சிந்தனை துளிகள்/501-600
501. “பரிசுகளுக்காகக் காரியங்கள் செய்வது என்பது இரண்டாம் தரமே!”
502. “திறமைக்கு மாற்றாக நன்மை என்ற ஒன்றைக் காட்டாமல், தீமையை மட்டுமே கூறுவது, பழி துாற்றலாகும்.”
503. “உடைமைகள் பயனுடையனவாதல், உடைமை பெற்றோரின் செயல்திறத்தைப் பொறுத்தேயாம்.”
504. “இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, காங்கிரஸ் எதிர்ப்பைத் தவிர, வேறு கொள்கையில்லை என்றாகி விட்டது.”
505. “கல்வியறிவில் கேள்வியறிவு உயர்ந்தது; கேள்வியறிவிலும் பட்டறிவு உயர்ந்தது.”
506. “ஒருவன் வீட்டுக்குக் கொள்ளி வைக்கிறான் இன்னொருவன் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஏன்? கொள்ளி வைக்கப் பெறும் வீடு தனக்குப் பிடிக்காத கட்சிக்காரன் வீடு. இந்த அளவுக்குக் கட்சிப் பகை வளர்ந்துவிட்டது.”
507. “பரபரப்பு நிறைந்த வாழ்க்கை, காரிய சித்தியைக் கெடுக்கும்.”
508. “முகத்தில் மண்டியுள்ள வேண்டாத ரோமங்களைக் கூட, தண்ணீர் தடவி மெள்ள மழித்துத்தான் ஆகவேண்டும். அதுபோலத்தான் தீமையை மெள்ள மெள்ளப் பக்குவப்படுத்தித்தான் நீக்க வேண்டும்.”
509. “இன்று மத இயக்கங்களும் அரசியல் கட்சிகளைப் போல, கட்சி-பிரதி கட்சி மனப்பான்மையில் தான் இயங்குகின்றன.”
510. “செய்யும் வேலையைச் சுவைத்து கலை உணர்வுடன் பயனுணர்வுடன் செய்யாது போனால் அந்த வேலையில் குறையிருக்கும். போதிய பயன் இருக்காது.”
511. “எந்த ஒரு செயலிலும் அந்தரங்கமான ஆன்மாவின் முத்திரை பதியச் செய்தால் பொலிவு இருக்கும்.”
512. “தேரின் அச்சுக்கும் சக்கரத்துக்கும் இடையில் உள்ள தூரம் அளவாக இருந்தால் தேர் சீராக ஒடும். ஆன்மாவின் வாழ்க்கைக்குரிய தேவைகளுக்கும் உடலின் வாழ்க்கைக்குரிய தேவைகளுக்கும் உள்ள இடைவெளி குறைவாக இருந்தால் வாழ்க்கை என்ற தேர் சீராக ஒடும்.”
513. “திறமை மிகுதியும் இல்லாதாரே பெருமைக்குப் போட்டி போடுகின்றனர்.”
514. “திருக்கோயில் தேர் இழுவையில் உள்ள ஆர்வம்போல் சமுதாயத் தேரையும் இழுத்து, இன்ப நிலையில் நிறுத்த முயற்சித்தால் நல்லது.”
515. “வாழ்ந்து கொண்டிருக்கிறபோது, யாரும் ஆலோசனை கூறார். வீழ்ந்து படுத்துவிட்டால் ஆளுக்கொரு ஆலோசனை சொல்லிப் பைத்தியக்காரத் தனத்தை வளர்ப்பார்கள்.”
516. நூற்றுக்கணக்கான பேர் தேரிழுத்தாலும் ஒரு சிறு முட்டுக் கட்டையையும் சமாளித்து இழுக்க முடியாமல் தவிக்கின்றனர். அதுபோலத்தான் பலர் கூடி வாழ்ந்தாலும் பணி செய்யும் பாங்கில் தோன்றும் இடர்ப்பாடுகளைக் கடக்க மறுக்கின்றனர்.”
517. “தொண்டும், துணிவும் இடைவிடா முயற்சியும் கடின உழைப்பும் தேவை.”
518. “ஏழைகளின் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் முதலாளிகள் கண்டுபிடித்த பாதுகாப்பு முயற்சியே இனாம்; தருமம் முதலியன.”
519. “கடின உழைப்பே, உரிமையின் தாய்.”
520. “முறையாகக் கட்டப்பட்ட கட்டடத்தின் மேல், மாடி காட்டுவது எளிது. அதுபோல வளர்ந்த நிறுவனங்கள் மேலும் வளர்ச்சியை எளிதாக்கும்.”
521. “பிரச்சாரம் வலிமையான கருவி. இந்த பிரச்சாரக் கருவியின்மையால் மானிடச் சாதிக்கு நலம் பயக்கும் இயக்கங்கள் தோற்று, மானிடத்திற்குத் தீமை செய்யும் இயக்கங்கள் வெற்றி பெற்றுவிட்டன.”
522. “மானிடத்திற்குத் தீமை செய்யும் இயக்கங்கள் வெற்றி பெற்று வருவதன் விளைவுகளை கொடிய வறுமையினாலும் கெட்ட போலி உலகத்தின் இயக்கத்தாலும் காண முடிகிறது.”
523. “கடவுளைக் கண்டது மாதிரி”-இது ஒன்று முகமன் அல்லது நடிப்பு அல்லது அறியாமையின் வெளிப்பாடு என்ற சூழ்நிலைகளில் சிக்கியவர்கள் கூறுவது.”
524. “பெரியார்-கலைஞரின் கடுமையான பார்ப்பன எதிர்ப்பு-அவர்களுக்கு எம்.ஜி.ஆர்.ஐக் கொடையாகத் தந்துவிட்டது.”
525. “துறத்தல் என்பது பெண்ணை மட்டுமல்ல; ஆணவத்தைக் கூர்மைப்படுத்தி வளர்க்கும் அனைத்தையும் துறத்தலே துறவு.”
526. “வாழ்விலேயே இயல்பாக “நான்” “எனது” என்ற முனைப்புக்கள் அற்று வாழ்தலே துறவு.”
527. “இன்று நாட்டில் துறவிகள் இல்லை. ஆசையில் எல்லாம் மோசமான ஆசை “தனிமுடி கவித்து அரசாள்வது”-இந்த ஆசைக்கு அடிமையானவர்களே இன்றைய துறவிகள்; மடாதிபதிகள்.”
528. "சமயம், தத்துவமாக இருந்தவரையில் விபத்தில்லை. அது என்று நிறுவனமாக அமைந்ததோ அன்றே அது மனிதக் குலத்திற்குக் கெடுதல் செய்யத் தொடங்கிவிட்டது.”
529. “ஜனநாயக அரசுகள் கூட்டத்தையும் கூக் குரலையும் கண்டு அஞ்சுகின்றன.”
530. “நம்முடைய அரசுகள் மக்களுக்குத் தேவையானதைச் செய்வதற்குப் பதிலாக மக்கள் ஆசைப் படுவதையே செய்கின்றன.”
531. “திட்ட முதலீட்டுச் செலவுகளுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும் வகையில் அரசுகள் ஊதாரித் தனமாக இருக்கக்கூடாது.”
532. “கோழைக்கு தைரியசாலி என்றும், முட்டாளுக்குத் தான் அறிஞன் என்ற எண்ணமும் வந்து விட்டால் அவனைத் திருத்த இயலாது.”
533. “சமயங்கள் மாறுபடா சமயவாதிகள் மாறுபடுவர்.”
534. “திருக்குறளைச் சமயச் சார்பான நூல் என்று கூறுவதற்கு வாய்ப்புக்கள் இருந்தாலும் அதனைச் சமயச் சார்பற்ற பொதுமை நூல் என்றே கூறி வரவேண்டும். இன்று பொதுமை உணர்வே தேவை.”
535. “மனத்திற்கு நல்ல பற்றுக் கோடு தராவிட்டால் அது சைத்தானைப் பற்றுக்கோடாக எடுத்துக் கொள்ளும். “வாழ்தல் வேறு; பிழைத்தல் வேறு.”
536. “தவறுகள் செய்வது குற்றமன்று. தவறுகளை நியாயப் படுத்துவதே குற்றம்.”
537. “வெற்றிகள் பொருந்திய காரியங்களைச் செய்யாது தோல்விகளைத் தழுவி அதற்குச் சமாதானங்கள் சொல்லிக் கொண்டிருப்பது முறையன்று.“
538. “பொறிகள், அறிவின் வாயில்கள். அறிவின் வாயில்கள், தூர்ந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.”
539. “மண்ணிலிருந்து மனிதரை விண்ணுக்கு ஏற்றுவது சாதனையல்ல. மண்ணை விண்ணகமாக்குவதே சாதனை.”
540. “கடவுளின் விருப்பம்; தான் தொழிற்படுவது மட்டுமல்ல; மானுடம் வெற்றி பெறவேண்டும் என்பதே கடவுளின் திருவுள்ளம்.”
541. “தன்னை வென்ற போதே மானுடம் வெற்றி பெறும்.”
542. “விதியின் பிழை!” என்று இராமன் தன்னம்பிக்கையின் காரணமாக விதியின் மீது பழி சுமத்துகிறான்.”
545. “புலால் வழியதான போர் வீரம் ஏற்பு உடையதல்ல. கற்ற, கேட்ட அறிவால் உருவாகும்.”
த-5 அறிவும்; வீரமும் ஏற்புடையதல்ல. நீதியும் அருளும் சார்ந்த வீரமே வீரம் இதுவே ஏற்புடையது.”
544. “இறைவனுக்கும் உயிருக்குமுள்ள இடை வெளியை நீக்கி இசைவிப்பது - இசை.”
545. “தமிழர்கள் விநோதமானவர்கள். பாராட்டுவதைப் பின்பற்ற மாட்டார்கள்.”
546. “சிந்தனை, நினைப்பு, சொல், செயல் - இவை ஒத்திருப்பின் அருள் பழுத்த வாழ்வு கிட்டும்.”
547. “பாட்டையும் பாட்டுடைப் பொருளையும் அனுபவித்துப் பாடும்பொழுது மனிதனின் நிலை உயர் கிறது.”
548. “வள்ளலார் ஒரு ஆன்மா. அந்த ஆன்மாவும் படிமுறையில் வளர்ந்ததாகும். இன்றைய உலகத்திற்குத் தேவையான வள்ளலார், கடைசியாக வளர்ந்த வள்ளலாரேயாம்.”
549. “பொது நெறிக்கும், மனித நேயத்துக்கும் வள்ளலார் செய்த தொண்டு போற்றத் தக்கது.”
550. “திட்ட முதலீடு இல்லாச் செலவுகள் நெடிய நோக்கில் வறுமையையே தரும்.”
551. “சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகளும்; நிலப் பிரபுக்களும் கூட வயிற்றுக்குச் சோறு போடத் தவறுவதில்லை.”
552. “அறியாமையில் உழல்பவர்களுக்கு நன்றும் தீதும் பிரித்தறியத் தெரியாது.”
553. “தமிழினம், சிந்தனையால் உயர்ந்ததுதான். ஆனால், வாழ்க்கையில் அப்படியில்லை.”
554. “ஐ.நா.சபையில் பேசுவதே ஒரு அனுபவம். குற்றம் சாட்டப்படாத நாடுகளே இல்லை. ஆனால், நாகரிகப் பொலிவு இருக்கும்.”
555. “நான்கு திசையறிவும் கலக்கும் பொழுதே மனிதன் பூரணத்துவம் அடைகின்றான்.”
556. “கலை, கலைக்காக அல்ல; வாழ்க்கைக்காக.”
557. “உறவுகளைப் பராமரித்தல் ஒரு கடமை. இதைச் சரியாகச் செய்யாமையே பல இழப்புகளுக்குக் காரணம்.”
558. “காலதாமதமாக நிகழ்ச்சிகளுக்குப் போதல் தவறுமட்டுமல்ல, வெட்கப்படவேண்டிய ஒன்று.”
559. “செய்யவேண்டியவைகளை வரையறை செய்து கொள்ளாவிட்டால், செயல் பயன்தராது.”
560. “விவகாரப் புத்தியுடையவர்கள் தவறுகளுக்கு வருந்தமாட்டார்கள். சட்டங்களும் நியாயங்களும் பேசுவார்கள்.”
561. “முழுமையாக அனுபவிக்கப்படாதவை எல்லாம் மேலும் மேலும் ஆசைகளை வளர்த்து அலைக்கழிக்கும்.”
562. “வைத்தியர் ஆலோசனை நல்லதே. ஆனால் பின்பற்ற ஆரம்பித்தால் மனம், உடல் பக்கமே வேலை செய்யும்.”
563. “உடலுக்கு பயன்படாத கழிவுப் பொருள்களும்கூட நிறுவனத்திற்குத் தேவையே!”
564. “சுவையுள்ளன உடலுக்கு நலம் தருவதில்லை. அதுபோல, ஆசைகளுக்கு உகந்தனவும் மகிழ்ச்சியைத் தரா.”
565. “புதிய தடம் காண்பது எளிதன்று. ஆனால் காண்பதில்தான் மனிதனின் வெற்றி இருக்கிறது.”
566. “வாழ்க்கையை வென்றவர்களுக்கே தனிமை நல்லது. வாழ்க்கையில் வெற்றி பெறாதவர்களுக்கு தனிமை கேடே செய்யும்.”
567. பலருக்குத் தனிமை இருளை விடக் கேடு செய்யும். சிலருக்கோ ஒளி பொருந்திய சூழ்நிலையை வழங்கும். “இஃது அவரவர் வாழ்நிலையைச் சார்ந்தது.”
568. “வாழ்க்கையை வென்றவர்களுக்கு ஒய்வு பயன்தரும். மற்றவர்களுக்கு ஒய்வும் ஒரு உபத்திரவமே.”
569. “மற்றவர்களிடமிருந்து பெருமையால் உயர்ந்து விடுவதும் உபத்திரவமே. ஏனெனில்செய்யும் தவறுகளைக் கூட சுட்டிக் காட்ட ஆட்கள் கிடைக்க மாட்டார்கள்.”
570. “நோய் நீக்கக் கூடியதே. ஆனால் நோய் நீக்கத்திற்கு முயற்சியில்லாமல் படுக்கையில் கிடப்பவர் சோம்பலை விரும்புகிறார்கள் என்பது பொருள்”.
571. “மக்களுக்கு ஆரவாரத்தில் ‘உள்ள விருப்பம் அமைதியில் இல்லை.”
572. “மக்களுக்குத் திருவிழாக்களில் உள்ள ஈடுபாடு வழிபாட்டில் இல்லை.”
573. “ஏழைகள், தன்னம்பிக்கையை இழந்து செல்வத்தை நம்புவார்கள்.”
574. “ஆபத்துக் காலத்திற்குக் கூட அரசுகள் ஏழைகளைப் பொறுத்தவரையில் கடினமாகத்தான் இருக்கின்றன.”
575. “மனிதனை வளர்க்காத எந்தச் செயல் முறையும் பயன்தருவன அல்ல.”
576. “தர்மம்-அறம் முதலியன நிலவுடைமைச் சமுதாயத்தின் பயனற்ற சொற்கள்.”
577. “ஒரு மனிதன் பிறிதொரு மனிதனுக்கு இயல்பிலேயே கடமைப்பட்டிருக்கின்றான் என்பதே உயர்வுள்ள சமயக் கருத்து.”
578. “பயத்திற்குக் கடவுளும், அன்புக்கு மனித குலமும்.”
579. “குறித்த கால எல்லையில் கடமைகளை முடித்துவிடுவது பலவகையில் நன்மை. காலத்தால் பண்டங்கள் மட்டும் கெடுவதில்லை. மனிதர்களும் கெடுவார்கள்.”
580. “மக்களாட்சியின் சின்னம் தேர்தல் மட்டு மல்ல. அரசின் செயற்பாடுகளில் மக்கள் தாமே வலிய மேற்கொள்வதுமாகும்.
581. “மக்களுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளி குறைந்தாலே நல்லாட்சி அமையும்.”
582. “மக்களுக்காக அரசு அமைந்திருக்கிறது. அரசின் செயற்பாடுகள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே என்ற உணர்வும் மக்களிடத்தில் வளராது போனால் மக்களாட்சி முறை வெற்றி பெறாது.”
583. “படித்த பெண்களிடத்திலும் பயம் தெளியவில்லை.”
584. “வெற்றி பொருந்தியவாறு வாழ்ந்து முடிக்காது போனாலும் மற்றவர்கள் தயவில் கடைசிப் பயணத்திற்குக் கொட்டு முழக்கு கிடைக்கும்.”
585. “தொடர்ச்சியான செயற்பாடே காரிய சாதனை”.
586. “காலத்தின் அருமைக்கேற்ப செயற்படுதலே முதற்பணி. அதற்குபின்தான் வசதிகள்!”
587. “இன்பக் காதல் வாழ்க்கை உடலுறவில் மட்டும்தான் இருக்கிறது என்ற அறியாமை உள்ள வரையில், குடும்ப நலத்திட்டம் நிறைவேறாது.”
588. “ஆண் வர்க்கத்தின் எடுப்பான சமூகப் பின்னணி கொஞ்சம்கூடக் குறையவில்லை. அதனால் பெண்களுக்கும் விடுதலை கிடைக்கவில்லை.”
589. “எதையும் நெறிமுறைப்படுத்தி இயக்கக் கூடிய இறைமைத் தன்மை உடைய அரசு, முறையானதாகவும் வலிமை உடையதாகவும் அமையாவிடில் எதுவும் சரியாக நடக்காது.”
590. “எல்லாப் பிரிவுகளையும் விட, அரசியல் பிரிவு அதிகத் தீமையைத் தரும்.”
591. “எந்த ஒன்றும் அதாவது, பேச்சு, எழுத்து, சமயம்-இவைகள் பிழைப்புக்கு என்ற நிலை வந்து விட்டால் அவை மக்களுக்குப் பயன்படாது.”
592. “இல்லறத்தில் வாழ்வோர் பற்றுக்கள் உடையோர் என்றும், துறவறத்தில் வாழ்வோர் பற்றற்றவர்கள் என்றும் கருதக்கூடாது. தன் சாதியைக் கூட துறக்காத துறவிகள் நமது நாட்டில் உண்டு.”
593. “புரோகித சமயத்தால் மனித உலகத்திற்கு ஒருபோதும் நன்மையில்லை.”
594. “இந்திய நாட்டை அடிமைப்படுத்தியதில் ஆங்கிலேயர்களுக்கு இருந்த பங்கைவிட, இந்திய மதப் புரோகிதர்களுக்குக் கூடுதலான பங்குண்டு."
595. “நாட்டில் விஞ்சிய நிலையில் வளரும் பண ஆசை குறைந்தால்தான் அறிவு வளரும்; திறன் வளரும்.”
596. “பெரியவர்கள் செய்யும் தவறுகள் கட்டாயம் பாராட்டப் பெறும். இதுதான் இந்த உலகத்தின் விநோதமான போக்கு.”
597. “ஆபாசம் என்பது காணப்பெறும் பொருளில் இல்லை. காண்பவர் கருத்தில் உள்ள குறை பாடேயாம்.”
598. “தன்னம்பிக்கை ஒன்றைத் தவிர வேறு எதுவும் துணையில்லை.”
599. “உயர் குறிக்கோள் இல்லாத வரையில் தவறுகள் திருந்தா.”
600. “தாய்மொழி வழிக் கல்வி சிந்தனையைத் தூண்டி வளர்க்கும்.”