சிலப்பதிகாரம்/வஞ்சிக் காண்டம்/29. வாழ்த்துக் காதை

விக்கிமூலம் இலிருந்து

சிலப்பதிகாரம்[தொகு]

வஞ்சிக் காண்டம்[தொகு]

வாழ்த்துக் காதை[தொகு]

உரைப்பாட்டு மடை

01. குமரியொடு வடவிமயத் தொருமொழி வைத்துலகாண்ட சேரலாதறகுத் திகழொளி ஞாயிற்றுச் சோழன்மகள் ஈன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேரியாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் சினஞ்செருக்கி வஞ்சியுள் வந்திருந்தகாலை, வட ஆரிய மன்னர் ஆங்கோர் மடவரலை மாலைசூட்டி உடனுறைந்த இருக்கைதன்னில் ஒன்றுமொழி நகையினராய்த் தென்றமிழ் நாடாளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து மின்றவழும் இமயநெற்றியில் விலங்கு வில் புலி கயல் பொறித்தநாள் எம்போலும் முடிமன்னர் ஈங்கில்லைபோலும் என்ற வார்த்தை அங்கு வாழும் மாதவர் வந்தறிவுறுத்த விடத்தாங்கண் உருள்கின்ற மணிவட்டைக் குணில் கொண்டு துரந்ததுபோல் இமய மால்வரைக் கற்கடவுளாம் என்ற வார்த்தை இடந்துரப்ப, ஆரியநாட்டு அரசோட்டி அவர் முடித்தலை அணங்காகிய பேரிமயக் கல்சுமத்திப் பெயர்ந்து போந்து நயந்த கொள்கையிற் கங்கைப் பேரியாற்றிருந்து நங்கை தன்னை நீர்ப்படுத்தி வெஞ்சினந்தரு வெம்மை நீங்கி வஞ்சிமாநகர் புகுந்து, நிலவரசர் நீண்முடியாற் பலர்தொழு படிமங் காட்டித் தடமுலைப் பூசலாட்டியைக் கடவுண் மங்கலஞ் செய்த பின்னாள் கண்ணகிதன் கோட்டத்து மண்ணரசர் திறைகேட்புழி, அலம்வந்த மதிமுகத்திற் சிலசெங்கயல் நீர்உமிழப் பொடியாடிய கருமுகில்தன் புறம்புதைப்ப அறம்பழித்துக் கோவலன்றன் வினையுருத்துக் குறுமகனாற் கொலையுண்ணக் காவலன்றன் இடஞ்சென்ற கண்ணகி தன் கண்ணீர் கண்டு, மண்ணரசர் பெருந்தோன்றல் உண்ணீரற்று உயிரிழந்தமை மாமறையோன் வாய்க்கேட்டு மாசாத்துவான் தான்றுறப்பவும், மனைக்கிழத்தி உயிரிழப்பவும், எனைப்பெருந் துன்பமெய்திக் காவற் பெண்டும் அடித்தோழியும் கடவுட் சாத்தனுடன் உறைந்த தேவந்தியும் உடன்கூடிச் சேயிழையைக் காண்டுமென்று மதுரைமாநகர் புகுந்து முதிராமுலைப் பூசல்கேட்டு

ஆங்கடைக்கலமிழந்து உயிரிழந்த இடைக்குல மகளிடமெய்தி ஐயையவள் மகளோடும் வையையொரு வழிக்கொண்டு மாமலை மீமிசையேறிக் கோமகடன் கோயில்புக்கு நங்கைக்குச் சிறப்பயர்ந்த செங்குட்டுவற்குத் திறமுரைப்போர் மன்.


தேவந்தி சொல்


02. முடிமன்னர் மூவருங் காத்தோம்புந் தெய்வ

வடபேரிமய மலையிற் பிறந்து

கடுவரற் கங்கைப் புனலாடிப் போந்த

தொடிவளைத் தோளிக்குத் தோழிநான் கண்டீர்

சோணாட்டார் பாவைக்குத் தோழிநான் கண்டீர்


காவற்பெண்டு சொல்


03. மடம்படு சாயலாள் மாதவி தன்னைக்

கடம்படாள் காதற் கணவன் கைப்பற்றிக்

குடம்புகாக் கூவற் கொடுங்கானம் போந்த

தடம்பெரும் கண்ணிக்குத் தாயர்நான் கண்டீர்

தண்புகார்ப் பாவைக்குத் தாயர்நான் கண்டீர்


அடித்தோழி சொல்


04. தற்பயந் தாட் கில்லை தன்னைப் புறங்காத்த

எற்பயந்தாட்கும் எனக்குமோர் சொல்லில்லை

கற்புக் கடம்பூண்டு காதலன் பின்போந்த

பொற்றொடி நங்கைக்குத் தோழிநான் கண்டீர்

பூம்புகார்ப் பாவைக்குத் தோழிநான் கண்டீர்


தேவந்தி அரற்று


05. செய்தவ மில்லாதேன் தீக்கனாக் கேட்டநாள்

எய்த வுணரா திருந்தேன்மற் றென்செய்கேன்

மொய்குழன் மங்கை முலைப்பூசல் கேட்டநாள்

அவ்வை உயிர்வீவுங் கேட்டாயோ தோழீ

அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழீ


காவற்பெண் டரற்று


06. கோவலன் றன்னைக் குறுமகன் கோளிழைப்பக்

காவலன் றன்னுயிர் நீத்த்துதான் கேட்டேங்கிச்

சாவதுதான் வாழ்வென்று தானம் பலசெய்து

மாசாத்து வான்றுறவுங் கேட்டாயோ அன்னை

மாநாய்கன் றன்றுறவுங் கேட்டாயோ அன்னை


அடித்தோழி யரற்று


07. காதலன் றன்வீவுங் காதலிநீ பட்டதூஉம்

ஏதிலார் தாங்கூறும் ஏச்சுரையும் கேட்டேங்கிப்

போதியின்கீழ் மாதவர்முன் புண்ணியதா னம்புரிந்த

மாதவிதன்றுறவுங் கேட்டாயோ தோழீ

மணிமே கலைதுறவுங் கேட்டாயோ தோழீ


தேவந்தி ஐயையைக் காட்டி யரற்றியது


08. ஐயந்தீர் காட்சி யடைக்கலங் காத்தோம்ப

வல்லாதேன் பெற்றேன் மயலென் றுயிர்நீத்த

அவ்வை மகளிவள்தான் அம்மணம் பட்டிலா

வையெயிற் றையையைக் கண்டாயோ தோழீ

மாமி மடமகளைக் கண்டாயோ தோழீ


செங்குட்டுவன் கூற்று


09. என்னேயிஃ தென்னேயிஃ தென்னேயிஃ தென்னேகொல்

பொன்னஞ் சிலம்பிற் புனைமே கலைவளைக்கை

நல்வயிரப் பொற்றோட்டு நாவலம் பொன்னிழைசேர்

மின்னுக்கொடி யொன்று மீவிசும்பிற் றோன்றுமால்


செங்குட்டுவற்குக் கண்ணகியார் கடவுணல்லணி காட்டியது


10. தென்னவன் தீதிலன் தேவர்கோன் றன்கோயில்

நன்விருந் தாயினான் நானவன் றன்மகள்

வென்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன்

என்னோடுந் தோழிமீ ரெல்லீரும் வம்மெல்லாம்


வஞ்சிமகளிர் சொல்


11. வஞ்சியீர் வஞ்சி யிடையீர் மறவேலான்

பஞ்சடியாயத் தீரெல்லீரும் வம்மெல்லாம்

கொங்கையாற் கூடற்பதிசிதைத்துக் கோவேந்தைச்

செஞ்சிலம்பால் வென்றாளைப் பாடுதும் வம்மெல்லாம்

தென்னவன் றன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்

செங்கோல் வளைய வுயிர் வாழார் பாண்டியரென்

றெங்கோ முறைநா இயம்பவிந் நாட்டைந்த

பைந்தொடிப் பாவையைப் பாடுதும் வம்மெல்லாம்

பாண்டியன் றன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்


ஆயத்தார் சொல்


12. வானவன் எங்கோ மகளென்றாம் வையையார்

கோனவன்றான் பெற்ற கொடியென்றாள்- வானவனை

வாழ்த்துவோம் நாமாக வையையார் கோமானை

வாழ்த்துவாள் தேவ மகள்.


வாழ்த்து


13. தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணின்நீர்

கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன் வாழியரோ

வாழியரோ வாழி வருபுனல்நீர் வையை

சூழு மதுரையார் கோமான்றன் தொல்குலமே


14. மலையரசன் பெற்ற மடப்பாவை தன்னை

நிலவரசர் நீண்முடிமேல் ஏற்றினான் வாழியரோ

வாழியரோ வாழி வருபுனல்நீர்த் தண்பொருநை

சூழ்தரும் வஞ்சியார் கோமான்றன் தொல்குலமே


15. எல்லாநாம்;

காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும்

பூவிரி கூந்தல் புகார்


அம்மானை வரி


வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன்

ஓங்கரணங் காத்த உரவோன்யார் அம்மானை

ஓங்கரணங் காத்த உரவேன் உயர்விசும்பில்

தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை

சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை


17. புறவுநிறைபுக்குப் பொன்னுலக மேத்தக்

குறைவில் உடம்பரிந்த கொற்றவன்யார் அம்மானை

குறைவில் உடம்பரிந்த கொற்றவன்முன் வந்த

கறவை முறைசெய்த காவலன்காண் அம்மானை

காவலன் பூம்புகார் பாடேலோர் அம்மானை


18. கடவரைக ளோரெட்டுங் கண்ணிமையா காண

வடவரைமேல் வாள்வேங்கை யொற்றினான்யார் அம்மானை

வடவரைமேல் வாள்வேங்கை யொற்றினன்றிக் கெட்டுங்

குடைநிழலிற் கொண்டளித்த கொற்றவன்காண் அம்மானை

கொற்றவன்றன் பூம்புகார் பாடேலோ ரம்மானை


19. அம்மனை தங்கையிற் கொண்டங் கணியிழையார்

தம்மனையிற் பாடுந் தகையேலோ ரம்மானை

தம்மனையிற் பாடுந் தகையெலாந் தார்வேந்தன்

கொம்மை வரிமுலைமேற் கூடவே யம்மானை

கொம்மை வரிமுலைமேற் கூடிற் குலவேந்தன்

அம்மென் புகார்நகரம் பாடேலோ ரம்மானை;


கந்துக வரி


20. பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய் கோதைவில்லிட

மின்னிலங்கு மேகலைகள் ஆர்ப்பவார்ப்ப எங்கணும்

தென்னன் வாழ்க வாழ்கவென்று சென்றுபந் தடித்துமே

தேவரார மார்பன் வாழ்கவென்று என்றுபந் தடித்துமே


21. பின்னுமுன்னும் எங்கணும் பெயர்ந்துவந் தெழுந்துலாய்

மின்னுமின் னிளங்கொடி வியனிலத் திழிந்தெனத்

தென்னன் வாழ்க வாழ்கவென்று சென்றுபந் தடித்துமே

தேவரார மார்பன் வாழ்கவென்று என்றுபந் தடித்துமே


22. துன்னிவந்து கைத்தலத் திருந்ததில்லை நீணிலந்

தன்னினின்று மந்தரத் தெழுந்ததில்லை தானெனத்

தென்னன் வாழ்க வாழ்கவென்று சென்றுபந் தடித்துமே

தேவரார மார்பன் வாழ்கவென்று என்றுபந் தடித்துமே


ஊசல் வரி

23. வடங்கொள் மணியூசன் மேலிரீஇ ஐயை

யுடங்கொருவர் கைநிமிர்ந்தாங் கொற்றைமே லூக்கக்

கடம்புமுதல் தடிந்த காவலனைப் பாடிக்

குடங்கைநெடுங் கண்பிறழ ஆடாமோ வூசல்

கொடுவிற் பொறிபாடி ஆடாமோ வூசல்


24. ஓரைவ ரீரைம் பதின்மர் உடன்றெழுந்த

போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த

சேரன் பொறையன் மலையன் றிறம்பாடிக்

கார்செய் குழலாட ஆடாமோ ஊசல்

கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல்


25. வன்சொல் யவனர் வளநாடு பெருங்கல்

தென்குமரி யாண்ட செருவிற் கயற்புலியான்

மன்பதைகாக் குங்கோமான் மன்னன் றிறம்பாடி

மின்செய் இடைநுடங்க ஆடாமோ ஊசல்

விறல்விற் பொறிபாடி ஆடாமோ ஊசல்


வள்ளைப் பாட்டு


26. தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்

பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர்

ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப்

பாழித் தடவரைத்தோட் பாடலே பாடல்

பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்


27. பாடல்சான் முத்தம் பவழ உலக்கையான்

மாட மதுரை மகளிர் குறுவரே

வானவர்கோன் ஆரம் வயங்கியதோட் பஞ்சவன்றன்

மீனக் கொடிபாடும் பாடலே பாடல்

வேப்பந்தார் நெஞ்சுணக்கும் பாடலே பாடல்

28. சந்துரற் பெய்து தகைசால் அணிமுத்தம்

வஞ்சி மகளிர் குறுவரே வான்கோட்டாற்

கடந்தடுதார்ச் சேரன் கடம்பெறிந்த வார்த்தை

படர்ந்த நிலம்போர்த்த பாடலே பாடல்

பனந்தோ டுளங்கவரும் பாடலே பாடல்


29. ஆங்கு, நீணில மன்னர் நெடுவிற் பொறையனல்

தாள்தொழார் வாழ்த்தல் தமக்கரிது சூழொளிய

எங்கோ மடந்தையும் ஏத்தினாள் நீடூழி

செங்குட் டுவன் வாழ்க என்று.


சிலப்பதிகாரம் வாழ்த்துக்காதை முற்றும்.
பார்க்க

வஞ்சிக் காண்டம்