சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம்/3.அரங்கேற்று காதை
Appearance
3.அரங்கேற்று காதை
[தொகு](நிலைமண்டில ஆசிரியப்பா)
- தெய்வ மால்வரைத் திருமுனி அருள
- எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
- தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
- மலைப்புஅருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
- சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய
5
- பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
- தாதுஅவிழ் புரிகுழல் மாதவி தன்னை
- ஆடலும் பாடலும் அழகும் என்றுஇக்
- கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்
- ஏழாண்டு இயற்றிஓர் ஈராறு ஆண்டில் 10
- சூழ்கடல் மன்னற்குக் காட்டல் வேண்டி,
- இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
- பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
- பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
- விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு 15
- ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
- கூடிய நெறியின கொளுத்துங் காலைப்
- பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும்
- கொண்ட வகைஅறிந்து கூத்துவரு காலைக்
- கூடை செய்தகை வாரத்துக் களைதலும் 20
- வாரம் செய்தகை கூடையிற் களைதலும்
- பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்
- ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
- குரவையும் வரியும் விரவல செலுத்தி
- ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும், 25
- யாழும் குழலும் சீரும் மிடறும்
- தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின்
- இசைந்த பாடல் இசையுடன் படுத்து
- வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித்
- தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்துத் 30
- தேசிகத் திருவின் ஓசை எல்லாம்
- ஆசுஇன்று உணர்ந்த அறிவினன் ஆகிக்
- கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
- பகுதிப் பாடலும் கொளுத்துங் காலை
- வசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் 35
- அசையா மரபின் இசையோன் தானும்,
- இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
- தமிழ்முழுது அறிந்த தன்மையன் ஆகி
- வேத்தியல் பொதுவியல் என்றுஇரு திறத்தின்
- நாட்டிய நன்னுல் நன்கு கடைப்பிடித்து 40
- இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்துஆங்கு
- அசையா மரபின் அதுபட வைத்து
- மாற்றார் செய்த வசைமொழி அறிந்து
- நாத்தொலைவு இல்லா நன்னுல் புலவனும்,
- ஆடல் பாடல் இசையே தமிழே 45
- பண்ணே பாணி தூக்கே முடமே
- தேசிகம் என்றுஇவை ஆசின் உணர்ந்து
- கூடை நிலத்தைக் குறைவுஇன்று மிகுத்துஆங்கு
- வார நிலத்தை வாங்குபு வாங்கி
- வாங்கிய வாரத்து யாழும் குழலும் 50
- ஏங்கிய மிடறும் இசைவன கேட்பக்
- கூர்உகிர்க் கரணம் குறிஅறிந்து சேர்த்தி
- ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச்
- சித்திரக் கரணம் சிதைவுஇன்றி செலுத்தும்
- அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும், 55
- சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை
- புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
- வர்த்தனை நான்கும் மயல்அறப் பெய்துஆங்கு
- ஏற்றிய குரல்இளி என்றுஇரு நரம்பின்
- ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகிப் 60
- பண்அமை முழவின் கண்ணெறி அறிந்து
- தண்ணுமை முதல்வன் தன்னொடு பொருந்தி
- வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்துஆங்கு
- இசையோன் பாடிய இசையின் இயற்கை
- வந்தது வளர்த்து வருவது ஒற்றி 65
- இன்புற இயக்கி இசைபட வைத்து
- வார நிலத்தைக் கேடுஇன்று வளர்த்துஆங்கு
- ஈர நிலத்தின் எழுத்துஎழுத்து ஆக
- வழுவின்று இசைக்கும் குழலோன் தானும்,
- ஈர்ஏழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின் 70
- ஓர்ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி
- வன்மையிற் கிடந்த தார பாகமும்
- மென்மையிற் கிடந்த குரலின் பாகமும்
- மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக்
- கைக்கிளை ஒழித்த பாகமும் பொற்புடைத் 75
- தளராத் தாரம் விளரிக்கு ஈத்துக்
- கிளைவழிப் பட்டனள், ஆங்கே கிளையும்
- தன்கிளை அழிவுகண்டு அவள்வயிற் சேர
- ஏனை மகளிரும் கிளைவழிச் சேர
- மேலது உழையிளி கீழது கைக்கிளை 80
- வம்புஉறு மரபின் செம்பாலை ஆயது
- இறுதி ஆதி ஆக ஆங்குஅவை
- பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது
- படுமலை செவ்வழி பகர்அரும் பாலைஎனக்
- குரல்குரல் ஆகத் தற்கிழமை திரிந்தபின் 85
- முன்னதன் வகையே முறைமையின் திரிந்துஆங்கு
- இளிமுத லாகிய ஏர்படு கிழமையும்
- கோடி விளரி மேற்செம் பாலைஎன
- நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்
- இணைநரம்பு உடையன அணைவுறக் கொண்டுஆங்கு 90
- யாழ்மேற் பாலை இடமுறை மெலியக்
- குழல்மேற் கோடி வலமுறை மெலிய
- வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
- பொலியக் கோத்த புலமை யோனுடன்,
- எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது 95
- மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
- புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
- கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
- நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
- கோல்அளவு இருபத்து நால்விரல் ஆக 100
- எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
- ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி
- உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை
- வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக
- ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத் 105
- தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப்
- பூதரை எழுதி மேல்நிலை வைத்துத்
- தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்துஆங்கு
- ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
- கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்துஆங்கு 110
- ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
- மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
- விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப்
- பேர்இசை மன்னர் பெயர்ப்புறத்து எடுத்த
- சீர்இயல் வெண்குடைக் காம்புநனி கொண்டு 115
- கண்இடை நவமணி ஒழுக்கி மண்ணிய
- நாவல்அம் பொலம்தகட்டு இடைநிலம் போக்கிக்
- காவல் வெண்குடை மன்னவன் கோயில்
- இந்திர சிறுவன் சயந்தன் ஆகென
- வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் 120
- புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்தி
- மண்ணிய பின்னர் மாலை அணிந்து
- நலம்தரு நாளால் பொலம்பூண் ஓடை
- அரசுஉவாத் தடக்கையில் பரசினர் கொண்டு
- முரசுஎழுந்து இயம்பப் பல்இயம் ஆர்ப்ப 125
- அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்
- தேர்வலம் செய்து கவிகைக் கொடுப்ப
- ஊர்வலம் செய்து புகுந்துமுன் வைத்துஆங்கு,
- இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
- குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப, 130
- வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
- வலத்தூண் சேர்தல் வழக்குஎனப் பொருந்தி
- இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
- தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்
- சீர்இயல் பொலிய நீர்அல நீங்க 135
- வாரம் இரண்டும் வரிசையில் பாடப்
- பாடிய வாரத்து ஈற்றில்நின்று இசைக்கும்
- கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்
- குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்
- தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப் 140
- பின்வழி நின்றது முழவே, முழவொடு
- கூடிநின்று இசைத்தது ஆமந் திரிகை
- ஆமந் திரிகையொடு அந்தரம் இன்றிக்
- கொட்டுஇரண்டு உடையதுஓர் மண்டிலம் ஆகக்
- கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி 145
- வந்த முறையின் வழிமுறை வழாமல்
- அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,
- மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப்
- பாற்பட நின்ற பாலைப் பண்மேல்
- நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து 150
- மூன்றுஅளந்து ஒன்று கொட்டி அதனை
- ஐந்துமண் டிலத்தால் கூடை போக்கி
- வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை,
- ஆறும் நாலும் அம்முறை போக்கிக்
- கூறிய ஐந்தின் கொள்கை போலப் 155
- பின்னையும் அம்முறை பேரிய பின்றை,
- பொன்இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென
- நாட்டிய நன்னுல் நன்குகடைப் பிடித்துக்
- காட்டினள் ஆதலின், காவல் வேந்தன்
- இலைப்பூங் கோதை இயல்பினில் வழாமைத் 160
- தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி
- விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு
- ஒருமுறை யாகப் பெற்றனள் அதுவே
- நூறுபத்து அடுக்கி எட்டுக்கடை நிறுத்த
- வீறுஉயர் பசும்பொன் பெறுவதுஇம் மாலை, 165
- மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன
- மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து
- நகர நம்பியர் திரிதரு மறுகில்
- பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த,
- மாமலர் நெடுங்கண் மாதவி மாலை 170
- கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
- மணமனை புக்கு மாதவி தன்னொடு
- அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
- விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்.
- வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்துஎன். 175
- (வெண்பா)
எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்நான்கும்
பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேல்
போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்
வாக்கினால் ஆடரங்கில் வந்து.