சிறந்த கதைகள் பதிமூன்று/அதிவேக பினே
நந்து நவாதே ஒர்லியில் வசித்தான். அவன் உண்மையான பம்பாய்வாசி. பாணேஷ் (அல்லது அதிவேக) பினேயோ பூனாவில், வித்யா பவனில் படிக்கும் மாணவன். இந்த உலகம் முழுவதும் என் வீடு என்பது அவன் கொள்கை. சுற்றித்திரியும் பாணேஷைத் தன் வீட்டின் வாசல் அருகே சந்திக்க நேர்வது விசித்திரம் தான் என்று நந்து நினைத்தான். அந்தத் தற்செயலான சந்திப்பின் அதிவிசித்திர விளைவு, அதிவேக பினேக்குத்தான் ஏற்பட்டது-அதற்குக் காரணம் கூட நந்து தான்.
உண்மையில் பாணேஷ் நந்துவின் வீட்டுக்கு அழைக்கப்படவில்லை. பார்க்கப் போனால், அவர்கள் அறிமுகமானவர்களே இல்லை. அதிவேக பினேயை நந்துவுக்குத் தெரியும், மற்றவர்களுக்குத் தெரிந்திருந்தது போல் தான். அவனது வீரமும் உணர்ச்சித் துடிப்பில் செய்யும் தீரச் செயல்களும் பிரசித்தமானவை. கதை அளப்பதில் நந்து நவாதேக்கு இருந்த அசாத்தியத் திறமையை பாணேஷ் கேள்விப்பட்டிருந்தான். கதை சொல்லி நந்து சூன்யத்திலிருந்து பூரண உலகத்தையே படைக்கக் கூடியவன்.
நந்து வீட்டருகில் இருந்த ஒரு பெரிய அற்புதமான கட்டிடத்தின் மொட்டைமாடியில் தான் இவ் இரண்டு சூரர்களும் முதன்முதலாகச் சந்தித்தார்கள்.
பிள்ளைகள் பெரும் கும்பலாய்க் கூடியிருந்தார்கள். புகழ்பெற்ற கோகா மருந்துக் கம்பெனி ஒரு ஒவியப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. சகலவித பிரசார முறைகளையும் கையாண்டு அவர்கள் தங்களுடைய ஜாக் இருமல் மருந்தைப் பிரபலமாக்க முயன்றார்கள். இப்போது, தங்கள் முயற்சியின் உச்ச கட்டமாக, அவர்கள் ஏகப்பட்ட பலூன்களைக் கட்டியிருந்தார்கள்!
அசைந்தாடிய பலூன்கள் ஒரு மலை ஏரியில் மிதக்கும் தாமரைப் பூக்கள் போல் தோன்றின. பலநூறு பலூன்கள்-ரப்பராலும் பிளாஸ்டிக்கினாலும் செய்யப்பட்டவை-மிதந்தன. அவற்றின் முன்னே, வார்த்தைகளும் படங்களும் தீட்டும் நோக்குடன் மிகப்பல பிள்ளைகள் இருந்தார்கள். உண்மையில் அவர்கள் 'இருக்க' வில்லை; ஏறியும் இறங்கியும் அசைந்த-கான்வாஸ் அல்ல பிளாஸ்டிக்-பரப்பின் மேல் தங்கள் திறமையைக் காட்ட அவர்கள் நின்றார்கள். எண்ணற்ற வரிசைகளாக பையன்களும் பெண்களும் நின்றனர். ஒரு வரிசை மேற்கே பார்த்தது, மறுவரிசை கிழக்கை நோக்கியது. அடுத்தவரைப் பார்த்து காப்பி அடிக்காமல் இருக்கவே இந்த ஏற்பாடு.
பிள்ளைகள் பலூன் மீது, வசீகரமான ஒரு படமும் கவர்ச்சியான ஒரு வாசகமும் பளிச்சிடும் சிவப்பில் தீட்ட வேண்டும். இது தான் போட்டி, வாசகம் பதினைந்து வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். அது, சந்தேகமின்றி, ஜாக் இருமல் மருந்தைப் புகழ்வதாக அமைய வேண்டும். ஒவியம் தீட்டப்பட்ட பலூன்களில் சிறந்ததை நீதிபதிகள் தேர்வு செய்து, வெற்றியாளனுக்குப் பரிசு அளிப்பார்கள். அந்தப் படத்தையும் வாசகத்தையும் மிகப்பெரிய பலூன் ஒன்றில் தீட்டி அதை வானில் பறக்க விடுவார்கள்.
பம்பாய் முழுவதும் அந்த விளம்பரத்தைப் பார்ப்பார்கள். ஜாக் இருமல் மருந்து, வெற்றியாளன் திறமை, இரண்டுக்கும் நல்ல விளம்பரம்!
கோகா கம்பெனியின் மிகப் பெரிய பலூன், கயிறுகளால் கட்டப்பட்டு, மொட்டை மாடியின் நடுவில் எடுப்பாக விளங்கியது.
***
பாணேஷ் (அல்லது அதிவேக) பினே, பம்பாயில் உள்ள மாதுங்காவுக்கு, அத்தை வீட்டில் தன் விடுமுறைக்காக வந்திருந்தான். போட்டி பற்றிய அறிவிப்பை அவன் பத்திரிகையில் பார்த்தான். அதில் கலந்து கொள்ள விரும்பினான்.
"நான் ஞானேஷ்வர் இல்லை தான். என்னால் ஆயிரம் வரிக் கவிதை எழுதமுடியாது. ஆனால் பத்து வார்த்தைகளைச் சேர்த்து எழுத ஒரு பெரிய எழுத்தாளன் தேவையில்லை!" என்று அவன் தன் அத்தையிடம் கூறினான்.
"எனக்குத் தெரியாதா! நீ தான் அதிவேக பினே ஆயிற்றே!" என்று அத்தை சொன்னாள். "ஆனால் உன் வாக்கியம் உண்மையிலேயே நன்றாக இருக்க வேண்டும். அதுவே வெற்றிபெற வேண்டும் சும்மா வெறுமனே...." தொடர்ந்து பேச இயலாதபடி இருமல் அவளைத் தாக்கியது. ஜாக் இருமல் மருந்து தனது முதல் வாடிக்கையைக் கண்டுகொண்டது.
"நிறுத்து!" பாணேஷ் அத்தையை நோக்கினான். தானே வெடித்த சொல்லை உருவாக்கும் முயற்சியில் அவன் வாய் திறந்தேயிருந்தது.
"என்ன விஷயம்?" என்று அவள் கேட்டாள். இருமினாள். ஒரே இருமல்!
"எனக்கு ஒரு மூளை அதிர்வு! ஒருவர் தொண்டைக்குள் ஒரு தவளை. அது க்ரோக், க்ரோக் என்று கத்துகிறது. இப்படிப்படம் வரைவேன். அடுத்தவரியில், நிற்காத இருமலா உடனே அருந்து. ஜாக் இருமல் மருந்து! பார், பத்து வார்த்தை கூட இல்லை!"
"அசடாக இராதே" என்ற அத்தை இருமிக் கொண்டே அறையை விட்டுச் சென்றாள்.
***
போட்டி நடைபெற்றது. நந்து நவாதேயும் கலந்து கொண்டான்.
நந்து உள்ளத்தில் நல்லவன்தான். ஆனால் இயல்பாக நெட்டைக் கதைகள் கூறும் பழக்கம் உடையவன். ஒருதரம் தொடங்கி விட்டால் தன் கதைப் பின்னலில் சிக்கி, தானே அதை நம்பும் அளவுக்கு ஆழ்ந்து போவான்!
ஆனால், முந்தியோ பிந்தியோ, அவன் கதைகள் அம்பலமாகிவிடும். அப்போது நந்து குழப்பத்தால் திணறுவான்.
இதற்கிடையில் அதிவேக பினேயின் கீர்த்திகள் அதிகரித்தன. அது நந்துவுக்கு ஆத்திரம் ஊட்டியது.
"அந்த அதிவேக பினே தன் அளவை மீறி வளர்ந்து விட்டான்!" என்று நந்து முணுமுணுத்தான். அவனைப் போல தைரியசாலி இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை என்கிற மாதிரி அவனுக்குத் தன்னைப் பிரபலப் படுத்திக் கொள்ள வாய்ப்புகள் சேருகின்றன. எனக்கு அது இல்லை. அதிவேக பினே போகிற இடமெங்கும் ஆபத்துகள்-சாலையின் இரு புறமும் காத்திருப்பதாகத் தோன்றுகிறது!"
"அவனை வரவேற்கவா?" என்று நண்பன் சிரித்தான்.
"நான் பார்க்கவில்லை."
"நீ வீரசாகசங்களை அதிகம் அனுபவித்ததாக எப்பவும் பாசாங்கு பண்ணுகிறாய்!” என்று நண்பன் அவனைக் குத்தினான். நந்து கோபமாக, போதும், நிறுத்து என்று கத்தினான். மெளனமானான்.
அதிவேக பினேயிடம் அவனுக்குப் பொருமை என்பதில் ஐயமில்லை. ஒரு நாள் அவனை மட்டம் தட்ட முடியும் என நந்து நம்பினான்.
இப்போது அதிவேக பினே போட்டியில் ஈடுபட்டிருந்தான். அவனை அங்கு சந்திக்கக்கூடும் என நந்து எண்ணவேயில்லை. மிஸ்டர் ஒக் என்ற கற்பனை மனிதனைத் தன் பலூனில் நந்து தீட்டியிருந்தான். அதன் கீழ் சிவப்பு வர்ணத்தில் வாசகத்தை எழுதிக் கொண்டிருந்தான்.
"திடீரென மிஸ்டர் ஒக்.... தொண்டையில் விக்கினார்...." என எழுதினான். அதற்கு மேலே ஒடவில்லை. அப்புறம்? இங்கே கதை பின்னிப் பயனில்லை. இது நிஜ வாழ்க்கை பிரஷ்ஷை வாயில் கவ்வி, புருவத்தைகழித்து, நந்து ஊக்கம் தேடி சுற்றிலும் பார்த்தான். (அதாவது, மற்றவர் பலூன்களை) சட்டென்று அவன் அந்தப் புகழ்பெற்ற கட்டமிட்ட சட்டையை, சுருட்டைத் தலையை, பெரிய கண்களை கண்டான் மேலும் அக் கண்கள் அவன் மீதே பதிந்திருந்தன.
"அட-அட-அட யார் இந்த ஐந்து புகழ்பெற்ற அதிவேக பினே தான்!" என்று நந்து கேலியாகச் சொன்னான். அதை அவன் உரக்கச் சொன்ன தால், பானேஷ் கேட்டுவிட்டான்.
"ஹலோ, நீ யார்?" என்று அவன் கேட்டான். "நான் தான் நந்து நவாதே" என நந்து உடனடியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அதுவே போதுமான அறிமுகம் என அவன் கருதினான். அதிவேக பினே மட்டும் தான் அந்த வட்டாரத்தில் தற்பெருமை பெற்றவன் என்பதில்லையே!
"உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, மிஸ் நந்தினி நவாதே" என்றான் அதிவேக பினே.
"மிஸ்ஸா என்ன சொல்கிறாய்?" என்று நந்து உறுமினான். முஷ்டியை உயர்த்தினான்.
"ஒ, அடடா! நீ மிஸ் இல்லை-மாஸ்டர் நந்து என்கிறாயா?" என்று பாணேஷ் சிரித்தான். "எனக்கு எப்படித் தெரியும்? இக்காலத்தில் ஏகப்பட்ட பெண்கள் கால்சட்டை அணிகிறார்கள் தங்கள் முடியைச் சிறிதாக வெட்டிக் கொள்கிறார்கள். ஆனால் பையன்கள் உதட்டுச் சாயம் பூசுவதேயில்லை."
"உதட்டுச் சாயமா!" என்று கூறிய நந்து முகம் வெளுத்தான். அவன் ஒரு விரலை உதடுகள் மீது தேய்த்தான். வர்ணபிரஷ்ஷின் வேலையை அறிந்தான்! அவன் உதடுகள் வர்ணத்தால் சிவப்பாகப் பளிச்சிட்டிருக்கும்!
அண்டை அயல் பிள்ளைகள் பலர் கவனித்து நின்றனர். சிலர் வாய் விட்டுச் சிரித்தார்கள். மற்றவர்கள் சிரிப்பை அடக்கிக் கொண்டு வேலை பார்க்கத் திரும்பினர்.
நந்து வெட்கத்தால் குன்றிப் போனான். அவன் குழப்பத்தை அதிகப் படுத்த, மேற்பார்வையாளர் ஒருவர் அங்கே வந்தார். அவர் எல்லோரையும் கண்டித்தார். விசேஷமான கோபத்துடன் நந்து பக்கம் திரும்பினார்.
"நீ ஒவியப் போட்டியில் பங்கு பெறுகிறாயா அல்லது நாடக ஒப்பனையிலா?" என்று கத்தினார்.
"ஸாரி!" என நந்து முனகினான். உதடுகளைத் தன் சட்டைக் கையில் துடைத்தான். "அந்த அதிவேக பினேயை நான் கவனிக்கிறேன்!" என்று தனக்குள் ஆத்திரமாக முணுமுணுத்தான்.
ஒவ்வொருவரும் அவரவர் பலூனில் வர்ணம் தீட்டிமுடித்து, தங்கள் பெயரையும் முகவரியையும் சீட்டில் எழுதி ஒட்டினர். மேற்பார்வை யிடுவோர், பிள்ளைகளைத் தனியே விடுத்து, பலூன்களை ஒரு அறைக்குள் கொண்டு போனார்கள்.
போட்டியாளர்கள் கம்பெனியின் மிகப்பெரிய பலூனைச் சுற்றி ஆர்வத்தோடு குழுமினர். அதை வியப்புடன் பார்த்தபடி சுற்றிச் சுற்றி வந்தார்கள்.
ஒரு பெரும் காற்று, நீலமும் வெள்ளையுமாய் பட்டைகள் தீட்டப்பட்ட அந்தப் பெரிய அதிசயத்தை தொட்டுத் தூக்கியது; அது மேலெழுந்து கீழிறங்கும்படி செய்தது. அதன் மேல் இரண்டே வார்த்தைகள்-'கோகா', 'ஜாக்'-தீட்டப்பட்டிருந்தன. அனைவரும் மேலேயே பார்த்து நின்றனர். பலூனின் அடிப்பக்கம் நடப்பதை ஒருவரும் கவனிக்கவில்லை. பாணேஷசம் மேலே பார்த்தபடியே நின்றான்.
பலூன் கயிறுகள் இரண்டு மூன்று பித்தளை வளையங்களில் இறுகக் கட்டப்பட்டிருந்தன. ஒரே ஒரு குழந்தை தான் அவற்றைக் கவனித்தது. நந்து நவாதே கீழே குனிந்து, கனத்த கயிற்றின் முடிச்சை தளர்த்தினான்.
"கயிறு எவ்வளவு கனம்" என்று அதிவேக பினே சொன்னான்.
"கனமும் உறுதியும். இது நைலான் கயிறு," என்று நந்து தெரிவித்தான். அவன் பாணேஷ் அருகில் நின்றான். "அதை தொட்டுப் பாரேன்."
பாணேஷ் கயிற்றைப் பிடித்தது தான் தாமதம், நந்து முடிச்சை அவிழ்த்து விட்டான். கயிறு நழுவி வெளிப்பட்டது. காற்றின் பெரும் சுழற்சி ஒன்று பலூன் மேலேறி வானில் பறக்கும்படி செய்தது. அதிவேக பினேயின் கை பித்தளை வளையம் ஒன்றில் சிக்கியிருந்தது. அவன் வேகமாக மேலிழுக்கப்பட்டதால் கையை எடுக்க இயலவில்லை. அவன் திகைப்பினால் தனது மறுகரத்தையும் கயிற்றில் அழுத்திக் கொண்டான். தன் பலம் கொண்ட மட்டும் பலூனை கீழே இழுக்க அவன் முயன்றான். ஆனால் அது மேலேறும் வேகம் மிக அதிகம்; அத் தீக்குச்சி பயில்வானின் வீரம் அதை வெல்லமுடியவில்லை. பலூன் ஆகாயத்தில் உயர்ந்து சென்றது-அதில் தொத்திக் கொண்டு அதிவேக பினேயும் போனான்.
அதிவேக பினே திடீரென்று பலூனோடு மேலே சென்றதைக் கண்ட பிள்ளைகளுக்குத் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. அதை அவர்கள் கண்ணால் காணாமலிருந்து, நந்து சொல்லக் கேட்டால், அது அவனது நெட்டைக் கதைகளில் ஒன்று என்றே எண்ணியிருப்பார்கள்.
நந்துவுக்குப் பயத்தால் வாய் உலர்ந்தது. பாணேஷ் பேரில் அவனுக்கு என்ன தான் கோபமானாலும், அவனை வானத்துக்கு அனுப்ப நந்து எண்ணியதேயில்லை. பலூன் பறக்கிற போது பாணேஷ் தொல்லை அனுபவிக்க வேண்டும் என்றே அவன் விரும்பினான். ஏனெனில் பாணேஷ் பித்தளை வளையங்களைத் தொட்டிருந்தானே! நிச்சயமாக அது நல்ல திட்டம் இல்லை தான். பின்னர் அவன் பாணேஷிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வான். மனிதர்கள் தொல்லையில் சிக்கி விழிப்பதை நந்து ரசித்தான். ஆனால் இது எல்லை மீறிவிட்டது.
"அட கடவுளே, அவன் பறந்து போய்விட்டான்"
"அவனைக் கீழே இழுங்கள் கீழே இழுங்கள்!"
"கயிற்றைப் பிடி போலீஸ் போலீஸ் தீ அணைப்புப் படையை கூப்பிடு!"
அங்கு ஏகக் குழப்பம். ஒவ்வொருவரும் பயந்து போய், அடுத்தவருக்கு உத்திரவிட்டு, உபதேசம் பண்ணி, அலைபாய்ந்தனர்.
ஒர்லி கடல்புறம் வழியே ஒடிக்கொண்டிருந்த கார்கள், திடீரென்று போக்குவரத்து விளக்குகள் சிவப்பாய் மாறியதைக் கண்டவை போல், வரிசையாக நின்றுவிட்டன. நூறு கோயில்களில் சங்குகள் முழங்குவது போல் கார் ஊதுகுழல்கள் சத்தமிட்டன.
அதிவேக பினேயைச் சுமந்த பலூன் உயரே உயரே எழும்பிச் சென்றது. மேல்காற்று ஒன்று அதன் நேர்உயரப் பயணத்தை மேற்கு நோக்கி அடித்துச் சென்றது.
எந்தப் பையனின் ரத்தத்தையும் உறையவைக்கக் கூடிய பயங்கரம் அது. அதிவேக பினே எத்தனையோ பயங்கர நெருக்கடிகளை அனுபவித்திருக்கிறான். ஆனால் இதைப் போல் என்றுமே நிகழவில்லை. நீலவானின் வெறும் வெளியில் அவனை எடுத்துச் செல்கிறதே இது.
ஒரு சமயம் யுத்தமுனை ஒன்றில் அவன் பாரசூட் மூலம் கீழே இறங்கியது உண்டு. ஆனால் அது அவன் சுயநினைவோடு செய்தது, அன்னை பூமியை நோக்கி அவன் கீழிறங்குவான் என்ற நிச்சய நினைப்புடன் செய்தது. இப்போது அவனுக்கு அவ்வித நிச்சயம் எதுவுமில்லை. பலூன் அவனை எங்கே எடுத்துச் செல்கிறது-எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம் போகும்-அது அவனை எங்கே நழுவவிடும் என்பதெல்லாம் கடவுளுக்குத் தான் தெரியும்.
அதிவேக பினேயின் உடம்பில் வேர்த்துக் கொட்டியது. அவன் கீழே பார்த்தபோது, தலை சுற்றியது. அவன் பயந்துவிட்டான். அவன் கார்ட்டுன் படத்தில் வரும் அதிமனிதன் இல்லை. பயந்து நடுங்கும் சின்னஞ் சிறுவன் தான்.
தன் கைகள் மரத்துப்போகத் தொடங்குவதை அவன் உணர்ந்தான். ஒரு கை கயிற்றைப் பற்றியிருந்தது. மறு கை பித்தளை வளையத்தில் சிக்கியிருந்தது. பிடியை விடக்கூடாது, விட்டால் நாசம் தான் என அவன் அறிவான்! தரை மீது விழுந்தால், அவன் சட்னி ஆகிப்போவான். "கடவுளே! என்னைக் காப்பாற்று!" என்று கத்தினான். பலூன்களில் காற்றை மெது மெதுவாக வெளியேற்றுவதற்கு உதவியாக ஒரு அடைப்பு இருக்கும், இணைக்கப்பட்ட கூடை தரையில் இறங்க அது வசதி செய்யும் என்பதை அவன் திடீரென்று நினைத்துக் கொண்டான்.
ஆனால் இது அதைப் போன்ற பலூன் இல்லை. இதில் எந்தவித அடைப்பானும் இல்லை. இதிலிருந்து காற்றை எப்படி அவன் வெளியேற்றுவான்?
அவனிடம் கவனும் சில மிட்டாய்களும் இருந்தன. ஆனால் அவனது இரு கைகளும் சிக்கியிருக்கும் நிலையில் அவன் எப்படி கவணை பைக்குள்ளிருந்து எடுத்து உபயோகிப்பது?
பலூன் நகரக் கட்டிடங்களின் கூரைகள் மேலாக மிதந்து கடல் நோக்கிச் சென்றது. ஹாஜி அலி கோயிலும், கப்பல்களும், நுரை படிந்த அலைகளும் தெரிந்தன.
அவன் கடலில் விழுந்தால், காயம் படும்; ஆனால் உயிர்பிழைக்கலாம். கீழிருந்து எவராவது துப்பாக்கியால் சுட்டு பலூன் வெடிக்கும்படி செய்யலாகாதா என அவன் நினைத்தான்.
அதிவேக பினே தான் மயக்க மடையப்போவதாக எண்ணினான்.
அவன் ஒரு கையால் பித்தளை வளையத்தை இறுகப் பற்றி, மறு கையால் தன் இடுப்புவாரைக் கழற்ற முயன்றான். அது எளிதாக இல்லை. எனினும் சிரமப்பட்டுக் கழற்றினான்.
பாணேஷ் வாரின் நுனியை உறுதியாகப் பற்றி, ஒரு சவுக்கு மாதிரி, ஒங்கி அடித்தான். பளார்! பளார்! பளார்!
வாரின் பூட்டை பலூன் மீது கடுமையாக அடித்தான். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு முறை அடிக்க நேர்ந்தது. பிறகு தான் பூட்டின் ஊசி பிளாஸ்டிக்கில் குத்தியது.
ஒரு துளை பலூனின் பக்கத்தைக் கிழித்தது. காற்று பலத்த ஒசையுடன் வெளியே பாய்ந்தது.
மெதுவாக, ஆனால் நிச்சயமாக பலூன் கீழிறங்கத் தொடங்கியது. கீழே மீன்பிடிக்கும் படகுகளில், மீனவர் கண்கள் கடலின் மீன்கள் மேல் நிலைபெறவில்லை; வானத்தில் மிதந்த துரதிர்ஷ்டசாலிப் பையனையே நோக்கின. அவனுக்கு என்ன நேரும்; அவர்கள் உதவ முடியுமா?
இல்லை. எப்படி முடியும்? கடல் தான் அவர்கள் ராஜ்யம், வானம் இல்லையே.
ஆயினும், பலூன் விழுவதற்காக அவர்கள் இடம் விட்டு விலகி னார்கள். விரைவாக மீன்பிடிவலையை அகலமாகவும் உறுதியாகவும் விரித்துப் பிடித்தார்கள். பையனுக்கிருந்த ஒரே நம்பிக்கை அதுதான்.
பலூான் சரியாக அதனுள் விழுந்தது. வலை தனது இரையைப் பிடித்துவிட்டது.
***
நான் எங்கே இருக்கிறேன்?
இருமல் இருமல் இருமல்! "நீ வீட்டில் இருக்கிறாய்" என்று அத்தை சொன்னாள். "பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று அவர் சொன்னார்."
'அவர்' என்பது அவன் மாமா, ஒரு டாக்டர். அவன் மாமா பம்பாயில் பிரபல டாக்டர் ஆவார்.
"காயப்படவில்லையே, பாணேஷ்?"
"இல்லை. ஆனால் அதை நினைத்தால் எனக்கு வாந்தி வருகிறது. அழுவது யார் அத்தை யாரோ அழுவது கேட்கிறதே."
"உன் நண்பன் தான்."
"யார் அது-நந்து நந்து நவாதே? உனக்கு என்ன வந்தது?"
"பானேஷ், நான் வருத்தப்படுகிறேன். அது என் தவறு தான்."
"உன் தப்பா?"
நந்து தான் செய்ததை சுருக்கமாகச் சொன்னான். "நான் மோசமானவன், கொடியவன், சரியான கழுதை, அதிவேக பினே, என்னை மன்னித்தேன் என்று சொல். எப்படியும் நான் பரிசு பெறப்போவதில்லை. ஆனால் எனக்கே அது கிடைத்தாலும், அதை நான் வாங்கமாட்டேன். சத்தியமாக வாங்கமாட்டேன்!"
பாணேஷ் எழுந்து உட்கார்ந்தான். வியப்போடு நந்துவை நோக்கினான்.
அவ்வேளையில், அவன் மாமா உள்ளே வந்தார். "அபாரம், அதிவேகனே" என்றார். "ஆகவே நீ சுயநினைவோடு இருக்கிறாய். உனக்குத் தெரியுமா, நீ கீழே விழந்தாயே அந்த நேரத்தில் விழாமல் இருந்திருந்தால், விமானப் படை உன்னை மீட்பதாக இருந்தது! அதற்கு ஏற்பாடு பண்ணும் படி சகல இடங்களிலிருந்தும் போனில் சொன்னார்கள். இன்னும் என்ன தெரியுமா? இப்ப தான் கோகா கம்பெனியிலிருந்து போன் வந்தது. அவர்கள் உனக்காக ஒரு விசேஷப் பரிசு அறிவித்திருக்கிறார்கள். ஜாக் இருமல் மருந்துக்கு இப்படிப்பட்ட விளம்பரம் அவர்களுக்கு இதுவரை கிடைத்ததேயில்லை."
"நியாயப்படி அந்தப் பரிசு எனக்கு வரக்கூடாது; நந்து நவாதேக்கே அது உரியது!" நந்துவின் கண்களில் நீர் நிறைந்தது; பாணேஷின் கண்கள் குறும்போடு மின்னின.
(மராட்டிக் கதை)