உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 25

விக்கிமூலம் இலிருந்து

25

ல்லோ! யார் பேசுவது… உஷாதேவிதானே! குட்மார்னிங் ஸிஸ்டர்! என்ன சமாசாரம்… என்ன! டாக்டர் ஸ்ரீ தரனைப் பார்க்க உத்திரவு கிடைத்து விட்டதா? மெத்த சந்தோஷம். நான் கட்டாயம் வருகிறேன்… என்ன! அவரே சொல்லியனுப்பினாரா!… ஆச்சரியமாயிருக்கிறதே. மிஸ். உஷாதேவி! இன்னும் ஒரே ஒரு விஷயம். டாக்டர் ஸ்ரீதரனுடைய முக்ய பேஷண்டு ஒரு அனாதைப் பெண்ணிருக்கிறாள். அவளுக்கு சதா சர்வகாலமும், டாக்டரின் நினைவாகவே தவிக்கிறாள். அவளையும் கூட அழைத்துச் சென்றால், மிகவும் சந்தோஷப்படுவாள். பாவம், டாக்டருக்கும் சந்தோஷமாகவே இருக்கும். அம்மாவிடம் இதைத் தெரிவித்து, உத்திரவு வாங்குங்கள். நான் அந்தப் பரதேசியைக் கூட அழைத்து வருகிறேன். சரி… மறுபடியும் போன் செய்கிறீர்களா! நல்லது…” என்று டாக்டர் துளஸிபாய் வெகு உத்ஸாகத்துடன், உஷாவிடம் டெலிபோனில் பேசி விட்டு, உடனே தர்ம ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்தாள்.

இவளைக் கண்ட உடனே, நோயாளிகளில் சிலர், “டாக்டர்! … கேஸ் விஷயம் ஏதாவது தெரிந்ததா! நம் பெரிய டாக்டர் எப்போது வருவார்கள். அவரைப் பார்த்து, எங்கள் ஆவலைக் கூறி மகிழ வேண்டுமே” என்று ஒரே முகமாய்க் கேட்டார்கள்.

படுக்கையோடு படுக்கையாய் ஒட்டிக் கொண்டு, மிகவும் பலவீனமான நிலைமையில் உள்ள ராதா என்கிற அனாதைப் பெண், துளஸியைப் பார்த்ததுமே, தாங்க மாட்டாத பதைப்புடன், “டாக்டர்!… டாக்டர்! இப்படி வாருங்கள். ஏதாவது தகவல் கிடைத்ததா? உங்கள் முகத்தைப் பார்த்தால், ஏதோ விசேஷ சமாசாரம் கொண்டு வந்திருப்பது போல், பரபரப்பும் பூரிப்பும் தெரிகிறதே. டாக்டர் வீட்டிற்குப் போயிருந்தீர்களா?” என்று அன்பே வடிவாய்க் கேட்டாள்.

துளஸி மிக்க ஆர்வத்துடன்… “ராதா! உனக்கு சந்தோஷ சமாசாரத்தைத் தெரிவிப்பதற்காகவே நான் ஓடோடி வந்தேன். டாக்டர் ஏதோ பெரிய மனது செய்து, ,அவர்களுடைய தாயார், தம்பி, முதலானவர்களைப் பார்க்கலாம் என்று உத்திரவு கொடுத்திருக்கிறாராம். நானும் கூடப் போகப் போகிறேன். இரவு பகல் சதா காலமும், நீ அவருடைய க்ஷேமத்தையே கோரி ப்ரார்த்தனை செய்வதால், உன்னையும் அழைத்துப் போகலாமென்று நான் தீர்மானித்து, அதற்கான ஏற்பாடுகள் செய்து விட்டேன். ராதா, நீ இதைக் கேட்க மிக மிக ஆனந்தப்படுவாயல்லவா!” என்று அன்பொழுக கேட்டாள்.

எத்தகையோருக்கும் அதிக துக்கம் வந்தாலும், அதிக சந்தோஷம் வந்தாலும் பேச மாட்டாமல், ஒரு விதமான உணர்ச்சியுடன் வாயடைத்து, ஊமையாகிக் கண்கள் நீர் அருவியைப் பொழிய, உணர்ச்சி வயப்பட்டு விடுவது சர்வ சகஜமான ப்ரத்யக்ஷமாகும். பாவம்! அனாதையாய், நிர்க்கதியாய்த் தெருவில் கிடந்த தன்னை, எமனிடம் வாதாடி ஒரு பொருளாக்கி, அளப்பரிய அன்பைக் கொட்டியளந்து, இவ்வுலகத்தில் தானும் உயிருடன் இருக்க அருகதையுண்டு என்கிற நிலைமைக்குக் கொண்டு வந்த வள்ளலை, அனாதையான ராதா கோயிலிலுள்ள தெய்வமாகவே எண்ணி இருப்பதால், இதைக் கேட்ட உடனே வாயடைத்து, மவுனியாகி, ஆநந்தப் பதுமை போல் கண்ணீர் வழியஉணர்ச்சி வயப்பட்டு அப்படியே தம்பித்து விட்டாள்.

சில வினாடிகள் கழித்து, துளஸிபாயின் கைகளைப் பிடித்துக் கொண்டு… “தாயே! இந்தப் பாவிக்கு ஆகாயம் போட்டது, பூமி ஏந்திக் கொண்டது என்கிற நிலமைதான் தெரிகிறதேயன்றி, எத்தகைய அன்பும், ஆதரவும் தெரியாது வறண்டு கிடந்த உள்ளத்தில், அன்புப் பயிர் துளிர்த்து, ஆதரவுக் கனியும் குலுங்க வைத்த வள்ளலை நினைக்காமலும், பார்க்காமலும் கூட இருப்பார்களா! எனக்கு ஒன்றுமே சொல்லத் தெரியவில்லை டாக்டர். ஸ்ரீகிருஷ்ணனின் ஜன்ம பூமியில், தவம் கிடக்கும் மகானுபாவரை தரிசிக்கும்படிக்குச் செய்யும் உங்களை நான் எப்படித்தான் போற்றி வணங்குவேன் என்றே தெரியவில்லை. தாயே! என்னை மறக்க வேண்டாம். என் மனத்துடிப்பின் வேகம், அந்த த்யாக பிம்பத்தை தரிசித்த பிறகே, சாந்தியை அடையும்…” என்று அவள் உள்ளத்தை அப்படியே திறந்து காட்டுவது போல், பேசினாள்.

துளஸிபாயிக்கு இந்த ஆழமான அன்பின் ஜ்வாலையின் வேகம், நன்றாக மனத்தில் பட்டது… “ராதா! நீ கவலைப்படாதே. நீ சொல்லியா, நான் உன்னை அழைத்துப் போக ஏற்பாடு செய்தேன். எப்போது புறப்பட வேணுமோ, அதை நான் பிறகு தெரிவிக்கிறேன். இதை வெளியே சொல்லாதே…” என்று எச்சரித்து விட்டுச் சென்றாள்.

அதி மனோகரமான காலை நேரம். எங்கு பார்த்தாலும் சிலுசிலுப்பான காற்று ஜம்மென்று வீசுகிறது. பக்ஷி இனங்கள் தனிக்காட்டு அரசு புரிவது போல், இங்குமங்கும் சுதந்திரச் சிறகடித்துப் பாடிய வண்ணம் பறக்கின்றன. தொழிலாளர்கள், கலப்பையும் கையுமாக சிலர், மாடுகளை ஓட்டிச் சிலர், தயிர் பால்… காய்கறிகள் முதலிய பண்டங்கள் சகிதம் சிலர், இப்படியாக சாரி,சாரியாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த அழகை அள்ளிப் பருகியவாறு, நாலைந்து கார்களில், தாமோதரன், உஷா, துளஸி, ராதா, கமலவேணி முதலிய பலர் செல்கிறார்கள். ஒவ்வொருவருடைய உள்ளம், ஒவ்வொரு விதமான பூரிப்பை அடைந்து, கும்மாளமிடுகின்றது. எனினும் தன்னருமைக் கண்மணியை கம்பிக்குள்ளே, கைதியாய் எப்படிக் காண்பது என்கிற ஒரு மகத்தான வேதனை மட்டும், இதயத்தை வாட்டி வதைத்து, கமலவேணியைக் குலுக்குகின்றது. அதனால், ஒருவரிடமும் பேசாமலும், ஒரு விதமான குதூகலமும் இன்றி உட்கார்ந்திருக்கிறாள்.

குறித்த நேரத்தில், ப்ரம்மாண்டமான சிறைச்சாலையின் முன்பக்கம் கார்கள் வந்து நின்றன. அதைப் பார்த்த உடனே, கமலவேணியின் நெஞ்சில் செம்மட்டி யாலடிப்பது போல், ஒரு வேதனை தாக்கி அழுத்துகிறது. பெத்த வயிற்றின் சங்கடம் தாளாமல், மளமளவென்று கண்களில் கட்டறுத்த வெள்ளம் போல், கண்ணீர் பொங்கி, மடமடவென்று வழிந்து விட்டது.

தாமோதரனின் நெஞ்சம், திக்குதிக்கு என்று அடித்துக் கொள்கிறது. இதற்குள், சிறைச்சாலையின் சிறிய கதவு திறக்கப்பட்டு, இவர்களை வார்டர் அழைத்துச் சென்று, இன்டர்வ்யூ ரூமில் கொண்டு உட்கார வைத்தான். அங்கு கம்பிக் கூண்டுகள் நிற்பதைப் பார்த்ததுமே, கமலவேணியம்மாளுக்கு வயிற்றில் தாங்க முடியாத வேதனை செய்து, அவளுடைய இதயத்தைப் பீறிக் கொண்டு துக்கம் குமுறியது.

ஜெயிலரும், ஜெயில் மேட்ரனும் அங்கு வந்தார்கள். இவர்களைப் பார்த்ததும், அவர்களுக்கே மனதில் ஏதோ சங்கடம் செய்தது. ஜெயிலர் சமாளித்துக் கொண்டு, “அம்மணீ! … ஐயா ! டாக்டர் ஸ்ரீதரன் ஒரு நிபந்தனையைத் தெரிவித்திருக்கிறார்: அதற்கு ஒப்புக் கொள்வதாயின், அவர் தாராளமாய் வந்து பேசுகிறாராம்; இல்லாவிட்டால், உங்களுக்குத் தன்னைப் பார்க்கும்படியாய், தூர நின்று விட்டுப் போய் விடுவாராம். அதாவது, அவரைக் கண்டு யாரும் கண் கலங்கிப் புலம்பக் கூடாதாம். மறுபடியும் மர்ஸி பெடிஷனோ, அப்பீலோ செய்வதாக உத்தேசமே இருக்கக் கூடாதாம். அம்மாதிரி கண்டிஷனுக்கு இணங்குவதாயின், வருகிறாராம். என்ன சொல்கிறீர்கள்?” என்று மரியாதையாய்க் கேட்டார்.

இதைக் கேட்ட எல்லோரும் ஒரு முறை ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். கமலவேணி அம்மாளால் பேசவே முடியவில்லை. மவுனமே ஸாதித்து, விக்கி விக்கிப் புலம்புவதைத் தடுக்க வெகு ப்ரயாஸைப் பட்டுக் கொண்டிருந்தார்கள். உஷாதான் கமலவேணியைத் தாங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்… “ஸார்! பெத்த வயிற்றின் துடிதுடிப்பு எப்படிப்பட்ட கொடுமையானது என்பது உங்களுக்குத் தெரியாதா! பரோபகாரத்திற்கே பிறந்துள்ள உத்தம கர்ம வீரனை, இத்தகைய படாப்பழியுடன் கம்பிக்குள்ளே பார்ப்பதென்றால், யார் மனந்தான் கரையாது ஸார்! இதைக் கட்டுப் படுத்தவோ, தடுக்கவோ பகவான்தான் அத்தகைய ஒப்புயர்வற்ற மன நிம்மதியை—மறத்த தன்மையைக் கொடுத்து ,சாந்தியின் சிகரத்தில் ஏற்றி விட வேணுமேயன்றி, மனித பாசத்தின் மத்தியில் நினைந்து கொண்டிருக்கும் போது, அந்த நிலை கிட்டுமா. ஏதோ முடிந்த வரையில் எல்லோரும் அண்ணனின் விருப்பப்படியே நடக்கிறோம். தயவு செய்து, அந்த த்யாக பிம்பத்தை அழைத்து வாருங்கள்…” என்று வெகு அழகாகவும், சாந்தமாகவும் பேசினாள்.

தாமோதரனுக்குள்ள உணர்ச்சியைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. மெல்ல சமாளித்துக் கொண்டு, “ஸார்! நாங்கள் கண்ணால் பார்த்து, எங்கள் கவலை தீர்ந்தால் போதும். எப்படியும் பகவான் ஒருவன் இருக்கிறான். கைவிடாமல் காப்பாற்றுவான் என்கிற நம்பிக்கை இருப்பதால், அவன் சணாரவிந்தங்களை நம்பி, நாங்கள் ப்ரார்த்தனை செய்து, அண்ணனின் பழியைக் களைந்து, அவன் விரும்பும் சாந்தியின் சிகரத்தில் அவரை அமர்த்தி, ரக்ஷிக்கும்படி வேண்டுகிறோம். எத்தகைய அப்பீலோ, மற்ற எதுவுமோ செய்யவில்லை என்பதை அண்ணனிடம் சொல்லியழைத்து வாருங்கள்” என்று நெஞ்சடைக்கும் துக்கத்துடன் வேண்டினான்.

உடனே ஜெயிலர் வார்டரையனுப்பி, ஸ்ரீதரனை அழைத்து வரும்படி உத்திரவிட்டார். சில நிமிஷங்களுக்குள் சாந்தமே வடிவாய், புன்னகை தவழும் கம்பீரமான தோற்றத்துடன் முன்னிலும் தெளிவான நிலைமையில், ஸ்ரீதரன் வருவதைக் கண்டதும், எல்லோரும் அப்படியே ப்ரமித்துத் தம்பித்து செய்வதறியாது நின்று விட்டார்கள். தன் மகன் இளைத்துப் போய், எலும்புக் கூடாய், உலர்ந்து பார்ப்பதற்குப் பரிதாபமாய் வந்து நிற்பான் என்று கமலவேணியம்மாள் எண்ணித் துடிதுடித்த வண்ணமிருந்ததற்கு நேர்மாறாக, வீட்டிலிருப்பதை விட நன்றாகவும், கலக்கமற்ற நிலைமையிலும் இருப்பதைக் கண்டதும், பரிதவிக்கும் உள்ளத்தில், ஒரு தனித்த உணர்ச்சியும், உவகையும் உண்டாகியது. தனக்குள் ஏதேதோ எண்ணியவாறு, ஒரேப்ரமிப்புடன் நிற்கையில், ஸ்ரீதரன் தாய்ப் பசுவைக் கண்ட கன்றுக் குட்டியைப் போல், ஒரே தாவலாகத் தாவியவாறு வந்து, “அம்மா!…” என்று கூவியபடியே, சாஷ்டாங்கமாய்க் காலில் விழுந்து வணங்கி எழுந்து, சேர்த்துக் கட்டித் தழுவி பின், தம்பியை அப்படியே சிறு குழந்தையைப் போல் சேர்த்து அணைத்துக் கொண்டு, தன்னுள்ளத்தில் பொங்கும் ஆசை வெள்ளத்தை அப்படியே அள்ளி வீசியது போல் காட்டி… தாமூ! சவுக்யமா? அனாதை நிலயத்தின் வேலையும், தர்ம வைத்ய சாலையின் ஸேவையும் சிறப்பாக நடக்கிறதா;… ஓ, துளஸியா… ராதாவா! அடேடே… இவ்வளவு தூரம் வருவதற்குத் தக்கபடி குணமாகி விட்டதா… தங்கச்சீ; உன் ஸேவை எல்லாம் எப்படி இருக்கிறதம்மா? சின்னம்மா… உங்களை எல்லாம் ஒரே இடத்தில் சேர்த்தாப் போல் பார்ப்பது எனக்குப் பரம சந்தோஷமாயிருக்கிறது… இதென்ன அசட்டுத்தனம்… யாரும் கண்ணீர் விடக் கூடாதென்று சொல்லி விட்டுத்தானே வந்தேன். இப்படி கோழையா யிருக்கலாமா!…” என்பதற்குள்… “தம்பீ! உன்னைப் பார்த்த ஆநந்தத்தில், கண்ணீர் தானாக வந்து விட்டது. நாங்கள் அழவில்லை. நீ போய் விடாதே தம்பீ!” என்று உஷாவின் தாயார் இதய பூர்வமாய்க் கூறினாள்.

இதைக் கேட்ட ஸ்ரீதரன் கடகடவென்று நகைத்தான். அந்தச் சிரிப்பொலியிலே, த்யாகத்தின் கம்பீரமும், அமைதியின் அஸ்திவாரமும், பக்தியின் ஆமுமும், சாந்தியின் சிகரத்தில் நிம்மதியாய் நிற்கும் பெருமையும், வெகு நன்றாகத் தெரிந்தது… “உம்… என்னைப் பார்ப்பதா ஆநந்தம். அந்த ஆகந்தத்திலா கண்ணீர் பெருக்கு… அடாடா! இத்தகைய உறுதியான ப்ரேமையை—ஆழமான அன்பை, சாக்ஷாத் ஜகத்ரக்ஷகன் மீது வைத்திருந்தால், எத்தனை ஸார்த்தகமும், இகத்திற்கும், பரத்திற்கும், ப்ரயோஜனமும் உண்டாகும். இன்று இருந்து, நாளை அழிந்து, நாற்றக் குப்பையாய், நசித்துப் போகக் கூடிய மாமிஸப் பிண்டத்தினிடத்திலா இத்தனை அன்பு… இந்த தத்துவத்தைத்தான் நம் ஜனங்கள் அடியோடு உணராது, பாசமாகிய பாசியிலேயே புரண்டுத் தவிக்கிறார்கள்… இதைத்தான் பட்டினத்து அடிகள் செத்த பிணத்தருகே சாகும் பிணம் குந்தி கத்துதைய்யோ” என்று கதறிப் பாடி இருக்கிறார். சரி… நீங்கள் வந்துள்ள சிறிது நேரத்தில், நான் ப்ரஸங்கம் செய்து நேரத்தை வீணாக்குவதாக, உங்கள் இதயநாதம் தாப கீதத்தை எழுப்புகிறது… அம்மா!… வந்துள்ள சற்று நேரமும் பேசாமல், மவுனம் சாதிக்கிறாயே அம்மா. தம்பி இப்பொழுது எப்படி இருக்கிறான் பார்த்தாயா! இந்த மகானுபாவரின் தயவால், நான் இப்பொழுது கம்பிக்கு வெளியில் பேசுகிறேன்… தம்பீ! இரண்டு ஸ்தாபனங்களுக்கும், பணத்திற்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய்…உஷா… ஏனம்மா பதுமை போல் நிற்கிறாய்… ராதா! உன் உடம்பு நன்றாகக் குணமாகி விட்டதா… ஸார்… இந்தப் பெண்ணால் எனக்குக் கிடைத்தற்கரிதான ஒரு புகழும், வெற்றியும் கிடைத்தது. பாவம். அனாதை, திக்கற்ற பரதேசி என்றால் தகும், ப்ரமாதமான உடம்புக்கு வந்ததால், என்னுடைய ஆஸ்பத்திரியில் யாரோ தெருவோடு போகிறவர்கள் கொண்டு போட்டார்கள். மூளையில் பலத்த கோளாறு உண்டாகியிருந்தது. மேல் நாட்டாரைப் போல், நாமும் மூளையில் ஒரு ஆபரேஷன் சிகிச்சை செய்து பார்க்க வேண்டும். அனாதைப் பெண்தானே, இருந்தாலும், இறந்தாலும் கேள்வி இல்லை. அந்த சிகிச்சையின் வெற்றி பகவானின் கையிலிருக்கிறது. அவர் விட்ட வழியாகட்டும்! என்று துணிந்து சிகிச்சை செய்தேன். பகவான் வெற்றியைக் கொடுத்தார். பாவம்! நிர்க்கதியான இப்பெண்ணை நான் தர்ம வைத்ய சாலையிலேயே வைத்து, மேலும் சிகிச்சைகள் கொடுத்து வருகையில்தான், இக்கதி வந்து விட்டது. எனக்கு பதில் இதோ இந்த லேடீ டாக்டர் பார்த்துக் கொள்கிறார்கள்” என்று தானே முன் கூட்டித் தெரிவித்தான்.

இதைக் கேட்ட ஜெயிலர், மேலும் வியப்பும், ஸ்ரீதரனிடம் நன்மதிப்பும் கொண்டு ப்ரமித்துப் போனார். இத்தகைய அழகிகளைச் சுற்றிலும் வைத்துக் கொண்டு, இந்த மனிதன் சற்றும் சபலமோ, கெட்ட எண்ணமோ இல்லாது, எப்படித்தான் த்யாகத் துறவியாய்— ஜிதேந்திரியனாய்—வாழ்க்கை நடத்துகிறான். இது வெறும் மனித பலம் மட்டும் இருந்தால், போதாது. தெய்வ பலமும், யோக சாதனமும், வைரம் போன்ற உறுதியும் சேர்ந்திருப்பதனால்தான் நடக்க முடிகிறது… என்று தனக்குள் எண்ணி வியப்புற்றார்.

வெகு ப்ரயாஸைப்பட்டு, தன்னுடைய மனக் கொதிப்பை அடக்கிக் கொண்ட கமலவேணியம்மாள்… “தம்பீ! இதற்கு விமோசனம் எப்போ…” என்று தடுமாறியபடியே கேட்டாள்… “அம்மா… விமோசனமா… இப்பொழுது ஏதாவது வ்பரீதம் இருப்பதாக நினைப்பவர்களுக்கல்லவா, விமோசனத்தைத் தேட வேண்டும். எனக்குள்ள நிம்மதியும், சந்தோஷமும் சொல்லி முடியாதம்மா! இந்த மகானுபாவர் கருணை கூர்ந்து, இங்கும் ஸேவை செய்ய எனக்கு அனுமதியளித்து விட்டதால், இனி சொர்க்கப் பதவி வேண்டாம். அடிக்கடி முடிந்த போதெல்லாம், உங்களைப் பார்க்கிறேன் … தாமூ! என்னப்பா யோசனை செய்கிறாய் …” என்று தானே ஏதோ பேசி, வார்த்தைகளை மாற்றிப் பார்த்தான்.

தாமு:-அண்ணா! ஏதேதோ பேச வேண்டும் என்று நான் எண்ணிக் கொண்டு வந்தேன். ஆனால், தொண்டையை அடைத்து விட்டது. பேசவே தெரியவில்லை!.. உஷா தன்னுடைய ஆடையாபரணங்களை எல்லாம் விற்று, 25 ஆயிரம் ரூபாய் இந்த ஸ்தாபனங்களுக்காக நன்கொடை கொடுத்தாள். அதைத் தவிர, தேவதாசிகளில் உத்தமிகளாயிருப்பவர்களிட மெல்லாம் நிதி திரட்டி, உஷாவின் தாயார் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். உன்னுடைய ஆப்த சினேகிதர்கள் சிலர் பணமனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். நமது சொத்திலும்,பெரும் பாகத்தை இதற்கே செலவு செய்வதென்று தீர்மானித்துச் செய்து வருகிறேன். இரண்டு ஸ்தாபனங்களும் வெகு நன்றாக நடக்கின்றன. ஆனால்,

சந்திரனில்லா வானம், தாமரை இல்லாப் பொய்கை
மந்திரி இல்லா வேந்தன், மதகரி இல்லாச்சேனை
மந்திரமில்லா மறைவன், மாதர்களில்லா மனைகள்
தந்திகளில்லாவீணை, தாயில்லாக் குழவி போலாம் …

என்கிற பாடல் படி நீ இல்லாத எந்த இடமும் சகலமும் பாழாகவே தோன்றுகிறது. அண்ணா! இந்தப் படுபாவி தம்பியின் பொருட்டல்லவா, உனக்கு இக்கதி நேர்ந்தது. இந்த பாவத்தை நான் எப்படி… எங்கு போய்த் தீர்ப்பேன்…” என்று கூறும் போது, துக்கம் தாங்காமல், இதயத்தைப் பிளந்து கொண்டு வந்து விட்டது.

ஸ்ரீதரன் தாமோதரனைச் சேர்த்தணைத்துக் கொண்டு, “தம்பீ! கலங்காதே… எல்லாம் நன்மைக்கே என்ற பாடத்தின் உண்மையை, நாம் இப்போது நிதர்சனமாக அறிகின்றோம்… மனத்தைத் தளர விடாதே… சகலத்தையும் பகவானின் திருவடிகளில் போட்டு, நம்பிக்கையுடன் காரியத்தைச் செய். வீணாக வருந்தாதே.” என்று தேறுதல் கூறினான். ஜெயிலர் முகத்தைப் பார்த்தான்: நேரமாகி விட்டது என்று தெரிவிக்கிறாரா என்று அறியவே பார்த்தான் என்பதை உணர்ந்த ஜெயிலர், “ஸார்! பயப்பட வேண்டாம். நீர் வந்து இத்தனை நாளைக்காக, இன்றுதான் உமது மக்கள், மனிதர்களைப் பார்ப்பதால், மணி கணக்குக்குக் கட்டுப்பட வேண்டாம். நான் உத்திரவு கொடுக்கிறேன். பயப்படாமல் பேசும்,” என்றார்.

ஸ்ரீதரனுக்கு மட்டும் எப்படியாவது தன் பிதா வந்திருக்கும் விஷயத்தைத் தன் தாயிடம் ரகஸியமாய்க் கூறி விட வேணும் என்று உள்ளுக்குள் பதைபதைக்கிறது. ஜெயிலரின் எதிரில் தெரிவிக்க மனமில்லை. என்ன விதமான தந்திரம் செய்யலாம், எப்படி இந்த முக்ய விஷயத்தை அறிவிக்கலாம், என்று தனக்குள் பலமாக எண்ணமிட்டவாறு, அதை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், அவரவர்களுக்குத் தகுந்தபடி பேசிக் கொண்டிருக்கையில், சிறைச் சாலைக்குள்ளே ஒரே இரைச்சலும், கலாட்டாவுமாக சத்தங் கேட்டது; உடனே, ஒரு வார்டர் ஓடி வந்து, ஜெயிலரிடம், “ஸார்… உள்ளே கைதிகளுக்குள், திடீரென்று கலகம் உண்டாகி, பலத்த அடிதடியில் முடிந்து ப்ரமாதப்படுகிறது. உடனே வாருங்கள்” என்று அவஸரமாகக் கூப்பிட்டான்.

சிறைச்சாலையில், இம்மாதிரி அடிக்கடி நேருவதும், தண்டனைக்கு மேல் தண்டனையாகப் பல தரம் கொடுப்பதும் வழக்கமாதலால், ஜெயிலருக்கு இதைக் கேட்டதும், எரிச்சலாக இருந்தது. ஹெட் வார்டரையனுப்பி, முதலில் பார்க்கச் செய்தார். அவன் போய்ப் பார்த்து வந்ததும், “ஸார் நீங்கள்தான் சவுக்குடன் வர வேண்டும். கடுமையான சண்டையாகி விட்டது; அடிதடியில் ரத்தம் கூட பீறி விட்டது. சீக்கிரம் வாருங்கள்!” என்று அவசரமாகக் கூப்பிட்டான். ஹெட் வார்டரை இங்கு நிறுத்தி விட்டு, சவுக்குடன் ஜெயிலர் ஓட்டமாக ஓடினார்.

ஹெட் வார்டர் ஸ்ரீதரனுக்குக் காவலாக இருந்தான். அந்த சமயம் வீதியில், போலீஸ் வேன் வரும் சத்தம் கேட்டு, வார்டர் பெரிய கேட்டருகில் ஓடி, சந்தால் எட்டி, வாசல் பக்கம் பார்த்தான். ஏதோ கைதிகளை ஏற்றிக் கொண்டு, போலீஸ் வேன் வந்திருப்பதை அறிந்து, அதை ஜெயிலரிடம் தெரிவிக்க உள்புறம் ஓடினான்.

இதையே ஒரு நல்ல சமயமாக எண்ணிய ஸ்ரீதரன், தன் தாயாரின் காதோடு மிக ரகஸியமாய்… “அம்மா! ஒரு அதிசயம். வெகு நாட்களாகப் பிரிந்துள்ள என் பிதா, இதே சிறைச்சாலையில் கொலைக் கைதியாயிருக்கிறார். அவருக்கு ஏதோ விபத்து நேர்ந்து விட்ட சமயம், என் கையினால் நானே வைத்தியம் செய்து என் ரத்தத்தைக் கொடுத்து, என் கடமையைச் செய்தேன். இந்த விஷயத்தை வெளியில் சொல்லாதே. என்னை இன்னாரென்று அவருக்குத் தெரியாது. ஏதாவது விசேஷமிருந்தால், அதையொரு சிறுகதை போல் கடித மூலம் எழுதியனுப்புகிறேன். வீட்டிற்குப் போன பிறகு தம்பி, தங்கை, சின்னம்மா, முதலியவர்களிடம் சொல்லுங்கள். உங்கள் ஸௌபாக்யத்திற்குக் குறைவு வராமல் காக்கும்படி பகவானை ப்ரார்த்திக்கின்றேன்.”

என்று சொல்லியதைக் கேட்ட கமலவேணியம்மாளுக்கு இன்னதென்று கூறத் திறமற்ற வியப்பும் திகைப்பும் உண்டாகி விட்டது… ஏதோ சொல்வதற்கு வாயெடுத்தாள். அதை நோக்கமறிந்து, அப்படியே ஜாடை காட்டி அடக்கி விட்டுத் தான் கூண்டினருகில் போய் நின்று விட்டான்.

தன் தாயுடன் அண்ணன் என்ன சொல்லி இருப்பான் என்று அறியாத தாமோதரனுக்குப் பெரிய யோசனையாகி, அதைப் பற்றியே நினைத்திருக்கையில், ஜெயிலர் வந்து விட்டார். ஸ்ரீதரன் வெகு மரியாதையுடன் பேசாமல் தூர நிற்கும் பெருந் தன்மையைக் கண்டு பூரித்த ஜெயிலர்… “ஸார்… இனி நேரமாகி விட்டது. வேறு கைதிகள் வந்திருப்பதால், நான் வெளியே போக வேண்டும். எப்போதும் கைதிகளின் இண்டர்வ்யூவுக்கு நான் வருவதே வழக்கமில்லை. உங்களிடம் நான் கொண்டுள்ள நன்மதிப்பினால், இன்று வந்தேன்… அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பி விடுங்கள்!” என்று மரியாதையாய்க் கூறினார்.

“தம்பீ! எல்லோரும் போய் வாருங்கள். அடிக்கடி பார்க்க வேணும் என்கிற ஆசையை விட்டு விடுங்கள். பகவானை நம்பி, அவனிடம் பக்தி செய்து, பேறு பெறுங்கள். ஆச்ரமத்து குழந்தைகளுக்கும், ஆஸ்பத்ரி நோயாளிகளுக்கும் எனது ஆசிகளைக் கூறுங்கள்.” என்று கூறி விட்டு சடக்கென்று உள்ளே போய் விட்டான்.

ஒரு மகத்தான லக்ஷ்ய புருஷனின் கம்பீர தோற்றம் பரிபூர்ணமாய்க் குடி கொண்டிருப்பதைக் கண்ட ஜெயிலரே, மறுபடியும் ப்ரமித்துப் போனார். ‘உம்! தாமரை இலைத் தண்ணீர் போன்ற மனிதப் பிறவி இவர்!’ என்று அவருடைய அந்தரங்கத்தில் ஏதோ ஒன்று சொல்லியது. Script error: No such module "Custom rule".