சிலம்பின் கதை/கடல் ஆடு காதை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

6. கடற்கரை நிகழ்ச்சிகள்
(கடலாடு காதை)

வித்தியாதரன் விருப்பம்

கோயில் வழிபாடுகள் ஒருபுறம் கலை அரங்குகள் மற்றொருபுறம். புகார் நகரம் இன்ப வெள்ளத்தில் நீந்தியது. இந்த விழாவைக் காண விண்ணவரும் வந்தனர். விஞ்சையர்கள் கலை நிகழ்ச்சிகளைக் காணத் தொலைதூரம் கடந்து வந்தனர். அவர்களுள் ஒருவன் வித்தியாதர வீரன்.

அவன் தன் காதலியோடு, சோலை ஒன்றில் காம விளையாட்டில் மகிழ்வு கண்டான். அவளோடு உரையாடி இந்திர விழாவைப்பற்றி விளங்கக் கூறினான்.

“சித்திரை மாதம்,சித்திரை நாள் இன்று அந்த இந்திர விழா” என்று எடுத்துக் கூறினான். அங்குத் தாம் காண இயலும் காட்சிகளை எடுத்துக் கூறி அவளை உடன் அழைத்து வந்தான்.

இந்திரன் கட்டளையால் புகார் நகரில் தங்கிவிட்ட காவல் பூதத்துக் கோயில் முன்பு ஆண்டுக்கொருமுறை இந்திர விழா நாள் அன்று வீரர்கள் தம்மைப் பலி இட்டுக் கொள்ளும் காட்சி வியப்புடையது என்று கூறினான். “அந்தப் பலிப் பீடிகையைக்” காணலாம். வருக” என்று கூறினான்.

“மற்றும் ஐவகை மன்றங்களின் அருமை பெருமை களை நேரில் காண இயலும்” என்றான்.

“இந்திரன் அவையில் சாபம் பெற்றுப் புகாரில் பிறந்த ஊர்வசியின் மரபில் வந்த மாதவியின் ஆடலையும் காண்போம்” என்றான்.

வித்தியாதரன் வருகை

இருவரும் வெள்ளிமால் வரையில் இருந்து புறப்பட்டு இமயத்தைக் கடந்து வந்தனர். தேயங்கள் பலவற்றை அவளுக்குக் காட்டி அழைத்து வந்தான். செழுமையான கங்கை பாய்வதை அவளுக்குக் காட்டி மகிழ்வித்தான். உஞ்சைமா நகரத்தையும், விஞ்சைமா அடவியையும், வேங்கட மலையையும், காவிரிநாட்டையும் காட்டிய பின்னர்ப் பூம்புகார்க்கு அழைத்து வந்தான்; அங்கங்கே இருந்த கோயில்களைத் தொழுதவனாகி அவளுக்குக் காட்டிக் கோயில் விழாக்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் உணர்த்தினான்.

அதன்பின் அவன் பெரிதும் புகழ்ந்து பேசிய மாதவியின் ஆடல் நிகழ்ச்சியை அவளுக்குக் காட்டத் தொடங்கினான். விண்ணவரும் அங்குவந்து மறைந்திருந்து கண்கொள்ளா இக் காட்சியைக் கண்டு களிமகிழ்வு உற்றனர்.

மாதவியின் ஆடல் நிகழ்ச்சிகள்

மாதவியின் ஆடல் அரங்கு தொடங்கியது; முதல் நிகழ்ச்சியாகத் தெய்வப் பாடல்களைப் பாடினர். திருமாலின் புகழைப் பாடினர். இது ‘மாயோன் பாணி’ எனப்பட்டது.

இவ்வாறே நால்வகை வருணப்பூதர் புகழைப் பாடினர். அதன் பின் திங்களைப் போற்றிப் பாடினர். இது 'வானூர் மதியம்பாணி' எனப்பட்டது.

அதன் பின் கதை பொதிபாடல்களைப் பாடினர். இவை தெய்வங்கள் மானிடர் நன்மைக்காக உலகில் ஆற்றிய போர் நிகழ்ச்சிகளைச் சித்திரித்துக் காட்டின. தெய்வக் கதைகள் இதில் இடம் பெற்றன.

சிவன் திரிபுரம் எரித்த உடன் பார்வதியோடு சுடுகாட்டில் ஆடிய ஆட்டம் ‘கொடிகொட்டி’ எனப்பட்டது.

கலைமகன் பிரமன் காணத் தேர்முன் ஆடியது ‘பாண்டரங்கம்’ எனப்பட்டது.

கம்சனைத் துவம்சம் செய்த கண்ணன் அவனைக் குத்தி வீழ்த்திய நிகழ்ச்சி ‘அல்லியத் தொகுதி’ எனப்பட்டது.

கண்ணன் தன்னை எதிர்த்த வாணா சூரனை எதிர்த்து அவனைக் களத்தில் வீழ்த்திய செய்தி ‘மல்லின் ஆடல்’ எனப்பட்டது.

கடலில் சூரபதுமனை எதிர்த்து முருகன் போர் தொடுத்தான். அதைச் சித்திரித்துக் காட்டியது ‘துடிக்கூத்து’ எனப்பட்டது. அவுணரோடு போர் செய்த முருகன் அவர்களை வெற்றி கொண்டு குடைபிடித்து ஆடியது ‘குடைக் கூத்து’ எனப்பட்டது.

வாணன் பேரூர்த் தெருக்களில் நீள்நிலம் அளந்த திருமால் ஆடிய கூத்து அது 'குடக் கூத்து' எனப்பட்டது.

ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்தில் மன்மதன் ஆடிய கூத்து ‘பேடிக்கூத்து’ எனப்பட்டது.

அசுரர்கள் தாம் தாங்கிய போர்க் கோலத்தைத் தவிர்த்து ஒடத் துர்க்கை வெற்றி கொண்ட செய்தி ‘மரக்கால் ஆடல்’ எனப்பட்டது.

அதேபோல அவுணரை எதிர்த்துத் திருமகள் வெற்றி கொண்ட செய்தியைச் செப்புவது ‘பாவைக் கூத்து’ எனப் பட்டது.

வாணன் ஊரில் வடக்கு வாயிலில் இந்திராணி வெற்றி கொண்ட செய்தி ‘கடையம்’ எனப்பட்டது.

இப்பதினொருவகை ஆடல்களையும் மாதவி அவ்வவ் வேடங்களில் அவ்வம் மரபுகள் வழுவாமல் நடித்து நாட்டியம் ஆடி நாட்டவரை மகிழ்வித்தாள் நடிப்பு இது; வாழ்க்கை அவளை அழைத்தது.

கலை உலகில் அவள் தன் தொழிலைத் திறம்படச் செய்து இந்த உலகினரை மகிழ்வித்தாள். கோவலன் ஊடற் குறிப்போடு இருந்தான்; அவளைக் கூடி மகிழக் காத்து இருந்தான்.

மாதவியின் ஒப்பனை

காதலன் அவனை மகிழ்விக்க அவள்தன் இயல்பு நிலைக்கு வந்தாள். ஒப்பனை அவள் உடன் பிறந்தது; அவன் கலாரசிகன்; அழகை ஆராதிப்பவன். கோலம் செய்து அவனை மகிழ்விக்க விரும்பினாள். அவள் தன்னை ஒப்பனை செய்து கொள்வதே தனிக் கற்பனையாக இருந்தது.

கூந்தலை நறுமணம் கலந்த நீரில் குளிப்பாட்டினாள். நறும்புகை கொண்டு உலர்த்தினாள். கால் அடிமுதல் தலை முடிவரை அவள் பலவகை அணிகளைப் பூண்டாள். இங்கே அவனுக்கு மாதவியாகக் காட்சி அளித்தாள். கால்விரலுக்குக் கணையாழிகள்; கணைக்காலுக்குச் சிலம்பு வகைகள்; தொடைக்குச் செறிதிரள் என்னும் அணி முத்துப்பதித்த மேகலை அவள் இடைக்கு அணிந்தாள். தோளுக்குக் கண்டிகை, வயிரம் பதித்த சூடகம்; மற்றும் பல்வகை வளையல்கள் அவள் கைகளில் அணிந்தாள்: கைவிரலுக்கு மகரமோதிரம்; கழுத்துக்குப் பொன் சங்கிலியும் முத்து ஆரமும் அணிந்தாள்: செவிக்குக் கடிப்பு: தெய்வஉத்தி, தொய்யகம் முதலியன அவள் தலைக்கு அணிந்தாள். இத்தகு ஒப்பனைகளோடு அவன் மகிழ அவனோடு ஊடலும் கூடலும் கொண்டு அவனை மகிழ்வித்தாள்.

புது விருப்பு

இந்திரவிழாவில் கலைவிழாக்களைக் கண்ட நகரத்து மாந்தர் அடுத்தது கடல்விளையாட்டைக் காணக் கடற்கரை நோக்கிச் சென்றனர். மாதவியும் அங்குச் சென்று அதனைக் காண அவாவினாள். கோவலனும் உடன் புறப்பட இசைந்தான்.

வைகறை விடிந்ததும் கோவலனும் மாதவியும் கடற்கரை நோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் பயணம் உல்லாசப் பயணமாக அமைந்தது. அவன் அத்திரி என்னும் அழகிய குதிரைமீது ஏறிச் சென்றான். அவள் வையம் என்னும் முடுவண்டியில் அமர்ந்து சென்றாள்.

வழிக் காட்சிகள்

செல்வம் கொழித்த அந்நகரின் பெருங்கடைகள் இருந்த பீடிகைத் தெருவைக் கடந்தனர். அத்தெருவில் மங்கலத்தாசியர் தத்தம் வீடுகளில் விளக்குகள் வைத்து அழகு செய்தனர். அங்கே செல்வம் குவிந்து கிடந்தது என்பதை அவர்கள் வீடுகள் விளக்கின. மலர்தூவிய விளக்குகள், மற்றும் மாணிக்க விளக்குகள் அவர்கள் இல்லங்களை அழகு செய்தன. அவர்கள் வீடுகளை அலங்கரித்தனர். அணிகலன்கள் அசைந்து ஒலிசெய்ய அவ்வழகியர் அத்தெருக்களில் திரிந்தது காட்சிக்கு இனிமை தந்தது. செல்வச் சிறப்பால் அது திருமகள் இருக்கை என விளங்கியது. கடல்வளம் கொண்டு வந்து கடைகள் வைத்துக் குடியிருந்த அந்நிய நாட்டினர் இருப்புகளையும் அவர்கள் கடந்து சென்றனர்.

அங்கே கூலமறுகில் பண்டங்களைக் கொடிகள் எடுத்து விற்றனர். மாலைச் சேரிகள் சுருசுருப்பாக இயங்கின. அங்கே சுண்ணமும், வண்ணமும், சாந்தும், பாகும், பலகார வகைகளும் விற்போர் விளக்குகள் ஒளி விட்டன. அதனை அடுத்து ஒவ்வொரு தொழில் செய்வோரும், கடைகாணி வைத்திருப்பவரும் தனிவிளக்குகள் வைத்திருந்தனர். கள் விற்பவரும், மீன் விற்பவரும் விளக்குகள் வைத்து விற்பனை நடத்தினர். இடித்த மாவில் வெண்சிறுகடுகை வைத்தது போலக் கடற்கரை மணலில் இவ்விளக்குகள் ஒளி விட்டுக் கொண்டிருந்தன. தாமரை மலர்கள் பொய்கைகளில் பூத்து விளங்கும் மருத நிலத்தைப் போலத் தாழை மலர்கள் தழைத்து விளங்கிய அக்கடற் கரைக் கானலில் அவர்கள் சேர்ந்து தங்கினர்.

மலைபடு பொருளும், அலைபடு பொருளும் மலையெனக் குவிந்து கிடக்கும் கடல் துறைமுகம் அதுவும் மக்கள் விரும்பித் தங்கும் இடமாக இருந்தது. அத் துறைமுகப் பகுதியில் குளிர் சோலைகளில் அரசிளங் குமரரும், அவர்கள் காதலியரும் தங்கி மகிழ்ந்தனர். அவ்வாறே வணிக இளைஞரும், கணிகை மகளிரும் கலந்து உரையாடத் தனியே திரைகள் இட்டுத் தங்கி மகிழ்ந்தனர். ஆடுகள மகளிரும், பாடுகள மகளிரும் தனித்தனியே தங்கி அவர்கள் கூடு கட்டிவாழ்பவர் போல் திரைகள் தடுத்து ஒதுங்கி இருந்தனர்; எழினிகள் அவர்களுக்குத் தனிமையைத் தந்தன.

களிமகிழ் கூட்டம் கரிகாலன் காவிரியாற்றில் புதுப் புனல் விழா எடுத்த நாளில் திரண்டிருந்ததுபோல் விளங்கிக் காட்டியது. நால்வகை வருணத்துப் பால்வகைப்பட்ட மக்கள் ஆரவாரத்துடன் காவிரி கலக்கும் சங்கமத் துறையில் குழுமி மகிழ்ந்தனர்.

அமளியில் அமர்தல்

தாழைவிரிந்த கடற்கரைச் சோலையில் வேலி அமைத்து ஒதுக்குப் புறத்தில் அங்கே ஒரு புன்னை மர நிழலில் புதுமணல் பரப்பில் ஒவியம் வரைந்த திரைச் சீலை அவர்களுக்கு மறைப்புத் தந்தது. விதானம் அமைத்த வெண்கால் கட்டிலில் மாதவியும் கோவலனும் அமர்ந்தனர். அருகிருந்த வசந்தமாலை என்னும் பெயருடைய தோழி நின்று கொண்டிருந்தாள். அவள் கையில் இருந்த யாழினைக் கோவலன் வாங்கினான். அவனோடு இசை பாடும் மனநிலையில் மாதவி அவனை எதிர் நோக்கி இருந்தாள்.