சாயங்கால மேகங்கள்/39

விக்கிமூலம் இலிருந்து



39

அறியாமையும், பணத்தின் மேலே பேராசையும் சேர்ந்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு கெட்டவர்களாக வேண்டுமானாலும் மாறிவிடுவார்கள்.

ஸ்டோர் ரூம் சாவி வருவதற்குத் தாமதம் ஆகியது. சிரமப்படுகிற காலத்தில், சத்தியவான்களாகவும், நியாயவாதிகளாகவும் இருந்து பின்பு வசதிகள் வந்ததும் மாறி விடுகிற பலரைப் பூமி அறிந்திருந்தான். இப்போது முத்தக்காளும் அந்தப் வரிசையில் சேர்ந்திருப்பதை அவன் வருத்தத்தோடு உணரவும் புரிந்து கொள்ளவும் முடிந்தது.

அடிப்படை நன்றி, விசுவாசம் போன்ற உன்னத உணர்வுகளைக் கூடப் பணமும் வசதிகளும் மாற்றிக் கெடுத்து விடுவதை உணர முடிந்தது. படிப்பறிவும் விசால மனமும் இல்லாத முத்தக்காள் போன்றவர்கள் அப்படித்தான் இருக்கமுடியும் என்று அவன் தன்னைத்தானே தேற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. சிலருக்கு அநுபவங்களாலாவது மனம் விசாலமடையும். முத்தக்காளை அநுபவங்கள் கூட மாற்ற முடியவில்லை என்று தெரிந்தது. எவ்வளவு நாள் ஊறினாலும் கருங்கல் தண்ணீரில் கரைத்து விடாது தானே?

சொந்தக்காரப் பையனை முத்தக்காள் அழைத்து வந்திருப்பது பற்றிக் கூடப் பூமி கவலைப்படவில்லை, அப்படிச் செய்யப் போவதாக அவள் தன்னிடம் சகஜமாக ஒருவார்த்தை கூட முன் தகவல் சொல்லாத்திலிருந்து தன் மேல் அநாவசியமாக அவள் எவ்வளவு அவநம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதும் புரிந்தது.

இதற்காக அவன் மனம். அதிர்ந்து போய் ஒடுங்கிவிடவில்லை. என்றாலும் மனிதர்கள் எவ்வளவு சிறுமை நிறைந்த வர்களாக இருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ள இந்தச் சந்தர்ப்பம் அவனுக்கு உதவியது. முத்தக்காள் போன்றவர்களோடு ஒத்துழைக்க வேண்டும் என்று சித்ராவைப் போன்ற மனம் விசாலமடைந்த பெண்ணைக் கூடத் தான் வற்புறுத்தி யிருப்பது அவனுக்கு நினைவு வந்தது.

தன்னைப் போலன்றி ஒரு பெண்ணுக்குப் பெண் என்ற முறையில் சித்ரா முத்தக்காளை மிகவும் சரியாகவே எடை போட்டுப் புரிந்து கொண்டிருப்பது பூமிக்கு வியப்பளித்தது. பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல் பெண்கள் ஏனைய பெண்களை மிகவும் சரியாகவே புரிந்து கொண்டுவிடுகிறார்கள். ஆண்கள் தவறான கணிப்புக்களைக் கொடுத்துப் பெண்களைக் குழப்பினாலும்கூட அவர்கள் குழம்புவதில்லை.

பூமி விரும்புகிறான் என்பதற்காக சித்ரா முத்தக்காளுடைய மெஸ்ஸுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாளே ஒழியப் பல நாட்களுக்கு முன்பே முத்தக்காளைப் பற்றிய தன் அநுமானங்களையும் அதிருப்திகளையும் அவன் மறைக்காமல் பூமியிடம் வெளியிட்டு அவனையும் எச்சரித்திருந்தாள். அவன் தான் அந்த எச்சரிக்கையை எல்லாம் அப்போது ஏற்கவில்லை.

சொந்தச் சேமிப்பிலிருத்து கணக்குப் பாராமல் தன் பணத்தை எடுத்துப் போட்டுச் செலவழித்து விட்டு இப்படி. ஓர் அநுபவத்தை அடைவது அவனுக்கு எரிச்சலூட்டியது. தன்னைப் போல் உடல் வலிமையும், மனவலிமையும், வாய்ந்த ஒரு மனிதன் பக்கபலமாக நின்று தாங்கியிருக்கவில்லையென்றால் அந்த உணவு விடுதி நடைபெறாமலே நின்று போயிருப்பதற்கான சாத்தியக் கூறுகள்தான் அதிகம் என்று அவனுக்குத் தெரியும். முத்தக்காளுக்கும் அது தெரிந்துதான் இருக்கவேண்டும். ஆனால் அவள் இன்று அதை வசதியாக மறந்திருந்தாள். நினைக்க நினைக்க அவனுக்கு மனம் வேதனைப்பட்டது. அங்கே இருப்புக் கொள்ளவில்லை.

யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மெஸ்ஸிலிருந்து வெளியேறி நேரே பரமசிவத்தின் லெண்டிங் லைப்ரரிக்குச் சென்றான். பரமசிவம் எங்கோ வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தவர் பூமியைப் பார்த்ததும் மறுபடி உள்ளே வந்து உட்கார்ந்தார். பூமியின் முகத்தில் சிந்தனைத் தேக்கத்தைப் பார்த்துப் பரமசிவத்துக்கே அவன் மன நிலை புரிந்து விட்டதோ என்னவோ, அவரே விசாரித்தார். பூமி நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னான். பரமசிவம் அதைக் கேட்டுப் புன்னகை புரிந்தார். பின்பு சொன்னார்:

“அறியாமையும் பேராசையும் சேர்ந்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு கெட்டவர்களாக வேண்டுமானாலும் மாறிவிடுவார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்.”

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில் புத்தகம் மாற்றுவதற்காகத் தற்செயலாகச் சித்ரர் அங்கு வந்து சேர்ந்தாள். காணாமற் போன பையனின் தாய் தன்னிடம் பேச்சு வாக்கில் தெரிவித்ததாக அவள் ஒரு தகவலைப் பூமியிடம் சொன்னாள்.

அந்தப் பையன் ‘மன்னாரு'வின் வேலையாக அடிக்கடி மாமல்லபுரம் போவது உண்டென்று தெரிந்தது. சித்ரா வற்புறுத்தியதன் பேரில் பையனின் தாய் தன் குடிசைக்குப் போய்ப் பையனுடைய புத்தககங்கள் நோட்டுக்களைக் குடைந்து மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோவிலுக்கு மிக அருகில் இருந்த ஒரு டீக்கடையின் விலாசத்தைக் கொடுத்திருப்பதாகக் கூறினாள்.

சித்ரா அதைப் பூமியிடம் கொடுத்தபோது பூமி உடனே மாமல்லபுரம் போக விரும்பினான். பரமசிவம் உடனே மறுக்காமல் லெண்டிங் லைப்ரரி ஸ்கூட்டரைக் கொடுத்து உதவ முன் வந்தார். அவன் தனியே போகக் கூடாதென்று வற்புறுத்திச் சித்ராவும் உடன் ஏறிக்கொள்வதை அப்போது அவனால் தடுக்க முடியவில்லை.

சென்னையில் ஒளித்து வைப்பதை விட மாமல்லபுரத்தில் ஒளித்து வைப்பது நல்லது என்று மன்னாரு வகையறா பையனை மாமல்லபுரத்தில் கடத்திக்கொண்டு போய் மறைத்து வைத்திருக்கலாமென்ற சந்தேகம் அவன் மனத்தில் வலுத்தது. தற்செயலாகத் தெரிய வந்த இந்தப் புதிய தகவலால் முத்தக்காளையும் அவளுடைய புதிய போக்கையும் கொஞ்சம் மறக்க முடிந்தது.

ஸ்கூட்டர் திருவான்மியூரைக் கடந்ததும் பின்னால் உட்கார்ந்திருந்த சித்ரா எதற்காகவோ முத்தக்காளைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். அப்போது அவள் ஊரிலிருந்து, தன்னிடம் சொல்லாமலே உறவுக்காரப் பையனை வரவழைத்திருக்கும் தகவலைப் பூமி. சித்ராவுக்குத் தெரிவித்தான். அதைக் கேட்டுச் சித்ரா எள்ளளவும் திகைப்போ ஆச்சரியமோ அடையவில்லை.

“அவங்க இப்படி எதாவது செய்வாங்கன்னு எனக்குத் தெரியும். வரவர அவங்களுக்கு நம்ம மேலே எல்லாம் நம்பிக்கை போயிடுச்சு” ...என்றாள் சித்ரா.

நம்பிக்கை இழக்கும்படியாக அப்படி நாம் என்ன மோசடி செய்தோம்?”

“அவங்களைப் போல ரெண்டுங் கெட்டான் ஆளுங்க அப்படி எல்லாம் நல்லது கெட்ட்து யோசிச்சு எதையும் பண்ண மாட்டாங்க. சொல்லப்போனா மெஸ்ஸிலே வேலை செஞ்சி ஒரு பையனைக் காணலைங்கிறதுக்காக நீங்க இவ்வளவு கவலைப் பட்டு அலையறதே அவங்களுக்குப் பிடிக்கலை. திருட்டுப் பையனைத் திருத்கணும்கிற நல்லெண்ணத்திலே நீங்க அங்கே வேலைக்குச் சேர்த்ததும் அவங்களுக்குப் பிடிக்கலை...”

“உலகமே ரூபாய் அணாப் பைசா வரவு செலவு மட்டும் தான் என்று மட்டும் நினைக்கிறவளுக்கு அது பிடிக்காது தான்.”

“கொஞ்ச நாளாகவே மெஸ்ஸில் இப்படி ஏதாவது நடக்கும்னு நான் எதிர்பார்த்தேன். நீங்க என்னோட பழகறது என்னை நம்பிக்கையாகக் கேஷ் டேபிளில் உட்காரச் சொல்றது எதுவுமே அவங்களுக்குப் பிடிக்கல்லே. அதைக் காமிக்கச் சமயம் பார்த்துக்கிட்டிருந்தாங்க.... இப்போ சமயம் வந்தாச்சு.” சித்ரா கோபமாகவே இதைக் கூறினாள்.

அன்று வாராந்தர நாளாகையினால் மாமல்லபுரத்திற்குப் போகிற சாலையிலோ மாமல்லபுரத்திலோ கூட்டம் அதிகமில்லை. விடுமுறை நாளாகவோ ஞாயிற்றுக்கிழமையாகவோ இருந்திருந்தால் கூட்டம் பொங்கி வழியும்.

கடற்கரைக் கோவிலுக்குள் போகிற சாலையில் அந்த டீக் கடையைக் கண்டுபிடிப்பது மிகவும் சுலபமாயிருந்தது. வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டுப் பூமியும், சித்ராவும் கீழே இறங்கிய போது கடையில் ஒரே ஒரு சிறுவன் மட்டும்தான் இருந்தான். ஓனர் ஊருக்குள் போயிருப்பதாகவும் பத்து நிமிஷத்தில் திரும்பி வந்துவிடக்கூடும் என்றும் பையன் சொன்னான்.

அவனிடம் கேட்டு இரண்டு தேநீர் வாங்கிக் குடித்த பின் காசு கொடுத்துவிட்டுப் பத்து நிமிஷம் கடற்கரைக் கோவிலைச் சுற்றிவிட்டு வரலாமென்ற கருத்துடன் பூமியும் சித்ராவும் நடந்தார்கள். ஸ்கூட்டர் கடை வாசலிலேயே இருந்தது. பூமி நடந்து கொண்டே அவளிடம் கூறினான்.

“சிலந்தி வலை பின்னியிருப்பது போல் இந்த அயோக்கியன் மன்னாரு எங்கெங்கோ எது எதிலோ தொடர்பு வைத்திருக்கிறான். அரசியல், கள்ளச் சாராயம். அழகு விடுதி, டீக்கடை என்று எந்த மூலையில் தொட்டாலும், அது அவனுடைய சாம்ராஜ்யத்தில் போய் முடிகிறது.”

“உண்மையிலேயே பார்க்கப்போனா இன்னிக்கி நேரடியா இல்லாவிட்டாலும் மறைமுகமாக இப்படித் தீயசக்திகள் தான் நம்மை ஆட்சி செய்யிறாங்க.”

“இப்படித் தீய சக்திகளை ஒடுக்கணும்னு நம்மைப் போன்றவர்கள் நினைக்கிறோம்.பணம் சேர்த்தால் மட்டுமே போதும் என்று முத்தக்காளைப் போன்றவர்கள் நினைக்கிறார்கள்."

"அவங்களைப் போல இருக்கிறவங்களோட வாழ்க்கை எல்லையின் உச்சபட்ச இலட்சியமே பணம் மட்டும் தான் போலிருக்கிறது.”

“அதிகபட்சம் மட்டுமில்லை! குறைந்தபட்ச லட்சியம் கூடப் பணம்தான். வேறுவிதமாக நினைக்க அவங்களுக்குத் தெரியாது.”

சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் பூமியும் சித்ராவும் மறுபடி அந்த டீக்கடைக்குப் போனார்கள். இன்னும் அந்த ஆள் வரவில்லை. மிகவும் அவசரமாகப் பார்க்க வேண்டும் என்றால் ஊருக்குள் ‘பெட்ரோல் பங்க்’ அருகே உள்ளே வெற்றிலை பாக்குக் கடை வாசலில் ஒருவேளை கிடைக்கலாம் என்று டீக்கடைப் பையன் சொன்னான்.

ஸ்கூட்டரைக் கிளப்பிக் கொண்டு ஊருக்குள் பெட்ரோல் பங்க் அருகே போய்ச் சேர்ந்தார்கள். ‘மன்னரு'வின் ஏற்பாடுகள், ஆட்கள் தயாரிப்புகள் எல்லாமே எங்கெங்கோ, எப்படி எப்படியோ சம்பந்தா சம்பந்தமின்றி மிகவும் மர்மமாகவே இருந்தன. அந்த மாமல்லபுரம் ஆள் சிக்குவதே சிரமமானதாயிருந்தது.

பெட்ரோல் பங்க் அருகே உள்ள வெற்றிலைப் பாக்குக் கடையில் கூட, அவன் அகப்படவில்லை. அவன் ஏழு ரதங்களுக்கு அருகே உள்ள இளநீர் விற்கும் கடை ஒன்றைக் குறிப்பிட்டு அங்கே போகச் சொன்னான். பூமியும் சோர்ந்து விடவில்லை. கண்டுபிடித்து ஆளைச் சந்திக்காமல் போவதில்லை என்று பிடிவாதமாயிருந்தான். அன்று ஏழு ரதங்களுக்கு அருகே வெறிச்சென்று கூட்டமின்றி இருந்தது. தேடிப் போன ஆளைப் பார்த்ததுமே பூமிக்கு எங்கோ பார்த்த முகமாக இருப்பதுபோல் பட்டது.

“இவன் ஏற்கனவே மைலாப்பூரில் ஸ்கூட்டரை வழி மறிச்சு நம்மைத் தாக்கின ஆளுங்களிலே ஒருத்தன்தான்" என்று பூமியின் காதருகே பயங்கலந்த குரலில் முணுமுணுத்தாள் சித்ரா.

பூமி அதைக் காதில் வாங்கியபடியே ஸ்கூட்டரை நிறுத்தி விட்டுச் சித்ராவை ஸ்கூட்டர் அருகிலேயே நின்று கொள்ளு மாறு கூறிய பின் இள நீர் கடையை நெருங்கினான்.

பூமியைப் பார்த்ததுமே இளநீர்க் கடையில் இருந்த டில்லிபாபு குபீரென்று இளநீர் வெட்டும் அரிவாளை உருவிக் கொண்டு பூமிமேல் பாய்ந்தான். பூமியே இந்தத் திடீர்த் தாக்குதலை எதிர்பாராததால் சமாளிக்கத் திணறிப் போனான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/39&oldid=1029086" இலிருந்து மீள்விக்கப்பட்டது