சிலம்பின் கதை/நாடு காண் காதை
(நாடு காண் காதை)
வெளியே எழுதல்
கதிரவன் எழுவதற்கு முன் விடியற்காலையில் இருவரும் எழுந்து புறப்பட்டனர். அவர்கள் விரும்பியா புறப்பட்டனர்? இல்லை; ஊழ்வினை அவர்களை இயக்கியது. அவர்கள் வாழ்வினை மாற்றியமைத்தது.
வீட்டை விட்டு வெளியேறினர். நீண்ட கதவினை உடைய பெருவாயில்; மாபெரும் மாளிகை, மற்றும் கதவை மூடினர்; அதன் சிற்ப வேலைப்பாடுகள் பொற்புடன் திகழ்ந்தன. மறக்க முடியாத ஓவியங்கள்; ஆட்டுக்கிடாய், கவரிமான்; அன்னப்பறவை இம்மூன்றும் முற்றத்தில் நட்புடன் திரிந்து கொண்டிருந்தன. பலமுறை அவற்றைப் பார்த்து மகிழ்ந்தவர்கள் அவர்கள்; அவற்றை விட்டு வர மனம் இயையவில்லை; மறுபடியும் அவற்றைப் பார்த்துவிட்டு அகன்றனர்.
வீட்டுமுன் நீண்ட வழிப்பாதை, அதனை நெடுங்கழி என்றனர். அதனைக் கடந்து ஊர்ப்புறத்தை அடைந்தனர். அங்கே அவர்கள் திருமாலின் திருக்கோயிலைக் கடந்தவராகி அதன் வலப்பக்கம் சென்றனர். அடுத்தது புத்தபள்ளி; அங்கே அந்தரத்திலிருந்து முனிவர்கள் வந்து தங்கி அறிவு உபதேசம் செய்வது வழக்கம். அதனைக் கடந்து அடுத்து இருந்த சமணர் சிலாதலத்தையும் கண்டவராகி அதனையும் கடந்தனர். அதன் பின் ஊருக்கு வெளியே இருந்த பெருவழி; அதன் வழியே நடந்து இலவந்திகை என்னும் சோலையின் வழியே சென்று, காவிரியின் வடக்குப் பக்கம் கவுந்தி அடிகள் தங்கி இருந்த சமணப் பள்ளியை அடைந்தனர். அப்பள்ளியின் மதிற்புறத்தில் சிறிது தங்கி ஓய்வு எடுத்தனர். காவதம் தூரமே அவர்கள் கடந்தனர். அதற்குள் கண்ணகி களைப்புற்றாள். இன்னும் சிறிது தூரத்திலேயே மதுரை இருக்கும் என்று அவள் எண்ணிச் சிரித்துக் கொண்டே, “மதுரை முதூர் எங்கே உள்ளது” என்று விளித்துக் கேட்டாள். அனுபவமில்லாத பெண்; மெல்லிய சொற்கள்; அவனும் “காவதம் முப்பதுதான்” என்று மிக எளிதாக எடுத்து உரைத்தான். மிகவும் அருகிலேயே உள்ளது என்று அவளுக்குச் சிரமம் தோன்றாது இருக்கக் கூறினான். முரண்சுவை அமைந்த உரையாடல் அவர்களுக்கு அயர்வு சிறிது போக்கியது. கவுந்தி அடிகள் சந்திப்பு
அவர்களுக்குப் பேச்சுத்துணை தேவைப்பட்டது. அவர்கள் முதன் முதலில் சந்தித்தவர் கவுந்தி அடிகள்; அவர் ஒரு சமணத்துறவி, அவர்கள் தங்கி இருந்த பள்ளி இருந்தது. அவரைக் கண்டு வணங்கித் தொழுதனர்.
இவர்கள் தோற்றம் அவர்கள் ஏற்றத்தைக் காட்டியது. அவர்கள் சீலமும், இறைப்பற்றும் உடையவர்கள் என்பதைக் கவுந்தி அடிகளால் அறிய முடிந்தது. ‘உருவும், குலனும், உயர்பேர் ஒழுக்கமும், பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையவர் என்பதை எடுத்துக் கூறி உற்ற துயர் யாது’ என்று வினவினார். வீட்டை விட்டு வெளியேறக் காரணம் யாது என்பது அவர் கேட்ட கேள்வியாக அமைந்தது.
கோவலனும் தான் யார்? ஏன் இங்குவந்தான்? இந்தப் பழங்கதைகளைப் பேசாமல் “பொருள் ஈட்டுதற்கு” என்று சுருக்கமாகக் கூறினான். அவர்கள் மன உறுதியைக் கண்டு தெளிந்த கவுந்தி அடிகள் அவர்கள் வழிப்பயணத்தைத் தடுத்து நிறுத்த முயலவில்லை: அவரவர் போக்குகளை அவரவரே வகுப்பது தக்கது; மற்றவர்கள் இடைநின்று தடுப்பது தவறு என்பதை நன்கு அறிந்தவராகிய கவுந்தி அடிகள் அவர்கள் செல்வது மதுரை என்பதை அறிந்தார்.
அவருக்கும் நீண்ட நாள் வேட்கை; தென்தமிழ் நாட்டுத் தீதுதீர் மதுரைக்குச் செல்லவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அங்கே சமணநெறி பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவல் கொண்டிருந்தார். அறிஞர்கள் உரைகளைக் கேட்டு அறியும் ஆவல் தனக்கு உள்ளதாகக் கூறித் தானும் உடன் வருவதாக உரைத்தார்.
பழம் நழுவிப் பாலில் விழுந்தது. தேனினும் இனிதாக அச்சொற்கள் கோவலனுக்கு இசைத்தன. “அடிகளே! நீரும் வருவதாயின் கண்ணகியின் கடுந்துயர் தீர்ந்தது. தக்க துணை எங்களுக்குக் கிடைத்தது” என்று பதில் உரைத்தான். கவுந்தி அடிகளும் உடன் புறப்பட உடன்பட்டார்.
வழிகளைக் கூறுதல்
அறிவுமிக்கவர்; மதுரை பற்றி நன்கு அறிந்தவர்; போகும் வழிகளையும் அறிந்து வைத்தவர்; அதனால் கவுந்தியடிகள் வழியின் அருமையைத் தான் தெரிந்த அளவு அவர்களுக்கு உரைத்தார். செல்வதற்கு உரிய வழிகள் இரண்டு; சோலை வழியே செல்வது; மற்றொன்று வயல் வழியே செல்வது; இரண்டிலும் உள்ள தடைகள், இடையூறுகள் எவை என்பதை எடுத்துக் கூறினார்.
“வெய்யிலின் கொடுமை தீரச் சோலை வழியே செல்வது தக்கதுதான்; என்றாலும் அவ்வழியில் குறைகள் உள; அவற்றையும் அறிவீராக” என்றார்.
“கிழங்குகளை அகழ்ந்து எடுத்துக் குழிகள் உண்டாக்குவர். அடுத்துள்ள செண்பக மரங்கள் தம் பூக்கள் அவற்றின் மீது படிய அவற்றை மறைத்துவிடும். பூக்கள் தானே என்று அடி எடுத்து வைத்தால் குழிகள் அவை; விழுந்தால் எழுவது அரிது, சரி, அவற்றையும் கணித்து அணித்து உள்ள பலாமரங்கள் செறிந்த பாதை சென்றால் அதன் கனிகள் நடப்பாரின் தலைகளை முட்டும். அவற்றை விலக்கி மஞ்சளும் இஞ்சியும் மயங்கிக் கிடக்கும் பாத்திகளில் சென்றால் அங்கே பலாவின் கொட்டைகள் கூழாங்கல் போல் தடுத்து உறுத்தும்.
சோலைவழி அதனைத் தவிர்த்து வேறுவயல் வழிதேடுவோம் என்றால் நிழல் தரும் மரங்கள் இல்லாத பாதை; எங்கும் வயல்கள்; அங்கே குவளைகள் பூக்கும் நீர்நிலைகள். அவற்றில் உள்ள வாளைமீனைக் கவ்வ நீர்நாய் செல்லும்; அவற்றினின்று தப்ப அவ்வாளைகள் நடக்கும் பாதையில் துள்ளி வந்து விழும்; அதனைக் கண்டு இந்த மெல்லியலாள் திடுக்கிடக் கூடும். தீமை நிகழாது; எனினும் அதைக் கண்டு கண்ணகி அஞ்சும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கரும்பில் விளைந்த தேன் சாறு அடுத்து உள்ள பொய்கையைச் சாரும்; நீர் என்று அள்ளிக் குடித்தால் அது கரும்பின் சாறு ஆகலின் அது மயக்கத்தைத் தரக் கூடும்; அதனால் கண்ணகி வருந்த நேரிடும்; மற்றும் கருவிளை மலர்களைக் களைபறிப்பார் அவற்றை வழியில் போடுவர்; அவற்றில் வண்டுகள் மொய்க்கும்; கருவிளை மலர்தானே என்று காலடி வைத்தால் வண்டுகள் நசுங்கி வருந்தும்; நண்டும் நந்தும் காலடிகளில் நசுங்கிச் சாதலும் கூடும்; உயிர்களுக்கு ஊறு செய்யும் இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்று வயல் வழியில் உள்ள குறைகளை எடுத்துக் கூறினார்.
முவரும் மதுரை ஏகுதல்
சோலையா வயலா அவர்கள் சிந்தனைக்கு விட்டு விட்டுக் கவுந்தியடிகள் பயணத்துக்குப் புறப்பட்டார். கட்டுச் சோறும் பெட்டிப் படுக்கையுமா எடுத்துச் செல்ல முடியும்? தோளில் தொங்கவிட்ட உறி; அதில் ஒரு சோறு உண்ணும் பிச்சைப் பாத்திரம்; மற்றும் கையில் ஒரு மயிற் பீலி; உயிர்களுக்கு ஊறு நிகழாதபடி தடுக்க அந்த மயிற்பீலி; துறவிக்கு இவையே சொத்துகள்; இவற்றை ஏந்திய நிலையில் அவர்களோடு கவுந்தியடிகள் புறப்பட்டார்.
வழிநடைக் காட்சிகள்
காவிரிக் கரையில் அவர்கள் பயணம் தொடர்ந்தது; அவர்கள் சென்ற வழி வயல்கள் மிக்கு உள்ள வெளிகளே ஆகியது; உழவர்கள் எழுப்பிய ஓசை அவர்களை மகிழ்வித்தது; காவிரி நீர் இடையறாது சென்று கொண்டிருந்தது. அதன் சலசலப்பு அவர்களுக்குக் கலகலப்பைத் தந்தது. நீர் இறைக்க அவ் உழவர்கள் ஏற்றங்களையும், நீர்க் கூடைகளையும் தேடவில்லை; ஆற்றுநீர் வாய்க்கால் வழி ஓடி வயல்களில் பாய்ந்தது. அதன் ஒலி செவிக்கு இனிமை தந்தது. வயல்களில் செந்நெல்லும், செங்கரும்பும் செழித்து வளர்ந்தன. இவ்வயல்களை அடுத்த கயங்களில் தாமரைகள் பூத்து விளங்கின. அத்தடங்களிலும், அடுத்துள்ள சோலைகளிலும் நீர்ப் பறவைகள் பல குரல் எழுப்பின. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை கம்புள் கோழி, நாரை, அன்னம், கொக்கு, காட்டுக்கோழி, நீர்க்காக்கை, உள்ளான், ஊரல், புள், புதா மற்றும் நீர்ப்பறவைகள் பல ஆகும். இவை கூடி எழுப்பிய குரல் போர்க் களத்து வீரர்கள் எழுப்பும் பல்வேறு வகை ஒலிகளாகக் கலந்து ஒலித்தது. அங்கே என்ன? அது போர்க்களாமா? வியத்தகு காட்சியாக இருந்தது; பேரிரைச்சல் கேட்பதற்கு இனிதாக விளங்கியது.
உழவர்கள் இல்லங்கள் அங்கங்கே அவர்கள் எழுப்பிய ஆரவார ஒலிகள் கேட்பதற்கு இனிமை தந்தது. சேற்றில் புரண்டு எழுந்த எருமை தன் தினவைப் போக்கிக் கொள்ள நெற் கூடுகளில் வந்து உராய அக்கூடுகளில் கொட்டி வைத்த தானிய வகைகள் நெற்கதிர்களில் சிந்த அந்தக் காட்சியைக் கண்டு கைவினைத் தொழிலரும், உழவர் பெருமக்களும் உவகை கொண்டு ஆரவாரித்தனர். அது இன்ப ஒலியாக இசைத்தது.
உழத்தியர்கள் வயல்களத்தில் புகுந்து களை பறித்தனர்; நாற்று நட்டனர்; சேறுபடிந்த கோலம் அவர்களை வேறுபடுத்திக் காட்டியது. உழைத்த களைப்புத் தீரத் தழைத்த கள்ளைப் பருகிக் களி மகிழ்வு கொண்டு புதுப் புதுப்பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர். அம்மகிழ்வுப் பாடல்கள் கேட்போரை மயங்க வைத்தன. இந்தப் புதுமை கண்டு அவர்கள் புதுமகிழ்வு கண்டனர்.
உழுகின்ற கலப்பைக்குப் பூக்கள் சூட்டி வழிபட்டுப் பின் அதனைக் கொண்டு நிலத்தை உழுதனர்; அவர்கள் எக்களிப்புக் கொண்டு பாடிய பாடல் ‘ஏர் மங்கலம்’ எனப்பட்டது. அரிந்து குவித்துக் கடாவினைவிட்டு அதரி திரித்து நெல்லை முறம் கொண்டு தூற்றியபோது பாடிய பாட்டு ‘முகவைப் பாட்டு’ எனப்பட்டது. கிணைப் பொருநர் முழவு கொண்டு எழுப்பியது ‘கிணை இசை’ எனப்பட்டது. இம்மூவகைப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே வழிநடை வருத்தம் தெரியாமல் நடந்து சென்றனர்.
வழியில் பல ஊர்களைக் கடந்து சென்றனர். மறையவர்கள் வேள்விகள் எழுப்பிய புகை, உழவர்கள் கரும்பு ஆலைகளில் மூட்டிய தீயில் தோன்றிய புகை வானத்தை மூடின; அவை மலை தவழும் மேகம் எனக் கவிழ்ந்திருந்தன; இத்தகைய அந்தணர்கள் இருக்கைகளும், உழவர்கள் இல்லங்களும் உடைய ஊர்கள் பலவற்றைக் கடந்து சென்றனர். நாள் ஒன்றுக்கு ஒரு கர்வதமே அவர்களால் கடக்க முடிந்தது. அங்கங்கே இருள் கவ்வும் நேரங்களில் சோலைகளில் தங்கி ஓய்வு பெற்றனர்; களைப்பு ஆறினர்.
ஊர்கள் பல கடந்தவர் திருவரங்கத்தை அடுத்த ஒரு சோலையில் தங்கினர். அங்கே உலக நோன்பிகள் இட்ட சிலாதலம் ஒன்று இருந்தது; பட்டினப்பாக்கத்து உயர்குடி மக்கள் அமைத்த சிலாதலம் அதுவாகும். அங்கே அறிவும், ஞானமும் மிக்க சமணர் தலைவர்கள் வந்து தங்குவது உண்டு; அவர்களைச் சாரணர் என்று குறிப்பிட்டனர். அவர்கள் மத குரு ஆவார்கள்.
இம்மூவரும் சென்றபோது சாரணர் ஒருவர் அங்கு வந்து அந்தச் சிலாதலத்தில் அமர்ந்திருந்தார். அவர் சமண மத குருவாகக் கருதப்பட்டவர். இவர் விண்வழியே வந்து மண்ணகத்து ஆங்காங்கு இருந்து அருள் செய்தார்; அது அவர் அரும்பணியாக இருந்தது.
சாரணர் பெருமகனாரைக் கண்ட இம்மூவரும் அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினர். இம்மூவரைக் கண்ட அச்சாரணர் இவர்கள் சோகக் கதைகளைக் கேட்க முற்படவில்லை; கண்டதும் இவர்கள் நிலை யாது என்பதை அறிந்த ஞானி அவர்; இத்துயரங்களை நேரிடை களைய முற்படவில்லை.
அவரவர்கள் தம் வினைகளுக்கு ஏற்ப விளைவுகளை அடைவது இயல்பு என்பதை நன்கு அறிந்தவராகத் திகழ்ந்தார். அவர் விருப்பு வெறுப்பு அற்ற மனநிலை கொண்டவர் ஆதலின் இவர்களைக் கண்டு எந்த வருத்தமும் கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை.
அவர் கவுந்தி அடிகளுக்கு அறவுரை கூறினார். மூன்று பேருண்மைகளை அவர் கவுந்தி அடிகளுக்கு உரைத்து அருள் செய்தார். “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்றும், “வாழ்க்கை நிலையற்றது” என்றும், “பிறப்பு அறுக்க அருகன் திருவடி வணங்க வேண்டும்” என்றும் அறவுரை கூறினார்.
கவுந்தி அடிகள் பெருமகிழ்வு கொண்டு இறைப் பேரருளை வியந்து போற்றினார். அருகனைப் புகழ்ந்து பேசினார். அருகனின் திருநாமங்களைச் சொல்லி வாழ்த்தினார். சாரணர் பெருமகனார் அவருக்குப் ‘பிறவி நீங்குக; பாசம் அறுக” என்று ஆசி கூறி அச்சிலாதலம் விட்டு எழுந்து ஏகினார். அங்கே ஒரு வியத்தகு காட்சி நிகழ்ந்தது. அவர் அந்தரத்தில் சிலாதலத்துக்கு மேல் ஒரு முழம் உயர நின்றார். அது புதுமைமிக்கதாக இருந்தது. அதன்பின் அவர் விண்ணில் உயர்ந்து வான்வழிச் சென்று மறைந்தார். ஏனைய இருவரும் அச்சாரணரைத் தொழுது வணங்கினர். தம் பிறவிப் பிணியும் தீர்க என வேண்டிக் கொண்டனர்.
அதன் பின் காவிரி நீர்த் துறையை அடுத்துப் பூவிரிசோலை ஒன்றில் தங்கினர்; அங்கு அவ்விருவரும் களைத்து அயர்ந்து இருந்தனர். அயலில் கவுந்தி அடிகள் துணை இருந்தனர்.
இளங் காதலர்கள் இவர்கள் காமனும் ரதியுமாகப் புதியவர்களுக்குக் காட்சி அளித்தனர். பரத்தை ஒருத்தியும், அவள் காதலன் வெற்றுரையாளன் ஒருவனும் அவ்வழியே வந்தனர்; அவர்கள் விழிகளில் இவர்கள் பட்டனர். இவர்கள் பேரழகில் மயங்கிய அவர்கள், “இவர்கள் யார்?” என்று அந்த முதிய தவமாதினைக் கேட்டனர். “மக்கள் காணீர்! மிக்க துயரமுற்றனர்; அவர்களை விட்டு விலகுவீர்” என்றார்.
“மக்கள்” என்றால் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர் என்ற பொருளில் எடுத்துக் கொண்டு “ஒரு தாய் வயிற்றுப் பிறந்தவர் காதல் செய்வதும் உண்டோ?” என்று எள்ளி நகையாடினர். இதனைத் தாங்காது கவுந்தி அடிகள் வெகுண்டு அவர்களைச் சபித்தார். எள்ளிப் பேசிய அவர் களை “முள்ளுடைக் காட்டில் முதுநரியாகுக” என்று சாபமிட்டார்.
அவர்கள் நரிகளாக மாறி ஊளையிட்டனர். இந்த மாற்றத்தைக் கண்டு கோவலனும் கண்ணகியும் திடுக்கிட்டனர். பெருமை மிக்க கோவலனும் கண்ணகியும் அஞ்சி இரக்கம் கொண்டு அவர்களுக்காகப் பரிந்து பேசினர். “நெறியில் நீங்கியவர்கள் அறியாமையால் இழைத்த தவறுகள் இவை அவர்கள் பிழைத்துப் போவது தக்கது: அவர்களை மன்னிக்கவும்” என்று வேண்டினா்.
“யாண்டு ஒன்று அவர்கள் உறையூரினை அடுத்த காட்டில் உறைவர்; பின் அவர்கள் தன் பழைய உரு பெறுவர்” என்று கூறி அவர்கள் சாபத்தை மாற்றினார். அதன்பின் இவர்கள் தாம் தங்கி இருந்த சோலையை விட்டுச் சோழர் தம் தலைநகராகிய உறந்தையை அடைந்தனர். அவ் உறையூருக்குக் ‘கோழியூர்’ என்ற பெயரும் அக்காலத்தில் வழங்கியது. அதற்கு ஒரு கதை பின்னணியாக விளங்கியது. யானையை ஒரு சேவற் கோழி வென்றது என்று கூறப்படுகிறது. வீரத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியது; திருவரங்கத்தை அடுத்து அவர்கள் உறையூர் போய்ச் சேர்ந்தனர். அது சோழ நாட்டின் தென் எல்லையாக இருந்தது.