சிலம்பின் கதை/மாதவி
இந்தக் கதைக்கு இரு துருவங்கள் என்று பெயர் தந்திருக்கலாம். நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் என்பர். அதுபோலப் பெண்ணுக்கு இரு வேறு தன்மைகள் இயல்புகள் என்று கூறலாம். அந்த இரு வேறு தன்மைகளை இரு வேறு படைப்புகளில் காட்டுகிறார் இளங்கோ.
மாதவி உலகுக்காகப் படைக்கப்பட்டவள்; அவள் முடிவு அவள் வீட்டில் அடைபடுகிறாள்; உலகம் அவளைப் போற்றியது, பின் அவளுக்காக இரங்குவார் இல்லாமல் ஒதுக்கப்பட்டு விட்டாள். கண்ணகி வீட்டுக்காகப் படைக்கப்பட்டவள். அவள் உலகத்துக்குப் புது ஒளிகாட்ட உலகமே வழிபடும் தெய்வம் ஆகிறாள். இருவேறு தொடக்கம்; இருவேறு முடிவுகள்; இந்தக் காவியம் இந்த வகையில் இரு துருவங்கள் கொண்டது என்று கூறலாம்.
கண்ணகி மாதவி இருவருக்கும் வயது பன்னிரண்டு தொடக்கம்; பின்பு சிலயாண்டுகள் கழிந்தே கோவலனுக்கு மாதவியின் தொடர்பு ஏற்படுகிறது. எனவே வயது வேறுபாடு இருக்கத்தான் செய்யும் என்பது குறிப்பிடத் தக்கது.
கண்ணகிக்கும் கோவலனுக்கும் தொடர்பு பன்னிரண்டாம் வயது; மாதவிக்கும் கோவலனுக்கும் தொடர்பு அதே வயது.
கண்ணகியின் இளமைப் பருவம் பண்டைக் கதைகளைக் கேட்கும் வாய்ப்புப் பெறுகிறது. கற்புடை மகளிர் கதைகள் அவளுக்குச் சொல்லித் தரப்படுகின்றன. அவளுக்குக் குடும்பப் பெண் என்ற முத்திரை குத்தப் படுகிறது. பெருங்குடி வணிகன் மகள் என்று அடையாளம் காட்டப்படுகிறாள். அவள் படித்த படிப்பு எல்லாம் அறத்துப்பாலின் முற்பகுதி, இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம் இவற்றைப் பற்றி நன்கு கற்றிருக்கிறாள்.
மாதவி பரத சாத்திரம், நாட்டியக் கலைகள், பாடல் கலை இவற்றில் பயிற்சி பெறுகிறாள். ஏழாண்டுகள் இக் கலைகளைக் கற்கிறாள். இவள் உலகமே தனி, கற்பனை உலகில் வாழ்கிறவள். கதைகளுக்கு அபிநயம் பிடிக்கக் கற்றுக் கொண்டவள். இவள் உலகுக்கு இவற்றை எடுத்துச் சொல்ல ஒரு கருவியாகிறாள்.
இவள் கணிகை மகள்; பிறரை மகிழ்வித்தே வாழ வேண்டும் என்ற நியதி அமைகிறது. ஒரு சிலர் உடல் உறவால் மகிழ்விப்பவரும் உளர், அவர்கள் நிலை வேறு; இவள் உயர்நிலையில் வாழ்ந்தவள்.
கலை அவள் கற்றுக் கொண்டது; அதைக் கொண்டு உலகை மகிழ்விக்கும் தொழிலை அவள் ஏற்கிறாள். பண்ணொலிகள் அவளைப் பண்படுத்தி வந்தன. அவள் பேச்சில் அசைவில் இனிமை தவழ்கிறது. அவள் அழகின் தேவதை என்று ஆராதிக்கப்படுகிறாள்.
கண்ணகிக்குச் செல்வம் பெரியோர்கள் ஈட்டி வைத்துள்ளனர். இவளுக்கு அதை ஈட்டும் பொறுப்பும்
சார்கிறது. 'கலை கலைக்காகவே' என்பது அவள் நோக்கமன்று. கலை வாழ்க்கைக்காக என்பது அவள் நோக்கம்; அதனால் பரிசில் பெறுவது, செல்வம் குவிப்பது அவளுக்குத் தேவையாகின்றன.
இளமையில் அழகும் கவர்ச்சியும் இருக்கும்போதே பொருள் ஈட்டிக் குவித்துக் கொள்ள வேண்டும். அது அவள் வாழ்க்கை நிலை.
உழைத்து வாழ்பவர் உழவர்கள்; தொழிலாளர்கள். வணிகர்கள் இதுபோன்றே நேரடி உழைப்பில் ஈடுபடு பவர்கள். தலைமை ஏற்பதால் சிறப்புப் பெறுபவர் அரசர்கள். 'அழகுப் பசி' அதற்கு மறுபெயர் 'கலை'; அதனை நிறைவேற்றித் தருபவர்கள் கலைஞர்கள்.
கதைகள் மூலமாகவும், பாடல்கள் மூலமாகவும் நல்ல கருத்துகளை நாட்டுக்குப் பரப்புபவர்கள் இவர்கள். இவர்களை உலகம் மதிக்கிறது; பாராட்டுகிறது; பரிசும் தருகிறது. ஆனால் அன்பு காட்டி அவர்களை நேசிப்பது இல்லை; அதுதான் அவர்கள் அடையும் தோல்வியும்கூட
கோவலனை இவள் தேடிக் கொள்ளவில்லை. குலுக்கல் முறையில் கிடைத்த பரிசு; அவன் விலை கொடுத்து வாங்குகிறான். அவள் அவனுக்கு அடிமை ஆகிறாள். அவளோடு வாழ்வதற்கு உரிமைப் பதிவு பெறுகிறான். அவனை மகிழ்விப்பது அவள் தொழில் ஆகி விடுகிறது. அதுவே வாழ்க்கையாகவும் மாறி விடுகிறது.
மற்றைய பெண்களைப் போல இவள் கண்ணியமாக வாழ முயல்கிறாள்; தன்னை அணுகுபவனின் அன்பைப் பெற முயல்கிறாள். அதனை அவளால் பெற முடியவில்லை. அதுதான் அவளைப் பற்றிய முடிந்த நிலை.
மற்றைய பெண்களைப் போல மகள் ஒருத்தியைப் பெறுகிறாள். எனினும் அது அங்கீகரிக்கப்படவில்லை. கோவலன் பெற்றோர்கள் வந்து அன்பு காட்டவே இல்லை. பிரிந்து வருந்தியிருந்த நிலையிலும் அவர்கள் வந்து ஆதரவு காட்டவில்லை. அன்பு என்பதைப் பெற முடியாமல் போய்விடுகிறது. வாழ்க்கையில் ஒதுங்க வேண்டி நேர்கிறது. அதற்குத்தான் துறவு என்று பெயர் வழங்கப்பட்டது.
தன் மகளுக்கும் அவளால் ஒரு வாழ்க்கை அமைத்துத் தர முடியவில்லை. கலைகளைக் கற்பித்தாள்; அவற்றைக் கொண்டு உலகை மகிழ்விக்க அவள் விரும்பவில்லை. மகிழ்வைவிட 'அருளறம்' ஒன்று உள்ளது என்பதைக் கண்டு அதற்கு அவளை அர்ப்பணிக்கிறாள்.
காவியத்தில் அவளைச் சித்திராபதியின் மகள் என்று அறிமுகம் செய்யவே இல்லை; பெற்றோரால் அவளுக்குப் பெருமை வாய்க்கவில்லை; அவள் கலைச்செல்வம் பாராட்டப்படுகிறது. அதனால் அவள் ஊர்வசி வழி வந்தவள் என்று அறிமுகம் செய்யப்படுகிறாள்.
தனி மனித வாழ்வில் அவள் மதிக்கப்படவில்லை. ஆனால் பொது வாழ்வில் அரசனால் பாராட்டப்படு கிறாள். நிலத் தெய்வம் வியப்பு எய்துகிறது; நீள நிலத்தோர் மனம் மகிழ்கின்றனர். விஞ்சையரும் இங்கு வந்து அவள் ஆடல் கலையைக் கண்டு மகிழ்கின்றனர். விண்ணவரும் மறைந்து நின்று கண்டு மகிழ்கின்றனர்.
ஒருவனுக்குப் பசி; சோறு போடமுடியும்; வேட்கையையும் தணிவிக்க முடியும். ஆனால் காதற் பசிக்குத் தொடர்ந்து தீனி போடுவது என்பது அரிய செயல்; அவன் அவளிடம் எதிர் பார்ப்பது கவர்ச்சி. எப்பொழுதும் அவள் தன்னைக் கோலமொடு வைத்திருக்க நேர்கிறது.
அவன் அறிவுப் பசிக்கும் அவள் உணவு இட வேண்டியுள்ளது; அதற்கு மறுபெயர் ஊட்ல்; சுவைபடப் பேசுவது. மாறுபட்டு உரையாடுவது, தூண்டிவிடுவது. கிளர்ச்சி பெறச் செய்வது இதற்குத்தான் ஊடல் என்று பெயர் வழங்கினர். அவளால் அவனுக்கு அந்த விழைவினை ஏற்படுத்த முடிந்தது. தேன் உண்ட வண்டு என அவன் அங்கே சுற்றிக் கொண்டு மயங்கிக் கிடக்கிறான். விடுதல் அறியா விருப்பினன் ஆயினன் என்பார் கவிஞர்.
கலவியும் புலவியும் காதலனுக்கு அவள் அளித்து வருகிறாள். சுவைமிக்க வாழ்க்கைதான்; இன்பமே வாழ்க்கையின் குறிக்கோள் என்று வாழ்ந்தவர்கள் அவர்கள். அதற்குத் தடை ஏற்பட்டதும் முறிந்து விடுகிறது. அந்தத் தடை இங்கு ஏற்பட்டது அவமதிப்பு.
காதல் இன்பத்துக்குத் துணை செய்வது; ஒருவரை ஒருவர் விரும்புவது மட்டுமன்று; ஒருவரை ஒருவர் மதிப்பது. புகழ்ச்சியில் மயங்கிக் கிடந்த கோவலன் அவனால் இகழ்ச்சியைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை.
அச்சத்தின் காரணமாக அவள் சில கருத்துகளை வெளியிட்டு விடுகிறாள். அவன் உறவு நீடிக்குமா என்ற அச்சம் அவளுக்குத் தோன்றி இருக்க வேண்டும். பொதுவான நிலையில் வைத்து ஆடவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்லர் என்ற கருத்தைத் தெரிவித்து விடுகிறாள். இவள் பாடிய கானல் வரிப் பாடல்கள் அக் கருத்தை அறிவிக்கின்றன. மனம் முறிகிறது; உறவு அறுகிறது.
அந்த அச்சம் நியாயமானதுதான். அவன் அவளை அமைதிபடுத்துவதற்கு மாறாக அவசரப்பட்டு விடுகிறான். அவள் தன்னை நேசிக்கவில்லை என்று தவறாகக் கருதி விடுகிறான். அவளை விட்டுப் பிரிகிறான்.
உரிமைகள் அதற்காக எழுப்பப்படும் வினாக்கள் உறவுகளை முறித்து விடுகின்றன. கவர்ச்சியால் அவன் ஒன்றுபட்டவன்; அவள் அன்பை அவனால் உணர முடியாமல் போகிறது.
பிரிந்து சென்று விடுகிறான்; அவன்பால் உள்ள நேசத்தால் அவள் முடங்கல் எழுதி அனுப்புகிறாள்; அவன் தனக்குத் தேவை என்பதைத் துணிந்து தெரிவிக்கிறாள். அவனை மகிழ்விக்க அல்ல; தான் மகிழ்வு கொள்ள அவனை அழைக்கிறாள். இது அவன் இயல்புக்கு மாறுபட்ட நிலை. அவள் உணர்வை அவன் மதிக்கவில்லை.
அந்த அன்பை அவனால் விளங்கிக் கொள்ள இயல வில்லை. பிறகு அவள் தனிமைத் துயரில் வாடியதும், அதனால் வாழ்க்கையை வெறுத்து ஒதுங்கியதும் அறிந்த பிறகு தான் அவள் அன்பின் ஆழத்தை அறிகிறான். அவள் பாசத்தையும் நேசத்தையும் அறிகிறான். அவளுடைய மறுபக்கம் அவனுக்கு விளங்குகிறது. அவள் புறத் தோற்றத்தில் மயங்கியவன் இப்பொழுதுதான் அவள் மன இயல்பை அறிகிறான். அவள் தீதிலள்; தான் தீது உடையவன் என்று அறிவிக்கிறான்.
அவளுக்குத் தான் இழைத்த சிறுமைகளை உணர் கிறான். இதுவரை அவன் கண்ணகிக்குத்தான் தீங்கு இழைத்ததாகக் கருதி வந்தான். கோசிகன் கொண்டு வந்த கடிதம் படித்ததும் மாதவியின் அக அழகை அவனால் அறிய முடிகிறது. அவளையும் தான் வருத்தத்தில் ஆழ்த்தி விட்டதை அறிகிறான்.
அந்த முடங்கலில் அவன் பிரிவால் தான் அடைந்த தனிமையைப் பற்றியோ, துயரத்தைப் பற்றியோ கூறாமல் தன்னால் கண்ணகிக்கு நேர்ந்த கடுமையைப் பற்றியும், அவன் பெற்றோர்களுக்கு உற்ற துன்பத்தைப் பற்றியுமே எழுதி இருக்கிறாள். அவள் பெருமை அதனால் அவனுக்கு விளங்குகிறது . அவளும் தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி என்பதை அறிகிறான்.
பெண்கள் சூழ்நிலையில் அவர்கள் வேறுபட்டவர்களாகக் காணப்படலாம். நெஞ்சு அலைகளில் பண்பில் வேறுபாடு அற்றவர்கள்; மதிக்கத் தக்கவர்கள். அன்பின் உறைவிடம் என்பதை அவன் அறிகிறான்.
கண்ணகிக்கு நிகராக இவளும் மதிக்கத்தக்கவள் ஆகிறாள். சூழ்நிலைகள் அவர்கள் செயல்களில் மாற்றம் விளைவித்தன என்பதை அறிய முடிகிறது.
காதலித்து ஒருவனைக் கைப்பிடித்து அவனோடு கருத்து ஒத்து அவன் அன்பினைப் பெற்று மனநிறைவு பெற விரும்பினாள். அவள் அவனைக் காதலித்தாள். அவன் அவளைக காதலிக்கவில்லை . அது அவன் செய்த தவறு என்று சுட்டிக் காட்ட முன் வரவவில்லை. உண்மையில் அவன்தான் தவறு உடையவன் என்பது மறுக்க முடியாத ஒன்று.
ஒருவனோடு ஒருத்தியாக வாழ முயன்றாள்; அந்த உரிமைக்கு உறவாடினாள். அவள் தூக்கி எறியப்பட்டாள்.
அம்மியே கடுங்காற்றில் பறக்கும்போது குழவியைப் பற்றி யார் கவலைப்பட இருக்கிறார்கள்? சமய போதனைகள் அவளுக்குக் கைகொடுக்கின்றன. அருளறத்தில் அவள் அமைதி காண்கிறாள். தன் மகளைப் புதிய பாதையில் திருப்பிவிடுகிறாள். நோய்க்கு அவள் கண்ட மருந்து அது.