சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்/குற்றங்களைத் தடுக்க வழி
50
குற்றங்களைத் தடுக்க வழி
ஒரு நாட்டை அடுத்துள்ள மலைப்பகுதியில், முனிவர் ஒருவர் தியானத்தில் ஆழ்ந்து இருந்தார்.
அந்தப் பகுதியானது கொள்ளைக்காரர்களுக்குப் புகலிடமானது. தாங்கள் நகரத்தில் கொள்ளையடித்த பொருள்களை, மறைத்து வைப்பதற்கும், தாங்கள் ஒளிந்து கொள்வதற்கும், அந்த இடத்தைப் பயன்படுத்தி வந்தனர்.
ஒரு நாள், கொள்ளையர்கள் அங்கே மறைத்து வைத்திருந்த பொருள்களை எடுத்துப் போக வந்தனர். ஆனால், பொருள்கள் காணப்படவில்லை. கொள்ளையர்கள் முனிவர் மீது சந்தேகப்பட்டு, “நாங்கள் இங்கே மறைத்து வைத்திருந்த பொருள்களைக் காணவில்லையே; அவை எங்கே?” என்று கேட்டனர்.
“நான் எதையும் அறியேன்!” என்றார் முனிவர்.
அவர் கூறியதை நம்பாத கொள்ளையர்கள், முனிவரை அடித்து, துன்புறுத்திக் கேட்டார்கள்.
முனிவர் மீண்டும், “நான் எதையும் அறியேன்” என்று கூறினார். கொள்ளையர்களுக்குச் சந்தேகம் தீரவில்லை. முனிவரைக் கத்தியால் குத்தி, சித்திரவதை செய்தார்கள்.
அப்போதும் முனிவர். “நான் எதையும் அறியேன்” என்றார்.
அதோடு முனிவரை விட்டு விட்டு, கொள்ளையர்கள் ஓடி விட்டனர்.
மறுநாள் வேட்டைக்கு வந்த அரசன் முனிவரின் பரிதாப நிலையைக் கண்டு வருந்தி, என்ன நடந்தது என்று விசாரித்தான்.
தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறினார் முனிவர்.
உடனே காவலர்களை ஏவி, கொள்ளையர்களைத் தேடிப் பிடித்துக் கொண்டு வருமாறு கட்டளையிட்டான் அரசன்.
கொள்ளையர்கள் பிடித்து வரப்பட்டனர். அவர்களுக்கு மரண தண்டனை விதித்தான் அரசன்.
முனிவர் புன்முறுவலுடன், “அரசே! அவர்களைக் கொல்வதால், என்ன நன்மை ஏற்படும்? அவர்களுடைய முரட்டுத்தனத்தால் அவ்வாறு நடக்கின்றனர். அவர்கள் கைகளில் உள்ள கத்திகளே அவர்களை இயங்க வைக்கின்றன. அவர்களுக்குக் கல்விப் பயிற்சி இல்லாமையாலும், பசியாலுமே இவ்வாறு செய்யத் தூண்டுகிறது. நாட்டில் கல்விப் பயிற்சியும், தொழில்களும் பெருகச் செய்தால் அவர்கள் திருந்தி விடுவார்கள்” என்றார்.
அரசனும் அதை ஏற்று, நாட்டில் கல்வி கற்க வசதியும், தொழில் பயிற்சியும் உண்டாக ஏற்பாடு செய்தான்.
கொள்ளையர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தான்.
ஒவ்வொரு கதையிலும் ஒரு நீதியைக் கொண்டு சிறுவர், சிறுமியருக்குப் புரியும் வண்ணம் எளிய தமிழில் அமைந்த ஐம்பது கதைகள் கொண்டது இந்நூல்.