உள்ளடக்கத்துக்குச் செல்

சான்றோர் தமிழ்/10

விக்கிமூலம் இலிருந்து

10. சான்றோர் பெருந்தகை மு.வ.

வடார்க்காடு மாவட்டத்திவ் வாலாஜா என்னும் ஊர் உளது. அவ்வூரின் அருகில் அழகுற வேலமலை நிமிர்ந்து நிற்கின்றது. வேலமலையின் அடிவாரத்தே வேலம் என்னும் எழிற் சிற்றுார் அமைந்துள்ளது. அச்சிற்றுாரே சிற்றுாரும் பேரூரும் தமிழ்கூறும் நல்லுலகும் ‘முவ’ என்ற இரண்டு எழுத்துக்களால் ஒருமுகமாக மாண்புடன் போற்றும் டாக்டர் மு. வரதராசனார் அவர்களின் சொந்த ஊராகும்.

பிறப்பு

சொந்த ஊர் வேலம் என்றாலும், டாக்டர் அவர்கள் பிறந்தது வடார்க்காடு மாவட்டத் திருப்பத்துார் ஆகும். 1912ஆம் ஆண்டிலே பிறந்த டாக்டர் அவர்களின் தொடக்கக் கல்வி திருப்பத்துாரிலும், பின்னர் வாலாஜாவிலும் கழிந்தது. இவர்களின் பாட்டியாரே இவர்களைப் பாராட்டிச் சீராட்டிச் செல்லமாக வளர்த்தவர்கள். இவர்களின் இனிய நினைவினை நினைவுகூர எழுந்ததே டாக்டர் அவர்களின் ‘விடுதலையா?’ என்ற சிறுகதை. தம்மை அன்புடன் வளர்த்து ஆளாக்கிய பாட்டியாரை நினைத்துக் கொண்டால், டாக்டர் அவர்கள் பழைய நினைவுகளையெல்லாம் உணர்ச்சியோடு பேசுவார். டாக்டர் அவர்களின் குடும்பம் ஊரில் செல்வாக்காக விளங்கிய குடும்பம். மேலும் டாக்டர் அவர்கள் குடும்பத்திற்கு ஒரே ஆண்மகனாராவர். உடன் பிறந்தவர் இருவரும் தமக்கையும் தங்கையும் ஆவர். தந்தை யாரின் அறிவுத்திறமும் அன்னையாரின் உறுதி நெஞ்சமும் டாக்டர் அவர்கள் பெற்ற குடும்பச் சொத்து ஆகும். டாக்டர் அவர்கள் படிக்கும் நாளில் கணக்குப் பாடம் சிறப்பாக வந்தது. அப்பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்து முதன்மையாகத் தேர்வு பெறுவார்கள். திருப்பத்துர் நகராண்மை உயர்நிலைப் பள்ளியில் 1928ஆம் ஆண்டு பெரும் பள்ளி இறுதித் தேர்வு (s.s.l.c) எழுதி வெற்றி பெற்றார்கள்.

முதற் பணி

அக்காலத்தில் இந்த நாள் போன்று ஆங்காங்கே கல்லூரிகள் அமைந்திருக்கவில்லை. கல்லூரிக் கல்வி யென்றால் சென்னைக்கே வந்து படித்தல் வேண்டும். வீட்டிற்கு ஒருமகன் என்ற நிலையில் டாக்டர் அவர்கள் தொடர்ந்து கல்லூரிக்கல்வி கற்க இயலவில்லை. குடும்பச் சூழல் காரணமாக வரி வருவாய்த்துறையில் (Revenue Department) எழுத்தராகச் (Clerk) சேர்ந்தார்கள். ஏறத்தாழ அப்பணியினைத் திறம்பட மூன்று ஆண்டுகள் ஆற்றினார்கள். உயர் அலுவலர்களின் ஒருமித்த பாராட்டுக்கு உரியவரானார்கள். மனச்சான்றை மதித்துக் கடமை உணர்வோடு பணியாற்றிய காரணத்தால் வேலைப் பளு இவர்களுக்கு மிகுதியாகத் தரப்பட்டது. இதனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வேலைப்பளுவும் அதன் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறையும் இவரை அந்தப் பணிக்கு ஒரு முழுக்குப் போடச் செய்தன. 1931ஆம் ஆண்டு முதல் 1934 வரை மூன்றாண்டுகள் ஊருக்கு வந்து ஓய்வு பெற்று உடல் நலத்தினைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

தமிழ்க் கல்வி

உடலை ஓம்பிய நேரத்தில் பேரறிஞர் கூன் இயற்கை மருத்துவம் பற்றிய நூல் ஒன்றினை இவர்கள் படித்தார்கள். அந்நூல் இவர்கள் வாழ்வில் நல்ல திருப்பத்தினைத் தந்தது. அதன்வழித் தம் உடல் நலம் காத்துக் கொண்ட இவர்கள் உளநலத்திற்குரிய தமிழ்க் கல்வியினை மேற்கொண்டார்கள். இளமை தொட்டே இவர்கள்பால் குறைவற நிரம்பயிருந்த தமிழார்வம் தொடர்ந்து தமிழ் நூல்களைக் கற்றுவரச் செய்தது. யாழ்ப்பாணம் திரு. முருகேச பண்டிதர் அவர்களின் மாணவர் திரு. முருகைய முயலியார் அவர்களிடம் இவர்கள் தமிழ் நூல்களைக் கற்று வரலானார் கள். 1934ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக் கழக வித்துவான் முதல்னிலைத் தேர்வு (Vidwan preliminary) எழுதி வெற்றி பெற்ற இவர்கள், திருப்பத்துார் நகராண்மை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியரானார்கள். இருபத் திரண்டு வயதில் தமிழாசிரியர் பணி தொடங்கிய இவர்கள், மறு ஆண்டிலேயே (1935) வித்துவான் நிறைநிலைத் (vidwan Final) தேர்வு எழுதிச் சென்னைப் பல்கலைக் கழகத்திலேயே முதலாமவராகத் தேறித் திருப்பனந்தாள் காசிமடத்தின் ஆயிரம் ரூபாய்ப் பரிசினைப் பெற்றார்கள். ஆசிரியப் பணியோடு தேர்விற்கும் படித்துச் சிறப்பாகத் தேறியமை எடுத்த செயலைத் திறம்படச் செம்மையுற நிறைவேற்றும் இவர்கள் ஆற்றலை இனிமையுறப் புலப் படுத்தும். தொடர்ந்து கல்வி பயின்று பி.ஓ.எல். (B.O.L) தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்கள்.

பச்சையப்பன் பணி

1939ஆம் ஆண்டில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியப் பணி ஏற்றார்கள். அக்காலை பின்னாளில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் இலக்குமணசுவாமி முதலியார் அவர்கள் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக இருந்தார்கள். அவர்கள் இவர் தம் வளர்ச்சிக்கு வாய்ப்புத் தந்து ஊக்கமூட்டி வந்தார்கள். 1945ஆம் ஆண்டில் வினை சொற்களைப் (Verbs) பற்றி ஆங்கிலத்தில் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிப் (M.O.L.) பட்டம் பெற்றார்கள். அது பொழுது தமிழ்த் துறையினைத் தலைமை தாங்கி நடத்திய மோசூர் கந்தசாமி முதலியா ரவர்கள் இவர்கள்பால் பேரன்பு செலுத்தி இவர்களை வழிப்படுத்தி வந்தார்கள். அவர்கள் மறைவிற்குப் பிறகு 1946ஆம் ஆண்டில் இவர்கள் தமிழ்த்துறைத் தலைவராக நியமிக்கப் பெற்றார்கள். 1948ஆம் ஆண்டில் ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’ (The treatment of Nature in Sangam Literature) என்ற பொருள் குறித்து ஒர் ஆராய்ச்சிக் கட்டுரையினை எழுதிச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் ழுதன் முதலில் ‘டாக்டர்’ பட்டம் பெற்றார்கள்.

வகுப்பறையில்

டாக்டர் அவர்கள் எந்தப் பாடத்தை எடுத்துக் கொண்டாலும் அதனை மானவர் மனங்கொளக் கற்பிப்பார்கள். சங்க இலக்கியத்தில் நல்ல புலமை அவர் களுக்குச் சிறப்பாக அமைந்திருந்தது. சங்க இலக்கிய மாந்தரின் நுண்மையான உள் ளத்தினை, அதிலும் குறிப்பாகத் தலைவியின் நெஞ்சப்பாங்கினை, அவர்கள் அமைதியோடும் உணர்ச்சியோடும் உணர்த்தும் பொழுது வகுப்பறையில் இருந்து கேட்கவேண்டும். இலக்கணப் பாடத்தைத் தெளிவாக நடத்துதல், மொழி நூலின் திறம் காட்டல், இலக்கிய ஆராய்ச்சியின் சிறப்பைப் புலப்படுத்துதல், ஆக இப்படிப் பல துறைகளிலும் அவர்தம் சொற்பொழிவு கருத்திற்கு விருந்தாக அமைந்தது. ஆரவாரமின்றி அமைதியாகக் கருத்துகளை எடுத்து மொழிவார். அவர்களுடைய சொற்பொழிவிற் கருத்தலைகள் வந்து போகும். நல்ல சிந்தனைச் சிற்பி. அவர்கள் வாழ்க்கையில் உணர்ச்சிக்கு அதிகம் இடம் கொடாமல் உண்மைக்கும் நடுவு நிலைமைக்கும், அறிவிற்கும் இடந்தந்து வாழ வேண்டும் என்பதனை அவர்கள் பெரிதும் வற்புறுத்துவார்கள். சுருங்கச் சொன்னால். அவர்கள் நிகழ்த்தும் சொற்பொழிவுகள் மன நலம் சேர்ப்பன வாகும். பொது மன்றங்களில் அமையும் இவர்தம் சொற் பொழிவுகளும் அவ்வாறே ஆரவாரத்திற்கிடமின்றி அமைதியுடன் கருத்தாழத்துடன் அறநெறியில் அமைந்து துலங்கக் காணலாம். 1953ஆம் ஆண்டு சென்னை-தேனாம்பேட்டை யில் நடைபெற்ற ஐந்தாம் தமிழ் விழாவின் போது இலக்கிய அரங்கிற்குத் தலைமை தாங்கிய இலங்கை அமைச்சர் திரு. நடேசப் பிள்ளை அவர்கள், இவர்களைத் ‘தமிழ்நாட்டின் இலக்கிய நோபெல் பரிசாளர்’ என்று அவையோருக்கு அறிமுகப்படுத்திய காட்சியும், அதுபொழுது இவர்கள் ‘செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி’ இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தென, இல்லவர் அறிதல் அஞ்சி, மழலை மென்சொல் பயிற்றும் நாணுடை அரிவை என்ற அகநானுாற்றுத் தொடர்களை விளக்கிப் பேசிய இலக்கியப் பேச்சும், இன்றும் பலர் கண்களிலும் செவிகளிலும் நிறைந்துள்ளன. 1957ஆம் ஆண்டு கொண்டாடப் பெற்ற முதல் இந்தியச் சுதந்திரப்போர் நூற்றாண்டு விழாவில் சென்னை அரசு இயல்துறை வல்லுநரென இவர்களைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டும் பரிசும் வழங்கியது.

நூற்பணி : நாவல்கள்

எழுபது நூல்களுக்கு மேல் எழுதி இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் தமக்கெனத் தனியிடம் பெற்றுள்ள டாக்டர் அவர்கள் முதன் முதலில் ‘பாவை’, ‘செந்தாமரை’ முதலிய நூல்களை 1943-44ஆம் ஆண்டுகளில் எழுதினார். இவர்களுடைய ‘கள்ளோ? காவியமோ?’ என்னும் நாவல் பலர் வாழ நல்வழி காட்டியது. ‘அல்லி’ ஆணுலகிற்கு எச்சரிக்கை தருவது. ‘அகல் விளக்கு’ எனும் நாவலும் இத்தகையதேயாகும். இந்நூல் 1962ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி (Sahitya Akademi) யாரின் ஐயாயிரம் ரூபாய்ப் பரிசினைப் பெற்றது. ‘கரித்துண்டு’ ஓவியர் ஒருவரின் வாழ்வினை விளக்குவது. பெற்ற மனம் தமிழிலும் தெலுங்கிலும் திரைப்படமாக வெளிவந்த நாவலாகும். பாத்திரப் படைப்புச் சிறந்த நாவல் ‘மலர்விழி’, ‘கயமை’ சமுதாயத்தின் ஆணவங்களை அம்பலத்தில் கொண்டுவந்து நிறுத்துவதாகும். ‘வாடாமலர்’, ‘மண் குடிசை’, ‘நெஞ்சில் ஒரு முள்’ முதலிய நாவல்கள் வாழ்க்கைத் தெளிவினை வகையுற எடுத்து மொழிவனவாகும்.

சிறுகதை

‘விடுதலையா?’ என்ற தொகுப்பில் அமைந்துள்ள சிறு கதைகள், இவர்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சில நிகழ்ச்சி களுக்குக் கற்பனைச் சிறகு கட்டிப் பறக்க வைத்ததன் விளைவாகும், ‘குறட்டை ஒலி’ சிறுகதை வேறு சில மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இலக்கிய நூல்கள்

ஏறத்தாழ முப்பது நூல்கள் இலக்கியங்களின் பிழிவாகவும், இவர்தம் எண்ணங்களின் வடிப்பாகவும் எழுந்துள்ளன. இலக்கியத்தின் நுண்மையினை-செவ்வியினை உயர்நிலையினை இவர்கள் நன்கு உணர்ந்து கட்டுரைகள் எழுதுவார்கள்.

மொழி இயல் தொடர்பாக ஏழு நூல்களும், ஐந்து நாடக நூல்களும். நான்கு வரலாற்று நூல்களும் இவர்கள் எழுதியுள்ளார்கள். கடிதமாக இவர்கள் எழுதியுள்ள ‘தங்கைக்கு’, ‘தம்பிக்கு’, ‘அன்னைக்கு’, ‘நண்பர்க்கு’ என்னும் நான்கு நூல்களும் மிகவும் புகழ் வாய்ந்தவை, தங்கைக்கு ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் நாடோறும் படிக்கவேண்டிய நூல்.

‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ என்னும் நூலில் திருவள்ளுவரின் தெளிந்த கருத்தினை வடித்துத் தருகின்றார்கள். இந்நூலிற்கு அழகியதோர் அணிந்துரை அருளிய தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் கூறுவன வருமாறு :

“இத்தகைய நூலை யாத்தவர் டாக்டர் மு.வரதராசனார், எம்.ஓ.எல். ஆசிரியர் வரதராசரை யான் நீண்ட காலமாக அறிவேன். அவரை யான் முதன் முதல் பார்த்தபோது அவர்தம் மலர்ந்த விழியும். கூரிய மூக்கும், பரந்த நெற்றியும், நீண்ட முகமும், நிமிர்ந்த பிடரியும் என்னுள்ளத்தைக் கவர்ந்தன. இவை, அறிவுக்கு உறையுளாயுள்ள மூளையின் திறத்தை அறிவிக்கும் புறக்கருவிகள். அவர்பால் யான் அன்று கண்ட இளமை இன்றும் பொலிகிறது, அவர் என்றும் இளைஞராயிருத்தல் வேண்டுமென்பது எனது வேட்கை. கவலைக் காட்சியை அவர் முகம் வழங்குவதில்லை. நல்ல மூளையும், நிலைத்த இளமையும், கவலை காணா முகமும் ஒருவரைச் சிறந்த கலைஞராக்கும் நீர்மையன. ஆசிரியர் வரதராசனார் பெருங்கலைஞராய் நாட்டை நல்வழியில் ஒம்புந் தொனடராவர் என்று யான் நினைத்ததுண்டு. அந் நினைவு பழுதுபடவில்லை. அவர் இயற்றியுள்ள நூல்கள் நாட்டை நல்வழியில் ஓம்பி வருதல் கண்கூடு...தோழர் வரதராசனார் ஒரு கலைக்கழகம்; பொறுமைக்கு உறையுள்;

அமைதிக்கு நிலைக்களன்; புரட்சி அவர் நெஞ்சில் பொங்குகிறது. தோழர் புரட்சியை இந்நூலில் பரக்கக் காணலாம்...... ஆசிரியர் வரதராசனார் திருவள்ளுவர் சுரங்கத்தில் பன்முறை மூழ்கி மூழ்கிப் பலதிற பணிகளைத் திரட்டிக் கொணர்ந்தனர். அவரது நெஞ்சம் திருவள்ளுவர் நெஞ்சுடன் உறவாடி உறவாடிப் பண்பட்டது. அந்நெஞ்சினின்றும் அரும்பும் கருத்துச் சிந்தனைக்குரியதே.”

தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்களோடு தாம் கொண்ட தொடர்பே தம்முடைய வாழ்வின் பெறற்கரிய பேறு என டாக்டர் அவர்கள் பெருமிதத்தோடு கூறிக் கொள்வார்கள். அரசியலில் காந்தியண்ணலும் திரு.வி.க. அவர்களுமே அவர்கள் மதித்த தலைவர்கள் ஆவர்.

டாக்டர் அவர்களுக்குப் பிடித்த நூல்கள் திருவாசகம், தாயுமானவர், வள்ளலார், விவேகானந்தர், இராம தீர்த்தரின் அறிவுரைகள் முதலியனவாகும். மேலை நாட்டுப் பெரும் புலவர்களான பெர்னார்டுஷா (Bernard shah) பெர்ட்ரண்ட் ரசல் (Bertrand Russel),சி.இ.எம் ஜோடு (C.E.M.Joad),எச்.ஜி.வெல்ஸ் (H.G. wells). ஆல்டஸ் ஹக்ஸ்லி (Aldous Huxley) சோமர் செட்மாம் (Somerset Maugham), பேர்ல்ஸ் பர்க் (Pearl S. Buck) முதலியோர் படைப்பினையும் விரும்பிப் படிப்பார்கள்.

இவர்கள் அன்றியும் சங்கப் புலவர்கள். திருவள்ளுவர், இளங்கோவடிகள், பாரதியார் முதலான தமிழ்ப் புலவர் பெருமக்கள் அனைவரும் டாக்டர் அவர்கள் மதித்துப் போற்றிய பெருந்தகைகள் ஆவர். தமிழ்ப் புலவர் பெருமக்கள் அனைவரும் ஒவ்வொரு துறையில் மிகச் சிறந்தவர்கள் என்பது டாக்டர் அவர்களின் கருத்தாகும். தாகூர் (Tagore). காண்டேகர் நூல்களை இவர்கள் மிகவும் விரும்பிப் படிப்பார்கள்.

தம் காலில் விழுவதை விரும்பாத சுவாமிகளிடத்தில் இவருக்கு நிரம்ப மதிப்புண்டு, மெளன. சுவாமிகளிடம் இவர்கள் கொண்டிருந்த ஈடுபாடு மிகுதியாகும். அற்புதங் களை நம்பாத - இறைவன் படைப்பின் நோக்கத்தை உணர்ந்த - தொண்டின் வடிவமான- அறத்திற்கு- இறைவனின் அறச்சட்டத்திற்குப் புறம்போகாமல் மதித்து வாழ்கின்ற துறவிகள்-தொண்டர்கள் இவர்கள் வணங்கி வழிபடும் தெய்வங்களாவர்.

இயற்கையே தெய்வம்; இயற்கையே மருத்துவம்; இயற்கையே எளிமை; இயற்கையே குரு; இயற்கையே உபதேசம், இயற்கையே சமயம்; சமய நூலினும் இயற்கையே பெரிது என்ற கோட்பாட்டினைக் குறைவறக் கொண்டவர்கள் இவர்கள்.

தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்களிடம் நெருங்கிய தொடர்பு கொண்டமைக்கு இவ் இயற்கைப் பற்றும் பெருங் காரணமாகும்.

இவர்கள் ஆத்திகர் நாத்திகர் என்று அவர்தம் போலி வேடம் கண்டு, இனங்காண்பதில்லை. அவரவர் தம் வாழ்வை வைத்தே ஆத்திகர் நாத்திகர் எனப்பிரிக்கலாம் என்பார்கள். இறைவனின் அறச்சட்டத்தை யார் உண்மையாக மதித்து நடக்கின்றார்களோ, அவர்களே உண்மையில் ஆத்திகர்கள் என்பது இவர்கள் கொண்டிருந்த கருத்தாகும்.

காந்தியடிகள் ‘கடவுள் உண்மை வடிவானவர்’ என்று கூறுவதைவிட ‘உண்மையே கடவுள்’ என்று கூறுவதைப் பெரிதும் விரும்பினாராம். அக்கருத்து - அக்காந்தியக் கருத்து - இவர்கட்குப் பெரிதும் உடன்பாடு.

சீரிய சிந்தனையாளர்

டாக்டர் மு.வ. அவர்கள் நிறையப் படித்தவர்; ஆழ்ந்து சிந்தித்தவர்; எண்ணிய எண்ணங்களை எழிலுற மக்கள் மன்றத்திலே வைத்தவர். அரியவற்றையெல்லாம் எளிதாக விளக்கிய மு.வ. அவர்கள் தம் கதை, கட்டுரை. கடிதம், புதினம் முதலியவற்றின் வாயிலாகத் தமிழ்ச் சமுதாயம் சிந்தித்துத் தெளிவு பெற்றுச் செயலாற்றத் தக்க வகையில் பல சீரிய மணிமொழிகளைத் தந்துள்ளார். அவற்றுள் சிலவற்றை ஈண்டு நினைத்துப் பார்ப்பது நற்பயன் நல்குவதாகும்.

“தமிழர்களுக்கு இனப்பற்றும் இல்லை; மொழிப் பற்றும் இல்லை. அதனால்தான் அவர்கள் இருக்க இருக்கக் கீழே போகிறார்கள்; ஆனால் பேதம் இல்லாமல் வெளியாரோடு பழகுவதில் நல்லவர்கள்.”

“தேவைகளை எவ்வளவு குறைத்துக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு வாழ்க்கையில் சிக்கல் குறையும்; துன்பம் குறையும்.”

“நல்லவர்கள் பிறருடைய செயலால் அழிவார்கள்; கெட்டவர்கள் தங்கள் செயலாலேயே அழிவார்கள்.!”

“பறவைகள் அன்பாக வாழ்கின்றன. அவைகளுக்கு வாய் இல்லை; பேச்சு இல்லை. பிணக்கும் இல்லை. மக்கள் வாழ்க்கையில் வாய்தான் வன்பும் துன்பும் செய்கின்றது. பேச்சு வள்ர்கின்றது. பிணக்கும் முற்று கின்றது; அன்பான வாழ்க்கையிலும் திடீரென்று அன்பு முறிகின்றது.”

“மக்களுக்குள் சாதி இரண்டு, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஜாதி. எப்படியாவது வாழ வேண்டும் என்ற சாதி, இந்தச் சாதிகளுக்குள் கலப்பு மணம் கூடாது.”

“வேப்பமரம் அத்தி ஆவதில்லை. மூங்கில் கரும்பு ஆவதில்லை. பனை தென்னை ஆவதில்லை; புலி பசு ஆவதில்லை. நாய் நரி ஆவதும் இல்லை. காரணம், அவற்றின் பண்பை மாற்றி அமைக்கும் மன வளர்ச்சி இல்லை; மனித மனம் வேம்பாக இருந்து கரும்பாக மாறலாம்; புலியாக இருந்து பசுவாக மாறலாம்; மனிதர்க்கு மன வளர்ச்சி உண்டு.”

“எண்ணம் திருந்தினால் எல்லாம் திருந்தும். அது தான் பெரிய அடிப்படை.”

“அறம் என்பது ஆற்றல் மிக்கது. அதை எதிர்த்து வாழ முடியாது.”

“உடல் நோயற்றிருப்பது முதல் இன்பம், மனம் கவலையற்றிருப்பது இரண்டாம் இன்பம். உயிர் பிறர்க்கு உதவியாக வாழ்வது மூன்றாம் இன்பம்.!”

“குறை இல்லாதவர்கள் உலகத்தில் இல்லை. குறைகளுக்கு இடையே குணத்தைக் கண்டு வாழ வேண்டும். முள்ளுக்கு இடையே முரட்டு இலைகளுக்கு இடையே மெல்லிய மலரைக் கண்டு தேனைத் தேடுகிறது தேனி. அதுதான் வாழத் தெரிந்தவர்களின் வழி.”

“விரும்பியது கிடைக்கவில்லையென்றால் கிடைத்ததை விரும்ப வேண்டும்.”

“இன்பத்திற்குத் துணையாக வல்லவரை நம்பாதே. துன்பத்திற்குத் துணையாக இருக்கவல்லவரைத் தேடு உறவானாலும், நட்பானாலும், காதலானாலும் இப்படித் தான் தேட வேண்டும்.”

(அல்லி)

“நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது; வல்லவனாகவும் இருக்கவேண்டும் அல்லவா? நன்மை வன்மை இரண்டும் இருந்தால்தான் இந்த உலகில் வாழ்க்கை உண்டு.”

(தம்பிக்கு)

“அன்புக்காக விட்டுக் கொடுத்து இணங்கி நட. உரிமைக்காகப் போராடிக் காலம் கழிக்காதே.”

(தங்கைக்கு)

“‘ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்னும் நாலடியாரின் பொன்மொழி இல்வாழ்க்கையின் மந்திரமாக விளங்க வேண்டும்.”

(தங்கைக்கு)

நாவல் சிலவற்றின் முடிவு வரிகள்

அவர் எழுதிய நாவல்களின் முடிவு வரிகளில் சில படிப் போரைச் சிந்திக்க வைக்கும் திறத்தன என்பதனைக் கீழ்க் காணும் பகுதிகள் கொண்டு அறியலாம்.

“அந்தக் குடும்ப விளக்கு அணைவதற்கு முன்னே ஒரு முறை அழகாக ஒளிவீசியது.”

(கள்ளோ? காவியமோ?)

“அந்தக் காட்டு வாகை மரத்தின் நிழலில் ஒவ்வொரு கரித்துண்டமாகப் பொறுக்கி ஆர்வத்துடன் அடுக்கி வைத்துக் கொண்டிருந்த அவளுடைய அன்பான கையை என் மனம் நினைத்தது.”

(கரித்துண்டு)

“சாவித்திரியின் கண்கள் மலர்விழியின் கண்களை நோக்கியபடியே கண்ணிர் உதிர்த்துக் கொண்டிருந்தன.”

(மலர்விழி)

“பரமேசுவரி என் தோளை இறுகப் பற்றிக்கொண்டு தழுதழுத்த குரலில் அல்லி! என்றாள்.”

(அல்லி)

டாக்டர் அவர்கள் மாணவர் மனப்புண்களுக்கு மருந்திட்டுக் கட்டும் மருத்துவராக விளங்கினார், படிக்க வரும் மாணவர்களுக்குத் தந்தையாய், வழிகாட்டியாய். உடல்நல மருத்துவராய். உளநல வித்தகராய் விளங்கினார். உடனா சிரியப் பெருமக்களுக்கு உற்ற துணையாய் விளங்கினார். சமுதாயத்திற்குச் சிறந்த சீர்திருத்த வழிகாட்டியாகத் துலங்கினார். மொழிக்கு அரணாகவும், இலக்கியத்திற்கு விளக்கமாகவும், நாட்டிற்கு நல்ல தொண்டராகவும் இவர்கள் நாளும் விளங்கி வந்தார்கள்.

பல்கலைக்கழகப் பணி

1961ஆம் ஆண்டு பச்சையப்பனின் தமிழ்ப் பணியினின்றும் விலகிப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் தலைமையினை ஏற்றார். ஆயினும் பச்சையப்பனின் நினைவு என்றும் இவர்கள் மனத்தில் பசுமையாக இருந்தது. இவர்களுடைய வளர்ச்சிக்குப் பச்சையப்பனும், பச்சையப்பன் வளர்ச்சிக்கு இவர்களும் பெரிதும் உதவியுள்ளனர். டாக்டர் அவர்களின் சுருத்துகளை ஏற்றுப் பின்பற்றி நடக்கும் மாணவர் குடும்பம் ஒன்று உண்டு. அக்குடும்பத்திற்கு அறத்திலே பெருநம்பிக்கை; மனச்சான்றிலே மதிப்பு; கொள்கையிலே உறுதி; ஆரவாரத் திற்கு எதிரான அமைதியிலே பற்று,

தமிழ்ப் பெரியார் திரு. வி.க. அவர்கள் வழங்கிய தகுதிச் சான்று

“வரதராசனார் பேச்சிலும் எழுத்திலும் பர்னாட்ஷாவின் கருத்துக்கள் ஆங்காங்கே பொருந்தும். அவர் பர்னாட்ஷா நூல்களைப் படித்துப் படித்து ஒரு தமிழ் ‘பர்னாட்ஷா’ ஆனார் என்று கூறுதல் மிகையாகாது. பர்னாட்ஷாவைப் பார்க்கிலும் வரதராசனார் ஒரு துறையில் சிறந்து விளங்குகிறார் என்பது எனது ஊகம். பர்னாட்ஷா பல பல நூல்களை எழுதி எழுதி முதுமை எய்தியவர், இம் முதுமையில் அவருக்கு வழங்கும் இக்கால அரக்கப் போர்க் காட்சி “வாழ்க்கைக்கு கிறிஸ்து வேண்டும், பைபிள் வேண்டும்” என்னும் எண்ணத்தை அவரிடம் அரும்பச் செய்து வருகிறது. வரதராசனார்க்கோ அக்கருத்து இளமையிலேயே முகிழ்த்தது. “வாழ்க்கைக்குச் சமயம் தேவை, கடவுள் தேவை” என்று இளமை வரதராசனார் பேசினார், எழுதினார். கீழ்நாட்டு இளமை மேல்நாட்டு முதுமையை விஞ்சி நிற்கிறது.”

துணைவேந்தர் பணியும் இறுதியும்

பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பத்து ஆண்டுகள் பயனுறப் பணிகள் ஆற்றிய பெருந்தகை மு.வ. அவர்கள் 1974ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் முதல் நாளிலிருந்து மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணியினை ஏற்றுச் சிறக்கச் செய்தார், கட்டடங்கள் பல அவர்காலத்தில் கட்டப் பெற்றன. அஞ்சல்வழிக் கல்வித்துறை பிறர் வியக்கும் அளவிற்கு வளர்ந்தது. பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய அனைவராலும் ஒருங்கே பெருமதிப்பைப் பெற்றார். ஓயாத நிர்வாகப் பணிகளும் சிந்தனைப் போக்குகளும் எழுத்துத் தொழிலும் சான்றோர் மு.வ. அவர்கள் உடல் நலனுக்கு ஊறு செய்து வந்தன. 25-1-1974 அன்று மதுரையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாநாளன்று மு.வ. அவர்களுக்கு இருதய நோய் கண்டது. மதுரையிலிருந்து சென்னை வந்த அவர்கள் 10-10-1974 அன்று 5-30 மணிக்கு அரசினர் பொது மருத்துவமனையில் காலமானார்கள். தமிழர் நெஞ்சிருக்கும் வரை தமிழ்கூறு நல்லுலகிற்குத் தமிழ் நெஞ்சம் தந்த சான்றோர் பெருந்தகை மு.வ. அவர்களை நினைவிற் கொள்வர்.

— — —
சி. பா.

தேசிங்கு ஆண்ட செஞ்சியில் பிறந்தவர் (3-5-1985) இந்தச் செந்தமிழ்ச் செல்வர். கண்டாச்சிபுரமும் திருவண்ணாமலையும் இந்த இலக்கியப் பொழில், கற்ற இடங்கள். பைந்தமிழ் வளர்க்கும் பச்சையப்பன் கல்லூரிப்பாசறை மறவருள் ஒருவர். அன்னைத் தமிழில் பி.ஏ. ஆனர்சு. அங்கு! முதல் வகுப்பில் தேறிய முதல்வர். ‘குறுந்தொகை’பற்றிய ஆய்வுரைக்கு 1968ல் எம்.லிட்., பட்டமும், ‘சேரநாட்டுத் தமிழ் இலக்கியங்கள்’ பற்றிய ஆய்வுரைக்கு 1970ல் டாக்டர் (பிஎச்.டி.) பட்டமும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இவர் பெற்ற சிறப்புகள். நல்ல நடை கொண்ட இந்த நாகரிகர் பேர் சொல்ல நாளும் மாணவர் படை உண்டு காட்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தவர் பேராசிரியராகத் துறைத்தலைவராகச் சிறந்திருக்கிறார்.முன்னாள் தமிழக ஆளுநருக்குத் தமிழை முறையாகப் பயிற்றுவித்த ஆசிரியர், இந்த முற்றிய புலமையாளர்!

பத்து நூல்கள் படைத்துள்ள இவர் ஒப்பருந் திறனுக்கும் உயர் தமிழ் அறிவுக்கும், ‘தமிழ் இலக்கிய வரலாறு’ ஒன்றே சான்று அண்மையில் வந்துள்ள அணிகலன், ‘பெருந்தகை மு.வ. ‘ஆங்கிலத்தில் ஒரு நூல்’ சங்ககால மகளிர் நிலை’ பற்றிய ஆராய்ச்சி. ‘இலக்கிய அணிகள்’ என்ற நூல் தமிழக அரசின் இரண்டாயிரம் உரூபா முதல் பரிசைப் பெற்றது. படித்துப் பல பட்டம் பெற்ற இந்த்ப் பைந்தமிழ் வேந்தர்க்குப் பலரும் கொடுத் துள்ள புகழ் மகுடங்கள்: புலவரேறு (குன்றக்குடி ஆதீனம்) செஞ்சொற் புலவர் (தமிழ் நாட்டு கல்வழி நிலையம்), சங்கநூற் செல்வர் (தொண்டை மண்டல ஆதீனம்).

பெருந்தகை மு. வ. வின் செல்லப்பிள்ளை சி. பா. அவர் புகழ்பாடும் அந்தமிழ்த் தும்பி அயராது உழைக்கும் அருஞ்செயல் நம்பி ! இலக்கியப் பேச்சில் இன்ப அருவி ! எழுத்தில் கல்ல இலக்கியப் பிறவி !

சி. பா. இந்த ஈரெழுத்து ஒரு மொழி, இளைஞர்க்குச் சொல்வது சிறக்கப் பாடு படு! —மா. செ.

"https://ta.wikisource.org/w/index.php?title=சான்றோர்_தமிழ்/10&oldid=1017800" இலிருந்து மீள்விக்கப்பட்டது