சிலம்பு பிறந்த கதை/துறவரசர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
2. துறவரசர்

பெரும் பயணமும் சிறு பயணமும் நிறைவேறிய பிறகு இளங்கோ வஞ்சிமா நகரை அடைந்தார். தாம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் தம் தந்தைக்கும் தமையனுக்கும் விரித்துரைத்தார். தமிழ்ப் புலவராகிய சாத்தனாரை ஒரு முறை வருவித்துச் சிறப்புச் செய்ய வேண்டும் என்ற தம் விருப்பத்தையும் தெரிவித்தார்.

அவர் விருப்பப்படியே சாத்தனாரை அரசன் அழைத்துவரச் செய்தான். அவருடைய புலமையை உணர்ந்து பாராட்டிப் பரிசு அளித்தான். சாத்தனாரோடு செங்குட்டுவன் நன்றாகப் பழகினான். “அடிக்கடி இங்கே வரவேண்டும்” என்று வேண்டிக்கொண்டான். இளங்கோ, ‘இனி என் பொருட்டாக வர மறந்தாலும் என் தமையனாருக்காகவாவது வரவேண்டும்’ என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தார். ‘இரண்டு பேருக்காகவும் வருவேன்; உண்மையைச் சொல்லப் போனால் எனக்காகவே வருவேன். வருவதால் எனக்குத் தானே இலாபம்?’ என்றார் சாத்தனார்.

ஒரு நாள் நெடுஞ்சேரலாதன் திரு ஓலக்கத்தில் இருந்தான்; சிங்காதனத்தில் அமர்ந்திருந்தான். அமைச்சர், படைத் தலைவர், நியாய சபைத் தலைவர், நகரத்திற் பெரியவர்கள், புலவர்கள் முதலிய பலர் அங்கே இருந்தார்கள். அரசனுடைய வலப் பக்கம் ஒரு சிறிய பொன் ஆதனத்தில் இளவரசன் செங்குட்டுவன் வீற்றிருந்தான். இடப் பக்கம் வேறு தனியாசனத்தில் பெருநம்பி இளங்கோ அமர்ந்திருந்தார். இரு பக்கமும் மன்னனுக்கு இரண்டு மங்கையர் கவரி வீசிக் கொண்டிருந்தனர்.

அப்போது வாயில் காவலன் வந்து நெடுஞ்சேரலாதனை வணங்கி, “மன்னர்பிரான் வாழ்க!” என்று சொல்லி நின்றான்.

“என்ன செய்தி ?” என்று கேட்டான் அரசன்.

“யாரோ சோதிடராம். பல மன்னர்களைக் கண்டு சோதிடம் கூறிப் பரிசு பெற்றவராம். மன்னர் பெருமானைக் காண வேண்டுமென்று சொல்லுகிறார்” என்று பணிவுடன் வாயிலோன் சொன்னான்.

“அப்படியா? அவரை உள்ளே அனுப்பு” என்று அரசன் பணித்தான்.

“மன்னர்பிரான் வெல்க!” என்று சொல்லிச் சென்ற வாயிலோன், சிறிது நேரத்தில் அந்தச் சோதிடரைக் கொண்டுவந்து விட்டுத் தன் இடம் சென்றான்.

வந்த சோதிடர் மன்னனை வணங்கித் தாம் கொணர்ந்த பழத்தைக் கையுறையாகக் கொடுத்தார்; பணிவாக நின்றுகொண்டிருந்தார்.

“நீர் சோதிடரா?” என்று கேட்டான் மன்னன்.

“ஆம்” என்றார் அவர்.

“உமக்கு எந்த நாடு ?”

“சோழநாடு.”

“அப்படியே அந்த ஆசனத்தில் அமரும்” என்று சொல்லி ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டினான் சேர மன்னன். சோதிடர் அதில் உட்கார்ந்து கொண்டார்.

“ நீர் எப்படிச் சோதிடம் பார்ப்பீர்? பிறந்த நாள், பொழுது முதலியவற்றைச் சொன்னால் சாதகம் கணித்துப் பார்த்துப் பலன் சொல்வீரா? கை இரேகைகளைப் பார்த்துச் சொல்வீரா?’ என்று மன்னன் கேட்டான்.

“அவற்றையும் பார்ப்பேன். அவற்றைப் பாராமலே உடற்கூற்றைப் பார்த்தே பலன் சொல்வேன்” என்றார் சோதிடர்.

“என்ன என்ன பொருளைச் சொல்வீர்?” என்று கேட்டான் அரசன்.

சோதிடர்: எதைக் கேட்டாலும் சொல்வேன். பிள்ளைகள் இத்தனை என்று சொல்வேன்; மனைவிமார் இத்தனை பேர் என்று சொல்வேன். போனதையும் சொல்வேன்; வருவதையும் சொல்வேன்.

அரசன்: ஒருவருக்கு இத்தனை ஆயுள் என்று வரையறையாகச் சொல்வது அரிது என்கிறார்களே! நீர் திட்டமாகச் சொல்வீரா?

சோதிடர்: ஓ! உறுதியாகச் சொல்வேன்.

அரசன் : அப்படியானால் என்னைப் பார்த்து ஏதாவது சொல்லும்; பார்க்கலாம்.

சோதிடர்: அரசனை அடிமுதல் முடிவரையில் நோக்கினர். அங்கே இருந்த அத்தனை பேரும் அவர் என்ன சொல்லப்போகிறாரோ என்ற ஆவலுடன் அவர் வாயையே பார்த்துக்கொண்டிருந்தனர். அரசனை நன்றாகப் பார்த்த சோதிடர், “மன்னர் பெருமானுக்கு எதைப்பற்றிச் சொல்ல வேண்டும்?” என்றார்.

அரசன் : இன்னும் எத்தனை காலம் நான் இவ்வுலகில் வாழ்வேன்?

இந்தக் கேள்வியைக் கேட்டதும் அருகில் இருந்த அமைச்சர் முதலியவர்களுக் கெல்லாம் வயிறு பகீரென்றது. சோதிடர் சிறிது தயங்கினார்.

அரசன்: சிறிதும் கவலைப்படாமல் சொல்லும். என்றைக்காவது ஒரு நாள் நான் உலகத்திலிருந்து விடைபெற வேண்டியவன்தானே? ஆகையால், இன்னும் எவ்வளவு ஆண்டுகள் இருப்பேன் என்பதைச் சொன்னால் தெரிந்து கொள்கிறேன். நீர் ஒளிக்காமல் உண்மையைச் சொல்ல வேண்டும். என் சாவு அணிமையில் இருக்குமானால் அதைச் சிறிதும் அஞ்சாமல் சொல்லும். உண்மை எதுவானாலும் கேட்கச் சித்தனாக இருக்கிறேன்.

சோதிடர்: மன்னர்பிரான் திருவுள்ளப்படியே சொல்வதில் தடை இல்லை. ஆனால் அதைத் தெரிந்து கொண்டு மன்னர் பெருமான் செய்யப் போவது ஒன்றும் இல்லையே!

அரசன்: எத்தனையோ இருக்கின்றன. போகும் இடத்துக்கு ஏற்ற துணையைத் தேடிக்கொள்ள வேண்டாமா?

சோதிடர்: மறுபடியும் அரசனுடைய உடம்பு முழுவதையும் உற்றுநோக்கி, “நான் நல்ல செய்தியைச் சொல்லவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். ஆனால் உண்மையைத் தானே சொல்லவேண்டும்?” என்றார்.

அரசன் : சுற்றி வளைத்துப் பேசாதீர். நேரே உண்மையை ஒளியாமல் சொல்லிவிடும்.

சோதிடன் : இன்னும் சில மாதங்களில் மன்னர் பெருமானுக்குப் பொன்னுலகு சென்று தேவர் போற்ற வாழும் வாழ்வு கிடைக்கும் என்று தோன்றுகிறது.

அருகில் இருந்தவர்கள் தம்மை அறியாமலே ‘ஆ!’ என்று கூவினார்கள். சோதிடர், ‘ஏனடா இதைச் சொன்னோம்!’ என்று வருந்தினார்.

அரசனோ, “நல்லது; இறைவன் திருவுள்ளம் அதுவானால் அதை ஏற்றுக்கொள்வதுதானே அறிவாளிகளுக்கு அழகு?” என்றான். தொடர்ந்து, “என் நிலையை உணர்ந்தேன். என் மக்கள் நிலையையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இதோ இருக்கும் இரண்டு பேர்களும் என் புதல்வர்கள். இவர்களைப்பற்றி ஏதாவது சொல்லும்” என்று கேட்டுக்கொண்டான்.

சோதிடருடைய கண்பார்வை இளங்கோவின்மே விழுந்தது. அரசனுக்கு வலப்பக்கத்தில் இருந்தவர்களோடு சோதிடர் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரில் இடப்பக்கத்தில் முன்னாலே இளங்கோ வீற்றிருந்தார். ஆதலின் அவரையே முதலில் பார்த்தார்; மேலும் கீழும் பார்த்தார். பிறகு, “இவருடைய அங்க அடையாளங்களைக் கண்டால் இவரே மன்னர்பிரானுக்குப் பிறகு இந்தச் சிங்காதனம் ஏறும் பேறு பெற்றவர் என்று தெரிகிறது” என்றார்.

இதைக் கேட்ட யாவரும் இரண்டாம் முறை திடுக்கிட்டனர். 'சோதிடர் யார் மூத்த புதல்வர் என்று தெரியாமல் சொல்லிவிட்டாரோ? அல்லது இரண்டாம் புதல்வர் என்று தெரிந்தும் நடக்கப்போவதை ஒளிக்காமல் சொன்னாரோ?'-அவர்களுக்கு இவ்வாறு சிந்தனை ஓடிற்று.

"இவனையா சொல்கிறீர்?" என்று அரசன் இளங்கோவைக் கையால் சுட்டிக் காட்டியபடியே கேட்டான்.

“ஆம், இந்த இளைஞரைத்தான் சொல்கிறேன். வருங்கால மன்னர் இவர்" என்று வற்புறுத்திச் சொன்னார் சோதிடர்.

மற்றவர்கள் யாவரும் கலக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். அரசனும் சற்றே, திகைப்படைந்தான். செங்குட்டுவன் எப்படி இருந்தான்? அவன் கண்கள் சிவந்தன, உடம்பு பதறியது. இப்போதே தன்னோடு தன் தம்பி போரிட்டுத் தோல்வியடையச் செய்து, சிங்காதனம் ஏறியதாக எண்ணிவிட்டானே என்னவோ? அவன் தன் தந்தையை நோக்கினான். அவனுடைய பார்வை, ‘என்ன இது? நீங்கள் யாருக்கு அரசுரிமை வழங்கப்போகிறீர்கள்’ என்று கேட்பதுபோல இருந்தது.

சில கணங்கள் யாவரும் ஒன்றும் பேசத் தெரியாமல் மூச்சும் விடாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

அப்பொழுது கணீர் என்று ஒரு குரல் எழுந்தது. இளங்கோவே எழுந்து நின்று, “மன்னர் பெருமானே!” என்று அழைத்த குரல் அது. அரசன் அவரை நோக்கினான். செங்குட்டுவன் பார்வையும் அவர்மேல் பதிந்தது. மற்றவர்களும் அவரையே பார்த்தார்கள்.

“இதோ, இந்தச் சோதிடர் சொற்களைப் பொய்யாக்கி விடுகிறேன் நான். எனக்கா இந்த அரசாட்சி கிடைக்கும் என்று சொன்னார்? நான் இதோ இந்தக் கணத்திலே துறவுபூண்பதாகச் சபதம் செய்கிறேன். என் தமையனார் நெஞ்சில் ஐயம் இருந்தால் இப்போதே ஒழியட்டும். நான் இன்றுமுதல் துறவி. எனக்கும் இந்த அரசுரிமைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.”

“என்ன இது! என்ன இது!” என்று யாவரும் திணறிக்கொண்டு கேட்டார்கள். சோதிடர்கூட ஒன்றும் தெரியாமல் விழித்தார்.

இளங்கோ மேலும் பேசலானார்; “இந்தச் சேர நாட்டரசு எனக்குப் பெரிதன்று. முடிவே இல்லாத பேரின்ப அரசு எனக்குக் கிடைக்கும்படி நான் விரதம் இருந்து நோற்பேன். முடிஏற்ற பிற அரசர்போல வாழாமல் முடி எடுத்த துறவரசனாக வாழ்வேன்” என்றார்.

அரசன் மயக்கத்திலிருந்து விழித்தவன்போல, “என்ன அப்பா இது? நீ எதற்காகத் துறவு பூண வேண்டும்? யாரோ பைத்தியக்காரச் சோதிடர் வாய்க்கு வந்ததைச் சொன்னதற்காக நீ இப்படிச் செய்யலாமா? செங்குட்டுவன் உன் அருங்குணத்தை அறியாதவனா?” என்று கேட்டான்.

“நான் செய்வது பிழையாக இருந்தால் பொறுத்தருள வேண்டும். நான் துறவடைந்து ஞானம் பெற்றால் இந்தக் குலத்துக்கே பெருமை. இந்த உறுதி மொழியை மாற்றுவது என்பது இனி இல்லை...... இதோ இப்போதே நான் இந்த அரண்மனையை விட்டுப்புறப்படுகிறேன். இனி எனக்கு இருப்பிடம் மடமோ, கோயிலோ ஆக இருக்கும்” என்று சொல்லிப் புறப்பட்டு விட்டார் இளங்கோ.

அமைச்சர்கள் எழுந்தார்கள்; அவரைத் தடுத்து விடவேண்டும் என்று எண்ணம். ஆனால் அவர்களுக்குத் துணிவில்லை. அரசன், “என் செல்வா, என் கண்ணே!” என்று அழைத்தானேயன்றி மேலே பேச முடியாமல் தடுமாறினான். செங்குட்டுவன் அலங்க மலங்க விழித்தான்.

இந்தக் கலவரத்தினிடையே, சோதிடம் கூறின பேர்வழி எப்படியோ, பெற்றேன் பிழைத்தேன் என்று ஒருவரும் அறியாமல் நழுவி விட்டார்.

அரண்மனையே துயரக் கடலில் மூழ்கியிருந்தது.