உள்ளடக்கத்துக்குச் செல்

சாயங்கால மேகங்கள்/36

விக்கிமூலம் இலிருந்து

36

அறிவின்மையைச் சகித்துக் கொள்ளலாம். பாச உணர்வே அற்ற அதிக அறிவையும் சகித்துக் கொள்ளலாம். ஆனால் சொற்ப அறிவையும் அதை உடையவர்களையும் சகித்துக்கொண்டு சமாளிப்பது மிகவும் சிரமமான காரியம்.

குடிசை வாசியான அந்த ஆட்டோ டிரைவரின் மனைவிப் பொய் சொல்லுகிறாள் என்று பூமிக்குத் தெளிவாகப் புரிந்தது. உள்ளே ஒளிந்திருக்கும் அவளுடைய கணவனே அவளை பொய் சொல்லத் தூண்டியிருக்கிறான் என்பதும் அனுமானத்தில் புலப்படக் கூடிய எல்லையில் இருந்தது.

யாருக்கோ கூலிப்பட்டாளமாக மாறிக் குருவையே தாக்க முயன்றுவிட்டுக் கூசி, ஓடிய வெட்கம் காரணமாகவே அவன் தன்னை இப்போது காண நாணுகிறான் என்று பூமிக்குத் தோன்றியது.

குடிசை வாசலில் அவனை வழிமறிப்பது போல் நின்ற அந்தப் பெண்ணே எதிர்பாராதபடி, “டேய் மணி! வாடா வெளியிலே” என்று அவன் பேரைச் சொல்லி இரைந்து கூப்பிட்டபடி, உள்ளே நுழைய முயன்ற பூமியைத் தடுக்க முடியாமல் விலகி வழிவிட்டு விட்டாள் அவள்.

பூமி உள்ளே புகுந்து மின்வெட்டு நேரத்தில் ஒளிந்திருந்த அவனை வெளியே இழுத்து வந்து விட்டான்.

மணியோ பயந்து பதறிப் போய், “நான் சும்மா அந்தக் கும்பலோட வந்தேன், உங்களோட எனக்கு ஒண்ணும் விரோதமில்லே. என்னைத் தப்பா நெனைக்காதீங்க” என்று பூமியிடம் கெஞ்சாத குறையாக மன்னிப்புக் கேட்பது போன்ற தொனியில் புலம்ப ஆரம்பித்தான்.

“அதெல்லாம் இருக்கட்டும் பயப்படாதே; உன்னை நான் ஒன்றும் செய்து. விடமாட்டேன். இப்போது உன்னைப் பழி வாங்குவதற்கு நான் வரவில்லை” என்று பூமி கூறிய பதில் அவனைச் சிறிது ஆறுதல் அடையச் செய்தது.

ஆனால் பயமும் பதற்றமும் முழுதும் தணியாத நிலையிலேயே பூமியின் பிடியில் இருந்தான் மணி.

“உள்ளே இருந்தபடியே இல்லை என்று துணிந்து பொய் சொல்ற வேலையைப் பெரிய மனிதர்களும் வசதி உள்ளவர்களுமே செய்வார்கள். அல்லது திருடர்களும் சமூக விரோதிகளும் செய்வார்கள். இதில் நீ எந்த வகை மணி?” என்று சிரித்தபடியே பூமி கிண்டலாகக் கேட்ட போது கூட மணிக்கு உள்ளூற நடுக்கமாகத்தான் இருந்தது. அவனது பதில் குரலிலேயே அது தெரிந்தது.

“மன்னிச்சிடுங்க அண்ணே! உங்களுக்கு நான் தீம்பு நெனைப்பேனா?”

அப்போது அவனிடமிருந்து தனக்குத் தெரிய வேண்டிய தகவல்களை அங்கேயே விசாரித்து விடாமல் மெல்லப் பேச்சுக் கொடுத்தபடியே அவனைக் கச்சேரி ரோடு வரை உடன் அழைத்துச் சென்றான் பூமி.

‘வழிமறித்துத் தாக்க முயன்ற கூலிப் பட்டாளத்தின் எஜமானர்கள் யார், அவர்கள் கடத்திச் சென்ற பையனை எங்கே வைத்திருக்கூடும்’ என்பதைப் பற்றிப் பூமிக்கு அனுமானங்களும் உத்தேசங்களும் இருந்தாலும் அதை வெளியே நிர்ணயமாகக் காட்டிக்கொள்ளாமல். மெதுவாக மணியிடம் தகவலறிய முயன்றான் அவன்.

அது அவ்வளவு சுலபமான வேலையாயில்லை. அன்று மாலை வரை ஆட்டோ டிரைவர் மணியுடன் பல இடங்களுக்கு அலைய வேண்டியிருந்தது. மெஸ்ஸில் சித்ராவை இருக்கச் சொல்லிவிட்டு வந்திருக்கிறோம் என்ற நம்பிக்கையில் அவன் அலைந்து கொண்டிருந்தான்.

ஆனால் பூமி புறப்பட்டுச் சென்ற, சிறிது நேரத்தில் வெளியே எங்கோ சென்று விட்டுத் திரும்பி வந்த முத்தக்காள், மெஸ்ஸில் பின்புக்கத்து அறையில் உட்கார வைக்கப்பட்டிருந்த காணாமல்போன பையனின் தாயைப் பார்த்ததும் கூட்பாடு போட்டு இரைய ஆரம்பித்து விட்டாள்.

“வர வர இங்கே கேள்வி முறையே இல்லாமல் போச்சு? இதென்ன ஹோட்டலா சத்திரம் சாவடியான்னே தெரியலே? யாரப்பா இந்தப் பொம்பிளை” என்று முத்தக்காள் அங்கே இருந்தவளைச் சுட்டிக் காட்டி ஹோட்டல் சரக்கு மாஸ்டரை விசாரித்தாள். அவள் குரலில் எரிச்சல் மண்டிக் கிடந்தது.

“எனக்குத் தெரியாது! பூமி அண்ணனும் சித்ராவும் கூட்டிக் கொண்டாந்து இங்கே உட்காரச் சொல்லியிருக்காங்க” என்று சரக்கு மாஸ்டர் சகஜமாக முத்தக்காளுக்குப் பதில் சொன்னான்.

உள்ளே நுழைகிற போதே காலை வேளையில் வழக்கத்துக்கு மாறாகக் கேஷ்டேபிளில் சித்ரா அமர்ந்திருப்பதைப் பார்த்துப் பூமி இல்லை என்பதைப் புரிந்து கொண்டிருந்த முத்தக்காள் இப்போது இன்னும் எரிச்சலடைந்தாள்.

பெண் என்பவள் முள்ளோடு கூடிய மலர். ஆனால் சில வேளைகளிலே மலரே அரும்பாது அந்தச் செடியில். முள் மட்டுமே தெரிகிற மாதிரி நேரும்.

முத்தக்காள் அப்போது முழு முட்செடியாகத் தெரிந்தாள். அவளால் பூமியைப் பொறுத்துக் கொள்ள முடிந்தது. சித்ராவைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பூமியிடம் இருந்த பரிவு சித்ராவிடம் முத்தக்காளுக்கு அறவே இல்லை. பூமியைத் தேடி வருகிற, பூமியோடு பழகுகிற யாரையுமே அவளுக்கு அதிகம் பிடிக்காது.

சித்ரா, லெண்டிங் லைப்ரரி பரமசிவம், பூமியிடம் கராத்தே கற்பதற்காகத் தேடிவரும் இளைஞர்கள். யாரையுமே. அவள் வெறுத்தாள். இவர்களால்தான் பூமி மெஸ்ஸையே கவனிக்காமல் அடிக்கடி பொது வேலைகளுக்காக ஊர் சுற்றப் போய்விடுகிறான் என்று அவள் எண்ணினாள். இவர்கள் பழக்கம் இல்லாமல், இவர்கள் தேடி வராமல் இருந்தால் பூமி மெஸ்ஸே கதி என்று கிடப்பான் என்பது அவள் கற்பனையாக் இருந்தது.

அவளுக்குள்ள சொற்ப அறிவு அந்த அளவுக்குத்தான் அவளை நினைக்கத் தூண்டியது. அறிவின்மையைச் சகித்துக் கொள்ளலாம். பாச உணர்வே அற்ற அறிவையும் சகித்துக் கொள்ளலாம். ஆனால் சொற்ப அறிவையும் அதை உடையவரிகளையும் சகித்துக் கொண்டு சமாளிப்பது மிகவும் சிரமமான காரியம்.

முத்தக்காளைச் சகித்துக் கொண்டு சமாளிப்பதில் பூமி சித்ரா இருவருக்குமே இப்படிப் பிரச்னை இருந்தது. முத்தக்காள் கொஞ்ச நாள் சுமுகமாக இருக்கிறாளே என்று நினைத்துத் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கும் போதே திடீரென்று மலரெல்லாம் உதிர்ந்து முள் செடியாக மாறி உறுத்துவாள் அவள். அடிக்கடி பூமியும் இதை உணர்ந்திருந்தான். சித்ராவும் உணர்ந்திருந்தாள்.

முதல் முறையாக கேஷ் டேபிளில் சித்ராவுக்கும் முத்தக்காளுக்கும் ஒரு சண்டை வந்தபோதே இனி மெஸ் பக்கம் தலைவைத்துப் படுக்கக் கூடாது என்றுதான் சித்ரா பிடிவாதமாக இருந்தாள். பூமி அந்தப் பிடிவாதத்தைக் கண்டித்தான். அவனுக்காக அவன் வார்த்தையை மதித்துத்தான் சித்ரா அங்கு மீண்டும் போய்ப் பழகிக் கொண்டிருந்தாள். முத்தக்காளைச் சகித்துக் கொண்டிருந்தாள்.

இன்று மீண்டும் முத்தக்காள் சண்டையைக் கிளப்பினாள்.

“அது யாரு அந்தப் பொம்பளை? யாரோ ஒருத்தியைக் கொண்டாந்து உக்காத்தியிருக்கீங்களே? இப்பிடி ஒரு ஹோட்டல் நடத்தறதை விடச் சித்திரைத் திருவிழாவிலே ஓசித் தண்ணீர் பந்தல் வைச்சு நடத்தலாம். தர்மமாவது மிஞ்சும்” என்று எல்லாரையும் வைத்துக் கொண்டே எல்லாத முன்னிலையிலும் சித்ராவிடம் வந்து இரைந்தாள்.

இதற்கு உடனே பதில் சொல்லி. முத்தக்காளிடம் சண்டையை வளர்ப்பதற்குச் சித்ரா விரும்பவில்லை. அதனால் மௌனம் சாதித்தாள். மறுபடியும் முத்தக்காள் அதே விஷயத்தை விசாரிக்கவே ஒரு சர்வரைக் கூப்பிட்டு அவனிடம் தணிந்த குரலில் விஷயத்தை விளக்கி அவனைக் கொண்டே முத்தக்காளுக்கும் பதில் சொல்ல வைத்தாள் சித்ரா.

சண்டையைத் தவிர்ப்பதற்காகவே சித்ரா இந்த உத்தியை மேற் கொண்டிருந்தாள். ஆனால் இதுவே சண்டையை வளர்க்கக் காரணமாகிவிட்டது.

“என்னன்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க? என் ஹோட்டல்லேயே வந்து கல்லாப் பெட்டியிலே கால் மேலே கால் போட்டு உட்கார்ந்துக்கிட்டு, என் வார்த்தையை மதிச்சுப் பதில் பேசறதில்லே... இதெல்லாம் பொறுத்துக்கணும்னு என் தலையிலே எழுதலே” என்று சித்ராவுக்கு முன்னால் வந்து இரையத் தொடங்கி விட்டாள் முத்தக்காள்.

சித்ரா அதற்கும் பதில் சொல்லவில்லை. உணர்ச்சி வசப்பட்டு விடாமல் பொறுமையாக இருந்தாள். அவள் பதில் பேசாமல் இருக்கும் நிலைமையையும் அப்படியே தொடர் முடியாமல் முத்தக்காள் தொடர்ந்து இரைய ஆரம்பித்தாள். ஓரளவு சாதாரண எல்லையைக் கடந்து பூமி, சித்ரா இருவரும் தங்களுக்குள் பழகும் விதத்தையே ஏளனமாகக் குறிக்கும் எல்லைவரை நீண்டது. முத்தக்காளின் பேச்சு.

பூமி விரைவில் திரும்பி வந்து விடுவான் என்று எதிர்பார்த்த சித்ராவுக்குப் பெரிதும் ஏமாற்றமாக இருந்தது. அவன் பிற்பகல் வரை திரும்பவே இல்லை. முத்தக்காளின் ஏச்சுப் பேச்சுக்களுக்குப் பதில் சொல்லிவிடாமலே அவற்றை கேட்டுப் பொறுத்துக் கொண்டு அங்கே கழியும் ஒவ்வொரு வினாடியும் சித்ராவுக்கு நரகமாகத் தோன்றியது. ஏன்தான் இதில் வந்து சிக்கிக் கொண்டோம் என்றெண்ணித் தவித்தாள் அவள்.

பூமி திரும்புவதற்குத் தாமதமாவது வேறு அவளுடைய கவலையை வளர்த்தது. தேடிப்போன இடத்தில் அவனுக்கு என்ன என்ன தொல்லையோ என்று வேறு சந்தேகமாயிருந்தது.

தங்கள் ஹோட்டலில் வேலை பார்த்த ஒரு பையன் ஹோட்டல் எல்லைக்கு வெளியே எங்கோ காணாமல் போனதற்காகப் பூமியும், சித்ராவும் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டது முத்தக்காளுக்கு அறவே பிடிக்கவில்லை. இம்மாதிரிக் காரியங்களைப் பூமி செய்வது அவளுக்கு எரிச்சிலூட்டியது.

கடைசியில் மாலை ஐந்தரை மணி சுமாருக்கு அலைந்து களைத்த சோர்வுடன் பூமி திரும்பி வந்தான். “போன காரியம் என்ன ஆயிற்று” என்று சித்ரா அவனைக் கவலையோடு கேட்டாள்.

“பையனைப் பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை! என்ன ஆயிற்றென்று கண்டு பிடிப்பதும் சிரமமாயிருக்கிறது” என்று சிறிது தயக்கத்தோடு பதில் வந்தது பூமியிடமிருந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/36&oldid=1029083" இலிருந்து மீள்விக்கப்பட்டது