உள்ளடக்கத்துக்குச் செல்

சிலப்பதிகாரம்/மதுரைக் காண்டம்/15.அடைக்கலக் காதை

விக்கிமூலம் இலிருந்து


சிலப்பதிகாரம்

[தொகு]

இரண்டாவது மதுரைக்காண்டம்

[தொகு]

15.அடைக்கலக் காதை

[தொகு]

நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி

கடம்பூண் டுருட்டும் கௌரியர் பெருஞ்சீர்க்

கோலின் செம்மையும் குடையின் தண்மையும்

வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்

பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட 5

மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு

அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய

புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து

தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும்

மாதவத் தாட்டிக்குக் கோவலன் கூறுழித் 10


தாழ்நீர் வேலித் தலைச் செங்கானத்து

நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை

மாமறை முதல்வன் மாடலன் என்போன்

மாதவ முனிவன் மலைவலங் கொண்டு

குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து 15

தமர்முதற் பெயர்வோன் தாழ்பொழி லாங்கண்

வகுந்துசெல் வருத்தத்து வான்றுயர் நீங்கக்

கவுந்தி இடவயிற் புகுந்தோன் தன்னைக்

கோவலன் சென்று சேவடி வணங்க

நாவ லந்தணன் தானவின் றுரைப்போன் 20


வேந்துறு சிறப்பின் விழுச்சீ ரெய்திய

மாந்தளிர் மேனி மாதவி மடந்தை

பால்வாய்க் குழவி பயந்தன ளெடுத்து

வாலா மைந்நாள் நீங்கிய பின்னர்

மாமுது கணிகையர் மாதவி மகட்கு 25

நாம நல்லுரை நாட்டுது மென்று

தாமின் புறூஉந் தகைமொழி கேட் டாங்கு

இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல்

உடைகலப் பட்ட எங்கோன் முன்னாள்

புண்ணிய தானம் புரிந்தோ னாகலின் 30


நண்ணுவழி இன்றி நாள்சில நீந்த

இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்

வந்தேன் அஞ்சல் மணிமே கலையான்

உன்பெருந் தானத் துறுதி யொழியாது

துன்ப நீங்கித் துயர்க்கட லொழிகென 35

விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த

எங்குல தெய்வப் பெயரீங் கிடுகென

அணிமே கலையார் ஆயிரங் கணிகையர்

மணிமே கலையென வாழ்த்திய ஞான்று

மங்கல மடந்தை மாதவி தன்னொடு 40


செம்பொன் மாரி செங்கையிற் பொழிய

ஞான நன்னெறி நல்வரம் பாயோன்

தானங் கொள்ளுந் தகைமையின் வருவோன்

தளர்ந்த நடையில் தண்டுகா லூன்றி

வளைந்த யாக்கை மறையோன் றன்னைப் 45

பாகுகழிந் தியாங்கணும் பறைபட வரூஉம்

வேக யானை வெம்மையிற் கைக்கொள

ஓய்யெனத் தெழித்தாங் குயர்பிறப் பாளனைக்

கையகத் தொழித்ததன் கையகம் புக்குப்

பொய்பொரு முடங்குகை வெண்கோட் டடங்கி 50


மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப்

பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக்

கடக்களி றடக்கிய கருணை மறவ

பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக

எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல 55

வடதிசைப் பெயரும் மாமறை யாளன்

கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை

வடமொழி வாசகஞ் செய்த நல்லேடு

கடனறி மாந்தர் கைந்நீ கொடுக் கெனப்

பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர் 60


மாட மறுகின் மனைதொறு மறுகிக்

கருமக் கழிபலங் கொண்மி னோவெனும்

அருமறை யாட்டியை அணுகக் கூஉய்

யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென

மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி 65

இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக்

கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென

அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்

நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு

ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில் 70


தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்

தானஞ் செய் தவள் தன்றுயர் நீக்கிக்

கானம் போன கணவனைக் கூட்டி

ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து

நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ 75

பத்தினி யொருத்தி படிற்றுரை எய்த

மற்றவள் கணவற்கு வறியோன் ஒருவன்

அறியாக் கரிபொய்த் தறைந்துணும் பூதத்துக்

கறைகெழு பாசத்துக் கையகப் படலும்

பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு 80


கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி

என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென

நன்னெடும் பூதம் நல்கா தாகி

நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு

பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை 85

ஒழிக நின் கருத்தென உயிர்முன் புடைப்ப

அழிதரு முள்ளத் தவளொடும் போந்தவன்

சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும்

பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப்

பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல் 90


இம்மைச் செய்தன யானறி நல்வினை

உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித்

திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது

விருத்தகோ பால நீயென வினவக்

கோவலன் கூறுமோர் குறுமகன் தன்னால் 95

காவல் வேந்தன் கடிநகர் தன்னில்

நாறைங் கூந்தல் நடுங்குதுய ரெய்தக்

கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும்

அணித்தகு புரிகுழ லாயிழை தன்னொடும்

பிணிப்பறுத் தோர்தம் பெற்றி யெய்தவும் 100


மாமலர் வாளி வறுநிலத் தெறிந்து

காமக் கடவுள் கையற் றேங்க

அணிதிகழ் போதி அறவோன் றன்முன்

மணிமேகலையை மாதவி யளிப்பவும்

நனவுபோல நள்ளிருள் யாமத்துக் 105

கனவு கண்டேன் கடிதீங் குறுமென

அறத்துறை மாக்கட் கல்ல திந்தப்

புறச்சிறை யிருக்கை பொருந்தா தாகலின்

அரைசர் பின்னோர் அகநகர் மருங்கினின்

உரையிற் கொள்வரிங் கொழிகநின் இருப்புக் 110


காதலி தன்னொடு கதிர்செல் வதன்முன்

மாட மதுரை மாநகர் புகுகென

மாதவத் தாட்டியும் மாமறை முதல்வனும்

கோவலன் றனக்குக் கூறுங் காலை

அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய 115

புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்

பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்

ஆயர் முதுமகள் மாதரி என்போள்

காவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும்

ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும் 120


கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை

தீதிலள் முதுமகள் செவ்வியள் அளியள்

மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு

ஏதம் இன்றென எண்ணின ளாகி

மாதரி கேளிம் மடந்தைதன் கணவன் 125

தாதையைக் கேட்கில் தன்குல வாணர்

அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு

கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்

உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகு மளவும்

இடைக்குல மடந்தைக் கடைக்கலந் தந்தேன் 130


மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச்

செங்கயல் நெடுங்கண் அஞ்சனந் தீட்டித்

தேமென் கூந்தற் சின்மலர் பெய்து

தூமடி உடீஇத் தொல்லோர் சிறப்பின்

ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத் 135

தாயும் நீயே யாகித் தாங்கிங்கு

என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்

வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்

கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு

நடுங்குதுய ரெய்தி நாப்புலர வாடித் 140


தன்துயர்காணாத் தகைசால் பூங்கொடி

இன்துணை மகளிர்க் கின்றியமையாக்

கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது

பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்

வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது 145

நீணில வேந்தர் கொற்றம் சிதையாது

பத்தினிப் பெண்டிர் இருந்தநா டென்னும்

அத்தகு நல்லுரை அறியா யோநீ

தவத்தோர் அடக்கலம் தான்சிறி தாயினும்

மிகப்பே ரின்பம் தருமது கேளாய் 150


காவிரிப் படப்பைப் பட்டினந் தன்னுள்

பூவிரி பிண்டிப் பொதுநீங்கு திருநிழல்

உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட

இலகொளிச் சிலாதல மேலிருந் தருளித்

தருமஞ் சாற்றுஞ் சாரணர் தம்முன் 155

திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன்

தாரன் மாலையன் தமனியப் பூணினன்

பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்

கருவிரற் குரங்கின் கையொரு பாகத்துப்

பெருவிறல் வானவன் வந்துநின் றோனைச் 160


சாவக ரெல்லாம் சாரணர்த் தொழுதீங்கு

யாதிவன் வரவென இறையோன் கூறும்

எட்டி சாயலன் இருந்தோன் றனது

பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையிலோர்

மாதவ முதல்வனை மனைப்பெருங் கிழத்தி 165

ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து

ஊர்ச்சிறு குரங்கொன் றொதுங்கிஉள் புக்குப்

பாற்படு மாதவன் பாதம் பொருந்தி

உண்டொழி மிச்சிலும் உகுத்த நீரும்

தண்டா வேட்கையில் தான்சிறி தருந்தி 170


எதிர்முகம் நோக்கிய இன்பச் செவ்வியை

அதிராக் கொள்கை அறிவனும் நயந்துநின்

மக்களின் ஓம்பு மனைக்கிழத் தீயென

மிக்கோன் கூறிய மெய்மொழி ஓம்பிக்

காதற் குரங்கு கடைநா ளெய்தவும் 175

தானஞ் செய்வுழி அதற்கொரு கூறு

தீதறு கென்றே செய்தன ளாதலின்

மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள்

உத்தர கௌத்தற் கொருமக னாகி

உருவினும் திருவினும் உணர்வினுந் தோன்றிப் 180


பெருவிறல் தானம் பலவுஞ் செய்தாங்கு

எண்ணால் ஆண்டின் இறந்தபிற் பாடு

விண்ணோர் வடிவம் பெற்றன னாதலின்

பெற்ற செல்வப் பெரும்பய னெல்லாம்

தற்காத் தளித்தோள் தானச் சிறப்பெனப் 185

பண்டைப் பிறப்பிற் குரங்கின் சிறுகை

கொண்டொரு பாகத்துக் கொள்கையிற் புணர்ந்த

சாயலன் மனைவி தானந் தன்னால்

ஆயினன் இவ்வடிவு அறிமி னோவெனச்

சாவகர்க் கெல்லாம் சாற்றினன் காட்டத் 190


தேவ குமரன் தோன்றினன் என்றலும்

சாரணர் கூறிய தகைசால் நன்மொழி

ஆரணங் காக அறந்தலைப் பட்டோர்

அன்றப் பதியுள் அருந்தவ மாக்களும்

தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும் 195

இட்ட தானத் தெட்டியும் மனைவியும்

முட்டா இன்பத்து முடிவுல கெய்தினர்

கேட்டனை யாயினித் தோட்டார் குழலியொடு

நீட்டித் திராது நீபோ கென்றே

கவுந்தி கூற உவந்தன ளேத்தி 200


வளரிள வனமுலை வாங்கமைப் பணைத்தோள்

முளையிள வெண்பல் முதுக்குறை நங்கையொடு

சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்துக்

கன்றுதேர் ஆவின் கனைகுரல் இயம்ப

மறித்தோள் நவியத்து உறிக்கா வாளரொடு 205

செறிவளை ஆய்ச்சியர் சிலர் புறஞ் சூழ

மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும்

கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும்

பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்

காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் 210


தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும்

கவையும் கழுவும் புதையும் புழையும்

ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும்

சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்

எழுவுஞ் சீப்பும் முழுவிறற் கணையமும் 215

கோலும் குந்தமும் வேலும் பிறவும்

ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும்

வாயில் கழிந்துதன் மனைபுக் கனளால்

கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்தென்.


அடைக்கலக் காதை முற்றும்.


பார்க்க
மதுரைக் காண்டம்
புகார்க் காண்டம்
வஞ்சிக் காண்டம்
[[]]