் தேற்றி அழைத்து வந்தனர். “ஸார்! இதென்ன அக்ரமம்? திடீரென்று இம்மாதிரி நிலைமைகள் உண்டாகலாமா! நீங்களாவது தணிந்து போக வேண்டாமா!” என்று டாக்டர் சொல்லும் போது, துரைக் கண்ணன் மறுபடியும் தன் மகளை ஒரு மிதி மிதித்துத் தள்ளிய வேகத்தில், படீரென்று இதயம் வெடித்து மாண்டாள்!

வெள்ளைக்கார மாப்பிள்ளை கண்ணு மண்ணு தெரியாத ஆத்திரத்தில், “எனக்குப் போட்டியாய் வந்ததுமல்லாமல், நான் சந்தோஷமாய் வந்திறங்கிய உடனே, என் மனைவியின் உயிரைக் குடிக்கக் காத்திருந்த எமனே!” என்று ஸ்ரீதரன் மீது அஸாத்ய கோபங் கொண்டு, தடார் புடார் என்று அடித்து ஓங்கி அறைய, அதிமூர்க்கத்தனத்துடன் வந்ததை, அந்த துரைமகனின் சகோதரியே தடுத்துக் கைகளைப் பிடித்துக் கொண்டு பார்த்தும், அவன் சீறிக் கொண்டு வந்து, சரியானபடி முதுகிலும், காலிலும் அகப்பட்ட இடத்தில் அடித்து, ஆங்கிலத்திலேயே திட்டித் தாண்டவமாடுகிறான். ஒரே தாவாகத் தாவி, வக்கீலிடமுள்ள அப்போது எழுதிய கடிதத்தை, அப்படியே சடக்கென்று பிடுங்கிக் கொண்டு, பதுக்கி விட்டான்.

இந்த திடீர் பாய்ச்சலைக் கண்ட துரைக்கண்ணன், வெள்ளைக்காரன் மீது அடங்காத ஆத்திரங் கொண்டு, “கொலை பாதகா! என் குலத்தை நாசம் செய்ய வந்த சண்டாளா! மகா தர்மபிரபுவான டாக்டர் மீது ஏனடா பாய்கிறாய். உன் மனைவியாம், மனைவி! அவரையா நீ அடிக்கிறாய். நாயே! வெளியே போடா கழுதை”… என்று வெள்ளைக்காரன் மீது பாய்ந்து, அவனை நன்றாக அடித்துத் தள்ளினார். மீண்டும் அதிர்ச்சியால் மூர்ச்சித்தார் துரைக்கண்ணன்.

அதே சமயம் துரைக்கண்ணனின் பந்துவும், பாமாவைத் தான் மணக்க வேண்டுமென்று தீர்மானித்தவனுமான சுந்தரம், வெகு நாட்களாய் மலேயா நாட்டில் வ்யாபார நிமித்தம் சென்றிருந்தவன், பாமா இன்று வருகிறாள் என்பதை அறிந்து அவனும் ஆகாய விமானத்தில் வந்து இறங்கியவன், நேராக தன் மாமன் வீட்டிற்கே வந்தான்.

அவன் வந்த சமயமும், இங்கு ரகளை நடக்கும் சமயமும் ஒன்றாயிருப்பது கண்டு, ஒன்றுமே புரியாது விழித்தவாறு, “மாமா! மாமா!” என்று துரைக் கண்ணனிடம் தாவினான். வெள்ளைக்காரக் கூட்டத்தின் மர்மம் எதுவுமே அறியாததால், மருமகப் பிள்ளையான ஸ்டோன் துரையைக் கண்டு, “ஸார் ! நீங்களெல்லாம் யாரு? இதென்ன யுத்த அரங்கம் போல் ஒரே பயங்கரமாயிருக்கிறதே. பாமா வந்து விட்டாளா! மாமா ஏன் இப்படி விழுந்து கிடக்கிறார்?,” என்று பதைக்கக் கேட்டான்.

இவன் யார் என்பதை ஒருவரும் அறியாததால், தனது பக்கம் பேசக் கூடிய ஆள் கிடைத்து விட்டதாக எண்ணிய ஸ்டோன் துரை… “ஸார் ! கொலை! கொலை! சகலமும் ஒரு நொடியில் நடந்து விட்டது. இதோ! செத்துக் கிடப்பவள்தான் பாமா! இவள் என் மனைவி.”

“என்ன! என்ன! பாமா உன் மனைவியா! செத்து விட்டாளா!… இதென்ன அதிர்ச்சியான விஷயம்! ஒன்றுமே புரியவில்லையே… நீ யாரு…” என்று சுந்தரம் துள்ளியவாறு கேட்டான்.

ஸ்டோன்:- பாமாவை சீமையில் மணந்தவன் நான்… இன்று இப்போதுதான் நாங்கள் வந்து இறங்கினோம். இதோ பாவி யாரோ தெரியாது, இவன்தான் பாமாவை மணந்து, சகல சொத்துக்களையும் அடையக் காத்திருந்தானாம்; பாமாவை நான் மணந்து கொண்டு, ஜோடியாய் வந்ததைக் கண்டதும், இவனே பாமாவை சடக்கென்று கொலை செய்து விட்டதோடு, என்னையும் கொலை செய்யப் பார்த்தான். துரைக் கண்ணனையும் நன்றாக அடித்துத் தள்ளிக் கொல்ல முயன்ற சமயம், நான் அவனைத் தடுக்க ப்ரம்ம ப்ரயத்தனம் செய்தும் வீணாகி, எனக்கே உதை விழுந்து விட்டது. தனக்கு சொத்தும், பெண்ணும் கிடைக்காத ஆத்திரத்தினால் இப்படி செய்யத் துணிந்தான்…”

என்று சொல்வதைக் கேட்ட ஸ்ரீதரன் நடுநடுங்கிப் போய்… “ஸார்… இவை எல்லாம் சுத்த பொய்! முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போன்றிருக்கிறது! துரைக் கண்ணனையே கேட்டால், சகலமும் தெரியும்; அவர் எழுதிய கடிதத்தைக் கூட இந்த மனிதன் அபகரித்துக் கொண்டான். வக்கீலைக் கேளுங்கள், சகலமும் தெரியும்… அவருக்குத் தெளிவு வருவதற்காக, நான் இப்போது ஊசி குத்தியிருக்கிறேன்…” என்று சொல்லும் போது… துரைக் கண்ணன் ஆத்திரத்துடன், “சண்டாளா! கொலை பாதகா! என் குடும்பத்தையே நாசம் செய்த காதகா! எங்கள் இருவரின் உயிரையும் பிரித்த பிறகாவது, உனக்கு புத்தி வருமா! த்ரோகி… பாமா… இதற்காகவா உன்னை இத்தனை செல்லமாக வளர்த்தேன். த்யாகத் தீயில் குதித்தேன்…ஹா… கடவுளே…” என்று தன் போக்காகக் கத்திய போது, சுந்தரம் துரைக் கண்ணனின் முகத்தருகில் சென்று… “மாமா மாமா… இதோ பாருங்கள். நான் உங்கள் ப்ரிய சுந்தரன். இதென்ன அக்ரமம்… எனக்கொன்றுமே விளங்கவில்லையே…” என்றான். துரைக்கண்ணன் அரைகுறை பார்வையில் அவனைப் பார்த்து… “சுந்தரம்..விளங்கவில்லையா… விளங்காது… இதோ… இதோ…… இவர்தான்… இவர்தான்…” என்று ஸ்ரீதரனைக் காட்டி இவரைக் கேட்டால் சகலமும் விளங்கும் என்று சொல்ல வந்தவருக்கு அதற்குள் அபாரமான மயக்கத்தின் அதிர்ச்சியினால், அப்படியே வார்த்தைகள் நின்று விட்டது.

இதையே சந்தரப்பமாகக் கொண்ட ஸ்டோன் துரை… “ஸார்! போதுமா! ஆளை நேருக்கு நேராகக் காட்டி, இவர்தான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று சொல்லி விட்டார். இனியும் சம்சயமா…” என்று சுந்தரத்தின் உள்ளத்தைக் கலக்கி, அதே சமயம் மாமா… “ஹா!… என் குடியைக் கெடுத்த கொலை பாதகனின் கண் முன்பு, இதோ நானும் வந்து விட்டேன்… டாக்டர்… டாக்டர்… இந்தக் கொலையை” என்று முடிப்பதற்குள் சடக்கென்று உயிர் நின்று விட்டது.

அவ்வளவுதான் தாமதம், சுந்தரம், “ஐயோ! மாமா… பாமா… கொலையா செய்யப்பட்டு, இருவரும் ஒரே காலத்தில் ஒன்றாய்ச் சென்று விட்டீர்கள் கொலை கொலை…” என்று ஆவேசம் வந்தவனைப் போல் கத்திக் கொண்டு, வாசலில் ஓடி வந்தான். ஸ்டோன் துரையும் சேர்ந்து கொலை, கொலை’ என்று கத்துகிறான். உண்மையில், ஸ்ரீதரனுக்கு ஒன்றுமே தோன்றாமல், ப்ரமை பிடித்து விட்டது. தாமோதரனுக்கோ, இந்த அதிபயங்கரமான சந்தர்ப்பங்களைப் பார்த்ததும், கதி கலங்கிப்போய் விட்டது. ஏற்கெனவே, தன் வீட்டில் அன்று நடந்த பிசாசு சம்பவத்தின் அதிர்ச்சியினால் உள்ளம் தளர்ந்திருந்ததால், இந்த கோரமான விபத்துக்களைக் கண்டதும், மயக்கமே போட்டு விழுந்து விட்டான்.

வெள்ளைக்காரனின் சகோதரியும், அவள் கணவனும் கீழே கிடக்கும் பாமாவை ஆட்டித் தூக்கிப் பார்த்தார்கள். சவமாக விருப்பது கண்டு நடுநடுங்கித் துடிக்கிறார்கள். அதே சமயம், பொதுமக்களில் முக்யமான அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தார்கள். இரண்டு சவம் இரண்டு மூலையில் இருப்பதையும், டாக்டர் ஸ்ரீதரனின் சரீரத்தில் பல இடங்களில் ரத்தம் வருவதையும், இந்த அதிர்ச்சிகளைத் தாளாமல் தாமோதரன் ஸ்மரணையற்றுக் கிடப்பதையும் கண்டு விவரம் புரியாமல், போலீஸுக்கு உடனே தகவல் கொடுத்து விட்டார்கள்.

அடுத்த க்ஷணமே போலீஸார் வந்து விட்டார்கள். ஸ்டோன் துரையே போலீஸாரிடம் முந்திக் கொண்டு, “ஸார்! இரண்டு கொலைகளையும் செய்தவர் இதோ! இந்த டாக்டர்தான். என் மனைவியான பாமாவை இவன் மணப்பதாக ஏற்பாடு செய்திருந்தானாம். எனக்கும், பாமாவுக்கும் மேல் நாட்டில் சட்டப்படி விவாகமாகி விட்டதை, இவர்களுக்கு பாமா அறிவிக்கவில்லை. தன் பிதா, தன் விருப்பத்திற்கு மாறாக நடக்க மாட்டார் என்கிற தைரியத்தினால், நேராகவே சென்ற பிறகு சொல்லலாம் என்றிருந்தாள். இன்று நாங்கள் இங்கு வரும் போது, இந்த மனிதன் இங்கிருந்தான். நாங்கள் தம்பதிகளாக வந்த விவரம் தெரிந்த உடனே, முதலில் என் மனைவியை அடித்துக் கொன்றதோடு, அவள் பிதாவையும் அடித்துக் கொன்று விட்டால், இந்த சொத்துக்கள் பூராவும் தானே அடைந்து விடலாம் என்கிற ஆத்திரத்தினால், கண்ணால் பார்த்துக் கொண்டே இருக்கையில், இரண்டு கொலைகளை ஒரே நிமிஷத்தில் நடத்தி விட்டான். இந்த வக்கீலும் அவனுக்கு உடந்தை. அதோ நிற்கும் குமாஸ்தாவும், இந்த மனிதனும்… (தாமோதரனைக் காட்டி, இவனும்) கொலைக்கு உடந்தை” என்று தானே கடகட வென்று வாக்குமூலங் கொடுத்தான். “இதோ! இந்த மனிதர் துரைக்கண்ணனின் சொந்தக்காரராம். இவர் இப்போதுதான் வந்தார். இவரும் சாக்ஷி. சகல விவரமும் இவரைக் கேளுங்கள்” என்று சுந்தரத்தைக் காட்டினான்.

இதற்கு சுந்தரமும் தேம்பித் தேம்பிப் புலம்பிய படியே, “ஸார்! நான் வெகு நாட்களாக பாமாவை மணக்க ஆவல் கொண்டிருந்தேன். மாமாவுக்குச் சரியாகப் பணம் சேகரிக்க வேண்டி, மாமாவின் அனுமதி பெற்று, மலேயாவுக்கு அவருடைய உதவியினால் சென்று, வ்யாபாரம் செய்து வந்தேன். பாமா வெளிநாடு சென்றதும், எனக்குப் பிறகுதான் தெரியும். அவள் திரும்பி வருவதை என் நண்பன் மூலமறிந்து, நான் ஆகாய விமானத்தில் ஓடி வந்தேன். என் இன்பக் கிளியின் பிணத்தைத்தான் பார்த்தேன். நான் வந்த போது, மாமாவுக்கு உயிர் இருந்தது. இதோ இம்மனிதன் யாரென்றே எனக்குத் தெரியாது. அவருடைய கையில் இஞ்செக்ஷன் ஊசியும், மருந்து புட்டியும் இருந்தது. இப்போதுதான் ஊசி குத்தினேன், தெளிந்து விடும்… என்று சொன்னார். இதற்குள் சகல விவரமும், இந்த ஸ்டோன் துரையாலறிந்து துடித்தேன். மாமா கண்ணைத் திறந்தார்… இதோ! இதோ… இவர் தான் என்று இம்மனிதனைக் காட்டினார்… உடனே டாக்டர் என்று பெரிதாகக் கத்தினார். கொலை…என்று ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள், உயிர் போய் விட்டது. இஞ்செக்ஷன் செய்தது விஷம் என்று துரை கூறுகிறார்.. எனக்கு எந்த தகவலும் விளங்கவில்லை. எனக்குப் போட்டியாக, பாமாவை இவர் மணந்து சொத்துக்களை அபகரிப்பதற்காக முன் ஏற்பாட்டுடன், இத்தனை பேர்களின் உதவியினால் இவர் வந்திருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது…” என்று மடமடவென்று ஆத்திரத்துடன் வாக்குமூலம் கொடுத்தான்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் “எங்கே இஞ்செக்ஷன் ஊசியும் மருந்தும்…” என்று கேட்டபடியே ஸ்ரீதரனை அணுகினார். இந்த அதிர்ச்சியில், இஞ்செக்ஷன் ஊசி கீழே விழுந்து உடைந்து போயிருந்தது. அதன் பக்கத்தில் இஞ்செக்ஷன் மருந்து புட்டிகளுள் இரண்டும், உருண்டு கிடப்பதைப் போலீஸார் கண்டெடுத்தார்கள்… ஒன்று உயர்ந்த மருந்தும், மற்றொன்று விஷ மருந்து புட்டியுமாயிருப்பதைக் கண்டு, “'ஸார்! இந்த மருந்துகளைத்தானே ஊசி குத்தினீர்கள்?” என்று கடுமையான குரலில் கேட்டார்.

இரண்டு புட்டிகளையும் கண்ட ஸ்ரீதரன் திடுக்கிட்டு நடுங்கியவாறு… “ஐயோ! இது எனக்குத் தெரியவே தெரியாது. இதோ இம்மருந்துதான் நான் செய்தது…” என்று கூறும் போது, அவன் உள்ளம் ஒரேயடியாக மரத்துத் தம்பித்து விட்டது. ‘இதென்ன வேடிக்கை, இந்த விஷ மருந்து இங்கு எப்படி வந்தது!’ என்று அவனுக்கு மகத்தான ஆச்சரியமும், குழப்பமுமே உண்டாகிக் கலங்கி விட்டான்… இதுதான் சோதனையின் கொடுமை போலும்… என்று ஒரு மின்வெட்டுப் போன்ற அதிர்ச்சியும் உண்டாகி வதைத்தது.

“ஐயையோ! இது சுத்த பொய்! இந்தச் சண்டாளன் சொல்வது முற்றிலும் பொய். நான் இப்போதுதான் வந்தேன். டாக்டர் ஸ்ரீதரன் வந்ததே எனக்குத் தெரியாது; நான் இவருடைய குடும்ப வக்கீல் என்பது உண்மைதான்; இந்தவிஷயங்கள் பூராவும் சுத்த பொய். தன் மகள் தனக்கு த்ரோகம் செய்து விட்டதால், துரைக்கண்ணன், தானே தன் கைகளால் தன் மகளைக் கொன்று விட்டு, தன் சொத்துக்களைப் பூராவும் டாக்டர் ஸ்ரீதரனுடைய தர்ம வைத்யசாலைக்குக் கொடுத்து விட வேண்டும் என்று உயில் எழுதச் சொன்னபடி நான் எழுதினேன். அவர் கையொப்பமிட்டார். அந்தக் கடிதத்தை நான் திருப்பிப் பார்த்து மடிப்பதற்குள், இதோ இந்தப் பாவி என்னிடமிருந்து ,அதை ஒரே நொடியில் பிடுங்கிக் கொண்டதோடு, இத்தகைய அனியாயக் கற்பனையைத் திரித்து உங்களிடம் கூறுகிறான். இவன் சொல்வது முற்றிலும் பொய்… சத்யமாகப் பொய்” என்று வக்கீல் கதறுகிறார் பாவம்.

“ஸார்! வக்கீல் சொல்வதுதான் சத்யம்; ஸ்டோன் பெயருக்கேற்றாப் போல், கல்லினும் கடின சித்தத்துடன் பொய் ஜோடனை ஜோடித்து, உங்களையும் கலக்குகிறார்! துரைக்கண்ணன் அவர்களுடைய டாக்டர் நான். அவருக்கு வைத்யம் செய்து குணப்படுத்தினேன். அவருடைய ஒரே மகளை, அவர் உயிரினும் இனியதாக நேசித்து வந்தார். அந்த மகள், இந்தப் பாதகனை மணந்த கொடிய விஷயம் தெரியாது, அவருடைய மகளை நான் மணக்க வேண்டும் என்று அவர் நேற்றுதான் என்னிடம் கூறினார்! நான் விவாகமே செய்து கொள்ளும் அபிப்ராயமற்றவன் என்பது இந்த ஊரே அறியும். என் தம்பி தாமோதரனுக்கு இதை முடித்து வைக்கலாம் என்ற நோக்கத்துடன், நான் தம்பியுடன் இன்று அவர் அழைப்புக்கிணங்க வந்த பிறகுதான், இப்போதே ஆகாய விமானத்தின் மூலம், தன் மகள் வரப் போகும் விஷயத்தைத் தெரிவித்தார். அதே சமயம் அவர்களும் வந்து விட்டார்கள்.

தன் மகளின் வேஷத்தையும், மத மாற்றத்தையும், விபரீத மணத்தையும் அறிந்து, அவருடைய மனந்தாளாது அவர் மகளை அடித்ததும், விரட்டியதும் உண்மை; அவரை நாங்கள் எத்தனை தடுத்தும், அடங்கவில்லை. அதே சமயம், ஸ்டோன் துரை என் மீது பாய்ந்து, என்னை அடித்துப் படுகாயப்படுத்துவதைக் கண்ட ப்ரபு, பின்னும் ஆவேசங் கொண்டு தன் மகளைக் கடினமாகத் தாக்கினார். தம் வக்கீலை வரவழைக்கும்படி குமாஸ்தாவுக்குக் கூறினார். வக்கீல் வந்த உடனே, தமது விருப்பத்தையப்படியே கடிதமாக எழுதச் செய்துத் தாமே கையொப்பமிட்டதும் உண்மை. அதை இவன்தான் அபகரித்து விட்டான். இவனை இப்போதே சோதனை செய்தால், கடிதம் கிடைக்கும் என்பது என் அபிப்ராயம். (சுந்தரத்தைக் காட்டி) இதோ வந்துள்ளவர் யார் என்பதே எனக்குத் தெரியாது, இவைகளைத் தவிர, மற்ற சகலமும் கட்டுக் கதை; பொய்யான விஷயம்” என்று ஸ்ரீதரன் வாக்குமூலங் கொடுத்தான்.

“ஸார்! என்னதான் கிராதகனாக இருப்பினும், தான் பெத்த பெண்ணைத் தானே கொலை செய்வானா? இது எந்த உலகத்திலாவது கேட்டிருக்கிறீர்களா!' சொத்துக்கும், மற்ற பாத்யதைக்கும் உரிமை இன்றி, அவளை அலக்ஷியப்படுத்தித் துரத்தி விட்டாலும் விடுவானேயன்றி, இப்படி தன் கையால் எந்த தகப்பனும் கொலை செய்ய மாட்டான். இந்த மனிதன் முன் எச்சரிக்கையாய் கட்டுக் கதையை ச்ருஷ்டித்துக் கூ றுகிறான். நாங்கள் இந்த நிமிஷந்தான் இந்தியாவுக்கு வந்தவர்களாகையால், மற்றபடி எதுவும் தெரியாது. என்னை தாராளமாகச் சோதனை போடலாம். கடிதம் எழுதியது உண்மை; அது யாரிடம் மறைந்திருக்கிறதோ எனக்குத் தெரியாது,” என்று ஸ்டோன் திட்டமாகக் கூறி ஊர்ஜிதப் படுத்தினான். அவனுடன் வந்திருக்கும் வெள்ளையர்களும், அவனுடைய வாக்குமூலத்தையே ஊர்ஜிதப்படுத்திப் பேசினார்கள்.

இனி கேட்க வேண்டுமா! ஒரே சமயத்தில், இரண்டு கொலைகள் நடந்திருப்பது கண் முன்பு ப்ரத்யக்ஷமாகத் தெரிகிறது. ஸ்ரீதரன் அனாதைகளின் போஷணைக்காக தர்ம வைத்தியசாலை நடத்துவதும், பணக்காரர்களிடம் நிறைய பணம் வாங்கிக் கொண்டு, அதை ஏழைகளுக்கு வினியோகிப்பதும் ஊராரறிந்த விஷயம். வேணுமென்று, விவாகம் வேண்டாமென்று வேஷம் போடும் மனிதன் என்பதும் சிலருடைய அபிப்பிராயம். இதைப் பற்றி, சிலர் இளப்பமாய் பரிகாஸம் செய்வதும் உண்டு. கள்ளச் சாமியார்! வேஷதாரி, என்று ஏசுவதும் உண்டு.

இவன் தனது சாமர்த்தியத்தினால் வ்ருத்திக்கு வந்து விடுகிறானே என்கிற வயிற்றெரிச்சல் டாக்டர்களும் உண்டு. இங்குள்ள சகலமான சந்தர்ப்ப சாக்ஷிகளும், வெள்ளையர்களின் வாக்குமூலங்களின் அழுத்தமான வார்த்தைகளும் ஒன்று சேர்ந்து, போலீஸார் தமது வழக்கப்படியான ஜோடனையுடன் “டாக்டர் ஸ்ரீதரனையும், வக்கீலையும், துரைக் கண்ணனின் குமாஸ்தாவான குமரேசனையும் தாமோதரனையும் சேர்த்து நால்வரையும் நாங்கள் சந்தேகித்து, கைது செய்கிறோம்” என்று முடிவு கூறியதைக் கேட்டதும் ஸ்ரீதரன் நடுநடுங்கினான். ஒரே இருளாக ஆகாயமும், பூமியும் இருண்டு சுற்றுவது போல் தோன்றி வதைத்தது; “சத்யமே ஜயம்; பரோபகாரமே வாழ்க்கையில் லக்ஷ்யம்” என்கிற வார்த்தைகள் அவன் காதில் ஒலித்தது.

அடுத்த க்ஷணமே ஏதோ ஆழ்ந்த யோசனை செய்து, தனக்குள் முடிவு கட்டிக் கொண்டு… “போலீஸார் அவர்களே! …“இனி நான் ஒளிக்க விரும்பவில்லை. இந்தக் கொலையில் பூராவும் சம்மந்தப்பட்டு, இருவரையும் கொன்றது நானேயாகும்; இவர்கள் மூவரும் நிரபராதிகள். இவர்கள் மீது எத்தகைய குற்றமும் கிடையாது! பொருளாசைக்கும், பெண்ணாசைக்கும் அடிமையாகி, நானே இரண்டு கொலைகளையும் செய்தவன், ஆகையால், அவர்களை தயவு செய்து விட்டு விடுங்கள். கொலை செய்தவன் நான்தான் என்று, நானே ஒப்புக் கொள்கையில், நிரபராதிகளை ஏன் வருத்த வேண்டும்? கருணை காட்டி அவர்களைச் சம்மந்தப்படுத்தாது விட்டு விட வேண்டும்” என்று டாக்டர் கெஞ்சிக் கேட்பதைக் கண்ட போலீஸாரே, முதலில் வியப்புற்று நின்றார்கள். வக்கீலும், குமாஸ்தாவும் “நாங்களும் இக்கொலையில் சம்பந்தப்படவில்லை. அவரும் நிரபராதி; அங்ஙனமிருக்க டாக்டர் சொல்வது பொய்; அவர் குற்றவாளியல்ல…” என்று கதறியும், அங்குள்ள சகலமான சந்தர்ப்ப சாக்ஷிகளை கொண்டு, டாக்டர்தான் குற்றவாளி என்பதை நம்பி, டாக்டரைக் கைது செய்தார்கள். தாமோதரனின் இரும்பு உள்ளத்தின் கடினம் எப்படியோ நீங்கி, தன் அண்ணனின் த்யாக புத்தியின் ப்ரகாசம் அப்போது தான் பளிச்சென்று புரிந்தது.