சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம்/5.இந்திரவிழவூரெடுத்த காதை
Appearance
5.இந்திர விழவு ஊர் எடுத்த காதை
[தொகு](நிலைமண்டில ஆசிரியப்பா)
- அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து
- ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்
- கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தை
- புதைஇருள் படாஅம் போக நீக்கி
- உடைய மால்வரை உச்சித் தோன்றி
5
- உலகுவிளங்கு அவிர்ஒளி மலர்கதிர் பரப்பி,
- வேயா மாடமும், வியன்கல இருக்கையும்,
- மான்கண் காதலர் மாளிகை இடங்களும்,
- கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
- பயன்அறிவு அறியா யவனர் இருக்கையும், 10
- கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
- கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
- வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
- பூவும் புகையும் மேவிய விரையும்
- பகர்வனர் திரிதரு நகர வீதியும், 15
- பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
- கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்,
- தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
- மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
- அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா 20
- வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
- பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
- கூலம் குவித்த கூல வீதியும்,
- காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
- மீன்விலைப் பரதவர் வெள்உப்புப் பகருநர் 25
- பாசவர் வாசவர் பல்நிண விலைஞரொடு
- ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்,
- கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
- மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
- கண்ணுள் வினைஞரும் மண்ஈட் டாளரும் 30
- பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
- துன்ன காரரும் தோலின் துன்னரும்
- கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
- பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்
- குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் 35
- வழுஇன்றி இசைத்து வழித்திறம் காட்டும்
- அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்,
- சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
- மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்,
- கோவியன் வீதியும், கொடித்தேர் வீதியும், 40
- பீடிகைத் தெருவும், பெருங்குடி வாணிகர்
- மாட மறுகும், மறையோர் இருக்கையும்,
- வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
- ஆயுள் வேதரும் காலக் கணிதரும்
- பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும், 45
- திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோடு
- அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்,
- சூதர் மாகதர் வேதா ளிகரொடு
- நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
- காவல் கணிகையர் ஆடல் கூத்தியர் 50
- பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்
- பயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர்
- நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்,
- கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
- நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர் 55
- இருந்துபுறம் சுற்றிய பெரும்பாய் இருக்கையும்,
- பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
- பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்,
- இருபெரு வேந்தர் முனையிடம் போல
- இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய 60
- கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்
- கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
- நடுக்குஇன்றி நிலைஇய நாள்அங் காடியில்
- சித்திரைச் சித்திரத் திங்கள் சேர்ந்தென
- வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க எனத் 65
- தேவர் கோமான் ஏவலின் போந்த
- காவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப்
- புழுக்கலும் நோலையும் விழுக்குஉடை மடையும்
- பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
- துணங்கையர் குரவையர் அணங்குஎழுந்து ஆடிப் 70
- பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
- பசியும் பிணியும் பகையும் நீங்கி
- வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி
- மாதர்க் கோலத்து வலவையின் உரைக்கும்
- மூதிற் பெண்டிர் ஓதையின் பெயர, 75
- மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்
- பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்
- முந்தச் சென்று முழுப்பலி பீடிகை
- வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கவெனப்
- பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகவெனக் 80
- கல்உமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல்
- பல்வேல் பரப்பினர் மெய்உறத் தீண்டி
- ஆர்த்துக் களம்கொண்டோ ர் ஆர்அமர் அழுவத்துச்
- சூர்த்துக் கடைசிவந்த சுடுனோக்குக் கருந்தலை
- வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கவென 85
- நற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்கு
- உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
- மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி,
- இருநில மருங்கின் பொருநரைப் பெறாஅச்
- செருவெங் காதலின் திருமா வளவன் 90
- வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
- நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகஇம்
- மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்எனப்
- புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள்
- அசைவுஇல் ஊக்கத்து நசைபிறக்கு ஒழியப் 95
- பகைவிலக் கியதுஇப் பயம்கெழு மலைஎன
- இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக்
- கொடுவரி ஒற்றிக் கொள்கையின் பெயர்வோற்கு,
- மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
- கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும் 100
- மகதநன் நாட்டு வாள்வாய் வேந்தன்
- பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்,
- அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
- நிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும்
- பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும் 105
- நுண்வினைக் கம்மியர் காணா மரபின,
- துயர்நீங்கு சிறப்பின்அவர் தொல்லோர் உதவிக்கு
- மயன்விதித்துக் கொடுத்த மரபின, இவைதாம்
- ஒருங்குடன் புணர்ந்துஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்
- அரும்பெறல் மரபின் மண்டபம் அன்றியும், 110
- வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
- கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்
- கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்
- உடையோர் காவலும் ஒரீஇய ஆகிக்
- கட்போர் உளர்எனின் கடுப்பத் தலைஏற்றிக் 115
- கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது
- உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்,
- கூனும் குறளும் ஊமும் செவிடும்
- அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப்
- பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்று 120
- வலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்,
- வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர்
- நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்
- அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்
- கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோ ர் 125
- சுழல வந்து தொழத்துயர் நீங்கும்
- நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்,
- தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
- அவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்
- அறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர் 130
- பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்
- கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்எனக்
- காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
- பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்,
- அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து 135
- உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
- நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்
- பாவைநின்று அழுஉம் பாவை மன்றமும்,
- மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்
- ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ, 140
- வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்
- கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி,
- வால்வெண் களிற்றுஅரசு வயங்கிய கோட்டத்துக்
- கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித்
- தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து 145
- மங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து,
- மரகத மணியொடு வயிரம் குயிற்றிப்
- பவளத் திரள்கால் பைம்பொன் வேதிகை
- நெடுநிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும்
- கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத்து ஒழுக்கத்து 150
- மங்கலம் பொறித்த மகர வாசிகைத்
- தோரணம் நிலைஇய தோம்அறு பசும்பொன்
- பூரண கும்பத்துப் பொலிந்த பாலிகை
- பாவை விளக்குப் பசும்பொன் படாகை
- தூமயிர்க் கவரி சுந்தரச் சுண்ணத்து 155
- மேவிய கொள்கை வீதியில் செறிந்துஆங்கு,
- ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்
- அரச குமரரும் பரத குமரரும்
- கவர்ப்பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர்
- இவர்ப்பரித் தேரினர் இயைந்துஒருங்கு ஈண்டி 160
- அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில்
- உரைசால் மன்னன் கொற்றம் கொள்கென
- மாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும்
- ஆயிரத்து ஓர்எட்டு அரசுதலைக் கொண்ட
- தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப் 165
- புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி
- மண்ணகம் மருள வானகம் வியப்ப
- விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி,
- பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
- அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் 170
- வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
- நீல மேனி நெடியோன் கோயிலும்
- மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
- மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
- நான்மறை மரபின் தீமுறை ஒருபால், 175
- நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும்
- பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
- வேறுவேறு கடவுளர் சாறுசிறந்து ஒருபால்,
- அறவோர் பள்ளியும் அறன்ஓம் படையும்
- புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும் 180
- திறவோர் உரைக்கும் செயல்சிறந்து ஒருபால்,
- கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர்
- அடித்தளை நீக்க அருள்சிறந்து ஒருபால்,
- கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர்
- பண்யாழ்ப் புலவர் பாடல் பாணரொடு 185
- எண்அருஞ் சிறப்பின் இசைசிறந்து ஒருபால்,
- முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும்
- விழவுக்களி சிறந்த வியலுள் ஆங்கண்
- காதல் கொழுநனைப் பிரிந்துஅலர் எய்தா
- மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னொடு 190
- இல்வளர் முல்லை மல்லிகை மயிலை
- தாழிக் குவளை சூழ்செங் கழுநீர்
- பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து
- காமக் களிமகிழ்வு எய்திக் காமர்
- பூம்பொதி நறுவிரைப் பொழில்ஆட்டு அமர்ந்து 195
- நாள்மகிழ் இருக்கை நாள்அங் காடியில்
- பூமலி கானத்துப் புதுமணம் புக்குப்
- புகையும் சாந்தும் புலராது சிறந்து
- நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்துக்
- குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு 200
- திரிதரு மரபின் கோவலன் போல
- இளிவாய் வண்டினொடு இன்இள வேனிலொடு
- மலய மாருதம் திரிதரு மறுகில்,
- கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்துஆங்கு
- இருகருங் கயலொடு இடைக்குமிழ் எழுதி 205
- அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சித்
- திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்.
- நீர்வாய் திங்கள் நீள்நிலத்து அமுதின்
- சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி
- மீன்ஏற்றுக் கொடியோன் மெய்பெற வளர்த்த 210
- வான வல்லி வருதலும் உண்டுகொல்.
- இருநில மன்னற்குப் பெருவளம் காட்டத்
- திருமகள் புகுந்ததுஇச் செழும்பதி ஆம்என
- எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும்
- கருநெடுங் குவளையும் குமிழும் பூத்துஆங்கு 215
- உள்வரி கோலத்து உறுதுணை தேடிக்
- கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்.
- மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப்
- பல்உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம்
- ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாது 220
- நாண்உடைக் கோலத்து நகைமுகம் கோட்டிப்
- பண்மொழி நரம்பின் திவவுயாழ் மிழற்றிப்
- பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டுஎன,
- உருவி லாளன் ஒருபெருஞ் சேனை
- இகல்அமர் ஆட்டி எதிர்நின்று விலக்கிஅவர் 225
- எழுதுவரி கோலம் முழுமெயும் உறீஇ
- விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு
- உடன்உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
- வடமீன் கற்பின் மனையுறை மகளிர்
- மாதர்வாள் முகத்து மணித்தோட்டுக் குவளைப் 230
- போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை
- விருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும்
- மருந்தும் தரும்கொல்இம் மாநில வரைப்புஎனக்
- கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள்:
- உள்அகம் நறுந்தாது உறைப்பமீது அழிந்து 235
- கள்உக நடுங்கும் கழுநீர் போலக்
- கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
- உள்நிறை கரந்துஅகத்து ஒளித்துநீர் உகுத்தன
- எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
- விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்துஎன். 240
- பதிகம்
- புகார்க் காண்டம்
- [[]] :[[]]