சாயங்கால மேகங்கள்/26

விக்கிமூலம் இலிருந்து

26

அந்தரங்க சுத்தியோடு உண்மை பேசுபவர்களை விடப் பலர் கை தட்டி ஆரவாரிப்பதற்காக மட்டுமே உண்மை பேசுகிறவர்களுக்கு இன்று அதிகக் கவர்ச்சி இருந்து தொலைக்கிறது!

டற்கரைச் சம்பவத்தன்று இரவு நெடுநேரம் தூக்கம் வராமல் படுக்கையில் சிந்தித்தபடி புரண்டு கொண்டிருந்தாள் சித்ரா. சராசரியாகப் பூமியின் வயதுள்ள மற்ற இளைஞர்களோடு அவனை ஒப்பிட்டுப் பார்த்தாள். அவர்களில் இருந்து பல விதத்தில் அவன் உயர்ந்து நின்றான். அவனுடைய சத்திய வேட்கை, சத்தியம் அவசரம், பிறருக்கு உதவும் பெருந்தன்மை ஆகிய சில குணங்களை வேறு இளைஞர்களிடம் இன்று அடையாளம் காணக் கூட வழியில்லாமல் இருந்தது.

பத்திரிகை நடத்திப் புதுக்கவிதை எழுதும் பணக்காரக் குடும்பத்துப் பிள்ளையான் புரட்சிமித்திரன், முதலிய தான் பழகிய- பழகும் வேறு பல இளைஞர்கள் எல்லாரையும் நினைத்து விட்டுப் பூமியையும் நினைத்தபோது ஓர் அடிப்படை வித்தியாசத்தை அவளால் மிக நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

அவர்களெல்லாரும் அவளுக்கு முன் அல்லது அவளறிய எதைச் செய்தாலும் அவளைக் கவர்வதற்காகவே அதை நன்றாகச் செய்ய வேண்டுமென்று முயல்வது தெரிந்தது. இன்று உண்மை பேசுபவர்களில் கூட இரண்டு ரகம் உண்டு. அந்தரங்க சுத்தியோடு உண்மை பேசுகிறவர்களை விடப் பலர் கைதட்டி ஆரவாரிப்பதற்காக மட்டுமே உண்மை பேசுகிறவர்களுக்கு இன்று அதிகக் கவர்ச்சி இருந்து தொலைக்கிறது. பூமி அவளைக் கவர வேண்டும் என்று எதையும் செய்ய முயன்றதில்லை என்பது நினைவு வந்தது. நல்லவனாக இருப்பது வேறு. அவ்வப்போது நல்லவனாக இருக்க முயன்று கைவிடுவது வேறு.

அவ்வப்போது நல்லவர்களாகவும், நல்லவர்களைப் போலவும், நல்லவர்களின் நினைப்போடும் இருப்பவர்கள் நிறைய இருந்தார்கள். ஆனால் பூமியைப் போல் முயலாமல் பாராட்டையும் எதிர்பாராமல் நல்லவனாக இருப்பதைத் தன்னிச்சையாகச் செய்யும் யாரும் தென்படுவது அபூர்வமாக இருந்தது. பூமி நல்லவனாகவும் இருந்தான். வல்லவனாகவும் இருந்தான். வல்லவன் நல்லவனாக இராததும் நல்லவன் வல்லவனாக இராததுமே இன்றைய சமூகத்தில் எங்கும் தூக்கலாகத் தெரியும்போது, ஒரு நல்லவன் வல்லவனாகவும் இருந்து இரண்டையும் பற்றிய கர்வமோ தலைக்கனமோ இன்றி எளிமையாக வாழ்ந்தது புதுமையாயிருந்தது. பூமி அவளைக் கவர வேண்டும் என்று ஒருபோதும் முயலவில்லை. யாரைக் கவரவும், அவன் முயலவில்லை என்பது அவளுக்கு நினைவு வந்தது.

அவனுடைய காது கேட்க அவனது நற்குணங்களைச் சிலாகிப்பதையும் அவன் விரும்புவதில்லை. தானே அவற்றை உணர்ந்து புரிந்து கொண்டதுபோல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடப்பதும் இல்லை, சுபாவமாக இருந்தான். சுபாவமாக நல்லது செய்தான். சுபாவமாக உதவினான். சுபாவமாக நன்மையை நாடினான். தீமையை எதிர்த்தான்; புரட்சிமித்திரன் போன்ற இரண்டும் கெட்டான் இளைஞர்கள் எதைச் செய்தாலும் பாராட்டுக்காகவும் கைதட்டலுக்காகவுமே செய்தார்கள்.

சித்ராவைக் கவர வேண்டும் என்பதற்காகவே அவன் கவிதை எழுதினான். சித்ரா சிரித்துக் கைதட்டிப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே அவன் ஜோக் அடித்தான் சித்ராவைப் போன்ற பெண்களின் ஞாபகத்தில் தான் ஆண் பிள்ளையாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே மட்டும் அவன் வீரதீரனாகப் பாசாங்குகள் செய்தான், இந்தக் கொச்சையான சிறுபிள்ளைத்தனமான முயற்சியை அவள் பூமியிடம் ஒரு போதும் கண்டதில்லை.

அடுத்த சில தினங்களில் நிகழ்ந்த மற்றொரு நிகழ்ச்சியும் அவள் பூமியை நன்றாகப் புரிந்து கொள்ள வாய்ப்பளித்தது. பாலாஜி நகரிலிருந்து சித்ரா அப்பர்சாமி கோயில் தெருப்பகுதிக்குக் குடி வந்த பிறகு காலையிலும் மாலையிலும், முத்தக்காள் மெஸ்ஸில் பூமிக்கும் முத்தக்காளுக்கும் உதவியாகச் சில மணி நேரங்கள் செலவழிக்க முடிந்தது. பெரும்பாலும் அவள் செய்கிற உதவி கேஷ் டேபிளில் அமர்ந்து பில்லுக்குப் பணம் வாங்கிப் போடுகிற உதவியாகத்தான் இருக்கும். ‘பீக் அவர்ஸ்’ என்கிற கூட்ட நேரங்களில் பூமி எந்த வேலையையும் செய்து நிலைமையைச் சமாளிக்கத் தயாராயிருப்பான். அவனால் கேஷில் முளையடித்தது போல் உட்கார முடியாது.

டேபிளில் பரிமாறுவது, பார்ஸல் கட்டிக் கொடுப்பது, ஸ்டோர்ஸ், பர்ச்சேஸ் வேலைகளைக் கவனிப்பது, பாங்க் வேலைகளில் ஈடுபடுவது எதுவும் பூமிக்கு விதிவிலக்கு இல்லை என்றாலும் மெஸ்ஸில் சில வேலைகளை அவர்கள் மற்றவர்களை நம்பி, விடுவதே இல்லை. ‘கேஷ்’ டேபிளில் உட்கார்ந்து பணம் வாங்கிப் போடும் வேலையைப் பூமி, முத்தக்காள், சித்ரா மூவர் மட்டுமே செய்வதென்று வைத்துக் கொண்டிருந்தார்கள். மெஸ்ஸில் பழகத் தொடங்கிய புதிதில் கேஷில் அமர்ந்து பணம் வாங்கிப் போட்டுக் கொண்டிருந்த ஒரு மாலை வேளையில் தற்செயலாக அங்கு நடந்து கொண்டிருந்த ஒரு கோளாறு சித்ராவின் கண்ணில் பட்டது.

கேஷ் டேபிளுக்கு எதிராக ஒரு மேஜையில் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஓர் ஆளைச் சித்ரா முதலிலிருந்தே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். இரண்டு ஸ்வீட், ஒரு மசாலா தோசை, வடை, காபி இவ்வளவும் சாப்பிட்ட அந்த நபரின் பில் வந்தபோது பில்லில் வெறும் அறுபதுகாசுதான் எழுதியிருந்தது. சித்ரா சந்தேகப் பட்டாள். அந்த வரிசையில் இரண்டு மூன்று டேபிளுக்குப் பொறுப்பாயிருந்த ஒரு சர்வர்மேல் அவளுக்குச் சந்தேகம் தட்டியிருந்தது.

தொடர்ந்து கவனித்த போது அந்தச் சந்தேகம் உறுதிப் பட்டது. சில வாடிக்கையாளர்களுக்கும் அந்த ஊழல் பேர் வழியான சர்வருக்கும் நடுவே ஒரு ரகசிய ஏற்பாடு இருப்பது புரிந்தது. பில்லில் எவ்வளவு குறைத்துப் போடப்படுகிறதோ அந்தத் தொகையைப் போகும்போது ‘டிப்ஸ்’ கொடுப்பதுபோல் சர்வரிடம் கொடுத்து விட்டுப்போய் விட வேண்டும். மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாதபடி இது நடந்து கொண்டிருந்தது. சித்ராதான் இதை முதல் முதலாகக் கண்டு பிடித்துப் பூமியிடம் கூறினாள். பூமி மறுநாள் தானே கவனித்து இப்படி நடப்பதை உறுதி செய்துக் கொண்ட பின் பில் போடுற பொறுப்பை சர்வர்களிடம் இருந்து பிரித்துத் தனி ஆளிடம் ஒப்படைத்தான்.

பில் தொகையை இரண்டு முனைகளில் டபிள் செக் செய்ய ஏற்பாடு வந்தது. ஆனாலும் பாதிக்கப்பட்ட் செர்வருக்கு இது சித்ராவால் நடந்த மாறுதல் என்பது தெரிந்து விட்டது. சித்ராவின்மேல் கடுங்கோபமும், எரிச்சலும் அடைந்தான் அவன். எப்படியாவது அவளைப் பழிவாங்க வேண்டும் என்று காத்திருந்தான். இந்த சர்வர் மாதிரி நடுவிலிருந்து லாபம் சம்பாதித்து வந்தவர்களுக்கு எல்லாம் பூமியும், சித்ராவும் கூட இருக்கிறவரை முத்தக்காளை ஏமாற்றவோ மோசடி செய்யவோ முடியாதென்று தோன்றியது. எப்பாடு பட்டாவது பூமியையும் சித்ராவையும் அங்கிருந்து கத்திரித்து விட முயன்று கொண் டிருந்தார்கள் சிலர்.

முத்தக்காள் தனியாக இருக்கும்போது அவளிடம் பூமியையும் சித்ராவையும் பற்றிக் கோள் சொல்ல முயலும் வேலையை மேற்கொண்டார்கள் அவர்கள். பூமியைப் பற்றி முத்தக்காளிடம் தப்பபிப்ராயம் ஏற்படுத்தும் முயற்சி அவ்வள வாக வெற்றி பெறவில்லை. சித்ராவைப் பற்றிப் தப்பபிப்ராயம் ஏற்படுத்த முடியும் போல் தோன்றவே அந்த முயற்சியைத் தொடர்ந்தார்கள் அவர்கள்.

அந்த மாதம் முதல் தேதி பள்ளியில் சம்பளம் வாங்கிய பணத்தோடு மாலையில் வீடு செல்கிற வழியில் மெஸ்ஸுக்கு வந்திருந்தாள் சித்ரா. மெஸ்ஸில் கூட்டம் அதிகமாயிருந்தது. வழக்கம் போல் சித்ராவைக் கேஷ் டேபிளில் அமர்த்தி விட்டுப் பூமி வேறு வேலைகளில் கவனம் செலுத்தினான்.

கேஷ் டேபிளில் அமர்ந்திருந்தபோதே, சித்ரா தற்செயலாகத் தன் கைப் பையைத் திறந்து பள்ளி அலுவலகத்தில் வாங்கிய சம்பளத் தொகையை எண்ணிப் பார்த்தாள். அவள் தன் பணத்தைப் பாதி எண்ணிக்கொண்டிருக்கும் போதே பில் கொடுக்க இருவர் வந்தனர். பில் தொகையை வாங்கிப் போடும் அவசரத்தில் தன் சொந்தப் பணத்தையும் ஹோட்டல் கேஷ் மேல் வைத்த அவள், பின்பு அதைத் தனியே பிரித்து எடுத்துக் கைப்பைக்குள் போட முயன்ற போது ஒரு சர்வர் முத்தக்காளுடன் அங்கே வந்தான். முத்தக்காள் ஆத்திரத்தோடு கேட்டாள்.

“எத்தனை நாளாக இது நடக்கிறது?”

“எது? நீங்கள் என்ன கேட்கிறீர்கள் அம்மா?"

"நாடகம் ஆடினது போதும்டீ? கேஷ் பணத்திலே கையாடி நூறு நூறாப் பைக்குள்ளே வச்சு வீட்டுக்குக் கொண்டு போறதைத்தான் கேட்கிறேன்...”

சித்ரா திகைத்துப் போனாள். ஊழல் பேர்வழியான அந்த சர்வர் மெல்ல நழுவினான். அன்று வாங்கிய சொத்தச் சம்பளத்தை எண்ணிக் கைப்பைக்குள் போட்டதை முத்தக்காளுக்கு விளக்கினாள் சித்ரா. முத்தக்காள் அதை நம்பவே தயாராயில்லை. ஏற்கவும் தயாராயில்லை. “உன் சம்பளப் பணத்தை இங்கே வந்து எண்ணிப் பைக்குள்ளே போடறத்துக்கு என்னடீ அவசியம்? சும்மாப் புளுகாதே!... நான் கண்ணால் பார்க்கறப்பவே பொய் சொன்னா எப்பிடி?”

சித்ராவுக்கு ஆத்திரம் ஒரு பக்கம், அழுகை ஒரு பக்கம். கண்களில் நீர் மல்கிவிட்டது. பனை மரத்தின் கீழே நின்று பாலைக் குடிப்பது கூட ஆபத்தான அபவாதத்தை உண்டாக்கி விட முடியும் என்று இப்போது புரிந்திருந்தது அவளுக்கு. சத்தத்தையும், கூப்பாட்டையும் கேட்டுப் பூமி ஓடி வந்தான்.

“நீங்க முதல்லே உள்ள போங்கம்மா? சித்ரா விஷயம் என் பொறுப்பு. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கடுமையான குரலில் அதட்டி முத்தக்காளை அவன் உள்ளே அனுப்பினான். சித்ரா விஷயத்தை, அவனிடம் விவரித்தாள். அந்த சர்வரைக் கூப்பிட்டு உடனே விசாரித்தான் பூமி. பூமிக்குப் பயந்து சற்றுமுன் தான் முத்தக்காளிடம் சித்ராவைப் பற்றிக் கோள் சொல்லியதாக ஒப்புக் கொண்டான். அவன்.

“நீ மறுபடி கேஷ் டேபிளில் உட்கார்” என்று சித்ராவை அதட்டி உட்காரச் சொன்னான் பூமி. சித்ரா தயங்கினாள் உட்காரப் பயப்பட்டாள்.

“நம்மிடம் தவறில்லாதபோது நாம் கூசுவதும் தயங்குவதும் போல் கோழைத்தனம் வேறில்லை! நீ இப்போது கேஷ் டேபிளில் உட்காரப் போகிறாயா இல்லையா?” என்று பூமி சித்ராவை நோக்கி உரத்த குரலில் அதட்டினான்.

சித்ரா அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்டு மறுபடி கேஷ் டேபிளில் அமர்ந்து வழக்கம் போல் செயல்பட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/26&oldid=1029073" இலிருந்து மீள்விக்கப்பட்டது