சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்/010-010

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


102. பணம் பெறுதல்

இரண்டு தங்கக் கட்டிகள் அனுப்பும்படி நகைக்கடை ஒன்றுக்குக் குறிப்பாணை ஒன்றினை அனுப்பினார் அரசு அதிகாரி ஒருவர். குறிப்பாணை பெற்றதும் தங்கக் கட்டிகளை அதிகாரியிடம் கொடுத்து விலைதனைப் பெற்று வர நகை வணிகர் புறப்பட்டார். அதிகாரியைக் கண்டு தங்கக் கட்டிகளை அவரிடம் கொடுத்தார். இரண்டு கட்டிகளையும் பெற்றுக் கொண்ட அதிகாரி தங்கக் கட்டிகளின் விலையினைக் கேட்டார். விலையினைக் கூறியபின், நகைவணிகர் தங்களுக்காக 50% தள்ளுபடி செய்து தருகிறோம்” என்றார். உடனே அதிகாரி இரண்டில் ஒரு கட்டியினை அவனிடம் கொடுத்துவிட்டு, மற்றொன்றை எடுத்துக் கொண்டார். பணத்தைப் பெற நகை வணிகர் நின்றார். “ஏன்? நிற்கிறாய். நான் எடுத்துக் கொண்ட ஒரு தங்கக் கட்டிக்குத்தான் அப்போதே பணம் தந்து விட்டேனே” என்றார் அதிகாரி. “என்ன?” அதிர்ந்தான் நகை வணிகர். சினம் கொண்டார் அதிகாரி “நீ தானே சொன்னாய் உங்களுக்காக விலையில் 50% விழக்காடு தள்ளுபடி செய்து தருகிறோம் என்று. நான் எடுத்துக் கொண்ட ஒரு தங்கக்கட்டிக்கு விலையாக மற்றொரு கட்டியைத்தான் திரும்பத் தந்து விட்டேனே. இன்னும் இங்கு ஏன் நிற்கிறாய். தாமதியாதே ஓடு ஓடு” என்று விரட்டினார் அதிகாரி, நகை வணிகரை.

103. ஓர் உண்மையான ஆசை

மனிதர்களின் உருவப்படங்களை வரையும் ஓவியர் ஒருவருக்கு அவர் தொழில் மிகவும் மந்த நிலையில் இருந்தது. தொழிலை முன்னேற்ற திருமண இணைகளின் படம் ஒன்றை வரைந்து அதைக் கடையில் மக்கள் பார்வைக்கு வைத்தால், புதிதாகத் திருமணமான இணையர்களைக் கவரலாம் என்று ஒருவர் ஆய்வுரை சொன்னார். அவர் ஆய்வுரையின் படி ஓவியர் தம் திருமணப்படத்தையே மிகவும் பெரிதாக வரைந்து தமது நிலையத்தில் மக்கள் பார்வைக்கு வைத்தார்.

ஒருநாள் ஓவியரின் நிலையத்திற்கு அவருடைய மாமனார் வந்தார். பலகணியில் வைக்கப்பட்டிருந்த மணஇணையரின் உருவப்படத்தை நீண்ட நேரம் உற்று உற்றுப் பார்த்தார். படத்தில் இருப்பது யாரென்று தெரியாமல் போகவே, ‘யார்? இந்தப் பெண்?’ என்று மருமகனிடம் கேட்டார். மருமகன் “உங்கள் மகள் தான்’ என்றார். மேலும் சற்று நேரம் பார்த்தப்பின், “அது என் மகளானால் நீங்கள் ஏன் வேறு ஒருவரை மணம் செய்து கொண்டிருப்பது போல் வரைந்துள்ளீர்கள்?” என்று வியந்து கேட்டார்.

104. உருவப்படத்தில் அடையாளம் காணுதல்

ஓர் உருவப்படம் வரைந்து முடியும் தருவாயில், படத்தை வேறு ஒருவரிடம் காட்டி அவ் உருவத்தின் சாயலைத் தீர்மானிக்கச் சொன்னார் ஓவியர். தலை கவிப்பினை வைத்து அது நீங்கள் தான் என்று அடையாளம் காண்கிறேன் என்று ஓர் ஆள் தெரிவித்தார். இரண்டாவது ஆள் உங்கள் மேலாடையை வைத்து உங்களை அடையாளம் கண்டு கொள்கிறேன் என்றார். மூன்றாவது ஆளை ஒவியர் முன்னதாகவே அணுகி ஏற்கனவே என் கவிப்பின் மூலமாகவும், மேலாடையின் மூலமாகவும் வேறு இருவர் என் சாயலை அடையாளம் கண்டதாகச் சொல்லி விட்டனர். நீங்கள் என்முகச் சாயலை வைத்து நான்தான் அது என்று கண்டு கொண்டேன் என்று சொல்லுங்கள் என்று வேண்டிக் கொண்டார். சற்று நேரம் உருவப்படத்தை உற்றுப் பார்த்தப் பின் மூன்றாவது ஆள் “உங்கள் தாடியின் மூலம் அது நீங்கள்தான் என்று அடையாளம் காண்கிறேன்" என்றார்.

105. மென்மையான மண்டை

முடிதிருத்தும் நிலையம் ஒன்றில் பயிற்சியாளன் கத்தியினை முறையாகப் பயன்படுத்தத் தெரியாமல் முடிவெட்ட வந்தவனின் மண்டையில் பல வெட்டுக் காயங்களை ஏற்படுத்தினான். இதனால் சலிப்படைந்த அந்த முடிவெட்டும் பயிற்சியாளன் தன் முதலாளியிடம் "இவருடைய மண்டை மிகவும் மென்மையாக இருக்கிறது. இவருடைய மண்டை முற்றிலும் வளர்ச்சி அடையும் வரை காத்திருந்துதான் முடி வெட்ட முடியும்" என்று சென்னான்.

106. மயிரை மழித்த பின்

தாடி நரைத்த போது அதிலுள்ள வெள்ளை முடிகளை பிடுங்குமாறு தன் வைப்பாட்டியிடம் சொன்னான் ஒரு முதியவன். வெள்ளை முடியே அதிக அளவில் இருந்ததால் அவள் தாடியிலுள்ள ஒரு சில கறுப்பு மயிர்களைப் பிடிங்கினாள் வயோதிகன் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்த போது கொதித்தான். தன் ஆசைக் கிழத்தியை வசை மாறிப் பொழிந்தான். அவளோ "நீங்கள் பெரும்பான்மையைப் புறக்கணித்துச் சிறுபான்மையை வைத்துக் கொள்வீர்கள் என்று நான் எப்படி அறிவேன்?" என்றாள்.

107. காக்கி நிறத் தாடி

செந்நிறத் தாடி வைத்திருந்த ஒரு மனிதன் தன் மனைவியிடம், "இப்படிபட்ட வெளிறிய வண்ணத்தில் தாடி வைத்திருப்பவர்கள் மிகவும் அரிது. அதுமட்டுமல்லாது மெல்லிய வண்ணத் தாடியுடையவர்கள் எப்படிப்பட்ட முரடர்களையும் சண்டையில் வெற்றியடைய முடியும்" என்று பெருமைபட்டுக் கொண்டான்.

ஒருநாள் வெளியில் சென்ற அவன் சற்று நேரத்தில் வீங்கிப்போன முகத்துடன் வீடு திரும்பினான். அவனது மனைவி அவன் முன்பு வீரம் பேசியதை சுட்டிக்காட்டிக் கேலி செய்தாள். அதற்கு அவன் “நான் ஒரு சிவப்புத் தாடியுள்ள மனிதனை எதிர்த்து சண்டையிடுவேன் என்று முன்பே எனக்கு எப்படித் தெரியும். இன்று அப்படிபட்ட சிகப்புத் தாடியுள்ள மனிதனோடு சண்டையிட வேண்டியதாயிற்று" என்றான்.

குறிப்பு: சீன நாட்டில் கருப்பு நிறத்தாடி உடையவர்களே அதிகம். ஒரு சிலரே வெளிர் நிறத்திலும், சிகப்பு நிறத்திலும் தாடி வைத்திருந்தனர்.

108. தரையில் சிக்கிய குள்ளன்

குள்ளன் ஒருவன் படகில் பயணம் செய்து கொண்டிருந்தான். திடீரென்று படகு ஆழம் குறைவான இடத்தில் தரையில் தட்டி சிக்கிக் கொண்டது. குள்ளன் தரையில் சிக்கிய(புதைந்த) படகை மீட்கப் பெரும்பாடுபட்டு விட்டான். படகு அவன் தலையின் மீது புறண்டு விழுந்தது. அதிர்ந்து போன குள்ளன், "ஆழம் குறைவாக இருந்ததால் படகு தரையில் சிக்கிக் கொண்டது. ஆழம் அதிகமானதால் நான் சிக்கிக் கொண்டேன்" என்று கத்தினான்.

109. சோயாவிலிருந்து இறைச்சி

சோயாபிண்ணாக்கிலிருந்து இறைச்சி(கறி) செய்து உண்மை இறைச்சியென விற்று வந்தான் ஒருவன். அவன் இந்த கமுக்கத்தை யாரிடமும் கூறிவிடாதே என்று தன் வாணிப நுட்பத்தை மகனிடம் சொல்லி எச்சரித்து வந்தான். சில நாள்களுக்குப் பின் வாடிக்கையாளர் ஒருவர் இறைச்சி வாங்க வந்தார். “இது சோயாவில் உண்டாக்கியதன்று” என்று தானாகவே வாடிக்கையாளரிடம் கூறினான் மகன். இதைக் கேட்டதும் வாடிக்கையாளருக்குச் ஐயமேற்பட்டது. இறைச்சி வாங்காமலே அவர் அவ்விடம் விட்டு அகன்றார். இதை அறிந்த புலால் கடைக்காரன் தன் மகனை

உதைத்தான். “நான் ஏற்கனவே இதுபற்றி எதுவும் சொல்லக் கூடாது” என்று உனக்குச் சொல்லியிருக்கிறேன்” பின் ஏன் இவ்வாறு சொன்னாய் என்று மீண்டும் அடித்தார். சற்று நேரத்துக்குப் பின் வேறு ஒரு வாடிக்கைக்காரர் வந்து இறைச்சியை எடுத்து ஆய்ந்து பார்த்தார். பின்னர் அவர் கேட்டார் “தோல் மிகவும் தடிப்பாக உள்ளதே. இது சோயாவிலிருந்து உண்டாக்கப்பட்டது தானே” என்றார். கடைக்காரரின் மகன் உடனே, “நான் ஒன்றும் அதுபற்றிச் சொல்லமாட்டேன். ஏன் அது பற்றி என்னிடம் கேட்கிறீர்கள்? 'ஊகூம், நான் சொல்ல மாட்டேன்” என்றான்.

110. குறைப் பிறப்பு

பெண்ணொருத்திக்கு ஏழு மாதத்தில் குழந்தை யொன்று பிறந்தது. குறைப் பிறப்பானதால் எங்கே குழந்தை இறந்து விடுமோ என்ற அச்சத்தில் பலரிடம் அது பற்றி உரையாடினான் அப் பெண்ணின் கணவன். ஒருநாள் நண்பர் ஒருவரிடம் இதுபற்றிக் கூறினான். “என் தாத்தா கூட உன் மகனைப் போல ஏழு மாதத்தில் பிறந்தவர்தான், எனவே அஞ்சத் தேவையில்லை“ என்றார் அந்த நண்பர். உடனே இந்த மனிதன் ”உன் தாத்தா வாலிபப் பருவம் வரை வாழ்ந்தாரா அல்லது ... என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்" என்றார்.

111. கிளைகளைத் தேடி ஒருவன்

‘ப’ வடிவத்தில் வளருகின்ற மரக்கிளைகளை வெட்டி முக்காலிக்குக் கால்களாகப் பயன்படுத்தி வந்தனர் சிற்றூர் வாசிகள். அப்படி ஒருவர் வீட்டின் முக்காலியின் கால் உடைந்த போது, பொருத்தமான கிளை ஒன்றை வெட்டி வரும்படி வேலைக்காரனை மலைக்கு அனுப்பினார் ஒருவர். நாள் முழுவதும் சுற்றித் திரிந்து விட்டு வெறுங்கையோடு வீடு திரும்பினான் வேலைக்காரன். “ஏன்” என்று வீட்டுக்காரன் கேட்டபோது அவன், “ப” வடிவ கிளைகள் ஏராளமாய் உள்ளன. ஆனால் அவை மேல்நோக்கி வளராமல், கீழ் நோக்கி 'ப' வளர்ந்துள்ளன" என்றான்.

112. வாத்திருந்த இடத்தில்...

'வாத்து’ இருந்த இடத்தில் ‘தாராக்கோழி’ ஒன்றினை விற்கச் சந்தைக்கு எடுத்துச் சென்றான் ஒருவன். சந்தையை அடைந்ததும் சிறுநீர் கழிக்க வாத்தினை வெளியே வைத்து விட்டுப் பொதுக்கழிப்பிடம் ஒன்றினுள் நுழைந்தான். கழிப்பிடத்தில் அவன் இருக்கும் போது வாத்தைத் திருடிக் கொண்டு அந்த இடத்தில் ஒரு தாராக் கோழியை விட்டுச் சென்றான் வேறொருவன்.

கழிப்பிடத்தை விட்டு வெளியே வந்த வாத்துக்கு உரிமைக்காரன் அந்த இடத்திலிருந்த தராக் கோழியைக் கையில் மீண்டும் எடுத்துக் கொண்டு "என்ன வியப்பு, நான் உள்ளே சென்று சிறுநீர் கழித்துவிட்டு வருமுன் வாத்தின் கனம் எடை குறைந்துவிட்டதே. பசியால் தான் கணம் குறைந்துவிட்டதோ!" என்று சொல்லிக் கொண்டே சென்றான்.

113. மூதாட்டி ஒருத்தி

வயதான் பேரிளம் பெண்ணொருத்தியை மண முடித்துக் கொண்டார் ஒரு முதியவர். முதலிரவில்தான், தன் மனைவியின் முகத்தில் ஏராளமான சுருக்கங்கள் இருப்பதைக் கண்டார். சுருக்கங்களைக் கண்டு கவலைப்பட்ட அவர் "உன் உண்மையான வயதுதான் என்ன?" என்று மனைவியிடம் கேட்டார். "நாற்பது" இருக்கும் என்றாள். "ஆனால் திருமணச் சான்றிதழில் குறிப்பிடும் போது முப்பத்தெட்டு என்று சொன்னாயே" சினந்து கொண்டான் கணவன். "என் கணக்குப்படி உனக்கு 45 வயது இருக்கும். ஏன் பொய் சொன்னாய்" என்றான் கணவன். “தொடர்ந்து உண்மையைச் சொல்வதானால், எனக்கு 54 வயது ஆகிறது" என்று சொல்லி மேலும் அதிர வைத்தாள் அந்த ஆரணங்கு. மேலும் மேலும் உன் உண்மையான வயதைச் சொல் என்று கேட்டபோது அவள் 54, என்று மீண்டும் மீண்டும் அதையே சொல்லி வந்தாள்.

பின்னர் அவர்கள் படுக்கையில் படுத்ததும் அவள் உண்மை வயதைத் தெரிந்து கொள்ள வகைதேடி சிந்தித்த வண்ணமிருந்தான் கணவன். திடீரென்று படுக்கையை விட்டு எழுந்து “கொஞ்சம் பொறு. உப்புப் பானையை மூடி வைத்தேனா? இல்லையா? என்று பார்த்து வருகிறேன், திறந்திருந்தால் எலி தின்றுவிடும்” என்றான் அவன். பட்டென்று அவள் சொன்னாள்" என்னுடைய 68 ஆண்டுகால வாழ்வில், ஒருபோது கூட எலி உப்பைத் தின்னும் என்று சொல்லக் கேள்விப்பட்டதில்லை” என்று.

114. தேநீர் கேட்டு ஒருவன்

வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வந்தார். கணவன் மனைவியிடம் தேநீர் படைத்துக் கொண்டு வரச் சொன்னான். "இதுவரை நீங்கள் தேயிலையே வாங்கித் தந்ததில்லை எப்படி தேநீர் உண்டாக்க முடியும்” என்றாள் மனைவி. “சரி கொஞ்சம் தண்ணீரைக் கொதிக்க வைத்தாவது கொடு” என்றான் கணவன். “விறகு வாங்கிப் போட்டதே இல்லை. தண்ணீரை எப்படிக் கொதிக்க வைக்க முடியும்?“ எதிர் கேள்வி கேட்டாள் மனைவி. சினத்தில் கொதித்தான். கொச்சைச் சொற்களைக் கொப்பளித்தான் மனைவி மீது. ”தலையணைகளில் வைக்கோல் துரும்பு கூடவா இல்லை” மனைவியிடம் சீறினான். அதுவரை பொறுத்த அவளும் பொங்கினாள். பொன்மொழிகளை அவன் மீது உதிர்த்தாள். பின்னர் சொன்னாள் செங்கற்களை தலையணையாகப் பயன்படுத்தும் நமது வீட்டில் வைக்கோற் துரும்பேது?" என்றாள் அந்தத் தக்க விடை தந்த தகைசால் பத்தினி.


115. நாளை சற்று முன்னதாகவே வா

கடன் கொடுத்த அனைவரும் கடன் வாங்கியவன் வீட்டில் ஒட்டு மொத்தமாய்க் குழுமி அங்கிருந்த முக்காலிகளில் அமர்ந்தனர். ஒருவன் வீட்டினுள் உட்கார இடமின்றி முற்றத்து மொட்டை மாடியில் ஏறி நின்றான். முற்றத்து மொட்டை மாடியில் உட்கார இடமன்றி நின்று கொண்டிருந்தவனிடம் கடன்பட்டவன் சொன்னான் “நாளைக்குச் சற்று முன்னதாகவே வந்து விடு என்று சைகை செய்து காட்டினான். முற்றத்து மொட்டைமாடியில் நின்றவன், மற்றவர்களிடமிருந்து தன்னைப் பிரித்து நாளை நம் கடனைத் திரும்ப தருவதற்குத் தான் முன்னதாகவே வரச் சொல்லுகிறான் என்று எண்ணி மகிழ்ந்தான். வெளியேறிய அவன் தன்னைப் போல் கடன் கொடுத்த மற்றவர்களிடம் “இன்று இரவு மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி விட்டுச் சென்றான். எல்லோரும் கலைந்து சென்றனர்.

மறுநாள் காலை அவன் மட்டும் கடன் வாங்கியவன் வீட்டிற்கு முன்னதாகவே வந்து, தன் கடன் திரும்பக் கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, கடன் வாங்கியவன் சொன்னான்: "நீங்கள் நேற்று வீட்டினுள் உட்கார இடமில்லாமல் முற்றத்து மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்ததைக் குறித்து மிகவும் வேதனைப்பட்டேன், அதனால்தான் இன்று முன்கூட்டியே வந்து இடம் பிடித்துக் கொள்ளவே உங்களை முன்னதாக வரும்படி அழைத்தேன் என்றான். அதிர்ந்தான் கேட்டவன்.

116. கனவும் நினைவும்

கடன் வாங்கிய ஒருவன் கடன் கொடுத்தவனிடம், "நான் இந்த உலகில் நீண்ட நாள் வாழமாட்டேன் என்று எண்ணுகிறேன். ஏனெனில் நேற்று இரவு நான் இறந்து போவது போல் கனவு கண்டேன்” என்றான். இதனைக் கேட்டுக் கடன் கொடுத்தவன், “அப்படியெல்லாம் நடக்காது. கனவுலகில் காண்பதற்கு நேர்மாறாகத் தான் நினைவுலகில் நடக்கும்” என்று மறுமொழி பகர்ந்தான்.

மீண்டும் ஒருநாள் இருவரும் சந்தித்தபோது கடன் கொடுத்தவனிடம் கடன் வாங்கியவன் சொன்னான். "நேற்றிரவு கண்ட கனவில் உங்கள் கடனையெல்லாம் நான் திரும்பத் தந்து விட்டேன்” என்றான். கடன் கொடுத்தவனுக்குப் பதில் சொல்ல நாவெழவில்லை.

117. குரங்கின் அளவு

மாமதுரை நடுவர் ஒருவர் தன் மேலதிகாரியைக் காண நேர்ந்தது. தங்கள் அலுவலகப் பணிகள் பற்றிப் பேசிய பின்

பிற காரியங்கள் குறித்து உரையாடினர். அந்த நேரத்தில் மேலதிகாரி, “உங்கள் பகுதியில் குரங்குகள் ஏராளம் உள்ளதாகக் கேள்விப்படுகிறேன். அந்தக் குரங்குகளின் அளவு பற்றி சற்றுச் சொல்லுங்களேன்” என்றார். நடுவர் "மிகப் பெரிய குரங்கு ஒரு பெரிய மனிதனின் அளவில் இருக்கும்" என்றார். பின் தான் வாய்குழறி உளறியதை உணர்ந்த அந்த நடுவர், தவற்றைத் திருத்திக் கொள்ளும் வகையில் "மிகச் சிறிய குரங்கு எனது அலுவலகத்தில் உள்ள கடைநிலை ஊழியனுக்கு இணையாக இருக்கும் என்றார்.

118. வானின் உயரம்

வானின் உயரம் பற்றி, மரத்தடி நிழலில் அமர்ந்து சிலர் வாதாடிக் கொண்டிருந்தனர். பல்வேறு விதமான கருத்துகள் சிலர் வாதாடிக் கொண்டிருந்தனர். பல்வேறு விதமான கருத்துகள் அங்கே முடிவின்றி தருக்கிக்கப்பட்டன. முடிவில் அவ்வழியே சென்ற சிற்றூர்வாசி ஒருவர் குறுக்கிட்டு "வானிற்கும் நிலத்துக்குமிடையே முந்நூறு முதல் நானூறு

கல்களுக்குள் இருக்கும். மெதுவாக ஏறினால் நான்கு நாள்கள் ஆகும். சற்று விரைந்து சென்றால் மூன்று நாள்கள் ஆகும். இங்கிருந்து சென்று மீண்டும் திரும்பிவரக் கூடுதல் ஆறு அல்லது ஏழு நாள்கள் ஆகும். இதைப்பற்றியேன் இவ்வளவு மும்முரமாக தருக்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்றார்.

சிற்றூர்வாசியின் முடிவான விடை கேட்டுக் குழுமி இருந்தோர் வாயடைத்துப் போயினர். எப்படி இந்த முடிவுக்கு வந்தீர்கள் என்றனர். சிற்றுர்வாசி விளக்கினார், "வருண தெய்வத்திற்குத் தை மாதம் 14ம் நாள் வழியனுப்பு விழா கொண்டாடுவது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அத் தெய்வம் விண்ணகம் சென்று, மண்ணகக் கணக்கை இறைவனுக்கு தந்துவிட்டு, மண்ணகம் திரும்புகிறார். மீண்டும் நிலவுலகில் அவரை வரவேற்க புத்தாண்டின் தொடக்கத்தில் விழா கொண்டாடுகிறோம். இவ்வாறு மண்ணகத்திலிருந்து விண்ணகம் சென்று மீண்டும் மண்ணகம் திரும்ப அதாவது 400 கல்கள் சென்று வர ஓர் ஆண்டு காலம் ஆகிறது” என்று.

இந்த விளக்கம் கேட்டு அனைவரும் நகைத்தனர். “உங்கள் விளக்கம் அற்புதம்; உங்களிடம் சிறந்த சொல்லாற்றல் உள்ளது" என்று அச்சிற்றூர் வாசியைப் பாராட்டினர்.

119. சோம்பேறி

சோம்பேறிப் பெண்ணொருத்தி அனைத்திற்கும் தன் கணவனையே சார்ந்திருந்தான். உண்ணும் போது வாயை திறக்கின்ற வேலையையும், உடுத்தும்போது கையை தூக்கி நிற்கின்ற வேலையை மட்டுமே செய்து வந்தாள். ஒருசமயம் கணவன் பட்டணம் சென்று ஐந்து நாள்கள் தங்க நேர்ந்தது. அவளுக்கு உணவூட்டுவதற்காகக் கணவன் மிகப்பெரிய 'மாவடை’ ஒன்றினைப் படைத்து அவற்றின் நடுவில் ஒரு பெரிய துளையிட்டு, அவள் கழுத்தில் மாட்டிவிட்டான். ஐந்து நாள்களுக்கு அந்த மாவடை போது மென்று அவன் கணித்தான். இவற்றைச் செய்தபின், அவன் பட்டணம் சென்றான். திரும்பிச்திரும்பி வந்தபோது அவன் மனைவி இறந்து மூன்று நாள் ஆகியிருந்ததை அறிந்தான். மாவடையில் அவள் வாய்க்கு எதிராக இருந்த பகுதிமட்டுமே சாப்பிடப்பட்டிருந்தது. எஞ்சிய பகுதிகள் அனைத்தும் தொடப்படாமல் அப்படியே விடப்பட்டிருந்தன.

120. கஞ்சனின் ஆவி

கஞ்சத்தனமான வாழ்கை வாழ்ந்தான் ஒரு மனிதன். உண்பது அரிது. அவனை எல்லோரும் கஞ்சனின் ஆவி என்று அழைத்தனர். ஒருநாள் படகுக் கூலி கொடுக்க மனமில்லாமல் ஆற்றின் குறுக்கே நடந்து செல்ல முயன்றான். நட்டாற்றில் வந்தபோது வெள்ளம் அவனை அடித்துச் செல்ல முனைந்தது. உதவிகோரிக் கதறினான். 200 பணம் முன்பணமாக தந்தால் காப்பாற்றுவதாகப் படகோட்டி ஒருவன் சொன்னான் ‘நூறு பணம் போதாதா?” என்று கேட்டான் கஞ்சன். இப்போது தண்ணி அவன் மார்பளவை எட்டியது. "பின் 150 பணம் தந்தால் போதுமா?" என்றான் கஞ்சன். படகோட்டி மறுத்தபோது கஞ்சன் தண்ணீரில் மூழ்கினான்.

‘கஞ்சனின் ஆவி’ என்று அழைக்கப்பட்ட அக்கஞ்சன் தற்போது உண்மையிலேயே ஆவி ஆகி மேலுலகம் சென்றான். நரக தேவன் அவனைப் பார்த்து முழங்கினன். "கஞ்சனே பணம் தான் உன் வாழ்க்கை என்று நினைத்தாய்; ஒரு காசு கூட செலவு செய்ய மறுத்தாய்; இப்போது நரகத்தில் கொதிக்கும் எண்ணெயில் ஏறியப்படவிருக்கிறாய்” என்றான் நரகதேவன். அப்போது எண்ணெய் கொதிக்கும் ஓசை கேட்டது. தீயினை அவன் கண்களால் கண்டான் கஞ்சன். அந்த நிலையிலும் அவன் பேரம் பேசினான். “எவ்வளவு எண்ணெய்! ஏன் இப்படி வீணக்குகிறீர்கள்? அந்த எண்ணெய்க்குரிய பணத்தை என்னிடம் தந்தால்; எண்ணெய் இல்லாமலேயே என்னை வறுக்க நான்

ஒப்புக்கொள்கிறேன்" என்றான் கஞ்சன்.

பின்னர் நரக தேவனின் ஏவலர்கள் அவனை இரும்பு முள்கரண்டியால் குத்திக் கொதிக்கும் எண்ணெயிலிட்டுக் கருக்கி வெளியே எடுத்து மீண்டும் நரக தேவனின் பார்வைக்குப் படைத்தனர். நரகதேவன் அதனைப் ஒரு முறை பார்த்துவிட்டுச் சொன்னான், இந்த மனிதன் ஒதுக்கப்பட வேண்டியவன். எனவே இவன் நாயாகவோ, பன்றியாகவோ மறுபிறவி எடுப்பானாக என்று சபித்தார்.

米米米米米米米米


புலவர் த. கோவேந்தன் டி.லிட். 1932கோவேந்தன் பாடிக் குவிக்கின்றான் நாளடைவில்
பாவேந்தன் ஆய்விடுவான் பார்.

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (1963)


பல்லா யிரம்நூல் படித்தறியும் பண்பாளன்;
நல்லார் இணைக்கத்தின் நட்பாளன்;- வல்லான்
எழுதுகின்ற நூல்எல்லாம் இன்தமிழுக்கு ஏற்றம்;
தொழுகின்றேன் கோவேந்தன் தொண்டு.

- அருட்கவி அரங்க சீனிவாசன் (1975)