உள்ளடக்கத்துக்குச் செல்

சிலம்பு பிறந்த கதை/மலை வளம்

விக்கிமூலம் இலிருந்து

4. மலை வளம்

சேரன் செங்குட்டுவன் வஞ்சிமாநகரில் இருந்தான். அவன் அரசனானபிறகு சில போர்களைச் செய்து வெற்றி பெற்றான். மேல் கடலில் சேரநாட்டிற்குச் சிறிது தூரத்தில் ஒரு பெருந் தீவில் கடம்பர் என்ற மன்னர்கள் ஆண்டு வந்தனர். தம்முடைய குலத்துக்குரியதாக ஒரு மரத்தைக் காப்பாற்றி வருவது பழங்கால வழக்கம். அந்த மரத்தைக் காவல் மரம் என்பார்கள். அதை யாரும் வெட்டாத வகையில் காத்து வருவார்கள். கடம்பர்களின் காவல் மரம் கடம்பு. அதனால்தான் அவர்கள் அப்பெயரைப் பெற்றார்கள்.

இந்தக் கடம்பர்களைச் சார்ந்தவர்கள் அடிக்கடி சேர நாட்டுக்கு ஓடங்களில் வந்து கொள்ளையிட்டார்கள். மக்களைத் துன்புறுத்தினர்கள். சில சமயங்களில் மரக்கலங்களிலும் வந்து புகுந்து கொள்ளையிட்டார்கள். அவர்கள் இருக்கும் தீவுக்குப் படையுடன் சென்று போரிடுவது எளிதாக இல்லை. இடையிலே உள்ள கடல் கொந்தளிப்புடையதாக இருந்தது. அடிக்கடி கடம்பர்கள் கொடுத்துவந்த தொல்லையைச் செங்குட்டுவன் தெரிந்து கொண்டான். எப்படியாவது அவர்களைத் தொலைக்க வேண்டும் என்று உறுதி பூண்டான். கொந்தளிப்பான மேல் கடலில் போவதற்கு ஏற்ற வலிமையுள்ள கப்பல்களைக் கட்டச் செய்தான்.

முதலில் ஒற்றர்களை வலையர்களைப் போலக் கட்டு மரங்களில் அனுப்பிக் கடம்பர்களுடைய படைப் பலத்தை அறிந்து வரச் செய்தான். அவர்களுடைய படை சிறியதுதான். சேரர் படைக்கும் அதற்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமை இருந்தது. ஆனால் அந்தக் கடம்பர்களுக்கு இயற்கையிலே ஒரு பெரிய பலம் இருந்தது. மேல் கடல் அவர்கள் தீவுக்குப் பெரிய அரணாக இருந்தது. மதிலுக்குப் புறம்பே அகழியை வெட்டி வைத்திருப்பார்கள். கடம்பர்களுக்கு இந்தக் கடலே ஆழங்காண முடியாத அகழியாகக் கிடந்தது.

கடலைக் கடந்து கடம்பர்களின் தீவுக்குச் சென்று விட்டால், பிறகு கடுமையான போர் செய்ய வேண்டியிராது என்ற உண்மையைச் சேர மன்னன் உணர்ந்தான். தீவிலுள்ள மக்கள் யாவரும் ஆளுக்கொரு படைக்கலம் ஏந்தி எதிர்த்து நின்றாலும் சேரன் படையை வெல்ல இயலாது.

இவற்றை அறிந்த செங்குட்டுவன் கடம்பர்களை வெல்ல வேண்டுமானால், படை வீரர்களை ஏற்றிக் கொண்டு, முரட்டு அலைகளை வீசும் கடலைத் தாண்டிச் செல்வது ஒன்றுதான் அரிய செயல் என்பதைத் தெரிந்து கொண்டான். இந்தப் போர் கடம்பர்களோடு செய்யும் போராக இருந்தாலும், உண்மையில் கடலோடு செய்வதாகத்தான் இருக்கும் என்பது அவனுக்குத் தெளிவாயிற்று. அதனால்தான் அகலமும் உறுதியும் உடைய கப்பல்களைக் கட்டச் செய்தான். கப்பல்களைக் கட்டி வைத்துக் கொண்டால், கடம்பரை வெல்வதற்கு மட்டுமா அவை பயன்படும்? வேற்று நாட்டுக்குச் சென்று வாணிகம் செய்யவும் அவை உதவும் அல்லவா?

கப்பல்களைக் கட்டி விட்டார்கள். படைகளை ஏற்றிக் கடம்பர் இருந்த தீவுக்குச் சென்று மன்னன் போர் செய்தான். அது பெரும் போராக அவனுக்குத் தோன்றவில்லை. தன் படைத் தலைவன் ஒருவனை அனுப்பியிருந்தாலே போதும் என்று எண்ணினான். எளிதிலே கடம்பர்களை வென்றான். அவர்களுடைய காவல் மரமாகிய கடம்ப மரத்தை வெட்டி அதை வஞ்சிமாநகரத்துக்கு எடுத்து வந்தான். அதிலிருந்து ஒரு முரசு செய்யும்படி ஏவினான். கடம்ப மரத்தினால் அமைந்த அந்த முரசு, முழங்கும் போதெல்லாம் கடம்பர்களை வென்றவன் செங்குட்டுவன் என்பதை உணர்த்தியது.

இது மட்டும் அன்று, கடம்பர்களை வென்றதை விடக் கடலின் உறுமலுக்கு அஞ்சாமல் ஏற்ற வகையில் கப்பலைக் கட்டிச் சென்றது பெரிய வீரமாகத் தோன்றியது மக்களுக்கு. அதனால் யாவரும் அந்தச் செயலைப் பாராட்டினார்கள். கடம்பர்களை வென்றதை விடக் கடலைப் புறங்கண்ட பெருமையே பெருமை என்றார்கள். இதனால், “கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன்” என்ற சிறப்புப் பெயர் அச்சேரமன்னனுக்கு அமைந்தது. பிறக்கு என்பது முதுகு என்னும் பொருள் உடைய சொல். “கடலை முதுகு காட்டச் செய்து ஓட்டிய செங்குட்டுவன்” என்பது அந்தப் பட்டத்துக்குரிய பொருள்.

படைகளை ஒழுங்குபடுத்திக் கப்பல்களைக் கட்டச் செய்து கடம்பர்களின்மேல் படையெடுத்துச் சென்று போரிட்டு வென்ற செங்குட்டுவன், சிறிது அமைதியாக இருக்க எண்ணினான். போர்க்களத்தில் பகைவர்களின் பிணங்களைக் கண்ட அவன், அழகிய காட்சி எதையாவது காணவேண்டுமென்று விரும்பினான். மலைப்பகுதிகளுக்குச் சென்று மலைவளங் கண்டு வரலாம் என்ற எண்ணம் உண்டாயிற்று. தன்னுடைய பட்டத்தரசியோடும் சென்று வருவதாக முடிவு செய்தான்.

அரசன் மலைவளம் காணச் செல்கிறான் என்பதை அறிந்த அதிகாரிகள் அதற்கு ஆவன செய்தார்கள். மன்னனுடன் யார் யார் செல்வது என்று வரையறை செய்தார்கள். அவனுடன் வேட்டையில் வல்ல சிலர் செல்லும்படி திட்டம் இட்டார்கள். அரசன் வருவதை முன்கூட்டியே மலைப்பக்கத்தில் வாழும் குடிமக்களுக்குச் சொல்லியனுப்பினார்கள்.

செங்குட்டுவன் மலைவளம் காணும் பொருட்டுப் புறப்பட இருந்தான். அப்போது மதுரையிலிருந்து சாத்தனார் வந்தார். அவரைக் கண்ட மன்னன், “நல்ல சமயத்தில் வந்தீர்கள்” என்றான்.

“நல்ல சமயமா? நான் மன்னர்பிரானைக் காணும் நேரம் யாவுமே நல்ல நேரமென்றே என் அனுபவத்தில் உணர்கிறேன்.”

“அப்படி அன்று. இப்போது நான் மலைவளம் காணப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன். அங்கே உள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு இன்புறலாம் என்பது என் விருப்பம். நீங்களும் உடன் இருந்தால் அந்த இன்பம் பன்மடங்காகும். இயற்கையின் எழிலைப் புலவர்களைப் போலக் கண்டு களிப்பவர்கள் யார் இருக்கிறார்கள்?”

“அப்படியானால் மன்னர்பெருமானுக்கு என்னையும் உடன் அழைத்துச் செல்லத் திருவுள்ளமோ?”

“அதுதானே சொன்னேன், நல்ல சமயம் என்று?”

இப்போது விளங்குகிறது, யாருக்கு நல்ல சமயம் என்று. எப்போதும்போல் வந்த எனக்கு முன்பெல்லாம் கிடைக்காத காட்சி இப்போது கிடைக்கப் போகிறது. இது எனக்கு நல்ல சமயம் என்பதில் சிறிதும் ஐயமே இல்லை.”

“எப்படி சரி; வாருங்கள் போகலாம்” என்றான் சேரமன்னன்.

வஞ்சிமா நகரிலிருந்து மன்னனும் சாத்தனாரும் மன்னனுடைய பரிவாரத்தைச் சேர்ந்தவர்களும் புறப்பட்டார்கள். அவன் புறப்பட்டபோது இந்திரனே தன் பரிவாரங்களுடன் புறப்பட்டது போல இருந்தது; மலைகளினிடையே வரும் பேராற்றின் கரையை அடைந்தான் மன்னன். ஆற்றின் இருமருங்கும் அடர்ந்த காடுகள்; அருகருகே வானமுட்டிய மலைகள்; ஆற்றில் அங்கங்கே மணல் திட்டுக்கள். அங்கே பரிவாரத்தோடு தங்கினான் சேர அரசன். மலைப்பகுதிகளில் உள்ள மகளிர் கைகோத்துக் குரவைக் கூத்து ஆடினார்கள். அப்போது அவர்கள் பாடும் பாடல் காற்றிலே மிதந்து வந்தது. மலையும் மலையைச் சார்ந்த இடங்களும் குறிஞ்சித்திணை என்று சொல்வது தமிழ் மரபு. அந்தத் திணைக்குத் தெய்வம் முருகக்கடவுள். அக்கடவுளுக்குப் பூசை போடுகிற பூசாரிக்கு வேலன் என்று பெயர். அவன் ஆவேசம் கொண்டு ஆடிப் பாடுவான். முருகனைத் துதித்து வேலன் பாடும் பாட்டும் அங்கே எதிரொலித்தது. ஒருபுறம் குறமகளிர் தினையைக் குத்தும்போது பாடும் வள்ளைப் பாட்டின் இன்னிசை கேட்டது. ஒரு பக்கம் தினைப்புனம் காக்கும் பெண்கள் கிளிகளை ஒட்டிப் பாடும் ஆலோலப் பாடல்கள் கேட்டன. குறவர்கள் ஒரு பக்கம் முழங்கினர். வேறு ஓரிடத்தில் பறையை அடித்து ஒலி பரப்பினார்கள். புலியோடு சிலர் எதிர்த்துப் போராடும் அரவங்கூட ஓரிடத்தில் கேட்டது.

மரத்தின்மேலே பரணைக் கட்டிக் காட்டு விலங்குகளை ஓட்டும் வேடருடைய கூச்சல் ஒரு பக்கம் ஒலித்தது. காட்டு யானைகளைப் பிடிப்பதற்காகக் குழி வெட்டி மேலே கழிகளையும் தழைகளையும் வேடர்கள் பரப்பியிருப்பார்கள். யானைகள் தெரியாமல் அந்தக் குழிகளில் வந்து விழுந்துவிடும். அவற்றைத் தந்திரமாகச் சங்கிலியால் பிணித்துக் கொண்டு வந்து பழக்குவார்கள். இவ்வாறு யானையைப் பிடிப்பவர்கள் போடும் ஆரவாரம் ஒரு பால் எழுந்தது.

இத்தகைய ஒலிகளையும் முழக்கங்களையும் மன்னனும் பிறரும் கேட்டார்கள். காட்டிலே கோங்க மரங்கள் வளர்ந்து நின்றன. அவற்றின் மலர்கள் பொன் தட்டை விரித்தாற் போல அழகாக இருந்தன. வேங்கை மரங்கள் நிறையப் பூத்து நின்றன. அந்த மரங்களின் அடியில் பூக்கள் உதிர்ந்து கிடந்தன. தூரத்திலிருந்து பார்த்தால் ஏதோ வேங்கை ஒன்று அங்கே படுத்துக் கிடப்பது போலத் தோன்றியது. சுரபுன்னை மரங்கள் ஒரு பக்கம் அடர்ந்து வளர்ந்திருந்தன. பெருங்குன்றிமணியாகிய மஞ்சாடி மரங்கள் கொத்துக் கொத்தாகச் சிவந்த வித்துக்களை ஏந்திக்கொண்டு விளங்கின. நன்றாக வயிரமேறிய சந்தன மரங்கள் காடாக ஒரு பக்கம் வளர்ந்திருந்தன.

தேக்கும் திமிசும் கருங்காலியும் கடம்புமாக எத்தனை எத்தனையோ மரங்கள், செடிகள், கொடிகள்! வண்ண வண்ணப் பூக்கள்! சில மரங்களில் இலைகளும் தளிர்களுமே மலரைப் போல வண்ணம் பெற்றுக் கண்ணைப் பறித்தன.

இந்தக் காட்சிகளைக் கண்டு யாவரும் மகிழ்ந்தார்கள். புலவராகிய சாத்தனார் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்தார். அவற்றின் அழகிலே சொக்கிப் போனார்.

செங்குட்டுவன் பேராற்றங்கரைக்கு வந்து தங்கியிருக்கும் செய்தியை மலைவாழ் மக்கள் அறிந்தார்கள். பெரிய கூடாரங்கள் அமைத்து அவனும் அவனுடன் வந்தவர்களும் தங்கியிருந்தார்கள். அவன் வருவது முன்பே அவர்களுக்குத் தெரிந்த செய்திதான். ஆதலின் அவர்கள் கூட்டமாகத் தங்கள் மன்னனைக் காணப் புறப்பட்டார்கள்.

காட்டில் தங்களுக்குக் கிடைக்கும் பொருள்களைக் கையுறையாக ஏந்திக்கொண்டு அவர்கள் வந்தார்கள். பேராற்றங்கரையில் அவர்கள் காணிக்கைகளுடன் வந்து நின்ற காட்சியே அவர்களுக்கு இருந்த அன்பைக் காட்டியது. அவர்கள் வரிசையாக நிற்பதைக் கண்டார் சாத்தனார். “வஞ்சிமா நகர் அரண்மனை முற்றத்தில் அரசர்பிரானுடைய காட்சிக்காகத் திறையுடன் சிற்றரசர்கள் காத்து நிற்பதுபோல அல்லவா இருக்கிறது, இந்தக் காட்சி?” என்று வியந்தார்.

“அந்த அரசர்கள் மன்னர்பெருமானைக் கண்டு அஞ்சுபவர்கள்; அவர்கள் உள்ளத்தில் உண்மையன்பு இருக்குமென்று சொல்ல இயலாது. ஆனால் இந்த மலைவாணர்களோ அன்பே உருவமானவர்கள்” என்று ஓர் அமைச்சர் சொன்னார்.

மன்னன் கூடாரத்துக்குவெளியே வந்து அங்கே நின்றிருந்த மக்களைக் கண்டான். அவர்கள் எத்தனை வகையான பண்டங்களைச் சுமந்துகொண்டு நின்றார்கள்! யானைத் தந்தத்தை ஒருவன் ஏந்தி நின்றான். வயிரம் பாய்ந்த அகிலின்கட்டு ஒன்றை ஒருவன் வைத்திருந்தான். சந்தனக் கட்டைகளும், சிந்துரக் கட்டியும், அரிதாரமும் சிலர் ஏந்தியிருந்தார்கள். கவரிமான் மயிரும் தேன் குடங்களும் சிலர் கொண்டு வந்திருந்தனர். ஏலக்காய்களும், மிளகுக் கொத்தும், கூவைக்கிழங்கின் மாவும், கவலைக் கிழங்கும் சிலர் கொணர்ந்திருந்தனர். தேங்காயைச் சிலர் சுமந்துவந்தனர். மாம்பழத்தைச் சிலர் கொணர்ந்தனர். சிலர் பலாப்பழங்களைத் தாங்கி வந்தனர். பச்சிலைமாலை, வெள்ளுள்ளிப் பூண்டு, பூங்கொடி, பாக்குக் குலை, வாழைக் குலை ஆகியவற்றைத் தாங்கி வந்தவர்கள் பலர். இவை யாவும் மரஞ்செடி கொடிகளிலிருந்து கிடைத்தவை.

வேறு சிலர் குட்டியான விலங்குகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்திருந்தார்கள். சிங்கக் குட்டியை ஒருவன் கொண்டுவந்திருந்தான். புலிக் குட்டி, யானைக் கன்று, குரங்குக் குட்டி, கரடிக் குட்டி, மலை யாட்டுக்குட்டி, மான் குட்டி, கத்தூரி மிருகக்குட்டி, கீரிப் பிள்ளை, புனுகுபூனை - இப்படிப் பல குட்டிகள் அங்கே இருந்தன. சிலர் மயிலைக்கொணர்ந்தனர். சிலர் காட்டுக் கோழியை வழங்கக் கொண்டுவந்திருந்தனர். கிளியைச் சிலர் தாங்கி நின்றனர்.



இப்படி வேறு வேறு கையுறைகளைத் தாங்கிக் கொண்டு, “ஏழு பிறப்பும் மன்னர் பிரானுக்குக் குடி மக்களாக இருக்க ஆசைப்படுகிறவர்கள் நாங்கள். மன்னர்பிரான் வாழ்க! வெல்க!” என்று வாழ்த்தினார்கள். அந்த வாழ்த்தொலி மலைப்பக்கங்களில் எதிரொலித்தது.