சிக்கிமுக்கிக் கற்கள்/அரைமணிநேர அறுவை
அரைமணி நேர அறுவை
கல்வி, விவசாயம், கோழி விஸ்தரிப்பு அதிகாரிகள் உட்பட எண்ணக்கூடிய அதிகாரிகளும், எண்ணில்லா இதர ஊழியர்களும், ஃபீல்ட் ஒர்க்கர்களும், அந்தப் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மார்ச் பண்ணிக் கொண்டிருந்தார்கள். காரணம், நடப்பு நிதியாண்டு முடியும் 'மார்ச்' மாதத்திற்குள், வேலை நடக்கிறதோ இல்லையோ, ஒதுக்கீடு என்ற பணத்தை எப்படியாவது செலவு செய்தாக வேண்டும். எப்படிச் செலவு செய்தாலும், 'இப்படித்தான் செலவு செய்தோம்' என்று காட்டியாக வேண்டும். இல்லையென்றால், கலெக்டர் அவர்களை இந்த வசதியான இடத்திலிருந்து துரத்தி, வசதியற்ற இடங்களைக் காட்டிவிடுவார். ஆகையால், எல்லோரும் ஆணையாளரைப் பார்த்து ஆலோசனை கேட்க, அலைமோதிக் கொண்டிருந்தனர்.
ஆணையாளர் ஐயப்பன், தன் அறைக்குள் சில பஞ்சாயத்துத் தலைவர்களிடம் காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தபோது, 'வெத்துமாஞ்சாவடி' ஊராட்சித் தலைவர் ஒப்பிலியப்பன் "வணக்கம்!" என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தார்.
அவரைக் கிள்ளுக்கீரை போல் கடைக்கண் பார்வையால் அலட்சியப்படுத்திவிட்டு, வாடாதபட்டித் தலைவர் வைரவனிடம் ஆணையாளர் ஆவேசமாகப் பேசினார் :
"தலைவரே....! நீங்களே சொல்லுங்க... இவரோட வெத்துமாஞ்சாவடில, மேல்நிலைக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்ததே நான் பில்டிங் கட்டியாச்சு. யந்திரங்களும் வந்தாச்சு. ஆனா அந்தக் கட்டடத்துல மேல் பாகம் பைசா நகரத்துக் கோபுரம் மாதிரி இரண்டு அங்குலம் வளைந்து நிக்குது. கட்டிடம் விழுந்துடக் கூடாதுங்கறதுக்காக ஒரு அணைப்புச் சுவர் கட்டலாமான்னு யோசிக்கிறோம். அதுக்கு எப்படியும் எட்டாயிரம் ரூபாய் வேணும். இந்த மார்ச்சுக்குள்ள நடக்காது. ஏப்ரல் மே வரட்டும். முடிச்சிடலாமுன்னு முந்தாநாள்தான் ஒப்பிலியப்பன்கிட்ட சொன்னேன். இவரு நேத்து என்ன செய்திருக்கார் தெரியுமா? அமைச்சரைப் பார்த்து, குடிநீர் திட்டத்தை இந்தமாதம் இருபத்தெட்டாம் தேதி செயல்படுத்த 'டேட்' வாங்கிட்டு வந்திருக்கார், பாத்திங்களா இவரு செய்த காரியத்தை, குறுக்குச் சுவர் இல்லாட்டா கட்டடம் குறுக்கே விழுந்தாலும் விழலாம். அதோட என் தலையும் விழுந்துடும். நான் இப்போ என்ன பண்ணட்டும்..?"
"நான் என்ன அண்ணா பண்றது? சும்மா செகரெட்டேரியட் பக்கமா போனப்போ, அமைச்சர் தற்செயலாய் என்னைப் பார்த்துட்டு, 'ஏய்யா நான் ஒங்க ஊருக்கு வர வேண்டாமா'ன்னு கேட்டார். உடனே அமைச்சர்கிட்ட பேசுற படபடப்புல 'குடிநீர் குழாய திறந்து வைங்க'ன்னு தெரியாத்தனமா சொல்லிட்டேன். அவரு என்னடான்னா பி.ஏ.-யைக் கூப்பிட்டு குறிச்சிக்கிட்டார். நான் என்ன பண்ணட்டும்? நீங்க அமைச்சர் வாரத விரும்ப மாட்டிங்கன்னு எனக்குத் தெரியாமப் போச்சு... குடிநீர் வராததனால குடி முழுகிடப் போயிடாது... வேணுமுன்னா இப்பவே அண்ணங்கிட்ட போயி கேன்ஸல் பண்ணிடுறேன்..."
ஆணையாளருக்கு ஒப்பிலியப்பன் தன்னை, பிடிக்க வேண்டிய இடத்தில் பிடிப்பது புரிந்துவிட்டது. விவகாரத்திற்கு வேறு கலர் கொடுக்கப்படுவதால் அவரது முகத்தின் கலர்கூட மாறிவிட்டது.
"நான் அதுக்காகச் சொல்லல... தலைவரே! நம்ம அமைச்சரை நான் வராண்டாமுன்னு சொல்லுவேனா..? ஆல்ரைட்... பி. டபிள்யூ. டி. என்ஜினியருக்கு எழுதிடுறேன். வாட்டர் போர்டு ஆசாமிகளுக்கும் எழுதிடுறேன். இருப்பத்தஞ்சாம் தேதிக்குள் குறுக்குச் சுவர் எழுப்பிடலாம். தலைவரே! டோண்ட் ஒர்ரி... ஜமாச்சிடலாம்... அப்புறம் பேச்சாளர் லிஸ்டை போட்டுக்குவோமா, இல்ல. நீங்களே..."
"அது எப்படி ஸார்... உங்களைக் கேட்காம..."
"ஆல்ரைட்... கலெக்டர் தலைமை தாங்குவார்..."
"இல்லே ஸார்... எம்.எல்.ஏ-தான் தலைமை தாங்கணும்."
"ஆசை யாரை விட்டுது? உமக்கு பழையபடியும் பிரஸிடென்டா ஆகணும் என்கிற ஆசை. எனக்கு இந்த ஜில்லாவிலேயே இருக்கணுங்கற ஆசை... கலெக்டரே இருந்துட்டுப் போகட்டும்."
"இல்ல... எம்.எல்.ஏ-தான் இருக்கணும்."
வாடாதபட்டித்தலைவர் சமரசம் செய்தார்.
"முன்னிலைன்னு ஒண்ணு இருக்கு... அதை மறந்துட்டிங்களே! எம்.எல்.ஏ-யை முன்னிலைன்னு போட்டுடலாம்."
"அப்புறம் அண்ணன் எம்.பி-க்கு?"
"ஒ...! அவர மறந்துட்டேன். அவரு சிறப்புச் சொற்பொழிவு..."
"பழைய சேர்மனுக்கு என்ன கொடுக்க?"
"அவரு... அமைச்சர் குழாயத் திறக்கும்போது மாலை போடுவாரு"
"குழாய்க்கா..?"
"இல்ல... அமைச்சருக்கு."
"எங்க டிவிஷனல் ஆபீசருக்கு ஏதாவது கொடுங்கய்யா?"
"அவருக்கா... அவரு நன்றியுரை சொல்லிடட்டும்."
"அப்போ நான் ஆணையாளர்னு பதவியிலிருந்து அம்போன்னு இருந்துடனுமா..?"
"வேண்டாம். நீங்க... டி.டி.ஓ. நன்றி சொல்வார்னு அறிவிச்சிடுங்க"
ஆணையாளருக்கு ஒன்று புரிந்தது. ஏப்ரல் முதல் தேதி வருமுன்னாலேயே ஒப்பிலியப்பன் தன்னை முட்டாளாக்கி விட்டார் என்பது. இதை விடக்கூடாது. எப்படியாவது குறுக்குச் சுவரைக் கட்டி, அழைப்பிதழ் அடித்து அமைச்சரிடம் தானே கொடுத்துவிட வேண்டும்.
ஆணையாளர் ஐயப்பன், வாட்டர் போர்டு அதிகாரிகளையும், பி. டபிள்யூ. டி என்ஜினியர்களையும் நாட்கணக்காகச் சந்தித்து காலில் விழாக் குறையாக விழுந்து, மோவாய்களைத் தொடாக் குறையாகத் தொட்டு குறுக்குச் சுவரை எழுப்பி விட்டார். இதற்குள், அமைச்சர் வருவதே வருகிறார், வேறு சில பள்ளிக் கட்டிடங்களையும் திறந்து வைக்கவேண்டும் என்று இதர ஊராட்சித் தலைவர்கள் சொன்னதை ஆணையாளர் உடனடியாக ஒப்புக் கொண்டார். ஒப்பிலியப்பனுக்கு மட்டும் பேர் போகலாமா?
விழா நாள் பிறந்தது.
ஒப்பிலியப்பனின் வெத்துமாஞ்சாவடியில் குடிநீர் குழாய்க்கருகே, எவர்சில்வர் குடங்களுடன் ஏகப்பட்ட மேக்கப்புடன் உள்ளுர் தலைவர்களின் மனைவிகளும் மகள்களும் காத்திருந்தார்கள். மேடையில், அந்தப் பகல் நேரத்திலும், இரவில் எரியாத மின்சார விளக்குகளும் எரிந்தன.
அமைச்சர் இன்னொரு ஊரில் ஒரு பள்ளிக்கூடத்தைத் திறந்து வைப்பதற்காக வாணவேடிக்கைகள் சூழ மேடைக்குப் போனார். ஆட்சித் தலைவர், அவர் இவர் என்று கூட்டத்தில் பாதிப்பேர் மேடையில் இருந்தார்கள். மேடைக்கு முண்டியடித்துப் போன பப்ளிசிட்டி ஆபீசரை ஆணையாளர் வழி மடக்கினார். அவரது காதை வாயருகே கொண்டு வரச்செய்து, ஏதோ கிசுகிசுத்தார். பப்ளிசிட்டியார் குதித்துத் துள்ளினார் :
"அய்யய்யோ...! நம்மால முடியாது ஸார்..."
"பப்ளிசிட்டி லார்! நான் ஒங்களத்தான் மலை போல நம்பியிருக்கேன்... பிளிஸ் எனக்காக... எனக்காக...!"
"நான். எப்படி ஸார் அப்படி? கெளரவமுன்னு ஒண்னு இருக்கே"
"அப்படிச் சொல்லப்படாது... ஒங்கள மாதிரி ஆட்களுக்கு கெளரவம் தேவையில்ல. நான் ஒங்களுக்கு எவ்வளவோ செய்திருக்கிறேன். நீங்க அனுப்புற நாடக கோஷ்டிகளுக்கு இடம் ஃபிக்ஸ் பண்ணிக் கொடுத்திருக்கேன். திரைப்படம் காட்டுறதுக்கு... கிராம சேவக்கை அனுப்பியிருக்கேன். இப்படி உதவி செய்த எனக்கு உதவி செய்ய ஒங்க வாழ்நாள்லயே முதல் சந்தர்ப்பம் வந்திருக்கு பிளீஸ்... பிளீஸ்...!"
"சரி, பார்க்கலாம்."
'நீராருங் கடலுடுத்து' - விழா துவங்கியது. நாலைந்து பேர் பேசினார்கள். இதற்குள் நிகழ்ச்சி நிரலைப் பார்வையிட்ட அமைச்சர், நேர்முக உதவியாளரிடம் ஏதோ சொல்ல, அவர் அலுவலரின் கண்ணில் படும்படியாக முதல் வரிசை நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த பப்ளிசிட்டியிடம் வந்தார்:
"பப்ளிசிட்டி ஸார்! அமைச்சருக்கு ஒங்க பேச்சுன்னா ரொம்ப பிடிக்கும்."
"ஹி... ஹி... வசிஷ்டர் வாயால பிரம்மரிஷின்னு சொல்ற மாதிரி இருக்கு."
“என்னை நீங்க வசிஷ்டர்னு சொன்னதுல சந்தோஷம். இருந்தாலும் இன்னைக்கு ஒங்க சொற்பொழிவைக் கேட்கிற அதிர்ஷ்டம் அமைச்சருக்கு இல்லை. ஏன்னா. அவரு அவசர அவசரமா டில்லில ஒரு கான்பரன்ஸுக்கு பிளேன்ல என்கூட வரார். அதனால ஓங்க பேச்சை மூணு நிமிஷத்துல முடிக்கச் சொன்னார். இன்னொரு விழா இருக்கு பாருங்க..."
நேர்முக உதவியாளர் போய் விட்டார். விழாத் தலைவரான கலெக்டர் "பப்ளிசிட்டி அதிகாரி திரிசங்கு ஐந்து நிமிடம் பேசுவார்" என்று கறாராக அறிவித்துவிட்டு அமர்ந்தார்.
பப்ளிசிட்டி அதிகாரி திரிசங்கு மேடைக்கு வந்தார். அமைச்சருக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு "மாண்பு என்ற வார்த்தைக்கு மாண்பு கொடுத்த மாண்புமிகு அமைச்சர் அவர்களே! திருக்குறளில் ஆட்சியதிகாரத்தில் சொன்னபடி ஆட்சி செலுத்தும் ஆட்சித் தலைவர் அவர்களே! அன்றும்... இன்றும்... என்றும்... மக்களின் இதயபீடத்தில் அமர்ந்திருக்கும் முன்னாள் சேர்மன் முனிரத்தினம் அவர்களே...! என்று இழுத்தபோது, "சட்டுபுட்டுனு ஒட்டு மொத்தமா சொல்லி முடிங்க!" என்றார் கலெக்டர்.
பப்ளிசிட்டி ஒட்டுமொத்தமாகப் பேசவில்லை. மேடையில் இருந்த அத்தனைபேரையும் அடைமொழி கொடுத்து விழித்தார். பொதுமக்கள் பகுதியில் தனக்கு அடையாளம் தெரிந்த ஒரு சிலரையும் பெயரிட்டு (அடைமொழியுடன்!) விழித்தார். பொதுமக்கள் பகுதியில் மெஜாரிட்டியினராய் இருந்த பையன்களை நேரிடையாக அழைத்தார்.
"டேய்! பசங்களா. இவரு யாரு தெரியுமாடா..? தெரியாதா. இவருதான் கலெக்டர். ஆனால் இவரைப் பார்த்தா கலெக்டர் மாதிரி தெரியுதா? இவர யாராவது கலெக்டர்னு சொன்னா நம்புவாங்களா? நம் ஆட்சித் தலைவர் அவர்கள் அவ்வளவு எளிமையானவர்... அவ்வளவு அடக்கமானவர், இவரு மாதிரியே நீங்களும் படித்து முன்னுக்கு வரணும். இவரைப்போல புன்னகை தவழ... கம்பீரமாக அதேசமயம் எளிமையாக, நேர்மையாக. இனிமையாக இருக்கணும்."
எப்படியோ பதினைந்து நிமிடம் ஆகியது. கலெக்டர், இப்போது 'கண்டுக்க'வில்லை. ஆனால் அமைச்சரால் அப்படி இருக்க முடியவில்லை. அவர் புருவத்தை உயர்த்தியபோது பேச்சாளர் திரிசங்கு சுருதியை மாற்றினார்.
"அடக்கத்தில் சிறந்தவர் அமைச்சரா அல்லது ஆட்சித் தலைவரா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு எளிமையையே ஒரு இயல்பாகக் கொண்டவர் நம் அமைச்சர். தமிழ்கூறும் நல்லுலகின் தளநாயகர். எடுத்ததை முடிப்பவர் முடித்ததை எடுப்பவர். எதிரிக்கு அஞ்சாதவர்... ஏனெனில் எதிரியே இல்லாதவர். இவர் நமக்கு அமைச்சராகக் கிடைத்ததற்கு நாம் அருந்தவம்..."
ஆட்சித் தலைவர் கோபத்தோடு அவரைப் பார்த்தார். ஆனால் பப்ளிசிடி திரிசங்கு விடவில்லை. ஆட்சித் தலைவரையும். அமைச்சரையும் மாறி மாறிப் புகழ்ந்தார். இடையிடையே, ஐந்தாண்டு திட்டங்களுக்குள்ளும் போனார், போனார், போய்க் கொண்டே இருந்தார்.
எப்படியோ அரை மணி நேரம் ஆகிவிட்டது. அப்போது லேசாக இருமிய திரிசங்குவை, அமைச்சர் கனிவுடன் பார்த்துக் கொண்டே "முதலில் உடல் நலத்தைப் பாருங்க. பேசிப் பேசியே உடம்பையும் கெடுத்துக்கிட்டிங்க. வெத்துமாஞ்சாவடில நீங்க பேசக் கூடாது. இது என்னோட அன்புக் கட்டளை. அங்கேயும் பேசி உடல் நலத்தைக் கெடுத்துக்கக் கூடாது. ஒங்களுக்கு ஒண்ணுன்னா என் மனசு கேக்காது" என்றார்.
"மிஸ்டர் திரிசங்கு! நீங்க இங்கேயே இருந்து இப்போ நடந்த விழாவுக்கு நியூஸ் எழுதுங்க. நான் உங்களை வந்து பிக்கப் பண்ணிக்கிறேன். வண்டிய எடுய்யா..." என்றார் கலெக்டர்.
தனித்து விடப்பட்ட பப்ளிசிட்டி ஆபீசருக்கு, ஆணையாளர் நெகிழ்ந்த குரலில் நன்றி சொன்னார்.
"நீங்க மட்டும் நான் சொன்னது மாதிரி அரை மணி நேரம் இழுத்துப் பிடிச்சுப் பேசலான்னா நான் அரோகரா தான்... கடைசி நிமிஷத்துல வெத்துமாஞ்சாவடில மெஷின்ல கோளாறு ஏற்பட்டிருக்கு. இன்னொரு இடத்துல மார்ச்சுக்குள்ள வேலையை முடிக்கணுங்கற அவசரத்துல இந்த வேலையை அரைகுறையா போட்டுட்டு என்ஜினியருங்க ஓடிப் போயிட்டாங்க. அரை மணி நேரத்துக்கு முன்னால அமைச்சர் போயிருந்தால் அங்கே தண்ணீர் வந்திருக்காது. நல்லவேளை, நீங்க பேசிக்கிட்டிருக்கிற சமயத்துல எப்படியோ ஒரு மெக்கானிக்கைப் பிடிச்சு ரிப்பேர் பண்ணிட்டாங்க அமைச்சர் அந்த ஊர்ல இருக்கற வரைக்கும் மெஷின் வேலை செய்யும். ரொம்ப நன்றி! உங்க உதவியை நிச்சயம் மறக்க மாட்டேன். அடேயப்பா அர்த்தம் இல்லாமலே அரை மணி நேரம் பேசிட்டிங்களே... அது எப்படி ஸார் முடியுது? நீங்க உண்மையிலேயே நல்ல பேச்சாளர்தான்."
ஆணையாளர் திருப்தியுடன் சிரித்து விட்டு, தயாராக இருந்த ஜீப்பில் ஏறி, கலெக்டர் காருக்குக் கட்டியங்கூறுவது போல் பறந்தார்.
பப்ளிசிட்டி திரிசங்கு 'இருப்பதா, போவதா என்று தெரியாமல், ஒரடி முன்னாலும், இரண்டடி பின்னாலுமாக நடமாடிக் கொண்டிருந்தார்.
ஆனந்த விகடன் - 1976 |