சிந்தனை துளிகள்/1001-1100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

1001. “ஒற்றுமை நல்லதுதான்! ஆனால், எதற்காக ஒற்றுமை? அடுத்த சமூகத்தின் மீது தாக்குதல் செய்ய ஒற்றுமை உருவானால் நன்றன்று. நாடு, ஊர் அளவில் ஒற்றுமை உருவாதலில் ஒரளவு நன்மை உண்டு.”

1002. “துன்பங்களைத் தவிர்த்துக் கொள்ளாதவன் அறிவில்லாதவன்.”

1003. “பாரதம்” தொடர்கிறது ஒத்திவைப்பதில்.”

1004. “கையூட்டுகள் கொடுத்து காரியம் சாதிக்கும் வசதியுள்ளவர்கள் உள்ளவரையில், பூட்டினை ஒழிக்க முடியாது.”

1005. “அரசு அலுவலகங்கள் சுறுசுறுப்பாக இயங்கினால் கையூட்டைத் தவிர்க்கலாம்.”

1006. “தேர்தலில் பணம் விளையாடுவதைத் தவிர்த்தாலே, நாடு வாழும்.”

1007. “அரசியல்வாதிகள் வாங்கும் இலஞ்சமே, நாட்டில் இலஞ்சத்தை வளர்க்கிறது.”

1008. “விலைவாசி ஏற்றம் அரசின் செயலின்மையைக் காட்டுகிறது.”

1009. “அன்று இராவணன் சீதையைத் தூக்கியது போல், சட்ட மன்ற உறுப்பினர்கள் தூக்கப்படுகிறார்கள்.” இல்லை, இராவணன் தூக்கிய சீதை பதிவிரதை, “சட்டமன்ற உறுப்பினர்கள் அப்படியல்லவே!”

1010. “மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அரசு இயந்திரத்தை பலவீனப்படுத்தக் கூடாது; அரசு அலுவலர்கள் மதிக்கப்படுதல் வேண்டும்.”

1011. “இன்று இந்தியாவில் 90% பேருக்கு வாழ்தல் குறிக்கோள் அல்ல. பிழைப்பு நடத்தவே விரும்புகின்றனர்.”

1012. “தடைகளைக் கடந்தும் தொழில் செய்யும் உணர்வு நிறைந்த உழைப்புக்குப் பெயர் முயற்சி.”

1013. “இன்றைய நாட்டில் அரசுக்கு உந்துசக்தியாக விளங்குபவர்கள் வியாபாரிகளே! அதனால் விலை ஏறுகிறது.”

1014. “வாழ்நாள் முழுதும் படித்தல் வேண்டும், இடையீடின்றிப் படித்தல் வேண்டும்.”

1015. “பொறுப்பை ஏற்கத் தயங்குகிறவர்கள் யாதொரு பணிக்கும் பயன்படமாட்டார்கள்.”

1016. “ஒழுங்கமைவு பெற்ற வாழ்க்கை வெற்றி.”

1017. “சமூக நலனுக்காகத் தன்னை அழித்துக் கொள்கிறவர்கள் பாக்கியவான்கள்.”

1018. “கசப்புணர்ச்சியும் காழ்ப்புணர்ச்சியும் இல்லாத சமுதாயம் காணும் முயற்சி தேவை.

1019. “விலை போகிறவர்கள் உள்ள வரை துரோகம் ஒரு தொடர்கதை.”

1020. “கெட்டிக்காரத் தனத்தில் நூறு காரியம் செய்வதைவிட ஒரு நல்ல காரியம் இயல்பாகச் செய்வது பெருமைக்குரியது.”

1021. “தமிழின வரலாற்றில் இன ஒருமைப் பாட்டுக்காக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா ஒருவர் தான்.”

1022. மற்றவர்களைப் புகழும்பொழுது தன்னையும் இணைத்துக் கொள்பவர்கள், மற்றவர்கள் புகழ வாழ இயலாது.

1023. “ஒரு தலைவனுக்குச் சிறந்த நினைவு அவர்தம் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதுதான்.”

1024. “நோய் இயற்கையன்று; செயற்கையே.”

1025. “தீய எண்ணங்கள் காலப்போக்கில் உடலின் செங்குருதியையே நச்சுத் தன்மை அடையச் செய்துவிடுகிறது.”

1026. “அன்பினால் நிறைந்த இதயம் உள்ளவர்கள், சிரித்து மகிழ்ந்து வாழ்வார்கள்."

1027. “கடவுளை நம்பாமையே ஒரு பாவமன்று. மற்றவர்களைப் பற்றி கவலைப்படாத ஆசைகளே பாவத்தின் பாற்பட்டவையாகும்.”

1028. “மலருக்குக் கேடு செய்யாமல், தேனி தேனை எடுக்கிறது. அதுபோலச் செல்வத்தை ஈட்டதல் வேண்டும்.”

1029. “மதம், தொழிலாகவும் பிழைப்பாகவும் மாறியதன் விளைவு நாஸ்திகம்.”

1030. “நாள்தோறும் வாழ்பவர்கள் எளிதில் முதுமையடைவதில்லை. பலர் நேற்று மட்டுமே வாழ்ந்தவர்கள்.”

1031. “நல்ல சுற்றம் அமைதல், புகழ் மிக்க வாழ்வுக்கு அடிப்படை.”

1032. “ஒராயிரம் ஆண்டுகளுக்கு கூடத் தமிழ் மரபுகள் பேணமுடியாத அளவுக்குப் பலவீனப் படுகின்றோம்.”

1033. “சங்கரமடம், சமுதாய அளவில் மேவி வருவது, தமிழ் மரபு வளர்ச்சிக்குத் துணை செய்யாது.”

1034. “கீதையும் திருக்குறளும் நமது மறை என்று கூறுவது பேதைமை.”

1035. “மக்கள், இலக்கியம், கலை, இசைஇவற்றை அனுபவிக்கக் கற்றுக் கொண்டால் நல்லவர்கள் ஆகிவிடுவார்கள்.”

1036. “குடும்ப நலத் திட்டத்திற்கு செலவழிக்கும் தொகையை, கலை வளர்ச்சிக்குச் செலவழித்தால் நல்ல குடும்பம் இயல்பாகவே அமையும்.

1037. “வைதீக பார்ப்பனிய சமயத்தினர் தம் கொள்கைக்கு மாறாகிய தேவாரங்களை மூடி மறைத்து விட்டனர்.”

1038. “இராசராசன் திருமுறைகளை மீட்டதின் மூலம் தமிழ் நாகரிகத்தையே மீட்டுக் காத்தான்.”

1039. “தாஜ்மகால், காதலி நினைவில் தோன்றியது. தஞ்சைப் பெரிய கோவில் மாதேவன் நினைவில் தோன்றியது.”

1040. “செய்திப் பரிமாற்றங்கள் அறிவை வளர்க்கும், நல்லெண்ணத்தைத் தோற்றுவிக்கும்; இழப்புக்கள் வராது தடுத்துவிடும்.”

1041. “திட்டமிடுதல் என்பது காலம், பொருள், ஆற்றலை முறைப்படுத்தி வீணாகாமல் தவிர்க்கவே.”

1042. “முன்னே புகழவேண்டும் என்று விரும்புகிறவர்கள், உண்மையில் புகழுக்குரியவர்கள் அல்லர்.”

1043. “செல்வத்தைத் தொடர்ச்சியாக ஈட்டும் பாங்கில் நிர்வகிப்பதே நல்ல நிதி நிர்வாகம்.”

1044. “துழ்நிலைகூடத் தற்சார்பைத் தோற்று விக்கும். சூழ்நிலையைச் சார்ந்த தற்சார்பு தவிர்க்க இயலாதது.”

1045. “மற்றவர்களுடைய பலவீனம், தனது பலம் என்று நினைப்பது தவறு.”

1046. “தமிழரசர்கள் ஆட்சியமைப்பை வலிமைப்படுத்த, கடவுள் நம்பிக்கையை மக்களிடையே பரப்பினார்கள்.”

1047. “நுகரும் பொருள்களாக, ஊதியம் வழங்கப்பெற்றால் உற்பத்திப் பெருகும்; பணவீக்கமும் குறையும்.”

1048. “செல்வம், செல்வாக்கு இரண்டும் ஏராளமான நண்பர்களைக் கூட்டித் தரும். இதனால் பயனில்லை. துன்பத்தில் துணையாய் அமைவோரே நண்பர்கள்.”

1049. “பொறுப்புடன் பணியினை ஏற்காதவரிடம் பணிகளை ஒப்படைப்பது தற்கொலைக்குச் சமம்.”

1050. “பிறர் முயன்று பெற்ற படிப்பினையின் வழி, பாடம் கற்றுக் கொள்பவர் எண்ணிக்கையே மிகுதி.”

1051. “பொருளாதார ஏழ்மைக்குக்குத் தாய் உழைப்பின்மையே!”

1052. “நல்வாழ்க்கையின் தேவைகளைக்கூடத் திட்டமிட்டு அடைய முயற்சிப்பார் இல்லை.”

1053. “எல்லாருக்கும் சொந்த வீடு கட்டிக் கொள்ள ஆசையிருக்கிறது. ஆனால் பொருள் ஈட்டும் ஆர்வமில்லை!”

1054. “கடந்த காலம் கடந்ததே. கவலைப்பட்டு பயன் இல்லை. இனிவரும் எதிர்காலம் நமது கையில் இல்லை. அதைப் பற்றிக் கவலைப்படுவது பொருளற்றது. ஆதலால் நமது வசத்தில் இருக்கிற நிகழ்காலத்தைப் பற்றிக் கவலைப்படுக.”

1055. “மக்களுக்குப் பொருளின்மேல் ஆசையிருக்கிறது. ஆனால், உழைப்பின் மேல் ஆசை இல்லை.”

1056. “எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது.”

1057. “சமூக மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்பவர்கள் தீவிர கட்சி சார்புகளை மேற்கொள்ளுதல் கூடாது.”

1058. “தலைவர் காமராசர் அவர்கள் தோற்ற 1967க்குப் பிறகே நாம் அரசியல் கட்சிப் பணிகளில் ஈடுபடவில்லை. பாராட்டுதலுக்குரிய டாக்டர் கலைஞர் நம்மை மேல்சபை உறுப்பினராக நியமனம் செய்வதில் ஆர்வம் காட்டி உதவியபோது கூட, அரசியல் பணிக்கு அழைத்தாரே தவிர, கட்சி அரசியலுக்கு ஈடுபடுத்த விரும்பவில்லை.”

1059. “குறிக்கோள் வழிப்பட்ட செயற்பாடுகள் ஆழப்படும்பொழுது அகலம் குறைகிறது. இது விருப்பு, வெறுப்பின் பாற்பட்டதல்ல. இதுவே இன்றைய நமது நிலை.”

1060. “புதியன காணும் ஆர்வமே வளர்ச்சிக்கு வித்து.”

1061. “தன்னைச் சேர்ந்தாரைத் திருத்த இயலாமல் மற்றவர்கள் மீது சினமுறுதல் தவறு. செயலாண்மையற்ற நிலை.”

1062. “மக்களை வளர்ச்சிக்கு ஆயத்தப்படுத்துதல் முதற்பணி.”

1063. “மக்களின் அறியாமையை எதிர் நோக்கில் திருத்துதல் இயலாது. அவர்கள் மகிழும் உணவு, உடை, முதலியன வழங்கிடும் உடன்பாட்டுப் பணிகள் மூலம்தான் இயலும்.”

1064. “தன்னை ஒழுங்குப்படுத்திக் கொள்வதில் வெற்றியின் இரகசியம் பொதிந்துள்ளது.”

த-8

1065. “ஆரவாரமாக பேசுவது” - சுறுசுறுப்பான வாழ்க்கை என்று கருதுவது தவறு. செயற்பாட்டில் தான், சோம்பலின்மையைக் காண இயலும்.”

1066. “ஒன்றை, கொள்கையென விவாதத்திற்கு வைப்பதே தவறு என்றால், கருத்து வளர்ச்சி ஏற்படாது.”

1067. “குறுகிய வட்டத்திற்குள் வாழ்பவர்கள் நல்லவர்களாதல் அரிது.”

1068. “தான் கொண்ட முடிவுகளையே வற்புறுத்த நினைப்பவர்களின் செவிப் புலன் வேலை செய்யாது.”

1069. “கூட்டு வாழ்க்கை சிறப்புற, மற்றவர் சொல்லுவதைத் தடையின்றிக் கேட்க வேண்டும் என்ற நோக்கிலேயே தடையிலாச் செவிகள் அமைந்துள்ளன.”

1070. “சில கூறுதலும் பல கேட்டலும் வாழ்க்கைக்கு நல்லது.

1071. “பொதுவாக மானுடச் சாதியின் அறிவார்ந்த பொறிகள் புலன்கள் அறிவார்ந்த நிலையில் இயங்காமல் நுகர்வு நிலையிலேயே இயங்குகின்றன.”

1072. “சிந்தித்தல், ஆய்வு செய்தல், கூறுதல் முதலியன விரைந்து நிகழவேண்டும் என்பதனாலேயே உடலமைப்பில் அறிவுப் பொறிகள். நீண்ட இடைவெளி இவைகளுக்கிடையில் இல்லை.”

1073. “வயிறும் பாலுறுப்புக்களும் இயங்கும் அளவுக்கு மூளை இயக்கம் பெறாதது மனித குலத்தின் குறையே."

1074. “தட்ப வெட்ப நிலைகள் உடல் நலமுடை யோருக்குத் தீங்கு செய்வதில்லை.”

1075. “பிரிவினைகளும் வேற்றுமைகளும் உள்ள வரையில், மனிதகுலம் அமைதியாக வாழஇயலாது.”

1076. “குறுகிய பாதைகள் பயணத்திற்கு ஏற்புடையன ஆகா! அதுபோலக் குறுகிய நோக்கங்கள் வாழ்க்கைப் பயணத்திற்குப் பயன்தரா.”

1077. “உரிமையியல் சட்டம் அனைவருக்கும் ஒன்றாதல் நல்லது.”

1078. “இந்து சமுதாயத்தில் நிலவும் பிரிவினைகள் வழி, சிலர் ஆக்கம் அடைகின்றனர். அதனால், ஒன்று படுத்தும் பணி எளிதன்று.”

1079. “நமது சமுதாயக் கட்டமைப்பில் அஸ்திவாரம் சந்தேகம்.”

1080. “மகளிர், தங்களுடைய வாழ்க்கையில் பெறற்கரியது உரிமை என்று கருதிவிட்டால் விடுதலை கிடைத்துவிடும்.”

1081. “கல்வித் திறனும் பொறுப்பும் உடைய மாணவர்கள் பள்ளிக்கு வராமலே கற்றுக் கொண்டு விடுவர்.”

1082. “சுற்றுப்புறச் சூழ்நிலை சரியில்லை என்று கூறுகிறவர்கள் பேராட்ட உணர்வில்லாமல் பிழைப்பு நடத்துபவர்கள்.”

1083. “எதற்கும் சமாதானம் சொல்லமுடியும். ஆனால், ஏற்றுக்கொள்ள இயலாது.”

1084. “இன்றைய ஆசிரியர்களைப்போல மூளைச் சோம்பேறிகள் என்றும் இருந்ததில்லை,”

1085. “ஒரு செயலைக் கடமை உணர்வுடன் செய்தால் அது அழகாகவும் பயன்தரத் தக்கதாகவும் அமையும்.”

1086. “எளிதில் செல்வம் கிடைத்தால் உயிர் வளராது; தகுதி: பெறாது.”

1087. “துன்பம் நிறைந்த செயற்பாடுகளே பயனும் பண்பாடும் நிறைந்த வாழ்க்கைக்கு அடிப்படை.”

1088. “முழுக் கவனத்துடன் செய்யப் பெறாத பணிகள் உரிய மகிழ்வைத் தருவதில்லை.”

1089. “ஒவ்வொருவரும் அவரவர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொண்டால் முன்னேறலாம்.”

1090. “தேடும் பழக்கம் அறிவை வளர்க்கும். ஆள்வினை ஆற்றலைத் தரும்.”

1091. “செல்வத்தைச் செலவுக்காக என்று தேடுதல் கூடாது. இருப்புக்கு என்று தேடுதல் வேண்டும்.”

1092. “கெட்ட மனிதர்கள் எரிமலை போல உள் புகைந்து கொண்டே இருப்பர்.”

1093. “உடல், உயிர், அறிவு மூன்றும் சமநிலையில் வளர்ந்தாலே மனிதகுலம் மேம்பாடு அடைய முடியும்.”

1094. “உலகில் வறுமைக்கு காரணம் உழைப்பின்மையும் உழைப்புக்கு உரிய பாங்கின்மையுமே யாகும்.”

1095. “உத்தரவாதமுள்ள வாழ்க்கையிலேயே காதல் சிறக்கும்.”

1996. “மற்றவர்களிடம் பொறுப்புக் கொடுப்பது எளிது. ஆனால் பொறுப்பு ஏற்பதே முறை.”

1097. “சாம்பிராணிப் புகையை நுகர்ந்தால் கேடு: புகையின் மனத்தை மட்டும் நுகர்ந்தால் நலம்.”

1098. “பகுத்தறிவு, பேச்சுப் பொருள் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை.”

1099. “எப்போதும் உழைப்புக்குரிய ஆயத்த நிலையில் இருப்பதே-விழித்திருத்தல்.”

1100. “பல நாள் உழாத நிலம் பாறையாகிறது. பலநாள் அறிவால் உழப்படாத மனிதர் புலன்கள் கல்லாகிவிடுகின்றன.”

"https://ta.wikisource.org/w/index.php?title=சிந்தனை_துளிகள்/1001-1100&oldid=1055651" இருந்து மீள்விக்கப்பட்டது