உள்ளடக்கத்துக்குச் செல்

சாயங்கால மேகங்கள்/8

விக்கிமூலம் இலிருந்து

8

எந்த முதல் தரமான நல்ல கலையும் மூன்றாந் தரமான மனிதர்கள் கைக்குப் போய்ச் சேரும் போது அங்கே அது வெறும் பாசாங்காகவும் போலிப் பாவனையாகவும் ஆகி விடுவதைத் தவிர்க்க முடியாது.


சித்ராவுக்கும் புரட்சி மித்திரனுக்கும் இருக்கும் நட்பு இப்போது பூமிக்கு எந்த விதத்திலும் கவலையளிக்கவில்லை, கேலிக்குப் பாத்திரமான விதூஷகன் ஒருவன் நடத்துவதைப் போலவே அவனை அவள் நடத்தினாள். சிறிது கூட மரியாதை கலவாத ஒருமையில் ‘நீ, வா, போ’ என்றுதான் அவனைப்பேசினாள் அவள். அவனுடைய புதுக்கவிதை, புரட்சி, தீவிரம் எல்லாவற்றையும் கூட அவள் கேலிப் பொருகள்களாகவே கருதினாள். சிநேகிதமும் நெருக்கமும் இருந்தாலும் அவனது அரைவேக்காட்டுத் தனங்களை அவள் ஏளனமாகப் பார்ப்பது தெளிவாகவே தெரிந்தது.

தன்னிடம் அவள் பழகும் விதத்திற்கும் அவனிடம் அவள் பழகும் விதத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் பூமியே தரம் பிரித்து உணர முடிந்திருந்தது. இதை வேறொரு நிகழ்ச்சியின் மூலமும் பூமி நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த வாரக் கடைசியில் பாலாஜி நகரில் இருந்த ஓர் ஆங்கில மீடியம் நர்ஸரி பள்ளியின் திறப்பு விழா ஒன்றில் மாணவர்களுக்கும் விழாவுக்கு வந்திருந்தவர்கள் காணவும், ஒரு கராத்தே ‘டெமான்ஸ்ட்ரேஷனுக்கு’ ஏற்பாடாகியிருந்தது. அந்தப் பள்ளி நிர்வாகியின் மகன் ஒழிந்த நேரங்களில் பூமியிடம் கராத்தே கற்று வந்தான். அவன் மூலம் பூமி அந்த டெமான்ஸ்ட்டிரேஷனை செய்ய ஏற்பாடாகி இருந்தது, பூமியை அதற்காக அழைத்திருந்தார்கள் பள்ளி நிர்வாகிகள். ‘கராத்தே நிகழ்ச்சிகள்’ -- கரோத்தே வீரர் பூமிநாதன் என்று விழா அழைப்பிதழிலும் அவன் பெயரை அச்சிட்டிருந்தார்கள்.

இதற்கு முன்பும் இத்தகைய கராத்தே நிகழ்ச்சிகளைப் பொது விழாக்கள் சிலவற்றில் செய்து காட்டியிருந்ததால் இதற்கும் பூமி இசைந்திருந்தான். கைவிரல்களால் செங்கல் உடைப்பது, தலையால் செங்கல் உடைப்பது, சண்டை ஆகிய காட்சிகளைக் காண்பதில் மக்கள் மிகவும் ஆர்வம் காட்டினர்.

வெளிநாட்டுப் போர்க் கலைகளாக இருந்தும் கராத்தே, குங்ஃபூ ஆகியவை மக்களை அதிகம் கவர்ந்திருப்பதற்குக் காரணம் அவற்றின் விரைவும் துரித கதியுமே என்பதைப் பூமி நன்கு உணர்ந்திருந்தான். இந்தப் போர் முறைகளின் துரித கதி வேறு எந்தப் போர் முறைகளிலும் இல்லை என்பது அவனுக்குத் தோன்றியது. கராத்தே முறையின். கவர்ச்சிக்குக் காரணமே அதுதான் என்பதையும் அவன் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தான். ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களைத் தவிரவும் மாணவர்கள், அலுவலகங்களில் பணிபுரியும் இளைஞர்கள் என்று கராத்தே பயில்வதில் ஆர்வமுள்ள ஒரு பெரியகுழுவே பூமியைச் சுற்றி இருந்தது. பூமி அந்தக் குழுவுக்குத் தலைவனாக இருந்தான்.

நடு இரவில் டாக்ஸி ஆட்டோக்களில் இருவர் மூவராக ஏறிக் கொண்டு ஏதாவதொரு தனி இடம் வந்ததும் டிரைவரை அடித்து உதைத்து அன்றைய சவாரி வசூல் முழுவதையும் பறித்துக் கொண்டு போகும் சம்பவங்கள் நகரில் அதிகரித்து வந்தன.

இச் சம்பவங்களால் இளைஞர்களாகிய டாக்ஸி, ஆட்டோ டிரைவர்களிடையே கராத்தே கற்பதில் மிக விரைந்த ஆர்வமும், எழுச்சியும் ஏற்பட்டிருந்தன. தற்காப்புக்கும் அவசர உபயோகத்துக்கும் அது பயன்படும் என்பது அக்கலை இளைஞர்களைக் கவர்வதற்குப் போதுமானமாக இருந்தது.

இந்த பாலாஜி நகர் நர்ஸரிப் பள்ளியின் விழா அழைப்பிதழ் சித்ரா வேலை பார்த்த அருள்மேரி? கான்வெண்டிற்கும் அனுப்பப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கராத்தே வீரர் பூமிநாதன் என்று பார்த்ததுமே அது தனக்கு அறிமுகமான பெயராயிருந்ததை ஒட்டிச் சித்ராவின் ஆர்வம் அதன்பால் ஈர்க்கப்பட்டது.

நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு :அது நம்ம பூமியா அல்லது வேறு யாராவதா?” என்று லெண்டிங் லைப்ரரியில் பரமசிவத்திடம் விசாரித்தாள் சித்ரா.

“சந்தேகம் என்ன? நம்ம பூமியேதான். அவன் பெரிய கராத்தே நிபுணனாச்சே?” என்று சித்ராவுக்குப் பரமசிவம் மறுமொழி கூறினான்.

இதனால் சித்ராவும் அவள் தோழி தேவகியும் பூமியின் கராத்தே மொன்டிஸ்டிரேஷனைப் பார்ப்பதற்காக முன் வரிசையில் வந்து அமர்ந்துவிட்டார்கள். பூமிக்கு முதலில் இது தெரியாது. தற்செயலாக வெளியே என்ன கூட்டம் கூடியிருக்கிறது என்று பார்ப்பதற்காக அரங்கின் திரையை விலக்கி எட்டிப் பார்த்தபோது முதல் வரிசையில் சித்ராவையும் அவள் தோழியையும் கண்டான். அந்த நிகழ்ச்சியைப் பற்றி இப்போது முன்னைவிட அதிக மகிழ்ச்சியும் பெருமிதமும் பூமிக்கு ஏற்பட்டன. தன்னுடைய கராத்தே நிகழ்ச்சி அந்த விழாவில் இடம் பெற்றிருப்பது தெரிந்து தான் சித்ராவும் அவள் தோழியும் வந்திருக்கிறார்களா அல்லது தற்செயலாக வந்திருக்கிறார்களா என்பது பூமிக்குப் புரியவில்லை. கராத்தே உடையில் பூமியும் அவனுடைய உதவியாளனும் மேடையில் தோன்றி திரை விலகியபோது எல்லாரையும் போல் சித்ராவும் அவள் தோழியும்கூட உற்சாகமாகக் கைதட்டினார்கள். பூமி மேடையில் இருந்தபடியே அதைக் கவனிக்கத் தவறவில்லை. சித்ராவையும் அவள் தோழியையும் பூமியிடம் தவிர அந்தக் கலையைக் கற்கும் வேறு பலரும் அவையில் ஆர்வமாக அமர்ந்திருந்தார்கள். பள்ளி நிர்வாகி பூமியையும் அவனுடைய சீடனையும் வரவேற்றுக் கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.

முதல் பத்து நிமிஷங்கள் ஜூடோ, கராத்தே, குங்ஃபூ ஆகியவற்றின் இடையே உள்ள நுணுக்கமான வேறுபாடுகளையும் அவற்றில் உள்ள, பல்வேறு, ஸ்கூல்களையும் ஸ்டைல்களையும் சுருக்கமாக விளக்கினான் பூமி.

கைகள், கால்கள், விரல்கள், பாதங்கள் ஆகியவற்றையே சக்தி வாய்ந்த ஆயுதங்களைப் போலப் பயன்படுத்திக் காட்டும் கராத்தே தத்துவத்தைச் சொல்லிச் செய்து காட்ட முற்பட்டான்.

செங்கல் உடைத்தல், கட்டையை உடைத்தல் ஆகியவற்றைச் செய்து காட்டிய துரிதகதியைக் கண்டு கூட்டம் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது. விரல்களிலும் மண்டையிலும் பாதங்களிலும் ஒருவன் அவ்வளவு வலிமையைக் குவிக்க முடியுமா. என்பது அனைவரின் ஆச்சரியமாகவும் இருந்தது.

ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்ததும் அவையினரின் மகிழ்ச்சி ஆரவாரமும் கைத்தட்டல்களும், கட்டிடத்தையே அதிரச் செய்தன. பயிற்சியாலும் முயற்சியாலும் பூமி உடம்பையே தேனிரும்பாக இறுக்கியிருந்தான். அவன் பலத்தைக் குவித்துத் தாக்கும் போதில் விரல் நுனிகளும் கைவிளிம்புகளும் தீட்டிய கத்தியைப் போல் கூர்மையாக இயங்கின.

மேடையில் முத்து முத்தாக வியர்வை மின்னும் அவன் முகத்தையும் ஒளி நிறைந்த கண்களையுமே ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தாள் சித்ரா. அவனது துள்ளலில் இருந்த விரைவு, பாய்ச்சலில் இருந்த துரிதம் அனைத்துமே தேர்ச்சி யையும், முதிர்ச்சியையும் காட்டின.

நிகழ்ச்சி முடிந்ததும் கிரீன் ரூமுக்குள்ளேயே சென்று பூமியைப் பாராட்ட எண்ணினாள் சித்ரா. அவள் உள்ள சென்றபோது கராத்தே நிகழ்ச்சிக்காக அணிந்து வேர்வையால் நனையத் தொடங்கியிருந்த தொளதொளப்பான ஜிப்பாவைக் கழற்றிக்கொண்டிருந்தான் பூமி. கருங்கல் பாறை போல் இறுகிப் பரந்து பளபளவென்று வேர்வை மின்னிய அவனது பரந்த மார்பு மேற்புறம் அகன்று கீழ்ப்புறம் இடுப்பருகே சுருங்கியிருந்தது. சிக்கென்று இறுகித் திரண்டு செழித்த வளமான தோள்களும் உடம்பும் கராத்தே பயிற்சியால் தவம் பண்ணுவதுபோல் அந்த உடம்பை வசப்படுத்தியிருப்பதைக் காட்டின, பாராட்டுவதற்குச் சொற்களைத் தேடிச் சித்ரா தவித்தபோது, தேவகி பாராட்டியே விட்டாள். “ரொம்ப அற்புதமாயிருந்தது. ஒரு கராத்தே இன்ஸ்டிடியூட் ஏற்படுத்தி அதுக்கு உங்களை டைரக்டரா நியமிச்சு. இந்த, அபூர்வமான கலையைப் பரப்பணும்...”

“அப்படி ஒரு இன்ஸ்டிடியூட்டை யார் உதவியும் இல்லாமல் என். அளவில் நான் நடத்திக்கொண்டுதான் இருக்கிறேன்” என்றான் பூமி. சித்ராவின் பக்கமாகத் திரும்பிப் புன்னகையோடு அவனே மேலும் கூறினான்.

நீங்கள் வந்ததில் நிரம்ப சந்தோஷம்! இன்றைக்கு இங்கே இந்த நிகழ்ச்சி இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“தெரியும்! எங்க ஸ்கூல் நோட்டீஸ் போர்டிலே இன்விடேஷன் பார்த்தேன், அப்புறம் லெண்டிங் லைப்ரரி பரம்சிவம் அண்ணாச்சி கிட்டவும் விசாரிச்சேன்.”

என்று சித்ரா பூமிக்கு மறுமொழி கூறிக்கொண்டிருந்த போதே அவளுடைய தோழி தேவகி பூமியிடம் ஒரு கேள்வி கேட்டாள்:

“நீங்க நிஜமான கன அளவு உள்ள ஒரு பெரிய செங்கல்லையும் சில செங்கல்களின் அடுக்கையுமே உடைச்சிக்காட்டறீங்க, சில சினிமா நடிகர்கள் ரொட்டித்துண்டு அளவுக்கு லேசான சீமை ஓடுகளை உடைச்சிட்டு அதையே பெரிய செங்கல் உடைக்கிற சாகஸமாக விளம்பரப்படுத்திக்கிறாங்களே ?”

“சினிமாவில் எந்த முதல்தரமான கலையைத்தான் அவர்கள் அப்படி மூன்றாந்தரமாகவும் நான்காந்தரமாகவும் கொச்சைப் படுத்தாமல் மீதம் விட்டு வைத்திருக்கிறார்கள்? முதல்தரமான சங்கீதம், சினிமாவில் ஏழாந்தரமான டப்பாங்குத்து சங்கீதமாகிறது. முதல்தரமான நடனம் அரை நிர்வாணக் கேலிக் கூத்தாகிறது. முதல் தரமான கதை மூன்றாந்தரமான குடுகுடுப்பைக்காரன் சட்டையாக ஒட்டுப் போடப்படுகிறது. அவையெல்லாவற்றையும் போல் இன்று ஜுடா, கராத்தே, குங்ஃபூ ஆகியவைகளும் இங்கே ஆகிவிட்டன. ‘எந்த முதல்தரமான நல்ல கலையும், மூன்றாந்தரமானவர்கள் கைக்குப் போகும்போது அங்கே அது வெறும் பாசாங்காகவும், போலிப் பாவனையாகவும் ஆகிவிடுவதைத் தவிர்க்க முடியாது.’ முதலாளித்துவ சமூக அமைப்பில் கலைஞர்களுக்கும் கலைகளுக்கும் மரியாதை கிடைப்பதைவிட.. அவற்றுக்கு முதலீடு செய்யும் பணக்காரர்களுக்கே அதிக மரியாதை கிடைக்க முடியும், சினிமாவும் அப்படி ஒரு பணக்காரக் கலை.”

"மிகவும் பொருத்தமான விளக்கம்.”

“இன்னொன்றையும் தெரிந்துகொள்ளுங்கள்! ஒருவன் கையில் வாளோ கத்தியோ ஏந்திச் சாதிக்க முடியாததை வெறுங்கையாலும் காலாலுமே சாதிக்க முடிந்தவன் கராத்தே வீரன். மற்றவன் கத்தியைக் கூராக்கித் தீட்டுகிறான் என்றால், கராத்தே வீரன் தன் உடம்பையே பயிற்சியால் கூராக்கிக் கொள்கிறான். சினிமாவில் இரவல் குரல், இரவல் இசை, இரவல் கத்திச் சண்டை எல்லாவற்றையுமே போலச் சமயா சமயங்களில் ஆண்மை, வீரம் எல்லாவற்றையும்கூட இரவல் வாங்கிக்கொள்கிறார்கள்” என்று கூறிவிட்டுச் செங்கல்லை உடைக்கு முன் கையை ஒருமைப்படுத்திக் கூராக்கிக் கைவிளிம்புக்கு முழு வலிமையையும் கொண்டு வருவது எப்படி என்பதை அங்கேயே அந்தக் கணமே நொடிப்பொழுதில் அவர்களுக்கு ‘டெமான்ஸ்டிரேட்’ செய்து காட்டினான் பூமி.

சித்ராவும், தேவகியும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டபோது பூமி கேட்டான்:

“எப்பொழுது புது வீட்டுக்குக் குடி வரப்போகிறீர்கள்?”

“இன்னும் முடிவாகவில்லை! அந்த வீட்டுக்காரருக்கும் எனக்கும் ஒரு சின்னத் தகராறு. அட்வான்ஸையும் வாங்கிக் கொண்டு வம்பு பண்ணுகிறார் அவர்” -என்றாள் சித்ரா.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/8&oldid=1028936" இலிருந்து மீள்விக்கப்பட்டது