உள்ளடக்கத்துக்குச் செல்

சிலப்பதிகாரக் காட்சிகள்/மணமக்கள் வாழ்க்கை

விக்கிமூலம் இலிருந்து

3. மணமக்கள் வாழ்க்கை

தனி வாழ்க்கை

கண்ணகிக்கும் கோவலனுக்கும் திருமணம் நடந்த பின்னர், அவர்கள் இருவரும் தனியே வாழ்க்கை நடத்த விடப்பட்டனர். அவர்கட்காகத் தனி மாளிகை ஒன்று விடப்பட்டது. கண்ணகிக்கு உதவியாகப் பணிப் பெண்கள் பலர் அமர்த்தப்பட்டனர். மணமான பிறகு இவ்வாறு மணமக்களைத் தனி வாழ்க்கை நடத்த விடுதலே பண்டைப் பழக்கமாகும். இப்பழக்கமே இன்று மேனாட்டாரிடம் மிகுந்து காணப்படுகின்றது.

இன்ப மாளிகை

மணமக்கள் தங்கி இருந்த விடுதி மிக்க அழ கானது; இரண்டு அடுக்கு மாடி வீடாகும். மூன்றாம் தளம் திறந்த நிலையில் இருந்தது. அதன்மீது பகற் காலத்தில் வெயிலும் இரவுகாலத்தில் நிலவும் காய்தல் உண்டு. கண்ணகி நிலாக் காலங்களில் தன் தோழியரோடு அத்தளத்தில் இருந்து இன்பமாகப் பொழுது போக்குவாள்; சில சமயங்களில் கோவலனுடன் இருந்து இசைக் கருவிகளை மீட்டி அவனை இன்பப்படுத்துவாள். மாளிகையில் ... எங்குப் பார்ப்பினும் அழகிய ஓவியங்கள காட்சி அளித்தன. வறுமைக்குச் சிறிதும் இடம் கொடாத அம்மாளிகை 'இன்ப மாளிகை'யாக இலங்கியது.

இன்ப வாழ்க்கை

கோவலன் தன் கருத்திற்கு இசைந்த காதலியான கண்ணகியுடன் மனம் ஒத்து இல்லறம் நடத்தி வந்தான். மனம் ஒத்த காதலர் நடத்தும் வாழ்க்கையே ‘இன்ப வாழ்க்கை’ எனப்படும் எல்லா வீடுகளிலும் இன்ப வாழ்க்கை இருத்தல் அரிது. ஏன்? ஒத்த குணமும் ஒத்த கல்வியும் ஒத்த பண்பும் இல்லாத ஆடவர்-பெண்டிர் திருமணங்கள் மிகுதியாக நடந்து வருதலே இதற்குக் காரணம் ஆகும். ஆடவன் சிறந்த படிப்பாளியாக இருப்பான்; அவனுக்கு வாய்த்த மனைவி கல்வி அறிவு அற்றவளாக இருப்பாள்; ஆடவன் ஒழுக்கம் உடையவனாக இருப்பான்; மனைவி ஒழுக்கம் தவறியவளாக இருப்பாள். கணவன் விரும்புவதை மனைவி விரும்பாள்; மனைவி விரும்புவதைக் கணவன் விரும்பான். கணவன் தன் உயர்ந்த நோக்கங்களைக் கூற, அவை இன்னவை என்ப தனையே புரிந்து கொள்ள முடியாத நிலையில் மனைவி இருத்தலும் உண்டு. இத்தகைய பல காரணங்களால், பெரும்பாலான இல்லங்களில் கணவன்-மனைவியர்க்குள் ஒத்த மனவுணர்ச்சி உண்டாவதில்லை. ஒத்த மனவுணர்ச்சி இல்லாத இடத்தில் வாழ்க்கை இன்பம் உண்டாதல் முயற் கொம்பே ஆகும். பெண்கள் ஆண்களைப் போலத் தாராளமாகக் கல்வி கற்க விடப்படின், எல்லாப் பெண்களும் கல்வி அறிவு நிரம்பப் பெறுவர். கல்வி அறிவு ஏற்படின் உலக அறிவு தானாக உண்டாதல் இயல்பு. பற்பல நூல்களை படிப்ப தனாலும் படி.த்தவருடன் பழகுவதனாலும் சமுதாய வாழ்வைக் கவனிப்பதனாலும் பரந்த நோக்கம் உண்டாகும்; உயர்ந்த கொள்கைகள் உள்ளத்திற் பதிய வழி உண்டாகும். நன்றாகப் படித்து உயர்ந்த கணவனும் மனைவியும் நடத்தும் இன்ப இல்லற வாழ்க்கையே இதற்குத் தக்க சான்றாகும்.

ஒத்த உணர்ச்சி

கோவலன் பல்கலை விற்பன்னன்; கண்ணகியும் பல ககைகளில் வல்லவள்; கவிபாடும் ஆற்றல் பெற்றவள். இளமை முதலே ஒருவரை ஒருவர் நேரிற் கண்டு பழகியவர்; ஒத்த உள்ளத்தினர்; ஒத்த உணர்ச்சியினர்; கோவலன் கூறிய உயர் நிலைச் செய்திகளைக் கண்ணகி அறியும் ஆற்றல் பெற்றிருந்தாள்; அவ்வாறே கண்ணகி கூறிய வற்றை அறியும் அறிவு வன்மை கோவலனிடம் குடிகொண்டு இருந்தது. ஆதலின் அவர்க்குள், ‘இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர்’ என்று கூறுவதற்கில்லை. எனவே, இருவரும் எவ்வித வேறு பாடும் அற்றவராய்ப் படிப்பதிலும் பேசுவதிலும் தர்க்கமாடுவதிலும் பாடுவதிலும் ஆடுவதிலும் ஒத்த உணர்ச்சி உடையவராக இருந்தனர்.

பா-விருந்து

கண்ணகி பாக்கள் இயற்றலில் வல்லவள். அவள் இயற்கைக் காட்சிகளைக் கண்டு கண்டு, இயற்கை அழகில் தோய்ந்து தோய்ந்து தன்னை மறந்திருத்தல் வழக்கம். அல்வாறே தெய்வ பக்தியிலும் அவள் மெய் மறந்து இருப்பதுண்டு. கண்ணகி, தன் உள்ளம் கவர்ந்த இயற்கைப் பொருள்களைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் பாக்கள் பாடுதல் வழக்கம். கண்ணகி ‘வெண்பாக்கள்’ பாடுவதில் விருப்பம் கொண்டவள். பலவகைப் பாக்களில் அவளது உள்ளத்தைக் கவர்ந்தது வெண்பாவே ஆகும். இங்ங்ணம் கண்ணகி குழைந்த அன்பினாற் பாடும் செய்யுட்களைக் கோவலன் படித்தும், கண்ணகி பாடக் கேட்டும் இன்பக கடலில் மூழ்குவான்.

இசை - விருந்து

கண்ணகி யாழ் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவள். கோவலனும் அக்கருவி மீட்டிப் பாடுதலில் வல்லவன். அதனால், அவர்கள் அடிக்கடி யாழ் வாசித்துப் பாடுதலில் ஈடுபட்டு இருந்தனர். அக் காலததில் தமிழ்ப் பண்புகள் வழக்கில் இருந்தன. அவை குரல் துத்தம், கைக்கிளை, இளி, உழை, விளரி, தாரம் என்று ஏழாகும். இவை ஏழ் இசை எனபபடும். இந்த ஏழிசையிலும் கண்ணகியும் கோவலனும் வல்லவராக விளங்கினர். கண்ணகி யாழை மீட்டிக் குரல் எடுத்துப் பாடும்பொழுது கோவலன இசை இன் பத்தில் ஈடுபட்டிருப்பான். அவ்வாறே அவன் யாழ் இசைத்துப் பாடுங்கால் கண்ணகி பரவசமாதல் வழக்கம்.

நலம் பாராட்டல்

இவ்வாறு ஒத்த கருத்தும் ஒத்த செயலும் உடைய மணமக்கள் உயிரும உடம்பும் போலவும் நகமும் தசையும் போலவும் மலரும் மணமும் போலவும் வாழ்ந்து வந்தனர். கண்ணகியின் குண நலங்களில் ஈடுபட்ட கோவலன் அவளை,

"மாசறு பொன்னே! வலம்புரி முத்தே
காசறு வியையே கரும்பே தேனே !

அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெருமட மகனே!
மலையிடைப் பிறவா மணியே! என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ!
யாழிடைப் பிறவா இசையே! என்கோ
தாழிருங் கூந்தல் தையல்! நின்னை"

என்று நாள்தோறும் பாராட்டுவான் ஆயினன்.

கண்ணகி, தன் மாளிகை தேடிவந்த இல்லறத் தார்க்கும் துறவறத்தார்க்கும் இன்முகம் காட்டி விருந்தூட்டி உபசரித்து வந்தாள். அதனால் எல்லோரும் அவளது இல்லறப் பண்பைப் பாராட்டி வாழ்த்துவார் ஆயினர்.