சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம்/7.கானல் வரி
Appearance
7.கானல் வரி
[தொகு](கட்டுரை)
- சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து
- மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்புஎய்திப்
- பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்என்று
- இத்திறத்துக் குற்றம்நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கி
- பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்
- கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்
- நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய
- எண்வகையால் இசைஎழீஇப்
- பண்வகையால் பரிவுதீர்ந்து
- மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்
- பயிர்வண்டின் கிளைபோலப் பல்நரம்பின் மிசைப்படர
- வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
- சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்
- ஏர்உடைப் பட்டடைஎன இசையோர் வகுத்த
- எட்டு வகையின் இசைக்கர ணத்துப்
- பட்டவகைதன் செவியின்ஓர்த்(து)
- ஏவலன், பின் பாணி யாதுஎனக்
- கோவலன் கையாழ் நீட்ட, அவனும்
- காவிரியை நோக்கினவும் கடல்கானல் வரிப்பாணியும்
- மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன். 1
- வேறு (ஆற்று வரி)
- திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுஒச்சிக்
- கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி.
- கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
- மங்கை மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி.
2
- மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
- கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி.
- கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
- மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி.
3
- உழவர் ஓதை மதகுஓதை உடைநீர் ஓதை தண்பதங்கொள்
- விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி.
- விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்த எல்லாம் வாய்காவா
- மழவர் ஓதை வளவன்தன் வளனே வாழி காவேரி.
4
- வேறு (சார்த்து வரி - முகச்சார்த்து)
- கரியமலர் நெடுங்கண் காரிகைமுன் கடல்தெய்வம் காட்டிக் காட்டி
- அரியசூள் பொய்த்தார் அறன்இலர்என்றுஏழையம்யாங்கு அறிகோம் ஐய
- விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும் ஆம்என்றே விளங்கும் வெள்ளைப்
- புரிவளையும் முத்தும்கண்டு ஆம்பல் பொதிஅவிழ்க்கும் புகாரே எம்மூர்.
5
- காதலர் ஆகிக் கழிக்கானல் கையுறைகொண்டு எம்பின் வந்தார்
- ஏதிலர் தாமாகி யாம்இரப்ப நிற்பதையாங்கு அறிகோம் ஐய
- மாதரார் கண்ணும் மதிநிழல்நீர் இணைகொண்டு மலர்ந்த நீலப்
- போதும் அறியாது வண்டுஊச லாடும் புகாரே எம்மூர்.
6
- மோது முதுதிரையால் மொத்துண்டு போந்துஅசைந்த முரல்வாய்ச் சங்கம்
- மாதர் வரிமணல்மேல் வண்டல் உழுதுஅழிப்ப மாழ்கி ஐய
- கோதை பரிந்துஅசைய மெல்விரலால் கொண்டுஓச்சும் குவளை மாலைப்
- போது சிறங்கணிப்பப் போவார்கண் போகாப் புகாரே எம்மூர்.
7
- வேறு (முகம் இல் வரி)
- துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுததோற்றம் மாய்வான்
- பொறைமலி பூம்புன்னைப் பூஉதிர்ந்து நுண்தாதுபோர்க்கும் கானல்
- நிறைமதி வாள்முகத்து நேர்க்கயல்கண் செய்த
- உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே தீர்க்கும் போலும்.
8
- (கானல் வரி)
- நிணம்கொள் புலால்உணங்கல் நின்றுபுள் ஓப்புதல் தலைக்கீடு ஆகக்
- கணம்கொள் வண்டுஆர்த்து உலாம்கன்னி நறுஞாழல் கையில் ஏந்தி
- மணம்கமழ் பூங்கானல் மன்னிமற்று ஆண்டுஓர்
- அணங்குஉறையும் என்பது அறியேன் அறிவேனேல் அடையேன் மன்னோ.
9
- வலைவாழ்நர் சேரி வலைஉணங்கும் முன்றில்மலர்கை ஏந்தி
- விலைமீன் உணங்கல் பொருட்டாக வேண்டுஉருவம் கொண்டு வேறுஓர்
- கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது
- அலைநீர்த்தண் கானல் அறியேன் அறிவேனேல் அடையேன் மன்னோ.
10
- வேறு (நிலைவரி)
- கயல்எழுதி வில்எழுதிக் கார்எழுதிக் காமன்
- செயல்எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்.
- திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
- அம்கண்ஏர் வானத்து அரவுஅஞ்சி வாழ்வதுவே.
11
- எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும்
- கறைகெழுவேல் கண்ணோ கடுங்கூற்றம் காணீர்.
- கடுங்கூற்றம் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே
- மடம்கெழுமென் சாயல் மகளா யதுவே.
12
- புலவுமீன் வெள்உணங்கல் புள்ஓப்பிக் கண்டார்க்கு
- அலவநோய் செய்யும் அணங்குஇதுவோ காணீர்.
- அணங்குஇதுவோ காணீர் அடும்புஅமர்த்தண் கானல்
- பிணங்குநேர் ஐம்பால்ஓர் பெண்கொண் டதுவே.
13
- வேறு (முரிவரி)
- பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
- பழுதுஅறு திருமொழியே பணைஇள வனமுலையே
- முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே
- எழுதுஅரு மின்இடையே எனைஇடர் செய்தவையே.
14
- திரைவிரி தருதுறையே திருமணல் விரிஇடமே
- விரைவிரி நறுமலரே மிடைதரு பொழில்இடமே
- மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
- இருகயல் இணைவிழியே எனைஇடர் செய்தவையே.
15
- வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே
- தளைஅவிழ் நறுமலரே தனிஅவள் திரிஇடமே
- முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே
- இளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே.
16
- வேறு (திணை நிலைவரி)
- கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்
- உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்
- மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்
- இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்.
17
- கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
- நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்
- வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல
- நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய்.
18
- ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்
- கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்
- பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
- வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்.
19
- வேறு
- பவள உலக்கை கையால் பற்றித்
- தவள முத்தம் குறுவாள் செங்கண்
- தவள முத்தம் குறுவாள் செங்கண்
- குவளை அல்ல கொடிய கொடிய
20
- புன்னை நீழல் புலவுத் திரைவாய்
- அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
- அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
- கொன்னே வெய்ய. கூற்றம் கூற்றம்.
21
- கள்வாய் நீலம் கையின் ஏந்திப்
- புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
- புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
- வெள்வேல் அல்ல. வெய்ய வெய்ய.
22
- வேறு
- சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
- சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
- ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்
- சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்.
23
- (கட்டுரை)
- ஆங்கு,
- கானல்வரிப் பாடல்கேட்ட
- மான்நெடுங்கண் மாதவியும்
- மன்னும்ஓர் குறிப்புஉண்டுஇவன்
- தன்நிலை மயங்கினான்எனக்
- கலவியால் மகிழ்ந்தாள்போல்
- புலவியால் யாழ்வாங்கித்
- தானும்ஓர் குறிப்பினள்போல்
- கானல்வரிப் பாடல்பாணி
- நிலத்தெய்வம் வியப்புஎய்த
- நீள்நிலத்தோர் மனம்மகிழக்
- கலத்தொடு புணர்ந்துஅமைந்த
- கண்டத்தால் பாடத்தொடங்கும்மன்.
24
- வேறு (ஆற்று வரி)
- மருங்கு வண்டு சிறந்துஆர்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
- கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்தாய் வாழி காவேரி.
- கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்த எல்லாம் நின்கணவன்
- திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி.
25
- பூவார் சோலை மயில்ஆலப் புரிந்து குயில்கள் இசைபாடக்
- காமர் மாலை அருகுஅசைய நடந்தாய் வாழி காவேரி.
- காமர் மாலை அருகுஅசைய நடந்த எல்லாம் நின்கணவன்
- நாம வேலின் திறம்கண்டே அறிந்தேன் வாழி காவேரி.
26
- வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாய்ஆகி
- ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாய் வாழி காவேரி.
- ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாது ஒழுகல் உயிர்ஓம்பும்
- ஆழி ஆள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி.
27
- வேறு (சார்த்து வரி)
- தீங்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும்
- வாங்கும்நீர் முத்துஎன்று வைகலும் மால்மகன்போல் வருதிர் ஐய
- வீங்குஓதம் தந்து விளங்குஒளிய வெண்முத்தம் விரைசூழ் கானல்
- பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர்.
28
- மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை
- இறைவளைகள் துற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங்கு அறிகோம் ஐய
- நிறைமதியும் மீனும் எனஅன்னம் நீள்புன்னை அரும்பிப் பூத்த
- பொறைமலிபூங் கொம்புஏற வண்டுஆம்பல் ஊதும் புகாரே எம்மூர்.
29
- உண்டாரை வெல்நறா ஊண்ஓழியாப் பாக்கத்துள் உறைஒன்று இன்றித்
- தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதுயாங்கு அறிகோம் ஐய
- வண்டல் திரைஅழிப்பக் கையால் மணல்முகந்து மதிமேல் நீண்ட
- புண்தோய்வேல் நீர்மல்க பரதர் கடல்துர்க்கும் புகாரே எம்மூர்.
30
- வேறு (திணை நிலைவரி)
- புணர்த்துணையோடு ஆடும் பொறிஅலவன் நோக்கி
- இணர்த்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
- உணர்வுஒழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன்
- வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால்.
31
- தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
- எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
- அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
- நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்.
32
- புன்கண்கூர் மாலைப் புலம்பும்என் கண்ணேபோல்
- துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால்
- இன்கள்வாய் நெய்தால்நீ எய்தும் கனவினுள்
- வன்கணார் கானல் வரக்கண்டு அறிதியோ?
33
- புள்இயல்மான் தேர்ஆழி போன வழிஎல்லாம்
- தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எஞ்செய்கோ?
- தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எம்மோடுஈங்கு
- உள்ளாரோடு உள்ளாய் உணராய்மற்று எஞ்செய்கோ?
34
- நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
- ஊர்ந்த வழிசிதைய ஊர்க்கின்ற ஓதமே
- பூந்தண் பொழிலே புணர்ந்துஆடும் அன்னமே
- ஈர்ந்தண் துறையே இதுதகாது என்னீரே.
35
- நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
- ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடல்ஓதம்
- ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற்(று) எம்மொடு
- தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடல்ஓதம்.
36
- வேறு (மயங்கு திணை நிலைவரி)
- நன்நித் திலத்தின் பூண்அணிந்து நலம்சார் பவளக் கலைஉடுத்துச்
- செந்நெல் பழனக் கழனிதொறும் திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
- புன்னைப் பொதும்பர் மகரத்திண் கொடியோன் எய்த புதுப்புண்கள்
- என்னைக் காணா வகைமறத்தால் அன்னை காணின் என்செய்கோ?
37
- வாரித் தரள நகைசெய்து வண்செம் பவள வாய்மலர்ந்து
- சேரிப் பரதர் வலைமுன்றில் திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
- மாரிப் பீரத்து அலர்வண்ணம் மடவாள் கொள்ளக் கடவுள்வரைந்து
- ஆர்இக் கொடுமை செய்தார்என்று அன்னை அறியின் என்செய்கோ?
38
- புலவுற்று இரங்கி அதுநீங்கப் பொழில்தண் டலையில் புகுந்துஉதிர்ந்த
- கலவைச் செம்மல் மணம்கமழத் திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
- பலஉற்று ஒருநோய் திணியாத படர்நோய் மடவாள் தனிஉழப்ப
- அலவுற்று இரங்கி அறியாநோய் அன்னை அறியின் என்செய்கோ?
39
- வேறு
- இளைஇருள் பரந்ததுவே எல்செய்வான் மறைந்தனனே
- களைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே
- தளைஅவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட்டு உளதாம்கொல்
- வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை?
40
- கதிரவன் மறைந்தனனே கார்இருள் பரந்ததுவே
- எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர் உகுத்தனவே
- புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட்டு உளதாம்கொல்
- மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை?
41
- பறவைபாட்டு அடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே
- நிறைநிலா நோய்கூர நெடுங்கண்நீர் உகுத்தனவே
- துறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட்டு உளதாம்கொல்
- மறவையாய் என்உயிர்மேல் வந்தஇம் மருள்மாலை?
42
- வேறு (சாயல் வரி)
- கைதை வேலிக் கழிவாய் வந்துஎம்
- பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்
- பொய்தல் அழித்துப் போனார் அவர்நம்
- மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர்.
43
- கானல் வேலிக் கழிவாய் வந்து
- நீநல்கு என்றே நின்றார் ஒருவர்
- நீநல்கு என்றே நின்றார் அவர்நம்
- மான்நேர் நோக்கம் மறப்பார் அல்லர்.
44
- அன்னம் துணையோடு ஆடக் கண்டு
- நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
- நென்னல் நோக்கி நின்றார் அவர்நம்
- பொன்நேர் சுணங்கிற் போவார் அல்லர்.
45
- வேறு (முகம் இல் வரி)
- அடையல் குருகே அடையல்எம் கானல்
- அடையல் குருகே அடையல்எம் கானல்
- உடைதிரைநீர்ச் சேர்ப்பற்கு உறுநோய் உரையாய்
- அடையல் குருகே அடையல்எம் கானல்.
46
- வேறு (காடுரை)
- ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும்
- காந்தள் மெல்விரல் கைக்கிளை சேர்குரல்
- தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசைஎழீஇப்
- பாங்கினில் பாடிஓர் பண்ணும் பெயர்த்தாள்.
47
- வேறு (முகம் இல் வரி)
- நுளையர் விளரி நொடிதரும்தீம் பாலை
- இளிகிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை
- இளிகிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்
- கொளைவல்லாய் என்ஆவி கொள்வாழி மாலை.
48
- பிரிந்தார் பரிந்துஉரைத்த பேர்அருளின் நீழல்
- இருந்துஏங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை
- உயிர்ப்புறத்தாய் நீஆகில் உள்ஆற்றா வேந்தன்
- எயில்புறத்து வேந்தனோடு என்ஆதி மாலை.
49
- பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ
- வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை
- மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்
- ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை.
50
- வேறு
- தீத்துழை வந்தஇச் செல்லல் மருள்மாலை
- தூக்காது துணிந்தஇத் துயர்எஞ்சு கிளவியால்
- பூக்கமழ் கனலில் பொய்ச்சூள் பொறுக்க என்று
- மாக்கடல் தெய்வம்நின் மலர்அடி வணங்குதும்.
51
- வேறு (கட்டுரை)
- எனக்கேட்டு,
- கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல் மனம்வைத்து
- மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்என
- யாழ்இசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந்து உருத்ததுஆகலின்
- உவவுஉற்ற திங்கள்முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப்
- பொழுதுஈங்குக் கழிந்ததுஆகலின் எழுதும்என்று உடன்எழாது
- ஏவலாளர் உடஞ்சூழக் கோவலன்தான் போனபின்னர்,
- தாதுஅவிழ் மலர்ச்சோலை ஓதைஆயத்து ஒலிஅவித்துக்
- கையற்ற நெஞ்சினளாய் வையத்தி னுள்புக்குக்
- காதலனுடன் அன்றியே மாதவிதன் மனைபுக்காள்
- ஆங்கு,
- மாயிரு ஞாலத்து அரசு தலைவணக்கும்
- சூழி யானைச் சுடர்வாள் செம்பியன்
- மாலை வெண்குடை கவிப்ப
- ஆழி மால்வரை அகவையா எனவே.
52
- [[]] :[[]]