சிந்தனை துளிகள்/1701-1800

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

1701. “சாமார்த்தியம் வந்தமையும் அளவுக்கு வாய்மை வந்து பொருந்துவதில்லை.”

1702. “எந்த ஒரு பணியும் அடித்தள மக்களின் மேம்பாட்டுக்கு உதவாவிடில் அது பணியல்ல; ஒரு வகையான வணிகமேயாகும்.”

1703. “சுய விருப்பத்தால் செய்யப் பெறும் பணியே அறம் சார்ந்த பணி.”

1704. “உயர் குறிக்கோளுக்கு உரிமையாக்கிக் கொள்ளாதோர் - தட்டச்சு இயந்திரம் போலப் பணி செய்பவர். பயன் இராது.”

1705. “உயர் குறிக்கோள் இலாதார் சிறப்புறும் பணிகளை செய்யார்; அதே போழ்து பிழைகளும் செய்வர்.”

1706. “உள் வளர்ச்சியும் அதாவது ஆன்மாவும் வளர்ந்தால்தான் - கல்வி - கேள்வி பயனுறும்.”

1707. “ஒருவருடைய கண்கள் - காதுகள் அறிவார்ந்த நிலையில் சுமூக உணர்வில் இயங்கினாலேயே ஏராளமான வரலாற்றுண்மைகள் கிடைக்கும். செயற்பாட்டுக்குரிய உந்து சக்திகளும் கிடைக்கும்.”

1708. “தன்னலம் என்பது பேயினும் கொடுமையானது.”

1709. “பிறர் நலம் பேணியதால் கெட்டார் யாரும் இல்லை”.

1710. “இந்தியாவில் மக்களாட்சி முறை இல்லை குழுக்களின் ஆட்சிமுறையே உள்ளது.”

1711. “அரசாங்க இயந்திரம் - ஒரு சரக்குந்து வண்டி, அதன் உயிர்ப்புள்ள செயற்பாடு இருக்காது.”

1712. “சிலரை எழுப்பவே இயலவில்லை; அவர்களை நொந்து காலங்கடத்துவதைவிட எடுத்துச் செய்வது நல்லது.”

1713. “முயற்சியுடைய வாழ்க்கையில் வரும் இடர்கள்-வெற்றியைத் தடுத்துவிடாது.”

1714. “இடர்கள் வேறு - இயலாமை என்பது வேறு.”

1715. இடர்களையே இயலாமை கருதுகிறவர்களால்-காரிய சாதனை செய்ய இயலாது.”

1716. “செல்வம் பெறுதல் பெரிதல்ல-பேனுதலே அரிய கடமை.”

1717. “வாய்க்கும் காலத்திற்குரிய பணியிதுவென நிர்ணயித்து செய்க, இப்படிச் செய்க, இப்படிச் செய்தால் பணிகளின் சுமை குறையும்; காலம் மிஞ்சும் ஒரு போதும் நெருக்க வராது.”

1718. “ஆசிரியர்களுக்கு பள்ளியே திருக்கோயில்: மாணவர்களே விக்ரகங்கள்; அறிவே நிவேதனம்.”

1719. “அரிய கடமைகளைச் செய்பவர்களைவிட சோம்பேறிக்கு பொழுது எளிதில் போய்விடும். அவர்களுக்கு பொழுது போவது தெரியாததால்.”

1720. “ஒருநாட்டுமரத்தில் உயரிய இனத்தை ஒட்டுப்போட்டு உயரிய பழமரம் எளிதில் உருவாக்க முடிகிறது. ஆனால் எளிதில் மனிதர்களைப் படைக்க முடிவதில்லை.”

1721. “ஒன்றை ஒன்றால் ஈடுசெய்வது எளிது. பலவாக அனுமதித்தால் சுமையாகிவிடும்.”

1722. “கையாலாகாதவர்கள் - காலங்கடத்துபவர்களால், பிரச்சனைகளுக்குத் தீர்வு கான இயலாது.”

1723. “செயல்திறன் என்பது தாய். செயல்படுதலே தந்தை.”

1724. “உழைப்பும் - நுகர்வும் வாழ்க்கையை இயக்கும் இரண்டு உருளைகள்.”

1725. “சமூக அநீதிகள் - ஆட்சியிலமைந்து விட்டால் மக்களுக்கு விமோசனம் இல்லை.”

1726. “இந்திய நாட்டின் ஏழைகள் - அறிவும் தெளிவும் இல்லாதவர்கள், போராளியர்களும்,அல்ல; அறிவாளிகள் சுயநலவாதிகள் - சோம்பேறிகள்; அரசியல்வாதிகள் அதிகாரப் பசியினர்; செல்வந்தர்கள் நீரிழிவு நோயினர் ஆதலால் புரட்சி தடைப் படுகிறது.”

1727. “இந்திய மண்ணில் பொது உடைமை மலர நெடிய நாள் பிடிக்கும்.”

1728. “இந்தியாவில் கருத்துருவம் கொடுக்கும் கருவிகள் வலிமையாகவில்லை."

1729. “கடமைகளின் வழி உரிமை பெறுவது - கற்பின் வழி மகப்பேறு பெற்றார் போல.”

1730. “கருப்புப்பணம் என்பது - கர்ணன் பிறந்தது போல - வாழ்ந்தது போல:”

1731. “வளர்ச்சிக்குரிய உணர்வுகளை நாள் தோறும் பெற்று வளர்ந்தால்தான் - வெற்றிகள் கிடைக்கும்.”

1732. “வாழ்க்கையில் தேக்கம் கூடவே கூடாது.”

1733. “பலர் வேலை செய்வதாகத் தெரிகிறது. ஆனால் கணக்குப் பார்த்தால் நல்ல விடை கிடைப்ப தில்லை. சரியான நேரத்தில்-சரியான முறையில் சரியான அளவுக்குச் செயற்படாததே காரணம்.”

1734. “நமது அரசு இயந்திரம் பெரும்பாலும் பழுதாகிவிட்டது.”

1735. “இன்று அரசு இயந்திரத்தை இயக்குவது இலட்சியங்கள் அல்ல-இலட்சங்கள்.”

1736. “நல்லவன் அறிவுரைக்கு ஆட்பட்டுச் செய்வான். கெட்டவன் தண்டனைக்கு ஆட்பட்டு செய்வான்.”

1737. “நமது நாட்டின் வரப்புக்களிலே ஆயிரக் கணக்கான ஏக்கர்கள்.”

1738. “செல்லாக் காசை யாரும் விரும்புவதில்லை. ஆனால், செல்வம் பெருகப் பயன்படாத-செலாவணியில்லாத வாழ்வை விரும்புகின்றனர்.”

1739. “உழைக்காதவன் வாழ்க்கை செல்லாக் காசு.”

1740. “தன்னலத் தீங்கில்லாத சிலர் சிறிய பிறர் நலப் பணிகளைக் கூடச் செய்வதில்லை. அந்த அளவுக்கு சமூக உணர்வு இல்லை.”

1741. “தைரியமாக நாட்குறிப்பு எழுதிக் காட்டி ஊதியம் வாங்குபவர்கள் வேசிகளிலும் கொடியர்.”

1742. “செய்த பணியின் அளவு கடுகு, கால தாமதம் மிகுதி. பயனோ எதிர்மறை. இப்படி வேலை பார்த்தால் எப்படி வளர்ச்சி தோன்றும்.”

1743. “தனக்குத் தொடர்பில்லாத செய்தியை அறிய விரும்புதல் அதை மற்றவர்களிடம் கூறுதல் ஆகியன மோசமான மனிதர்களின் செயற்பாடு.”

1744. “செவ்வி பார்க்கத் தெரியாதவர்-ஒன்று மூர்க்கர்; அல்லது சுயநலவாதிகள்.”

1745. “ஒருமுதல் வளர்ந்தால்தான் வளர்ச்சி.”

1746. “ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகக் கால் வைத்து நடப்பது நடை. ஒன்றன்பின் ஒன்றாக செயற்படுவது நடை-ஒழுக்கம்.”

1747. “முட்டையிடும் வாத்தைக் கொன்றது, அன்று கதை; இன்று யதாரத்தமான வாழ்க்கை.”

1748. “மக்கள் மறப்பதில் வல்லவர்கள் என்ற நம்பிக்கையுடன்தான் அரசியல்வாதிகள் பேசுகின்றனர்.”

1749. “ஒரு பணியை அறிவார்ந்த ஆய்வுடனும் முழுமையான பயன்பாட்டு நோக்குடனும் செய்தால் முழுமையான பயன் விளையும்.”

1750. “கால தாமதங்கள் பல இழப்புக்களைத் தந்துள்ளன.”

1751. ஆரியத் தினை அகற்றி அந்த இடத்தில் தமிழை வைக்கவேண்டும்-அப்படியல்லாது ஆரியம் போன்ற ஒன்றை தமிழில் செய்து வைப்பதில் என்ன பயன்.” .

1752. “அன்பு-பக்தி-தொண்டு-பணி ஆகிய அனைத்துக்கும் அவ்வபொழுது கணக்கு முடித்து-கணக்கு பார்த்து புதுக்கணக்கு போடவேண்டும்.

1753. “இறைவனுடைய திருவருள் நிறைந்த ஆற்றல்கள்; கம்பிகளிலும்-கயிறுகளிலுமா செல்லும்”

1754. சடங்குகளில் மீண்டும் வீழ்தல் கூடாது.”

1755. “அன்று ஒரு சூரபதுமன்; இன்றோ ஆயிரம் ஆயிரம் சூரபதுமன்கள்.”

1756. “நயம்படப் பேசினால் மட்டும் போதாது - சூதில்லாமல் இரண்டு பொருள் படாமல் பேச வேண்டும்.”

1757. “என் மதம் உயர்ந்தது.” என்று கருதுபவர்கள், மதச் சண்டையை விலைகொடுத்து வாங்குகிறார்கள்.”

1758. “கேட்காமல் பேசுகிறவர்களிடம் சிக்கிக் கொண்டால் மெளனமாக இருப்பதே வழி.”

1759. “இன்பத்தில் துன்பக் கலப்பில்லாததே இன்பம்-அந்தமில் இன்பம்-சுத்த இன்பம். சுத்த இன்பம்.

1760. பிராரத்துவத்தை (நுகரும் வினை) மன நிறைவுடனும், மகிழ்வுடனும் அனுபவித்தால் புகைச்சல் இருக்காது-புழுக்கங்கள் இருக்காது.”

1761. “நெருப்பினுடைய எரியும் அளவுக்கு விஞ்சிட, ஆகுதிப் பொருளைப் போட்டால் வேள்வித் தீ எரிவதில்லை-பெருந்தீனிக் காரனின் ஆன்மா எழுச்சியடைவதில்லை.”

1762. “சோஷலிசம் வளரும் நாட்டில், கல்வி கூட்டுறவு தொழில் ஆகியவையே முதன்மையுடையன நமது நாட்டிலே வருவாய் துறையும் (ஆட்சி), காவல் துறையும் பன்மடங்கு வளர்ந்துள்ளது. போலீசு இராஜ்யம் போல் தெரிகிறது.”

1763. “பொதுமக்களுக்கு வேலைக்கும், அதற்கேற்ற கூலிக்குமே உத்தரவாதம் வேண்டும்; சோற்றுக்கும் துணிக்கும் அல்ல.”

1764. “முன்னேற முடியும், முன்னேறவேண்டும் என்ற உணர்வே ஏழை மக்களிடம் இல்லை! விதி பற்றிய நம்பிக்கை ஆழமாகப் பதிந்துள்ளது.”

1765. “நிர்வாகம் பெரியதாக வளர வளர அந்த அமைப்பில் உள்ளவர்களிடம் பொறுப்புணர்வு இல்லாது போனால் வளர்ச்சி பாதிக்கும். ஊதிய பலூன் போல வெடித்துவிடும்.”

1766. “எவ்வளவுதான் நெருக்கமான பழக்கம் இருந்தாலும் இடையில் பணம் புகுந்து விளையாடினால் மனிதர்கள் கெட்டுப் போவார்கள்.”

1767. “பணத்தாசையால் பண்பாடிழப்பவர்கள் பணம் காலியானபிறகு தேடுவாரின்றி அலைவார்கள்.”

1768. “எந்த ஒரு பணியையும் தொடக்க நிலையிலேயே எளிமையாகக் கருதிவிடாமல் கடுமையானதாகக் கருதி நிறைந்த முயற்சியை மேற்கொள்வது காரிய சாதனைக்கு வழி.”

1769. “கால உணர்வு நற்பழக்கங்களுக்கு எல்லாம் தாய்.”

1770. “ஒரு பெரிய நீளமான தேர்ச்சங்கிலியில்-இடையில் ஒரு கம்பி முறிந்தாலும் தேர்ச்சங்கிலி

த-12 பயனற்றதாகிவிடுகிறது. ஒரு நிர்வாகத்தில் ஒருவர் பலவீனராக இருந்தாலும் பாதிக்கும்.”

1771. “தேர் இழுவையின் பொழுது-தேர்வடத்தில் ஒரு பகுதி அறுந்துபோனாலும் ஆயிரக் கணக்கானவர்கள் கீழே வீழ்ந்துவிடுவர். அதுபோல விரைந்து வளரும் நிர்வாகத்தில் ஒருவர் பொறுப் பில்லாது நடந்து கொண்டாலும் ஆயிரக்கணக்கான பேரின் வாழ்க்கையைப் பாதிக்கும்.”

1772. “கணக்குப் பார்க்கும்பொழுது வேலையின் அளவும், பயனும் சரியாக இல்லாது போனால் வேலை செய்ததாகக் கூற இயல்ாது.”

1773. “வேலையின் பயனை அனுபவிக்க இயலாத நிலையில் வாயினால் வேலை பார்த்ததாகக் கூறுவது ஏற்புடையதன்று.”

1774. “தொடுதல், தொடர்தல், முடித்தல் இடையீடு இல்லாத பணிநிலை உடையன.”

1775. “நாள்தோறும், செல்வ வரவும், செல்வ வளர்ச்சிக்குரிய வாயில்களும் கண்காணிக்கப் பெறுதல் வேண்டும்.”

1776. “வரவுகள் கண்காணிக்கப் பெறுதலே செல்வப் பாதுகாப்புக்கு உரிய வழி.”

1777. “மாதவி, மணிமேகலையை, துறவு நெறியில் ஆற்றுப்படுத்தியது, கோவலனின் புகழைப் பாதுகாப்பதற்காகவே!”

1778. “மாதவி, மணிமேகலையைத் துறவு நெறியில் ஆற்றுப்படுத்தியது. கோவலனிடம் அடைந்த ஏமாற்றத்தின் விளைவே!"

1779. “நட்பு-காதல் அர்ப்பணிப்புத் தன்மையுடையன. அதனால், தன்னலம் பேணுதல் இருக்காது.”

1780. “தி.மு.கழகத்தினர், தங்களுடைய சுவரொட்டியில் எம்.ஜி.ஆரை வெற்றிபெறச் செய்து விட்டனர்.”

1781. “நகரத்தாரிடம் பெண்மையைப் பேணும் இயல்பு உண்டு.”

1782. “குறைவான இலக்கு நிர்ணயிப்பது உள்ளதையும் கெடுத்துவிடும்.”

1783. “பெரும் பொறுப்புக்களில் இருப்பவர்கள் எண்ணிக்கையில் “ஒருவர்” ஆனாலும் சமூகத்தின் மதிப்பீடு தருதல் வேண்டும்.”

1784. “விளம்பரம் என்பது விரும்பத்தக்க ஒன்று அல்ல.”

1785. “அரசாங்கம் குடிமக்கள் நிலையிலும், தனிப்பட்ட முறையிலும், சமுதாய நிலையிலும் செய்ய இயலாதனவற்றைச் செய்தல் வேண்டும்.”

1786. “வாழ்க்கைக்கு உத்தரவாதம் வழங்காத அரசுக்கு தண்டனை தர உரிமையில்லை.”

1787. “முன்னணியில் நிற்பது என்பது முந்திரிக் கொட்டை மாதிரி நிற்பதாகாது. முந்திரிக்கொட்டை மாதிரி நிற்பது முன்னணியில் இருப்பதாக ஆகாது.”

1788. “சுவைமிக்க பருப்பை உள்ளிடாக உடைய முந்திரிக் கொட்டை, பழத்தின் சுவை உடன்படாமையால் பழத்தினின்று பிரிந்து வெளியே வந்துவிட்டது. ஆனாலும் பிறந்த பாவத்திற்காக உறவு நிலையில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.”

1789. “சமூகத்தை அனைத்து வளர்த்தல் கடுமையான பணி. இந்தப் பணிக்கு கோபமே ஆகாது; கூடாது.”

1790. “ஒருவர் தன் வாழ்க்கையில் பாதிக்கப் படும்பொழுது அரண் தேடுவர். ஆனால் அவர்கள் பாதிக்கும்படி காரியங்களைச் செய்வார்.”

1791. “அரசுகளின் அதிகாரங்களையும் விடக் கூடுதலான அதிகாரம் பெற்றது சமூகத்தின் மனப் போக்கும், பழைய பழக்கவழக்கங்களும்!”

1792. “கண்ணகியால் பாண்டிய அரசை எதிர்க்க முடிந்தது. ஆனால் பூம்புகார் நகர மக்களின் பழக்கத்தை மாற்ற முடியவில்லை.”

1793. “கணவன் - மனைவி சண்டையில் குழந்தைகளையும் கையில் கொடுத்து, விரட்டுவது என்ன நியாயம்?”

1794. “என்ன வேலை செய்தோம் என்பதைக் கூறியும் காட்டியும் நிரூபணம் செய்ய இயலாதவர்கள் கூலியை எண்ணிக் கேட்பது என்ன நியாயம்.”

1795. “எந்தவிதத் தகுதியும் இல்லாத ஒருவன் கணவனாகிவிட்டால் அவனுடைய மனைவியை அவன் அடிமையெனக் கருதி நடத்தும் மனப்போக்கில்தான் பெண்ணடிமைத்தனம் இருக்கிறது.”

1796. “தன்னுடைய செயல்களுக்கு விளக்கம் கூற இயலாதவர்கள் கோபப்படுவார்கள்.”

1797. “மருமகள் என்ற உறவு முறையை அமைத்தும் மாமியார்களின் மனம் இறங்கவில்லை.”

1798. “ஒரு எளியவனிடத்தில் கூட நான் அப்படித்தான் செய்வேன்” என்று சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் சான்றோர் கொடுமை என்று பழி தூற்றுவர்.”

1799. “மானம் என்பது கிஞ்சிற்றும் இல்லாதவர்கள்தான் அவமானம் பற்றி ஆர்ப்பரிப்பர்.”

1800. “காயம்பட்ட காலில் கூச்சம் இருப்பதால் வலிமையுடன் எடுத்து ஊன்றாததால் மேலும் இடிபாடு உண்டாகும். காயம்பட்ட காலில் உள்ள பொய்ம்மையான அக்கறையால் அந்தக் காலைப் பயன்படுத்தாமல் வாளாவிடுவதால் பயன்பாட்டு நிலை இழந்து போகிறது. பட்ட காலிலேயே படும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=சிந்தனை_துளிகள்/1701-1800&oldid=1055658" இருந்து மீள்விக்கப்பட்டது