சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம்/8.வேனிற் காதை
Appearance
8.வேனில் காதை
[தொகு](நிலைமண்டில ஆசிரியப்பா)
- நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
- தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு
- மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்
- கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்
- அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்
5
- மன்னன் மாரன் மகிழ்துணை ஆகிய
- இன்இள வேனில் வந்தனன் இவண்என
- வளம்கெழு பொதியில் மாமுனி பயந்த
- இளங்கால் துதன் இசைத்தனன் ஆதலின்
- மகர வெல்கொடி மைந்தன் சேனை 10
- புகர்அறு கோலம் கொள்ளும்என் பதுபோல்
- கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும்
- படையுள் படுவோன் பணிமொழி கூற,
- மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டினுள்
- கோவலன் ஊடக் கூடாது ஏகிய 15
- மாமலர் நெடுங்கண் மாதவி விரும்பி
- வான்உற நிவந்த மேல்நிலை மருங்கின்
- வேனில் பள்ளி ஏறி மாண்இழை
- தென்கடல் முத்தும் தென்மலைச் சாந்தும்
- தன்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின் 20
- கொங்கை முன்றில் குங்கும வளாகத்து
- மைஅறு சிறப்பின் கையுறை ஏந்தி
- அதிரா மரபின் யாழ்கை வாங்கி
- மதுர கீதம் பாடினள் மயங்கி,
- ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி 25
- நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி,
- வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி
- இடக்கை நால்விரல் மாடகம் தழீஇச்
- செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே
- வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து, 30
- பிழையா மரபின் ஈர்ஏழ் கோவையை
- உழைமுதல் கைக்கிளை இறுவாய் கட்டி,
- இணைகிளை பகைநட்பு என்றுஇந் நான்கின்
- இசைபுணர் குறிநிலை எய்த நோக்கிக்
- குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் அன்றியும் 35
- வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்
- உழைமுதல் ஆகவும் உழைஈறு ஆகவும்
- குரல்முதல் ஆகவும் குரல்ஈறு ஆகவும்
- அகநிலை மருதமும் புறநிலை மருதமும்
- அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் 40
- நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி,
- மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித்
- திறத்து வழிப்படூஉம் தெள்ளிசைக் கரணத்துப்
- புறத்துஒரு பாணியில் பூங்கொடி மயங்கி,
- சண்பகம் மாதவி தமாலம் கருமுகை 45
- வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த
- அம்செங் கழுநீர் ஆய்இதழ்க் கத்திகை
- எதிர்ப்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த
- முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு
- விரைமலர் வாளியின் வியன்நிலம் ஆண்ட 50
- ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின்
- ஒருமுகம் அன்றி உலகுதொழுது இறைஞ்சும்
- திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி,
- அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ அயலது
- பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு, 55
- மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
- இன்இள வேனில் இளவர சாளன்
- அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய
- திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்
- புணர்ந்த மாக்கள் பொழுதுஇடைப் படுப்பினும் 60
- தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும்
- நறும்பூ வாளியின் நல்உயிர் கோடல்
- இறும்பூது அன்றுஅஃது அறிந்தீ மின்என
- எண்எண் கலையும் இசைந்துஉடன் போக
- பண்ணும் திறனும் புறங்கூறு நாவின் 65
- தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
- விளையா மழலையின் விரித்துஉரை எழுதி,
- பசந்த மேனியள் படர்உறு மாலையின்
- வசந்த மாலையை வருகெனக் கூஉய்த்
- தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம் 70
- கோவலற்கு அளித்துக் கொணர்க ஈங்குஎன
- மாலை வாங்கிய வேல்அரி நெடுங்கண்
- கூல மறுகிற் கோவலற்கு அளிப்ப,
- திலகமும் அளகமும் சிறுகருஞ் சிலையும்
- குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட 75
- மாதர் வாள்முகத்து மதைஇய நோக்கமொடு
- காதலின் தோன்றிய கண்கூடு வரியும்,
- புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக்
- கயல்உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின்
- பாகுபொதி பவளம் திறந்துநிலா உதவிய 80
- நாகுஇள முத்தின் நகைநிலம் காட்டி
- வருகென வந்து போகெனப் போகிய
- கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்,
- அந்தி மாலை வந்ததற்கு இரங்கிச்
- சிந்தை நோய் கூரும்என் சிறுமை நோக்கிக் 85
- கிளிபுரை கிளவியும் மடஅன நடையும்
- களிமயில் சாயலும் கரந்தனள் ஆகிச்
- செருவேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து
- ஒருதனி வந்த உள்வரி ஆடலும்,
- சிலம்புவாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும் 90
- கலம்பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு
- திறத்துவேறு ஆயஎன் சிறுமை நோக்கியும்
- புறத்துநின்று ஆடிய புன்புற வரியும்,
- கோதையும் குழலும் தாதுசேர் அளகமும்
- ஒருகாழ் முத்தமும் திருமுலைத் தடமும் 95
- மின்இடை வருத்த நன்னுதல் தோன்றிச்
- சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்பப்
- புணர்ச்சிஉட் பொதிந்த கலாம்தரு கிளவியின்
- இருபுற மொழிப்பொருள் கேட்டனள் ஆகித்
- தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல் 100
- கிளர்ந்துவேறு ஆகிய கிளர்வரிக் கோலமும்,
- பிரிந்துஉறை காலத்துப் பரிந்தனள் ஆகி
- என்உறு கிளைகட்குத் தன்உறு துயரம்
- தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சிவரி அன்றியும்,
- வண்டுஅலர் கோதை மாலையுள் மயங்கிக் 105
- கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும்,
- அடுத்துஅடுத்து அவர்முன் மயங்கிய மயக்கமும்
- எடுத்துஅவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும்,
- ஆடல் மகளே ஆதலின் ஆயிழை.
- பாடுபெற் றனஅப் பைந்தொடி தனக்குஎன, 110
- அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய,
- மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி
- வாடிய உள்ளத்து வசந்த மாலை
- தோடுஅலர் கோதைக்குத் துனைந்துசென்று உரைப்ப
- மாலை வாரார் ஆயினும் மாண்இழை. 115
- காலைகாண் குவம்எனக் கையறு நெஞ்சமொடு
- பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
- மாமலர் நெடுங்கண் மாதவி தான்என்.
- (வெண்பா)
- செந்தா மரைவிரியத் தேமாங் கொழுந்துஒழுக
- மைந்தார் அசோகம் மடல்அவிழக் - கொந்தார்
- இளவேனில் வந்ததால் என்ஆம்கொல் இன்று
- வளவேல்நற் கண்ணி மனம்.
- ஊடினீர் எல்லாம் உருஇலான் தன்ஆணை
- கூடுமின் என்று குயில்சாற்ற - நீடிய
- வேனற்பா ணிக்கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக்
- கானற்பா ணிக்குஅலந்தாய் காண்.
- [[]] :[[]]