சிலப்பதிகாரம்/மதுரைக் காண்டம்/20.வழக்குரை காதை

விக்கிமூலம் இலிருந்து

சிலப்பதிகாரம்[தொகு]

இரண்டாவது மதுரைக்காண்டம்[தொகு]

20.வழக்குரை காதை[தொகு]

ஆங்குக்

குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்

கடைமணி இன்குரல் காண்பென்காண் எல்லா

திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்

கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா 5

விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்

கடுங்கதிர் மீனிவை காண்பென்காண் எல்லா


கருப்பம்


செங்கோலும் வெண்குடையும்

செறிநிலத்து மறிந்துவீழ்தரும்

நங்கோன்றன் கொற்றவாயில் 10


மணிநடுங்க நடுங்குமுள்ளம்

இரவுவில்லிடும் பகல்மீன்விழும்

இருநான்கு திசையும் அதிர்ந்திடும்

வருவதோர் துன்பமுண்டு

மன்னவற் கியாம் உரைத்துமென

ஆடியேந்தினர் கலனேந்தினர்

அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர்

கோடியேந்தினர் பட்டேந்தினர்

கொழுந்திரையலின் செப்பேந்தினர்

வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர் 15

மான்மதத்தின் சாந்தேந்தினர்

கண்ணியேந்தினர் பிணையலேந்தினர்

கவரியேந்தினர் தூபமேந்தினர்

கூனுங்குறளும் ஊமுங்கூடிய

குறுந்தொழிலிளைஞர் செறிந்துசூழ்தர

நரைவிரைஇய நறுங்கூந்தலர்

உரைவிரைஇய பலர்வாழ்த்திட

ஈண்டுநீர் வையங்காக்கும்

பாண்டியன்பெருந் தேவிவாழ்கென

ஆயமுங் காவலுஞ்சென் றடியீடு பரசியேத்தக் 20

கோப்பெருந் தேவிசென்றுதன் தீக்கனாத் திறமுரைப்ப

அரிமா னேந்திய அமளிமிசை இருந்தனன்

திருவீழ் மார்பின் தென்னவர் கோவே; இப்பால்,


வாயி லோயே வாயி லோயே

அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து 25

இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே

இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள்

கணவனை இழந்தாள் கடையகத் தாளென்று

அறிவிப் பாயே அறிவிப் பாயே; என

வாயிலோன், வாழியெங் கொற்கை வேந்தே வாழி 30

தென்னம் பொருப்பின் தலைவ வாழி

செழிய வாழி தென்னவ வாழி

பழியொடு படராப் பஞ்வ வாழி

அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்

பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி 35

வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள்

அறுவர்க் கிளைய நங்கை இறைவனை

ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்

கானகம் உகந்த காளி தாருகன்

பேருரங் கிழித்த பெண்ணு மல்லள் 40

செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்

பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்

கணவனை இழந்தாள் கடையகத் தாளே

கணவனை இழந்தாள் கடையகத் தாளே; என

வருக மற்றவள் தருக ஈங்கென 45

வாயில் வந்து கோயில் காட்டக்

கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி

நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்

யாரை யோநீ மடக்கொடி யோய்எனத்

தேரா மன்னா செப்புவ துடையேன் 50

எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்

வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் 55

பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்

ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி

மாசாத்து வாணிகன் மகனை யாகி

வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு 60

என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி

கண்ணகி யென்பதென் பெயரேயெனப்; பெண்ணணங்கே

கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று

வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை 65

நற்றிறம் படராக் கொற்கை வேந்தே

என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே, எனத்

தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி

யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே

தருகெனத் தந்து தான்முன் வைப்பக் 70


கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப

மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு

தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்

பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட

யானோ அரசன் யானே கள்வன் 75

மன்பதை காக்கும் தென்புலங் காவல்

என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென

மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்

கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக்

கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று 80

இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி.


வெண்பா


அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும் 1

பல்லவையோர் சொல்லும் பழுதன்றே--பொல்லா

வடுவினையே செய்த வயவேந்தன் றேவி

கடுவினையேன் செய்வதூஉங் காண்.


காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும் 2

ஆவி குடிபோன அவ்வடிவும்--பாவியேன்

காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக்

கூடலான் கூடாயி னான்.


மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் 3

கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்--வையைக்கோன்

கண்டளவே தோற்றான்அக் காரிகைதன் சொற்செவியில்

உண்டளவே தோற்றான் உயிர்.


வழக்குரை காதை முற்றும்.


பார்க்க
மதுரைக் காண்டம்
புகார்க் காண்டம்
வஞ்சிக் காண்டம்
[[]]