சான்றோர் தமிழ்/9

விக்கிமூலம் இலிருந்து

9. சொல்லின் செல்வர்
சேதுப்பிள்ளை

தோற்றுவாய்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றித் தமிழ் வளர்த்த பெரியார்களுள் ஒருவர்; திரு. வி. க. மறைமலையடிகள் போன்றோரின் சமகாலத்தவர்; ‘செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை’ என்று சுத்தானந்த பாரதியாரால் போற்றப்பட்டவர்; ‘சொல்லின் செல்வர்’ என்று சீராட்டப் பெற்றவர்; தமிழ் இலக்கிய அரங்கில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்; உரைநடை உலகில் எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் உண்டாக்கியவர்; பழமையான கவிதைக்கும், புதுமையான உரைநடைக்கும் இடையே சேதுவாகத் திகழ்ந்தவர்; தமிழ் ஆர்வத்துடன் தமிழ் ஆராய்ச்சித் திறனையும் பரப்பியவர்; ஆங்கில மோகம் கொண்ட அவர் காலத் தமிழரின் செவிகளில் சிந்தைக்கினிய செந்தமிழ் நடைகளை ஓதி அவர்தம் நெஞ்சக்களனில் தமிழ் உணர்வைப் பாய்ச்சியவர்; இத்தகு பீடுசால் பெருமைகளைத் தனக்கே உரியதாக்கிக் கொண்ட தமிழ்த் திருமகன்-தமிழிலக்கிய வானின் விடுவெள்ளி ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களின் வாழ்க்கை ஏற்றம் உடைத்து. அவர்தம் தமிழ்த்தொண்டு உரையிட்டுச் சொல்லொணா அருமை வாய்ந்தது.

தோற்றம்

திருநெல்வேலியில் நெல்லை மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இராசவல்லிபுரத்தில் தோன்றியவர். 1895ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் இரண்டாம் நாள் துன்முகி ஆண்டு பூச நன்னாளில் பிறந்தவர். இவரை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் கார்காத்த வேளாளர் மரபில் கொழுவடைக் கோத்திரத்தில் வந்த பிறவிப்பெருமாள் பிள்ளையும், அவர்தம் வாழ்க்கைத் துணையான சொர்ணத் தம்மாளும் ஆவர். தம் பெற்றோர்க்குப் பதினோராவது பிள்ளையாகத் தோன்றியவர். இவர்க்கு முன் தோன்றிய பதின்மரும் இவ்வுலகை நீத்து அவ்வுலகடைந்தனராதலின் பதினோராவது பிள்ளையானாலும் தவமிருந்து பெற்ற தவப்புதல்வர் இவர். பெற்றோர்க்கு ஒரு பிள்ளையாய் செல்லப்பிள்ளையாய்-செல்வப் பிள்ளையாய் வளர்ந்தவர்.

கல்வி

ரா. பி. சேதுப்பிள்ளையின் ஆரம்பக்கல்வி இராசவல்லி புரத்துத் திண்ணைப் பள்ளிக்கூடத்திலே தொடங்கியது. அந்நாள் நண்பர் அழகிய கூத்தர் என்பவர். தொடக்கப் பள்ளியில் கல்வி பயிற்றுவித்தவர்கள் அருணாசல தேசிகரும் செப்பறை அடிகளாரும் ஆவர். அருணாசல தேசிகரிடம் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், ஆறுமுக நாவலரின் பாலபாடப் பகுதிகள் போன்றவற்றைப் பயின்றார். செப்பறை அடிகளார் சிவஞான மாபாடியத்தைப் பயிற்றுவித்தார்.

ஐந்தாம் வகுப்புவரை இராசவல்லிபுரத்துத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்ற இவர் தம் உயர்நிலைக் கல்வியைத் திருநெல்வேலியைச் சார்ந்த பாளையங்கோட்டையில் கத்தோலிக்கப் பாதிரிமார்களால் நடத்தப்பெறும் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார். அப்பள்ளியில் இவர் தம் செல்லப் பெயர் இரும்பு மனிதர். இவர்தம் திண்மையைக் கண்டே மாணவர்கள் இவ்வாறு அழைத்தனர். உயர்நிலைப் பள்ளியில் தமிழ் பயிற்றுவித்தவர். சுப்பிரமணியப் பிள்ளை என்பவர். உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்புப் பயிலும்போது நல்லொழுக்கப் பரிசாகத் திருக்குறள் நூலினைப் பெற்றார். பெற்றவர் ஊர் வந்தபோது தொடக்கப்பள்ளி ஆசிரியரான செப்பறை அடிகளாரின் அறிவுரையால் நாள்தோறும் திருக்குறளை மனனம் செய்தார். இதுவே பின்னாளில் திருக்குறள் வல்லுநராக இவர் திகழ்தற்குக் காரணமாகியது. பள்ளி மாணவராக இருந்த காலத்தில் பாளையங்கோட்டைக்குச் சைவ சபைத் தொண்டர்படைத் தலைவராக இருந்தார். அக்காலத்தில் சோழவந்தான் அரசஞ்சண்முகனாரால் சிறுத்தொண்டன்’ என்று பாராட்டப் பெற்றார். பதினைந்தாம் ஆண்டில் தம் பள்ளி வாழ்க்கையை முற்றுவித்த இவர், அதே ஆண்டில் தம் அருமைத் தாயையும் இழந்தார்.

பள்ளிப் படிப்பை முடித்த இவர் திருநெல்லிவேலி இந்துக் கல்லூரியில் தம் இடைக்கலை (Indermediate) வகுப்பினைத் தொடர்ந்தார். இடைக்கலையில் இவருக்குத் தமிழ் பயிற்று வித்தவர் தொல்காப்பிய வல்லுநர் சிவராமபிள்ளை என்பவர். இந்துக் கல்லூரி தமிழ்ப் பேரவைத் தலைவராகத் திகழ்ந்த இவர், முதலாண்டில் ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு முதன்மையாக வெற்றி பெற்றார். இதனால் அரசினரால் வழங்கப்பட்ட உதவிப்பணத்தையும், நூல்களுக்கெனத் தனியாக ஐம்பது வெண்பொற்காசுகளையும் பெற்றார். இடைக்கலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இடைக்கலை வகுப்பில் தேர்ச்சி பெற்ற இவர் 1915 ஆம் ஆண்டில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தம் கல்லூரி வாழ்க்கையைத் தொடங்கினார். பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் வரலாறும் பொருளாதாரமுமே இவர் தம் விருப்பப் பாடங்களாக அமைந்தன. காரணம் அந்நாளில் தமிழுக்குத் தனியிடம் இல்லை. பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த அடுத்த ஆண்டில் 1916இல் கல்லூரி மன்றத்தில் நடை பெற்ற தமிழ்ப் பேச்சுப் போட்டியில் முதன்மையாக நின்றார். அப்பேச்சுப் போட்டியில் இவர்தம் உரையினைச் செவிமடுத்த கல்லூரி முதல்வர், ஆங்கிலப் பேராசிரியர். தமிழ்த்துறைத்தலைவர் திருமணம் செல்வக் கேசவராய முதலியார். நடுவர் சதாசிவ ஐயர் ஆகியோர் அனைவரும் போற்றினர். இதன் விளைவாக இளங்கலை முடித்த உடனேயே பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறையில் சிற்றா சிரியராகப் பணிபுரியும் வாய்ப்புக் கிட்டியது. பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறைச் சிற்றாசிரியர் (Tutor)சேதுப்பிள்ளை சட்டக் கல்லூரி மாணவராகச் சேர்ந்து சட்டக் கலையினையும் பயின்றார், இரண்டாண்டுகளில் சட்டக் கல்வியையும் வெற்றியுடன் முடித்துக் கொண்டு நெல்லை சென்றார்.

மகட் கொடை மன்றம்

நெல்லை சென்ற இவர் நெல்லையில் பிள்ளையன் மரபில் தோன்றிய நெல்லையப்பபிள்ளை என்பவருக்கும் அவர்தம் இரண்டாவது மனைவி பருவதத்தம்மாள் என்பவருக்கும் மகளாகத் தோன்றிய ‘ஆழ்வார் சானகி’ என்பவரைத் தம் இருபத்து மூன்றாவது வயதில் வதுவை நன்மணம் புரிந்து கொண்டார்.

வழக்கறிஞர் பணி

திருமணம் முடிந்தபின் வழக்கறிஞர் தொழிற் பயிற்சிக் காகச் சென்னை சென்றார். அங்கு முன்னாள் மாநில அமைச்சரும், புகழ்பெற்ற வழக்கறிஞருமான எஸ். முத்தையா பிள்ளை அவர்களிடம் இரண்டாண்டுகன் வழக்கறிஞர் தொழிற்பயிற்சி பெற்றார். 1923ல் நெல்லை மீண்டு தனியாகவே வழக்கறிஞர் தொழிலை நடத்தினார். இத் தொழிலை நடத்தியபோது இவர்தம் தமிழார்வம் தணிய வில்லை. நெல்லை மாணவர் சங்கத்தில் குறள் பற்றி உரை நிகழ்த்தியவர். வள்ளுவரை மேலைநாட்டு அறிஞர்களுடன் ஒப்பிட்டு அவரின் தனித்தன்மையை வெளிப்படுத்தினார். குறள் பற்றிய விளக்கத்துடன் அமையாமல் சைவ சமய இலக்கியங்கள் குறித்தும் சொற்பொழிவாற்றினார். வள்ளுவ ரிடம் ஈடுபட்ட இவர்தம் உள்ளம் கம்பனிடம் செல்லுமாறு திசைமாற்றியவர் சுப்பையா முதலியார் அவர்கள் ஆவர். கம்பனில் திளைத்தபின் இவருடைய ஆர்வம் கம்பன் கவி நலத்தை வெளிப்படுத்துவதில் முனைந்தது. தமிழுக்குக், கதியான கம்பரையும், வள்ளுவரையும் தெளிந்தவரின் உள்ளம் பாரதியாரின் பாநலத்திலும் ஈடுபட்டது. பாரதியின் கவிதை யில் திளைத்ததன் பயனாகச் செந்தமிழ்நாடு, முப்பெருங்கவிஞர், கலையின் விளக்கம், பண்டாரப் பாட்டு, தமிழ்த் தாய் வாழ்த்து முதலிய கட்டுரைகள் முகிழ்த்தன. பாரதியார் கண்ட புலவர்களில் இளங்கோவடிகளும் ஒரு சிறந்த புலவர் ஆதலின், இளங்கோவடிகளும் இவரைக் கவர்ந்தார். இவ்வாறு நெவ்லையில் இவர் ஆற்றிய அரிய கலைப் பணியைக் கண்ட நெல்லை மாவட்ட ஆட்சியாளர், மாவட்டக் கல்விக்குழு உறுப்பினர்களுள் ஒருவராகத் தெரிந்தெடுத்தார். அக்குழு நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டு இளைஞர்கள் நன்மைக்கான நோக்கங்களை இவர் எடுத்துரைத்தார்.

நகர் மன்றத் தொடர்

1924ஆம் ஆண்டில் நெல்லையில் நடைபெற்ற நகர்மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தலின் பின் நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் (1926,28) வாகை சூடியவர் இவரே. மூன்றாவது முறை இவர் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன். இவர் திறமையைக் கண்டு நகரமன்றத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். துணைத்தலைவராக இருந்தபோது. நெல்லை நகரத் தெருப் பெயர்களின் வரலாற்றை அறிந்து, அவற்றின் உண்மைப் பெயரை நிலை நாட்டிய பெருமை சேதுவுக்கே உரியதாகும்!

பல்கலைக் கழகங்களில் தமிழ்ப்பணி

நெல்லை நகர்மன்றப் பணிபுரிந்த ரா. பி. சே. அவர்கள் 1930ஆம் ஆண்டு கா.சு. பிள்ளை அவர்களின் உதவியால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் பொறுப்பை ஏற்றார். 1931 ஆம் ஆண்டில் தமிழ் ஆனர்ஸ் வகுப்பு மாணவர்களுக்குக் கம்பராமாயணம்; மொழிநூல் ஆகிய பாடங்களை எடுத்தார். அந்நாளில் மொழி நூல் ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கப்பட்டது. இவர்தம் மொழி நூல் புலமைக்கும் ஆங்கில அறிவிற்கும் உரை கல்லாகத் துலங்குவது 'Words and their significance’ என்ற ஆங்கில நூல். அதே ஆண்டில் தமிழ் வித்துவான் பயிலும் மாணாக்கர்க்குத் திருக்குறள், சிலம்பு முதலிய பகுதிகளைக் கற்பித்தார். பல்கலைக் கழகத்தாரால் ஏற்படுத்தப்பட்ட சொற்பொழிவு நிகழ்ச்சியில் சிலப்பதிகாரம் பற்றிச் சொற் பொழிவாற்றினார். சொற்பொழிவினைச் செவிமடுத்த ஆங்கிலப் பேராசிரியர் சுந்தரம் அவர்கள்,

சா—10

“அன்பர்.சேதுவே! தமிழ் என்றால் இனிமை இனிமை என்று இயம்புகின்றார்கள்; அது பற்றுக் காரணமாகக் கூறும் வெற்றுரை என்றே நான் இதுகாறும் எண்ணியிருந்தேன். இன்று தங்கள் தமிழ்ப் பேச்சைக் கேட்ட பிறகுதான் தமிழ் இனிமை என்பது முற்றிலும் உண்மையெனக் கண்டேன். இன்று முதல் நானும் நற்றமிழ் நூல்களைக் கற்று இன்புறுவேன்”

என்று பாராட்டினர். சொற்பொழிவின் தலைமை இடத்தை அணிசெய்த விபுலானந்த அடிகளார் :

“முன்பு சேரன் தம்பியாகிய இளங்கோ சிலப்பதிகார நூலைப் பாடினார். இன்று என் அருமைத் தம்பி யாகிய சேதுப்பிள்ளை சிலம்பின் ஒலி எல்லோருடைய சிந்தையிலும் செவியிலும் ஒலிக்குமாறு செய்தார்.”

என்று பாராட்டினர். ஆறாண்டுகள் அண்ணாமலையில் அரும்பணி ஆற்றிய சேதுப்பிள்ளை அவர்களுக்கு இறுதியாக அளிக்கப்பட்ட அண்ணாமலை நகர்த் தேநீர் விருந்தில் கலந்து கொண்ட சுநீதி குமார் சட்டர்ஜி அவர்கள், அவர் உரையைக் கேட்டு,

“தமிழின் இனிமையே உருவெடுத்து வந்தது
போல் இருக்கிறது தங்கள். பேச்சு”

என்று பாராட்டினார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியவுடன், அந்நாளில் இராமகிருட்டிண மடத்தில் சமயப் பணிபுரிந்த விபுலானந்த அடிகளாரின் முயற்சியால் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் பணியினை ஏற்றார். அடுத்த ஆண்டில் தமிழ் ஆய்வுத்துறைத் தலைவர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களின்கீழ் அத்துறைத் துணைத்தலைவர் ஆனார். அப்போது வையாபுரிப் பிள்ளை அவர்கள் ஈடுபட்டிருந்த தமிழ்ப் பேரகராதிப் பணியினை முடித்தலில் உற்ற துணையாயிருந்தார். வையாபுரிப்பிள்ளை அவர்களுக்குப்பின், அந்த இடத்தை சேதுப்பிள்ளை அணி செய்தார். இதன் பயனாகப் பல நூல்களை ஆழ்ந்து கானும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது,

நாளடைவில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘லாசரஸ்’என்பவரின் பெண் மக்கள் இருவர்.திம் கொடையால் உருவாக்கப்பட்ட ‘பேராசிரியர்’ இடத்தை முதன் முதலில் அணி செய்தார். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையின் முதல் பேராசிரியர் என்ற பெருமையைத் தேடிக் கொண்டவர் இவர். அப்போது பச்சையப்பன் கல்லூரி. மாநிலக் கல்லூரித் தமிழ் ஆனர்ஸ் பயிலும் மாணவர்களுக்கும். முதுகலை மாணவர்களுக்கும் வகுப்பு எடுத்தார். எம்.லிட்,. பிஎச்.டி. பட்டங்கள் பெறுவவற்காக ஆய்வு செய்த மாணவர் கள் பலருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

மேலும் இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்த போது மொழி, இலக்கிய நலம் கருதி நிபுணர் குழுக்கள் ஏழில் உறுப்பினராக இருந்தார். அவையாவன :

1. சென்னை அரசினர் நியமித்த கவி பாரதியார் நூல்கள் வெளியீட்டுக் குழு.

2. இந்திய அரசினர் அரசியலமைப்பை முக்கிய இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் பொருட்டு அமைத்த அரசியலமைப்புச் சொற்கள் மொழியாக்க நிபுணர் குழு.

3. சாகித்திய அகாதெமியின் ஆலோசனைக் குழு, நிர்வாகக் குழு. 4. தென்னிந்திய மொழிகள் புத்தக டிரஸ்டின் ஆலோசனைக் குழு.

5. சென்னை அரசினர் சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம் தயாரித்த நிருவாகச் சொற்களை முடிவு செய்ய அமைத்த நிபுணர் குழு.

6. அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கம்பராமாயண ஆராய்ச்சிப் பதிப்புக் குழு.

7. சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழ் அகராதியின் ஆலோசனைக் குழு.

இத்துடன் நில்லாமல், இந்திய மொழித்துறைகள் பலவற்றிற்கும் துணைவராகவும் வழிகாட்டியாகவும் விளங்கினார். 1937 முதல் 1955 வரை ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பெற்ற அனைத்திந்தியக் கீழைக்கலை மாநாடுகளில் கலந்துகொண்டு அரிய பொழிவுகள் பல ஆற்றிச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பெருமையை உலகறியச் செய்தார். இவர் காலத்தில் வெளிவந்த சென்னைப் பல்கலைக்கழக வெளியீடுகள் 1. திராவிடப் பொதுச் சொற்கள் (Dravidian common Vocabulary) 2. திராவிடப் பொதுப் பழமொழிகள் (Common Dravidian Proverbs).

மேடைத் தமிழ் வளர்த்த மேன்மையாளர்

தம் ஆராய்ச்சித் திறத்தாலும், எழுத்தாற்றலாலும் தமிழ் ஆற்றலை வளர்த்ததைப் போன்றே மேடைப் பேச்சால் தமிழ் உணர்ச்சியையும் தமிழ் அறிவையும் பெருக்கிய பெருமை உடையவர் ரா.பி.சே. இவர் ஆற்றிய பொழிவுகள் இவரைத் தலைசிறந்த மேடைப் பேச்சாளராகக் காட்டுகின்றன. டாக்டர் மு.வ. அவர்கள் ‘தமிழ் இலக்கிய அரங்கில் மாறுதல் செய்தவர் ரா.பி.சே.’ என்று போற்றுகின்றார்.

“தமிழ் இலக்கிய அரங்கிலே மாறுதல் செய்தார் சேதுப்பிள்ளை. சென்னையிலே இலக்கியக் கூட்டங்களானால் 50 பேர் வந்து கொண்டிருந்தனர். தம் முடைய சொற்பொழிவுகளின் மூலம் 50ஐ 50,000 ஆக்கித் தந்தவர் ஆவர்.”

—பி.எஸ்.ஜி. கலைக்கல்லூரி மலர் 1958, பக். 58

இப்போற்றியுரை ரா. பி. சே. அவர்களின் பொழிவாற்றும் திறனை-உரனை விளக்கி நிற்கின்றது. நெல்லையில் வழக் கறிஞர் சேதுப்பிள்ளையாக இருந்தபோதும், அண்ணாமலையில் தமிழ்ப் பணியாற்றியபோதும் இவர் ஆற்றிய பொழிவுகள் பல. என்றாலும் சென்னையில் இவர் ஆற்றிய பொழிவுகளே மிகுதி. ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் வாரத்திற்கு ஒரு முறை எனத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கம்பராமாயணச் சொற் பொழிவாற்றினார். இதன் விளைவாகச் சென்னையில் ‘கம்பன் கழகம்’ ஒன்று தோற்றம் பெற்றது, அதன் தலைவராகச் சேதுப்பிள்ளையே விளங்கினார், கோகலே மன்றத்தில் ஞாயிறுதோறும் என மூன்று ஆண்டுகள் சிலப்பதிகாரப் பிழிவினைப் பொழிவாக்கினார். தங்கசாலைத் தமிழ்மன்றத்தில் வாரத்திற்கு ஒருநாள் என ஐந்து ஆண்டுகள் திருக்குறள் விளக்கம் செய்தார். கந்தகோட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கந்தபுராணச் சொற்பொழிவு நிகழ்த்தி னார், கம்பரையும் கச்சியப்பரையும் இணைத்துப் பொழி வாக்கிய இவர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இப்பொழி வினை நிகழ்த்தினார். இதன் பயனாகக் ‘கந்தபுராணத் திரட்டு’ என்னும் நூல் பதிப்பிக்கப்பெற்றது, வேலின் வெற்றி ‘வேலும் வில்லும்’ போன்ற நூல்கள் உருவாக்கப் பெற்றன. மேலும் புறநானூற்று மாநாடு, திருக்குறள் மாநாடு தமிழாசிரியர் மாநாடு போன்ற இலக்கிய மாநாடுகளில் தலைமை உரையும் ஆற்றியுள்ளார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் மதுரையில் நடைபெற்ற தமிழ்த் திருநாள் விழாவில் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமை யில் ‘குறளும் குறளாசிரியர்களும்’ என்ற தலைமையில் அரியதொரு சொற்பொழிவாற்றினார்.

நூலாசிரியர்

ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் இயற்றிய நூல்கள் பல. இவை பதிப்பு நூல்கள், வரலாற்று நூல்கள். ஆராய்ச்சி நூல்கள் என்னும் முப்பெரும் பிரிவுக்குள் அடங்குகின்றன. ஆராய்ச்சி நூல்களுள் ஆய்வாக மலர்ந்தவை சில; கட்டுரை களின் தொகுப்புகளாக அமைந்தவை சில: பொழிவுகளின் தொகுப்புகளாக அமைந்தவை சில. இவையே அன்றி இதழ்களில் எழுதிய கட்டுரைகள் இன்னும் பல நூல்வடிவம் பெறாமலேயே இருக்கின்றன.

பதிப்பு நூல்கள்

இவர் பதிப்பித்த முதல் நூல் ‘கந்தபுராணத் திரட்டு’ என்பது 1944ல் பதிப்பிக்கப்பெற்ற இந்நூல் சென்னையில் கந்தகோட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவின் விளைவால் உருப்பெற்றது. கந்தபுராணத்தினின்றும் ஆயிரத்தைந்நூறு பாடல்கள் திரட்டிப் பொழிப்புரையுடன் எழுதப்பட்ட இந் நூல் மூன்று பகுதிகளாக வெளிவந்தது.

1957ஆம் ஆண்டில் பாரதியார் பாடல்களில் சிறந்தன என்று இவரால் கருதப்பட்ட பாடல்கள் சிலவற்றின் தொகுப்பே ‘பாரதியார் இன் கவித்திரட்டு’ என்பது. இது சாகிததிய அகாதெமியின் வெளியீடு ஆகும்.

இதே ஆண்டில் வெளிவந்த ‘செஞ்சொற் கவிக்கோவை’ சங்ககாலம் முதல் பாரதியார் காலம் ஈறாக உள்ள இலக்கியங்களின் சுவைமிக்க பாக்களின் தொகுப்பு நூல். 1960இல் பதிப்பிக்கப் பெற்ற ‘தமிழ்க் கவிதைக் களஞ்சியம்’ என்ற நூலும், ‘செஞ்சொற் கவிக்கோவை’யைப் போன்றே சுவைமிகக தமிழ்ப் பாடல்களின் தொகுப்பு நூல் ஆகும். இவையே அன்றி, எல்லீசர் திருக்குறளுக்கு வரைந்த உரையையும் பதிப்பித்துள்ளார்.

வரலாற்று நூல்கள்

வாழ்க்கை வரலாற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படா நிலையில், அத்துறையிலும் நூல்கள் பல உருவாவதற்கு வழிகோலியவர் ரா.பி. சே. ஆவர். ‘தமிழ்நாட்டு நவமணிகள்,’ ‘கால்டுவெல் ஐயர் சரிதம்,’ ‘கிறித்துவத் தமிழ்த் தொண்டர்’ என்ற மூன்றும் இவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் ஆகும். இவற்றுள் முதன் முதலில் வெளிவந்த நூல் ‘தமிழ்நாட்டு நவமணிகள்’ என்பது 1926ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்ற இந்நூல் லோகோபகாரி என்ற இதழில் வெளிவந்த ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பாகும் ஆதிரையார், விசாகையார், மருதியார், கோப்பெருந் தேவியார், மணிமேகலையார், கண்ணகியார், புனிதவதியார், மங்கையர்கரசியார், திலகவதியார் என்னும் தமிழ் நாட்டுப் பெண்மணிகள் ஒன்பதின்மரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் நூல். கதைப்போக்கில் அமைந்தது இந்நூல். இந்நூலின் சிறப்பினை,

“பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சிறப்பை இக்காலத்துத் தமிழ்ச் சிறார்க்கு எடுத்தோதும் புத்தகங்களும், பண்டுதொட்டுச் சரித்திரவாயிலாகவும், பனுவல்கள் வாயிலாகவும் அறியக் கிடக்கும் நம் நாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளும் தற்காலம் வெளிப்போந்துள்ள நூல்களும் காண அரியவாயினவே என்று நெடுநாளாகக் கருதியிருந்த

ஒரு பெருங் குறையை இந்நூலாசிரியர் நிறைவு செய்துள்ளார்”

என்று இந்நூலுக்கு முன்னுரை வழங்கிய முன்னாள் அமைச்சர் தி. நெ. சிவஞானம் பிள்ளை பாராட்டியுரைக்கின்றார்.

1936இல் வெளிவந்த ‘கால்டுவெல் ஐயர் சரிதம்’ கால்டுவெல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்தியம்புவது.

1946இல் வெளியிடப்பெற்ற ‘கிறித்துவத் தமிழ்த் தொண்டர்’ என்னும் நூல் வீரமாமுனிவர், போப்பையர். கால்டுவெல், எல்லீசர். இக்னேசியஸ் ஐயர், வேதநாயகம் பிள்ளை, கிருஷ்ணபிள்ளை போன்ற கிறித்துவர்கள் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டுகளின் விளக்கமாக அமைந்துள்ளது.

ஆய்வு நூல்கள்

நெல்லையில் வழக்கறிஞராக இருந்தபோதே இவரது ஆய்வுப்பணி முகிழ்ந்துவிட்டது. முதன்முதலில் 1926ஆம் ஆண்டில் திருக்குறளை ஆராய்ந்து ‘திருவள்ளுவர் நூல் நயம்’ என்ற நூலை வெளியிட்டார். இந்நூலின் மேன்மையினையும், ஆசிரியரின் ஆய்வுத் திறனின் மாண்பினையும் திரு. கா. சு. பிள்ளை அவர்கள்,

“உலகமெலாம் உய்வான் பொதுமறை வகுத்த ஆசிரியர் திருவள்ளுவனாரது அளப்பரிய மாண் பினைப் பாவலரும் நாவலரும் கற்றோரும் மற்றோரும் இந்நாள்வரை பொதுவகையாற் பலபடப் பாராட்டிச் சீராட்டிப் போந்தனர். ஆசிரியரது நூலின் பிண்டப் பொருளை நுணுகி ஆய்ந்து, அதன் சொற்பொருள் நயங்களை யாவருக்கும்

எளிதில் விளங்கும் வண்ணம் தெள்ளென வகுத்தோதி ஊக்கமூட்டும் செவ்விய உரைநடை நூல் ஒன்று இல்லாத குறையை நிறைவுசெய்த பெரும் புலவர் இத் ‘திருவள்ளுவர் நூல் நயம்’ எழுதிய திருவாளர் சேதுப்பிள்ளையேயாவர்.

திருக்குறட் பெருநூலை நன்கு கற்றாராய்ந்து உணர விரும்பும் மாணவர் யாவருக்கும் அந்நூற் சொற்பொருள் வளப் பண்டகசாலைக்கு நயமிக்க தோர் திறவுகோலாக இவ்வுரைநடைச் செந்தமிழ்ச் சீரிய நூலை இயற்றிய தமிழ்வாணர்க்குத் தமிழுலகு என்றும் கடப்பாடுடையது”

என்று அந்நூலுக்குத் தாம் வழங்கிய முன்னுரையில் போற்றியுரைக்கின்றார்.

இதே ஆண்டில் வெளிவந்தது ‘சிலப்பதிகார நூல் நயம்’ என்ற மற்றொரு நூல். ஆசிரியர் பெருமை, அரச நீதியும் அரசியலும், ஆரிய அரசரும் தமிழரும், கண்ணகியின் கற்பின் திறம். வினைப்பயன், பண்டைத் தமிழ் மக்கள் நாகரிகம், சிலப்பதிகார நூல்நயம் என்னும் ஏழு தலைப்புகளில் இந்நூல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து 1932ஆம் ஆண்டில் வெளிவந்த ‘வீரமாநகர்’ என்னும் நூல் கம்பராமாயணம் பற்றிச் செய்த அரியதோர் அருமையான ஆய்வு நூல், இந்நூலின் இனிமையை நூலுக்கு முன்னுரை வரைந்த வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் அவர்கள்,

“பலர்க்கும் தெரிந்த பழங்கதைகளை, ஆசிரியர் தம் புலமைத் திறமையால் புதுமையானவையாக்கிப் படிப்பவர் மனத்தை மகிழ்விக்கிறார். கதைப் போக்கில் வரும் தக்க இடங்களில் தக்க அறிவுரைகள்

இலக்கியச் சுவையோடு இனிது கலந்தூட்டி இன்பமும் பயனும் எய்தச் செய்தல் இந்நூலிற் பல இடங்களில் காணலாம். இதில் ஒவ்வொரு பக்கமும் இனிமையா யிருப்பதை வாசிப்போர் சில பக்கங்கள் வாசித்த அளவில் தெரிந்துகொள்வர் என்பது திண்ணம். இந்நூலின் இனிமை நுனியிலிருந்து நுகரப்படும் கரும்பின் இனிமை போன்றிருக்கின்றது.”

என்று எடுத்துரைக்கின்றார்.

அடுத்து 1945இல் வெளிவந்த ‘தமிழ் விருந்து’ தமிழர்தம் கலைத்திறன், தமிழரின் வாழ்க்கை மேன்மை, தமிழ் மொழி யின் செம்மை, தமிழ் இலக்கியத்தின் சீர்மை ஆகியவற்றை எடுத்தியம்புகிறது.

அடுத்த ஆண்டில் 1946இல் வெளிவந்த ‘தமிழகம்ஊரும் பேரும்’ என்ற நூல், இவர்தம் ஆய்வின் மணி முடியாகத் திகழ்வது. ஆயிரத்து முந்நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்கள் இந்நூலில் ஆய்விற்குட்பட்டுள்ளன. தமிழ்ப் பண்பாட்டு நூலாகவும் வரலாற்று நூலாகவும் இந்நூல் துலங்குகின்றது. இந்நூல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின பரிசு பெற்ற பெருமை உடையது. திரு. வி. க. அவர்களின் மதிப்புரை இந்நூலின் தரத்திற்கும் ஆசிரியர்தம் ஆய்வுத் திறனுக்கும் உரை கல்லாக ஒளிாகின்றது.

“ஆசிரியர், நிலம்- மலை-காடு-வயல்-ஆறு-கடல்-நாடு-நகரம்-குடி-படை-குலம்-கோ-தேவு-தலம் முதலியவற்றை அடியாகக் கொண்டு இந்நூற்கண் நிகழ்த்தியுள்ள ஊர்பேர் ஆராய்ச்சியும், ஆங்காங்கே பொறித்துள்ள குறிப்புகளும் பிறவும் தமிழ்ச் சரித்திர உலகுக்குப் பெருவிருந்தாகும் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டில் சில ஊர்ப்

பேர்கள் சிதைந்தும், திரிந்தும், மருவியும், மாறியும் தத்தம் முதல் நிலையை இழந்துள்ளன. அவை மீண்டும் பழைய நிலை எய்திப் பண்புறுதற்கு இந்நூல் பெருந்துணை செய்தல் ஒருதலை. இந்நூலுள் பொலிதரும் சில ஊர்ப் பேர்களின் வரவாறு, சாம்பியும் சோம்பியும், நலிந்தும் மெலிந்தும் கிடக்கும் நம் மக்கட்கு அமிழ்தாகிப் புத்துயிர் வழங்கல் உறுதி. நூலின் நடைக்கண் நடம் புரியும் பீடும் மிடுக்கும் வீறும் நாட்டின் சவலையை நீக்கி, அதன் மாட்டு வேட்கையை எழுப்பி, அதை ஊக்குவனவாகும்.”

1947இல் வெளிவந்த ‘தமிழர் வீரம்’ என்னும் பெயரிய நூல் தமிழர்தம் போர்த் திறத்தையும், படைத் திறத்தையும் விளக்குகிறது.

அடுத்த 1948இல் வெளியிடப் பெற்ற ‘தமிழின்பம்’ பாரதப் பேரரசின் சார்பில் இயங்கும் சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்றது. இந்நூலுக்கென வழங்கப்பட்ட ஐயாயிரம் வெண்பொற் காசுகளுடன் பத்தாயிரம் வெண்பொற் காசுகளைச் சேர்த்துப் பல்கலைக்கழக நிதி வளர்ச்சிக்காக இவர் கொடுத்தார். இதனால் பலரும் இவரைப் பாராட்டினர்.

ஐந்தாண்டுகள் இடைவெளிக்குப்பின் வந்த ‘வழி வழி வள்ளுவர்’ வள்ளுவரைப் பிற புலவர்கள் எடுத்தாளும் திறனை விளக்கி நிற்கிறது.

இறுதியாக 1958இல் வெளிவந்த ‘தமிழகம் அலையும் கலையும்’ தமிழ்நாட்டின் கலைச்சிறப்பையும். கலை வளர்த்த நகரங்களின் நல்லியல்புகளையும் ஆய்கின்றது.

ஆய்வு நூல்களாக அன்றிக் கட்டுரைத் தொகுப்புக்களாக வந்தவை ‘கடற்கரையிலே’, ‘ஆற்றங்கரையினிலே,’ வேலும் வில்லும்’ என்பன. ‘வேலும் வில்லும்’ என்ற நூல் கம்பரும் கச்சியப்பரும், மூவர் தமிழும் முருகனும், திருச்செந்துார் முருகன் என்ற மூன்று கட்டுரைகளின் தொகுப்பாகும். கவிஞரும் கலைஞரும் உரையாடுவது போன்று அமைந்தது ‘கடற்கரையிலே’ என்ற நூல். விருதைத் தமிழ்க் கழகத்தின் சார்பில் வெளிவந்த தமிழ்த் தென்றல் என்ற இதழில் வெளி வந்த தொடர்கட்டுரைகள் இருபதின் தொகுப்பு நூல் இது. தமிழக ஆறுகளின் சிறப்பு, அவற்றின் கரைகளில் அமைந்த நகரங்களின் வரலாற்றுச் சிறப்பு, இலக்கியச் சிறப்பு இவற்றை எடுத்துக் கூறும் ‘ஆற்றங்கரையினிலே’ கல்கியில் வெளிவந்த தொடர் கட்டுரைகள் நாற்பத்தெட்டின் தொகுப்பு நூல் ஆகும். இது 1961 இல் வெளிவந்தது.

‘வேலின் வெற்றி’, ‘திருக்காவலூர்க் கலம்பகம்’ என்ற இரு நூல்களும் முறையே கந்த புராணத் திரட்டையும் திருக்காவலூர்க் கலம்பகத்தையும் தழுவி எழுதப்பட்ட உரை நூல்கள் ஆகும்.

Words and their Significance. Dravidian Comparative Vocabulary, Common Dravidian Proverbs என்பன இவர் ஆங்கிலததில் எழுதி வெளியிட்ட நூல்கள் ஆகும்,

நடை நலம்

1. சேதுப்பிள்ளை அவர்களின் நடை கலைபயில் தெளிவும். கட்டுரை வன்மையும் கொண்டது.

2. செய்யுளின் இனிமை கொண்ட செந்தமிழ் நடை. இதனை நாவலர் சோமசுந்தர பாரதியார் ‘செய்யுளோசை ஒழுகுகின்ற அவரது தெள்ளிய தமிழ் நடை’ என்று போற்றுகின்றார்.

3. இவர்தம் உரைநடையில் மேடைப் பேச்சின் எதிரொலியை ஆங்காங்கே காணலாம். 4. ரா. பி. சேதுப்பிள்ளையின் பேச்சு நடையும்.கட்டுரை நடையும் ஏறக்குறைய திரு. வி. க. அவர்களின் பேச்சு நடையையும் எழுத்து நடையையும் ஒத்ததாகவே இருக்கும்,

‘உரைநடையில் தமிழைப்போல் நுகரவேண்டுமானால் திரு. வி. க., சேதுப்பிள்ளை ஆகிய இருபுலவர்களின் செந்தமிழைச் செவியில் மடுக்க வேண்டும்.’

என்ற யோகி சுத்தானந்த பாரதியின் கூற்றும் இதனை உண்மைப்படுத்துகிறது.

5. இவர்தம் நடை தனித்தமிழ் நடையாகும். எதுகை மோனை இன்பத்திற்காகக்கூட இவர் வடமொழிச் சொற் களைக் கையாள்வதில்லை. இவர்தம் தனித் தமிழ் ஆரவாரமற்றது. திட்ப நுட்பம் சான்றது.

அருமையான தமிழ்ச்சொல் ஒன்றிருக்க ஆங்கிலத்தை எடுத்தாளுதல் அறிவீனம் அல்லவா? கரும்பிருக்க இரும்பைக் கடிப்பாருண்டோ?

—அலையும் கலையும், ப. 32.

என்ற வினா, இவர்தம் தமிழ் ஆர்வத்தை அன்றோ புலப்படுத்துகின்றது.

6. இவர்தம் நடையில் எதுகையும் மோனையும் மிகுதியாக இடம் பெறும். சான்றாகப் பின்வரும் பகுதியைப் காட்டலாம்.

“காஞ்சி மாநகரம் தெய்வம் மணக்கும் திருநகரம். எம்மருங்கும் கோயில்களும், கோட்டங்களும் நிறைந்து, இறையொளி வீசும் இந்நகரில் “கச்சி ஏகம்பா!” என்று கைகூப்பித் தொழுவோரும், “கஞ்சி வரதப்பா!” என்று கசிந்துருகி நிற்பாரும்

எண்ணிறந்தவர். கண்ணுக்கினிய பூஞ்சோலையின் இடையே, ஒரு மாவின் கீழ்க் கோயில் கொண்ட மங்கை பங்கனை “ஏகம்பத்துறை எந்தாய் போற்றி” என்று அருந்தமிழ் மலரால் அருச்சனை செய்தார் மாணிக்கவாசகர்.”

—ஆற்றங்கரையினிலே. ப. 9.

7. பழந்தமிழ் இலக்கிய நூலின் கருப்பொருளை நுட்பமாக ஆய்ந்து அதன் சொற்பொருள் நயங்களை எளியோரும் எளிதில் உணரும்வண்ணம் திட்பமாகக் கூறும் பாங்கினை இவர் நடையில் காணலாம்.

8. முன்னோர் மொழி பொருளைப் பொன்னே போல் போற்றும் திறத்தினையும் இவர் நடையில் காணமுடிகிறது.

9. ஏற்ற இடங்களில் சிறந்த இலக்கியப் பகுதிகளை அளவறிந்து மேற்கோளாகக் காட்டும் நோக்கினையும் உடையதாக அமைகிறது.

10. அழகு தமிழினை மட்டுமின்றிப் பழகு தமிழின் இனிமையையும் காணலாம். இலக்கியச் சுவையும், ஆராய்ச்சிக் குறிப்புகளும், அனுபவ உண்மைகளும் ஆங்காங்கே இணைந்து படிப்போர் நெஞ்சத்தில் தமிழின் இனிமையைப் பதிக்கும் உயர் நடை இவர் நடை.

11. இவர்தம் உரைநடைத் தமிழுக்கு ஒளியும் உயிரும் ஊட்டும் உயர் பண்புகள் எளிமையும் இனிமையும் தெளிவும் திண்மையும் ஆகும்.

12. தமிழ் மொழியின் சொல் வளத்தினை—அதன் பெருமையை அருமையை அறிவிக்கும் உயர்ந்த நடை இவர் நடை. 13. சொல்லொடு சொல்லையும் கருத்தொடு கருத்தையும் ஒப்புநோக்கிச் சுவையையும் பயனையும் இணைக்கும் உன்னத நடை

14. பேராசிரியரின் உரைநடை பயிலுவோர் உள்ளத்தில் தமிழார்வத்தைப் பெருக்கெடுக்க வைப்பது. சேதுப்பிள்ளை அவர்கள் காலத்தில் தமிழார்வம் குறிப்பிடத் தக்க (அல்லது) பாராட்டும் அளவில் இல்லை. ஆயின் அதனைத் தட்டி எழுப்பி அந்த ஆர்வத்தை வளர்த்த பெருமை சேதுப்பிள்ளையின் நடைக்கு உண்டு.

15. தக்க இலக்கியச் சொற்களையும் வழக்குச் சொற் றொடர்களையும் மணிமிடை பவளம் போலக் கட்டுரைகளில் எடுத்தாண்டமையால் இவர்தம் நடை படிப்பவரின் தமிழ் உரைநடைத் திறத்தை உயர்த்தியது. தனித்தமிழின் இனிமை யையும் ஏற்றத்தையும் நிலைபெறச் செய்தது. தமிழ்ச் சொற்கள் சிலவற்றின் வரலாற்றையும் சிறப்பையும் உலகுக்கு அறிமுகப்படுத்தியது.

கொடை வள்ளல்

தமிழ்ப் புலவர்கள் என்றால் வறுமையில் வாடுபவர்கள் என்ற ஒரு நிலை இருந்தது. இந்நிலையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொடை வள்ளலாகத் திகழ்ந்தார் சேதுப் பிள்ளை.

அண்ணாமலை, சென்னைப் பல்கலைக் கழகங்களுக்குத் தனித்தனியே இருபத்தையாயிரம் வெண்பொற்காசுகள் வழங்கினார். இதன்படி ஆண்டுதோறும் இப்பல்கலைக் கழகங் களில் தமிழ் இலக்கியம், சமயம் பற்றிய சொற்பொழிவுகள் நடைபெற வேண்டும். வட்டித் தொகையாக வரும் ஆயிரத்தில் ஒரு பாதி சொற்பொழிவாளருக்கும் மறுபாதி பொழிவை நூலாக்கவும் பயன்பட வேண்டும் என்றும் திட்டமிட்டார். இராசவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் திருக் கோவிலைப் புதுப்பிக்கும் பணிக்கு 2000 வெண்பொற்காசுகள் வழங்கினார். அக்கோயிலின் குடமுழக்கு விழா நாளில் எண்ணுாறு வெண்பொன் மதிப்புள்ள பெருமனி ஒன்றை வாங்கிக் கோவிலின் முன் மண்டபத்தில் தொங்கவிட்டார்.

திருநெல்வேலி நகர்மன்றத்தைச் சார்ந்த மகப்பேறு மருத்துவமனைக்கு. பின்னாளில் தம் நூல்களுக்கு வரும் வருவாய்த் தொகையை எழுதி வைத்தார்.

பெற்ற சிறப்புகள்

1. ‘தமிழகம்—ஊரும் பேரும்’ என்ற நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசாக ஐந்நூறு வெண்பொற்காக களைப் பெற்றார்.

2. ‘தமிழின்பம்’ நூலுக்காக மத்திய அரசிடம் ஐயாயிரம் வெண்பொற்காசுகளைப் பரிசாகப் பெற்றார்.

3. 1950ஆம் ஆண்டின் தருமபுர ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களால் ‘சொல்லின் செல்வர்’ என்று பாராட்டப் பெற்றார்.

4. 1957இல் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்) என்ற பட்டம் வழங்கப் பெற்றுப் பாராட்டப் பெற்றார்.

5. 1961இல் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் தலைமையில் வெள்ளி விழாக் கண்டார். வெள்ளிவிழாத் தலைவர் ரா.பி.சே. அவர்களின் திருவுருவப் படத்தை அன்று திறந்து வைத்தார். வெள்ளிவிழா நினைவு மலர் ஒன்று டாக்டர் தனிநாயக அடிகள் அவர்களால் வெளியிடப்பெற்றது.

6. தம் அறுபத்தைந்தாவது வயதுவரை பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு.

“சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பணியேற்ற சேதுப்பிள்ளை, இருபத்தைந்து ஆண்டுகளாக இணையிலாத் தமிழ்ப் பணியாற்றியுள்ளார். அவர் விளம்பரத்தை விரும்பாமல் கடமையுணர்ச்சியுடன் பலருடைய அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்மதிப்பிற்கும் உரியவராக அரிய பணி ஆற்றினார். அவர் தமிழ் மொழியிடத்து அளவிறந்த பற்றுப் பூண்டவர். எனினும் பிறமொழிகளைச் சிறிதும் வெறுப்பவரல்லர். இஃது இவரிடம் விளங்கும் மிகவும் போற்றத்தக்க அம்சம். அவர் தமக்காகவோ தம்மைச் சார்ந்தவருக்காகவோ என்பால் உதவி நாடி எந்த நாளும் வந்ததில்லை.”

என்னும் துணைவேந்தரின் உரை, இவர்தம் பெருமைக்குப் பெருமை சேர்க்கிறது.

பண்பு நலன்கள்

1. இறையுணர்வு மிக்கவர்-சைவரான இவர் தஞ்சை நாட்டு அன்னப்பன் பேட்டைத் திருமடத் தலைவராய் விளங்கிய சபாபதி தாயுமானவர் என்பவரிடம் சைவ சமய தீக்கை பெற்றுத் தாம் ஒர் உண்மைச் சைவர் என்பதை உ ண்மைப்படுத்தினார்.

2. செப்பறை அடிகளார் சிவஞான தேசிகர், திருமணம் செல்வகேசவ முதலியார் இவர்களைச் சிந்தை மறவாத தன்மையினால் குருபக்தி மிக்கவர் என்பது புலனாகிறது.

3. அன்னை சொர்ணம்மாள் பெயரில் பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியதால், தாயிடம் இவர் கொண்ட அன்பும் மதிப்பும் புலனாகின்றன.

சா—11 4. தாய்மொழிப் பற்று மிக்கவர். நாட்டுப்பற்றும் மிக்கவர்.

“தமிழுக்கு ஒரு நல்லது என்றால் அவர் உடலிலே தெம்பு, முகத்திலே உவகை; தமிழுக்கு ஓர் இடையூறு என்றால் அவர் உடலிலே தளர்ச்சி, முகத்திலே கவலை இப்படியாக அவர் தமிழைத் தம் வாழ்வோடு வாழ்வாக இணைத்து வாழ்கிறார்.

என்ற மு.வ. அவர்களின் போற்றுதல் மொழி இவர்தம் தமிழ்மொழிப் பற்றின் மேன்மையை அறிவுறுத்துகின்றது.

மறைவு

தமிழுக்காக வாழ்ந்து தமிழ் உலகிற்குச் சீரும் சிறப்பும் தேடித்தந்த ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள், 1961ஆம் ஆண்டு வெள்ளிவிழாக்கண்ட பன்னிரண்டாம் நாள் மண்ணுலக வாழ்வை நீத்து விண்ணுலகம் எய்தினார்.

நிறைவுரை

இவ்வாறாக ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் வாழ்க்கை ஏற்றமும் வீறும் உடையதாகத் துலங்கச் சொற் பொழிவுகள் நிகழ்த்தியும், நூல்கள் வழங்கியும், கட்டுரைகள் எழுதியும், ஆய்வுக்கு வழிகாட்டியும் அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டு சொற்களால் வடித்துக்கூற இயலாச் சீர்மை வாய்ந்ததாக விளங்குகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=சான்றோர்_தமிழ்/9&oldid=1017799" இலிருந்து மீள்விக்கப்பட்டது