உள்ளடக்கத்துக்குச் செல்

சிலம்போ சிலம்பு/காப்பிய முன்னோட்டச் சுவை

விக்கிமூலம் இலிருந்து

18. காப்பிய முன்னோட்டச் சுவை

காப்பிய ஆசிரியர்கள் தம் காப்பியத்தில் பல்வேறு சுவைகளை அமைப்பர். அவற்றுள் முன்னோட்டச் சுவை மிகவும் மேலானது. முன்னோட்டச் சுவை என்பது நான் (சு.ச.) வைத்த பெயராகும்.

காப்பியத்தில் பின்னால் நிகழப் போகும் செயலை முன்னாலேயே குறிப்பாக அறிவிப்பதை முன்னோட்டம் எனலாம். இந்த முன்னோட்டம், பின்னால் நிகழ இருப்பதற்கு எதிர்மாறானதாக முன்னால் சொல்லப்படும் போது சுவை மிகுகின்றது. இந்தச் சுவையை முன்னால் படிக்கும் போது அறிய இயலாது. இதற்கு எதிர்மாறான நிகழ்ச்சி பின்னால் நடந்திருப்பதைப் படிக்கும்போதுதான், இரண்டையும் ஒத்திட்டு நோக்கி மகிழ முடியும். எடுத்துக்காட்டாகக் கம்பராமாயணத்தில் அமைந்துள்ள சில முன்னோட்டங்களைக் காண்பாம். சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள சில முன்னோட்டங்களை அறிந்தும் புரிந்தும் சுவைப்பதற்காக 'இலக்கிய ஒப்புமை காண்டல்' என்னும் முறையில், கம்பராமாயண முன்னோட்டங்கள் சில ஈண்டு அறிவிக்கப்படும். கம்ப ராமாயணப் பாடல்களையெல்லாம் ஈண்டு எழுதின் விரியும் ஆதலின், அந்தப் பாடல்களில் உள்ள கருத்துகளை மட்டும் ஈண்டு எடுத்துக் கொள்ளலாம்.

மகன் இராமன்

மந்தரை சூழ்ச்சிப் படலம்:- உறங்கிக் கொண்டிருந்த கைகேயியைக் கூனி எழுப்பி, துன்பம் வந்த போதும் தூங்கிக் கொண்டிருக்கிறாயே என்று கூற, கைகேயி எழுந்து பின் வருமாறு கூறுகிறாள்: என் பிள்ளைகள் நால்வரும் நல்லவர்கள். அவர்கள் இருக்கும் போது எனக்கு எந்தத் துன்பமும் வராது. அதிலும், இராமனைப் பிள்ளையாகப் பெற்ற எனக்குத் துன்பமே இல்லை - என்றாள். இதே இராமனைப் பின்னால் கைகேயி முடியைப் பறித்துக் காட்டிற்கு அனுப்பினாள்.

வாழிய

கைகேயிக்கு இராமனது முடி சூட்டைப் பற்றித் தெரிவிப் பதற்காக, யாழ் இசையினும் இனிமையாகப் பேசும் கைகேயி இருந்த இடத்திற்கு, வாழிய வாழிய என்று வாழ்த்திக் கொண்டு சிற்றரசர்கள் பின் தொடரச் சிங்கம் போன்ற தயர தன் வந்தான் - என்பது ஒரு பாடல் கருத்து.

யாழ் இசையினும் இனிமையாகப் பேசும் கைகேயி இன்னும் சிறிது நேரத்தில் தயர தனிடம் கடுமையாகப் பேசப் போகிறாள். சிங்கம் போன்ற தயரதன் நாடி ஒடுங்கி அவளிடம் கெஞ்சும் கோழையாகப் போகிறான். வாழிய - வாழிய என்று சிற்றரசர்களின் வாழ்த்தைப் பெற்ற மன்னன் இன்னும் சிறிது நேரத்தில் இறக்கப் போகிறான். இது ஒரு சுவையான முன்னோட்டம் அன்றோ!

கைகேயி வருந்தியவள் போல் கீழே வீழ்ந்தாள். தயர தன் அவளை நோக்கி, ஏன் வருந்துகிறாய்? யாராவது இகழ்ந்தார்களா? உன்னை இகழ்ந்தவர் இறப்பது உறுதி என்றான். பின்னர் கைகேயின் விடாப்பிடிச் செயலைக் கண்டு அவளைத் தயர தன் தான் இகழ்கிறான், இகழ்ந்தவர் இறப்பர் என்று சொன்னபடி கைகேயியை இகழ்ந்த அவனே இறந்து போகிறான்.

வளர்த்த தாய்

முனிவர் முதலிய பெரியோர்கள் பின் வருமாறு பேசிக்கொள்கின்றனர்: இராமன் பெற்ற தாயாகிய கோசலை கையில் வளரவில்லை. அவனைத் தவப் பயனால் வளர்த்தது கைகேயியே. மகிழ்ச்சியோடு வளர்த்த கைகேயி இராமனது முடிசூட்டிற்காக அடையும் மகிழ்ச்சியின் அளவைச் சொல்ல முடியாது - என்றனர். இதற்கு எதிர்மாறாகக் கைகேயி இராமனைக் காட்டிற்கு விரட்டி விட்டாள்.

இவ்வாறு கம்ப ராமாயணத்தில் இன்னும் எவ்வளவோ சொல்லலாம். இவை போன்றே, சிலப்பதிகாரத்தில் காப்பிய முன்னோட்டச் சுவை எவ்வளவோ உண்டு. சில காண்பாம்:

காதலற் பிரியாமை

திருமண அரங்கிலே மணமக்களை வாழ்த்துபவர்கள், உங்கட்கு வயிற்று வலி வராமல் இருப்பதாகுக! உங்கட்குக் காச நோய் வராமல் இருப்பதாகுக! உங்கட்கு இதய நோய் வராமல் இருப்பதாகுக!- என்று வாழ்த்தினால், அது இயற்கைக்கு மாறான தீய நிமித்தம் அல்லவா? எனவே, இது போல யாரும் வாழ்த்துவதில்லை. நீங்கள் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று நீடுழி வாழ்வீராக என வாழ்த்துவதுதான் முறை - இயற்கையுமாகும்.

திருமண அரங்கில் கோவலனுடன் இருந்த கண்ணகியை நோக்கி முதிய பெண்டிர் சிலர், நீ காதலனைப் பிரியாமலும், கைகோத்த நெருங்கிய தொடர்பு தளராமலும், தீமை வராமலும் வாழ்வாயாக என வாழ்த்தினர்;

"காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீது அறுக என ஏத்தி" (1:61-62)

என்பது பாடல் பகுதி. பின்னால் கண்ணகியும் கோவலனும் கவவுக் கை நெகிழ்ந்து பிரியப் போகிறார்கள் - தீமை வரப் போகிறது என்பதை இந்த வாழ்த்து உள்ளடக்கிக் கொண்டுள்ளது. வரலாறு முழுவதும் நடந்து முடிந்த பிறகு, ஆசிரியர் இளங்கோ இந்தக் காப்பியத்தை எழுதியூ தால், பின்னால் நிகழ்ந்ததை அறிந்து முன்னோட்டமாக முன்னாலேயே எழுதிச் சுவை தந்துள்ளார். இது மட்டுமா?

உலவாக் கட்டுரை

மனையறம் படுத்த காதையில், கோவலனும் கண்ணகியும் இன்புற்றிருந்த வாழ்க்கையைத் தொண்ணூறு (90) அடிகளால் தெரிவித்துள்ளார் இளங்கோ, இந்தத் தொண்ணூறு அடிகளில் நாற்பத்தைந்து அடிகள், கோவலன் கண்ணகியைப் பாராட்டிய அடிகளாகும். இந்தப் பாராட்டு ‘எவரெஸ்ட்’ உச்சிக்குப் போய் விட்டிருக்கிறது. இவண் இறுதிப் பகுதியை மட்டும் காணலாம்:

“மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
மலையிடைப் பிறவா மணியே என்கோ
அலைகிடைப் பிறவா அமிழ்தே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ
தாழிருங் கூந்தல் தையால் நின்னை என்று
உலவாக் கட்டுரை பல பாராட்டி”
(2:73-81)

என்பது தான் அந்தப் பாராட்டு. இரண்டாம் காதையின் இறுதியில் இவ்வாறு அமைத்தது, அடுத்த காதையிலேயே கோவலன் (45 அடி) கண்ணகியைப் பிரியச் செய்துவிடுவதால் தான். இவ்வாறு பாராட்டியவன் அடுத்த காதையிலேயே பிரிந்து விடுவது பின்னுக்கு உரிய முன்னோட்டச் சுவை பயக்கிறதன்றோ?

இந்த மனையறம் படுத்த காதையின் இறுதியில் ஒரு தனி வெண்பா உள்ளது. இது முற்றிலும் முன்னோட்டப் பாடலாகும். ஆண் பாம்பும் பெண் பாம்பும் ஒன்றோடு ஒன்று உடலைப் பின்னி முறுக்கிக் கொண்டு இன்பம் துய்ப்பது போலவும், மன்மதனும் இரதியும் கலந்து இன்புறுவது போலவும், கோவலனும் கண்ணகியும் இரண்டற ஒன்றிக் கலந்து இன்பம் துய்த்தனராம். இந்த உலக இன்பம் நிலையில்லாதது; எனவே நாம் இருக்கும் போதே எவ்வளவு மிகுதியாகச் சிற்றின்பம் துய்க்க முடியுமோ - அவ்வளவும் துய்த்துவிட வேண்டும் என்று எண்ணிச் செய்தவர்கள் போல் காணப்பட்டனராம்:

"தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தாலென ஒருவார்
காமர் மனைவி யெனக் கைகலந்து-நாமம்
தொலையாத இன்பமெலாம் துன்னினார் மண்மேல் நிலையாமை கண்டவர்போல் நின்று"

இது பாடல். பணிகள் - பாம்புகள். காமர் - மனைவி = மன்மதனும் அவன் மனைவி இரதியும். 'நிலையாமை கண்டவர் போல்' என்பது இவர்களின் வாழ்க்கையில் உண்மையாகவே பலித்து விட்டதே. காமத் துறைக்குப் பொறுப்பாளனாகச் சொல்லப்படும் மன்மதனை இங்கே இழுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கண்ணகியின் மென்மையும் வன்மையும்

அமைதியான மென்மையின் எல்லையில் கண்ணகியைப் படிப்படியாகக் கொண்டுபோய் நிறுத்திப் பின்னர்த் திடீர்த் திருப்பமாக அவளை வன்மை உடையவளாக ஆக்கியிருப்பதும் ஒருவகைக் காப்பிய முன்னோட்டமாகும். அதாவது:

1. கோவலன் மாதவியைப் பிரிந்து கண்ணகியிடம் வந்து அவளது வாடிய மேனியைக் கண்டு வருந்தித் தன் குறைபாட்டைக் கூறித் தன்னைத்தானே நொந்துகொண்ட பொழுது, மாதவிக்குத் தர ஒன்றுமில்லை எனக் கோவலன் வருந்துவதாக எண்ணிக் கண்ணகி நகைமுகம் காட்டிச் சிலம்புகள் உள்ளன எடுத்துச் செல்லுங்கள் என்றாளாம்:

“நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிச்
சிலம்புள கொண்மென”
(9:72, 73)

என்னும் பகுதியில் கண்ணகியின் உயரிய பண்பு ஒவியப் படுத்தப்பட்டுள்ளது. வந்த கணவனிடம் முகத்தைச் சுளித்துக் காட்டி வெறுப்பு தெரிவிக்காமல், சிலம்புகள் தவிர்த்த மற்ற எல்லா நகைகளையும் இழந்த நிலையிலும், புன்முறுவலுடன் நகைமுகம் காட்டியது அவளது மென்மைக்குச் சான்று.

2. நகர் எல்லையைத் தாண்டி ஒரு காவதம் சென்றதுமே, மதுரை எவ்வளவு தொலைவில் உள்ளது எனக் கேட்டதும் மென்மையே.

3. கடிய கொடிய வழியில் நடக்க முடியாமல் கணவனின் தோள்மேல் தாங்கலாகக் கையைப் போட்டுக் கொண்டு நடந்ததும் மென்மையே.

4 வம்பப் பரத்தனும் பரத்தையும் கோவலனையும் கண்ணகியையும் பார்த்த பின், இவர்கள் யாரெனக் கவுந்தி யைக் கேட்க, என் மக்கள் என்று கவுந்தி கூற, அண்ணனும் தங்கையும் காதலர்களாக இருப்பதுண்டோ என அவர்கள் எள்ளி நகையாடியபோது, அதைக் கேட்கப் பொறாமல் கண்ணகி தன் செவிகளைக் கையால் பொத்திக் கொண்டு கோவலன் முன்னே நடுங்கியதும் மென்மையே.

5. கவுந்தி பரத்தர்களை நரியாகச் சபித்தபோது, கண்ணகி கோவலனுடன் சேர்ந்துகொண்டு, அவர்கட்காக இரங்கிச் சாப விலக்கு செய்யும்படி வேண்டியதும் மென்மையே.

6. ஐயை கோட்டத்தில் தங்கியிருத்தபோது, தெய்வம் ஏறிய சாலினி கண்ணகியைப் பலவாறு புகழ்ந்தபோது, அந்தப் புகழ்ச்சிக்கு நாணிக் கணவன் பின்னால் ஒடுங்கி நின்று புதியதோர் புன்முறுவல் பூத்தாள்:

"பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டி என்று
அரும்பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி
விருந்தின் மூரல் அரும்பி நிற்ப" (12:51-53)

பல்லாண்டு கடந்தபின் மீண்டும் அரிதாக அடைந்த கணவன் ஆதலின் அரும்பெறல் கணவன்’ எனப்பட்டது. "விருந்தே புதுமை" என்பது ஒரு வழக்கு. கண்ணகி சிரித்து நீண்ட நாள் ஆனதால், இதை 'விருந்தின் மூரல்' என்றார். 'பெண் சிரித்தால் போயிற்று - புகையிலை விரித்தால் போயிற்று' என்பது அந்தக் காலப் பழமொழி. எனவேதான், பெரிய அளவில் சிரிக்கவில்லை - சிரிப்பு அரும்பு நிலையிலேயே இருந்தது என்னும் கருத்தில் அரும்பி நிற்ப எனப்பட்டது. கண்ணகியின் மென்மைக்கு இதுவும் சான்று.

7. மாதரியின் வீட்டில், கண்ணகி கணவற்காக உணவு ஆக்கி, கணவனது காலைத் தூய்மை செய்து தடுக்கு இட்டு இருக்கச் செய்து நல்ல வாழையிலை போட்டு உணவு பரிமாறி 'அமுதம் உண்க அடிகள்' என அன்போடு உரைத்தாள்.

8. கோவலன் கண்ணகியை நோக்கி, எழு என்றதும் எழுந்து வந்தனை, உனக்கு யான் ஒரு நன்மையும் செய்யவில்லை - என்றபோது, கண்ணகி தனக்காக வருந்தாமல், பிறர்க்கு விருந்து படைத்தல் முதலிய உதவிகளைச் செய்ய முடியாது போனமைக்கு வருந்தியதாகக் கூறினாள்.

9. கண்ணகி, தன் மாமனாரும் மாமியாரும் தனக்காக வருந்தாதிருக்கும்படி, நான் மகிழ்ச்சியாகவே உள்ளேன் என்று அவர்கட்கு அறிவிப்பதற்காகப் பொய்ச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தாளாம்.

10. கண்ணகி உண்டு முடித்த கணவனுக்கு வெற்றிலை பாக்கு அளித்து அன்புக் கடமையின் உயரிய எல்லையில் நின்றாள். கோவலன், சிலம்பு கொண்டு கடைத்தெருவிற்குப் புறப்படுமுன், கண்ணகியைக் கட்டித் தழுவி ஆறுதல் உரை கூறி, தன் கண்களிலிருந்து வந்த நீரை மறைத்துக் கொண்டு புறப்பட்டபோது இருவரும் உணர்ச்சியின் எல்லையைக் கடந்தனர்.

கோவலன் கண்ணகியைப் பிரிந்து சென்றதும் விரைவில் இறந்துவிடப் போகிறான். ஆதலின், காப்பிய முன்னோட்டச் சுவைக்காக இளங்கோ இப்படி ஓர் உருக்கமான காட்சியைப் படைத்துள்ளார். இங்கே, சேக்சுபியரின் (Shakespeare) ‘இரண்டாம் ரிச்சர்டு மன்னன் (King Richard II) என்னும் நாடகத்தில் உள்ள ஒரு காட்சி நினைவிற்கு வருகிறது. ரிச்சர்டு மன்னன் இங்கிலாந்தை ஆண்டு கொண்டிருந்தபோது தன் பங்காளி மன்னனாகிய பாலிங் புரோக் (Bolingbroke) என்பவனை நாடு கடத்தியிருந்தான். ரிச்சர்டு மேல்பார்வை யிடுவதற்காக அயர்லாந்து சென்றிருந்தபோது, பாலிங் புரோக் இங்கிலாந்துக்கு வந்து ஆட்சியைப் பிடித்துக் கொண்டு இரண்டாம் ரிச்சர்டு மன்னனைச் சிறையிலிட்டான். பின்னர்க் கொலை ஒறுப்பும் (மரணதண்டனையும்) தரப் பட்டது. இறுதியில் ரிச்சர்டைக் கொலைக் களத்திற்கு அழைத்துக்கொண்டு போனபோது, அவனுடைய மனைவி வழியில் அவனைக் காண்கிறாள். இருவரிடையேயும் உருக்கமான கட்டம் நடந்தது. பின்னர் ரிச்சர்டு கொலையுண்டான்.

இது சேக்சுபியர் எழுதியது. நடந்துள்ள வரலாற்றின் படி நோக்கின், ரிச்சர்டும் அவன் மனைவியும் சந்திக்கவே இல்லையாம். நாடகச் சுவைக்காகச் சேக்சுபியரே இப்படி ஒர் உருக்கமான காட்சியைப் படைத்தாராம் - என்று திறனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

சேக்சுபியருக்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே இளங்கோவடிகள் இப்படி ஒர் உருக்கமான காட்சியைப் படைத்திருப்பது மிக்க இலக்கியச் சுவையளிக்கிறது. இப்படியெல்லாம் மிகவும் மென்மை உடையவளாகக் கண்ணகியைப் படைத்துக்கொண்டு வந்த இளங்கோ, திடீர்த் திருப்பமாக அவளுடைய வன்முறைகளை அடுக்கிக் கொண்டு போகலானார். அதாவது, கோவலன் இறந்ததைக் கேட்டதும் அவள் ஆறாத் துயர் அடைந்து வஞ்சினம் கூறிக்கொண்டு ஊரில் அலைந்தது - பாண்டியனிடம் அவன் இறக்கும் அளவுக்குக் கடுமையாகப் பேசி வழக்குரைத்தது - மதுரையை எரியூட்டியது - தனியாக வழி கடந்து சேரநாட்டு எல்லையை அடைந்து இறுதி எய்தியது - என்பன அவள் ஆற்றிய வன்முறைகள்.

கோவலனது இறப்புக்கு முன்னர்க் கண்ணகி கைக் கொண்ட செயல்கள், கோவலனது முடிவுக்குப் பின்னர்க் கண்ணகி கடைப்பிடித்த வன்செயல்கட்கு முன்னோட்டமாக அமைந்திருப்பதை அறியலாம்.

மற்றும் ஒன்று கவுந்தி, கோவலன் கண்ணகி ஆகிய மூவரும் வழியில் ஐயை கோட்டத்தில் தங்கியிருந்தபோது, தெய்வம் ஏறிய சாலினி கண்ணகியைக் குறிப்பிட்டு,

"இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய
திருமாமணி..." (12:47-50)

என்று கூறினாள். இதுவும் ஒருவகை முன்னோட்டமே. இறுதியில் கண்ணகி குடமலை நாடாகிய சேரநாட்டுப் பகுதியிலே சென்று இறுதி எய்தியதும், அங்கே அவளுக்குக் கோயில் எடுத்ததும், தமிழ்ப் பாவையானதும், உலகினரால் (பல நாட்டினரால்) அவரவர் இடத்தில் கோயில் எடுத்து வழிபடப்பட்டதும் பின்னால் நடந்ததை முன்னாலேயே குறிப்பாக அறிவிப்பது போல் சாலினியின் உரை இருக்கிறதல்லவா?

பாண்டியன் பெருமை

அடுத்த கட்டம் பாண்டியனைப் பற்றியது. பாண்டியன் நெடுஞ்செழியன் செங்கோல் கோடித் தீர்ப்பு வழங்கிக் கோவலனைக் கொல்வித்ததனால், பாண்டியர் குலத்திற்கும் மதுரைக்கும் பின்னால் தாழ்வு நேர்ந்ததல்லவா? இந்தப் பின்னோட்டத்திற்கு முன்னோட்டமாகப் பாண்டியன் பெருமையும், மதுரையின் பெருமையும், கவுந்தி, கோவலன், பாணர்கள், மாங்காட்டு அந்தணன். மாடலன், மாதரி, வாயிலோன், மதுராபதி முதலியோரால் மிகவும் பாராட்டிப் புகழ்ந்து பேசப்பட்டுள்ளன. அப்பாராட்டுப் புகழுரைகள் முறையே ஒவ்வொன்றாய் வருமாறு:

கவுந்தி

கோவலனும் கண்ணகியும் புகாரை விட்டு நீங்கிக் கவுந்தியடிகள் இருந்த பள்ளியை அடைந்து தாங்கள் மதுரைக்குச் செல்வதாகக் - கவுந்தியடிகளிடம் கூறினர். யானும், தென் தமிழ் நாட்டில் உள்ள 'குற்றமற்ற மதுரைக்குச் செல்லும் விருப்பம் உடையே னாதலின் யானும் வருவேன் என்று கவுந்தி அறிவித்தார்:

“தென் தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையே னாதலின்
போதுவல் யானும் போதுமின்”
(10:58-60)

இது பாடல் பகுதி, இளங்கோ தம் எழுத்தாணியின் வாயிலாக, ‘தீதுதீர் மதுரை’ என்று கவுந்தி சொல்லும்படி யாகச் செய்துள்ளார். ஆனால் மதுரையில் இவர்கட்குத் தீது காத்திருக்கிறது என்பதை இவர்கள் அப்போது அறிய மாட்டார்கள் - பின்பு இளங்கோவே அறிவார் அல்லவா?

மாங்காட்டு மறையவன்

மூவரும் வழியில் ஓர் இளமரக் காலில் தங்கியிருந்த போது, பாங்காட்டு மறையவன் என்பான், பின்வருமாறு பாண்டிய வேந்தை நீள வாழ்த்திக் கொண்டே அங்கு வந்து சேர்ந்தான். அந்த நீண்ட நெடிய வாழ்த்து வருமாறு:

"வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதோ றுாழி உலகங் காக்க
அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை யாண்ட தென்னவன் வாழி
திங்கள் செல்வன் திருக்குலம் விளங்கச்
செங்கண் ஆயிரத்தோன் திறல்விளங்கு ஆரம்
பொங்கொளி மார்பில் பூண்டோன் வாழி
முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்று
இடியுடைப் பெரு மழை எய்தா தேகப்
பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப
மழை பிணித் தாண்ட மன்னவன் வாழ்கெனத்
தீதுதிர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி
மாமுது மறையோன் வந்திருந்தோனை". (11:15:31)

முன்னர் ஆண்டபாண்டியர் குல மன்னர்களின் வெற்றிச் செயல்கள் இங்கே கூறப்பட்டுள்ளன. ஓர் அரசனுக்கு, அவனுடைய முன்னோர்களின் புகழ்களை எல்லாம் உரியனவாகச் சேர்த்துச் சொல்லுதல் ஒருவகை மரபு. அந்த முறையில், சிலப்பதிகாரக் காலத்தில் இருந்த பாண்டியன் நெடுஞ்செழியன் தன் முன்னோர்களின் வெற்றிகளை எல்லாம் உடையவனாகப் படைக்கப்பட்டுள்ளான். அவை: கங்கையும் இமயமும் கொண்டமை, வேல் எறிந்து கடலை வற்றும்படிச் செய்தமை, இந்திரன் பூட்டிய ஆரத்தைப் பூண்டமை, இந்திரன் முடிமேல் வளை எறிந்தமை, முகிலைத் தளையிட்டமை முதலியன. இவ்வரலாறுகளைத் திருவிளையாடல் புராணத்தில் விரிவாகக் காணலாம்.

மேற்கூறிய பெருமைகளை உடைய பாண்டியன் ஊழிதோறு ஊழி வாழ்க - தென்னவன் வாழ்க - பூண்டோன் வாழ்க - மன்னவன் வாழ்க - தென்னனை வாழ்த்தி - என இந்தப் பகுதியில் ஐந்து இடங்களில் வாழ்த்துச்சொல் இடம் பெற்றுள்ளது. ஆனால் பாண்டியன் வாழ்ந்தானா? ஊழி தோறு ஊழி வாழ்க என்று வாழ்த்தினானே - ஒரு ' சில நாள் களிலே பாண்டியன் இறந்துவிட்டானே. ‘தீது தீர் சிறப்பின் தென்னன்’ என்றானே - ஆனால் தீது தீராயல் சில நாள் அளவிலேயே பெரிய கொலைக்குற்றத் தீது நேர்ந்து விட்டதே. எனவே, மாங்காட்டு மறையவன் வாயிலாக இளங்கோ பாண்டியனை வாழ்த்திய வாழ்த்துகள் காப்பிய முன்னோட்டச் சுவை பயப்பனவாகும்,

கோவலன்

கோவலன், இனிக்கொடிய வெயில் வருத்தும் பகலிலே பயணம் செய்யவேண்டா - நிலா வீசும் குளிர்ந்த இரவிலேயே பயணம் செய்யலாம் என்று கவுந்தியிடம் கூறும்போது, பாண்டியனைப் புகழ்கிறான். பாண்டியன் நாட்டில் கரடி பிற உயிர்கள் ஆக்கிய புற்றை அகழாது; புலி மானைக் கொல்லாது; பாம்பு, முதலை, இடிமுதலியவற்றால் எவருக்கும் துன்பம் நேராது - எனப் பாண்டிய நாடு எங்கும் புகழ் பரவியது எனவே இரவில் அச்ச மின்றிச் செல்லலாம் - என்றான்.

“செங்கோல் தென்னவர் காக்கும் நாடென
எங்கணும் போகிய இசையோ பெரிதே”
(13:9-10)

பாணர்கள்

செங்கோலை உடைய தென்னவர் என்பது குறிப்பிடத் தக்கது. கோவலன் கிட்டத்தட்ட மதுரையை நெருங்கிய நிலையில் வழியில் பாணர்களை நோக்கி மதுரை இன்னும் எவ்வளவு தொலைவில் உள்ளதென வினவினான். மதுரை அண்மையில் உள்ளது; தனியாகச் செல்லினும் வழியில் தடுப்பவரோ பறிப்பவரோ இல்லை - துணிவுடன் செல்லலாம் எனப் பாண்டியனது ஆட்சியைப் பாணர்கள் புகழ்ந்தனர்.

மீண்டும் கோவலன்

மதுரை நகரைச் சுற்றிப் பார்த்த கோவலன் கவுந்தியிடம் வந்து, மதுரையின் சிறப்பையும் பாண்டியனின் செங்கோன்மையையும் புகழ்ந்தான்:

"நிலங் தரு திருவின் நிழல்வாய் நேமி
கடம்பூண்டு உருட்டும் கெளரியர் பெருஞ்சீர்க்
கோலின் செம்மையும் குடையின் தண்மையும்
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்
பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட
மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு
அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து
தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும்

மாதவத் தாட்டிக்குக் கோவலன் கூறுழி" (15:1-10)

இது பாப்பகுதி. செங்கோலின் நேர்மையையும், குடையின் குளிர்ச்சியையும், வேலின் மறத்தையும், மதுரையின் தீது தீர் சிறப்பையும், தென்னவன் கொற்றத்தையும், இன்னும் சிறிதளவு காலத்தில் பாண்டியனது தவறால் இறக்கப் போகின்ற கோவலன் வாயாலேயே கூறவைத்துள்ளார் ஆசிரியர் இளங்கோ. கோவலன் இவ்வளவையும் குறுகிய நேரத்தில் கண்டு அறிந்திருக்க முடியுமா?

உலகில் பல இடங்களில் பசியாலும் பகையாலும் மக்கள் இடம் பெயர்கின்றனர். ஆனால், மதுரை மக்கள் மதுரையை விட்டு அகல வேண்டியது நேராமல் சிறப்பாகப் பாண்டியர் ஆள்கின்றனர் என்பதைப் 'பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்’ என்னும் பகுதியால் அறியலாம். இதுவும் முன்னோட்டச் சுவையே அண்மைக் காலத்தில் மதுரையும் பாண்டியனும் படவிருக்கும் பாடு மிகவும் பெரியதல்லவா?

மாடலன்

மாடலன் என்னும் அந்தணன், கொலைக் களக்காதைக்கு முன் காதையாகிய அடைக்கலக் காதையில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளான். இதுவரையும் எந்தப் பெருமையான செயலையும் செய்யாத கோவலனைச் சிறந்த கதைத்தலைவனாக (Hero) ஆக்க, இளங்கோ பாடலனைப் பயன்படுத்திக்கொண்டுள்ளார். கோவலனின் பழைய வெற்றிச் செயலையும் வள்ளன்மையையும் இரக்கத்தையும் இன்ன பிற சிறப்புச் செயல்களையும் குறிப்பிட்டு மாடலன் கோவலனைப் பாராட்டுகிறான். இந்தப் பாராட்டுகள் இல்லையெனில், அடுத்த காதையில் கோவலன் இறந்ததும், அவன்மேல் மக்கட்கு (நூல்படிப்பவர்க்கு) இரக்கமும் பரிவும் ஏற்பட முடியாதல்லவா? விளையாட்டில் பந்தைச் சரியான இடத்தில் போடுவது போல், கோவலன் பெருமையைச் சரியான இடம் பார்த்துச் செருகியுள்ளார் இளங்கோ, (கோவலன் சிறப்புகள் வேறு தலைப்பில் கூறப்பட்டுள்ளன.) புறஞ்சேரியை விட்டு நீங்கிக்கண்ணகியுடன் மதுரை நகர்க்குள் சென்றாலேயே காக்கப்படுவீர் - ஆதலின் மதுரைக்கு விரைந்து செல்க எனக் கோவலனைத் தூண்டியனுப்பினான் மாடலன்.

மாதரி

“நாவலந் தண்பொழில் மன்னர்
ஏவல் கேட்பப் பாரரசு ஆண்ட
மாலை வெண்குடைப் பாண்டியன்”

என்று ஆய்ச்சியர் குரவையின் தொடக்கத்தில் பாண்டியனை மாதரி புகழ்கின்றாள். அவளே, ஆய்ச்சியர் குரவைக் காதையின் இறுதியில் பாண்டியனை வாழ்த்துகிறாள். இந்திரன் முடிமேல் வளை எறிந்த மரபில் வந்த பாண்டியனது முரசம், எப்போதும் பாண்டியனுக்கு வெற்றி முரசமாகவே முழங்குவதாகுக என்னும் கருத்தில் வாழ்த்து அமைத்து வாழ்த்தினாள். பாடல்:

"வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து
இடிப்படை வானவன் முடித்தலை உடைத்த
தொடித்தோள் தென்னவன் கடிப்பிகு முரசே"

இது பாடல் பகுதி. மாதவியின் வாழ்த்து பாண்டியன் இறந்ததை அறியா முன்னம் நிகழ்ந்தது.

வாயிலோன்

வழக்கு உரைக்கக் கண்ணகி வந்திருப்பதைப் பாண்டியனுக்கு அறிவிக்கச் சென்ற வாயில் காவலன் பெரிய அளவில் பாண்டியனை வாழ்த்தியுள்ளான்.

"வாழிஎம் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி
பழியொடு படராப் பஞ்சவ வாழி" (20:30-33)

என்பது வாயிலோனது வாழ்த்து. இந்தப் பகுதியில் ஆறு வாழிகள் உள்ளன. என்ன பயன்? இன்னும் சிறிது நேரத்தில் பாண்டியன் இறக்கப் போகின்றானே. மற்றும், "பழியொடு படராப் பஞ்சவ" என்று விளித்துள்ளான். இன்னும் சிறிது நேரத்தில் பழி படரப் போகிறதே.

இங்கே படர்தல் (படரா) என்னும் சொல்லை உற்று நோக்கவேண்டும். மர இனமாகிய மரம் செடி கொடி புல் பூண்டு என்பனவற்றுள் கொடி தவிர்த்த மற்ற நான்கும் ஒரே இடத்தில் நிற்கும். கொடி மட்டும் நெடுகிலும் படரும் - அதாவது - பரவும் - பாண்டியனது பழியும் படர்ந்து இன்று வரையும் நினைக்கப் படுகின்றதல்லவா?

மேலும் வாயிலோன் தொடர்கிறான்; கணவனை இழந்தவள் என்று கூறிக் கொண்டு கையிலே ஒரு சிலம்பை ஏந்தியபடிப் பெண்ணொருத்தி வந்துள்ளாள். அவளை நோக்கின், எருமைத்தலை அசுரனைக் கொன்ற கொற்றவையாகவோ, அறுவர்க்கு இளைய நங்கையாகவோ, சிவனோடு முரணி ஆடிய அணங்காகவோ, கானகம் உவந்த காளியாகவோ, தாருகாகரனது மார்பைக் கிழித்த பெண்ணாகவோ தெரியவில்லை - என்று கூறினான்;

“அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக் கொடி
வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை யல்லள்
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு, சூருடைக்
கானகம் உவந்த காளி, தாருகன்
பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்”
(20:34-41)

என்பது பாடல் பகுதி, வாயிலோன் கூறியிருப்பது, எங்கள் அப்பா குதிருக்குள் இல்லை' என்று சொன்ன கதைபோல் இருக்கின்றதன்றோ? வாயிலோன் யார் - யாராக இல்லை என்றானோ - அவர் அவராகக் கண்ணகி தோற்றத்தில் காணப்படுகின்றாள் - என்ற கருத்து இதில் மறைபொருளாக உள்ளது. இதைக் கொண்டு, காளிதான் கண்ணகியாக வந்தாள் எனக் கதை கூறுவாரும் உளர். இது பின்னர் வேறொரு தலைப்பில் ஆராயப்படும்.

இது காறும் கூறியவற்றால், பின்னால் நடந்தன வற்றிற்கு முன்னோட்டமாக இளங்கோ வடிகள் கூறியவை காப்பியத்திற்குச் சுவையூட்டுகின்றன என்று தெளியலாம்.