சிலம்பு பிறந்த கதை/மூன்று உண்மைகள்

விக்கிமூலம் இலிருந்து
6. மூன்று உண்மைகள்

செங்குட்டுவனோடு மலைவளம் காணச் சென்ற தண்டமிழ்ப் புலவராகிய சாத்தனார் அவனுடன் வஞ்சிமா நகர் வந்தார். தம்முடைய நண்பராகிய இளங்கோவடிகளைக் கண்டு வரலாமென்று அவர் இருந்த குணவாயிற் கோட்டத்துக்குச் சென்றார். அப்போது அங்கே குன்றில் வாழும் மக்கள் பலர் கூடி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். இளங்கோவடிகள் அவர்கள் சொல்வதை மிக்க ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். அடிகள் சாத்தனாரைக் கண்டவுடன், “வாருங்கள், வாருங்கள்! எப்போது வந்தீர்கள்? இப்படி அமருங்கள்” என்றார்.

“நான் வந்து சில நாட்கள் ஆயின. மன்னர் பெருமானுடன் மலைவளம் காணச் சென்றிருந்தேன். இவர்களைப் பார்த்தால் மலையில் வாழும் மக்களைப் போலத் தோற்றுகிறார்கள். மலைவளம் காணப் போயிருந்தபோது இவர்களைப் போன்றவர்களை அங்கே கண்டோம். அவர்கள் தாங்கள் கண்ட ஒர் அற்புத நிகழ்ச்சியைச் சொன்னார்கள்” என்று சொல்லி அமர்ந்தார் புலவர்.

“இங்கேயும் இவர்கள் ஏதோ அற்புத நிகழ்ச்சியைத்தான் சொல்ல வந்தார்கள். சொல்லத் தொடங்கும்போதே நீங்கள் வந்துவிட்டீர்கள். நீங்களும் கேளுங்கள்” என்று சொன்ன இளங்கோ, எதிரே நின்றிருந்தவர்களைப் பார்த்து, “நீங்கள் கண்டதைச் சொல்லுங்கள்” என்றார்.

அவர்கள் சொல்லத் தொடங்கினார்கள்; “திருச் செங்குன்றத்தில் மஞ்சள் பூக்கள் பூத்துக் குலுங்கும் வேங்கை மரம் ஒன்று உண்டு. அதன் அடியில் ஒரு பத்தினி நின்றிருந்தாள். அவள் மார்பு ஒன்றை இழந்த கோலத்தோடு நின்றாள். அப்போது வான விமானத்தில் அமரர்க்கு அரசனாகிய இந்திரன் அவளுடைய கணவனையும் அமரலோகத்திலிருந்து அழைத்து வந்து அவளுக்குக் காட்டி, அவளையும் விமானத்தில் ஏற்றிக்கொண்டு வானுலகு சென்றான். இந்தக் காட்சியை எங்கள் கண்களாலே கண்டோம். மிக மிக வியப்பான காட்சி இது. எங்கும் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை. இதைத் தவமுனிவராகிய தங்களிடம் சொல்லிச் செல்லலாம் என்று வந்தோம்” என்றார்கள்.

இளங்கோவடிகள் மிக்க ஆச்சரியத்துடன், “புலவர் பெருமானே, கேட்டீர்களா? நீங்கள் கேட்ட செய்தியும் இதுதானோ?” என்றார்.

“ஆம்; இதே நிகழ்ச்சியைத்தான் மன்னர் பெருமானும் நானும் கேட்டோம். அந்தப் பத்தினியின் வரலாறு எனக்குத் தெரியும். மதுரையில் நிகழ்ந்தது தானே?” என்றார் புலவர்.

“அப்படியா? நடந்தது என்ன? விரிவாகச் சொல்லுங்கள்” என்று முனிவர் கேட்கப் புலவர் சொல்லலானார்.

“சோழ நாட்டில் உள்ள பூம்புகாராகிய காவிரிப் பூம்பட்டினமே அந்தப் பத்தினித் தெய்வத்தின் ஊர். அவ்வூரில் கோவலன் என்று ஒரு வணிகன் இருந்தான். அவன்தான் இவளுடைய கணவன். அவன் அவ்வூரில் இருந்த நாடகக் கணிகையாகிய மாதவி என்பவளிடம் காதல் கொண்டு அவளுடனே இருந்து வந்தான். அவளுக்குத் தன் செல்வத்தை யெல்லாம் கொடுத்து இழந்தான். மேலும் கொடுக்கப் பொருள் இல்லாமையால் தன் வீடு வந்தான். தன் மனைவி கண்ணகியின் காற்சிலம்பை விற்றுப் பிழைக்கலாம் என்ற எண்ணத்துடன் அவளையும் அழைத்துக் கொண்டு பாண்டி நாட்டை அடைந்தான். மதுரைமா நகரில் கடைவீதியில் சிலம்பை விற்கச் சென்றான். அப்போது, அரசியின் பொற்சிலம்பு ஒன்றை மறைத்து வைத்துத் திருட்டுப்போயிற்று என்று அரசனிடம் சொல்லியிருந்த பொற்கொல்லன் ஒருவனைக் கண்டான். அவனிடம் சிலம்பைக் கோவலன் காட்டவே அவன், “இந்தச் சிலம்பை அணியும் தகுதி பாண்டியனுடைய பட்டத்தரசி ஒருத்திக்குத்தான் உண்டு. நீ இங்கே இரு. நான் அரண்மனை சென்று சொல்லிவிட்டு வருகிறேன்” என்றுகூறிச் சென்றான்.

“பொற்கொல்லன் அரசனிடம் சென்று, சிலம்பு திருடின கள்வனைக் கண்டுபிடித்துவிட்டேன்” என்றான். அதைக் கேட்ட அரசன், காவலரை அழைத்தான். ‘இவன் சொன்ன அந்தக் கள்வனைக் கொல்ல, சிலம்போடு அவனை இப்பொழுதே இங்கே கொண்டு வாருங்கள்’ என்று சொல்ல எண்ணியவன், ஏதோ நினைவில் ஆழ்ந்திருந்ததனாலும் ஊழ்வினை வந்து விளைகிற காலமாதலினாலும், “அவனைக் கொன்று சிலம்பை இப்போதே கொண்டு வாருங்கள்” என்று சொல்லிவிட்டான்.

“காவலர் அவ்வாறே சென்று கோவலனைக் கொன்றுவிட்டார்கள். அவன் கொலையுண்டதை அறிந்த கண்ணகி பத்தினியாகலின் துயரில் ஆழ்ந்து நேரே மன்னனிடம் போனாள். அவனிடம் நடந்ததைச் சொல்லி நிற்க, அவன் தன் உயிரை விட்டான். பின்பு மதுரை வீதியிற் சென்று தன் கற்புத் திறத்தால் மாநகரை எரியுண்ணச் செய்தாள். இக் குறவர்கள் சொன்ன பத்தினி அந்தப் பெருமாட்டியே!” என்று கூறி முடித்தார்.

கவனத்துடன் இதைக் கேட்டுக் கொண்டிருந்த இளங்கோவடிகள், “ஊழ்வினை விளையும் காலம் என்றீர்களே; அது என்ன? உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.

“நான் அதை அறிந்துகொண்டதும் ஓர் அற்புதந்தான். மதுரையில் இறைவன் எழுந்தருளியிருக்கும் வெள்ளியம்பலத்தில் நான் துயின்று கொண்டிருந்தேன். அப்போது இருள் செறிந்திருந்தது. ஏதோ பேச்சரவம் கேட்டது. நான் விழித்துக் கொண்டு கவனித்தேன். வீர பத்தினியாகிய கண்ணகியின் முன் மதுரை மாநகரின் காவல் தெய்வம் தோன்றி, ‘நீ மிக்க சினத்தால் இந்த நகரை எரியுண்ணச் செய்தாய். உங்களுக்கு இந்தத் துன்பம் விளைந்ததற்குக் காரணம் முன்பிறப்பில் ஒரு பெண் இட்ட சாபமே’ என்று கூறினாள்.”

“அந்தச் சாபத்துக்குக் காரணம் யாது? சாபம் என்ன? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவேண்டும்” என்று இளங்கோவடிகள் மீட்டும் வினவினார்.

“நன்றாகத் தெரியும், மதுரைத் தெய்வம் சொல்லக் கேட்டதனால் எனக்கு அது தெரிந்தது. சொல் கிறேன்” என்று அந்த வரலாற்றை விரித்து உரைக்கலானார்; “கலிங்க நாட்டில் சிங்கபுரம் என்ற ஊரில் வசு என்னும் வேந்தன் ஒருவன் இருந்தான்; அந்த நாடடில் கபிலபுரம் என்னும் வேறு ஊரில் குமரன் என்ற வேந்தன் இருந்தான். இவ்விருவரும் தாயாதிகள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பகை கொண்டிருந்தனர். ஒருவர் நாட்டிலிருந்து மற்றொருவர் நாடடுக்கு யாரும் செல்வதில்லை.

”கபிலபுரத்தில் இருந்த சங்கமன் என்னும் வணிகன் அணிகலன்களை விற்கிறவன். சிங்கபுரத்தில் செல்வர்கள் பலர் வாழ்ந்ததனால், அங்கே சென்றால் நல்ல வியாபாரம் ஆகும் என்று அவன் எண்ணினான். தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு அந்த நகரம் சென்று ஆபரணங்களை வியாபாரம் செய்யத் தொடங்கினான். சிங்கபுரத்து அரசனாகிய வசுவினிடம் அரசியல் அதிகாரியாக இருந்தான், பரதன் என்பவன். அவன் தீய குணமுடையவன். அவனுக்குச் சங்கமனைக் கண்டாற் பிடிக்கவில்லை. அணிகலன்களை விலையின்றியே தனக்கு வழங்க வேண்டுமென்று கேட்டிருப்பான்போலும் சங்கமன் அளிக்காமையினால் அவனுக்குத் தீங்கு புரிய எண்ணினான் பரதன். அவன் அரசியல் பணி புரிகிற அதிகாரம் உடையவன் அல்லவா? அரசனிடம் சென்று, இந்தச் சங்கமன் கபிலபுரத்திலிருந்து வந்து இங்கே வாழ்கிறான். ஆபரணங்களை விற்பவனைப் போல இருந்து தொழில் நடத்தினாலும், நம்முடைய பகையரசனாகிய வசுவுக்கு இங்குள்ள இரகசியங்களைத் தெரிந்து சொல்லி அனுப்பும் ஒற்றன் இவன். இவனால் இந்த நாட்டுக்கும் அரசராகிய தங்களுக்கும் தீங்கு நேரும் என்றான். வசுவி னிடம் பகைமை கொண்டிருந்த அரசன், ‘அவனை இந்த நாட்டைவிட்டுத் துரத்திவிடு’ என்றான். ‘இவன் செய்துவரும் குற்றத்துக்கு அந்தத் தண்டனை போதாது. இவனைத் துரத்திவிட்டால் வேறு உருவத்தில் இன்னும் யாரேனும் வந்து சேருவார்கள். ஆகையால் இனி யாருமே இப்படி வந்து வஞ்சகம் செய்யாதபடி, கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்’ என்று பரதன் கூறினான். 'அப்படியானால் சிறையில் அடைத்துவிடலாமா? என்று அரசன் கேட்டான். ‘அந்தத் தண்டனையும் போதாது. இவனைக் கொன்று விடுவதுதான் தக்கதாகும்' என்று கூசாமல் சொன்னான் பரதன். அரசனும், 'அப்படியே செய்து விடு’ என்று சொல்லிவிட்டான். பரதன் சங்கமனைக் கொலை செய்யும்படி ஏற்பாடு செய்தான். குற்றம் சிறிதும் இல்லாத வணிகன் கொலையுண்டான்.

“அந்தச் சங்கமனுடைய மனைவியாகிய நீலி என்பவள் தன் கணவன் கொலையுண்டதை அறிந்து கதறினாள்; புலம்பினாள். அரசனே! இது முறையாகுமா? ஊர்க்காரர்களே! இது நியாயமா? இந்தத் தெருவில் வாழ்பவர்களே! இது நீதியா?” என்று பல இடங்களிலும் சென்று முறையிட்டாள். இப்படிப் பதினான்கு நாட்கள் துயரம் தாங்காமல் அலைந்து புலம்பித் திரிந்தாள், பதினாலாவது நாள் ஒரு மலையில் ஏறி உயிரை விட்டுத் தன் கணவனுடன் மறு உலகத்தில் சேர எண்ணினாள். அதற்காக ஒரு மலையில் ஏறி, கீழே விழுவதற்கு முன், 'எங்களுக்கு இந்தத் துயரத்தை உண்டாக்கியவர்கள் யாரோ அவர்கள் இதைப்போன்ற துயரத்துக்கு ஆளாகட்டும்!' என்று சாபமிட்டு விழுந்து இறந்துபோனாள். அவள் இட்ட சாபந்தான் இப்படி வந்து பலித்தது. பரதன் என்னும் அதிகாரியே கோவலனாக பிறந்தான். பரதனுடைய மனைவியே கண்ணகியாகப் பிறந்தாள்.”

“மிகவும் சோகமான கதை. இதையா மதுரைத் தெய்வம் வீரபத்தினிக்கு உரைத்தது?” என்று, இதுகாறும் கேட்டுக் கொண்டிருந்த இளங்கோவடிகள் வினவினார்.

“இந்தக் கதையைக் கண்ணகியிடம் சொல்லி விட்டு, அந்த வணிகன் மனைவி இட்ட சாபத்தால் இது நிகழ்ந்தது. இன்னும் பதினான்கு நாட்கள் சென்றால் உன் கணவன் வருவான். அவனை வானோர் வடிவிலே காணலாமேயன்றி, இனி மனித உருவத்தில் காண முடியாது” எனக் கூறி மறைந்தது அந்தத் தெய்வம் என்று எஞ்சியிருந்த நிகழ்ச்சியையும் சொல்லி முடித்தார் சாத்தனார்.

இவற்றையெல்லாம் கேட்ட இளங்கோவடிகள் நெடுநேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அவர் தம் அகக்கண்ணில் இந்த வரலாற்றுக் காட்சிகளையெல்லாம் ஒரு முறை வரிசையாகக் கொண்டுவந்து கண்டார்போல் இருந்தது. பின்பு மெல்லச் சாத்தனாரைப் பார்த்து, “பாவம் பாண்டிய மன்னனுடைய முடிவு வருந்தத்தக்கது. அவன் செய்த பிழைக்கு வேறு யாரும் தண்டனை கொடுக்கவில்லை. தானே தன் உயிரை மாய்த்துக் கொண்டான். தான் செய்தது அறமன்று என்பதை உணர்ந்தவுடன் அவன் உயிர் பிரிந்தது. அந்த அறமே அவனுக்குக் கூற்றாக நின்று ஒறுத்துவிட்டது. அரசியலில் ஈடுபட்டவர்கள் உணரவேண்டிய உண்மை இது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற அரிய உண்மையைப் பாண்டிய மன்னன் தன் உயிரைக் கொடுத்து நிலைநாட்டி விட்டான்” என்றார்.

“ஆம், அது பெரிய உண்மைதான். அரசர் குடியில் பிறந்தமையால் தங்களுக்கு இந்த வரலாற்றிலிருந்து இந்த உண்மை முதலில் புலப்பட்டது.”

“வேறு பல கருத்துக்களும் தோன்றின. இந்தக் குறவர்கள் தாங்கள் கண்ட அற்புதக் காட்சியைச் சொன்னார்களே; அதிலிருந்துதானே இத்தனை நிகழ்ச்சிகளையும் நான் அறிந்துகொள்ள வழி பிறந்தது? அந்தப் பத்தினித் தெய்வத்தின் பெருமையை நாம் மறக்க முடியுமா?”

“சேர அரசர் பிரான் கண்ணகிக்குக் கோயில் கட்ட எண்ணியிருக்கிறார். இமயத்திலிருந்து விக்கிரகம் செய்யக் கல் எடுத்து வரப்போகிறார்” என்று இடையே சாத்தனார் சொன்னார்.

“அப்படியா? அது மிகவும் போற்றத்தக்க செயல். இனி நாள் ஆக ஆக அந்த வீரபத்தினியை யாவரும் போற்றுவார்கள். புகழ் மிக்க பத்தினியை உயர்ந்தவர்கள் ஏத்திப் பாராட்டுவார்கள் என்பதும் ஒரு பெரிய உண்மை. அதனையும் கண்ணகியின் வரலாற்றால் உணரலாம். கடைசியில் நீங்கள் சொன்ன சங்கமன் கதை மனத்தை உருக்குகிறது. எல்லாம் வினையின் விளைவு என்பது எவ்வளவு தெளிவாகத் தெரிகிறது முன் செய்த வினை அடுத்த பிறப்பில் வந்து எப்படியாவது இன்ப துன்பங்களே ஊட்டிவிடும் என்பது அசைக்க முடியாத உண்மை.”

“நான் சொன்ன நிகழ்ச்சிகளில் மூன்று பெரிய உண்மைகளையல்லவா கண்டுவிட்டீர்கள்? உங்களுடைய அறிவு, உலகுக்குப் பொதுவான உண்மைகளைக் காணுவதில் நாட்டமுடையதாக இருக்கிறது.”

“ஆம்; இத்தனை நேரம் அந்த மூன்று உண்மைகளையும் சிந்தித்துக்கொண்டே இருந்தேன். நினைக்க நினைக்க வியப்பாயிருக்கிறது. அதோடு மற்றொர் எண்ணமும் தோன்றுகிறது.”

“என்ன? சொல்ல வேண்டும்.”

“இந்த மூன்று கருத்துக்களை அடிப்படையாக வைத்து இந்தக் கதையைக் காவியமாக இயற்றலாம் என்று தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் சிலம்பு காரணமாக இருக்கிறது. ஆதலின் சிலப்பதிகாரம் என்ற பெயரை வைத்துக் கண்ணகியின் கதையை விரிவாக நாம் பாடலாம் என்ற எண்ணம் எழுகிறது. உங்கள் கருத்து என்ன?”

“நன்றாகச் செய்யலாம். முடியுடை வேந்தராகிய மூன்று பேர்களும் இந்தக் கதையில் வருகிறார்கள். கண்ணகி பிறந்த சோழ நாடும், அவள் கணவனை இழந்த பாண்டி நாடும், தெய்வம்ஆன சேர நாடும் கதைக்கு இடமாக இருக்கின்றன. மூன்று அரசர்களுக்கும் உரிய இதனைத் தாங்களே அருளிச் செய்யலாம்” என்றார் சாத்தனார்.

“சாத்தனாருக்கு அந்தக் காவியத்தைத் தாமே இயற்றவேண்டும் என்ற அவா உண்டாயிற்று.

ஆனாலும் அந்தக் கருத்தை முதலில் வெளியிட அவர் விரும்பவில்லை. இளங்கோவடிகளையே இயற்றும்படி மரியாதைக்குச் சொல்லலாம். இவர் சேர குலத்தில் பிறந்தவர். ஆதலின் மற்ற மன்னர்களைப் பற்றிச் சொல்ல இவர் விரும்பமாட்டார். நம்மையே இயற்றச் சொல்லி விடுவார்” என்று எண்ணியே அப்படிச் சொன்னார்.

இளங்கோவடிகளோ, “பார்க்கிறேன். இந்த வரலாறு என் உள்ளத்தை உணர்ச்சி வசமாக்கிவிட்டது. பல அரிய கருத்துக்களை உடையது இந்தக் கதை என்பதை உணர்கிறேன். நன்றாகச் சிந்தித்து எழுதி முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இறைவன் திருவருள் கூட்டுவிக்கும் என்றே எண்ணுகிறேன்” என்று சொன்னார். அது கேட்ட சாத்தனாருக்கு ஏமாற்றம் உண்டாகிவிட்டது. ஆனாலும் அதை வெளிக் காட்டிக்கொள்ளலாமா? “நன்றாகச் செய்து முடியுங்கள்” என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டார்.