உள்ளடக்கத்துக்குச் செல்

சிந்தனை துளிகள்/701-800

விக்கிமூலம் இலிருந்து

701. “இராமன் தனக்காக நடந்தான். கண்ணன் மற்றவர்களுக்காக நடந்தான்.”

702. “எனக்குத் தெரியும்” என்ற முடிவே அறியாமையின் முகடு.”

703. “ஒருவரிடம் இல்லாத ஒன்றை, அவசியத் தேவை கருதிப் பெற்றால் கையூட்டு; கைமாற்று; தேவையில்லாத ஒன்றைப் பெற்றால் அது அன்பின் நடைமுறை.”

704. “பராமரிக்கப் பெறாத உறவுகள் பழுதுறும்.”

705. “பாஞ்சாலிக்கு - கடைசியில் அழைத்த பிறகு, கண்ணன் உதவி செய்ததற்குக் காரணம் பாஞ்சாலியின் தன்வினை முயற்சி முதிர்ச்சியடையட்டும் என்பதனாலேயாம்.”

706. “தன்வினை முயற்சி முதிர்வடையாதவர்களிடம் பிறவினை முயற்சிகள் தாக்கங்களை ஏற்படுத்திப் பயன்தராது.”

707. “தங்கள் மனைவி, மக்கள், சுற்றம் என்று சுற்றுபவர்கள் உயர்தரக் குணமுடையவராக இருத்தல் இயலாது.”

708. “என்ன-எதற்காகச் சொல்லியிருப்பார் என்று ஆய்வு செய்யாமலே ஒருவர் மீது ஆத்திரப் படுபவர்கள் அகம்பாவிகள். உதவி செய்வதைக் கடமையாக வைக்காமல் கட்டுப்பாடாக ஆக்குவார்கள்.”

709. “பயனுடையதாக ஒருவர் செய்யும் வேலை அமையாதுபோனால், அது விபசாரத்திற்குச் சமம்.”

த-6

710. “ஒழுங்குப்படுத்திக் கொள்ள மறுப்பவர்கள் ஒன்று தவறு செய்பவர்கள். அல்லது சோம்பேறிகள்.”

711. “எந்த ஒன்றும் திருப்பித் தரப் பெறாது போனால் உலகில் வறட்சி தோன்றும்.”

712. “பணம் வருவதும் போவதும் போதாது. ஒவ்வொரு காசும் வரும்பொழுது நற்பண்புகளுடன் அதாவது அறிவறிந்த ஆள்வினை-அன்பு முதலியவற்றுடன் வந்தடைய வேண்டும்.”

713. “தமிழின ஒருமைப்பாடு காண்பதே சிலம்பின் நோக்கம்.”

714. “பெருமை வந்துறும்பொழுது சிலர் அடங்காமல் அகந்தை கொள்வர். இது உறவை, ஒருமைப்பாட்டைக் கெடுக்கும்.”

715. “வள்ளுவம், சிலம்பு முதலியன கூறும் உயர்ந்த நோக்கங்களைச் சமுதாயம் முறியடித்துவிட்டது.”

716. “சட்டங்களுக்குத் திருத்தங்கள்-சமுதாயத் .ேதவைகலளாக அமையவேண்டும். இதைக் கண்காணித்து அரசின் கவனத்திற்குக் கொண்டுவர சட்ட ஆலோசனை ஆணைக்குழு தேவை.

717. “வாழ்க்கையின் துணை நலமாக அமையும் பெண், அனுபவப் பொருளாகவும் பயனாகவும் இருக்கிறாள்.”

718. ஞானம் இல்லாதபெண்கள் உள்ள சமுதாயம் சீர்கெடும்.”

719. “மக்களைத் தகுதியுடையவர்களாக வளர்க்கும் வரை நம்பிக்கையும் கண்காணிப்பும் இணைந்தே இருக்கவேண்டும்.”

720. சமுதாய மாற்றங்களை, சீர்திருத்தங்கள் மூலமே செய்துவிட முடியாது. சீர்திருத்தம் என்பது புண் நாறாமலிருக்கப் புணுகு பூசுவது போலத்தான்; புண் ஆறாது.”

721. “இந்திய சமூகம், நோய் நிறைந்த சமூகம். எந்த மருந்தாலும் நோய் தீரவே இல்லை. புரட்சியே தேவை.”

722. “ஆதி திராவிடர்களுக்கு என்று தனித் தொகுதி அமைப்பு தவிர்க்கப்பட்டது. இந்தியாவிற்கு நன்மையாயிற்று.

723. “காதல் செய்யும் வாய்ப்பு இருந்தாலே சமூகத்தில் எல்லாத் தீமைகளும் போய்விடும்.”

724. வகுப்பு வாரி உதவித் திட்டங்கள் உள்ள வரை சாதிச் சங்கங்கள் வளரும்.

725. “உத்தரவாதம் வழங்காத அரசு உள்ளவரை எந்த ஒரு ஒழுக்கமும் மக்கள் மன்றத்தில் கால் கொள்ளாது.”

726. படிப்பதனால் மட்டுமே நற்பண்புகள் வந்து விடுவதில்லை. சமூக நிகழ்வுகள் தாம் பண்பாட்டுக்குக் களன்.”

727. “வகுப்பு வாரி உதவித் திட்டங்கள் உள்ள வரை சாதிச் சங்கங்கள் வளரும்.”

728. “சமூகத் தகுதிகளே இன்றுள்ள பிரச்சினை. தீண்டாமையல்ல.”

729. “இந்திய சமூகத்தின் அடிப்படைக் கட்டுமானத்திலேயே தீண்டாமை, சாதி வேற்றுமை முதலிய தீமைகள் படிந்துள்ளன. இந்தத் தீமைகளை புரட்சியின் மூலமே மாற்ற இயலும்.”

730. “நடந்து போனதற்குக் கவலைப் பட்டுப் பயனில்லை. இனி நடக்க வேண்டியதற்கே கவலைப் படவேண்டும்”.

731. “பிறப்பின் சார்பால் வரும் குணக்கேடுகளை நீக்கவே கல்வி-கேள்வி”

732. “ஏதாவது ஒர் உயர் நோக்கம் வாழ்க்கையை ஆக்கிரமிக்காதவரை குற்றங்களினின்று விடுதலை பெற இயலாது.”

733. “வேலை நடக்கும். ஆனால், நடந்த வேலைகளைக் கொண்டு பணி செய்தார் என்று முடிவு செய்யக்கூடாது. அவர் வாழும் காலத்தின் தேவை ஆற்றல்-வாய்த்த கருவிகள் ஆகிய அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் அளவை செய்ய வேண்டும்.”

734. “ஏழைகளாக வாழும் மக்களை அறிவுணரச் செய்வது கடுமையான பணி.”

735. “இயற்கையின் நியதி வழி, கொண்டும் கொடுத்தும் வாழும் முறையே அமைந்துள்ளது. மரங்கள் மண்ணிலிருந்து தண்ணிர், உரம் எடுத்துக் கொண்டு வளர்கின்றன. பின் அவை பழுத்த இலை களை மண்ணுக்கு உரமாகத் தந்துவிடுகின்றன”

736. கொடுக்காமல் எடுக்கும் வாழ்க்கை சுரண்டல் வாழ்க்கை”

737. “வறுமையை அனுபவித்துப் பழகிப்போன வாழ்க்கை”

738. “வாழ்தல் வேறு வாழ்க்கையின் நோக்கம் வேறு. வாழ்தலுக்குரிய முயற்சிகள் நோக்கங்களைச் சார்ந்தவையாகா”

739. “ஒழுங்கு முறையில்லாத செயற்பாடுகள் பயனைத் தரா.”

740. “அறிவார்ந்த வாழ்க்கையில் பின்தங்கிய நிலை, பண்பாட்டுக் குறைவைக் காட்டும்.”

741. “ஆசைகள் நிறைவேறாமை, வாழ்க்கையின் தொடக்கங்களாக அமையும்.”

742. “செலவழிக்கப் பெறாத காசுகளும் வரவேயாம்.”

743. “பயமும் சமூகத் தீமையே.”

744. “பொதுமையில் உருவாகும் நன்மைக்கு ஈடு இல்லை.

745. “பெரும்பான்மை உணர்வின் வழிப்பட்ட ஆதிக்கநிலை உணர்வுநிலை எல்லாச் சமூகத்தினருக்கும் உண்டு.”

746. “எந்தப் பணிக்கும் முதற்பணி மக்களைப் படிப்பிக்கும் பணியேயாம்!”

747. “பழகியவர்கள் எல்லாம் நண்பர்கள் அல்லர்; பழகாதவர்கள் எல்லாம் பகைவர்களும் அல்லர்.”

748. “உடல் நலத்திற்குச் சுற்றுப்புறச் சூழ்நிலை தேவை. அதுபோலவே உயிர் நலத்திற்கும் சுற்றுப்புறச் சூழ்நிலை தேவை.”

749. “ஒருவருக்கொருவர் மாறிக் கவலைப் பட்டாலே புதிய சமுதாயம் தோன்றிவிடும்.”

750. “வாழத் தெரியாதவர்களுக்குச் செய்யப்படும் உதவி பாழுக்கிறைத்ததாகும்.”

751. “ஒருவரின் இருப்பு உணரப்படும் நிலையே வாழும் நிலை.”

752. “உழைத்துப் பெறாத செல்வம் அருமையாகக் கருதப் பெறமாட்டாது.”

753. சாக்கடை முதலியவற்றின் தேக்கத்தைக் காத்திருக்கும் கொசு போல, சமூக நிகழ்வுகளில் ஏற்படும் தீமைகளைக் காத்திருப்பர் கயவர்.”

754. “கூட்டுக்கடை வைத்திருப்பவர் திடீரென்று கூட்டுக்காரருக்குத் தெரியாமல் தனிக்கடை வைப்பது ஐயத்திற்கு இடமளிக்கும்.

755. “நாத்திகத்திற்கு வள்ளுவம் ஆணை நிற்காது.”

756. தாம் செய்யும் பணிகளை மதிப்பீடு செய்ய மறுப்பது, பணிகளைப் பயனுறச் செய்ய விரும்பாமையே யாகும்.”

757. “பணிகள் பகிர்வே நிர்வாகம்; பகிர்வுகள் பொறுப்புடன் நிறைவேற்றப்படாது போனால் நொய்ம்மையே தோன்றும்.”

758. “நாட்டு மக்களைத் தொழிலாளர்களாகவே ஆக்கவேண்டும்; கடன்காரர்களாகவும் வியாபாரிகளாகவும் ஆக்கக்கூடாது.”

759. “உற்பத்தியொடு தொடர்பில்லாத எதுவும் புண்ணியமான கடமையாகாது.”

760. “நல்ல பணி, விளம்பரம் இல்லா மலர்த் தோட்டம்.”

761. “ஒழுங்குப்படுத்தப் படாத செயலால் ஒன்பது நடக்க வேண்டிய இடத்தில் ஒன்றுதான் நடக்கும்.”

762. “நிதானமற்றவர்கள், மற்றவர்களின் மானத்தை, கீர்த்தியைப் பழிக்கின்றனர்.”

763. “எந்த ஒன்றும் தவிர்க்க இயலாதது என்று ஆகிவிட்டால் அந்த அளவில் அடிமைத்தனம் வந்து விடுகிறது.”

764. “நல்லவர்களையே மெளனம் கவர்ச்சிக்கும், மற்றவர்களை ஆர்ப்பரவமே கவர்ச்சிக்கும்.”

765. “நாகரிகம் சீர்குலைந்த சமுதாயத்தில் பொய்ம்மையே வாய்மை.”

766. “உலகியல் பெயரால் அநீதிக்கும் உடன்பட வேண்டி வருகிறது.”

767. “பேய் அரசு செய்தால் பேரறமும் குன்று கிறது.”

768. “வாழ்க்கையின் தேவைகள் குறிக்கோள் ஆகா. வாழ்க்கையின் தேவைகளையும் கடந்தது குறிக்கோள்.”

769. “மனிதன் பழக்க வலையினின்று மீள மறுக்கிறான்.”

770. “பிரிவினைகளும் ஒரு வகையில் தீண்டாமையே.”

771. “பணம் கொடுப்பதைவிட, பணத்தை சம்பாதிப்பவனாக ஆக்குதல் உயரிய பணி.”

772. “மதம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அனுட்டானத்தில் இருந்தால் எப்போதும் அழியாது.”

773. “நல்லவர்களுக்கு இருக்கும் ஆற்றல், படைக்கும் ஆற்றல். கெட்டவர்களுக்கு இருக்கும் ஆற்றல், அழிக்கும் ஆற்றல்.”

774. “நன்மையைச் செய்தால் மட்டும் போதாது. யாருக்காகச் செய்யப்படுகிறதோ அவர்கள் நன்மையை அறிந்துகொள்ள வேண்டும்."

775. “எல்லாரும் புகழை-பெருமையை விரும்புகிறார்கள். அதைத் தாராளமாக மற்றவர்களுக்கு வழங்குக.”

776. “நல்லவண்ணம் மக்கள் முன்னேற்றத்திற்குப் பணி செய்யும் நிறுவனத்திற்கு ஆதரவு இருப்ப தில்லை.”

777. “அரிமா சங்கம், சுழற்குழுக் கழகம் போன்ற பொது அமைப்பில் இருப்பவர்கள், பிரிவினைகளை வளர்த்து உறவைக் கெடுக்கும் சாதிச் சங்கங்கள், மத அமைப்புகளில் பங்கு பெறுதல் கூடாது.”

778. “இன்று எல்லா வகையான பணிகளிலும் சிறந்தது, மக்களிடத்தில் வாழ்வு விருப்பங்களையும் உரிமைகளையும் உணர்த்துதல்.”

779. “விளம்பரத்தாலோ, சலுகைகளாலோ பேச்சாலோ வாக்குகள் வாங்கப்படும் வரை மக்களாட்சி முறை சிறக்காது.”

780. “பணத்தின் அருமை அறிதல் வேறு. பணத்தின் மீது ஆசை வைத்தல் வேறு.”

781. “பணத்தின் மீது விருப்பம் கொண்டு, ஈட்டி, முறையாகப் பயன்படுத்துதலே நல்வாழ்க்கை.”

782. “உலக ஒருமை, பூத பெளதீகங்களால் ஏற்பட்டிருக்கிறதே தவிர, ஆன்மீக ரீதியாக ஏற்பட வில்லை.”

783. “அறிவியல் உலகத்தை இணைத்தது. உயிர்க்குலத்தை இணைக்கவில்லை.”

784. “மதம் இயக்கமாக-வாழ்க்கை முறையாக இருந்த வரையில் மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தப் பயன்பட்டது. மதத்திற்குத் தலைவர்களும் புரோகிதர்களும் உருவானார்களே அன்றிலிருந்து மதம், மக்களுக்கு நன்மை செய்யவில்லை. தீமையே செய்தது: செய்துவருகிறது.”

785. “மறந்தும் சிற்றெல்லைகளில் மனிதன் விருப்பம் கொள்ளக்கூடாது; விருப்பம் காட்டக்கூடாது. இது வளர்ச்சியை-ஆன்மாவின் விடுதலையை தடுக்கும்.”

786. “பொல்லாத மனிதன் உருவாக்கிய எல்லைகளின்று விடுதலை பெறுதலே உண்மையான விடுதலை.”

787. “நமது இரு செவிகள் ஒன்றையொன்று நோக்காது எதிர்த்திசையில் அமைந்திருப்பதின் நோக்கமே இரு பக்கங்களையும் கேள்என்பதற்காகவே.”

788. “அறிவார்ந்த அன்பே, வாழ்க்கைக்குப் பயன்படும்.”

789. “உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியால் மனித வாழ்நிலை உயர்ந்தது.”

790. “போர்க் கருவிகளின் வளர்ச்சியால் மனித நாகரிகம் பாழ்பட்டது. மனிதகுலம் அழிவின் எல்லைக்குச் சென்று கொண்டிருக்கிறது.”

791. “நாடு, மொழி, இனம், மதம் ஆகியனவற்றைக் கடந்தது ஒருமைப்பாடு.”

792. “ஒருமைப்பாடு அமையாத நாட்டில் வளமான வாழ்க்கை அமையாது.”

793. “சட்டத்தின் சில விதிகளை அமுல்படுத்தும் அதிகாரத்தை அதிகாரவர்க்கத்திற்கு வழங்கக்கூடாது."

794. “சில சட்ட விதிகளை நீக்குதல் இயலாது. ஆனால், பயன்படுத்துதல் தவிர்க்கப்படுதல் வேண்டும்.”

795. “இன்றைய அரசியலை, தன்னல நயப்பும் உணர்ச்சியுமே இயக்குகின்றன.”

796. “இந்தியாவில் தவறுகளைப் பொறுத்தல்ல, எதிர்ப்பு, இயக்கங்கள். பாதிக்கப்பட்டவர்களின் கூச்சல் போடும் திறமையைப் பொறுத்தது.”

797. “இந்திய முதலாளிகள் பிரிவினை சக்திகளை வளர்க்கின்றனர், ஏழ்மையின் துன்பத்தால் துயருறுவோன் புரட்சியில் ஈடுபடாமல் இருக்க”

798. “இந்தியாவில் கட்சிகள் வளர்ந்துள்ளன. அரசியல் வளர வில்லை.”

799. “மனிதனை, மனிதனாக மதிப்பது ஒழுக்கம்.”

800. “ஒருமைப்பாட்டுணர்வு என்பது தவத்தின் தவம்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=சிந்தனை_துளிகள்/701-800&oldid=1055648" இலிருந்து மீள்விக்கப்பட்டது