உள்ளடக்கத்துக்குச் செல்

சிலம்பின் கதை/கண்ணகி

விக்கிமூலம் இலிருந்து
திறனாய்வுக் கட்டுரைகள்


1. கண்ணகி

கண்ணகி இவள் காவியத் தலைவி. மாநாய்கனின் ஒரே மகள். 'ஈகை வான் கொடி அன்னாள்' என்று அறிமுகப்படுத்தப்படுகிறாள். 'ஈகை' என்றால் பொன் என்பது பொருளாகும். இவள் ஒளி பெறுகிறாள். இதுவே காவியத்தின் செய்தியும் ஆகிறது.

இவள் வடிவு, திறம் இவை சிறப்பிக்கப்படுகின்றன. திருமகளைப் போன்ற வடிவும், அருந்ததி போன்ற கற்பும் உடையவள் என்று சிறப்பிக்கப்படுகிறாள். மாதரார் தொழுது ஏத்தத் தக்க நற்குணங்கள் நிரம்பியவள் என்றும் கூறப்படுகிறாள்.

“அவளுந்தான்
போதில் ஆர் திருவினாள் புகழ்உடை வடிவு என்றும்,
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய
பெருங்குணத்துக் காதலாள்”

இதில் மூன்று செய்திகள் அறிமுகப்படுத்தப்படு கின்றன. இவள் தெய்வத்தோடு உவமிக்கப்படுகின்றாள். மற்றொன்று இவள் கற்பின் திறம்; மூன்றாவது இவள் நற்குணங்கள்; இந்த மூன்றுமே கண்ணகியின் குணச் சித்திரங்கள் என்று கூறலாம்.

இவள் தெய்வம் ஆகிறாள் என்பதற்கு முன் அறிவிப்புகள் காவியத்தில் ஆங்காங்கு இடம் பெறுகின்றன.

'திருவினாள் வடிவு' என்பதே இவள் தெய்வம் என்பதற்குத் தொடக்கமாக அமைகிறது.

வேட்டுவ வரியில் சாலினி என்பாள் 'உலகிற்கு ஓங்கிய திருமாமணி' என்ற தொடரில் இவள் தெய்வம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறாள்.

கவுந்தி அடிகள் 'கற்புடைத் தெய்வம்' என்ற தொடரில் மாதரிக்கு அறிமுகம் செய்கிறாள்.

'கற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்' என்று கூறக் காண்கிறோம். இவள் தெய்வம் ஆவதற்கு வேண்டிய தகுதிகள் உள்ளன என்று கோடிட்டுக் காட்டுகிறார்.

இடையர் சேரியில் மாதரி இவளைத் தெய்வக் காட்சியில் வைத்துக் காண்கிறாள்.

'தொழுனை ஆற்றினுள் தூமணி வண்ணனை விழுமம் தீர்த்த விளக்குக் கொல்'

என்று கூறி இவளை நப்பின்னையோடு உவமிக்கிறாள். இதுவும் தெய்வக் காட்சி என்று கொள்ளலாம்.

குன்றக் குறவர்கள் வேலனை வழிபட்டவர்கள்; இவளைத் தெய்வமாகக் கொள்கின்றனர்.

“இவள் போலும் நங் குலக்கு ஒர் இருந் தெய்வம் இல்லை”

என்று கூறி வழிபடுகின்றனர்.

மதுரையில் கண்ணகி ஆற்றாது அழுகின்றாள். அவளைக் கண்டு மதுரை மக்கள் இவளைப் 'புதிய தெய்வம்' என்று கூறக் காண்கிறோம்.

“செம்பொற் சிலம்பு ஒன்று
கையேந்தி நம் பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்தது இதுவென் கொல்”

என்று அவள் தெய்வத் தன்மையைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

சேரன் செங்குட்டுவன் மனைவி அவள்தான் இவளை நன்கு அறிந்தவளாகக் காட்டிக் கொள்கிறாள்.

“அத்திறம் நிற்க நம் அகல் நாடு அடைந்த இப்பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்” என்று கூறியவள் சேரமா தேவிதான்; மாதரார் தொழுது ஏத்தும் நிலையை இங்குக் காண முடிகிறது.

எனவே கண்ணகி கற்புடைத் தெய்வம்” என்று அடிகள் கூறியது செயலுக்கு வந்து சேர்கிறது. சேர நாட்டில் அவளுக்குக் கோயில் அமைக்கப்படுகிறது. உலகிற்கு ஓங்கிய திருமாமணியாகிறாள்.

அடுத்தது அவள் கற்பின் திறம்; இதைச் சித்திரிப்பதே காவியத்தின் பொருள் ஆகிறது.

“வடமீனின் திறம் இவள் திறம்” என்று மாதரார் தொழுது ஏத்துகின்றனர். மணமேடையில் கண்ணகியைத் தீ வலம் செய்விக்கிறான் கோவலன். அங்கே “சாலி ஒரு மீன் தகையாள் என்று அவள் தொடர்ந்து குறிப்பிடப்படுகிறாள்.

மீண்டும் அதே செய்தியை வற்புறுத்தக் காண்கிறோம்.

“அங்கண் உலகில் அருந்ததி அன்னாளை
மங்கல நல்லமளி ஏற்றினார்”

என்று கூறுவார் ஆசிரியர்.

இவள் கற்பின் திறம் வெளிப்படும் சூழ்நிலைகள் தொடர்ந்து ஏற்படுகின்றன.

தேவந்தி இவளைத் தெய்வத்தை வழிபடும்படி கூறுகிறாள். “சோம குண்டம் சூரிய குண்டம் இத்துறை களில் முழுகி எழுந்து காமனை வழிபட்டால் கணவனை அடைந்து இன்புறுவர்” என்று கூறுகிறாள்.

'பீடு அன்று' என்று கூறுகிறாள் கண்ணகி, கணவனை வழிபடுகின்றவள் காமனை வழிபட அவள் நினைக்க வில்லை. 'தெய்வம் தொழாள்' என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறாள். அது மட்டுமன்று; இன்பம் அவள் குறிக்கோள் அன்று. 'இன்புறுவர்' என்று கூறுகிறாள் தேவந்தி. இல்வாழ்வுக்கு இன்பம் அடிப்படையன்று; அன்பு தான் அடிப்படை என்பதை அறிவித்துவிடுகிறாள். 'பீடு அன்று' என்பதில் இந்தக் கருத்தும் அடங்கியிருக்கக் காண்கின்றோம்.

அவள் கற்பின் திறத்துக்கு மற்றும் ஓர் எடுத்துக் காட்டுச் சிறப்பாக அமைந்துள்ளது.

கோவலன் உண்டு இனிது இருந்து அவள் செயலை வியக்கிறான். அவனுடைய பெற்றோர்கள் வருந்தினார்கள் என்று கூறினாளே தவிரத் தான் வருந்தியதாகக் கூறவில்லை. அவர்கள் வருந்தும்படி போற்றா ஒழுக்கம் புரிந்தான் என்றுதான் கூறுகிறாள்.

அவன் செயல் அவள் மனத்தில் எந்தச் சலனமும் ஏற்படுத்த வில்லை; அவனை அவள் வெறுக்கவே இல்லை. “யாவதும் மாற்றா வாழ்க்கையேன்” என்று கூறுவது அவள் கற்பின் திறத்தைக் காட்டுவதாகும்.

சோழ நாட்டுக் கற்புடைப் பெண்டிர் பொற்புறு செயல்களைக் கூறித் தன்னை ஒரு பத்தினி என்று தன் வாயால் வெளிப்படுத்துகிறாள். இது அவள் தன் ஆற்றலை அறிந்து செயல்படும் திறனாகிறது.

வசதி மிக்க வாழ்க்கையைவிட்டு அசதிமிக்க வழிப் பயணத்தை மேற்கொண்டதை வியக்கின்றான். அவள் நற்குணத்தை அவன் அறிந்து கூறுகிறான்.

“குடிமுதற் சுற்றமும் குற்றிளையோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும்
பேணிய கற்பும் பெருந்துணையாக
என்னொடு போந்து ஈங்கு என்துயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங்கோதாய்”

என்று அவள் செயலைக் கூறுகிறான்.

அவள் கற்பின் திறத்தைத் தொடர்ந்து எடுத்துக் கூறுகிறான்.

“நாணின் பாவாய் நீணில விளக்கே
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி”

என்று அவள் திறத்தைக் கூறுகிறான்.

இனி மூன்றாவதாக அவளை இளங்கோவடிகள் அறிமுகப்படுத்தும் போது கூறிய செய்தி அவள் “பெருங் குணத்துக் காதலாள்” என்பது அவள் அருங்குணங்களுள் சில எடுத்துக் கூற முடிகிறது.

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”

என்பர் வள்ளுவர்.

இல்வாழ்க்கையின் குறிக்கோள் இன்பம் என்று அவர் குறிப்பிடவே இல்லை. இந்த இரண்டு பண்புகளும் கண்ணகிபால் தலையோங்கி நிற்கின்றன.

இன்பக் களிப்பில் கோவலன் இன்னுரைகள் பல பேசுகிறான்; பாராட்டுகிறான். அவள் வாய் திறந்து ஒரு சொல்கூடக் கூறியவள் அல்லள். இன்பத்தில் அவள் மகிழ்ச்சியைக் காட்டவே இல்லை. அவள் அன்பு அவள் செயல்களில் வெளிப்படுகின்றது.

'இலம்பாடு நாணுத் தரும் எனக்கு' என்று கூறக் கேட்ட அளவில் 'சிலம்புஉள கொள்ளும்' என்று விரும்பிக் கொடுக்கிறாள். மற்றும் அவன் 'எழுக' என்றதும் உடன் புறப்பட்டுச் செல்கிறாள். அவனுக்கு வழித் துணையாக இருந்து பணி செய்கிறாள். அவனுக்கு இன்.அமுது படைத்து அருகிருந்து பரிமாறும் நிலையில் அவள் அன்பு வெளிப் படுகிறது.

“என்னொடு போந்து ஈங்கு என்துயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்”

என்று பாராட்டுகிறான். அவன் துயரை அவள் களைவதை அறிந்து சுட்டிக் காட்டுகிறான்.

இதே கருத்தைக் கவுந்தியடிகளும் கூறக் காண் கிறோம்.

“கடுங்கதிர் வெம்மையில் காதலன் தனக்கு
நடுங்குதுயர் எய்தி நாப்புலர வாடித்
தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி”-

மற்றும் இதே கருத்தை மாதரியும் கூறக் காண்கிறோம்.

‘தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை
விழுமம் தீர்த்த விளக்குக் கொல்’

எனக் கூறி வியப்பு உறுகிறாள்.

இவள் இல்வாழ்க்கையில் அறத்தைக் கடைப் பிடித்தவள் என்பது அவள் கோவலனுக்குத் தரும் விடையில் வெளிப்படுகிறது.

‘அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஒம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை’

என்று தன் நிலைமையை எடுத்துக் கூறுகிறாள்.

அறவாழ்க்கை இழந்தமைக்குத்தான் அவள் வருந்தி இருக்கிறாள். இன்ப இழப்பைப்பற்றி அவள் எங்கும் எப்பொழுதும் பேசவே இல்லை. அவள் வாழ்க்கையின் பண்பு அன்பும், அறமும் என்பதைச் சுட்டிகாட்டி வாழ்ந்தவள் என்பது தெரிகிறது.

வள்ளுவர் 'பெண்' அவள் நற்குண நற்செயல்களைத் தொகைப்படுத்திக் கூறுகிறார்.

‘தற்காத்துக் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்’

என்பர்.

நாணமும் மடமும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணையாக வாழ்ந்தமை அவள் தற்காத்தலுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். தன் துயர் காணாமல் அவனைப் பேணிக் காத்தமை அவள் செயல்களால் விளங்குகிறது.

தகைசான்ற சொல் காத்தது அதுதான் அவள் செயற்கு அரிய செயல் ஆகிறது. தன் கணவனுக்கு ஏற்பட்ட பழிச் சொல்லைப் போக்க அவள் சீறி எழுந்து வழக்கு ஆடுகிறாள்; அவனுக்கு ஏற்பட்ட பழியைப் போக்க அவள் செயல்படுகிறாள்; ஏன் மதுரையையே எரிக்கிறாள்.

மற்றைய மகளிரைப் போல் இணைந்து ஏங்கி அழாமல் ஊர் முழுவதும் தன் வழக்கை எடுத்துக் கூறுகிறாள்; அரசனிடம் சொல்லாடுகிறாள்; சோர்வு இல்லாமல் செயல்படுகிறாள். இது அவள் அடுத்த பண்பு ஆகிறது.

பொருள் இழந்து அவன் வாழ்ந்தபோது அவன் சோர்வைப் போக்கியவள் கண்ணகி. சிலம்பு உள என்று எடுத்துக் கொடுத்தவள்; அவள் துன்பம் கண்டு சோர்ந்தது இல்லை.

சிலம்பு உள கொள்ளும் என்று கூறும்போது நகைமுகம் காட்டுகிறாள். இடுக்கண் வருங்கால் அதனை ஏற்று நகையாடி ஏற்கும் இயல்பு அவளிடம் முழுவதும் காணப்படுகிறது.

“நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச்
சிலம்பு உள கொள்ளும்”

எனக் கூறுகிறாள். இது சோர்வின்மைக்கு எடுத்துக்காட்டு ஆகிறது.

வீட்டை விட்டு வெளியேறுகிறாள்; நடந்து களைப்பு அடைகிறாள்; 'மதுரை மூதூர் யாது?' என்று வினவுகிறாள். அப்பொழுதும் அவள் சோர்வு காட்டவே இல்லை.

“நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்து
முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க
மதுரை மூதூர் யாது?”

என்று வினவுகின்றாள்.

விருந்தினர் ஒம்பும் வாழ்க்கை இழந்த நிலையில் கோவலனின் தந்தை தாய் வந்து வினவியபோதும் அவள் அப்பொழுதும் சிரிக்கவே முயன்று இருக்கிறாள். 'வாயல் முறுவற்கு' அவர் உள்ளகம் வருந்தினர் என்று கூறுகிறாள்.

எந்தப் பெண்ணும் செய்யாத, செய்ய முடியாத புரட்சி செய்தவள் இவள்; இவளை வீரபத்தினி என்று இளங்கோவடிகள் குறிப்பிடுவார்.

கற்பு என்பது அடக்கம் மட்டும் அன்று, சீற்றமும் கொண்டது எனபதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவள் கண்ணகி,

எனவே இவள் தெய்வக் கற்பு உடையவள் என்பதும், பெருங்குனத்துக் காதலாள் என்பதும் இவள் நற்குண நற் செயல்களால் புலப்படுகின்றன.

காவியத்தில் கண்ணகி பெரும் இடம் சிறப்பு மிக்கது: அவளைச் சுற்றி மூன்று நாடுகளின் சிறப்புகள் பின்னப்பட்டு இருக்கின்றன. இதனைச் சேரன் செங்குட்டுவனே அறிந்து தெரிவிக்கிறான்.

“சோழனின் ஆட்சிச் சிறப்பையும், பாண்டியனின் தீது தீர் திறத்தையும், சேரன் செங்குட்டுவனின் வீரச் செயலையும் வெளிப்படுவதற்குக் கண்ணகி காரணமாக இருக்கிறாள்” என்று அறிவிக்கிறாள்.

“தென்தமிழ்ப் பாவை செய்தவக்கொழுந்து
ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி"

என்று கண்ணகியைச் சாலினி கூறுவது முற்றிலும் பொருந்துகிறது.

“பார்தொழுது ஏத்தும் பத்தினி”

என்று செங்குட்டுவன் தன் மதிப்பீட்டைத் தெரிவிக்கின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சிலம்பின்_கதை/கண்ணகி&oldid=937569" இலிருந்து மீள்விக்கப்பட்டது