சிந்தனை துளிகள்/401-500

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

401. “செலவுக்குப் பணம் என்ற மனப்போக்கு நிறைநல வாழ்க்கைக்குத் துணை செய்யாது. ஆக்கம் தேடுதல் வாழ்க்கையின் கடமைகளுள் ஒன்று.”

402. “பசிக்குச் சோறும் படுப்பதற்கு இடமும் அணைப்பதற்கு ஆயிழையும் கிடைத்தால் போதும் என்று முயற்சிப்பவர்கள் பிச்சைக்காரர்களே.”

403. “காலத்தையும் கடமையையும் இணைத்துப் பார்த்தால்தான் கடமைகளின் அளவும் தரமும் கூடும்.”

404. “வாழ்வாங்கு வாழ விரும்புபவர்கள் ஒயாது ஒழியாது கடமைகள் செய்தாலும் போதா மனமே பெறுவர். சோம்பேறிகள் செய்த சில காரியங்களையே பெரிதாக்கி மனத் திருப்தியடைவர்.”

405. “பதவியைப் போல மனிதனைக் கெடுப்பது வேறு ஒன்றும் இல்லை,”

406. “சிலர் தாம் பெற்ற பதவிகள் காரணமாகவே நிறைய பேசுகின்றனர். ஏராளமான அறிவுரைகளை உபதேசங்களை அள்ளித் தருகின்றனர். மக்களும்

த-4 தலைவிதியே என்று கேட்கின்றனர். இவர்களோ, மக்கள் தமது உரைகளை மதித்து கேட்பதாக நினைத்துக் கொள்கின்றனர்.

407. “உரிமைகளுக்காக உறவுகளை அறுத்துக் கொள்ள நினைப்பதைவிட கட்டாயப்படுத்தி உரிமை கொண்டாடுகிறவர்கள் வரவேற்கத்தக்கவர்கள்.”

408. “காலம், கருத்து, செயற்பாடு மூன்றும் ஒன்றிவிடின் வெற்றியே!”

409. “விழாக்களில் கவனம் செலுத்துவோர் ஏன் வாழ்க்கையில் கவனம் செலுத்த மறுக்கிறார்கள்? விழா முயற்சிகள் ஒன்று முகமன், அல்லது பழக்கம் காரணமாக இருக்கலாம்.”

410. “ஆழ்கடலில் ஆழ மூழ்கிக் குளித்தால் முத்து எடுக்கலாம்; அதுபோலக் கடமைகளில் ஆழமான ஈடுபாடு கொண்டால் வெற்றி கிடைக்கும்.”

411. “பரம்பரைக் குணம் மாற, அதிகமான அளவில் சமூக மருத்துவம் செய்யவேண்டும்.”

412. “தாயோடு, அன்புடைய மாமனோடு மாமி யோடு ஒத்து வாழும் இயல்பில்லாதவர்கள் ஊர்ச்சேவைக்கு முன் வருகின்றனர்; பலன் எதிர்மறைதான்!”

413. “கட்புலனுக்குச் சான்றுகளைத் தராத பணிகள் நம்பத் தகுந்தவையல்ல.”

414. “நாள் மங்கல நாள் சடங்குக்குரிய ஒரு நாள் அல்ல. வடை பாயசத்திற்குரிய நாள் அல்ல. வாழ்க்கையின் மகசூலைக் கணக்கெடுத்து அதன் பயன்பாட்டைக் கண்டு உணர்வு பூர்வமாக மகிழும் நாள்! இன்று மகசூலே இல்லை! உபயோகமான காரியங்கள் நடவாதது மட்டுமல்ல. செய்ய வேண்டுவனவற்றைக் கூடச் செய்யாமல் துன்பம் விளைந் திருக்கிறது. கடன்சுமை வந்திருக்கிறது. இதற்குப் பிறகும் நாண்மங்கலம் கொண்டாட்டம் என்று கூறினால் அழத்தான் தோன்றுகிறது.”

415. “திருமணம் என்றால் பொன்னணி புத்தாடைகள் எல்லாம் மகிழ்ச்சியின் சின்னங்கள்! ஆனால் இவை இன்று மகிழ்ச்சியின் சின்னங்கள் அல்ல. கடன் சுமை. துன்பச் சுமை! ஏன் இந்தப் பைத்தியக் காரத்தனம் பொன்னணியும் புத்தாடையும் இல்லாது போனால் திருமணம் நடக்காதா? காதல் தோன்றாதா? களவியல் இன்பம் இருக்காதா?”

416. “தகவல்கள் தருவது என்பது தகவலுக்காக மட்டுமல்ல. செயற்பாட்டுக்குத்தான். அதனால் செயற்பாட்டுக்குரிய காலத்தில் தகவல் தருவது அவசியம்.”

417. “பனம் வரவு - செலவு செய்வதும் பண்பாட்டை வளர்க்கும் வாயில்களில் ஒன்றேயாம்.”

418. “எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்கிறவர்களை இலட்சிய வாழ்க்கைக்கு உழைப்பு வாழ்க்கைக்குத் துணையாகக் கொள்ளுதல் கூடாது.”

419. “அன்றாடம் நிதி வரவு-செலவுகளை எழுதிப் பார்க்கும் பழக்கமே செல்வத்தைச் சேர்க்க உதவி செய்யும்.”

420. “அன்றாடம் நிதி வரவு-செலவுகளை எழுதிப் பார்க்கத் தவறினால் ஊழல் ஏற்பட்டு நிதி அழியும்.”

421. “உணர்வுக்குச் சம்பந்தமில்லாமல் மலம் சலம் கழிந்தால் நோய். அது போன்றதே ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லாத நிர்வாகமும் நோயே!”

422. “நாம் எப்படியும் வாழலாம் என்ற மனப் போக்கு விலங்குப் போக்கு. இப்படித்தான் வாழ வேண்டும் என்று விரும்புவது மனிதப்போக்கு.”

423. “நாள்தோறும் கழிப்பன கழிக்காது போனால் நோய். நாள்தோறும் மறக்கத்தக்கன மறக்கா விடில் சோர்வு தோன்றும்; பகை வளரும்.”

424. “சர்வ வல்லமைவாய்ந்த மேலாண்மையின் துணை இருந்தால்தான் சமுதாயத்தை திருத்த இயலும்.”

425. “புதிய சமுதாய அமைப்புக்கு சர்வாதிகாரம் தவிர்க்க இயலாதது”

426. “மேடு பள்ளங்களே இருக்கும், ஆனால் பள்ளம் மேட்டால் போஷிக்கப் பெறும். இது முதலாளித்துவ சமுதாய அமைப்பு. மேடு பள்ளங்களே உருவாகாது காப்பது சோஷலிச முறை.”

427. “அண்ணல் காந்தியடிகளுக்குப் பிறகும் இந்தியா மாற்றமடையவில்லை. ஏன்? இந்தியாவின் பழையப்போக்குகளே காரணம்.”

428. “முரடனைத் திருத்திவிடலாம். பயந்தாங் கொள்ளியை-கோழையைத் திருத்தவும் முடியாது; உபயோகப்படுத்தவும் இயலாது.”

429. “முறைகளே, எளிய வழிகள். உழைப்பைச் சிக்கனப்படுத்துபவை. ஆனால், விரும்புவாரைத்தான் காணோம்.”

430. “விதிமுறைகளை முறையாகக் கடை பிடித்துக் கடமைகளைத் தவறாமல் செய்தால் வேலைகள் எளிதாக-ஆனால் நிறைவாக முடியும். பயன் களும் தப்பாமல் வந்து சேரும். இங்ஙனம் பணி செய்வோர் உள்ள நிறுவனத்தில் ஊழல் வரவே வராது செல்வமும் நிறையசேரும்.”

431. “காதல் வாழ்க்கையில் கலவி ஒரு பகுதியேயாம். கலவிக்காகவே காதல் வாழ்க்கையல்ல.”

432. “நிதி வரவு இருந்தாலும் நிதி நிர்வாகம் முறையில்லாதுபோனால் தரித்திரம் தாண்டவமாடும்.”

433. “கணக்கு எழுதுதல், பட்டியல் அனுமதித்தல் என்பன நிதியை நிர்வகிக்கும் கணிகளேயாம்.”

434. “விவாதித்துத் தெளிவுபடுத்த இயலாதவர் வசை வழியைக் கையாள்வர்.”

435. “வயதைப் பற்றிக் கவலைப்படுவோர் வயதுக்குரிய அடிப்படையான விநாடிகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இஃது ஒரு விநோதம்.”

436. “கூழைக் கும்பிடுகள், குற்றவியல் மனத்தின் வெளிப்பாடுகள்-நம்பக்கூடாதன.”

437. “நம்பிக்கையின் அடிப்படையில் நிர்வாக விதிமுறைகள் புறக்கணிக்கத் தக்கனவல்ல.”

438. “சமுதாய அமைப்பு சீராக அமைய நன்றி பாராட்டும் பண்பு தேவை.”

439. “உழைப்பாளிகள், பிறரைச் சார்ந்து இருந்தால் தமது உழைப்பையும் இழப்பர்.”

440. “குறிக்கோள் அடையத்தக்க வகையில் பணிகளைச் செய்யாதவர் நன்மையையும் செய்யவில்லை. மாறாகத் தீமையைச் செய்கின்றனர்.”

441. “சிலரைத் திருத்துதல் முயற்கொம்பே.”

442. “எந்தக் குடும்பமும் திட்டமிட்டு வாழுமானால் வறுமையை அடையாது.”

443. தாயன்பு பெரிதே! அந்த அன்புக்கு எதுவும் இணையல்ல.”

444. “இழிவு மனப்பான்மையுடையோர், வீண் பெருமைக்கு ஆசைப்படுவர்.”

445. “பரம்பரைக்குணம் எளிதில் மாறாது. ஆனாலும் தொடர்ச்சியான முயற்சி மேற்கொண்டால் மாற்றமுடியும்.”

446. “கடமைகளைச் சரியாகச் செய்யாமல் ஏற்பட்ட இழப்புகளுக்கு அழத்தெரியாதவர்கள்-கடமைகளைச் சரியாகச் செய்யாமைக்குக் காரணம்-தெரியாமை, இயலாமை அல்ல. பொறுப்புணர்ச்சி யின்மை.”

447. “அறிவின் ஆக்கமும் பண்பட்ட உள்ளமும் சமூக மனப்பான்மையும் இல்லாத தலைமை மோசமானது.“

448. “எத்தகைய மனிதரையும் தலைமையின் வழி வந்து சாரும் உறிஞ்சிகள் கெடுத்துவிடுகின்றனர்.”

449. “செய்யச் சொல்வதைவிட செய்வது எளிது.”

450. “குடும்பம், சமூகம், ஊர், அரசு-இவை ஒத்திசைந்தால்தான் நல்ல குடிமக்களை உருவாக்க முடியும்.”

451. “அப்பாவிகளாக இருப்பதும் ஆபத்தே.”

452. “தண்ணிரில் சுண்ணாம்பு கரைவதைப்போல பரசிவ வெள்ளத்தில் நனைந்து கரைவதே ஆன்மீக வாழ்க்கை.”

453. “ஆற்று வெள்ளம் மணலை தள்ளிச் செல்லும், ஆனால், மலைகளை எடுத்துச் செல்லாது. அதுபோல எளிய மனம் படைத்தவர்களை எளிதில் அழைத்துச் செல்லலாம். ஆனால், கடினச் சித்தம் உடையவர்களை அழைத்துச் செல்ல முடியாது.”

454. “மக்களிடத்தில் முன்னேற்றப் பசியைத் தோற்றுவித்துவிட்டால் காரியம் எளிது.”

455. “நிர்வாகம் கடினமானது. ஆனால் முற்காப்பு தற்காப்பு உணர்வு உடையவர்கள் நிர்வாகம் செய்வார்கள்.”

456. “செல்வம் என்ற சகடைக்கு ஈருருளைகள்-ஒன்று ஈட்டுதல்; மற்றொன்று சேமித்தல்.”

457. “மூடிவைக்காத பதார்த்தம் கெட்டுப் போகும். கண்காணிக்காத மனிதர்களும் கெட்டுப் போவார்கள்.”

458. “ஒரு வழக்கில் மாட்டிக் கொண்டவர்கள். நீதி வழங்க இயலாது.”

459. “வதந்திகளோடு வாழ்பவர்கள் நல்லவர்கள் அல்லர்.”

460. “சார்புள்ளம் நடுநிலை மனம் பெறுதல் அரிது. ஒரு சிலரே சார்புகளைக் கடந்தும் நடுநிலையில் நிற்பர்.”

461. “உடலுக்கு நோய் வந்தால் விரைந்து மருத்துவம் செய்துகொள்ளும் மனிதர்கள் உள்ளத்திற்கு வரும் நோய்களுக்கு மருத்துவம் செய்துகொள்ள முயலுவதில்லை.”

462. “கிராமப்புறத்துப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உடல்நலமில்லாதபோது, மருத்துவர்களை ஆர்வத்துடன் நாடுகின்றனர். அதுபோல குழந்தைகளின் அறியாமையை நீக்கும் ஆசிரியர்களை நாடுவதில்லை.”

463. “திருத்தம் காணும் முயற்சி இல்லாதவர்கள் கையாளும் யுக்தியே, தோல்விகளுக்கு-குற்றங்களுக்கு காரணங்கள் காட்டி அமைதிப்படுத்துதல்.”

464. “நல்ல ஊற்றுள்ள கிணறு, பெருமழைக் காலத்திலும் தம் அளவிலேயே நிற்கும். பொங்கி வழிந்துவிடாது. புதிதாக வரும் தண்ணிரை உள் வாங்கிக் கொள்ளும். அதுபோல அறிவும் செல்வமும் உடையவர்கள் எப்போதும் அளவோடு வாழ்வார்கள் ஆர்ப்பரவம் இருக்காது!”

465. “கிணற்றில் ஊற்றளவு சீராக இருக்குமானால் வந்து கலக்கும் புதுத் தண்ணிருக்கு ஏற்ப நிறம் மாறாது. அதுபோலச் சூழ்நிலைகளால் நல்ல திடமான மனிதர்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.”

466. “கதிரவன் ஒளிபுகாத எதுவும் பயன்தராது. அதுபோல அறிவொளி பெறாத எந்த மனிதனும் பயன்படமாட்டான்.”

467. “ஒருவர் திட்டுவதால் வந்துவிடுவதல்ல, அவமானம் என்பது. அறிவும் ஆளுமையும் பெற்றிருந்தும் சமுதாய மாற்றம் காண முடியாத நிலையே அவமானம்.”

468. “வெளிப்பாடுகள் எல்லாம் அழுக்காற்றைத் தோற்றுவிக்கும். ஆதலால், வெளிப்பாட்டைத் தவிர்த்திடுக! பணிகளுக்குள்ளே ஒளிந்துகொண்டு உருப்படியாக எதையாவது செய்க.”

469. “காலம் வரும் என்று காத்திருப்பது கையாலாகாதவர்களின் செயல்; காலத்தை உருவாக்கிக் கொள்வது வாழ்வாங்கு வாழ்வோரின் செயல்.”

470. “சூழ்நிலை என்பது மாற்றமுடியாத ஒன்றல்ல. சூழ்நிலையை மாற்றுவதே மனிதன் பெற்றுள்ள பகுத்தறிவின் கடமை.”

471. “மனிதகுல வரலாற்றில் சூழ்நிலைகளை மனிதகுலம் மாற்றி வளர்ந்துள்ள சாதனையையே பார்க்கிறோம்.”

472. “தேர்தல் வெற்றி-தோல்விகளைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் நல்ல வலிமையான அரசை அமைக்க முடியாது.”

473. “மனிதன் எப்போதும் போர்க்குணம் உடையனவாக விளங்கவேண்டும்.”

474. “வாழ்க்கையை எளிதாக நடத்திக் கொள்ளக் கூடிய துழல்களை உருவாக்காது பணத்தின் மூலம் மட்டும்தான் வாழ்க்கையை நடத்த இயலும் என்ற சூழ்நிலை உள்ளவரையில் லஞ்சத்தை ஒழிக்க இயலாது.”

475. “நமக்கு முன்னேற வாய்ப்புக் கிடைத்த பொழுது நாம் முன்னேறுவதுடன் நம்முடன் இருப்பவர்களையும் அழைத்துச் சென்றால்தான் அழுக்காறு தோன்றுவதைத் தவிர்க்கலாம்.”

476. “பிரிவினைகளால் அதிகாரம் வரலாம். பகை போய்விடாது.”

477. “ஒன்று எவ்வளவுக்கு அமுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு வேகமாக மீண்டும் எழும்பும்.”

478. “தாழ்வு மனப்பான்மை முன்னேற்றத்தின் எதிரி.”

479. “தன்னிச்சைப் போக்கு, சர்வாதிகாரத்திற்கு முன்னோடி.”

480. “நான் நேற்றுச்செய்ததை இன்று அனுபவிக்கிறேன். இஃது உலகியல் நியதி.”

481. “விஞ்ஞானம் துன்பத்தை நீக்குவது, மெய்ஞ் ஞானம் நிலைத்த உண்மையான அறிவு.”

482. “சலுகைகள் தொடக்கத்தில் பயன்தரும்; சலுகைகள் தொடருமானால் சண்டித்தனத்தையே பயக்கும்.”

483. “பலருக்குத் தனிமை, திணிந்த இருளை விடக் கேடு செய்யும். ஆனால், சிலருக்குத் தனிமை ஒளி பொருந்திய துழ்நிலையை வழங்கும்.”

484. “கூட்ஸ் வண்டியில் உள்ள பெட்டிகள்: இணைப்பும் உடையன. தனித்தனியேயும் உள்ளன.”

485. “இருளுடன் ஒளி, தொடர்பு கொண்டே நீக்குகிறது! அதுபோலத் தீமையை அகற்றுவதிலும் கூட எதிர்மறை முயற்சிகளை விட உடன்பாட்டு முயற்சிகளே பயனுடையன.”

486. “தண்ணீர் ஓட்டமில்லாமல் நின்றால் பாசி பிடிக்கிறது. அதுபோல வாழ்க்கையில் எந்த இடத்திலாவது இயக்கமின்றி நின்றுவிட்டால் தனிமனிதனும் கெட்டுப்போவான்! சமுதாயமும் கெடும்.”

487. “புதிய நீர் ஊற்று வராத கிணற்றின் தண்ணிர் தூய்மையற்றது. அதுபோலவே புதியக் கருத்துக்களை ஏற்காத பழமைவாதிகளும் தூய்மை யுடையோராய் இருத்தல் அரிது”. (இங்குத் தூய்மை என்பது, மனிதகுலத்தின் மாற்றத்தில் ஈடுபாடு.)

488. “பெய்யும் மழைநீர், முறைப்படுத்தப் பெறாது தன்போக்கில் ஒடுமானால் நில அரிப்பு ஏற்படுகிறது. அதுபோல், தோன்றும் எண்ணங்கள் எழுச்சிகள் முறைப்படுத்தப் பெறாது போனால் சமுதாய அரிப்புகளாகிய சுரண்டல், கலகம் தோன்றும்.”

489. “மிக எடுப்பான உடம்பில் கூட ஒரு சிறு நோய் வந்துற்றால் உடம்பு இயங்க மறுக்கிறது. அது போல மானிடச் சமுதாயத்தில் ஒர் உறுப்பு இயங்காது போனாலும், சமுதாய இயக்கம் முழுமையாகாது.”

490. “நோயுற்றால் காட்டும் அக்கறையை நோயுறாது வாழும் நெறியில் யாரும் காட்டுவதில்லை.”

491. “முன்னேற்றத்தன்மை உடைய வாழ்க்கை வேண்டும் என்ற விருப்ப ஆர்வம் இல்லாதாருக்கு வழங்கப்படும் எந்த உதவிகளும் பாழுக்கிறைத்தன வாகவே முடியும்.”

492. “வாழ்க்கையில் அறநிலைகளைப் பற்றிக் கவலைப்படாதார், கடவுள் வழிபாட்டில் காட்டும் ஆர்வம் பயன் தராது.”

493. “அமைதி என்றால் சண்டையற்ற தன்மை என்றுமட்டும் கருதக்கூடாது. நல்லெண்ணத்தின் அடையாளம் உடன்பட்ட கொள்கைகள் இணக்கமும், ஒத்துழைப்புத் தன்மையும் வாய்ந்த செயற்பாடுகள் பொருந்தினாலேயே அமைதியாகும்.”

494. “ஆன்மாவினிடத்தில் ஒளிரும் அறிவை, உடல் ஆதிக்கம் செய்ய அனுமதித்து விட்டால் அழிவு தானே வந்துவிடும்.”

495. “பழக்கங்கள் என்பன உயிரை அடிமைப் படுத்துகின்ற, உடலுக்கு வாய்ப்பான கருவிகள்.”

496. “உடல் அடம் செய்தால், அதனை அடக்க நோன்பிருக்கலாம்; கால்நடை யாத்திரை மேற்கொள்ளலாம். ஆனால் உடலை அடக்கும் சக்தியற்றவர்களும் அறிந்தே மோசடி செய்பவர்களும் பாட மறைப்பிற்காக யாத்திரை செய்கின்றனர். பாபங்கள் கடவுளால் மன்னிக்கப்படுபவையல்ல.”

497. “உணர்ச்சி, சூழ்நிலையின் ஆற்றலால் தோன்றுவது: அறிவொடு தொடர்பில்லாதது. உணர்ச்சி பெரும்பாலும் மிருகத்தன்மையுடையது. அறிவார்ந்த உணர்வுகளே வாழ்க்கைக்கும் பயன் தரும்.”

498. “இறைவன் பலதரம் அவதாரம் எடுத்ததன் நோக்கம், மனிதனை மீட்பதற்காக மட்டுமல்ல. மனிதனுக்கு வாழ்க்கையின் இயல்புகளை வாழ்ந்து காட்டிக் கற்பிப்பதற்காகவேயாம்.! அதுமட்டுமல்ல. அவனுக்கு மனிதர்களுடன் வாழ்வதில் அவ்வளவு ஆனந்தம்.”

499. “உணவில் பல்வகை பொருள் சேர்ப்பதற்குக் காரணம் ருசிக்காக மட்டுமல்ல. பல்வகை ஊட்டங்கள் உடலியக்கத்திற்குத் தேவைப்படுகின்றன. உணவுப் பொருள்களில் எந்த ஒரு உணவிலும் உடலைப் பூரணத்துவத்துடன் இயக்கப் போதிய சக்தியில்லை. அதனால் பல்வகை உணவு, தேவை.

500. “மனிதனை ஆட்கொள்ளும் நம்கடவுளுக்குப் பல உருவங்கள் தேவையில்லை. ஆனால் கடவுள் தன் விருப்பப்படி உலகை இயக்குவதில்லை. ஆட் கொள்ளப்படும் உயிர்கள் வேண்டுவதை வேண்டிய வாறு வழங்கி ஆட்கொள்ளும் இயல்பினன். ஆதலால், இறைவனுக்குப் பல வடிவங்கள் வந்தன.”

"https://ta.wikisource.org/w/index.php?title=சிந்தனை_துளிகள்/401-500&oldid=1055645" இருந்து மீள்விக்கப்பட்டது