உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 18

விக்கிமூலம் இலிருந்து

18

பார்ப்பதற்கு ஸ்ரீதரனும், தாமோதரனும் ஒரே சாயலாக கம்பீரத் தோற்றத்துடன் இருப்பார்கள். தர்ம வைத்ய சாலைக்கும், அனாதை நிலையத்திற்கும் இது வரையில், தாமோதரன் சென்று பார்த்ததே கிடையாது. இந்த இரண்டு தாபனங்களையும் வைத்து, இவற்றின் பேரால் பணம் சம்பாதிப்பதாயும், பணக்காரர்களிடம் அனாகரீகமாய் பணம் அதிகம் பறிப்பதாயும், பரமயோக்யன், ப்ரம்மசாரி என்று வேஷம் போடும் அண்ணா தீய நடத்தை நடத்த, இந்த ஸ்தாபனங்களை உதவியளிக்கும் கொடிய இடங்களாக அமைத்துக் கொண்டிருக்கிறான் என்றும், அபாண்டமாய் எண்ணி, ஏளனம் செய்து வந்த தாமோதரன் ஆடம்பரமற்ற சர்வ சாதாரண உடையில், மிகவும் அமரிக்கையாயும், சோகமே வடிவாயும் முதலில் அனாதை நிலயத்திற்குச் சென்று பார்த்தான்.

“என்ன பரிதாபம்! எத்தனை குழந்தைகள்! எத்தனை பெண்மணிகள்!… நாதியற்றுக் கிடக்கும் பரிபவத்துடன், இங்குக் காட்சியளிக்கின்றார்கள். நம் நாட்டில் இத்தனை கோராமைகளா இருக்கின்றன? அடாடா… இதுகாறும், இத்தகைய பரிதாபம் நம் கண்ணில் படவே இல்லையே; உம்! என் கண்கள் அஞ்ஞான அந்தகாரத்தில் மூடிக் கிடந்த சமயத்தில், மற்ற எதுதான் என் கண்களில் படும்? நான் அத்தகைய உணர்ச்சியுடன் பார்த்திருந்தால், அண்ணாவைப் போல், அவ்வளவு சிறந்த ஸேவையைச் செய்து, த்யாகத்துட னிருக்காவிடினும், ஏதோ பச்சாத்தாபமாவது உண்டாகி இருக்குமல்லவா! இத்தனை குழந்தைகளும் அனாதைகளா? பெற்றோரை இன்னாரென்று அறியாத பரதேசிகளா?”… என்ற ஒரு விதமான உணர்ச்சி இதயத்தில் வேகமாய் உண்டாகியது.

ஒரு நாளும் இல்லாமல் திருநாளைப் போல், இன்று தாமோதரன் வந்திருப்பதையும், அவனுடைய மன மாறுதலையும், ஆடம்பரமற்ற எளிய உடையையும் ,சாத்வீகமான பார்வையையும் கண்டு, அங்குள்ள மானேஜர் முதல் சகலரும் வியப்புற்றது ஒரு புறம்; தங்கள் எஜமானருக்கு இத்தகைய விபரீத சம்பவம் நேர்ந்து விட்ட துக்கம் ஒருபுறம்; இரண்டும் பாதிக்க தாமோதரனை வரவேற்றதுடன், “எஜமானருக்கு இத்தகைய அபவாதம் வரலாமா? அனாவச்யமாய், அநியாயமாய் எஜமான் மீது பழியைச் சுமத்திய அந்தச் சண்டாளர்களாகிய வெள்ளைக்காரப் பாவிகளைச் சும்மா விடக் கூடாது. ஏதோ போலீஸார் அவர்களையும் லாக்கப்பில் வைத்திருப்பதையே தாளாது, பல வெள்ளையர்கள் ப்ரமாதமாய்ச் சீறி எழுந்து, அவர்களை விடுதலை செய்யப் போராடுகிறார்கள். சின்ன எஜமான்! சத்யமாக இந்தக் காரியத்தை அதே வெள்ளையர்கள்தான் துணிந்து செய்திருக்க வேண்டும்: தான் ஒரு இந்துப் பெண்ணின் மனத்தைக் கெடுத்து, மாற்றி விவாகம் என்கிற ஒரு பந்தத்தை உண்டாக்கிக் கொண்டு, அந்தப் பெண்ணின் சொத்துக்களையும், தானே அபகரிக்க வந்தவிடத்தில், இத்தகைய விபரீதம் நடந்து விட்டதால், அந்த வஞ்சம் தீருவதற்காக அந்தப் பாவிகள்தான் இக்காரியத்தைச் செய்திருக்க வேண்டும். இதில் சந்தேகமே இல்லை. நம் எஜமானரை விடுதலை செய்ய, நாம் உடனே ப்ரமாதமான முஸ்தீப்புகளுடன் வேலை செய்ய வேண்டும். எங்களுக்கு இந்த கஷ்டம் சகிக்கவே முடியவில்லை”… என்று தம் தம் அபிப்ராயத்தைச் சொல்லிக் கண்ணீர் விட்டார்கள்.

சற்று புத்தி தெரிந்த குழந்தைகள் ஓடி வந்து, “டாக்டர் மாமா எப்போ வருவா?… டாக்டர் எங்கே போயிருக்கா?” என்று களங்கமற்ற உள்ளத்துடன் கேட்பதைக் கண்டு, தாமோதரனுக்கு இதுகாறும் அனுபவித்தறியாத விதம் மனத்தில் ஏதோ செய்து, பலவித உணர்ச்சிகளை உண்டாக்கியது. “சின்னஞ் சிறு குழந்தை முதல் பெரிய கிழவர்கள் வரையிலும், பெரிய பெரிய ஞானிகள் முதல் பிச்சைக்காரர்கள் வரையிலும் போற்றிக் கொண்டாடக் கூடிய ஒரு திவ்ய சக்தி வாய்ந்த அபூர்வ மனிதனை, நான் உடன் பிறந்த அண்ணனாகப் பெறும் பாக்யத்தைச் செய்திருந்தும், அந்த அருமையை—அந்த உயர்வை—அறிந்து நடந்து இன்புறாது, கேவலம் அவனை எனது ஜென்ம விரோதி என்ற உணர்ச்சியுடனல்லவா, என் வாழ்நாளைக் கழித்து விட்டேன்! அண்ணாவின் பெருமையை, அம்மா எடுத்துச் சொல்லும் போதெல்லாம், அம்மாவை வஞ்சனைக்காரி என்றும், பக்ஷபாதமுள்ள மோசக்காரி என்றும் வாய் கூசாமல், பெற்ற மனத்தின் தவிப்பை அறியாமல் திட்டினேனே, இந்தக் குழந்தைகள் கேட்கும் போதல்லவா, என் முட்டாள் தனம் இன்னும் அதிகமாய்த் தெரிகிறது…”

என்று தனக்குள்ளேயே எண்ணும் போது, கண்ணீர் அடக்க முடியாமல் மளமளவென்று வந்து விட்டது. ஏதோ ஒருவாறு சமாளித்து அடக்கிக் கொண்டு, உள்ளே சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே வருகையில், அந்த நிலையத்தின் பூஜாக்ருகத்தில் சில வயது வந்த அனாதைப் பிள்ளைகள், பெண்கள், சில பெரியவர்கள் முதலிய பலரும் பகவான் முன்பு மண்டியிட்டு ப்ரார்த்தனை செய்து, “என்னப்பனே! எங்கள் எஜமானர் நிரபராதி என்பதை நீயுமா அறிய மாட்டாய்? அவர் மிதித்த மண் கூட கொலை செய்யாதே! அப்படி இருக்க, பரோபகாரத்திற்கே உழைத்துப் பாடுபடும் எங்கள் உத்தம த்யாகியை, கொலைகாரன் என்று சிறையில் அடைப்பதை நீ பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கிறாயே! இது உனக்குத் தகுமா? இது அடுக்குமா? உன் பெருமைக்கு இது பொருந்துமா? எங்கள் வள்ளலான டாக்டரை நிரபராதி என்று விடுதலை செய்யப் போகிறாயா? அல்லது அவர் வளர்த்துப் பயிரிட்டு உருப்படியாக்கி வரும் எங்களை எல்லாம் கொலை செய்யப் போகிறாயா? எங்க டாக்டரை நீ நிரபராதி என்று காட்டாமல், தூக்குமரத்தில் மாட்டி, வேடிக்கை பார்ப்பாயானால், நாங்கள் அத்தனை பேர்களும் தற்கொலை புரிந்து கொண்டு, அந்தக் கொலை பாதகத்தை உன் மீதே சாரும்படிச் செய்வோம்! எங்கள் டாக்டர் சத்யசந்தன்; அவர் மகா ஞானி; கருணாமூர்த்தி; த்யாக பிம்பம்; அவருடன் பிறந்த அல்பனைப் போல் அவரையும் நினைத்து விட்டாயா ?”… என்று மனமுருகிக் கண்ணீர் பெருகக் கதறி, ப்ரார்த்தனை செய்யும் உள்ளன்பையும், பக்தியையும் நேரில் காணும் தாமோதரனின்

பக்கம் 135

உள்ளம் படும் பாட்டை விவரிக்கவே முடியவில்லை. தன்னுடைய அல்பச் செயலும், பொறாமையின் வேகமும், விவரம் புரியாமலேயே எத்தனை தூரம் பரவி ஆழமாகப் பாய்ந்து வேலை செய்கிறது? “ஆம்! அன்று நம் தாயின் உடல் நலம் குன்றி இருந்த சமயம், மகா உத்தமனாகிய அண்ணனே ஏதோ செய்து விட்டதாக மனந்துணிந்து கூறிய பாதகன்தானே நான்? ஏன் என்னைத் தூற்றக் கூடாது? ஏசிப் பேசி நோகச் செய்யக் கூடாது? எனக்கு இதுவும் தகும், இன்னமும் தகும்! இந்த முன் பின்னறியாத அனாதைகளுக்குள்ள ஒரு அன்பு கூட உடன் பிறந்த அண்ணன் மீது எனக்கில்லாது போய் விட்டதே! கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் செய்யும் பழமொழி எனக்கே ஸ்திரமாகி விட்டது” என்று பல பல எண்ணங்களுடன், இந்த ப்ரார்த்தனையின் ஆனந்தத்தைப் பின்புறமே நின்று, கவனித்துத் தானும், மனப்பூர்வமாய் அண்ணனின் விடுதலைக்காக வேண்டிக் கொண்டான்.

ப்ரார்த்தனை செய்பவர்கள், தாமோதரன் வருகையைக் கண்டு ஆச்சரியமடைந்து திடுக்கிட்டு எழுந்தார்கள். தாங்கள் இதே மனிதனைப் பற்றி இழிவாகப் பேசி விட்டோமே… என்று பயந்து நிற்பதைக் கண்ட தாமோதரன், “பயப்படாதீர்கள்!… நல்ல உத்க்ருஷ்டமான நெல் பயிருடன், புல் பூண்டுகளும் முளைப்பது போல், மகா வீரத்யாகியாகிய என் அண்ணனுடன் கூட, நானும் பிறந்து அவருடைய மேன்மைக்கும், தூய்மைக்கும் களங்கத்தை உண்டாக்கி விட்டேன். இனி, நானும் புனர் ஜென்மமெடுத்து விட்டதால், என் அந்தகார ஆசாபாசங்கள் ஒழிந்தன. என்னருமை அண்ணனின் விடுதலையைக் கோரி, நாம் ப்ரார்த்தனை செய்வோம். என்னுடைய வேண்டுகோளுக் கிரங்காவிடினும் உங்களுடைய ப்ரார்த்தனைக்கு பகவான் மனமிரங்கி, என் அண்ணனின் படாப் பழி நீங்கி விடுதலையடைந்தால் போதும்!" என்று தானே கூறி, ப்ரார்த்தனையும் செய்து பின், தர்ம ஆஸ்பத்ரிக்குச் சென்றான்.

என்ன ஆச்சரியம்! தன்னிலை மறந்து படுத்துள்ள நோயாளிகளும் கூட, “ஐயோ! எங்க டாக்டருக்கா இந்த கதி வருவது? அவரா கொலை செய்திருப்பார்! இதென்ன அக்ரமம்? இதென்ன அநியாயம்? இதைக் கேட்பார் இல்லையா? கடவுளே! எங்கள் உத்தமரான டாக்டரை விடுதலை செய்து விடு. படாப்பழியை நீக்கிக் காப்பாற்று” என்று வேண்டிக் கொள்வோரும், சில நோயாளிகள் கும்பல் கும்பலாக இதைப் பற்றியே பேசுவதும், கண்ட தாமோதரனுக்கு அண்ணன் மீதுள்ள மதிப்பும், ப்ரேமையும் பின்னும் பன்மடங்காய்ப் பெருகியது. அந்தந்த ஸ்தாபனங்களின் மானேஜர்களைக் கண்டு, அவர்களிடம் தனது மாறுதலையும், தான் இதுகாறும் செய்து வந்த கொடுமையையும், தானே பகிரங்கமாகக் கூறி வருந்தினான். “ஸார்! அண்ணா எப்படி எல்லாம் இந்த ஸ்தாபனங்களுக்குச் செய்து வந்தாரோ, அதே போல் என்னை நடத்தும்படி அண்ணாவின் கட்டளையைச் சிரசாவகித்து வந்திருக்கிறேன். ஆகையால், பணத்தைப் பற்றி யோசிக்க வேண்டாம்… ஸ்தாபனங்கள் முன்னிலும் சிறப்பாக நடந்து, அதைக் கண்டு அண்ணா மனப்பூர்வமாய்க் களிக்கும்படி நாம் செய்ய வேண்டும். இதுதான் எனது லக்ஷ்யம்! என்னைப் பழைய தாமோதரனாக இனி எண்ண வேண்டாம்; நானும், மனிதனாகவே மாறி விட்டேன். ஆகையால், சகல காரியங்களும் நன்றாக நடக்கட்டும. அண்ணாவுக்குப் பதில், அவருடைய நண்பரும், பெரிய டாக்டருமான ஸ்ரீமான் ஆத்மநாதரை நான் நேரில் சென்று பார்த்து வேண்டிக் கொண்டு, இங்கு அழைத்து வருகிறேன். அவர் பூராவும் கவனித்துக் கொள்வார். லேடி டாக்டர் துளஸீபாய் கவனித்துக் கொள்வதாக ஏற்கெனவே கேள்விப்பட்டுச் சந்தோஷமடைகிறேன். எந்த விதத்திலும், ஒரு குறைவுமின்றி, ஸ்தாபனங்கள் நடக்க வேண்டிய முறையில் நடக்கட்டும், நான் வருகிறேன்!” என்று கூறி விட்டு, சகல நோயாளிகளையும் பார்த்து, “நீங்கள் கவலைப்படாதீர்கள்; உங்கள் அன்புக்குரிய டாக்டர் வந்து விடுவார்கள். கடவுளை வேண்டி ப்ரார்த்தனை செய்யுங்கள்” என்று தேறுதல் கூறிச் சென்றான். டாக்டரின் அக்ரமக் கொலைக் குற்றத்தின் அதிர்ச்சியையும் பீறிக் கொண்டு, தாமோதரனின் மாறுதலால் உண்டாகிய ஆச்சரியம், எல்லோரையும் ப்ரமிக்கச் செய்தது. “உலகமிப்படித்தான் விசித்ரங்களைக் காட்டித் தன்னுடைய பெருமையை விளக்கும் போலிருக்கிறது”… என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்கள். பல பேருடைய உள்ளம், பல மாதிரி எண்ணின; ஒரே வியப்புத்தான் எல்லோரையும் கவர்ந்தது.