சிந்தனையாளன் மாக்கியவெல்லி/மாக்கியவெல்லியின் கடிதங்கள்

விக்கிமூலம் இலிருந்து


நூல் சுருக்கம் : 5
மாக்கியவெல்லியின் கடிதங்கள்

கடிதம் : 1
அரசியற் கொள்கைகளில், பலனையே கருதவேண்டும்: முறைகளையல்ல!

(பியரோ சோடர்னி) என்பவர் சிறிது காலம் பிளாரண்டைன் அரசாங்கத்தின் தலைவராக இருந்தவர் 1513-ம்ஆண்டில் இந்தக் கடிதம் எழுதப்பட்ட சமயத்தில் அவர் நாடு கடத்தப்பட்டுதால் மாட்டியாவில் இருந்தார். மாக்கியவெல்லியின் மூலமாக அவர் பிளாரென்சுக்குத் திரும்பிவர முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மொட்டையாக எழுதியனுப்பிய கடிதம் ஒன்றுக்கு மாக்கியவெல்லி எழுதிய பதில் இது. பகைவர் கையில் சிக்கக் கூடும் என்ற ஐயப்பாட்டில் எழுதப்பட்ட கடிதம் ஆகையால் இதில் பல விஷயங்கள் குழுஉக் குறியான சொற்றொடர்களில் அமைந்திருக்கின்றன. கூடுமானவரை அவற்றைப் புரிய வைக்க முயன்றிருக்கிறோம்.)

ரகுசாவில் உள்ள பியரோ சோடர்னி அவர்களுக்கு,

(தேதியிடப்படவில்லை)

உங்கள் கடிதம் ஒன்று எனக்கு முக்காடும் போர்வையுமாக வந்து சேர்ந்தது. அதாவது குளிர் நிறைந்த ஜனவரி மாதத்தில் மொட்டைக் கடிதமாக வ்ந்தது. அதாவது குளிர் நிறைந்த ஜனவரி மாதத்தில் மொட்டக் கடிதமாக வந்தது. ஆனால் அதில் பத்து வார்த்தைகளைப் படித்த மாத்திரத்திலேயே அது உங்கள் கடிதம் என்பதைத் தெரிந்து கொண்டேன். உங்களையறியப் பியாம்பினோவை அடிக்கடி நம்புகிறேன். அடிக்கடி பியாம்பினோவிலிருந்து வரும் ஆளைப் பார்க்கிறேன். அவன் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை எனக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கிறான்) உங்களில் ஒருவன் வெளிச்சம் இல்லாமலும் இன்னொருவன் அதிக வெளிச்சத்தினாலும் அவதிப்படுகிறார்கள் என்று நிச்சயமாக நினைக்கிறேன். உங்கள் காரியக்காரர்களில் ஒருவன் முட்டாளாகவும் மற்றொருவன் அயோக்கியனாகவும் இருப்பதால்தான் உங்கள் உடன்பாட்டுப் பேச்சு வார்த்தைகள் ஒரு பலனும் இல்லாமல் போய்விட்டன என்பதை நான் தெளிவாகத் தெரிந்து கொண்டேன். பிப்ரவரி சரியாக இருக்கும் வரை நான் ஜனவரியைப் பற்றிக் கவலைப்படவில்லை. தற்போது காரியம் வெற்றிகரமாக முடியும் என்று தோன்றுகிறபடியால் போன மாதம் பேச்சு வார்த்தைகள் முறிந்து போனதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. பிலிப்போவின் சந்தேகத்தைக் கண்டு வருந்திப் பலனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். மேற்படியாரை பிலிப்போ நம்பாதிருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். என்ன நடக்கிறதென்று எச்சரிக்கையாகக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் கடிதம் சுருக்கமாக இருந்தாலும், திரும்பத் திரும்பப் படித்து அதை விரிவாக்கி விளக்கம் அடைந்தேன். உண்மையில் நான் தயக்கமடைந் திருக்கிறேன். கடிதத்தின் இந்தப்பகுதிதான் சரியாகப்பட வில்லை. {மேற்படியாரைப் பார்க்க நான் தயங்கிக் கொண்டிருந்தேன். ஆனால், உங்கள் கடிதத்தில் உள்ள குறிப்புப்படியே நடந்து வருகிறேன். நான் அவரைச் சந்திக்க முடிவு செய்து கொண்டேன். அவரைப் பற்றித் தாங்கள் பயப்படுவது அர்த்தமற்றது. நீங்கள் சொல்கிறபடி அவர் பேசியிருப்பார் அல்லது செய்திருப்பார். உங்களையும் உங்கள் பிரயாணத்திசையையும் நான் அறிவேன். உங்களுக்குத் தேவை என்ன என்பதும், நீங்கள் அது பற்றி என்ன செய்யப் போகிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். உங்கள் போக்கில் தவறு கண்டாலும் நான் அதைக் கண்டித்துரைக்க மாட்டேன். அது உங்களுக்கு அளித்திருக்கும் வெற்றியை எண்ணும்போது கண்டிக்க முடியாது. அது மேலும் வெற்றி தருமென்று நம்புகிறேன்.

அறவொழுக்கமும் அறிவு நுட்பமும் உடைய உங்களுடைய நிலையைக் கொண்டு தீர்மானிக்காமல், பலப் பலருடைய நிலையைக் கொண்டு தீர்மானிக்கும்போது, அரசியல் கொள்கைகளைப் பற்றிய முடிவுகளை அவற்றின் செயல் முறைகளைக் கொண்டு தீர்மானிக்காமல் அவற்றின் மூலம் அடைந்த பலன்களைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன்.

ஓர் இடத்திற்குப் பல பாதைகளின் மூலம் போய்ச் சேர்வது போல, ஒரே காரியத்தைப் பலவிதமான முறைகளால் செய்யலாம். பல்வேறு மக்களும், பெரிதும் வேறுபட்ட கொள்கைகளின் மூலம் தங்கள் - இலட்சிய முடிவுகளை எய்துகிறார்கள். இந்தக் கொள்கையை மெய்ப்பிப்பதற்கு இதுவரையில்லாதிருந்த சாட்சியத்தை இப்போதைய போப்பாண்டவரின் நடத்தையும் அதனால் அவர் நிறைவேற்றிய காரியங்களும் கொடுத்து விட்டன.

ஹனிபாலும் சிப்பியோவும் இராணுவத் திறமையில் ஒன்று போல் உயர்ந்த நிலையில் இருந்தவர்கள்; பல வெற்றிகளையும் அடைந்திருக்கிறார்கள். ஹனிபால், தன் இராணுவத்தை ஒன்றுபடுத்தி, இத்தாலிய மக்களின் அனுதாபத்தைப் பெற்று, அவர்களைக் கொடுமையும், சதியும், துரோகமும், அக்கிரமுமான வழிகளில் ரோமானியருக்கு எதிராகப் புரட்சி செய்யும்படி தூண்டினான். ஆனால் சிப்பியோவோ, அன்பு, நேர்மை, உண்மை ஆகியவற்றில் ஸ்பெயின் தேசத்து மக்களிடையே அதே வெற்றியை அடைந்தான். ரோமானியர்களுடைய உதாரணம் நம் நாட்டுக்குச் சரிப்படாது என்று சொன்னால், இப்போது நம் நாளிலேயே, லாரென்சோ டிமெடிசி மக்கள் ஆயுதங்களைப் பறி முதல் செய்ததன் பலனாகப் பிளாரென்சை வசப்படுத்திக் கொண்டதையும், ஜியோலாணி பெண்டிவோக்லியோ மக்களுக்கு ஆயுதம் வழங்கி போலோக்னாவை வசப்படுத்திக் கொண்டதையும் சொல்லலாம். பேரரசர் டிட்டஸ் தாம் யாருக்கோ நன்மை செய்யத் தவறியதால் தம் சிங்காதனத்தை இழக்கும் விதி ஏற்பட்டது என்று எண்ணினார். வேறு பலர் யாருக்கும் நன்மை செய்வதால் தங்கள் சிங்காதனத்தை இழக்கும்படி நேரிடும் என்று நினைத்ததாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு விஷயத்தையும் ஆற அமர யோசித்துச் செய்வதால்தான் பலர் தங்கள் குறிக்கோளில் வெற்றியடைகிறார்கள். இப்போதுள்ள போப்பாண்டவரோ, எவ்வளவு சிறந்த திட்டங்களாலும், எவ்வளவு சக்தி வாய்ந்த ஆயுதங்களாலும் செய்ய முடியாத காரியத்தை எவ்விதமான குறிக்கோளும் ஆயுதமுமின்றி வெற்றிகரமாகச் செய்து முடித்து விடுகிறார். ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டத்தின் மீதோ தான் மனித இருந்த பல இகழப்படுவர்கள் வெளையும் வாய்ப்புக்குத் தகுந்தபடி இராச்சியங்களை அடைபவர்களையும், இழப்பவர்களையும் நாம் பார்க்கிறோம். அவர்கள் வென்றால் புகழப்படுகிறார்கள்: தோற்றால் இகழப்படுகிறார்கள். நீண்ட காலம் வளமாக இருந்த பிறகு இழப்பு நேரிடும்போது மட்டும்தான் மனிதன்மீது பழியை ஏற்றாமல் ஆண்டவர் மீதோ அல்லது அவனுடைய தீய விதியின் மீதோ அந்தப் பழி சுமத்தப்படுகிறது.

மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான முகங்களைக் கொடுத்தது போலவே, இயற்கை அவர்களுக்கு வெவ்வேறு விதமான மனத்தையும் குணத்தையும் கொடுத்திருக்கிறதென்று நான் நம்புகிறேன். மனிதர்கள் தங்கள் குணவியற்படியும், மனப்போக்கின்படியும் செயலாற்றுகின்றார்கள். ஆனால், இன்னொரு புறத்தில் காலமும் சூழ்நிலையும் மாறுபடுகிறது. தன் போக்கின்படி ஒருவன் ஆற்றுகின்ற செயல்கள், காலத்திற்கும் சூழ்நிலைக்கும் பொருந்தி விடுகின்றபோது, அந்த மனிதன் தன் காரியத்தில் தான் எதிர்பார்க்கும் பலனை அடைகின்றான். காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஒத்து வராத போக்குடைய மனிதன் தோல்வியடைகிறான். காலப் போக்கும் சூழ்நிலையும் இடத்துக்கு இடம் தேசத்திற்குத் தேசம் மாறுபடுவதால், மாறுபட்ட இரண்டு முறைகளில் செயலாற்றுகின்ற வெவ்வேறு மனிதர்கள் ஒரே பலனையடைய முடியும். ஆனால், காலமும் சூழ்நிலையும் பொதுவாகவும் குறிப்பாகவும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. அதே சமயம் மனிதனின் குணமும் போக்கும் ஒரே மாதிரியாக அப்படியே இருக்கின்றன. ஆகவேதான் மனிதனுக்கு ஒரு - சமயம் நல்லதிர்ஷ்டமும் மற்றொரு சமயம் துரதிர்ஷ்டமும் உண்டாகின்றன. காலமும் சூழ்நிலையும் இவ்வாறு இருக்கும் என்று முன் கூட்டியே அறியக் கூடிய அவ்வளவு புத்திசாலியாக மனிதன் இருந்து அதற்குத் தகுந்தாற்போல் நடந்து கொண்டால் அவன் எப்போதும் நல்லதிர்ஷ்ட முடையவனாகவேயிருப்பான். அல்லது தீமைகளையாவது தவிர்த்துக்கொள்ளக் கூடியவனாக . இருப்பான். மதியுடையவன் விதியையும் விண் மீன்களையும் ஆளுவான் {விதியை மதியால் வெல்லலாம்) என்ற பழமொழியும் உண்மையாகி விடும். துரதிர்ஷ்ட வசமாக இந்த உலகத்தில் அவ்வளவு புத்திசாலிகள் காணப்படவில்லை. ஏனென்றால், முதலாவதாக மனிதர்களால் எதிர் காலத்தையறிய முடிவதில்லை. இரண்டாவதாக அவர்கள் தங்கள் இயல்புகளை மாற்றிக்கொள்ள முடிவதில்லை. ஆகவே தன் மாறுபாட்டுக்குத் தக்கபடி மனிதர்களை அதிர்ஷ்ட வாய்ப்புத்தான் ஆள வேண்டியதாயிருக்கிறது, கொடுமையும், துரோகமும், அக்கிரமும் நீண்ட நாட்களாக நிலவிய நாட்டிலே மனிதத் தன்மையும், நேர்மையும், உண்மையும் கொண்டு ஒருவன் கௌரவத்தையடைவது போலவே, மனிதத் தன்மையும், நோமையும், உண்மையும் நீண்ட நாட்களாக மதிப்பையிழந்து போன இடத்திலே கொடுமையாலும், துரோகத்தாலும் அக்கிரமத்தாலும் ஒருவன் மரியாதையைப் பெற்றுவிடலாம். கசப்பான பொருள்களால் சுவை ஊறுபடுவது போலவே, மிகப் பல இனிய பொருள்களால் குமட்டலும் ஏற்படுகிறது. அது போலவே மனிதர்கள் நன்மைகளால் அலுப்பும், தீமைகளால் வெறுப்பும் அடைகிறார்கள். ஹனிபாவின் கையில் இத்தாலியும், சிப்பியோவின் கையில் ஸ்பெயினும் சேர்ந்ததற்குக் காரணம் இவைதாம். காலமும் சூழ்நிலைகளும் இந்த இரண்டு மனிதர்களின் தன்மைக்கும் - போக்குக்கும் பொருந்தியிருந்தன. நாம் சொல்லுகின்ற அந்தக் குறிப்பிட்ட காலங்களில் சிப்பியோவைப் போன்ற ஒரு மனிதன் இத்தாலியிலோ அல்லது ஹனிபாவைப் போன்ற ஒரு மனிதன் ஸ்பெயினிலோ அவர்கள் இருவரும் தத்தம் தேசத்தில் அடைத்தது போன்ற வெற்றியை அடைந்திருக்க முடியாது.

நிக்கோலோ மாக்கியவெல்லி.


கடிதம் : 2
பேசினால் அரசியல் பேசவேன்: இல்லாவிட்டால்
பேசாமலிருப்பேன்!

பெருமைமிக்க பிரான்சிஸ்கோ வெட்டோரி அவர்கள், ரோமில், பிரதான குருவின் சமஸ்தானத்துக்கு அனுப்பப் பட்ட ராஜதூதர்.

ரோமாபுரி.
பிளாரென்ஸ், ஏப்ரல் 9.1513.

பெருமைமிக்க ராஜப்பிரதிநிதி அவர்களே,

தங்கள் கடந்த கடிதம். சித்திரவதை இயந்திரத்திற்கு அழைப்பதைக் காட்டிலும் மேலான பயத்தை எனக்கு உண்டாக்கிவிட்டது. எனக்குத் தீமையிழைக்கப்படும் என்று தாங்கள் கனவு காண்பது கூட எனக்கு வருத்தமளிக்கிறது. எனக்குப் பட்டுப்பட்டுப் பழக்கமாகி விட்டது. ஆனால் உங்களுக்காகவே நான் வருந்துகின்றேன். தங்கள் நல்லறிவினாலும் சாதுர்யத்தினாலும் வாழ்வதைவிடக் குறுகிய புத்தியினாலும் திறமையினாலும் தொல்லை பிடித்தவர்களாக உலகில் வாழ்க்கை நடத்துகின்றவர்களைப் பின்பற்றி நடக்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் டாட்டோ பற்றிச் சொன்ன விஷயத்தை முன்னிட்டு உங்களுக்காக நான் வருந்துகிறேன். உண்மையில் நான் அந்த விஷயத்தை முக்கியத்துவமுடையதாக எண்ணவில்லை. உருட்ட முடியாத கல்லைப் புரட்டிப் பார்க்க வேண்டும். நான் ஏதேனும் உங்களிடம் கேட்கும் பொழுது, எனக்காக நீங்கள் துன்பத்திற்காளாகும்படி நடந்துகொள்ள வேண்டாம் என்பதை எப்பொழுதும் போல இப்பொழுதும் நினைவு படுத்துகின்றேன். ஏனென்றால் நான் விரும்புகிற விஷயத்தில் பலன் பெறவில்லையென்றால், அதற்காக நான் அப்படியொன்றும் பெருந்துன்பம் அடைந்துவிடப் போவதில்லை.

பல விஷயங்களில் ஒன்றை எதிர்பார்த்திருக்க வேறு வி தமாக முடிவதைக் கண்டு நீங்கள் அலுத்துப் போயிருந்தால் அதனால் தவறில்லை. ஏனெனில் என் விஷயத்திலும் அது மாதிரியே பல தடவை நடந்திருக்கிறது. எப்படியிருந்தாலும் - நான் உங்களை நேரில் சந்திக்க முடிந்தால், உங்கள் மனத்தில் விதவிதமான மனக் கோட்டைகளை நிரப்பாமல் என்னால் இருக்க முடியாது. பட்டு வியாபாரத்தைப் பற்றியோ, கம்பளி வியாபாரத்தைப் பற்றியோ அல்லது லாப நட்டக் கணக்குகளைப் பற்றியோ பேசாமல் அரசியலைப் பற்றிப் பேச வேண்டும் என்று எனக்கு விதி ஏற்பட்டிருக்கிறது. எனக்கு ஒரே ஒரு வழியிருக்கிறது. ஒன்று அரசியல் பேச வேண்டும் அல்லது பேசாமல் இருப்பதாக உறுதி பூண வேண்டும்.

நிக்கோலோ மாக்கியவெல்லி
செயலாளர் எர்ஸ்ட்வெல்.
கடிதம் : 3
பேன் கூட்டத்திடையே வாழ்கிறேன்


பிரான்சிஸ்கோ வெட்டோரி அவர்களுக்கு,
பிளாரென்ஸ், ஜுன் 10, 1514.

பெருமை தங்கிய ராஜதூதர் அவர்களே,

என் கூட்டத்துடன் நான் நாட்டுப் புறத்தில் இருக்கின்ற பொழுது, தங்கள் இரு கடிதங்களும் கிடைத்தன. பிரான்காசியோவிற்காக டொனாட்டோ அவற்றை அனுப்பி வைத்தார். என் சொந்த விஷயம் பற்றியும், தங்களுடைய இருதயப் பிரச்சனைகள் பற்றியும் பிற எல்லா விஷயங்களுக்கும், எனக்குப் பொருத்தமாகத் தோன்றிய முறையில் நான் அவற்றிற்குப் பதில் அளித்தேன். ஆனால், அதன் பிறகு எல்லாவற்றையும் மறந்து விடுவதற்காக பிளாரென்சுக்கு இரண்டு நாட்களாக வந்திருக்கிறேன். நான் எழுதிய எல்லாவற்றையும் திரும்ப எழுதுவது எனக்குச் சிறிது சிரமமாகத் தோன்றுகிறது. ஆகவே நான் பொறுத்திருந்து, தாங்கள் இப்பொழுது எனக்கு அறிவித்த அதே காரணங்களை முன்னிட்டு ரோமாபுரிக்குச் செல்லவில்லை என்பதைப் பற்றிச் சுருக்கமாக விளக்கியெழுதி அந்தக் கடிதத்தைப் பின்னால் அனுப்புகிறேன். நானே அவற்றையெல்லாம் பற்றி முன் கூட்டி அறிந்துகொண்டு விட்டேன்.

ஆகவே, என் உழைப்பின் பெறுமதியை நினைவு வைத்திருப்பவர்களோ, அல்லது நான் ஏதேனும் நல்ல காரியத்துக்குப் பயன்படுவேன் என்று எண்ணுபவர்களோ யாரும் இல்லாத இந்தப் பேன் கூட்டத்தினிடையே நான் தொடர்ந்து இருந்து வருகிறேன். ஆனால், இதே நிலையில் நான் நெடுநாட்கள் இருக்க முடியாது. என் பொருளாதாரம் குறைந்து கொண்டு வருகிறது. கடவுள் தாமாக என்னிடம் ஏதேனும் அருள் புரியாவிட்டால், எப்போதாவது ஒருநாள் நான் வீட்டை விட்டுக் கிளம்பி, எங்காவது கடிதம் வாசித்துக் காண்பிப்பவனாகவோ, அல்லது யாராவது காவற் சேவகனுக்குக் கணக்குப் பிள்ளையாகவோ இருந்து காலத்தைக் கழிக்க வேண்டியதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படியும் ஒரு நல்ல நிலையில் என்னால் வாழ முடியவில்லை என்றால், இங்கே உள்ளவர்கள் நான் செத்துத் தொலைந்து விட்டதாக எண்ணிக் கொள்ளும்படி செய்துவிட்டு, எங்காவது தூரந் தொலையில் சென்று சிறு குழந்தைகளுக்கு எழுத்துகள் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாராகவாவது இருக்க வேண்டியதுதான், அந்த விஷயத்தில் நான் அவர்களுக்கு முற்றிலும் ஒரு பாரமாக இருக்கிறேன். நான் செலவாளியாக இருக்கிறேன். செலவழிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை.

இந்த விஷயங்களையெல்லாம், நீங்கள் எனக்காக ஏதேனும் கஷ்டப்பட வேண்டும் என்பதற்காகவோ, அல்லது கவலையெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலோ நான் சொல்லவில்லை. ஆனால், என் இதயத்திலிருந்து துன்பபாரத்தை அகற்றுவதற்காகவே சொல்லுகிறேன், இன்னொரு முறை நான் உங்களிடம் இதைச் சொல்ல மாட்டேன்.

சிந்தைக்கினிய நண்பரே, காதல் மக்களின் இதயத்திலே பொருந்தும்போது, அதைக் கட்டி வைக்கவோ அதன் இறக்கைகளைச் சேர்த்து இறுக்கி வைக்கவோ முயலுபவர்களைத் தான் அது மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது என்பதை நான் தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். சிறு குழந்தையாகவும் அடிக்கொரு நினைப்புமாக உள்ள அந்தக் காதல், அவர்கள் கண்களையும் இருதயங்களையும் அவர்களுடைய குடலையும் கூடப் பிடுங்கியெடுத்து விடுகிறது. ஆனால், அதை விரும்பி அதன் போக்குக்கேற்ப வளரவிட்டு விடுகிறவர்களும் இருக்கிறார்கள். அது தங்கள் இதயத்தை விட்டுப் போகும்போது அவர்கள் அதைப் போகவிட்டு விடுகிறார்கள். அது திரும்பி வரும்பொழுது அவர்கள் அதை மகிழ்ச்சியுடன் விரும்பி வரவேற்றுக் கொள்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் எப்பொழுதும் அதன் அருளுக்குப் பாத்திரர்கனாகி அதன் ஆட்சியின் கீழ் வெற்றியுடன் திகழ்கிறார்கள். ஆகவே அன்புக்குரியவரே, இயற்கையாகவே நிலையற்ற ஒன்றை நிலைப்படுத்த முயலாதீர்கள். நீங்கள் விட்டு வைக்கக் கூடிய ஒவ்வோர் இறக்கைக்கும் ஓராயிரம் வீதம் கொடுத்து உங்களை உயர உயரப் பறக்க வைக்கக் கூடிய ஆற்றல் படைத்த அந்த இறக்கைகளை இறுக்கிப் பிணைத்து வைக்கவும் முயலாதீர்கள். நீங்கள் நலமாக இருப்பீர்களாக!

நிக்கோலோ மாக்கியவெல்லி.
கடிதம் : 4
ஐம்பது வயதிலும் ஆசை


பிரான்சிஸ்கோ வெட்டோரி அவர்களுக்கு,
பிளாரென்ஸ், ஆகஸ்டு, 3.1514,

என் அன்பு நண்பரே,

ரோமாபுரியில் நடந்த உங்கள் காதல் விவகாரங்களைப் பற்றி நீங்கள் எழுதிய பல விஷயங்களும் என்னை இன்பத்தில் ஆழ்த்தின. உங்கள் உல்லாச வாழ்க்கையைப் பற்றியும், துயரங்களைப்பற்றியும் படித்து நினைத்துப் பார்த்தபோது என் இதயத்திலிருந்து துன்பத்தின் ஒரு கோடி கூடத் தூக்கியெறியப் படவில்லை. உங்களுக்குச் சரிக்குச் சரி சொல்லிக் காட்டும் நிலையில் இருப்பது என் அதிர்ஷ்டமே. நான் நாட்டுப்புறத்தில் இருக்கும் பொழுது, இயற்கையாகவும், இயற்கையின் மேல் அலங்காரமாகவும் மிகுந்த அழகும், மிகுந்த கவர்ச்சியும், மிகுந்த மென்மையும், இனிமையும் பொருந்திய ஒருத்தியைக் கண்டேன். நான் மிகுதியாக அவளைப் புகழ்ந்துரைக்கவோ, அதற்குமேல் அதிகமாகக் காதலிக்கவோ முடியாத அளவு அவ்வளவு பேரெழில் படைத்தவளாக அவள் இருந்தாள்.

நீங்கள் எனக்குச் சொன்னது போலவே, அதெல்லாம் எப்படி ஆரம்பமாகியது. எந்த வலையால் காதல் என்னைப் பிடித்துக்கொண்டது. எங்கு அதனை விரித்தது. அதன் பின்னல் எப்படிப்பட்டது என்றெல்லாம் நானும் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன். காதல் தேவதையினால் மலர்களினிடையிலே மிக இனிமையாகவும். அருளுடனும், நெய்யப்பட்ட அந்தத் தங்க வலையிலிருந்து, சாதாரணமாக எவனும் கிழித்து எரிந்து தப்பிக்கொள்ள முடியுமாயினும், நான் அதிலிருந்து வெளியேற மனமின்றிக் கிடந்தேன். அந்த மென்மையான கண்ணிகள் பலமாக முடியப் பட்டு பெருங்கட்டுக்களாக மாறும் வரையில் நான் அவற்றின் அரவணைப்பிலே சிக்கிக் கிடந்தேன். இவ்வாறு என்னைப் பிடித்த காதல் சாதாரணமாகவே என்னிடம் தன் நடவடிக்கைகளைக் காட்டியது என்று எண்ணிவிடவேண்டாம். நான் தவிர்த்துக்கொள்ள மாட்டாத அல்லது விரும்பாத மாதிரியான தந்திரோபாயங்களை அது கையாண்டது. ஒரே வார்த்தையில் சொன்னால், ஐம்பது வயதான ஒரு முதிர்ந்த மனிதனாகிய என்னை, இந்தக் கண் கூசும்படியான பிரகாசமுடைய சூரியர்களால் குருடாக்கி விட முடியவில்லை; இந்த முரட்டுத்தனமான போக்கு என்னை அலுப்படையச் செய்ய முடியவில்லை; இந்த இருண்ட இரவுகளால் என்னைப் பயமுறுத்த முடியவில்லை . ஒவ்வொன்றும் எனக்கு எளிதாகத் தோன்றுகிறது. அவளுடைய ஒவ்வொரு விருப்பத்திற்கும் சாதாரணமாக என் விருப்பத்தினின்றும் வேறுபட்டதாகவோ அல்லது என் விருப்பத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாகவோ இருந்தாலும் கூட நான் அவற்றிற்கு இசைவாக நடந்துகொள்கிறேன். நான் மிகவும் தகுதியான பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதை உணர்கிறேன். ஆனால், நான் அதற்காக நிச்சயமாக மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில், இந்த அபூர்வமான, மனங்கவரும் அழகு என் மனக்கவலைகளையெல்லாம் அகற்றிவிடுகிறது. நான் உலகத்தில் உள்ள எதற்காகவும் அதைப் பிரியமாட்டேன்.

ஆகவே, நான் மிக முக்கியமான பெரிய விஷயங்களைப் பற்றிய கவலைகளையெல்லாம் விட்டு விட்டேன். முன்னைப் பழங்கதைகளைப் படிப்பதையும் பின்னைப் புதுமைகளைப் பற்றி ஆராய்வதையும் விட்டு விட்டேன். காதல் இன்பத்தையே நான் நாடுகிறேன். காதல் தேவதையையும் அவளுடைய தேவதைக் கூட்டமனைத்தையும் நான் போற்றுகின்றேன். உங்கள் காதலியைப் பற்றி நீங்கள் எதுவும் தெரிவிக்கவேண்டுமென்றால் என்னிடம் தெரிவியுங்கள். மற்ற விஷயங்களை, என்னைக் காட்டிலும் அவற்றைப் புரிந்து ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களைப் பார்த்துத் தெரிவியுங்கள்.

முக்கியமான விஷயங்கள் வேதனையைத் தவிர வேறு எதையும் எனக்களித்ததில்லை. அற்பவிஷயங்களோ ஆனந்தத்தையும் இன்பத்தையுமே அளிக்கின்றன.

தங்கள் பணியாள் நிக்கோலோ மாக்கியவெல்லி
கடிதம் : 5
கூடுமானவரை குறைத்துச் செலவழி:
நிக்கோலோ மாக்கியவெல்லியின் மகன் கெய்டோவுக்கு,
இமோலா, ஏப்ரல் 2,1527.

கெய்டோ, என் அன்புள்ள மகனே,

உன் கடிதம் கிடைத்தது. எனக்கு அது பெருங்களிப்பை உண்டாக்கியது. ஏனெனில் நீ மீண்டும் உடல் நலம் பெற்று விட்டாய் என்ற விசேஷச் செய்தியை அது எனக்குத் தெரிவித்தது. வேறு எந்தச் செய்தியும் மேலும் என்னை மகிழ்ச்சியடையச் செய்தது. ஆண்டவன் உயிர் கொடுத்து . அருள் புரிந்தால், எனக்குக்கூட அருள் புரிந்தால், தான் உன்னைக் கொண்டு, சிறப்பாக, உன்னால் முடிந்ததையெல்லாம் நீ செய்து முடித்தால், ஏதாவது பயனடையலாம் என்று நம்புகிறேன். நீண்ட நாட்களாக என்னோடு நண்பர்களாக இருந்த முக்கியமான மனிதர்களோடு இப்போது நான் கார்டினல் சையோ அவர்களுடன் மிக உயர்ந்த நட்புக்கொண்டிருக்கிறேன். உண்மையில் இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையே கொடுக்கிறது. இந்தத் தொடர்பு உன்னை நன்னிலைக்குக் கொண்டு வரும். ஆனால், தானாகவே படித்துக்கொள்ள வேண்டியதுதான். நீ தவறு செய்து விட்டுச் சாக்குப் போக்குக் கூற இனி முடியாதாகையால், கடினமாக உழைத்து, இலக்கியத்தையும் சங்கீதத்தையும் நன்றாகப் படித்துக்கொள். எனக்குக் கிடைக்கும் மதிப்பு முழுவதும் என்னிடமுள்ள சிறு திறமையின் காரணமாகவே வருகிறதென்பதையறிந்து கொள். ஆகவே, என் அன்பு மகனே, நீ என்னை இன்பமடையச் செய்யவேண்டுமானால், எதிலும், வெற்றிகரமாக முன்னேறு. உன்னை நீயே நம்பு. கடுமையாகப் படி. யோக்கியமாக நட. கல்வியில் கவனம் செலுத்து. உனக்கு நீயே உதவி செய்து கொண்டால் ஒவ்வொருவரும் உனக்கு உதவி செய்வார்கள். சின்னக் கோவேறு கழுதைக்குப் பைத்தியம் என்று எழுதியிருந்தாய். நல்லது. சாதாரணப் பைத்தியங்களை நடத்துகிறதற்கு மாறாக இதை நடத்தவேண்டும். பைத்தியம் பிடித்தவர்களை நீ கட்டித்தானே வைப்பாய். இந்தச் சின்ன கோவேறு கழுதையை அவிழ்த்து விட்டு விடவேண்டும். ஆகவே, வெஞ்சிவோவிடம் அதைக்கொடுத்து, மோண்டிப் மாக் - 10 புகலியானோவுக்கு அதைக் கொண்டுபோய் அங்கே அதன் கடிவாளத்தையும் கழுத்துக்கட்டையும் அவிழ்த்து விட்டுவிடச்சொல். அது தனக்குப் பிரியமான இடத்தில், தன் வயிற்றுக்கு வேண்டியதைச் சாப்பிட்டுச் சுற்றித்திரிந்து பைத்தியம் மாறட்டும். அங்கே பெரிய வயல் வெளிகள் இருக்கின்றன. அதுவோ சின்னஞ்சிறு கோவேறு கழுதைதான். அதனால் யாருக்கும் கேடுவந்து விடப் போவதில்லை. அதைப்பற்றி நாம் கவலைப்படாமல், அது எப்படித் திரிகிறது என்று கவனித்து வரலாம். அதனுடைய மனம் சரிப்பட்டு விட்டால் அதன் பிறகு மீண்டும் அதைப் பிடிக்க முயலலாம்.

மற்ற குதிரைகளை லோபோலிகிசோ சொல்கிறபடி செய். அவன் மறுபடி நலமாக இருப்பதையும், குதிரைகளை விற்று விட்டதையும் அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். அவற்றால் நமக்குச் செலவே ஏற்பட்டு வந்தபடியால் அவன் செய்தது சரியென்றே நினைக்கிறேன். ஆனால், அவன் எனக்கு எழுதிக் கேட்காமல் செய்தது தான் எனக்குக் கோபத்தையும் ஆத்திரத்தையும் உண்டாக்குகிறது.

உன் தாய் மாரியாட்டாவுக்கு என் அன்பைத் தெரிவி. நாளுக்கு நாள் நான் இங்கிருந்து புறப்பட வேண்டிய நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறேன், என்பதையும் அவளுக்குச் சொல். பிளாரென்சுக்குத் திரும்பி வர வேண்டும் என்று இப்பொழுது நான் கொண்டிருக்கும் ஆவலைப்போல் எப்போதும் நான் ஆசைப்பட்டதில்லை. துரதிர்ஷ்டவசமாக நான் இது குறித்து எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். அவள் என்ன கேள்விப்பட்டாலும் நல்ல சந்தோஷத்தோடு இருக்க வேண்டும் என்று அவளுக்குச் சொல். எதுவும் மோசமாக நடப்பதற்கு முன்னால் நான் வீட்டுக்கு வந்து விடுவேன்.

பாக்சினாவுக்கும். பியாரோவுக்கும், டாட்டோ இன்னும் அங்கிருந்தால் அவனுக்கும் எல்லோருக்கும் முத்தம். அவன் கண்கள் எப்படியிருக்கின்றன என்று தெரிவிப்பாய் என்று எண்ணுகிறேன். எல்லோரும் . நீங்கள் எல்லோரும் சந்தோஷமாயிருங்கள். கூடுமான வரை குறைத்துச் செலவழியுங்கள். பெர்னாடோவை கவனமாக நடந்து கொள்ளச் சொல். இரண்டு வாரமாக இரண்டு முறை அவனுக்கு எழுதிவிட்டேன். பதிலேயில்லை. ஆண்டவர் உங்கள் அனைவரையும் காப்பாற்றி அருள் புரிவாராக!

நிக்கோலோ மாக்கியவெல்லி.