சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம்/6.கடலாடு காதை
Appearance
6.கடலாடு காதை
[தொகு](நிலைமண்டில ஆசிரியப்பா)
- வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக்
- கள்அவிழ் பூம்பொழில் காமக் கடவுட்குக்
- கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு
- விருந்தாட்டு அயரும்ஓர் விஞ்சை வீரன்
- தென்திசை மருங்கின்ஓர் செழும்பதி தன்னுள்
5
- இந்திர விழவுகொண்டு எடுக்கும்நாள் இதுஎனக்
- கடுவிசை அவுணர் கணம்கொண்டு ஈண்டிக்
- கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த
- தொடுகழல் மன்னற்குத் தொலைந்தனர் ஆகி
- நெஞ்சுஇருள் கூர நிகர்த்துமேல் விட்ட 10
- வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்
- திருந்துவேல் அண்ணற்குத் தேவர்கோன் ஏவ
- இருந்துபலி உண்ணும் இடனும் காண்குதும்,
- அமரா பதிகாத்து அமரனிற் பெற்றுத்
- தமரில் தந்து தகைசால் சிறப்பின் 15
- பொய்வகை இன்றிப் பூமியில் புணர்த்த
- ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும்,
- நாரதன் வீணை நயம்தெரி பாடலும்
- தோரிய மடந்தை வாரம் பாடலும்
- ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய 20
- நாடகம் உருப்பசி நல்காள் ஆகி
- மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத்
- தங்குக இவள்எனச் சாபம் பெற்ற
- மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய
- அங்குஅரவு அல்குல் ஆடலும் காண்குதும், 25
- துவர்இதழ்ச் செவ்வாய்த் துடிஇடை யோயே.
- அமரர் தலைவனை வணங்குதும் யாம்எனச்
- சிமையத்து இமையமும் செழுநீர்க் கங்கையும்
- உஞ்சையம் பதியும் விஞ்சத்து அடவியும்
- வேங்கட மலையும் தாங்கா விளையுள் 30
- காவிரி நாடும் காட்டிப் பின்னர்ப்
- பூவிரி படப்பைப் புகார்மருங்கு எய்திச்
- சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி
- மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன்
- மாயோன் பாணியும் வருணப் பூதர் 35
- நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை
- வான்ஊர் மதியமும் பாடிப் பின்னர்ச்
- சீர்இயல் பொலிய நீர்அல நீங்கப்
- பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்
- திரிபுரம் எரியத் தேவர் வேண்ட 40
- எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப
- உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
- இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்,
- தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
- பாரதி ஆடிய வியன்பாண்ட ரங்கமும், 45
- கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
- அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
- அல்லியத் தொகுதியும், அவுணன் கடந்த
- மல்லின் ஆடலும், மாக்கடல் நடுவண்
- நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற 50
- சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்,
- படைவீழ்த்து அவுணர் பையுள் எய்தக்
- குடைவீழ்த்து அவர்முன் ஆடிய குடையும்,
- வாணன் பேரூர் மறுகிடை நடந்து
- நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடமும், 55
- ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
- காமன் ஆடிய பேடி ஆடலும்,
- காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
- மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்,
- செருவெம் கோலம் அவுணர் நீங்கத் 60
- திருவின் செய்யோள் ஆடிய பாவையும்,
- வயல்உழை நின்று வடக்கு வாயிலுள்
- அயிராணி மடந்தை ஆடிய கடையமும்,
- அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின்
- நிலையும் படிதமும் நீங்கா மரபின் 65
- பதினோர் ஆடலும் பாட்டின் பகுதியும்
- விதிமாண் கொள்கையின் விளங்கக் காணாய்.
- தாதுஅவிழ் பூம்பொழில் இருந்துயான் கூறிய
- மாதவி மரபின் மாதவி இவள்எனக்
- காதலிக்கு உரைத்துக் கண்டுமகிழ்வு எய்திய 70
- மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும்,
- அந்தரத்து உள்ளோர் அறியா மரபின்
- வந்துகாண் குறுஉம் வானவன் விழவும்
- ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள
- ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்பப் 75
- பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
- முப்பத்து இருவகை ஓமா லிகையினும்
- ஊறின நல்நீர் உரைத்தநெய் வாசம்
- நாறுஇருங் கூந்தல் நலம்பெற ஆட்டி,
- புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை 80
- வகைதொறும் மான்மதக் கொழுஞ்சேறு ஊட்டி,
- அலத்தகம் ஊட்டிய அம்செஞ் சீறடி
- நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇப்,
- பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
- அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து, 85
- குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து,
- பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ்
- நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ,
- காமர் கண்டிகை தன்னொடு பின்னிய
- தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து, 90
- மத்தக மணியொடு வயிரம் கட்டிய
- சித்திரச் சூடகம் செம்பொன் கைவளை
- பரியகம் வால்வளை பவழப் பல்வளை
- அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து,
- வாளைப் பகுவாய் வணக்குஉறு மோதிரம் 95
- கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்
- வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி
- காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து,
- சங்கிலி நுண்தொடர் பூண்ஞான் புனைவினை
- அம்கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து, 100
- கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி
- செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்கு
- இந்திர நீலத்து இடைஇடை திரண்ட
- சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை
- அங்காது அகவயின் அழகுற அணிந்து, 105
- தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி
- தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்குஅணி
- மைஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து,
- கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப்
- பாடுஅமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள், 110
- உருகெழு மூதுர் உவவுத்தலை வந்தெனப்
- பெருநீர் போகும் இரியல் மாக்களொடு
- மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டுக்
- காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி,
- பொய்கைத் தாமரைப் புள்வாய் புலம்ப 115
- வைகறை யாமம் வாரணம் காட்ட
- வெள்ளி விளக்கம் நள்இருள் கடியத்
- தார்அணி மார்பனொடு பேர்அணி அணிந்து
- வான வண்கையன் அத்திரி ஏற
- மான்அமர் நோக்கியும் வையம் ஏறிக் 120
- கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை
- மாடமலி மறுகின் பீடிகைத் தெருவின்
- மலர்அணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்துஆங்கு
- அலர்க்கொடி அறுகும் நெல்லும் வீசி
- மங்கலத் தாசியர் தம்கலன் ஒலிப்ப 125
- இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும்
- திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து
- மகர வாரி வளம்தந்து ஓங்கிய
- நகர வீதி நடுவண் போகிக்
- கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள் 130
- வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பில்
- கூல மறுகில் கொடிஎடுத்து நுவலும்
- மாலைச் சேரி மருங்குசென்று எய்தி,
- வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்
- பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும், 135
- செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்,
- காழியர் மோதகத்து ஊழ்உறு விளக்கமும்,
- கூவியர் கார்அகல் குடக்கால் விளக்கமும்,
- நொடைநவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும்,
- இடைஇடை மீன்விலை பகர்வோர் விளக்கமும், 140
- இலங்குநீர் வரைப்பின் கலங்கரை விளக்கமும்,
- விலங்குவலைப் பரதவர் மீன்திமில் விளக்கமும்,
- பொழிபெயர் தேஎத்தர் ஒழியா விளக்கமும்,
- கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும்
- எண்ணுவரம்பு அறியா இயைந்துஒருங்கு ஈண்டி 145
- இடிக்கலப்பு அன்ன ஈர்அயில் மருங்கில்
- கடிப்பகை காணும் காட்சியது ஆகிய
- விரைமலர்த் தாமரை வீங்குநீர்ப் பரப்பின்
- மருத வேலியின் மாண்புறத் தோன்றும்
- கைதை வேலி நெய்தல்அம் கானல் 150
- பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி
- நிரைநிரை எடுத்த புரைதீர் காட்சிய
- மலைப்பல் தாரமும் கடல்பல் தாரமும்
- வளம்தலை மயங்கிய துளங்குகல இருக்கை
- அரசுஇளங் குமரரும் உரிமைச் சுற்றமும் 155
- பரத குமரரும் பல்வேறு ஆயமும்
- ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும்
- தோடுகொள் மருங்கின் சூழ்தரல் எழினியும்
- விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன்
- தண்பதம் கொள்ளும் தலைநாள் போல 160
- வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை
- சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றிக்
- கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
- இடம்கெட ஈண்டிய நால்வகை வருணத்து
- அடங்காக் கம்பலை உடங்குஇயைந்து ஒலிப்ப, 165
- கடல்புலவு கடிந்த மடல்பூந் தாழைச்
- சிறைசெய் வேலி அகவயின் ஆங்குஓர்
- புன்னை நீழல் புதுமணல் பரப்பில்
- ஓவிய எழினி சூழஉடன் போக்கி
- விதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசை 170
- வருந்துபு நின்ற வசந்த மாலைகைத்
- திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக்
- கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனள்
- மாமலர் நெடுங்கண் மாதவி தான்என.
- (வெண்பா)
- வேலை மடல்தாழை உட்பொதிந்த வெண்தோட்டு
- மாலைத் துயின்ற மணிவண்டு - காலைக்
- களிநறவம் தாதுஊதத் தோன்றிற்றே காமர்
- தெளிநிற வெங்கதிரோன் தேர்.
- [[]] :[[]]