சிக்கிமுக்கிக் கற்கள்/வாழ்க்கைப் பாக்கி

விக்கிமூலம் இலிருந்து

வாழ்க்கைப் பாக்கி


'என் மக்கா!... நான் இன்னும் முழுசா சாகல... டாக்டர் காந்தராசு சொல்லுறதக் நல்லா கேளுங்க'...

கனகம்மா பாட்டி, இப்படிச் சொல்லத்தான் நினைத்தாள். ஆனாலும், அந்தக் கருத்து சொல்லாக வில்லை. சொல்லின் ஏவுகணையான நாக்கு எங்கே உள்ளது என்று கூட கண்டறிய முடியவில்லை. அபிநயமாய் சொல்வதற்கோ, காலோ கையோ தன்னோடு இருப்பது போன்ற உணர்வும் இல்லை. அதோடு அந்த டாக்டர் எங்கேயிருந்து சொல்லுகிறார் என்பதும் துல்லியமாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவளுக்கு தான் எங்கே இருக்கிறோம், எப்படி இருக்கிறோம் என்ற குழப்பம். கனவா.. நனவா.. உயிருலகமா... மரணலோகமா... வீடா... அல்லது காடா... என்று அடையாளப்படுத்த முடியாத மரண மயக்கம்... தற்காலிக தூக்கத்திற்கும் நிரந்தர துக்கத்திற்கும் இடைவேளையான இடைக்கால மரணம் அல்லது உயிர்ப்பு... தலையும் கழுத்துமே தானாகிப் போன பிரம்மை...

இந்தச் சமயத்தில், எங்கேயோ போய்விட்டு, அப்போதுதான் வந்த பாட்டியின் மகன் ராமய்யா விற்கு, டாக்டர் காந்தராஜ் மற்றவர்களிடம் சொன்னதையே மீண்டும் சொன்னார். டாக்டராக இருந்தாலும், மனித உடம்பை சதை இயந்திரமாய் பார்க்காத மனிதாபிமானி.

”பாட்டிக்கு இருதயம் நின்னுபோய் இருக்கு. ஆனாலும் மூளை வேல செய்யுது. பொதுவா ஒருத்தருக்கு முதலாவது மூளை நின்னுடும். அதுக்கு பிறகுதான் இருதயம் அடங்கும். இதைத்தான் கிளினிக்கல் சாவு என்கிறோம். ஆனால், நூற்றில் ஒரு கேஸாக பாட்டிக்கு, இன்னும் மூளை வேல செய்யுது. அதற்கு முன்னாலேயே இருதயம்தான் நின்னுட்டு. அதனால உங்கம்மாவை... பக்கத்து டவுன் ஆஸ்பத்திரிக்கு இப்பவே எடுத்துட்டுப் போய், அங்கே டிரிப் ஏற்றி.... மூளைக்கு போசாக்குக் கொடுத்தபடியே, இருதயத்த இயக்கிப் பார்க்கலாம்... ஒரு வேளை, பாட்டி பிழைச்சுக்கலாம்... அப்படி பிழைக்க வைக்கிறது சிரமம்தான். ஆனா முடியாதுன்னு இல்ல... வீட்ல ஒரு பெரியவங்க இருக்கிறது நல்லது தானே... என்ன சொல்றீங்க? ணி

எம்மா.. என்னப் பெத்த அம்மாணி...

ராமய்யாவை, டாக்டர் புரிந்து கொண்டார். அம்மாவை வழியனுப்பி வைக்கத் தயாராகி விட்டார். இதுக்கு மேலயும் பேசினால், காசு கரக்கப் பார்ப்பதாக நினைப்பார். நல்லவருக்கு அடையாளம் சொல்லாமல் போகணும். போய்விட்டார்.

கனகம்மா பாட்டிக்கு மகனின் அழுகைச் சத்தம், பாசச் சத்தமாகக் கேட்டது. ஆறுதல் சொல்லுவது போல், அவள் மூளை துடித்தது. அழாதடா.. என் ராசா.. ஆஸ்பத்திரிலே.. அம்மா பிழைச்சுக்குவேண்டாணி...

பிழைக்க நினைத்த பாட்டிக்கு அவள் பிழையை உணர்த்துவது போல், கண்ணில் சிறு வலி. வாயில் ஒரு வாதை, எவரோ... வேறு யாரும் இல்லை. அவள் பெற்ற ராமய்யாவின் கைதான்... அதன் வாசனை அவளுக்குப் புரிகிறது. பஞ்சிலிருந்து இரும்பாவது வரைக்கும், அவள் கழுத்தைச் சுற்றி முத்தமிட்ட கைதான்... அதே கை, தனது விழிகளை இமைகளை இழுத்து நடைசாத்துவது போல் தோன்றியது. அந்த மகனுக்கு ஒத்தாசையாக இன்னோரு கரம். வளையல் குலுங்கும் கிண்கிணி சத்தத்தோடு 'எத்தே... எத்தே' என்று புலம்பியபடியே, வெள்ளையும், சொள்ளையுமாய் தெரிந்த பாட்டியின் வாயை மூடுகிறாள். மரணக் கோரத்தை அழகாக்கிப் பார்க்க நினைத்தார்களோ... அல்லது சின்னஞ்சிறு பிள்ளைகள், பாட்டியை பெண் பூச்சாண்டியாய், பார்த்தும் பயந்தும் படுக்கையில் விழக்கூடாது என்கிற முன்னெச் சரிக்கையோ...

கனகம்மாவிற்கு புரிந்து விட்டது... அவளுக்கு மயக்கலோகம் கலைந்து மரணலோகம் எதிரில் தோன்றியது. 'போக வைக்கும் முன்பே போயாக வேண்டும்'. ஆனாலும் இந்தப் பாழாப் போற மூளை கேட்கமாட்டேங்குதே. என்னையும் புலம்ப வைக்குதே. நான் பெத்த மக்கா! அம்பது வருசமா, ஒங்கள முதல்ல இடுப்புலயும் அப்புறம் மனசுலேயும் தூக்கிச் சுமக்கிற என்னை ஆஸ்பத்திரிக்குக் கூட கொண்டு போக வேண்டாம். இந்த பாவி மூளை, நான் பாத்தறியாத வெள்ளக் கட்டி வேல வெட்டிய நிறுத்தற வரைக்கும், ஒரு அரை நாழிகை பொறுக்கப்படாதா... ஒப்பாரியோட ஒப்பாரியா பிணத்த தூக்கிக் குளிப்பாட்டுங்கன்னு கூசாம சொல்லுறியளே. பயமா இருக்கே. சாவுக்கு பயப்படல மக்கா... என்னை உயிரோட எரிச்சிடுவி களோ என்கிற பயந்தான். கொஞ்ச பொறுங்க மக்கா... நான் போயிடுவேன்... உலகத்துலே இருக்கிறவங்க போனாத்தான் இல்லாதவங்க இருக்க முடியுமுன்னு எனக்கும் தெரியும் மக்கா'.

கனகம்மா பாட்டி, தனக்குள்ளே அப்படிப் பேசிப் பாரத்தளே தவிர அவளை, ஏதோ ஒன்று கவ்வியது. பயத்தின் பயங்கர உணர்வான பீதியா... திகிலா... வெறுமையா... பிரம்மையா... அல்லது இவை அனைத்தும் ஒன்றான பெரும்பேர் உணர்வா... ஒரு பிசாசின் புலம்பலா... அவளுக்கே இப்போது புரியவில்லை. ஆனாலும் நெற்றிக் கூட்டின் பின் பக்கம் வெண்பனி போல் அப்பிக் கிடந்த அவள் முன் மூளையில் பழைய பதிவுகள் இப்போது துடித்தன. அம்பது அம்பதைந்து ஆண்டுகளுக்கு முன்னால், முகமறியாத மனிதனுக்கு கழுத்தை நீட்டி, இடமறியாத ஊருக்குப் பெற்றோரைப் பிரிந்து, வில் வண்டியில் ஏறும் போது, எப்படி பேதலித்தாளோ, அப்படிப் பட்ட பேதலிப்பு. கூடவே, ஏற்பட்டதே ஒரு இனிய எதிர்பார்ப்பு... அதேபோன்ற எதிர்ப்பார்ப்பு இப்போதும் அவளது உணர்வுகளில் ஊடாடியது. அது வாழ்க்கை துவக்கிய வாழ்வு வண்டி. இதுவோ அதை முடித்துவிட்டு அழைத்து செல்லும் மரண வண்டி. இது எப்படி இருக்குமோ... யாரெல்லாம் இருப்பார்களோ... தனியா போகணுமோ... தவியா தவிக்கணுமோ... பூலோகத்த பிரிஞ்ச வெறுமையில் குதியா குதிக்கணுமோ... அம்மாவ பார்க்கலாமா... செத்து மடிஞ்சி சிவலோகம் போன மகள பாக்கலாமா... அவளோட மவராசன் கிடைப்பாரா... இல்லேன்னா கடவுள்கிட்டத் தான் போவோமா... அவர் எப்படி இருப்பார்... முருகனா... அம்மனா... அல்லாவா... ஏசுவா... இல்ல சூன்யமா... சொர்க்கமா... அய்யயோ நரகமா... பாக்கலாம்... கொஞ்ச நேரத்துல முடிச்சு அவிழும். மூளைக்குள்ளே முடிச்சை அவிழ்க்கப் போன பாட்டிக்கு அவள் மகன் ராமய்யா போட்ட கூப்பாடு, கிணத்துச் சத்தமாய் கேட்டாலும், அவளும் அதில் குடியிருக்கும் தவளையானாள்.

'என்னை பெத்த அம்மா.. என்னை அநாதையா விட்டுட்டு போயிட்டியே... எம்மோ'....

ராமய்யாவை, நான்கு பேர் செல்லமாக அதட்டுவது கேட்டது. மகனின் தலை, தனது தலையில் மோதுவதை பாட்டி, வாதையாக உணர்ந்தாள். அப்போதுதான் தனக்கு தலை இருப்பது தெரிந்தது. அப்படித் தெரியத் தெரிய மூளையில் ஏதோ ஒன்று புதிதாய் பதிவு செய்தது. மானசீகமாகப் பேசியது.

'அழாதேடா... என் ராசா... நீ அநாதை இல்லடா... என்ஜினியர் மகனும், டாக்டர் மருமகனும்... சின்னச்சிறு பேரக் குட்டிகளுமாய்... சொத்தோடும் பத்தோடும் இருக்கிற நீ அநாதை இல்லைடா... அப்படிப் பார்த்தா, இந்த அம்மாதாண்ட் நாதியத்த மூளி... ஆனா ஒண்ணுடா... டாக்டர் காந்தராசு சொன்னது மாதிரி... ஆஸ்பத்திரிக்கு என்னை எடுத்துட்டுப் போயிருக்கலாம்... சாவுக்குப் பயந்து இப்படி பேசலப்பா... நான் பெத்த மவன், காசு பணத்த பத்தி கவலப்படாம, இந்த அம்மாவ.... கடைசி வரைக்கும் பிழைக்க வைக்கப் பார்த்தான்னு திருப்தியோட செத்துருப்பேன். சிரிச்சிக்கிட்டே நிறைவா போயிருப்பேன். அழாதேடா. வாய் வலிக்கும்'....

ராமய்யாவின் அழுகை முடிந்தபோது, இன்னொரு அழுகை தனித்து ஒலித்தது. பாட்டிக்கும் பட்டும் படாமலும் கேட்டது. மருமகள் உமாவின் அழுகை உரைநடையோடு கூடிய ஒப்பாரி அழுகை....

வந்துட்டிங்களா அப்பா! இதோ பாருங்க அப்பா! நான் மாமியாருன்னு மருந்துக்கும் நினைக்காமல்... தாய்க்கும் தாயா நினைச்ச என் தெய்வம். செத்துக்கிடக்கத பாருங்கப்பா .

வாய் மட்டும் செயல்பட்டு இருந்தால், பாட்டி வெளிப்படையாகவே சிரித்திருப்பாள் அப்பன்கரான் வந்துருக்கணும்... அவனோட சாதி சனமும் வந்துருக்கும்... அவங்க மெச்சறதுக்காக இப்படி அழுகிறாள்.... அடிக்கிறாள்... 'எம்மா எம்மருமவளே... இப்படி மாரடைச்சி அழதம்மா. அப்புறம் அந்தக் கிழட்டு முண்டைக்கு அடிச்சழுது தொண்டக் கட்டிட்டு... தலை வலிக்குன்னு' திட்டப்போற... நீ மருந்துக்கும் என்ன மாமியாரா நினைக்கலேங்கறது நிசந்தாம்மா... இல்லாட்டா... மருந்து கொடுக்க வந்த எம்பேத்தி ஆடலரசிய மாட்டுத் தொழுவத்துக்குத் தொரத்தி இருக்கமாட்டே... ஆமா.. எம்பேத்தி ஆடலரசியோட சத்தத்தைத் காணுமே... ஒரு வேளை நாவிதற்குப் பதிலா அவளையே துட்டி சொல்ல அனுப்பி இருப்பாகளோ.. மருமகக்காரி அப்படிப் பட்டவதானே... எம்மா!... எம்மருமகளே! உனக்கும் ஒரு மருமகள் வரத்தான் செய்வாள்... அய்யோ... கடவுளே... என்னை சாபம் போட வைக்காதே... அவளும் நல்லா இருக்கட்டும்... ஆனாலும் எம்மகன் என்ன மாதிரி முந்திக்கிட்டா... அவள் 'என்னை பாடாபடுத்தின மாதிரி அவனையும் படுத்தப்படாது... கடவுளே... கடவுளே... இந்த வரத்தை கொடு தெய்வமே... நான் உங்கிட்ட சீக்கிரமா வரணும்...'

திடீரென்று ஒருமித்த ஒப்பாரி: அந்த அறையை பூகம்பமாகியது. பாட்டி சரியாகத் தான் யூகித்தாள். துட்டிஷ கேக்க ஊர் சனம் வந்துருக்கு... தாழ்வாரம் வரைக்கும், கிண்டலும் கேலியுமாய் சிரிச்சிப் பேசிக்கிட்டு வந்த ஊர்க்காளிக, உள்ளே வந்ததும் மாரடிச்சி அழுகிறாளுக... அதுவும் ஒருத்திய ஒருத்தி கண்ணடிச்சிக்கிட்டும். நகை நட்ட பார்த்துக்கிட்டும் அழுவாளுங்க... எத்தனை எழவு வீட்ட பாத்துருக்கேன்.. ஆனாலும் இங்க எழவு விழாமலே எழவு நடக்குது.. ஒருவேளை நான் செத்துப் போயிருப்பேனோ...

கனகம்மா பாட்டி குழம்பிப் போன போது, ஒரு பெரிய அதட்டல் அந்த ஒப்பாளிக் கூத்தும், உடனடியாக அடங்கியது. அப்படி அடங்கியதும் ஒரு உரையாடல்.

ராமய்யா... ஒன் பெரிய தங்கச்சிய காணுமே ...

'அவள் கதை உமக்குத் தெரியாதா? சின்னத் தங்கச்சி கல்யாணத்துக்கு இவளுக்கு போட்டத விட பத்து பவுன் அதிகமா போட்டேன். இவள் குதியா குதிச்சாள். தங்கச்சிக்கு போட்ட அதிக நகை தனக்கும் போடணுமுன்னு கத்தினாள்... நான், இந்தக் காலத்து விலைவாசிய கணக்குல எடுக்கச் சொன்னேன். உடனே கணக்கு தீர்த்துட்டாள்... இனிமே இந்த வீட்ல கால் வைக்க போறதில்லைன்னு சபதம் போட்டாள். அம்மா, அவள் நினைவா கிடக்கிறதை ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினேன்... அப்படியும் வரல...

உரையாடலில் ஒரு இடைவேளை... ஒப்பாரியை விட்டுவிட்டு உற்றுக் கேட்டவர்களின் கசாமுசா சத்தங்கள்... சத்திரஞ்சாவடி முணுமுணுப்பு... கனகம்மா பாட்டியும், மகளை மானசீகமாக மூளைத்திரையில் ஏற்றி, நியாயம் கேட்டாள்..

'நான் பெத்தமகளே... என்னை விட்டு நீ பிரியப்படாதுன்னு உள்ளூர்லேயே வசதியான மாப்பிளைக்கு உன்னை கட்டிக் கொடுத்தேன். கடைசியில உன்னைப் பெத்த இந்த அம்மாவோட எடை பத்து பவுன் எடைய விட கொறைஞ்சு போயிடுச்சேட... இதுக்கு மேலயும் நான் அரைகுறையாய் இருக்கணுமா?.. இன்னும் இந்தப் பேய்ப்பய மூளை என்னைவிட மாட்பேங்குதே'..

ஒப்பாரி பாடல்கள், கிண்டலும் கேலியுமான வசனங்களுடன் உச்சத்திற்கு போன போது மீண்டும் ஒரு அதட்டல், ஒப்பாரிக்காரிகள் மீண்டும் கதை கேட்க, வாய்களை மூடி, கண்களைச் சிமிட்டி, காதுகளில் கவனத்தை ஒன்றித்தபோது -

'ராமய்யா.. ஒன் தம்பிமாருக்கு சேதி சொல்லிட்டியா?'...

'மெட்ராஸ்காரன், நாளைக்குத்தான் வர முடியுமாம்.. பிரேதத்த பாதுகாக்க முடியாட்டால், அடக்கம் செய்யச் சொல்லிட்டான். காரியத்துல கலந்துக்குவனாம். இந்தச் சந்தர்ப்பத்தில, பாகப் பிரிவினையும் வச்சுக்கணுமாம். பதினைஞ்சு நாளைக்கு முன்னேயே சேதி சொல்லியும், பெத்த தாயை எட்டிப் பாராத பயலுக்கு சொத்து வேணுமாம் சொத்து கொடுத்துடுவனா?',

'அப்புறம் அமெரிக்காக்காரன்?'

'பெரிய தம்பியா. பாவம் இப்பதான், அமெரிக்காவுல புதுக் கம்பெனி ஆரம்பிச்சுருக்கானாம்.. அப்படி இருக்கயில எப்படி வரமுடியும்? ஆனாலும், போன வாரமே சொல்லிட்டான். எவ்வளவு டாலர் வேணுமுன்னாலும் அனுப்புவனாம். அம்மாவோட சமாதிய கோயில் மாதிரி கட்டணுமாம். அடுத்த வருசம் மகளுக்கு மாப்பிள்ளைப் பார்க்க வரும்போது, அம்மா சமாதியில பூசை நடத்துவனாம்.. அடேய் கார்த்தி.. அமெரிக்க சித்தாப்பாவுக்கு, பாட்டி இறந்த செய்தியச் சொல்லி கல்லறை கோயில் கட்ட குறைஞ்சது மூவாயிரம் டாலர் ஆகுமுன்னு டெலிபோன் போடு'...

கனகம்மா. தனது மூளையை, ஆட்டு மூளையைப் போல் அரிவாள் மணையில் மானசீகமாக அறுத்தாள். பாட்டி புலம்பினாளோ.. இல்லை மூளை புலம்பியதோ...

'நான் பெத்த மக்கா. குடிசையாய் இருந்த இந்த வீட்டை கோபுரமா ஆக்கின எனக்கு கல்லறை தேவை தாண்டா... உங்கள பெத்த வயித்த. அது எங்கே இருக்கோ. தேடிப் பிடிச்சி ரெண்டாக் கீறி அதுல கல்லறை கட்டுங்கடா... அவசர ஆபத்துக்கு சொந்தப் பந்தத்தை வரவழைக்கத்தான், டெலிபோன் இருக்கிறதா நெனச்சேன்... இப்பத்தான் புரியது மக்கா. தாய் பிள்ள உறவும் டெலிபோன் சிநேகிதமுன்னு'.

திடீரென்று ஒரு கூக்குரல். அது முடியும் முன்பே, ராமய்யாவின் அதட்டல். அவர் மனைவியின் பிளிறல்.

'பாட்டிம்மா... நீ இல்லாம நான் எப்படி இருப்பேன் பாட்டிம்மா?

'மாட்டுக்கு வைக்கோல் போடாம. இங்க வந்து பிலாக்கணமா பாடுற? மூதேவி... வேணுமுன்னா உன் பாட்டிகூட போறியா?'

'தாயில்லாப் பொண்ணுப்பா... இப்படியா தலையில குட்டுறது?'

'ஓங்களுக்கு என்ன தெரியும் மாமா? இந்தக் கேணச்சி எப்போ இந்த வீட்டுக்குள்ள காலடி வச்சாளோ.. அப்பவே இவுக நாய் படாத பாடுதான்.'

சலனத்தைக குறைத்துக் குறைத்து, சன்னஞ் சன்னமாய், அடக்கமாகிக் கொண்டிருந்த கனகம்மாவின் மூளையில் பழைய நிகழ்வுகளின் பதிவுகள் முட்டின; மோதின... மனிதக் காட்சிகளாய் படமெடுத்தன.

பாட்டியின் தலைமகள் - முதலிரவு போல் மறக்க முடியாத முதல்மகள் சொர்ணத்தை, வெளியூரில் ஒரு ரெவின்யூ இன்ஸ்பெக்டருக்கு, சீரோடும் சிறப்போடும் கட்டிக் கொடுத்தாள். அந்த மகளுக்கு, நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மலடிப் பட்டத்தை மறுக்கப் பிறந்தவள் இந்த ஆடலரசி. அய்ந்து வயதிலேயே, பச்சை அரைப்பவாடை, வெள்ளைச் சட்டையுமாய் இங்கிலீஸ் பள்ளிக் கூடத்துக்குப் போனவள். ஏறும் போதும் வேனு.. இறங்கும் போதும் வேனு.. குவியாமலும், கவியாமலும், நீளாமலும், சுருங்காமலும் உள்ள அவள் முகத்தில், கண்னை மட்டும் பார்த்து முடிக்க கால்யுகமாகும்; மூக்கைப் பார்த்து முடிக்க முழு யுகமாகும். அப்பேர்ப்பட்ட நளினம். ஆனாலும், இவளுக்கு பன்னிரெண்டு வயசு வந்த போது, அப்பன்காரன், லஞ்சத்துல மாட்டி, ஜெயிலுக்கு போயிட்டான். அவமானம் தாங்காமல் சொர்ணமும், துக்குப் போட்டு தன்னைத் தானே கொன்னுக்கிட்டாள். தாய் மாமனே அடைக்கலமுன்னு, இந்தச் சின்னச் சிட்டு, இங்க வந்தது. ஆனாலும் இவளை மாட்டுத் தொழுவத்துலேயே மாடாய் போட்டுட்டாக, தினம் ஒரு குட்டு... மாதம் ஒரு சூடு... இவளும் பாட்டியும், ஒருத்தருக்கு ஒருத்தர் முட்டுக் கொடுத்தார்கள். இரவில் படுக்கையில் பாட்டியை சிக்கனெப் பிடித்துக் கொள்வாள். பாட்டிம்மா! என்று ஒசையிட்டபடியே, தூக்கம் கலைப்பவள். இன்றைக்கோ நாளைக்கோ பெரிய வளாய் ஆகப்போகிற மதர்ப்பு... அதற்காகவே மகனும் மருகளும் காத்திருக்கிறார்கள். மருமகளின் புத்தி பிசகிய மாமா மகனுக்கு, இவளை கொடுக்க போவதாக ஒருநாள் பேச்சு அடிபட்டது. பாட்டியின் காதுபடவே பேசிக் கொண்டார்கள். உடனே காமாட்சியான பாட்டி, காளியானாள். 'உனக்கும் பெண் இருக்குடா என்று அதட்டினாள். என் உயிர் இருக்கிறவரைக்கும். இப்படிப்பட்ட பொருந்தாக் கல்யாணம் நடக்காதுடா...' என்று சபதம் போட்டாள். 'இப்போ இந்தச் சின்னச்சிறுக்கி, என்ன ஆவாளோ? எப்படி போவாளா? கடவுளே. கடவுளே. கண்ணில்லாத கடவுளே...'

கனகம்மா பாட்டியின் மூளை, பழைய பதிவுகளை புதுப்பித்துக் கொண்டிருந்தபோது -

'பாட்டிம்மா என்னத் தனியா விட்டுட்டு போகாதே. பாட்டிம்மா. என்னையும் கூட்டிட்டுப் போ. நான் உயிரோடு இருக்க மாட்டேன்'. முதல் தடவையாக, தாய் மாமனின் கட்டளையை மீறி, மாட்டுத் தொழுவத்திற்குப் போகாமல், நின்ற இடத்திலேயே நின்றபடி பீறிட்ட ஆடலரசியின் புலம்பல், பாட்டியின் மூளையில் ஒரு புதிய பதிவை ஏற்படுத்தியது. கூடவே வெளியே இழவுச் சங்கின் ஓங்காரம். உள்ளே ஒப்பாரியின் உச்சம். இந்த இரண்டும் ஒன்றை ஒன்று கூட்டிக் கொண்டும், குறைத்துக் கொண்டும், இருந்த போது, 'சீக்கிரமா குளிப்பாட்டுங்க' என்ற ஆணைகள்... மீண்டும் ஆடலரசியின் ஒலம். 'பாட்டிம்மா என்னை கூட்டிப் போ பாட்டிம்மா.. இல்லாட்டா திரும்ப வந்துடு பாட்டிம்மா’...

கனகம்மா பாட்டியின் மூளை உக்கிரமானது, உஷ்ணமானது. பின்னர் ஒளியானது. வாழ்ந்தாக வேண்டும் என்ற வைராக்கியம், அவள் உடல் முழுக்க எண்ண அலைகளை எழுப்பின. வாழ்வனுக்கள் ஒன்றாய் திரண்டு, உயிர்த்திரளானது. ஈஸ்வரன், எமனை உதைப்பது போன்ற ஒரு காட்சி, அவள் உச்சிமுனை கபாலத்தில் தோன்றியது. உடனே தலைசிம்மாசினத்தில் உள்ள முன், பின், பக்கவாட்டு மூளைப்பகுதிகள் அத்தனையும் ஒன்று சேர்ந்து, தங்கள் அதிகாரத்தை, உடல்தேசத்தின் மீது நிலைநாட்டிக் கொண்டிருந்தபோது -

கனகம்மா பாட்டியின் கண்கள். இமைச்சிறையில் இருந்து விடுதலை பெற்று சுழன்றன. வலது கால் சிறிது மேல் நோக்கி எம்பியது. இடது கால் பாட்டியை எழுப்பும் முயற்சியாக கட்டில் சத்தத்தில் அழுந்தப் பதிந்தது. இரண்டு கைகளும் பக்கவாட்டுச் சட்டங்களை கல்விக்கொண்டன.


ஆனந்த விகடன் - அக்டோபர், 1999