சிலப்பதிகாரக் காட்சிகள்/காவிரிப்பூம்பட்டினம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
சிலப்பதிகாரக் காட்சிகள்
1. காவிரிப்பூம்பட்டினம்

இன்றைய நிலைமை

இற்றைக்கு ஏறத்தாழ ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகளுக்கு முன் காவிரிப்பூம்பட்டினம் என்ற அழகிய நகரம் இருந்தது. அது, காவிரியாறு கடலொடு கலக்கும் இடத்தில், அதன் இரண்டு கரைகளிலும் அமைந்திருந்தது. அந்நகரம் கட லுக்கு இரையாகி விட்டது. இப்பொழுது அங்கு மணல் மேடுகளும் வயல்களும் சில வீடுகளுமே இருக்கின்றன. அந்த இடத்தில் பழைய காலத்துப் பானை ஒடுகள், உறை கிணறுகள், பண்டைக்கால நாணயங்கள் முதலியன பூமிக்குள் இருந்து கிடைக்கின்றன.

பன்டை நிலைமை

1800 ஆண்டுகளுக்கு முன் அந்த இடம் பெரிய நகரத்தைப் பெற்றிருந்த இடமாகும். காவிரிப்பூம் பட்டினம் சோழ நாட்டுத் தலைநகரம் ஆகும். சோழ நாடு என்பது தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களைக் கொண்ட நிலப் பகுதியாகும். அதனைச் சோழர் என்ற அரச மரபினர் நெடுங் காலமாக ஆண்டு வந்தனர்.

நகரப் பிரிவுகள்

காவிரிப்பூம்பட்டினம் சோழர் தலைநகரமாக இருந்தது; சோழ நாட்டுக்குத் துறைமுக நகரமும் அதுவே ஆகும். இந்த இருவகைச் சிறப்பினால் அந்த நகரம் மிக்க சிறப்படைந்து விளங்கியது. அதற்குப் புகார்', ‘பூம்புகார்’ என்ற பெயர்களும் வழங்கின. புகார் நகரம் மிகப் பெரியது: அக நகர், புற நகர் என்ற இரண்டு பிரிவுகளைப் பெற்றி ருந்தது.

அக நகர்

அக நகர் நடுவில் மன்னவன் மாளிகை நடு நாயகமாக வானுற ஓங்கி வளம்பெற விளங்கியது. அதனைச் சூழ்ந்து தேர்ப்பாகர், யானைப்பாகர், குதிரைப்பாகர், படைத்தலைவர், வீரர் என்பவர் விடுதிகளைக் கொண்ட தெருக்கள் திகழ்ந்தன. அரச மாபினர் வாழும் அழகிய தெருக்கள் இருந்தன. அந்தணர் உறையும் அகன்ற தெருக்கள் இருந்தன. வணிகர் வாழும் வளம் மிக்க வீதிகள் காணப்பட்டன. உழவர் வசிக்கும் உணவு மிக்க தெருக்கள் காட்சி அளித்தன. இவற்றுக்கு அப்பால் மருத்துவர், சோதிடர், சூதர்[1], மாகதர்[2], வைதாளிகர்[3], முத்துக் கோப்பவர், நடன மாதர். நாடக மகளிர், ஆடல் ஆசிரியர், இசை ஆசிரியர் நாடக ஆசிரியர் முதலியோர் வாழும் பல தெருக்கள் இருந்தன. இடையிடையே பல கோவில்கள் இருந்தன. அவற்றுள் சிறப்பாகக் குறிக்கத். தக்கவை-(1) சிவன் கோயில், (2) பெருமாள் கோயில், (3) பலராமன் கோயில், (4) இந்திரன் கோவில், (5) முருகன் கோவில், (6) சூரியன் கோயில், (7) சந்திரன் கோயில், (8) புத்தர் கோயில், (9) அருக தேவன் (சமணர்) கோயில் என்பன. அக்கோயில்கட்கு அப்பால் அறச்சாலை களும் வேள்விச் சாலைகளும் கல்விச் சாலைகளும் அமைந்து விளங்கின. பொதுமக்கள் வந்து தங்கி யிருப்பதற்கும் அயல் ஊராரும் நாட்டாரும் வந்து தங்குவதற்கும் வசதியாகப் பல மன்றங்கள் (பொது இடங்கள்) இருந்தன. நகர மக்கள் மாலை வேளைகளில் இன்பமாகப் பொழுது போக்குவதற்காக உய்யான வனம், சம்பாபதி வனம், கவேர வனம், உவவனம என்ற மலர்ச் சோலைகள் இருந்தன.

புறநகர்

புறநகர் என்பது கடற்கரை ஓரத்தில் இருந்த நகரப் பிரிவாகும். அங்குப் பெரிய மாளிகைகள் பொலிவுற்று விளங்கின. அவற்றில் மான் கண்களைப் போன்ற சாளரங்கள் பல இருந்தன. திசை மயங்கிச் செல்லும் கப்பல்களுக்குத்திசை அறிவித்து நின்ற கலங்கரை விளக்கம் இருந்தது. பருத்தி நூல், பட்டு நூல், எலி மயிர், ஆட்டு மயிர் இவற்றால் ஆடை நெய்யும் சாலியர் தெருக்கள் இருந்தன. இரும்பு, வெண்கலம், பித்தளை, செம்பு, வெள்ளி இவற்றால் பலவகைப் பொருள்களைச் செய்யும் தொழிலாளர் தெருக்கள் இருந்தன. கட்டடம் கட்டுபவர், ஓவியம் தீட்டுபவர், சிற்ப வல்லுநர், தையற்காரர், பாய் முடைபவர், பந்தல் அலங் காரம் செய்பவர் முதலிய பலவகைத் தொழிலாளர் வாழும் வீதிகள் இருந்தன. பூ வாணிகர், இலை வாணிகர், பிட்டு வாணிகர், அப்ப வாணிகர் சந்தனம் விற்பவர், முத்து வாணிகர், பவள வாணிகர், பலவகைத் தானியங்களை விற்பவர், மீன் வாணிகர் முதலியோர் உறைந்த தெருக்கள் இருந்தன. கடல் வாணிகத்தைக் கருதி சீனம், கிழக்கிந்தியத் தீவுகள், அரேபியா, கிரேக்க நாடு, ரோமாபுரி முதலிய நாட்டு வணிகர் வந்து தங்கியிருந்த தெருக்களும் இருந்தன.

நாள் அங்காடி

இந்த இரண்டு நகரங்கட்கும் இடையில் பெரிய சோலை ஒன்று உண்டு. அச்சோலையில் பெரிய சந்தை நாள்தோறும் கூடும். அது நாள் அங்காடி எனப்பட்டது. அங்குப் பெரிய பூதத்தின் கோயில் இருந்தது.

இந்திர விழா

புகார் நகரத்தில் வருடந்தோறும் இந்திரனுக்கு விழா செய்யப்பட்டு வந்தது. அவ்விழாச் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் தொடங்கி இருபத்தெட்டு நாட்கள் நடைபெற்று வந்தது. அம்மாநகரத்தார் அவ்விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடி வந்தனர். விழா முடிவில் நகர மாந்தர் கடலில் நீராடி இன்பமாகப் பொழுது போக்குவார். விழாக் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த பல சமயங்களைச் சேர்ந்த அறிஞரும் அங்குக் கூடுவது வழக்கம்; தத்தம் சமயத்தைப் பற்றிச் சொற்பொழிவு ஆற்றுதல் வழக்கம். இச் சொற்பொழிவுகளால் பொதுமக்கள் பல சமயங்களைப் பற்றிய செய்திகளை அறிய வசதி உண்டானது.

துறைமுகம்

காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகம் பெரியது. அதனில் அரேபியா, கிரீஸ், இத்தாலி முதலிய மேற்கு நாட்டுக் கப்பல்களும் ஜாவா, சீனம், பர்மா முதலிய கிழக்கு நாட்டுக்கப்பல்களும் வந்து தங்குவது வழக்கம். அவை தமிழ்நாட்டுப் பண்டங்களைத் தம் நாடுகட்கு ஏற்றிச் செல்லும்; தம் நாட்டுப் பொருள்களான கண்ணாடிப் பொருள்கள், பட்டாடைகள், குடி வகைகள், பலவகை யந்திரப் பொறிகள் முதலியவற்றை ஏற்றி வந்து இறக்குமதி செய்யும். இப்பொருள்களை இறக்கிக் கணக்கெடுக்கவும், ஏற்றுமதிக்குரிய பொருள் களைக் கணக்கிட்டுச் சோழர் முத்திரையாகிய ‘புலி முத்திரை’ பொறிக்கப்பட்ட மூட்டைகளைக் கப்பல்களில் ஏற்றவும் ஏராளமான மக்கள் துறை முகத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர், அங்குச் சுங்கச் சாவடி ஒன்று இருந்தது. இக் காலத்தில் சென்னை போன்ற துறைமுக நகரத்தில் உள்ள துறைமுக நிலையங்களும் சுங்கச் சாவடியும் 1800 ஆண்டுகட்கு முன் நமது பூம்புகார் நகரத்தில் இருந்தன என்பதைச் சுருக்கமாகக் சொல்லலாம்.


2. கோவலன்-கண்ணகி திருமணம்

வணிக அரசர்

பல வளங்களும் நிறைந்து விளங்கிய காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்த வணிகர் அரசர்க்கு நிகரான பெருமதிப்புடன் வாழ்ந்து வந்தனர். அதற்குக் காரணம் அவர்கள் செய்துவந்த கடல்

  1. சூதர்-நின்று அரசனைப் புகழ்வர்.
  2. மாகதர் உட்கார்ந்து அரசனைப் புகழ்வர்
  3. வைதாளிகர்-பல வகைத் தாளம் இடுபவர்