சிந்தனை துளிகள்/1601-1700

விக்கிமூலம் இலிருந்து

1601. “முறைப்படி செய்யாத நல்ல காரியம்கூட முழுப் பயனைத் தராதுபோகும்.”

1602. “பலர் நம்முடைய நோக்கத்திற்கு இசைந்து வராமல்; ஆனால் நமது படகிலேயே பயணம் செய்கின்றனர். இது ஒரு விசித்திரமான நிலை.”

1603. “செல்வம் இருப்பதும் தீது; இன்மையும் தீது-அதனால் செல்வம் தேடிப் பெறுவதாகவும்-தேவைக்குத் தேடுவதாகவும் இருத்தல்வேண்டும்.”

1604. “காலத்தவனை நிர்ணயம் இல்லாத எதுவும் பயன் தராது - முடியவும் முடியாது.”

1605. “விழுந்து - விழுந்து, தஞ்சாவூர் பொம்மை எழுந்திருக்கலாம். ஆனால், மனிதன் கூடாது.”

1606. “இந்திய நாட்டில் அரசியலை குடும்பச் சொத்தாக ஆக்கும் ஆர்வம் வளர்ந்து வருகிறது; இது நல்லதல்ல.”

1607. “வேறுபாடுகள் உடையனவற்றில் இன்பம் துய்த்து மகிழும் மனித உலகம், ஏன் கொள்கை வேறுபாடுகளையும், அப்படிக் கருதவில்லை.”

1608. “இயற்கையின் இயக்கமே ஒரு கூட்டமைப்புள்ள இயக்கம்.”

1609. “நிலத்தால் மனிதனுக்குப் பெருமை இல்லை; மனிதனால் நிலத்துக்குப் பெருமை.”

1610. “அரசியல் கட்சிகள், ஆட்சியமைப்பில் ஊடுருவிச் செயற்படும் வரையில் லஞ்சம் ஒழியாது.”

1611. “சார்புகள் வழிப்பட்ட அன்பு, வரவேற்கத் தக்கதல்ல.”

1612. “தெருவைத் தூய்மையாக வைத்துக் கொள்ளாதார், “தேசியம்” பற்றி வாய் கிழியப் பேசுகின்றனர்.”

1613. “எந்த ஒன்றும் வழிவழித் தடத்தில் சென்றால் நன்மை விளையாது.”

1614. “மாற்றங்கள், உறவை, வளர்ச்சியைப் பாதிக்காது.”

1615. “நன்மையிலும் வளர்ச்சியுண்டு.”

1616. “வளர்ச்சியில்லாத பண்புகள் கூடக் காலப் போக்கில் தரம் குறையும்.”

1617. “பணிகளை, எதிர்பார்த்துத் தொடங்கினால் சிறப்பாக நடக்கும்.”

1618. “ஒற்றுமை, தேவையின் அடிப்படையில் தோன்றியது.”

1619. “ஒருமைப்பாடு என்பது வேற்றுமைகளைக் கடந்த ஒரு பொதுவான உறவு.”

1620. “ஒன்றுதல், கலத்தல், - இது கூடாத ஒன்று.”

1621. “தனித்தன்மை” வறட்சித்தன்ைம உடையது.”

1622. “வாழ்க்கையின் அடிப்படை நோக்கத்தில் தான் ஒருமைப்பாடு கால் கொள்ள இயலும்.”

1623. “பொதுமக்கள் பல்வேறு குடிமைப்பண்புகளில் வளர்தல் அவசியம்.”

1624. “கடவுள் நம்பிக்கையே போதுமானது. மதங்கள் வேண்டியதில்லை.”

1625. “என்னுடைய பகைவனும் பலமாக இருந்து நான் மோதினால்தான் என் பலம் வளரும்.”

1626. “குறைந்த அளவு வாக்காளர்களை நான் சந்தித்து வாக்குப் பெற பிரசாரம் ஏன்? எல்லாம் வெளிச்சம்தான்!”

1627. “பதவிகளுக்கு ஏற்படும் நெருக்கடி, பணிகளுக்கு ஏற்பட்டால் நல்லது.”

1628. “சரியாகச் செய்யாதார், செய்யாமைக்குத் தாம் நோகும் இயல்பு வராத வரையில் திருத்தம் வராது.”

1629. “அலுவலக நடைமுறைகள், படிப்பினைகள் வழி வந்தவையே! இவை பின்பற்றப்படாது போனால் தோல்வியே வரும்.”

1630. “கணப் பொழுதும் மாறும் உலகியலின் மாற்றங்கள் தவிர்க்க இயலாதன.”

1631. “அரசு, வீட்டு வாசற் படிக்கு வந்தாலும் விழிப்பில்லாதவர் பலர் உண்டு.”

1632. “இன்றைய மனிதர் பலர் தேவைக்கு ஆட்பட்டு ஆசைப்படுவதைவிட அழுக்காற்றுக்கு ஆட்பட்டே ஆசைப்படுகின்றனர்.”

1633. “பழகும் பண்பு அறியாதவர்கள் மேலதிகாரிகளாக வந்து விட்டால் அவர்களோடு ஒத்திசைந்து பணி செய்தல் அரிது.”

1634. “அரசியல் வாதிகள் தங்களுடைய விருப்பங்களை மற்றவர்கள் மீது ஏற்றுவர்.”

1635. “உழைப்பில் பயன்படுத்தப் பெறாத ஆற்றல், நீரிழிவு நோயாகிறது.”

1636. “சிந்தித்துத் திட்டமிட்டால் சென்ற காலத்தில் செய்யப்படாமல் விடுபட்டுப் போனவை எவ்வளவு என்பது தெரியவரும்.”

1637. “ஆசைகள் அளவுக்கு முயற்சி இல்லை.”

1638. “சுதந்தரம் கற்றுக் கொடுத்திருக்கும் ஒரே காரியம் மனுக்கள் எழுதுவதுதான்.”

1639. “கிராமங்கள் தன்னிறைவுடைய குடியரசாக விளங்கவேண்டும்.”

1640. “செய்தவற்றைச் சரிபார்த்தல் என்பது தவிர்க்க முடியாதது."

1641. “அரசியலில் உள்ள ஆர்வம் செயற்பாடுகளில் இல்லையே!”

1642. “பசுமைக்கு ஈடு எதுவுமில்லை.”

1643. “நமது நாட்டின் அரசியல் பொது வாழ்க்கை கொல்குறும்பு செய்யும் கயவர்கள் கைக்குப் போய்க் கொண்டிருக்கிறது.”

1644. “அநீதிகளைக் கண்டிக்கத்தகாதவர்கள் அநீதிகளுக்கு உடன்பட்டவர்கள் தாம்.”

1645. “நாம் மெள்ள மெள்ள பழக்க வசத்தால் தீமைகளுக்கு உடன்பட்டுவிடுகின்றோம்.”

1646. “கம்யூனிஸ்டுகள் உரியவகையில் இந்திய நாட்டுக்குச் சேவை செய்யவில்லை.”

1647. “இந்திய கம்யூனிஸ்டுகள் பெயரால்தான். உண்மையான கம்யூனிஸ்ட்டுகள் அல்ல.”

1648. “எந்த நிலையிலும் யாதொன்றையும் விட்டுக் கொடுக்க முன்வராதவர்கள் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது.”

1649. “செலவுக்குப் பணம் தேடுதல், பணத்துக்குச் செலவு தேடுதல்; தேவைக்குப் பணம் தேடுதல்.”

1650. “மேற்றிசை நாடுகளில் சமூக நாகரிகம் வளர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவில் “சமூகமே’ இன்னும் உருவாகவில்லை.”

1651. “உதவி செய்தல் என்ற அறம், அறங்களில் எல்லாம் சிறந்த அறம்.”

1652. “உட்குழுக்கள் இல்லாத அமைப்புக்களால் தான், நாட்டுக்கு நல்லன செய்யமுடியும்.”

1653. “உடல் இயங்குகிறது; ஆனால் நாம் இயங்குவதில்லை.”

1654. “ஏதாவது ஒரு ஆவேசம் வந்தாலன்றி பணிகளின் தொடக்கம் வராது.”

1655. “நாமே செய்வது-நற்பயன் தரும்.”

1656. “மெதுவாகச் செய்தாலும்-தொடர்ச்சி இருந்தால் பயன் கிடைக்கும்.”

1657. “திட்டத்துக்காக வாழ்க்கையல்ல - வாழ்க்கைக்காகவே திட்டம் உருவாகிறது.”

1658. “ஆர்ப்பரவம் மக்களை ஈர்ப்பதால்-எங்கும் ஆர்ப்பரவம் நடைபெறுகிறது.

1659. “அரசியலில் புதுமுகம் காண்பதரிது.”

1660. “உன்னைப் புகழ்கிறவர்கள்-உனக்குக் கேடு செய்கிறார்கள்.”

1661. “கல்வெட்டுகள் மூலம் நினைவைப் பராமரிப்பு என்பது-அவர்களிடம் உண்மை இல்லை என்பதன் அடையாளம்.”

1662. “எதிர்மறை இயக்கங்கள் அழிக்கும்; ஆக்கம் செய்யா?”

1663. “எதிர்மறை இயக்கங்கள் எதிர்ப்புக்குரியன மறைந்துவிட்டால் ஒரு சூன்யத்தை உருவாக்கும்.”

1664. “எந்த ஒரு நன்மையும் தீமையும் ஒரு நாளில், ஒரு பொழுதில் தோன்றுவன அல்ல.”

1665. “வாழ்க்கையை வியாபாரமாக அனுமதித்தல் தற்கொலையாகும்.”

1666. “சாக்கை நனைத்துத் தூக்கிக் கொண்டு போதலை ஒக்கும், அறிந்தும் துன்பத்தைச் சுமத்தல்."

1667. “ஒரு தமிழன் ஞானியாக விளங்குதலை பார்ப்பனர் மதத் தலைவர்கள் ஏற்கமாட்டார்கள்.”

1668. “சாதாரண வைக்கோல் கூட ஒரு மகிழ்வுந்துப் பயணத்தைத் தடுத்துவிடுகிறது. ஆதலால் கேட்டினைச் செய்ய சிறியோராலும் இயலும்.”

1669. “அரசியல் கட்சி ஊர்வலத்தை, கடமையை விட உயர்ந்ததாகக் கருதுபவர்களால் அரசியலுக்கும் பயன் இல்லை; கடமை உலகத்துக்கும் பயன் இல்லை.”

1670. “தூங்குதலும் உழைப்பாளிகளுக்கு ஒரு விதக் கடமையேயாகும்.”

1671. “சிக்கலே இல்லாத இடத்திலும் சிலர் விதி முறையை மீறுகின்றனர். ஏன், பழக்கத்திற்கு அடிமைப்பட்ட நிலை.”

1672. “எல்லோருக்கும் எல்லாவற்றிலும் ஈடுபடுதல் பயனற்றவைகளையே வளர்க்கும்.”

1673. “முயற்சியின் வாயிலில் முதல் அடி கூட எடுத்து வைக்காதார் முடியவில்லை என்று கூறுவது ஏற்க இயலாத ஒன்று.”

1674. “கல்வியில் ஆர்வம் உடையார் கூழுக்கும் கஞ்சிக்கும் வெட்கப் படமாட்டார்.”

1675. “படித்தவர்களிடம் கூட சமூக வாழ்நிலை உணர்வுகள் கால்கொள்ளவில்லை.”

1676. “நமது நாட்டில் அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களில் பாதிப்பேர் பதவிகள் - பெருமைக்கே! அரசியல் நடத்த அல்ல."

1677. “சாதாரண மக்களின் ஆன்மாவை விழித்தெழச் செய்தால்தான் வளர்ச்சிப் பணிகள் பயன் தரும்.”

1678. “பொறுப்பற்ற நிலை என்பது நமது நாட்டுக்கும் பழக்கமாகிவிட்டது.”

1679. “காரண, காரியங்களை கடந்தததே உண்மையான அன்பு.”

1680. “தமிழ்நாட்டின் அரசியல் இயக்கங்கள்-ஒளிதலம் தர இயலாதவை.”

1681. “ஒரு மனிதர் எவ்வளவு சின்னவராக இருந்தாலும் அவர் அளவுக்கு அகந்தை-அழுக்காறு கொண்டுள்ளனர்.”

1682. “தமிழ் நாட்டில் கிறித்துவர்கள்-இன்றும் வாழ்க்கையில் இந்துக்களே.”

1683. “இலஞ்சம் என்பது இன்றைய பழக்கங்களில் ஒன்றாக இடம் பெற்றுவிட்டது.”

1684. “கால உணர்வு நற்பழக்கங்களுக்கு எல்லாம் தாய்.”

1685. “பழகப் பழகத்தான் எந்தப் பழக்கமும் உறுதிபெறும்.”

1686. "சமயத் தலைவர்களுக்கு, செல்வந்தர்களிடம் பழக்கம் வந்துவிட்டாலே, அறநெறிப் போதனைகள் திசைமாறிவிடும்.”

1687. “இன்றைய அறநெறிகள் - சட்டங்கள் அனைத்தும் ஏழைகளுக்கு எதிரானவையே.”

1688. “மங்கையர் பலர் அணிகலன்களை-அழகுக்காக அணிவதில்லை - மற்றவர்களுக்குக் காட்டவேயாம்.”

1689. “ஓராண்டு கடந்துவிட்டது, என்று ஊதிய உயர்வு எதிர்பார்ப்பவர்கள், ஒராண்டில் நடந்தது என்ன என்று கணக்குப் போட்டுப் பார்க்க மறுக்கிறார்கள்.”

1690. “எல்லோருமே வெற்றி கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அப்படியானால் தோற்பது யார்?”

1691. “வெற்றி, தோல்வி மனிதர்களின் தரத்தை நிர்ணயிப்பது அல்ல. வெற்றி, தோல்வி அவர்களை எப்படி ஆக்குகிறது என்பதை பொறுத்துத்தான்!”

1692. “பல நாள்கள் சிந்தித்துத் தொகுத்த ஆதாரங்கள் அடிப்படையில்தான் ஒரு ஆய்வுக்கூட்டம் நடத்த இயலும்.”

1693. “தெளிவான விபரங்கள், திட்டங்கள் இல்லாத செயற்பாடு அரங்கின்றி ஆடுவதை ஒக்கும்.”

1694. “தன்னுடைய வசதிகளுக்கு ஏற்ப, காலத்தைப் பயன்படுத்துபவர்கள், கடமைகளைச் செய்பவர்கள் ஒருபொழுதும் மற்றவர்களுக்குப் பயன்பட மாட்டார்கள்.”

1695. “ஒருங்கிணைப்பு மிக்க உணர்வு இல்லாத நிறுவனம் செயற்பாட்டில் பயன் கிடைக்காது. இழப்பும் ஏற்படும்.”

1696. “எதையும் காலக் கெடுவுடன் செய்து பழகாதார் நாட்களை இழந்துவிடுவர்.”

1697. “செயல் மாட்டாதாரிடம் கோடி கொடுத் தென்ன? யாதொரு பயனும் இரா!”

1698. “நோக்கத்தில் ஒன்றாதாரைப் பணியில் உடனுழைப்பாளர்களாக ஏற்பது கடினம்.”

1699. “பணம் பத்தும் செய்யும் என்பதை நிரூபணம் செய்வதே வரலாறு.”

1700. “இந்தியா ஒரு நாட்டு” உண்மையேயாயினும் இன்றிருப்பது போல் ஒரு நாடு அமைப்பு இருக்கக் கூடாது.”

         ஒரு நாடு
         ஒரே மாநிலம் ஆட்சி செய்கிறது;
         ஒரே மொழி ஆட்சி செய்கிறது;
         ஒரே மதம் ஆட்சி செய்கிறது.
         ஒரே குடும்பம் ஆட்சி செய்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=சிந்தனை_துளிகள்/1601-1700&oldid=1055657" இலிருந்து மீள்விக்கப்பட்டது