சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 20
20
“மிகச் சிறந்த கீர்த்தி வாய்ந்த பெரிய டாக்டரை, இம்மாதிரி கைது செய்திருப்பது சற்றும் பொருந்தாது. இது அநியாயம்; அக்ரமம்; அவருடைய குணமும், நடத்தையும் நன்றாக அறிந்தவர்களுக்கு, அநியாயத்தைப் பொறுக்க முடியாது. சர்க்காரும், போலீஸாரும் இந்த விஷயத்தை நன்றாக யோசித்துப் பார்த்துப் பின் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பல பத்ரிகைகள் தலையங்கம் எழுதின. பல ப்ரமுகர்கள், சர்க்காருக்கே மனு செய்து கொண்டார்கள். டாக்டரின் அபிமானிகள் பலர், கூட்டங்கூட்டமாகச் சென்று, பெரிய அதிகாரிகளை நேரில் வேறு பார்த்து, விண்ணப்பம் செய்து கொண்டார்கள். பல சங்கங்கள், க்ளப்புகள், ஸொஸைடிகள், மருத்துவச் சம்மந்தப்பட்ட சகல நிலையங்கள் முதல் சர்க்காருக்கு மகத்தான மனுவைச் செய்து, பெருங்கிளர்ச்சி பண்ணத் தொடங்கினார்கள்.
சிறைச்சாலையில், தனி லாக்கப்பிலுள்ள ஸ்ரீதரனுக்கு உண்மையில் கடுகளவும் விசனம் என்பதே இல்லாமல், மனச்சாந்தியே உண்டாகியது. அவமானமே தோன்றவில்லை. பல பல பக்தர்களின் சரிதைகளை எல்லாம் அவன் மனத் திரையில் படம் போல் கண்டு களித்தான். பக்த ராமதாஸர் என்ன! தொண்டரடிப்பொடிகள் என்ன! இவர்கள் இப்படியே அபாண்டப் பழிக்காகச் சிறையில் அடைபடவில்லையா? அத்தகைய மகான்களுக்கே இக்கதியாயிற்று என்றால், நான் எந்த மட்டும்… கேவலம், ஒரு பூச்சிக்குச்ச சமமானவனல்லவா? “நிம்மதியாக நாம ஸங்கீர்த்தன பஜனை செய்து கொண்டு, ஆனந்தமாய்க் காலத்தைக் கடத்தலாம். இதுதான் உண்மையான சாந்தியை அடையும் மார்க்கமென்று பகவான் காட்டியிருக்கிறார் போலும்!” என்று தனக்குள் தீர்மானமாய் எண்ணி, ஆனந்தமாய், பஜனை செய்து கொண்டிருப்பதைக் கண்ட ஜெயிலதிகாரி முதல் சகலரும் வியப்புக் கடலாடினார்கள் என்றால் மிகையாகாது.
“தம்பி, அம்மா உள்பட என்னை யாரும் பார்க்க வர வேண்டாம்; எனக்கு அது பிடிக்கவில்லை; அவர்களோ, இந்த சம்பவத்தைப் பெரும் விபரீதமாக எண்ணிக் கதறுவார்கள். அவர்களுக்குத்தான் துன்பமேயன்றி, எனக்கொன்றுமில்லை. ஒருவரையும் நான் பார்க்க விரும்பவில்லை என்று சொல்லி விடுங்கள்…” என்று கட்டளையிட்டு விட்டான். வெளி விஷயம் இவனுக்கு எதுவுமே தெரியாமலிருக்கவே வேண்டினான்.
சட்டப்படி வழக்கு, மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் விசாரணையாகி, செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விட்டது. ஸ்ரீதரன் பணக்காரப் பொதுமக்களிடம் அதிகம் பணம் வாங்கி அதைக் கொண்டு, தர்ம வைத்யசாலையும், அனாதை நிலயமும் நிர்வாகம் செய்வது உலக ப்ரஸித்தம். துரைக் கண்ணன் தனக்கு வ்யாதி குணமாக்கியதற்காக இரண்டாயிரம் ரூபாய் இனாம் வேறு கொடுத்திருக்கிறார். பெண்ணையுங் கொடுத்து, லக்ஷக்கணக்கிலுள்ள சொத்தையுங் கொடுத்து விடுவதாகச் சொல்லிய துரைக்கண்ணனிடம் டாக்டர் அதிக அன்பு வைத்து எதிர்பார்த்தார். பெண் சீமையிலிருந்து வேறு கணவனுடன் வந்து இறங்கி விட்டதால், அந்த ஆத்திரத்தில் தகப்பனையும், மகளையும் கொன்று விட்டு, அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு போகத் தம்பியையும் உடந்தையாக அழைத்து வந்தான். பழியை வெள்ளைக்காரர் மீது போட்டு விடவே எண்ணினான். ஆனால், அந்த ஜோடனைகள் இவன் மீதே பாய்ந்து விட்டன… என்று சாட்சிகள் மூலம் நிரூபணமாகி விட்டதால், ஸ்ரீதரனே குற்றவாளி என்று கூறி வெள்ளையர்களை விடுதலை செய்து, வழக்கை மேல் கோர்ட்டுக்கு மாற்றி விட்டார்கள். சந்தர்ப்ப சாட்சியங்களே, டாக்டருக்கு விபரீதமாகி விட்டன.
இதைக் கீழ்க் கோர்ட்டுக்கே போகாமல், எப்படியாவது தடை செய்து விட வேண்டும் என்று உஷா முதலியவர்கள் செய்த ப்ரயத்தனம் வீணாகி விட்டது கண்டு, எல்லோரும் துக்க சாகரத்தில் மூழ்கி விட்டார்கள். எல்லோரையும் விட, தாமோதரனே அதிகமாய்த் தவிக்கிறான். தனக்குப் பெண் பார்க்கச் சென்றதனால்தானே, இத்தகைய சங்கடம் உண்டாகியது என்பதை, அவனால் மறக்கவே முடியாது இதயம் வெடித்து விடும் போலாகி விட்டதால், உடல் மெலிந்து நோயாளியைப் போலாகி விட்டான்.
துரைக்கண்ணன் வீட்டில் சட்டப்படி போலீஸ் காவலுடன் பந்தோபஸ்து செய்திருப்பதால், யாரும் உள்ளே வர முடியாது. காவலிருக்கும் போலீஸ்காரனின் மனைவி சாப்பாடு கொண்டு வரும் போது, மிகவும் பயந்து நடுங்கியவாறு, வீதிப் பக்கத்துத் தோட்டத்திலேயே நின்று கூப்பிட்டுச் சாப்பாட்டைக் கொடுத்துப் பின், “இன்னாங்க! ராவுலே ஒரு பயமும் இல்லாமே இருக்குதுங்களா? என்னருந்தாலும் ரெண்டு கொலை நடந்த எடமாச்சே! அந்த ஆத்துமா இங்கேதானே சுத்தி அலையும்! அதெப் பார்த்துப் பயந்துக்க போறே!… இந்தா! நம்ப மாணிக்கப் பண்டாரத்துக் கிட்டே விபூதி மந்திரிச்சு வாங்கியாந்தேன். இந்தா! இதை நெத்திலே வச்சுக்கோ; பொட்டலத்தெ மடியிலேயே வச்சிருந்தா பயமே தெரியாதாம்…”
போலீ:-அட போயேன்! இந்த போலீஸ் உத்யோகத்திலே வந்தப்பரம் பயமாம்! பனங்காயாம்!… எத்தினி திருடன், எத்தினி கொலைக்காரன், எத்தினி பொணம், எத்தினி கத்திக் குத்து!… அடேயப்பா ! இதுக்கெல்லாம் அசங்காத அம்பலவாணனா, இந்த சுண்டக்கா கொலைக்கி பயந்துடப் போறேன் ! ஏய்! நீ சும்மா சும்மா இதெப் பத்தி தொணதொணன்னு பேசி, நீயே காபுரா பண்ணாதே…
மனைவி:- ஆமாம்! நானு காபுரா பண்ணத்தான் வந்திருக்கேனாங் காட்டியம்!… நேற்று மூலத்தெரு பீட் சேவக ஐயா இந்தப் பக்கமா போவச்சிலே அந்த பிசாசு இந்த ஊட்லே நடமாடிச்சாம்! அவரு பயந்து போய் தான், இண்ணக்கி இந்த விபூதியே மந்திரிச்சு எடுத்துக்கிட்டுப் போய்க் கொடுன்னு சொன்னாரு. அதனாலே வந்தேன், இன்னதான் சூரப் புலியாயிருந்தாலும், பிசாசு,பேயி, பூதம்னா பயப்படாமே இருக்க முடியுமா? அசட்டு தைரியமா அந்தக் கொலை நடந்த எடத்துலே படுக்காதே… பத்ரமான ஒரு தனி எடத்துலே படுத்துக்கோ; விபூதியெ மடியிலேயே வெச்சுக்கோ; அப்பத்தான் பயப்பட மாட்டே…
போலீ:- அட… சும்மா இரு!… அந்த ப்ரகஸ்பதி அங்கே வந்து பாத்தானோ? இதெல்லாம் சும்மா மூட்டே அளக்கற பேச்சு! இந்த அம்பலவாணன் இருக்கற எடத்துலே பேய் உலாவுவதாம்! பிசாசு நடக்குதாம்! அப்படி என் கண் முன்னே வந்தா, கொண்ணுப்புட மாட்டேனா? கொண்ணு!… நீ பயப்படாதே. தைரியமாயிரு; போய் வா, போ—என்று நயமாகக் கூறினான்.
மனைவி:- தே! இதோ பாரு! நீ என்னமோ சுலபமா சொல்லிப் புட்ரே, ஊட்லே கெடக்கற நானு என்ன பாடு பட்றேன் தெரியுமா? எந்தத் தடியனையாவது காவல் வெச்சுப்புட்டு, நீ ஊட்டுக்கு வந்துடு. இதென்ன பீடெ புடிச்ச கொலையும், காவலும்! இந்த கொலையிலே சம்மந்தப்பட்ட பாவிங்க, ஒன்னெயும் ஏதாச்சும் செஞ்சு விட்டால்……
போலீ:-அட பயித்தியமே! என்னையாவது, கொலை செய்வதாவது! அந்தப் பாச்சாவெல்லாம் இங்கே பலிக்காது; புள்ளே! போ!… ஊட்டுக்கு போ! வீணா மனசே கொழப்பிக்காதே!—என்று கூறி அனுப்பினான். அசகாய சூர வீரனாகிய அம்பலவாணன், வெகு தைரியமாய்ச் சாப்பிட்டுத் தாம்பூலம் தரித்து, வாசல் கேட்டை பூட்டிக் கொண்டு உள்ளே சென்றான்.
என்னதான் இருந்தாலும், இதுகாறும் இதைப் பற்றி அதிகம் எதுவுமே எண்ணாததால், இதைப் பற்றிக் கவலையே இல்லாதிருந்தது. இப்போது மனைவி சொல்லியதுமின்றி, பீட் கான்ஸ்டேபில் ஏதோ உலாவுவதைப் பார்த்ததாகக் கூறியதுதான் சடக்கென்று நினைவுக்கு வந்ததும், இத்தனை நாட்கள் இல்லாமல், இன்று கண்கள் பங்களாவின் கதவையும், ஜன்னலால் உட்புறத்தையும் நோக்கின. அதே சமயம், நெஞ்சும் அவனையறியாது ‘திக்’கென்று அலறச் செய்தது. “சே!…ப்ரமை!… உள்ளேயாவது, பிசாசு உலாவுவதாவது?” என்று தன்னைத்தானே தைரியம் செய்து கொண்டு, பங்களாவின் முன் பக்கத்து வீதி வராண்டாவில் விளக்கைப் பெரிதாகப் போட்டு விட்டு உட்கார்ந்தான்.
களங்கமில்லாத வரையில் பயமே இல்லை. ஒரு சிறிய புள்ளி களங்கம் உண்டாகி விட்டால், இனி கேட்க வேண்டுமா? எலி, பெருச்சாளி ஓடினால் கூட பயம் ‘திடும் திடும்’ என்று தூக்கி வாரிப் போட்டுக் கலக்குகிறது. சற்று நேரம் சமாளித்துக் கொண்டான். “ஐயையோ!… அப்பா!… அப்பா! என் மீது கருணையில்லையா?”… என்று தீன ஸ்வரத்தில் மெல்லிய ஓசையுடன் குரல் கேட்பது போல் ஒரு சப்தம் கேட்டதும், உண்மையில் அம்பலவாணனை கால் முதல் தலை வரையில் ஒரு ஆட்டு ஆட்டி, நடுக்கி வெயர்வையைச் சொட்ட விட்டது. மிகுந்த ப்ரயாஸைப்பட்டு சமாளித்துக் கொண்டு, தன் மனைவி கொடுத்த விபூதியை ஒரு பிடி எடுத்துத் தலை முதல் கால் வரையில் தேய்த்துக் கொண்டு, வாயிலும் போட்டுக் கொண்டு “ஹரஹர மகாதேவா! சுடலையிலேயே வாஸம் செய்யும் சாம்பமூர்த்தியே! இந்தக் கொலைக் களத்திலும் நீயே வந்திருந்து, என்னைக் காப்பாற்று; வீண் ப்ரமையான பயத்தை உண்டாக்காதே” என்று பலமாக வேண்டிக் கொண்ட போது, “குலத்ரோகீ! சண்டாளீ! போய் விடு; என்னெதிரில் நில்லாமல் போய் விடு… நாசகாலீ! போய் விடு; மான ஹீனமற்ற பாவியே! போய் விடு”… என்று ஆண் குரல் மிகவும் கரகரப்புடன் அழுத்தமாய் அடித்தொண்டையிலிருந்து மெல்ல வரும் சப்தம் கேட்டதும், அம்பலவாணன் எழுந்தே ஒரு குதிகுதித்தான். “இது என்ன கூத்து!… அந்தப் பாவி ஏன் இப்படிச் சொல்லிச் சென்று, என் மனத்தைக் கலக்கி விட்டுப் போனாள்? அப்பனும், மகளும் பேசுவது போலவே குரல் கேட்கிறதே! பிசாசு இப்படித்தானே பேசும் என்று பெரியவர்களும் சொல்வார்கள்! ஐயையோ! இப்போது பேச்சுக் கேட்பது போல், இங்கு உருவமும் உலாவ வந்து விடுமா? என்ன செய்வேன்? இதென்ன க்ரகசாரம்?” என்று இவன் பயந்து தவித்துக் கொண்டே, ஜன்னலால் உள்புறம் பார்த்தான்.
ஒரே இருள் சூழ்ந்திருக்கும் இடத்தில், எங்கோ சிறிய வெளிச்சம் தெரிகிறது. அதில் கவுனணிந்த வெள்ளைக்கார உடையுடன் ஒரு பெண்ணுருவம் உலாவுவதையும், சாக்ஷாத் துரைக்கண்ணனே மகத்தான கோபத்துடன் உலாவுவது போல் தோன்றியதும், துள்ளிக் குதித்தான்… நேரே வீதி கேட்டுக்கே ஓடி வந்து விட்டான். கதவைத் திறந்து கொண்டு ஓடி விடலாமா என்றும் எண்ணினான்…
“அப்படிச் செய்தால், ‘ஒரு வீரனான போலீஸ்காரனுக்கு தைரியம் இல்லை, கோழை! இவன் இனி எதற்கும் லாயக்கற்றவன்’ என்று அதிகாரிகள் கரும் புள்ளி வைத்து விடுவார்களோ!” என்ற பயமும் தோன்றியது. “பிசாசாவது? பேயாவது?… சீச்சீ! செருப்பாலடிப்பேன்… ஜோட்டாலடிப்பேன்… சிவசிவ சிவசிவ…” என்று தனக்குள் தானே தைரியம் செய்து கொண்டு, ஜபம் செய்ய வாரம்பித்தான்.
சுமார் அரைமணி நேரம் வீதிக் கதவருகிலேயே நின்ற பிறகு, மறுபடியும் உள்பக்கம் வந்தான். ‘திக்குதிக்கு’ என்ற பயம் மட்டும் நீங்கவே இல்லை. மறுபடியும் தைரியமாய் உள்புறம் பார்த்தான். எங்கும் ஒரே இருள்தான் சூழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு விதமான உருவத்தையும் காணவில்லை. சப்தமும் கேட்கவில்லை. “அட க்ரகசாரமே! இந்த செங்காத்தா சும்மா போகாமல், ஏதோ கலக்கி விட்டுப் போனதனால், எனக்கு என்னை யறியாமலேயே பயமும், ஏதோ ஒரு வித வெளித் தோற்றம் போன்ற அதிர்ச்சிகரமான காட்சியும் தோன்றிவிட்டது! சீ!… இந்த அம்பலவாணனையாவது பேய் வந்து விரட்டவாவது? சுத்த ஹம்பக் நாடகம்” என்று வெகு வெகு தைரியம் செய்து கொண்டு, மறுபடியும் விபூதியை எடுத்துத் தடவிக் கொண்டு பத்ரிகையைப் படிக்கவாரம்பித்தான்.
மறுபடியும் உள்ளே ஏதோ சத்தம் கேட்பதும், வெளிச்சம் தெரிவதும், பேச்சுக் குரல் போலும், ஊளையிடுவது போலும் கேட்டதை உணர்ந்த அம்பலவாணன், உண்மையில் நடுநடுங்கிப் போய், தானே ஊளையிட்டவாறு வெளியில் கேட்டருகில் வந்து விட்டான். சாதாரணமாய் செத்த வீட்டிலேயே சிலர் பயப்படுவார்கள் என்றால், இந்தக் கொலை நடந்த இடத்தில், எப்படி பயம் இல்லாமல் இருக்க முடியும்? “இதென்ன சனியன பிடித்த எழவாகி விட்டது?” என்று தனக்குள் நினைத்தபடியே, கேட்டின் பக்கத்திலேயே சற்று நேரம் நின்றான்.
அப்போது, வாசலில் ரோந்து போகும் கான்ஸ்டெபில் செல்வதைக் கண்ட அம்பலவாணன் தைரியமாய் அவனைக் கூப்பிட்டான். “என்னப்பா! வீதியிலேயே இந்த நேரத்துலே நிக்கிறே?"…என்றான், ரோந்துக்காரன்.
அம்பல:- எத்தகைய பயங்கர விஷயத்திற்கும் அஞ்சாத என் மனசு கூட ஏதோ ஒரு மாதிரி பயந்து நடுங்குதப்பா! கொலை நடந்த ஊடோல்லியோ ?… ஏதோ பேச்சுக் குரல் கேக்குது, ஊளையிட்றது போல் சத்தங் கேக்குது! என்னென்னமோ பயமாயிருக்குதப்பா!… நானும் தைரியமாத்தான் இத்தினி நாளா இருந்துட்டேன். அந்தப் பாவி என் பொஞ்சாதி இருக்காளே ! அவ ஏதோ ஒளறிட்டுப் போனா; அதுலேந்து எனக்கு காபுரா நடுங்குதப்பா! ரவே நீ வந்து பாத்துட்டுப் போயேன். அதுக்குத்தான் கூப்பிட்டேன்…
என்று இவன் கூறி முடிப்பதற்குள், ‘யம்மாடீ! யப்பாடி!’ என்று கத்தியவாறு அந்த ரோந்துக்காரன் ஒரே
பக்கம் 152
ஓட்டமாகப் போயே போய் விட்டான். “இதென்னடா சனியன் பிடித்தவன்!… எனக்கு மேல் சூரப்புலியாய் ஓடி விட்டானே; படுபாவி!”… என்று எண்ணியபடியே, சற்று நேரம் கழித்து, மறுபடியும் வராண்டாவிற்கு வந்து நடுங்கியபடியே பார்த்தான். மறுபடியும் ஒரு சந்தடியும் தெரியவில்லை. “சரி! இனி எதுவானாலும் ஆகட்டும்! கால் முதல் தலை வரையில் கம்பளியை இழுத்துப் போர்த்துக் கொண்டு படுத்து விடுகிறேன்; கண்ணையே திறப்பதில்லை. எந்தப் பிசாசு என்னை என்ன பண்றதோ, பார்க்கலாம்? விபூதியைத்தான் மடியிலேயே வைத்திருக்கிறோமே” என்று எண்ணியவாறு, விபூதியை மறுபடி நெற்றியில் பூசிக் கொண்டு, சாமியைக் கும்பிட்டுப் பிறகு, நீள நெடுகப் போர்த்திக் கொண்டு, கண்ணையும் கெட்டியாய் மூடியபடி படுத்து விட்டான். போர்வை பலமாக இருந்ததேயன்றி, பயமென்னவோ நடுக்கிக் கொண்டே இருந்தது!