உள்ளடக்கத்துக்குச் செல்

சிறந்த கதைகள் பதிமூன்று/ஸ்டாம்பு ஆல்பம்

விக்கிமூலம் இலிருந்து

ஸ்டாம்பு ஆல்பம்
சுந்தர ராமசாமி


ராஜப்பாவின் புகழ் மங்கிப்போய்விட்டது. மூன்று நாட்களாக நாகராஜனைச் சுற்றிக் கூட்டம், நாகராஜனுக்குக் கர்வம் வந்து விட்டது என்று ராஜப்பா எல்லாப் பையன்களிடமும் சொன்னான். பையன்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. நாகராஜன் சிங்கப்பூரிலிருந்து அவன் மாமா அனுப்பி வைத்த ஆல்பத்தை எல்லோரிடமும் காட்டினான். பள்ளிக் கூடத்தில் காலை முதல்மணி அடிப்பதுவரை பையன்கள் நாகராஜனைச் கற்றிச் சூழ நின்று கொண்டு ஆல்பத்தைப் பார்த்தார்கள். மதியம் இடை வேளையிலும் அவனை மொய்த்தார்கள். கோஷ்டி கோஷ்டியாக வீட்டிற்கு வந்தும் பார்த்து விட்டுப் போனார்கள். பொறுமையோடு எல்லோருக்கும் காட்டினான் அவன். யாரும் ஆல்பத்தைத் தொடக்கூடாது என்று மட்டும் சொன்னான். அவன் மடியில் வைத்தபடி ஒவ்வொரு பக்கமாகத் திருப்புவான். பையன்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வகுப்புப் பெண்களுக்கும் நாகராஜனின் புதிய ஆல்பத்தைப் பார்க்க வேண்டுமென்று ஒரே ஆசை. பெண்கள் சார்பில் பார்வதி வந்து கேட்டாள். அவள் தைரியத்திற்குப் பெயர் போனவள். ஆல்பத்திற்கு அட்டை போட்டு அவள் கையில் கொடுத்தான் நாகராஜன். எல்லாப் பெண்களும் பார்த்த பின் மாலையில் ஆல்பம் கைக்கு வந்து சேர்ந்தது.

இப்பொழுது ராஜப்பாவின் ஆல்பத்தைப்பற்றி பேசுவாரில்லை. அவனுடைய புகழ் மங்கித்தான் போய்விட்டது.

ராஜப்பாவின் ஆல்பம் மாணவர்கள் வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. தேனி தேன் சேர்ப்பது மாதிரி ஒவ்வொரு ஸ்டாம்பாகச் சேர்த்து வைத்திருந்தான். இதைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் கவனமில்லை அவனுக்கு. காலையில் எட்டு மணிக்கே வீட்டைவிட்டுக் கிளம்பி விடுவான். ஸ்டாம்பு சேர்க்கும் பையன்கள் வீடுதோறும் ஏறி இறங்குவான். இரண்டு ஆஸ்திரேலியாவைக் கொடுத்துவிட்டு ஒரு பின்லண்டு வாங்குவான். இரண்டு பாகிஸ்தான் வாங்கிக் கொண்டு ஒரு ருஷ்யாவைக் கொடுப்பான். மாலையில் வீட்டுக்கு வந்து புத்தகத்தை மூலையில் எறிந்துவிட்டு, முறுக்கைக் கையில் வாங்கி நிக்கர் பையில் அடைத்து நின்றபடியே காபியை விட்டுக்கொண்டு கிளம்பிவிடுவான். நாலு மைல் தொலைவில் ஒரு பையனிடம் கானடா இருப்பதாகத் தகவல் கிடைத் திருக்கும். முறுக்கைக் கடித்துக்கொண்டே வயற்காட்டு குறுக்குப் பாதையில் ஒடுவான்.

அந்தப் பள்ளிக்கூடத்திலே அவனுடைய ஆல்பம்தான் பெரிய ஆல்பம், சிரஸ்தார் பையன் அவன் ஆலபத்தை இருபத்தைந்து ரூபாய்க்கு விலைக்குக் கேட்டான். பணக் கொழுப்பு பணத்தைக் கொடுத்து ஆல்பத்தை விலைக்கு வாங்கிவிடலாமென்று நினைத்தான். ராஜப்பா சுடச்சுட பதில் கொடுத்தான். உங்க வீட்டிலெ ஒரு அழகான குழந்தை இருக்கே. முப்பது ரூபாய் தறேன். விலைக்குத் தாயேன்” என்று கேட்டான். கூடியிருந்த பையன்கள் எல்லோரும் கைதட்டி, விசில் அடித்து ஆமோதித்தார்கள்.

ஆனால் இப்பொழுது அவன் ஆல்பத்தைப் பற்றிப்பேச்சே இல்லை. அதுமட்டுமல்ல, நாகராஜனின் ஆல்பத்தைப் பார்த்தவர்கள் எல்லோரும் அதை ராஜப்பாவின் ஆல்பத்தோடு ஒப்பிட்டுப் பேசினார்கள். ராஜப் பாவின் ஆல்பத்தைத் தூக்கி அடித்துவிட்டதாம்!

ராஜப்பா நாகராஜனின் ஆல்பத்தைக் கேட்டு வாங்கிப் பார்க்க வில்லை. ஆனால் மற்றப் பையன்கள் பார்க்கிறபொழுது அந்தப் பக்கமே திரும்பாததுபோல் பாவித்துக்கொண்டு ஒரக்கண்ணால் பார்த்துக் கொண்டான். உண்மையாகவே நாகராஜனின் ஆல்பம் மிகவும் அழகாகத்தான் இருந்தது. ராஜப்பா ஆல்பத்திலிருந்த ஸ்டாம்புகள் நாகராஜனின் ஆல்பத்தில் இல்லை. எண்ணிக்கை குறைவுதான். ஆனால் அந்த ஆல்பமே அற்புதமாக இருந்தது. அதைக் கையில் வைத்துக் கொண்டிருப்பதே பெருமை தரும் விஷயம்தான். அந்த மாதிரி ஆல்பமே அந்த ஊர்க் கடைகளில் கிடைக்காது. !

நாகராஜனின் ஆல்பத்தில் முதல் பக்கத்தில் முத்து முத்தான எழுத்தில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தது. அவன் மாமா அப்படி எழுதி அனுப்பியிருந்தார்.

ஏ.எஸ். நாகராஜன்

'வெட்கம் கெட்டுப்போய் இந்த ஆல்பத்தை யாரும் திருட வேண்டாம். மேலே எழுதியிருக்கும் பெயரைப்பார். இது என்னுடைய ஆல்பம் புல்பச்சை நிறமாக இருப்பதுவரை தாமரை சிவப்பாக இருப்பது வரை, சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் அஸ்தமிப்பதுவரை இந்த ஆல்பம் என்னுடையது தான்.' மற்ற பையன்கள் எல்லோரும் இதைத் தங்களுடைய ஆல்பத்திலும் எழுதிக் கொண்டார்கள். பெண்கள் தங்களுடைய நோட்புத்தகத்திலும் பாடப் புத்தகத்திலும் எழுதிக் கொண்டார்கள். எதுக்கடா அவனைப் பார்த்துக் காப்பி அடிக்கணும் ஈயடிச்சான் காப்பி என்று எல்லாப் பையன்களிடத்திலும் இரைந்தான் ராஜப்பா.

ஒருவரும் பதில் பேசாமல் ராஜப்பா முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கிருஷ்ணனுக்குப் பொறுக்கவில்லை.

"போடா அசூயை பிடிச்ச பயலே" என்று கத்தினான். கிருஷ்ணன்.

"எனக்கு எதுக்குடா அசூயை? அவன் ஆல்பத்தைவிட என் ஆல்பம் பெரிசுடா!" என்றான் ராஜப்பா.

"அவனிட்ம் இருக்கிற ஒரு ஸ்டாம்பு உன்னிடம் இருக்கா? இந்தோனேஷியா ஸ்டாம்பு ஒண்ணு போருமே. கண்ணில் ஒத்திக்கடா அவன் ஸ்டாம்பெ" என்றான் கிருஷ்ணன்.

"என்னிடம் இருக்கிற ஸ்டாம்பெல்லாம் அவனிடம் இருக்கா" என்று கேட்டான் ராஜப்பா.

"அவனிடம் இருக்கிற ஒரு ஸ்டாம்பு ஒண்னு காட்டு பார்ப்போம்" என்றான் கிருஷ்ணன்.

"என்னிடம் இருக்கிற ஒரு ஸ்டாம்பு அவன் காட்டட்டும் பார்க்கலாம்: பத்து ரூபா பெட்."

"உன் ஆல்பம் குப்பைத்தொட்டி ஆல்பம்" என்று கத்தினான் கிருஷ்ணன். எல்லாப் பையன்களும், குப்பைத் தொட்டி ஆல்பம்; குப்பைத் தொட்டி ஆல்பம்; என்று கத்தினார்கள்.

தன்னுடைய ஆல்பத்தைப் பற்றி இனிமேல் பேசிப்பயனில்லை என்று தெரிந்து கொண்டான் ராஜப்பா.

அவன் அரும்பாடுபட்டுச் சிறுகச் சிறுகச் சேர்த்த ஆல்பம், சிங்கப்பூரிலிருந்து ஒரு தபால் வந்து நாகராஜனை ஒரே நாளில் பெரியவனாக்கிவிட்டு விட்டது. இரண்டிற்குமுள்ள வேற்றுமை பையன்களுக்குத் தெரியவில்லை. சொன்னாலும் அசடுகளுக்கு மண்டையில் ஏறாது.

ராஜப்பா தன்னிலையின்றி குமைந்து கொண்டிருந்தான். பள்ளிக் கூடம் போவதற்கே பிடிக்கவில்லை.

மற்றப் பையன்கள் முகத்தில் விழிப்பதற்கே வெட்கமாக இருந்தது. வழக்கமாக சனி ஞாயிறுகளில் ஸ்டாம்பு வேட்டைக்கு அலையாத அலைச்சல் அலைபவன் இந்தத் தடவை வீட்டை விட்டு வெளியே தலை நீட்டவில்லை. ஒரு நாளில் ராஜப்பா அவன் ஆல்பத்தை எத்தனை தடவை திருப்பித் திருப்பிப் பார்ப்பான் என்பதற்குக் கணக்கே கிடையாது. இரவு படுத்துக் கொண்ட பின் திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டு டிரங்குப்

பெட்டியைத் திறந்து ஆல்பத்தை எடுத்து ஒரு புரட்டு புரட்டிவிட்டு வருவான். அதை இரண்டு நாட்களாக வெளியிலேயே எடுக்கவில்லை. ஆல்பத்தைப் பார்ப்பதற்கே எரிச்சலாக இருந்தது. நாகராஜனின் ஆல்பத்தைப் பார்க்கிறபொழுது தன்னுடைய ஆல்பம் வெறும் அப்பளக் கட்டு என்று தான் தோன்றிற்று அவனுக்கு.

அன்று மாலை ராஜப்பா நாகராஜனின் வீடு தேடிச் சென்றான். அவன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். இந்த அவமானத்தை அவனால் அதிக நாட்கள் தாங்கிக் கொண்டிருக்கமுடியாது.

திடீரென்று ஒரு புதிய ஆல்பம் நாகராஜன் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அவ்வளவுதானே ஸ்டாம்பு சேகரிப்பதிலுள்ள தந்திரங்கள் அவனுக்கு என்ன தெரியும் ஒவ்வொரு ஸ்டாம்புக்கும் ஸ்டாம்பு சேர்க்கிறவர்கள் மத்தியில் என்ன மதிப்புண்டு என்பது அவனுக்குத் தெரியுமா என்ன பெரிய ஸ்டாம்புதான் சிறந்த ஸ்டாம்பு என்று நினைத்துக் கொண்டிருப்பான். அல்லது பெரிய தேசத்து ஸ்டாம்பு தான் அதிக மதிப்புள்ளது என்று எண்ணிக்கொண்டிருப்பான். எப்படியும் அவன் அமெச்சூர்தானே? தன்னிடம் இருக்கும் உதவாக்கரை ஸ்டாம்புகள் சில கொடுத்து, மணியான ஸ்டாம்புகளைத் தட்டிவிட முடியாதா என்ன? எத்தனையோ பேருக்கு நாமம் சாத்தவில்லையா? இதிலிருக்கிற தந்திரமும் மாயமும் கொஞ்சமா? நாகராஜன் எந்த மூலைக்கு?

ராஜப்பா நாகராஜன் வீட்டை அடைந்து மாடிக்குச் சென்றான். அவன் அடிக்கடி வருகிற பையன் என்பதால் யாரும் ஒன்றும் சொல்லவில்லை. மாடியில் சென்று நாகராஜனின் மேஜைக்கு முன் உட்கார்ந்து கொண்டான். சிறிது நேரம் கழிந்ததும் நாகராஜனின் தங்கை காமாட்சி மாடிக்கு வந்தாள். "அண்ணா டவுனுக்குப் போயிருக்கிறான்" என்று சொல்லி விட்டு, "அண்ணா ஆல்பத்தைப் பார்த்தியா?" என்று கேட்டாள்.

"உம்" என்றான் ராஜப்பா.

"அழகான ஆல்பம் இல்லையா? ஸ்கூல்லே வேறெ யாரிட்டேயும் இவ்வளவு பெரிய ஆல்பம் இல்லையாமே?"

"யாரு சொன்னா?"

"அண்ணாதான் சொன்னான்."

பெரிய ஆல்பம் என்றால் என்ன? பார்க்கப் பெரிதாக இருந்தால் போதுமா?

சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு, காமாட்சி கீழே சென்றுவிட்டாள்.

ராஜப்பா மேசையில் கிடந்த புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று டிராயர் பூட்டில் கைபட்டது. பூட்டை இழுத்துக் பார்த்தான். பூட்டித்தான் இருந்தது. திறந்து பார்த்தால் என்ன? மேஜை மேலிருந்து சாவியைக் கண்டெடுத்தான். ஏணிப்படியோரம் சென்று ஒரு தடவை கீழே குனிந்து பார்த்துவிட்டு, சட்டென்று டிராயரைத் திறந்தான். மேலாக ஆல்பம் இருந்தது. முதல் பக்கத்தைத் திருப்ப, அதில் எழுதியிருந்ததை வாசித்தான். நெஞ்சு படக் படக்கென்று அடித்துக் கொண்டது. ஒரு நிமிஷத்தில் டிராயரைப் பூட்டினான். ஆல்பத்தை எடுத்துச் சட்டைக்குள் நிக்கரில் செருகிக் கொண்டு கீழிறங்கி வீட்டைப் பார்த்து ஒட்டமாக ஒடினான்.

நேராக வீட்டிற்குள் சென்று புத்தக அலமாரிக்குப் பின்னால் ஆல்பத்தை மறைத்து வைத்தான். வாசல் பக்கம் வந்தான். உடம்பு பூராவும் கொதிப்பது போலிருந்தது. தொண்டை உலர்ந்தது. முகத்தில் ஜிவ் ஜிவ்வென்று ரத்தம் குத்திற்று.

இரவு எட்டு மணிக்கு எதிர்வீட்டு அப்பு வந்தான். கையையும் தலையையும் ஆட்டிக்கொண்டு விஷயத்தைச் சொன்னான். நாகராஜன் ஸ்டாம்பு ஆல்பத்தைக் காணவில்லையாம்! அவனும் நாகராஜனுமாக டவுனுக்குச் சென்றிருந்தார்களாம். திரும்பி வந்து பார்க்கிறபொழுது மாயமாக மறைந்துவிட்டதாம் ஆல்பம்.

ராஜப்பாவுக்கு ஒன்றும் பேச முடியவில்லை. அவன் எப்படியாவது போய்விட்டால் போதுமென்றிருந்தது. அப்பு சென்றதும் அறைக்குள் வந்தான். கதவைச் சாத்தினான். அலமாரிக்கு பின்னாலிருந்து ஆல்பத்தை எடுத்தாள். கை விறைத்தது. ஜன்னல் வழியாக யாராவது பார்த்து விடுவார்கள் என்று பயந்து மீண்டும் ஆல்பத்தை அலமாரிக்குப் பின்புறம் திணித்தான்.

இரவு சாப்பிட முடியவில்லை. வயிற்றை அடைத்துக் கொண்டு விட்டது. வீட்டிலுள்ள எல்லோரும் அவன் முகத்தைப் பார்த்து, "என்னடா, என்னடா" என்று கேட்டார்கள். தன்னுடைய முகம் பயங்கரமாக கோணிக் கொண்டிருப்பது மாதிரித் தோன்றிற்று அவனுக்கு.

எப்படியாவது துாங்கிவிடுவோம் என்று படுக்கையை விரித்து படுத்தான். தூக்கம் வரவில்லை. தான் துரங்கிக் கொண்டிருக்கிறபொழுது யாராவது அலமாரிக்குப் பின்னாலிருந்து ஆல்பத்தைக் கண்டெடுத்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து, ஆல்பத்தை எடுத்துவந்து தலையணைக்கடியில் வைத்துக் கொண்டான்.

இரவு எப்பொழுது தூங்கினான் என்பது அவனுக்கே தெரியாது. காலையில் கண் விழுத்த பின்பும் தலையணையில் இருந்து ஆல்பத்தை எடுக்க முடியவில்லை. தாயாரும் தகப்பனாரும் ஒருவர் மாற்றி ஒருவர் அங்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆல்பத்தோடு பாயைச் சுருட்டி அதன் மேல் உட்கார்ந்து கொண்டான்.

காலையில் மீண்டும் அப்பு வந்தான். அப்பொழுதும் ராஜப்பா பாய் மேல்தான் உட்கார்ந்து கொண்டிருந்தான். அப்பு காலையில் நாகராஜன் வீட்டுக்குப் போய்விட்டு வந்திருந்தான்.

"நேற்று அவனுடைய வீட்டுக்குப் போனியோ" என்று கேட்டான் அப்பு.

ராஜப்பாவுக்கு வயிற்றைக் கலக்கிற்று. ஒரு தினுசாக மண்டையை ஆட்டினான். எப்படி வேண்டுமென்றாலும் அர்த்தம் எடுத்துக்கொள்ளும் படி தலையை அசைத்தான்.

"நாங்க வெளியில் போனபின் நீ மட்டும்தான் அங்கே வந்தாய் என்று காமாட்சி சொன்னாள்" என்றான் அப்பு.

தன்னை சந்தேகப்படுகிறார்கள் என்பது தெரிந்துவிட்டது ராஜப்பாவுக்கு, நேற்று ராத்திரியிலிருந்து இதுவரை அழுது கொண்டே இருக்கிறான் நாகராஜன். அவன் அப்பா போலீஸுக்குச் சொன்னாலும் சொல்லுவார் போலிருக்கிறது" என்றான் அப்பு.

ராஜப்பா வாய் பேசாமலிருந்தான்.

"அவன் அப்பாவுக்கு டி.எஸ்.பி. ஆபீஸிலெதானே வேலை? அவர் விரலை அசைத்தால் போலீஸ் படையே திரண்டு விடும்" என்றான் அப்பு. நல்ல வேளை, அப்புவைத் தேடி அவன் தம்பி வந்தான். அப்பு சென்றுவிட்டான்.

ராஜப்பாவின் தகப்பனாரும் காலை உணவை முடித்துக்கொண்டு சைக்கிளில் ஆபீஸ் சென்று விட்டார். வாசல் கதவு சாத்தியிருந்தது.

ராஜப்பா படுக்கையிலேயே உட்கார்ந்துகொண்டிருந்தான். அரை மணி நேரமாயிற்று. அப்படியே அசையாமல் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

அப்பொழுது வாசல் கதவைத் தட்டும் ஒசை கேட்டது.

'போலீஸ்', 'போலீஸ்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் ராஜப்பா. வாசல் கதவில் உள்ளே சங்கிலி போட்டிருந்தது.

வாசல் கதவைத் தட்டும் சப்தம் தொடர்ந்து கேட்டது.

ராஜப்பா பாய்க்குள்ளிருந்து ஆல்பத்தை வெளியே எடுத்துக் கொண்டு மாடிக்கு ஒடினான். அங்கே நிற்க முடியவில்லை. அலமாரிக்குப் பின்னால் ஆல்பத்தை திணித்தான். சோதனை போட்டால் அகப்பட்டுவிடுமே? ஆல்பத்தை எடுத்துக் கொண்டு சட்டைக்குள் மறைத்தவாறே கீழே வந்தான். 

அப்பொழுதும் வாசல் கதவைத் தட்டும் ஒசை கேட்டுக் கொண்டிருந்தது.

"யாருடா? யாரு கதவைத் திறயேன்" என்று அம்மா உள்ளேயிருந்து கத்திக் கொண்டிருந்தாள். இன்னும் சில வினாடிகளில் அம்மாவே வந்து திறந்துவிடுவாள்!

ராஜப்பா பின்புறம் ஒடினான். மடமடவென்று ஸ்நான அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டான். வென்னிர் அடுப்பு தக தக வென்று எரிந்து கொண்டிருந்தது. பட்டென்று ஆல்பத்தை அடுப்பில் போட்டான். ஆல்பம் பற்றி எரிந்தது. அவ்வளவும் மணி மணியான ஸ்டாம்புகள். எங்கும் கிடைக்காத ஸ்டாம்புகள். தன்னையறியாமலே கண்களில் நீர் துளிர்த்துவிட்டது ராஜப்பாவுக்கு.

அப்பொழுது ஸ்நான அறைக்கு வெளியே அம்மாவின் குரல் கேட்டது.

"சட்டென்று குளித்துவிட்டு வாடா, உன்னைத்தேடி நாகராஜன் வந்திருக்கிறான்" என்றாள் அவன் தாயார்.

ராஜப்பா நிக்கரை கழற்றி ஸ்நான அறைக் கொடியில் போட்டுவிட்டு ஈரத்துண்டைக் கட்டிக்கொண்டு வெளியே வந்தான். வீட்டிற்குள் வந்து புதுச்சட்டையும், நிக்கரும் போட்டுக்கொண்டு மாடிக்குச் சென்றான். நாகராஜன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தான். ராஜப்பாவைப் பார்த்ததுமே, "என் ஸ்டாம்பு ஆல்பம் தொலைந்து போய்விட்டதடா" என்று ஈனமான குரலில் சொன்னான். முகத்தில் வருத்தம் தெரிந்தது. அழுது குளித்திருக்கிறான் என்பதையும் கண்கள் சொல்லிற்று.

"எங்கே வைத்தாய்டா?" என்று கேட்டான் ராஜப்பா,

"டிராயரில் பூட்டி வைத்திருந்ததாகத் தான் ஞாபகம். டவுனுக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்து பார்க்கிறபொழுது காணவில்லை."

நாகராஜன் கண்களிலிருந்து கண்ணிர் வழிந்தது. அவன் ராஜப்பா முகத்தைப் பார்ப்பதற்கு வெட்கப்பட்டு முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.

"அழாதேடா, அழாதேடா" என்று தேற்றினான் ராஜப்பா.

ராஜப்பா சமாதானம் சொல்லச் சொல்ல மேலும் மேலும் பெரிதாக அழுதான் நாகராஜன்.

ராஜப்பா சட்டென்று கீழே சென்றான். ஒரு நிமிஷத்திற்குள் நாகராஜன் முன்னால் வந்து நின்றான். அவன் கையில் அவனுடைய ஆல்பம் இருந்தது. 

"நாகராஜா. இந்த என்னுடைய ஆல்பம்.இதை நீயே வைத்துக் கொள். உனக்கே உனக்குத்தான். என்ன அப்படிப் பார்க்கிறாய் விளையாட்டில்லை. உனக்குத்தான். உனக்கே தான்."

"சும்மா சொல்கிறாய்" என்றான் நாகராஜன்.

"இல்லையடா உனக்கே தருகிறேன். நெஜமாகத்தான். உனக்கே உனக்கு வைத்துக்கொள்."

ராஜப்பா, அவன் ஸ்டாம்பு ஆல்பத்தைக் கொடுத்துவிடுவதா? நடக்கக் கூடியதா? நாகராஜனால் நம்பமுடியவில்லை. ஆனால் ராஜப்பா அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். அவனுக்கு குரல் கம்மிவிட்டது.

"எனக்குத் தந்துவிட்டால் உனக்கு"

"எனக்கு வேண்டாம்."

"உனக்கு ஒரு ஸ்டாம்புகூட வேண்டாமா?"

"நீ எப்படியடா ஸ்டாம்பே இல்லாமலிருப்பாய்?" என்று கேட்டான் நாகராஜன்.

ராஜப்பா கண்களிலிருந்து கண்ணிர் பெருக்கெடுத்தது.

"ஏண்டா அழுகிறாய்? எனக்கு ஆல்பத்தைத் தர வேண்டாம் நீயே வைத்துக்கொள். நீ எவ்வளவு கஷ்டப்பட்டுச் சேர்த்த ஆல்பம்" என்றான் நாகராஜன்.

"இல்லை, நீவைத்துக்கொள் உனக்கே இருக்கட்டும். எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப் போய்விடு. போ, போ" என்று ராஜப்பா அழுது கொண்டே கத்தினான். நாகராஜனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் ஆல்பத்தை எடுத்துக்கொண்டே கிழே இறங்கி வந்தான்.

சட்டையைத் துாக்கிக் கண்களைத் துடைத்துக்கொண்டே பின்னால் இறங்கி வந்தான் ராஜப்பா.

இருவரும் வாசல்படிக்கு வந்து விடடார்கள்.

"நீ ஆல்பத்தைக் கொடுத்ததற்கு ரொம்ப தாங்ஸ். நான் வீட்டுக்கு போகட்டுமா என்று கேட்டுக்கொண்டே படியில் இறங்கினான் நாகராஜன்.

அப்பொழுது, "நாகராஜா" என்று கூப்பிட்டான் ராஜப்பா. நாகராஜன் திரும்பிப் பார்த்தான்.

"அந்த ஆல்பத்தைக் கொண்டா. இன்று ராத்திரி ஒரே ஒரு தடவை பூராவையும் பார்த்துவிட்டு, காலையில் உன் வீட்டில் கொண்டுவந்து தந்துவிடுகிறேன்" என்றான் ராஜப்பா. 

"சரி" என்று ஆல்பத்தைக் கொடுத்துவிட்டுப் போனான் நாகராஜன்.

ராஜப்பா மாடிக்குச் சென்று கதவைச் சாத்திக்கொண்டு ஆல்பத்தை நெஞ்சோடு அணைத்தவாறு ஏங்கி ஏங்கி அழுதான்.

(தமிழ்க் கதை)