உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்/திறமை மிக்க அமைச்சர்கள்

விக்கிமூலம் இலிருந்து

49
திறமை மிக்க அமைச்சர்கள்


உச்சயினி என்ற சிறிய நாடு. அதை புண்ணிய சேனன் என்ற அரசன் ஆட்சி செய்தான். நாடு வளமாக இருந்தது. மக்களும் நலமாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

அதைக் கண்டு பொறாமை கொண்டான் பக்கத்து நாட்டு அரசன் பராக்கிரமன் என்பவன்.

அவ்வப்போது, சிறு, சிறு எல்லைச் சண்டைகளை ஏற்படுத்திக் கொண்டே இருந்தான் பகைவனான பராக்கிரமன்.

திடீரென ஒரு நாள், உச்சயினி நாட்டின் மீது முற்றுகையிட்டு விட்டான் அந்த பராக்கிரமன்.

உச்சயினியின் படைபலம் பகைவனுக்கு ஈடு கொடுக்கத் தக்கதாக இல்லை. எதிர்த்துப் போரிட்டால், நிச்சயம் தோல்வி ஏற்படும் என்பது அமைச்சர்களுக்கு நன்கு தெரியும். அதனால், அமைச்சர்கள் கூடி, ஆலோசனை நடத்தி, ஒரு திட்டம் தீட்டி, அதன்படி செயல்பட்டனர். உச்சயினி அரசனையும், ராணியையும் மாறுவேடத்தில், பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்தனர்.

பிறகு, அரசனும், ராணியும் இறந்து விட்டதாக செய்தியை எங்கும் பரவச் செய்தனர். இறுதிச் சடங்கைச் செய்வது போல ஒரு பாசாங்குச் சடங்கையும் செய்து முடித்தனர்.

தங்கள் அரசனும், ராணியும் இறந்து விட்டதால், இனி போர் புரிய அவசியம் இல்லை. உச்சயினி நாட்டின் ஆட்சியை தாங்களே ஏற்று நடத்தலாம் என்ற கேட்டுக் கொள்வதாக, பகை அரசனான பராக்கிரமனுக்கு சமாதானத் தூது அனுப்பினார்கள் அமைச்சர்கள்

போர் புரியாமலேயே, வெற்றி கிடைத்து விட்டதாக பெருமகிழ்ச்சியில், உச்சயினி அமைச்சர்கள் அனுப்பிய சமாதானச் செய்தியை ஒப்புக் கொண்டு, உச்சயினிக்குள் கம்பீரமாக நுழைந்தான் பராக்கிரமன்.

பராக்கிரமனின் படை முகாமில் இருந்த வீரர்கள், தங்கள் ஆயுதங்களை எல்லாம் கீழே போட்டு விட்டு, அலட்சியமாக இருந்தனர். மேலும், போர் முனையில், போதுமான எச்சரிக்கையோடு இல்லாமல், இருந்தனர்.

உச்சயினி நகரத்துக்குள் சிக்கிக் கொண்ட பகை அரசன் பராக்கிரமன், சிறை பிடிக்கப்பட்டான். இதைப் பெரிய வாய்ப்பாகச் கொண்டு, உச்சயினியின் படைகள் வீறு கொண்டு எழுந்து, பகைவர்களின் பாசறைக்குள் புகுந்து, பெருத்த சேதத்தை உண்டாக்கின.

அதன் பின், மறைந்திருந்த அரசனையும், ராணியையும் வெளியே அழைத்து வந்து, ஆட்சி பீடத்தில் அமர்த்தினார்கள் அமைசசாகள.

அமைச்சர்களின் சாமர்த்தியத்தால், தன் நாடு, பகைவனிடம் சிக்காததோடு, அவனையும் சிறைப் பிடித்ததற்கு, அமைச்சரவைக்கு நன்றி தெரிவித்து, பல வெகுமதிகளை அளித்தான் உச்சயினி அரசன.

திறமையான அமைச்சர்களால், நாடும், அரசனும் மாற்றானிடம் அகப்படாமல் தப்பிக்க முடிந்தது.