சிற்றட்டகம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இந்த புத்தகத்தை Mobi(kindle) fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை EPUB fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை RTF fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை PDFஆக பதிவிறக்குக. இவ்வடிவில் பதிவிறக்குக

கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாற்கவிராச நம்பி என்பவர் இயற்றிய நம்பியகப்பொருள் என்னும் நூலின் 251 ஆம் நூற்பாவுக்கு எழுதப்பட்ட உரையில் சிற்றட்டகம் என்னும் பாடல்கள் சில உள்ளன. ஆசிரியப் பாவாலான இந்த இலக்கியப் பாடல்கள் அகப்பொருள் பற்றியவை. பாடலமைதி சங்ககாலப் பாடல்களைப் போல உள்ளது. பாடல் தரும் செய்தியும், உரைக்குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளன.

1[தொகு]

உரைத்திசின் தோழி!அது புரைத்தோ வன்றே
எருத்தம் கமழும் ஈன்றோள்
துறைப்ப என்றி இரீஇயர் என் உயிரே.

தோழி! நீ சொல். அது பெருமையுடைய செயல் அன்று அல்லவா? என் தாய் என் தோளைத் தழுவிக்கொண்டு துறை போல் குளுமையாக இருக்கிறாள் என்கிறாய். (இவ்வாறு அவரிடம் செல்ல விடாமல் தடுப்பதை விட) அவள் என் உயிரைப் பிரித்திருக்கலாம்.
  • குறிஞ்சித் திணைப் பாடலில் ஊடல் என்னும் உரிப்பொருள் மயங்கியுள்ளது (உரைக்குறிப்பு)

2[தொகு]

சிலைவிற் பகழிச் செந்துவர் ஆடைக்
கொலைவில் எயினர் தங்கைநின் முலைய
சுணங்கு என நினைதி நீயே
அணங்குஎன நினையும்என் அணங்குறு நெஞ்சே.

செந்துவர் (காவி) உடை தரித்துள்ள எயினர் வைத்துக்கொண்டுள்ள வில்லம்பு கொலைவில்லாக மாறும். அதுபோல அவருடைய தங்கையாக விளங்கும் நீயும் உன் முலையில் பூத்துள்ள தேமலை அழகு என எண்ணிக்கொண்டிருக்கிறாய். என் நெஞ்சமோ அதனை, என்னை வருத்தும் 'அணங்கு' என எண்ணிப் படபடக்கிறது.
  • பாலைத்திணைப் பாடலில் புணர்தல் உரிப்பொருள் வந்துள்ளது. (உரைக்குறிப்பு)

3[தொகு]

நாளும் நாளும் ஆள்வினை அழுங்க
இல்லிருந்து மகிழ்வோற்கு இல்லையால் புகழ்என
ஒண்பொருட்கு அகல்வர்நம் காதலர்
கண்பனி துடையினித் தோழி நீயே.

ஒவ்வொரு நாளும் பொருளீட்ட வேண்டிய கடமையைக் கைவிட்டுவிட்டு இல்லத்தில் மனைவியோடு மகிழ்ந்திருப்பவர்களுக்குப் புகழ் இல்லை என்று எண்ணிப் பொருளீட்டச் செல்லவிருக்கிறார், காதலர். எனவே அவர் பிரிவுக்காக இனி, தோழி! நீ வருந்தாதே - என்று தலைவியிடம் தோழி கூறுகிறாள்.
  • பாலைத்திணைப் பாடலில் 'இருத்தல்' ஆகிய முல்லைத்திணையின் உரிப்பொருள் மயங்கி வந்துள்ளது. (உரைக்குறிப்பு)

4[தொகு]

சுறவுப்பிறழ் இருங்கழி நீந்தி அல்கலும்
இரவுக்குறிக் கொண்கன் வந்தனன்
விரவுமணி நெடும்பூண் விளங்கிழை யோயே.

ஆளை விழுங்கும் சுறாமீன் பிறழும் உப்பங்கழியை நீந்திக் கடந்து இரவு வேளையில் உன்னை மனைவியாக்கிக்கொள்ளும் கொண்கன் வந்திருக்கிறார். ஓசை தரும் அணிகலன்களை அணிந்துள்ள நீ (ஓசை படாமல்) அவனிடம் செல். - தோழி தலைவியைத் தலைவனிடம் ஆற்றுப்படுத்துகிறாள்.
  • புணர்தல் என்னும் உரிப்பொருள் நெய்தல் நிணையில் மயங்கி வந்துள்ள பாடல். (உரைக்குறிப்பு)
"https://ta.wikisource.org/w/index.php?title=சிற்றட்டகம்&oldid=1052074" இருந்து மீள்விக்கப்பட்டது