சாயங்கால மேகங்கள்/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

22

இந்த நூற்றாண்டு அரசியலுக்கு யோக்கியனைவிட யோக்கியனைப் போலப் பாசாங்கு செய்யும் சாமர்த்தியமுள்ளவனே எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேவைப்படுகிறான்.


ருளில் அடையாளம் தெரியாத யாரோ சிலரால் பாராளுமன்ற உறுப்பினர் பன்னீர்ச்செல்வத்தின் மகன் குமரகுரு தாக்கப் பட்டதாக ஒரு பரபரப்பு பத்திரிகைகளில் கிளம்பி ஓய்ந்தது. பன்னீர்ச்செல்வத்தின் அரசியல் சார்புக்கு எதிரான தரப்பைச் சேர்ந்த பத்திரிகைகள் இந்தத் தாக்குதலில் ஒரு பெண் விவகாரம் சம்பந்தப் பட்டிருப்பதாகப் பிரசுரிக்கவே. பன்னீர்ச்செல்வம் அதிகம் மிரண்டு போனார்.

போலீஸ் விசாரணை வழக்கு என்றெல்லாம் போனால் தன் மகனின் சூட்டு உடைந்து போகும் என்று பயந்து அவரே இந்தக் செய்தியை அப்படியே பூசி மெழுகி அமுக்கி விட விரும்பினார். பெரிது படுத்த விரும்பவில்லை. இதைப் பெரிது படுத்தினால் தன்னுடைய மானம்தான் போகும் என்பதை அவர் புரிந்து கொண்டிருந்தார். மற்றவர்களுக்கு முன் விட்டுக் கொடுக்க விரும்பாவிட்டாலும் தன் மகனின் வண்டவாளம் அவருக்கு நன்றாகத் தெரிந்தே இருந்தது.

அரசியல் பிரபலமாக இருந்து கொஞ்சம் பணம் காசு பண்ணிக்கொண்டிருக்கிற சமயம் பார்த்துப் பிழைப்பில் மண்ணைப் போட்டுவிடாதே என்று அவரே தன் மகன் குமர குருவைக் கண்டிக்கவும் தயங்கவில்லை.

முற்றிலும் கெட்டவனாக இருப்பதையோ, கெட்ட வழியில் பணம் பண்ணுவதையோ, கெடுதல்கள் செய்வதையோ பற்றி எந்த அரசியல்வாதியும் கூச்சப்படவில்லை. ஆனால் கெட்டவன் என்று பத்திரிக்கைகளில் பெயரெடுப்பதையோ பிரச்சாரம் ஆவதையோ மட்டும் விரும்புவதில்லை. பன்னீர்ச்செல்வமும் அப்படித்தான் இரட்டை வேஷம் போட்டார். மக்கள் தொண்டராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஏழை பங்காளராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்கள் தொண்டர் ஏழை பங்காளர் என்ற பாசாங்குகள் ஒவ்வொரு வெற்றிகரமான அரசியல்வாதிக்கு இன்று தேவைப்பட்டன.

ரெளடி குமரகுருவின் தந்தை பன்னீர்ச்செல்வத்திற்கும் அந்தப் பாசாங்குகள் தேவையாய் இருந்தன. பயன் பட்டன. பழகிப் போயிருந்தன. இந்த நூற்றாண்டு அரசியலுக்கு யோக்கியனை விட யோக்கியனைப் போல் பாசாங்கு செய்யும் சாமர்த்தியமுள்ளவனே எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேவைப்பட்டான். யோக்கியனும், நல்லவனும், இடையூறாகவும், தொந்தரவாகவுமே கருதப்பட்டார்கள். யோக்கியதையும், ஒழுக்கமும் ‘நியூசென்ஸாக'க் கருதப்பட்டன. ஆனாலும் அந்த நல்ல குணங்களை நடிப்பதும் பாவிப்பதும்மட்டும் ஒரு வழக்கமாக இருந்து வந்தது.

செல்வாக்குள்ள வலுவானவர்களின் தவறுகளை எதிர்க்க எல்லோரும் பின்வாங்கித் தயங்குகிற சமயத்தில் பாவனைகளோ பாசாங்குகளோ இல்லாமல் பூமி அதற்கு முன் வந்ததன் மூலம் சித்ராவின் மனத்தில் அவனைப் பற்றி இருந்த மதிப்பு அதிகமாகி இருந்தது.

சவாரி சென்றவர் மறந்துபோய் விட்டுச் சென்ற பண்டங்களை நாணயமாக திரும்பத்தேடி வந்து ஒப்படைக்கும் ஒரு யோக்கியனான ஆட்டோ டிரைவராகத்தான் அவனை அவள் முதன் முதலாகச் சந்தித்திருந்தாள். பின்பு படிப்படியாகத் தன்னை அவளுக்கு நிரூபித்திருந்தான் பூமி. முத்தக்காள் மெஸ்ஸில் அதிகக் கூட்டமில்லாத ஒரு நண்பகல் நேரத்தில் அன்று அவளுக்கு பள்ளியும் விடுமுறை - அவனைக் கேட்காமலே அவனுக்கும் சேர்த்து ஒரு திரைப்படத்தின் மாட்னி ஷோவிற்கு ரிசர்வ் செய்து கொண்டு தேடிப் போய்ச் சேர்ந்திருந்தாள் சித்ரா.

அது ஒரு புகழ் பெற்ற புரூஸ்லீ படம். பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. பூமி படம் பார்ப்பது போன்ற பொழுது போக்கு அம்சங்களில் அளவு கடந்த விருப்பமோ வெறுப்போ காட்டுவதில்லை. சித்ராவுக்கும் அது தெரியும். தான் கூப்பிட்டு அவள் வருகிறானா, இல்லையா என்று சோதிக்க வேண்டும் என்றும் இல்லாவிடினும், அவள் உடன் வருவான் என்ற ஆசையோடும் அவள் டிக்கெட் வாங்கி ரிசர்வ் செய்திருந்தாள்.

“உங்களை நம்பி வாங்கிவிட்டேன். நீங்கள் என்னோடு வர வேண்டும்.”

“இது சாதாரண வேண்டுகோள்தான்!” பயப்பட வேண்டாம். இதை நான் மறுத்துவிட மாட்டேன். ஆனால் என்னை இதைவிட உயர்ந்த காரியங்களுக்காகவும் நம்பலாம். நம்ப வேண்டும்."

"சாதாரண நம்பிக்கைகளில் தொடங்கித்தான் உயர்த்த நம்பிக்கைகள் பிறக்கின்றன”.

“இருக்கலாம்! ஆனால் உயர்ந்த நம்பிக்கைகள் சாதாரண நம்பிக்கைகள் என்றெல்லாம் நம்பிக்கையில் வித்தியாசங்களோ பிரிவுகளோ இருப்பதாக நான் கருதவில்லை. நம்புகின்ற காரியங்களைப் பொறுத்துத்தான் உயர்வு தாழ்வெல்லாம் வருகின்றன. காரியங்களில்தான் நான் தராதரம் பார்க்கிறேன்.” பேசிக் கொண்டே பூமி அவளோடு திரைப்படத்துக்குக் கிளம்பத் தயாரானான்.

போகும்போது வேலையில்லாத இளைஞர்களுக்காக அரசாங்கக் கடனுதவியில் வைத்துக் கொடுக்கப்பெற்ற ஒரு சாதாரணத் தெருமுனைத் தேநீர்க்கடையில் அவளுக்குத் தேநீர் வாங்கிக் கொடுத்தான் அவன்.

சேறும், சகதியுமாயிருந்த நடைபாதையில் எதிரும் புதிருமாக நின்று அவனோடு தேநீர் அருந்துவது ஒரு புது அநுபவமாக இருந்தது அவளுக்கு. அவள் அதில் அரு வருப்போ கூச்சமோ அடைகிறாளா இல்லையா என்பதைப் பூமி கூர்ந்து கவனிப்பதாகத் தோன்றியது.

“சுற்றுப்புறத்தைப் பார்த்து அசிங்கப்படக்கூடாது. இந்தக் கடையில் தேநீர் மிகவும் நன்றாயிருக்கும். என்னைப் போல் இந்தக் கடைக்காரரும் ஒரு பட்டதாரி. ‘ஸெல்ஃப் எம்ப்ளாய்மெண்ட்’ திட்டத்தில் உதவி பெற்று இதனை நடத்துகிறார். ‘’

“ஆமாம்! நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி, தேநீர் இங்கு மிகவும் நன்றாயிருக்கிறது.”

“முன்பு ஒருமுறை சந்தித்தோமே புரட்சி மித்திரனோ, என்னவோ--பேர் சொன்னதாக நினைவு. அவனைப்போன்ற போலிப் புரட்சிவாதிகள் டீ குடிப்பதற்குக்கூட ஹோட்டல் சோழாவுக்குப் போகவேண்டும் என்றல்லவா சொல்வார்கள்?”

"அவனுக்குத் தெரிந்த புரட்சி அவ்வளவுதான், அவன் பணக்காரன், அந்தக் காம்ப்ளெக்ஸில் ஒன்றும் புரியாமல் புரட்சி புரட்சி என்று பேசித் தீர்க்கிறான்.”

“உண்மையான புரட்சி என்பது பேசப்படுவதில்லை. தீவிரமாகச் செய்யப்படுவது. பம்பரம் மிக வேகமாகச் சுழலும் போது சத்தமே கேட்காது. சுற்றுகிறதா நிற்கிறதா என்றுகூடச் சந்தேகமாயிருக்கும், தீவீரப் புரட்சியும் அப்படித்தான்.”

அவனுடைய விளக்கம் அவளுக்குப் பிடித்திருந்தது, “உங்கள் உவமை அழகாயிருக்கிறது” - என்று பாராட்டினாள் அவள்.

“ஓர் உவமை அழகாயிருக்கிறது என்று பாராட்டப்படுவதற்குப் பதில், ஆழமானதாயிருக்கிறதென்று பாராட்டப் படவும்-புரிந்துகொள்ளப்படவும் வேண்டுமென்று நினைக்கிறவன் நான்! சில சமயங்களில் தத்துவார்த்தத்தின் வறுமை அல்லது வெறுமையே சொற்களின் அழகிய கோவைபோலத் தோன்றும், ‘தி பாவர்ட்டி ஆஃப் பிலாஸ்பி’ என்று மார்க்ஸ் ஒரு நூலையே இப்படிப் பேரில் எழுதியிருக்கிறார்.”

இப்படி அவன் பேசும்போதெல்லாம் ஆச்சரியத்தில் திளைத்தாள் சித்ரா, திரைப்படம் முடிந்ததும் மெஸ்ஸூக்கு அவசரமாகப் போகவேண்டும் என்றான் அவன். அவள் போகும்போது அவனைக் கேட்டாள்: “நீங்கள் பெரும்பாலும் ஏன் படங்களுக்கு விரும்பிப் போவதில்லை?”

“அளவு மீற மிகைப்படுத்தப்பட்ட நற்குணங்களுள்ளவர்களும் அதே போல மிகைப்படுத்தப்பட்ட தீய குணமுள்ளவர்களும் வருகிற மாதிரி நமது திரைக்கதைகள் அமைவதால் எனக்குப் பிடிப்பதில்லை. நன்மையும் நம்பும் படியாக இல்லை! தீமையும் நம்பும்படியாக இல்லை”

“இந்தப் படம் உங்களுக்குப் பிடித்திருந்ததா?...”

"இதில் இயல்பான கதையோட்டமும் விறுவிறுப்பும் இணைந்திருக்கும் விதம் குறைசொல்ல முடியாதபடி அமைந்திருக்கிறது.”

“ஆட்டோவை யாரிடம் விட்டிருக்கிறீர்கள்? மெஸ்ஸை நிர்வாகம் செய்வது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?” என்று கேள்வியை வேறு திசையில் திருப்பினாள் சித்ரா.

“இது ஒரு சவாலாக வந்து வாய்த்தது. நம்மால் இந்த மெஸ்ஸே மூடப்பட்டு விடுமோ என்று இதன் உரிமையாளியான முத்தக்காள் பயந்தபோது. இதை நாம் முன்னின்று முனைந்து நடத்தும் பொறுப்பு வந்து சேர்ந்தது. இப்போது இது அமைந்துள்ள வளர்ச்சியில் நம் துணையில்லாமல் தானே தனியாக இதை நடத்த முடியாது என்று முத்தக்காளே பயப்படுகிறாள்.”

“தனியாக நடத்த முடியாது. உங்கள் துணை கண்டிப்பாக வேண்டுமென்று அவங்களே சொல்லி விட்டாங்களா?”

“ஒருமுறையில்லை, பலமுறை சொல்லியாயிற்று. ஒரு தாயிடம் மகன் கட்டுப்பட்டிருப்பதுபோல் நானும் இங்கே கட்டுப்பட்டுப் போயிருக்கிறேன்.”

பேசிக்கொண்டே மெஸ்ஸுக்குப் போயிருந்தார்கள் அவர்கள். முத்தக்காள் சோர்வுடன் அவர்களை எதிர் கொண்டாள்.

“கார்ப்பொரேஷன் ஸானிட்டரி இன்ஸ்பெக்டர் ஆபீஸிலிருந்து ஸ்பெஷல் மெஸஞ்சர் வந்து இந்த நோட்டீஸைக் கொடுத்திட்டுப் போறான்” - என்று பூமியைப் பார்த்ததும் அவனிடம் அந்தக் கவரை எடுத்து நீட்டினாள் முத்தக்காள்.

“பிரச்னை எதுவும் இல்லையென்றாயே? இதோ வந்திருக்கிறது பார்” என்பது போல் சித்ராவைப் பார்த்துப் புன்னகை புரிந்தபடியே முத்தக்காளிடமிருந்து அதை வாங்கி உறையைப் பிரித்தான் பூமி.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/22&oldid=1028950" இருந்து மீள்விக்கப்பட்டது