சிந்தனை துளிகள்/601-700

விக்கிமூலம் இலிருந்து

601. “தாய்மொழிக் கல்வி, கற்ற அறிவைப் பன்மடங்கு விரிவாக்கும்.”

602. “பழந்தமிழரின் கட்டுமானக் கலைக்கு, தஞ்சைப் பெருவுடையார் கோயில் எடுத்துக்காட்டு.”

603. “பழந்தமிழரின் வாழ்வில் தண்ணீர்நிர்வாக்க் கலை பொருந்தியிருந்ததற்கு, கரிகாலன் கட்டிய கல்லணை எடுத்துக்காட்டு.”

604. “தட்ப வெப்பங்களைச் சமநிலைப்படுத்தி வாழ்ந்தமைக்கு, சிலம்பில் வரும் ஏழுமாடக் கூடம் சான்று.”

605. “தன்னலம் சார்ந்த வாழ்க்கைக்கு தூண்டுகோல் தேவையில்லை.”

606. “நோயே படுக்க வைத்துவிடும். சோம்பேறிகளுக்கு நோய் வந்தால் எளிதில் போகாது; நோயும், சோம்பலும் உடன் பங்காளிகள்.”

607. “கடின உழைப்பும் .ெசல்வமும் கூட்டாளிகள்.”

608. “அற்பர்களிடத்தில் அவர்கள் தவிர்க்க முடியாது வேண்டப்படுகிறார்கள் என்ற எண்ணம் வர அனுமதிக்கக்கூடாது. அப்படி வந்துவிட்டால் அவர்கள் பெரிய மனிதர்களாகி விடுவார்கள்.”

609. “அரசுக்கும் மக்களுக்கும் இடையில் இடைவெளி இருத்தல்கூடாது.”

610. “அரசுக்குரிய வரியைக் கொடுப்பதை ஒரு அறவழிப் பணி என்ற எண்ணம் மக்களிடத்தில் உருவாக வேண்டும்.”

611. “ஒழுங்கமைவுகள் இல்லாத எந்தப் பணியும் நிறைவான பயனைத்தராது.”

612. “முறைப்படுத்தப் பெற்ற பணிகள் ஒரு போதும் வெற்றியைத் தராது போவதில்லை.”

613. “தன்னையே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் ஒருபோதும் பயன்படமாட்டார்கள்.”

614. “நட்பு-உறவு என்பதும் நோய் வராமலும் மேலும் வளரத்தக்க வகையிலும் பராமரிக்கப் பெற வேண்டிய ஒன்றே!”

615. “தன்னை வளர்த்துக் கொள்வதே வெற்றி வாய்ப்புக்குரிய ஒரே வழி.”

616. “பிறர் தோளில் நின்று பிடிக்கும் வெற்றிகள் நிலையான பயனைத் தரா.”

617. “அகந்தை அறிவை மயக்கும்; அடக்கம் அறிவை விரிவாக்கும்.”

618. “வழி, செல்லும் வழியிலேயே செல்லும், அதுபோல, வரலாறு செல்லும் வழியிலேயே செல்வது அறியாமை. வரலாற்றை நெறிப்படுத்திச் செலுத்த வேண்டியது அறிஞர்களின் கடமை.”

619. “காதல் மனமக்கள் மகப்பேற்றினை விரும்புவதுபோல, அறிஞர்கள் சமுதாய மாற்றத்தினை விரும்ப வேண்டும்.”

620. “நிலஉடைமை மீதுள்ள பற்று, உற்பத்தி ஆவேசமாக மாற வேண்டும்.”

621. “மிகச் சாதாரணமான மனிதர்களே ஆர வாரம் செய்கின்றனர். இவர்கள் கரையோரக் கடலில் மிதக்கும் நத்தைகள்; முத்துக்கள் அல்ல.”

622. “செயல்கள் செய்வதைவிட, அச்செயல்கள் வழி, பயன் காண்பதே பெருமை.”

623. “அரசியல் அதிகாரப்பசி, மனிதனை கள்ளை விட கொடுமையாகக் கெடுக்கும், இந்தப் போதைக்கு ஆளாகக்கூடாது.”

624. “எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் ஏழைகளுக்குரிய பங்கை எடுக்க விரும்புவதில் பின்தங்கியதில்லை.”

625. “பொறுப்புக்களைப் பகிர்ந்து கொண்டால் தான் உரிமைகளைப் பகிர்ந்து கொள்ள முடியும்.”

626. “உடலுறுப்புக்களில் கை, வயிறு என்பன தொடர் செயற்பாட்டினதாகத் தேக்கமில்லாமல் செயற் பட்டால்தான் உடல் நலம். அதுபோல ஒரு நிர்வாகத் தின் அனைத்துறுப்புக்களும் செயற்பட்டாலே நலம் வந்தமையும்.”

627. “மனதில் உறுத்தக் கூடிய எதையும் உரியவர்களிடம் சொல்லித் தீர்வு காண்பதே எதிர் விளைவு களைத் தீர்க்கும்.”

628. “தன்னை வளர்த்துக் கொள்ளாமல் மற்றவர்கள் வாழ்வதில் அழுக்காறு கொள்வது வாழும் நெறியன்று.”

629. “திட்டமிட்ட எந்தச் செயலும் நிறை நலன் தரும்.”

630. “படித்தவர்கள், படிக்காதவர்கள் இவர்களிடையே நாகரிகத்தில் பெரிய வேறுபாடில்லை.”

631. “ஒழுங்குகளை கடைப்பிடித்தலே வெற்றிகள் அனைத்திற்கும் அடிப்படை.”

632. “அவியலில் பல பொருள்கள் கலந்து தம் முள் சுவைகளைப் பரிமாற்றம் செய்துகொண்டு அதே போது தனித்தன்மையையும் இழக்காமல் இருப்பது போல் சமுதாய அமைப்பும் இருக்கவேண்டும்.”

633. “நேருஜி இருந்த இடத்தில் மற்றொரு வரை வைத்துப் பார்க்க இயலவில்லை.”

634. “சடங்குகளினால் விளையும் பயன்கள் யாதொன்றும் இல்லை. ஆனால், உணர்வைத் தூண்ட சடங்குகள் துணை செய்யும்.”

635. “மனிதர்களைத் திருத்தக் கட்டுப்பாடுகளால் இயலாது. மடை மாற்றங்கள் தேவை.”

636. “தொடர்ச்சியான செயற்பாடே பயனுடையது.”

637. “ஆண்களின் ஆதிக்கம் தலையெடுத்த பிறகு பெண்ணைப் பொருளாக்கினர்.”

638. “பெண்மை அருளும் தன்மையுடையது; அரவணைக்கும் தன்மையுடையது; பொறுப்பேற்கும் நெறியுடையது.”

639. “கருவை வளர்த்து உயர்நலம் சேர்த்து பிறப்பிக்கும் பெருந்தவம் பெண்பால் அமைந்ததே. அதுவே பெண் உயர்ந்தவள் என்பதற்குச் சான்று.”

640. “மனிதன் வாழ்க்கையின் கரையோரங்களைக் கடந்து ஆழ்நிலைப் பகுதிக்குச் சென்றாலே முழுமை யடைவான்.”

641. “தெப்பம் கையகத்ததாக இல்லாமல் போவதிலிருந்து பாதுகாக்கக் கரையில் நிற்பவர் கயிறு கட்டிப் பிடித்துக் கொள்வர். அதுபோல நாம் திசை தெரியாமல் போய்விடாதிருக்கக் கடவுளிடத்தில் நம்மை கட்டிப் போட்டுக் கொள்ளவேண்டும்.”

642. “தீய பழக்கங்களால் கெடுவதறிந்தும் தீய பழக்கங்களிலிருந்து விடுதலை பெற முயலாதது இரங்கத்தக்கது.”

643. “தெப்பத்திற்கும், தெப்பக்குளத்தின் தண்ணீர் மட்டத்திற்கும் உள்ள இடைவெளி அளவை விட கம்பு நீளமாக இருப்பின் அக்கம்பு தெப்பத்தைத் தள்ளப் பயன்படாது. அதுபோல நிர்வாக அமைப்பை விட நிர்வாக இயந்திரம் பருத்துவிடின் நிர்வாகத்தை இயக்க உதவி செய்யாது.”

644. “ஒளி நிறைக் கதிரவனைக் கூட, நில உருண்டையின் நிழல் படிந்து மறைக்கிறது. அது போல, பேராற்றல்களும் கூட, தற்சார்பின் காரணமாக மறைந்து போகிறது.”

645. “நாதம்-இதயத்தினில் இயங்கும் மெல்லோசை, இதனை சுரப்படுத்துவது நாதசுரம்.”

646. “மணிவிழா இரண்டாவது சுற்றுக்கு ஆயத்தமாவது.”

647. “கண்ணால் பார்க்காத வேலை பயன் தராது.”

648. “இன்றைய இராம - இலக்குவர் வி.ஜி. பன்னிர்தாஸ், சந்தோஷம் சகோதரர்கள்.”

649. “ஆன்மா-உயிரே முதல். இந்த முதலைப் பெருக்கி வளர்க்கவே உடல் முதலிய அனைத்தும்.”

650. “மனிதகுலம் என்ற ஒருமை ஆத்மா. இந்த ஆத்மாவை அனைவரும் வளப்படுத்தவேண்டும்.”

651. “இழிவானது என்று கருதப்படுபவைகளை நாடகங்களில் காட்டக்கூடாது,”

652. “படித்தவர்களின் தவறுகளாலேயே வரலாறு கீழ்மைப்படுகிறது.”

653. “படித்தவர்கள் படிப்பிற்கேற்றவாறு தம்முடைய வாழ்க்கைப் போக்குகளை மாற்றிக் கொள்ளாது போனால் படிப்பினால் பயன் இல்லை.”

654. “தனிமனிதனை உருவாக்குவது அவனுடைய வாழ்காலத்தின் சமுதாய அமைப்பே.”

655. “முன்னேற வேண்டும் என்ற பசித்துடிப்பு இல்லாத சமுதாயம் எவ்வளவு வசதிகள் இருந்தாலும் முன்னேறாது.”

656. “முன்னேற்றத்தின் முதற்படி ஆர்வத் துடிப்பே!”

657. “நடையில் வலக்கால் - இடக்கால் ஒத்திசைந்து நடப்பதுபோல, நிர்வாக அமைப்பு ஒத்திசைந்து இயங்கவேண்டும்.”

658. “செய்ய முடியவில்லை” என்று திட்ட மிடவே பயப்படுகிறவர்கள் ஒன்றுமே செய்ய மாட்டார்கள்.”

659. “பொருளாதார முன்னேற்றம் என்பது ஒரு வழுக்கல் மரம். இதில் கவனமாக ஏறவேண்டும்.”

660. “வேலையைச் செய்யாதவர்கள், வேலை பறிபோவதை விரும்பமாட்டார்கள்.”

661. “உடலுக்குச் சலுகை தரலாம், உயிர்ப் பாதுகாப்புக்கு முரண் இல்லாமல்! அதுபோல, சமுதாய நலனுக்கு விரோதமில்லாமல் சலுகை காட்ட வேண்டிய அவசியமிருந்தால் சலுகை காட்டலாம்.”

662. “ஏழ்மை திடீரென வந்ததன்று. பலவித மான கேடுகள் முதிர்ந்த நிலையில் ஏழ்மை ஆகிறது.”

663. “பலவிதமான உணர்வுகளின் தொகுப்பே நல்வாழ்க்கை.”

664. “சிறியவர்கள் முரட்டுத்தனத்துக்கே கட்டுப்படுவார்கள்.”

665. “எதிர்மறை இயக்கங்கள் ஆக்கப்பணிகள் செய்ய இயலாது.”

666. “சட்டங்களில் உள்ள ஒட்டை வழித் தப்பித்து ஓடினால் ஓடுபவனைக் குறை சொல்லக் கூடாது. சட்டத்தையே குறை சொல்லவேண்டும்.”

667. “எப்படியோ மனிதர்கள் அவர்களைச் சுற்றியே வட்டமிடுகிறார்கள்! மற்றவர்களைப் பற்றிக்.” கவலைப்படுவதாகக் கூறுவதுகூட தன்னை வளர்த்துக் கொள்ளத்தான்!”

668. “வயிறாரச் சாப்பிட விரும்புகிறவர்கள் உடலார உழைக்க முன்வரவேண்டும்.”

669. “உழைக்காமல் உண்பவர்கள், மற்றவர் குருதியைக் குடிப்பவர்கள்.”

670. “காற்று அடிக்கும் திசையில் மரம் சாய்ந்தால் மரம் விழும். காற்றை எதிர்த்து நின்றால் வாழும். அதுபோல் சூழ்நிலைகளைச் சார்ந்தே வாழ்கிறவர்கள் வீழ்ந்துவிடுவார்கள். சூழ்நிலைகளை எதிர்த்து மாற்ற முனைபவர்களே வாழ்வார்கள்.

671. “கவர்ச்சியில் மயக்குபவவை நன்மை செய்தல் அரிது.”

672. “குறிக்கோள் தழிஇய வாழ்க்கை இருந்தாலே திட்டமிடும் மனப்போக்கு தோன்றும்.”

673. திட்டமிடாத செயல்முறைகள் முழுப் பயனைத் தரா.”

674. “செல்வத்தின் ஊற்று நிலமே!”

675. “பிறர் பணத்துக்கு, செலவுக்குத் திட்ட மிடுபவர்கள் எண்ணிக்கை மிகுதி.”

676. “காற்று வீசும்பொழுது தலை தெறிக்கச்சுற்றும் மரங்கள் பலமற்றவை. அதுபோல சோதனைகள் வந்துற்ற பொழுது அலமருகிறவர்கள் பலமற்றவர்கள்.”

677. கழிவுகளும்கூட, பொருளுற்பத்தி சாதனங்களே!”

678. “தன் முனைப்புடையவர்கள் காரியங்களை விட்டுவிடுவர்.”

679. “உயிர் வாழ்வில் உள்ள ஆசையே நோய்களை வளர்க்கிறது; பாதுகாக்கிறது.”

680. “காரியம் ஒன்றுபோலத் தோன்றும். ஆனால், அதன் காரணங்கள் ஒன்றல்ல; பலவேயாம்.”

681. “அழுக்காறு நுண்மை வடிவத்தில் இருந்தாலும் ஆற்றலைக் கெடுக்கும்.”

682. “மூளைச் சோம்பல் செயல்திறனைக் கெடுக்கும்.”

683. “காலத்தின் விளைவுகளையெல்லாம் அளந்து எண்ணி அனுபவிப்பவர்கள் காலத்தை அளந்து பயன்படுத்தத் தவறிவிடுகிறார்கள்.”

684. “வளர்ச்சியில்லாத அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் இன்று ஒழுக்கக் கேட்டை-முறைகேடான அதிகாரப் பிரயோகத்தை தேசீய மயப்படுத்தி விட்டார்கள்.”

685. “இன்றைய அரசியல் கட்சிகள்-தேர்தல் இயக்கங்களே! அரசியல் இயக்கங்கள் அல்ல!”

686. “இன்றைய சமுதாய அமைப்பில் உடல் வலிமைமே ஆதிக்கம் செய்கிறது. அறிவறிந்த ஆளுமையல்ல.”

687. “ஒரு நொடிப் பொழுது வாழ்க்கை நின்றாலும் பல நாள்களின் முன்னேற்றம் தடைப்படும்.”

688. “விரைவு மிக்க இயந்திர கதியில் உலகம் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியர்கள் ஆமை வேகத்தை மாற்றிக் கொண்டார்களில்லை.”

689. “அரசாங்கம் வேலைகளை உற்பத்தி செய்யும் இயந்திரமல்ல. மனிதர்களேதான் வேலைகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.”

690. “ஆசைகாட்டி வாங்குவன எல்லாம் ஒரு வகையான சுரண்டலேயாம்.”

691. “வெள்ளாடு வேளாண்மைத் தத்துவம் சொல்வது போல, சில பத்திரிக்கைகளைப் படித்த அளவிலேயே சிலர் விமர்சனப் புலிகளாகிவிடு கின்றனர்.”

692. “அணைக்கப்படும் பாங்கைப் பொறுத்தே அதிகாரம் நிலைபெறும்; அடிப்பதில் அல்ல.”

693. “சுகத்தை அனுபவிக்கும் மனப்போக்கு வந்த பிறகு உழைப்பாளியாதல் அரிது.”

694. “விமர்சனத்திற்கு வெட்கப்படுபவர்கள் வளர்ச்சியை விரும்பாதவர்கள்.”

695. “விமர்சனமும் வளர்ச்சியும் காரண காரியங்கள்.”

696. “இன்றைய அறிவு நல்கும் கருவிகள் அனைத்தும் அறிவு என்ற பெயரில் அறியாமையையே வளர்க்கின்றன.”

697. “நிலத்தினை முழுதும் பயன்படுத்தும் ஆற்றலே இன்னும் மனிதனுக்கு வரவில்லை.”

698. “இயற்கையை வெல்லும் முயற்சியில் மனிதன் ஈடுபடவில்லை. இயற்கையை ஒட்டித்தான் வளர்ந்து வருகின்றான்.”

699. “இன்று சாதாரணமானவை என்று கருதப் பெறுபவை அனைத்தும் உயர்ந்தவைகளேயாம்.”

700. “விதிகள் - அச்சமின்றி நடக்க உதவுவன. விதிகள் - அச்சமின்றிக் காரியங்கள் செய்ய உதவுவன.”

"https://ta.wikisource.org/w/index.php?title=சிந்தனை_துளிகள்/601-700&oldid=1055647" இலிருந்து மீள்விக்கப்பட்டது