சாவின் முத்தம்/கரும்பில் கனல் எடு
கங்கு கிழிந்த கதிர்விழிச் சிரிப்பை
வரிவா னத்தில் மாற்றி; நெஞ்சைப்
பனிப்ப டுத்தித்தன் பாதச் சிலம்பை
இசையில் இட்டு; ஏடு குளிர்ந்த
கன்னத் தரப்பில் சித்திரக் குழிகள்
கடைந்து; இளமை குழைத்து; மரகத
ஒய்யாரச் சப்பர மெய்த்தோள் விழுங்கப்
போதல் போல, பூங்கொடி அசைந்து
நடந்தாள். அழகு கடந்தது! செவ்வொளி
முன்னே நீந்த, முதிராச் சிரிப்பு
உலுக்கலில் நகர்ந்து ஒடிற்று! சேய்முகம்
உடுத்திய உதடு ஒளிர்கடல்!
-வீணைக்கு
"வளரும் கருத்தை மடித்து மடித்து
கோணல் ஆகிக் குறுகா தே! கேள்:
இரத்தம் நடத்து! விரித்துவை! நெஞ்சை
அகல மாக்கு! நேரே நட்டுவை!
அதிர்ச்சி செய்யடா! ஆயிரங் கோடி
காலம் நீவாழ்! கருத்தில் சுணைபோடு!
ஆண்டை உலகைக் கிழியடா! கரும்பில்,
தேனில், கனல்-எடு! கூனல் வானம்,
ஒர்நாள் நிமிர்ந்தது உண்டா? ஒடு!
சாவின் ஒட்டில் தடுக்கி விழாமல்
ஒடடா விரைந்து ஒடுங்காதே! வாள்
அடியில் வீழ்ந்து கிடக்கும் தோள்களை
அலையவிட் டுப்பார்! இமையின் ஆழம்
இருண்ட சமுத்ரம் நேரில் கண்டதை
நெஞ்சில் கொடுத்து நோக்கடா! பழமையை
மாற்று மாற்று!! மாற்றடா!!! இமைப்பில்
ஆற்றல் தொடங்கு ஆணேயிட் டேசொல்!
மதக்களி றேபோ! எதிரியா? கொலைசெய்
வாளில் பிழிந்திடு! மருத்துவம் அதுதான்.
ஒட்டை உளத்தை ஒருசாண் இழுத்துவை!
மேலும் நீட்டி, வளர்ச்சியைக் கப்பிடு!
எத்தனை விரிவுகள் ஆழ்ந்துபார்!" என்று
தங்கச் சுளைவாய் சலித்து; உலகின்
கவிதை பிரித்து, கலையின் உச்சியில்,
தேனார வார்த்துச் சில்லிட்டு ஒடும்
கானாறு போலக் களிப்பில் நழுவி,
அழகை அரித்து அள்ளும் கார்த்திகை
மாதத் தின் மேல் மணிவளைக் கரத்தைப்
புழங்கினாள். விளக்குப் புதுநாள் தொட்டதே!