உள்ளடக்கத்துக்குச் செல்

சிந்தனை துளிகள்/901-1000

விக்கிமூலம் இலிருந்து

901. “இன்றைய தேர்தல் முறையில்-புத்தரால் கூட லஞ்சம் வாங்காமல் இருக்கமுடியாது.”

902. “எந்த ஒரு தீமையும் - மருந்தெனத் தொடங்கிப் பழக்கமாகிவிட்டனவே யாம்.”

903. “வெளிப்படையாக நமது உறவைச் சொல்லிக் கொள்ள வெட்கப்படுபவர்கள் சுய லாபத்துக்காக மட்டுமே உறவு காட்டுகிறார்கள்.”

904. “ஆசிரியர், மாணாக்கரை அறிவால் வளர்க்கும் கடமை உடையவர்.”

905. “சூழ்நிலைகள் மீது பழி போடுகிறவர்கள் செயலற்றவர்கள்.”

906. “சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடுவதே வாழ்க்கையின் வளர்ச்சிக்கு உத்தி.”

907. “பலன் எதிர்பார்க்காமல் செய்யும் பணியே பணியாகும்.”

908. “மூன்றுகால் ஒட்டம் என்று ஒன்று உண்டு. உடன்பாடில்லாதவரை அனைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துவது போன்றது.”

909. “வாழ்க்கையில் தடைகள் ஏற்படுவது வளர்க்கும் அருளிப்பாடேயாம்.”

910. “படித்தவர்களே சமூகநிகழ்விற்குப் பொறுப் பேற்கிறார்கள். இன்றைய சமூக நிகழ்வு நன்றாக இல்லை. ஆதலால், ஆசிரியர்கள் தம் பணியைச் சிறப்பாகச் செய்யவில்லை.”

911. “ஆங்கிலம் உலகப் பொதுமொழி என்பது உண்மையல்ல.”

912. “கடவுள் நம்பிக்கை, வாழ்க்கைக்குத் துணை செய்யாத பொழுது நாஸ்திகம் தோன்றுகிறது.”

913. “நாஸ்திகம் கடவுள் இல்லை என்பதில்லை. ஆரிய மத நூல்களை ஆராய்ந்தவர்களுக்குக் கிடைத்த பட்டம்.”

914. “மாணவர்களிடத்தில் தாயினும் இனிய பாசம் இல்லாதவர்கள் ஆசிரியப் பணியில் வெற்றி பெற இயலாது.”

915. “நல்ல நூல்களை கற்பது அவசியம்.”

916. “கீதை, வர்ண வேற்றுமைகளைக் காப்பாற்றும் நூல்.”

917. “பாரதம் ஆதிபத்திய சண்டையை விவரிக்கும் நூல்.”

918. “எரியாத வேள்வித் தீயை முயன்று எரிய வைத்து மனநிறைவு கொள்வது போல, சமுதாய சீர்திருத்தத்திலும் முயற்சி தேவை.”

919. “சடங்குகளால் எளிதில் மக்கள் கூடுகிறார்கள்.”

920. “காலந் தாழ்த்தி வருவது கெளரவம் என்றான பிறகு நாடு உருப்படாது.”

921. “இறையருளால் கூட்டுவிக்கும் மனம். ஆதலால் திருமணம்.”

922. “மாயா வாத, பெளத்த, சமணக் கலப்பிற்குப் பிறகே தமிழர் வாழ்க்கையில் வாழ்க்கையைப் பற்றிய இழிவு உணர்வு தோன்றியது.”

923. “தந்தை-தாயார் கொண்டாடுவது பிறந்த நாள். மனைவி கொண்டாடுவது திருமண நாள். சமுதாயம் கொண்டாடுவது பயன் கண்ட நாள் அல்லது பொதுவாக இறந்த நாள்.”

924. “அரசியல்வாதிகள் சுற்றுலா வராத கிராமங்களில் வேலை செய்வது எளிது.”

925. “அண்ணா கையில் புதிய அ.தி.மு.க. கொடி. எத்தனை கொடிகளைத்தான் அவர் பிடிப்பார்!”

926. “பயிற்சியில் வளர்வது பண்பாடு.”

927. “பெண்களால் ஒருமைப்பாட்டை வளர்க்க முடியும்.”

928. “ஆணுக்கு அன்புடைய மாமனும் மாமியும் வாய்த்து விடுகிறார்கள்! பெண்ணுக்கு அப்படி வாய்ப்பதில்லை.”

929. “காதல் மலர்வதற்குரிய வாயில்கள் இன்று இல்லை.”

930. “ஒரு நிலைப்பட்டு ஒருவருக்குத் துணையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழ்வது கற்புநிலை.

931. “சென்னை நகரத்தில் மட்டும் 119000 ஏழைகள் வாழ்கிறார்கள்”.

932. “அழிவு - கழிவு உலகத்தியற்கையன்று. எதையும் படைப்பாற்றல் உடையதாக்கலாம்.”

933. “நம்மைச் சுற்றியுள்ள உற்பத்தி சாதனங்களை முழுமையாகப் பயன்படுத்தும் பாங்கு வந்து விட்டாலே வளம் கொழிக்கும்.”

934. “அகத்தின் வறுமையே புறத்து வறுமையைப் படைக்கின்றது.”

935. “தேர்தலில் வெற்றி பெறுவதையே நோக்கமாக உடைய அரசியல்வாதிகள் நாட்டை உயர்த்த மாட்டார்கள்,”

936. “சலுகைகள் சமுதாயத்தை வளர்க்கும் சக்தியாகா.”

937. “தமிழினம், என்றும் ஒருமைப்பட்டல்லை.”

938. “உடன்பிறப்பு, இரத்தத்தின் இரத்தம் ஆகிய சொற்களை நிகழ்வுகள் பொருளற்றதாக்கி விட்டன.”

939. “ஒழுங்குகள் நலம் பயப்பனவேயன்றித் துன்பம் தருவன அல்ல.”

940. “விதி விலக்குகள் வினை விளைக்கலன்களேயாம்.”

941. “பிறர் வருந்த வாழ்தல் அறமாகாது.”

942. “கீழான மனிதர்களைக்கூட அங்கீகாரம் அளிப்பதன் மூலம் திருத்தலாம்.”

943. “படித்தவர்களின் பண்பாட்டால் பார் முழுவதும் திருந்திவிடும்.”

944. “மனிதனுக்கு இயற்கை வழங்கிய முதல் மூலப்பொருள் காலமேயாம். முதல் உற்பத்திக் கருவி உடலேயாம்.”

945. “இன்று தீய பழக்கங்கள் மூச்சுக் காற்றாகி விட்டன.”

946. “செயல்கள் பயன்தரா. செயல்களுக்குரிய நோக்கங்களே பயன்தரும்.”

947. “உணர்ச்சிகள் நீரிற்குமிழி; உணர்வுகள் அலைகள்; ஆர்வம் ஊற்று.”

948. “மனிதனின் முதல் நண்பன் சுறுசுறுப்பே.”

949. “ஒன்றுமே செய்யாதவனை விட, பயனற்ற வைகளைச் செய்பவன் பரவாயில்லை.”

950. “சமூகத்திடம் போகாதே; போனபிறகு தயங்காதே”

951. “உன்னிடம் மற்றவர்களைப் பற்றி குறை கூறுகிறவர்களிடம் விழிப்பாயிரு. இடம் கொடுக்காதே.”

952. “செல்வத்தைச் செலவழித்த வகையும், அளவும், உடனுக்குடன் பார்ப்பது வீண் செலவைத் தவிர்க்கவும், செல்வத்தைச் சேர்க்கவும், துணை செய்யும்.”

953. “பொருளுற்பத்திக் குணம் வளர்ந்தாலே வையகம் வளரும்; வாழும்.”

954. “உடல் தேவையை ஈடு செய்யும் வாயும் வயிறும் உலகமெங்கும் ஒரே நிலையினவாக அமைந்திருப்பதே சோசலிச சமுதாய அமைப்பின் நியாயத்தினை வலியுறுத்துகிறது.”

955. “உழைப்பில் பாதியே நுகர்தற்கு உரியது என்பதால் இரண்டு கை; ஒரு வயிறு.”

956. “பொறுப்பை உணர்த்துகிறவர்கள் பொதியைச் சுமப்பார்கள்.”

957. “தனிமனிதர்களுக்கிடையில் உருவாகும் பகைமையில் கூட ஒருவர் ஒருவரை அழிக்க வாய்ப்பில்லாமல் தடுப்பதே அரசு.”

958. “இருபதாம் நூற்றாண்டில் நெருக்கடிகளை அரசின் துணை கொண்டு மாயாவாதம் தமிழ் நெறியை முறியடிக்கிறது.”

959. “அவரவர் நலனில் உள்ள அக்கறை அளவுக்கு, அவரவர் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் பொது நலனில் அக்கரை ஏற்பட்டால் உலகு செழிக்கும்.”

960. “மரத்திலிருந்து கொய்து எடுக்கக்கூடாது, கனி. கொய்யக்கனி'யாயிற்று.”

961. “ஒவ்வொருவரும் தனித்தனியே அவர்கள் வழங்கும் அன்பை அறியவேண்டும் என்று ஆர்வம் காட்டுகின்றனர். காலம், ஒத்துழைப்பதில்லை.”

962. “எதிர்ப்பு நல்லது; எதிரி நல்லதன்று.”

963. “தீமை செய்ய வலிமை அவசியமில்லை. சின்னச் சின்னப் பூச்சிகள் கூட நோயை பெருக்கு கின்றன.”

964. “உடல் வருந்த உழைத்தாலே, நோய், அணுகாது.”

965. “ஆங்கில வைத்திய முறையில் பத்தியம். இல்லை. பத்தியமில்லா வைத்தியம் நோயைத் தணிக்கலாம். நோயின் காரணங்கள் நீங்கா.”

966. “ஏழைகளுக்குத் துன்பம் பழகிப் போனதால் முன்னேற்றத்தைப் பற்றிக் கவலைப்பட மறுக்கிறார்கள்.”

967. “பணம் சம்பாதிப்பவர்கள் தம் காரியத்திலேயே குறியாக இருப்பார்கள்; நாம் ஏமாறக் கூடாது.”

968. “செல்வத்தின் அருமை தெரியாதவர்கள் செலவினங்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.”

969. “சொன்னதைச் செய்யவே நபர்களைக் கானோம். சுய சிந்தனையுடையவர்கள் எங்ஙனம் கிடைப்பார்கள்?”

970. “கடனைக் கழிப்பது என்ற உணர்வில் செய்யப் பெறும் வேலை பயன் தராது.”

971. “மருந்துமலை, மருத்துவரிடம் சென்றது போல் சிவாச்சாரியார்கள் மந்திர மாயங்களுக்குச் செல்கின்றனர்.”

972. “கவலை’க்கு இடம் தருவது அழிவுக்கு வழி.”

973. “கரு உற்றிருக்கும் தாய், பிரசவ வேதனைக்கு ஆளானாலே குழந்தை பிறக்கும்; அதுபோல முன்னேற விரும்புகிறவர்கள் போராட்ட உணர்வுடன் கடுமையாக உழைக்கவேண்டும்.”

974. “வேலை வாங்குவதைவிட வேலை செய்வது கடினம்.”

975. “பெண் வலியவே அடிமையாகிறாள்.”

976. “வயிறு இல்லாது போனால் பலர் உழைக்கவே மாட்டார்கள்.”

977. “மற்றவர் தொல்லை அறியாதவர்கள் மூடர்கள்.”

978. “காலத்தை அளந்து செலவழிப்போரே பணத்தை எண்ணி வாங்கும் உரிமையுடையவர் ஆவர்.”

979. “காலங்கடந்த கடமைகள் சுமையாகி விடும்.”

980. “இன்று பட்டங்களுக்கும் பண்பாட்டுக்கும் உறவில்லை.”

981. “திட்டமிட்டப் பணிகளுக்குச் செலவழித்தலே முறையாகும்.”

982. “முந்திரிக் கொட்டை போல் துருத்திக்கொண்டு முன்வருபவர்கள், கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்.”

983. “காரிய சாதனையே சாதனை.”

984. “தன்னுடலுக்கு, தானே மருத்துவர்.”

985. “ஆகாததை அறவே மறந்திடுதல் நன்று.”

986. “சாதாரண மனிதன்கூட உடலுழைப்புக்கு கூச்சப்படுகிறான்.”

987. “பள்ளிக் கூடம், திருக்கோயிலைப் போல் பேணப் பெறுதல் வேண்டும்.”

988. “ஆசிரியர்-மாணாக்கர்களின் கூட்டு முயற்சியிலேயே கல்வியின் திறன் அமையும்.”

989. “வாழ்க்கை முழுதும் நூல் படிக்கும் பழக்கம் தொடரின், இன்பம் பயக்கும்.”

990. “மனப்பாடம் மட்டுமே கல்வி என்ற நிலை அமையின், சிந்தனை ஊற்று, தூர்ந்து போகும்.”

991. “நேரிடையாகக் கல்வி போதிப்பதைவிட, செய்முறைகள் மூலம் படிப்பித்தல் நல்லது.”

992. “எழுச்சி நிறைந்த படைப்பாற்றல் மிக்கதே கல்வி.”

993. “ஆசிரியர்களின் பொறுப்பின்மையினாலேயே, சமூக வரலாற்றில் தரம் குறைந்து வருகிறது.”

994. “மனிதனின் முதலும், முடிவுமான தேவை அறிவே.”

995. "படிப்பறிவை விட, பட்டறிவு அதிகப் பயன் தரும்.”

996. “புத்தகங்களிலும் போதனாக் கருவிகள் விலை மதிப்புள்ளவை.”

997. “வகுப்பறைக்குள் போதிப்பதைவிட வகுப்பறைக்கு வெளியே நிறைய கற்பிக்கலாம்.”

998. “உண்மையைக் கண்டுபிடித்தல் எளிதன்று.”

999. “சூழ்நிலைக்கு இரையாதல் விலங்கு இயல். சூழ்நிலையைத் தனக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளப் போராடுதல் மனித இயல்.”

1000. “உடம்பிற்கு உழைப்பின்மை, நோய். உறவுக்கு, அழுக்காறு நோய்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=சிந்தனை_துளிகள்/901-1000&oldid=1055650" இலிருந்து மீள்விக்கப்பட்டது