சிலம்பின் கதை/கனாத்திறம் உரைத்த காதை
(கனாத்திறம் உரைத்த காதை)
தேவந்தி அறிமுகம்
புகார்நகரம் மாலைப்பொழுது மங்கலமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது; வீடுகள் பொலிவுடன் விளங்கின. வீட்டு முற்றத்தில் பூவும் நெல்லும் தூவி அழகுபடுத்தினர். வீடுகளுக்கு விளக்கேற்றி வைத்தனர். அந்த மாலைப் பொழுது தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண் கண்ணகிக்கு ஆறுதல் கூறத் தொடங்கினாள்.
இந்தத் தேவந்தி வாழ்க்கைப்பட்ட வீடு ஒரு பின்னணியைக் கொண்டு இருந்தது. இவளை மணந்தது பாசாண்டச் சாத்தன் என்னும் தெய்வம்; அந்த வீட்டில் அத்தெய்வம் ஆகிய சாத்தன் வளர்ந்து வயதுக்கு வந்து உரிய வாலிபப்பருவத்தில் இவளைமணம் செய்து கொண்டான். இது விசித்திரமான கதை.
மாலதி என்பவள் ஒருத்தி தன் மாற்றாளின் குழந்தைக்குப் பால் ஊட்ட அது விக்கிச் செத்தது. அந்தப் பழி தன் மீது வரும் என்று அஞ்சி அவள் ஊரில் உள்ள பல கோயில்களுக்கும் சென்று அக்குழந்தையைக் கிடத்தி உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டினாள். பின்பு பாசண்டச் சாத்தனுக்கு உரிய கோயிலை அடைந்தாள். அங்கே அவள் வரம் வேண்டிப் பாடு கிடந்தாள்.
அங்கே இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய் ஒன்று வந்து, “தவம் செய்யாதவர்க்குத் தேவர்கள் வரம் தரமாட்டர்கள்” என்று கூறிச் செத்த குழந்தையைக் கையால் பற்றிச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று தன் வயிற்று அகத்து இட்டு விழுங்கி விட்டது.
உயிர் நீங்கிய உடலும் அடையாளத்துக்குக் கூட இல்லாமால் போய் விட்டது. இடி உண்ட மயில் போல் துடிதுடித்தாள், ஏங்கி அழுதாள்.
“அன்னையே நீ அழாதே” என்று கூறிப் பக்கத்தில் ஒரு சோலையில் கிடந்த ஒரு குழந்தையைக் காட்டி “எடுத்துச் செல்க” என்று அத்தெய்வம் கூறியது. பாசாண்டச் சாத்தனே அக்குழந்தை வடிவாகியது. மாற்றுக் குழந்தை கிடைத்தவுடன் அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்று தன் பழியைப் போக்கிக் கொண்டாள்.
அந்தக் குழந்தை வளர்ந்து கல்வி பெற்றுப் பெரியவன் ஆகி அந்தக் குடும்பத்துப் பொறுப்புகளை ஏற்று வாலிபன் ஆயினான். தாயத்தாரோடு சொத்து உரிமைக்கு வழக்குத் தொடுத்து அப்பெற்றோர்கள் மறைந்த பிறகு அவர்களுக்கு உரிய கடமைகளைச் செய்து மணமும் செய்து கொண்டான். தேவந்தி என்பாள் அவன் வாழ்க்கைத் துணைவியாயினாள்.
நாள்கள் சில நகர்ந்தன. அவளோடு நீடித்து வாழாமல் தான் தெய்வம் என்பதை அவளுக்கு உணர்த்தி “எம்முடைய கோயிலுக்கு நீ வா” என்று கூறிச் சென்றான்; ஊரவர்க்குப் பதில் கூற வேண்டும். தேசாந்திரம் சென்ற கணவன் திரும்பி வருவதற்காகத் தான் கோயில் சென்று வழிபடுவதாகக் கூறி வழிபாடுகள் மேற்கொண்டு வந்தாள்.
கண்ணகி கனவு
கண்ணகி தன் கணவனைப் பிரிந்து கவல்கின்றாள் என்பது அறிந்து அவளுக்கு ஆறுதல் கூற அவள் இல்லம் அடைந்தாள். பூவும் நெல்லும் தூவிக் கடவுளை வழிபட்டுக் கண்ணகி தன் கணவனை அடைவாளாக என்று வேண்டினாள். அதனை அவளுக்கு அறிவுறுத்தினாள். எப்படியும் கணவனை அடைவேன் என்று கண்ணகி தன் மன உறுதியைத் தெரிவித்தாள். அதனோடு தான் கண்ட கனவினை அவளுக்கு எடுத்து உரைத்தாள்.
“அந்தக் கனவினை நினைத்தாலே என் நெஞ்சம் நடுங்குகின்றது. என் கணவன் என் கையைப் பிடித்துப் புதிய ஊருக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே பழிச் சொல் ஒன்று கூறினர். தேளைத் தூக்கி எங்கள் மேல் போட்டது போல் அது இருந்தது. அதனைத் தொடர்ந்து கோவலனுக்கு ஒரு தீங்கு நிகழ்ந்ததால் அது கேட்டுக் காவலன் முன் சென்று வழக்காட அதனைத் தொடர்ந்து அந்நகரும் அரசனும் அழிவு பெற்றனர். அதன் பின் உயிர் துறந்த என் தலைவன் உயிர் பெற்று என்னைச் சந்தித்துப் பேசினார். இதனை நீ நம்பமாட்டாய்; சிரித்துப் பொய் என்று கூறுவாய்; இது யான் கண்ட கனவு ஆகும்” என்று உரைத்தாள்.
தேவந்தியின் அறிவுரை
அதனைக் கேட்ட தேவந்தி, “உன் கணவன் உன்னை வெறுக்கவில்லை. சென்ற பிறவியில் நீ உன் கணவனுக்காகச் செய்ய வேண்டிய நோன்பினைச் செய்யாமல் விட்டு விட்டாய். அதனை இப்பொழுது நீக்குக. கடலொடு காவிரி கலக்கும் சங்கமத்துறையில் நெய்தல் மணக்கும் கானலில் சோமகுண்டம் சூரிய குண்டம் என்னும் நீர்த்தடங்கள் உள்ளன. அந்நீர்த் துறைகளில் முழுகிக் காமவேள் ஆகிய மன்மதன் கோயில் சென்று தொழுதால் இந்த உலகத்தில் பெண்கள் கணவனோடு இன்புற்று வாழ்வர்; அடுத்த பிறவியிலும் இருவரும் போகம் செய் பொன்னுலகில் சென்று பிறப்பர். நாம் இருவரும் சென்று நீராடுவோம்” என்று கூறினாள்.
அவள் உரைத்த உரைகள் அனைத்தும் செவி கொடுத்துக் கேட்ட கண்ணகி ஒரே சொல்லில் தக்க விடை தந்து அவள் வாயை அடக்கினாள். “பீடு அன்று” என்று கூறி அவளை அனுப்பி வைத்தாள்.
அதன்பின் ஏவற்பெண் ஒருத்தி யாரோ வருகிறார்கள் என்பது அறிந்து கடைத்தலை சென்று பார்த்தாள். வந்தவன் காவலன் என்று குறிப்பிட்டாள். அந்த வீட்டுத் தலைவன் என்பதை அறிவித்தாள்.
கோவலனும் நேரே வந்து அவள் பெருமைமிக்க பள்ளியறைக்குச் சென்று அவளைப் பார்த்தான்; வாடிய மேனிகண்டு வருத்தம் அடைந்தான்; அவன் அவளோடு உரையாடிய சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருந்தன. “வஞ்சனை மிக்க ஒருத்தியின் வலையில் அகப்பட்டுக் குலம் தந்த செல்வத்தை எல்லாம் தொலைத்து விட்டேன். குன்று போன்ற செல்வம் அது குன்றி விட்டது; இப்பொழுது வறுமை வந்து உள்ளது. இலம்பாடு அது எனக்கு நாணத்தைத் தருகிறது” என்று அவளிடம் தன் மனநிலையைத் தெரிவித்தான்; செறிவு மிக்க சொற்களைக் கேட்டு அறிவு மிக்க கண்ணகி நலம்திகழ் முறுவல் நகைமுகம் காட்டிச் “சிலம்பு உள கொள்க” என்றாள். இச் சொற்கள் அவனுக்கு எழுச்சி தந்தன. அவன் சிந்தனை சீர்பெற்றுப் பறந்தது. அவளோடு கலந்து உரையாடி அவள் கூறும் கருத்துக்கு அவன் காத்திருந்தான். “இழந்த பொருளை ஈட்டுதல் வேண்டும், இந்தச் சிலம்பினை முதற் பொருளாகக் கொண்டு நகைகள் செல்வம் அனைத்தையும் மீட்பேன்” என்றான். அதோடு அவன் நிறுத்திக் கொள்ளவில்லை. மாடமதுரைக்குச் சென்று வாணிபம் செய்யும் கருத்தை அறிவித்தான்.
அதனோடு அவன் அமையவில்லை. அவளையும் ‘உடன் வருக’ என்று அழைத்தான். இவ்வளவு விரைவாக முடிவு செய்தது வியப்பாகத்தான் உள்ளது. அவன் என்ன செய்வான்? ஊழ்வினை அவனை ஆட்டுவித்தது. இருள் நீங்கிய விடியற்பொழுதில் அருமனை விட்டு அகன்றான்.
கண்ணகியுடன் அவன் புறப்பட்டான். மாதவி அவன் காலை வருவான் என்று கூறியது பழுது ஆகிவிட்டது. யார் இதை எதிர்பார்த்தார்கள்? நம்பிக்கை அவளைப் பொறுத்த வரை தளர்ந்தது. அவள் வாழ்க்கை சோகத்தில் ஆழ்ந்தது. துன்பம் அவளைப் பற்றியது.