சிலம்போ சிலம்பு/கோவலன் நிலைமை
19. கோவலன் நிலைமை
சிலப்பதிகாரத்தின் கதைத் தலைவன் (Hero) கோவலன். காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த மாசாத்துவான் என்னும் பெரிய செல்வ வணிகனின் மகன் கோவலன். இவன் ஆடல் கலையையும் பாடல் கலையையும் சுவைக்கத் தெரிந்தவன்; யாழ் மீட்டி முறையாகப் பாடவும் வல்லவன்; இந்தக் கலைகளோடு காமக் கலைக் களியாட்டத்திலும் ஆர்வம் உடையவன். இதற்கு அவனது செல்வம் பெருந்துணை புரிந்தது. பணக்காரர் வீட்டுப் பையன்கள் சிலர், இந்தக் காலத்திலும் காமக்கலை விரும்பித் திரிவது கண்கூடு.
மங்கல வாழ்த்துப் பாடல்
கோவலன் செவ்வேளாம் முருகன் என மதிக்கத்தக்க செந்நிறமுடைய அழகன்; காணும் கன்னியர் கூட்டம் பாராட்டி மகிழத்தக்க அளவுக்குப் பெருமையும் புகழும் உடையவன். இவனது பதினாறாம் அகவையில் திருமணம் நடைபெற்றதாம். பாடல்
"பெருகிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனிக் குடிகளோடு உயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதி பிறர்க்கார்த்தும் மாசாத்துவான் என்பான்
இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டாண் டகவையான்
அவனுந்தான்,
மண்தேய்ந்த புகழினான் மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்தும் செவ்வேள் என்று இசைபோக்கும் காதலால்
(1:31-99)
சோழ மன்னனை முதல் குடிமகனாக வைத்து எண்ணுங்கால், அடுத்ததாக வைக்கப்பெறும் குடிமக்களுள் மிகவும் உயர்ந்தோங்கிய செல்வனாம் மாசாத்துவான். முடியரசு - குடியரசு என்றெல்லாம் பேசுகிறார்களே சோழனோ, குடிமக்களுக்குள் முதல் குடிமகன் (தலைமகன்) என்று கூறப்பட்டிருப்பது மிக்க சுவை பயக்கிறது. ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்னும் புறநானூற்றுப் (189) பாடலின் பொன்னான கருத்துப்படி, மாசாத்துவான், வந்து கொண்டிருந்த செல்வங்களைப் பிறர்க்கு வழங்கினானாம்.
அத்தகையோனின் செல்வ மகன் கோவலன். ‘மண் தேய்ந்த புகழினான்’ எனக் கோவலனை இளங்கோ அடிகள் குறிப்பிட்டுள்ளார். இந்த மண்ணுலகம் மிகப் பெரியது; ஏறத்தாழ இருபத்தைந்தாயிரம் கல் (மைல்) சுற்றளவுள்ளது. இதனினும் பெரிய புகழ்ப் பருமன் உடையவனாம் கோவலன். மண்ணுலகின் அளவைத் தேய்த்த அதாவது குறைத்த புகழாளன் என்பது கருத்து. இந்தப் பொருள், அளவு (quantity) கருதிக் கூறப்பட்டது.
தரம் (quality) கருதியும் இதற்கு வேறொரு வகையான பொருள் கூறலாம். அதாவது: உலகில் உயிர்கள் பயன் படுத்தும் உணவுப்பொருள், உடைப்பொருள், உறையுள் பொருள், உலோகப் பொருள்கள் யாவும் மண்ணிலிருந்தே - மண் வாயிலாகவே கிடைக்கின்றன. “இலம் என்று அசைஇ, இருப்பாரைக் காணின், நிலம் என்னும் நல்லாள் நகும்” (1040) என்னும் குறள் ஈண்டு எண்ணத் தக்கது. இவ்வாறு உதவும் மண்ணைவிட மிகுதியாக உதவுகின்றவனாம் கோவலன். இவ்வகையிலும், மண்ணின் புகழைத் தேய்த்தவனாம் - குறைத்தவனாம் கோவலன் - என்பது மற்றொரு வகைக் கருத்து. பிறர்க்கு உதவுவதால்தான் மிக்க புகழ் கிடைக்கும். அதுவே உயர்ந்த புகழாகும்."ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு" (231)
"உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று
என்னும் குறட்பாக்கள் ஈண்டு எண்ணத்தக்கன.
கதைத் தலைவனாகிய கோவலன், தொடக்கத்தில் பெருமைக்கு உரிய செயல் ஒன்றும் செய்யாமையால், அவன் இறந்த பின், காப்பியத்தைப் படிப்பவர்க்கு அவன் மேல் இரக்கமோ - பரிவோ ஏற்படாது என்பதற்காக, அவன் மாபெருஞ் சிறப்புச் செயல்கள் (சாதனைகள்) புரிந்துள்ளான் என ஆசிரியர் இளங்கோ அடிகள், அடைக்கலக் காதையில், மாடலன் என்பவன் வாயிலாகக் கோவலனுடைய சிறப்புச் செயல்கள் பலவற்றை அறிவித்துள்ளார் என்று பலரும் கூறுவதுண்டு. இதில் ஒரளவு உண்மை உள்ள தெனினும், இந்தப் பகுதி தேவையில்லாமலேயே, கோவலனை உயர்த்திக் காட்டத் தொடக்கமாகிய மங்கல வாழ்த்துப் பாடலில் கூறப்பட்டுள்ள "மண் தேய்த்த புகழினான்" என்னும் இந்த ஒரு தொடரே போதுமே!
நாடு காண் காதை
கோவலனின் இரக்கம்:
கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும் வழியில் கவுந்தியடிகள் என்னும் சமணப் பெண் துறவியாரின் துணையைப் பெற்று வழி கடந்தனர். மூவரும் சீரங்கத்துக்கு அப்பால் காவிரியின் தென்கரையை அடைந்து ஒரு சோலை யில் தங்கி இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அப்போது ஒழுக்கம் கெட்ட பரத்தை ஒருத்தியும் வந்த இழிமகன் ஒருவனும் இம் மூவரையும் கண்டனர். கவுந்தியை நோக்கி, கோவலனையும் கண்ணகியையும் சுட்டி, இவர்கள் யார் என்று வினவினர். இவர்கள் என் மத்தள் (பிள்ளைகள்) என்றார் கவுந்தி, உடனே அவன்?'தின் மக்களாகிய இந்த அண்ணனும் தங்கையும் கணவனும் மனைவியுமாகக் காட்சி தரலாமா? - எனக் கிண்டலாகக் கேட்டனர். இவ்வாறு கேட்டதற்கு உரிய காரணப் பொருத்தத்தையும் குறிப்பாக இளங்கோவின் பாடல் பகுதியால் அறிய முடிகிறது. கவுந்தியோ துறவி. இவர்கள் இருவருமோ மன்மதனும் அவன் மனைவி இரதியும் போன்று அழகாகவும் இணைந்தும் காணப்பட்டனர். துறவிக்கும் இந்த இளைய அழகர்கட்கும் என்ன தொடர்பு? - என்றெல்லாம் எண்ணிக் கிண்டல் செய்தாராம். வெற்று வாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்தால் போதுமே! இயற்கையிலேயே பயனில் சொல் பேசும் இந்தத் தீயோருக்கு, இந்தச் சூழ்நிலை மேலும் இழிமொழி கூற வாய்ப்பாயிற்று. பாடல் பகுதி:
"போதுசூழ் கிடக்கையோர் பூம்பொழில் இருந்துழி
வம்ப்ப் பரத்தை வறுமொழி யாளனொடு
கொங்கலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர்,
காமனும் தேவியும் போலும் ஈங்கிவர்
ஆரெனக் கேட்டீங்கு அறிகுவம் என்றே,
நோற்றுணல் யாக்கை நொசிதவத் தீருடன்
ஆற்றுவழிப் பட்டோர் ஆரென வினவ, என்
மக்கள் காணிர் மானிட யாக்கையர்
பக்கம் நீங்குமின் பரிபுலம்பினர் என,
உடன்வயிற் றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ கற்றறிந்தீர் என" (218-228)
இந்தப் பகுதியால், தமிழர்களுள் அண்ணன் தங்கை முறையினர் கணவன்-மனைவியாக மணந்து கொள்வதில்லை என்ற உயரிய நாகரிகக் கோட்பாடு புலனாகிறது. வேறு இடத்தில், அண்ணனும் தங்கையும் மணந்து கொள்வது உண்டு ஆதலின், இங்கே தமிழர் நாகரிகம் சிறப்பித்துச் சுட்டப்பட்டது. இராமனும் சீதையும் அண்ணனும் தங்கையும் ஆவர் - இவர்கள் கணவனும் மனைவியுமாக மணந்து கொண்டனர் எனப் பெளத்த இராமாயணம் கூறுகிறது. இதை இம்மட்டில் விட்டுவிடலாம்.
வடமொழியில் உள்ள சகோதரர் என்பதன் நேர் மொழி பெயர்ப்பாக, 'உடன் வயிற்றோர்' என்பது இளங்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. சக என்றால் உடன்; உதரம் என்றால் வயிறு, சக + உதரர் என்றால் உடன்வயிற்றோர் - என்பது பொருளாம். வடமொழியில் இந்தப் புணர்ச்சியைக் குணசந்தி என்பர். புறநானூற்றில் உள்ள
"பிறப்போ கன்ன உடன் வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்" (183-34)
என்னும் பாடல் பகுதியில் உள்ள 'உடன் வயிறு' என்பதும் சகோதர நிலையை அறிவிக்கிறது. ஒளவையின்
"உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி" (மூதுரை-20)
என்னும் பாடலில் உள்ளவாறு உடன் பிறந்தார் எனலும் உண்டு. உடன் வயிறு, உடன் பிறப்பு என்பன ஒருபொருள் உடையன. சிற்றுார் மக்கள், உடன் பிறந்தவரை, 'என் பிறப்பு' எனக் குறிப்பிடுவது ஈண்டு எண்ணத் தக்கது. எனவே, இனி, பேசுவோரும் எழுதுவோரும், சகோதரர்கள் என்று கூறாமல், உடன் வயிற்றார் அல்லது உடன்பிறந்தார் என எழுதுவதும் பேசுவதும் நன்று.
இழிமக்கள், கோவலன்-கண்ணகியைப் பற்றி இழிமொழி கூறியதால் சினங்கொண்ட கவுந்தியடிகள், அவர்கள் நரிகள் ஆகுக எனக் கெடுமொழி (சாபம்) இட்டார். அவ்வாறே அவர்கள் நரிகள் ஆகி ஊளையிட்டனர். அந்த ஊளையைக் கேட்டதும், கோவலனும் கண்ணகியும் இப்படி நேர்ந்து விட்டதற்கு நடுங்கினர்; கவுந்தியை நோக்கி, அவர்கள் அறியாமல் செய்த பிழையைப் பொறுத்து, அவர்களுக்குக் கெடுமொழி நீங்கும் காலம் கூற வேண்டினர். பின்னர்க் கவுந்தியடிகள், உறையூர் மதிலின் வெளிப்புறக் காட்டில் பன்னிரண்டு திங்கள் (ஓராண்டு) காலம் அலைந்து திரிந்து பின்னர்ப் பழைய உருவம் பெறுவாராக எனக் கெடுமொழியை விடுவித்தார். பாடல்:
“குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு
நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி
நெறியின் நீங்கியோர் நீரல கூறினும்
அறியாமை என்று அறியல் வேண்டும்
செய்தவத்தீர் நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்திக் காலம் உரையீரோ என,
அறியாமையி னின்று இழிபிறப் புற்றோர்
உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுங்கிப்
பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின்
முன்னை யுருவம் பெறுக ஈங்கு
என்பது பாடல் பகுதி. கூவிளி = ஊளை. நீரல = நீர்அல = ஒழுங்கற்றவை. உய்திக் காலம் = சாப விமோசன காலம். சாப விடை - விடை = விமோசனம். நொச்சி=மதில். ஒரு புடை-ஒரு பக்கக் காடு. திருமுன் = சந்நிதி.
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் செலுத்தப்படும் இந்தக் காலத்தை விட்டுப் பண்டைக் காலத்திற்குச் செல்வோம். தலைநகருக்குக் காவலாக மதில் அரண், நீர் (அகழி) அரண், மணல் அரண், காட்டு அரண், மலை அரண் முதலியன இருக்கும். இங்கே, ‘உறையூர் நொச்சி ஒரு புடை’ என்பது எண்ணத் தக்கது. உறையூர் காவிரிக்கரை சார்ந்த சோழரின் தலைநகரம். அதைச் சுற்றி மதில் அரண் - அடுத்து நீரரண் - அடுத்து மரஞ்செடி கொடிகள் அடர்ந்த காட்டரண் இருந்தன. நரிகள் இருப்பது காட்டில் ஆதலால், நொச்சி ஒரு புடை என்பது, மதில் அரணுக்கு அப்பால் உள்ள காட்டைக் குறிப்பதாயிற்று.
இந்தப் பகுதியில் கொள்ள வேண்டியது. தாழ்த்திப் பேசியவர்களைப் பொறுத்தருளிப் பழைய உருவம் பெறச் செய்யுமாறு கவுந்தியடிகளை வேண்டிய கோவலனுடைய பண்புடைமை - அதாவது - பிறர் குற்றம் பொறுத்தல் - பிறருடைய துன்பத்தைப் பொறுக்க முடியாமை - அயலாரிடத்தும் இரக்கமும் அன்பும் செலுத்துதல் முதலிய பண்புடைமை கோவலனது பெருமைக்குச் சான்றாக உள்ளமையை அறிதலாகும்.
ஊர் காண் காதை
குற்றம் ஒப்புதல்
பலர் தாம் செய்த பிழையை ஒத்துக்கொள்ளாமல் சரியே என்பர். தமது குற்றத்தை உணர்ந்து ஒத்துக் கொள்பவர் மிகவும் சிலரேயாவர் - இவர்களுள் கோவலனும் ஒருவன். மதுரையின் புறஞ்சேரிப் பகுதியிலே மூவரும் இருந்தபோது, கோவலன் கவுந்தியடிகளிடம் தனது குறைபாட்டை - தனது தவறைக் கூறி வருந்துகிறான்.
தவசியாம் அடிகளே! நான் இதற்குமுன், செல்ல வேண்டிய வழியில் செல்லாமல் தீய வழியில் ஒழுகி இளமையையும் செல்வத்தையும் நிலையாமை உடையனவாக்கினேன். மெல்லிய மேனியுடைய கண்ணகியைக் கடிய கொடிய நெடிய வழியில் நடக்கச் செய்து துன்பப்படுத்தினேன். முன்பின் அறியாத இடத்திற்கு அழைத்து வந்து அருந்துயருக்கு வழிப்பாதை யமைத்துச் சிறுமை படைந்தேன் என்று கூறி நோகிறான்.“கோவலன் சென்று கொள்கையின் இருந்த
காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி
நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி
நறுமலர் மேனி நடுங்குதுயர் எய்த அறியாத்
தேயத்து ஆரிடை உழந்து
என்பது பாடல் பகுதி. மற்றும் ஒன்று வருக:-
கனாத் திறம் உரைத்த காதை
மாதவி பால் வெறுப்பு கொண்ட கோவலன் அவளைப் பிரிந்து கண்ணகியிடம் வந்தான். படுக்கை அறையில் அவளது வாடிய மேனியைக் கண்டு வருந்திக் கூறுகிறான். என் அருமைக் கண்ணகியே வஞ்சகியாகிய மாதவியோடு இந்நாள் வரை இருந்து என் முன்னோர் ஈட்டிய மலையத்தனை செல்வத்தையும் இழந்து விட்டேன். எனது இழி செயலால் ஏற்பட்ட வறுமைக்காக இப்போது மிக்க நாணம் கொள்கிறேன் - என்று கூறி வருந்தினான்;
“காவலன் போலும் கடைத்தலையான் வந்துநம்
கோவலன் என்றாள்ஓர் குற்றிளையாள், கோவலனும்
பாடமை சேக்கையுள் புக்குத்தன் பைங்தொடி
வாடிய மேனி வருத்தம்கண்டு யாவும்
சலம்புணர் கொள்கைச் சலதியோ டாடிக்
குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த
என்பது பாடல் பகுதி. கவுந்தியடிகளிடம் தன் தவறை ஒத்துக்கொண்டான், தன் மனைவியிடமும் தன் தவறை ஒத்துக்கொண்டுள்ளான்.
தெரியாமல் இன்ன தவறைச் செய்து விட்டேனே - என்று பின்பு வருந்தும் படியான செயலைச் செய்யலாகாது; அவ்வாறு செய்துவிடின், அதற்கு உய்வழி - கழுவாய் பிராயச்சித்தம் என்னவெனில், மீண்டும் அத்தகைய செயலைச் செய்யாதிருப்பதுதான் - என்று திருவள்ளுவர் வழி சொல்லிக் கொடுத்துள்ளார்:
“எற்றென்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்
என்பது குறள்.
குடிகாரர்களும் சூதாடிகளும் தேவடியாள் தோழர்களும் தாம் கெட்டாலும், மீண்டும் மீண்டும் பழைய பழக்கத்தை விடாமல் தொடரவே முயல்வர். ஆனால், கோவலன், வள்ளுவர் கூறியுள்ள படி, மீண்டும் பழைய தவறைச் செய்யாமல் உறுதியாகத் திருந்திப் பழைய தவறுக்குக் கழுவாய் தேடிக் கொண்டுள்ளன்.
அடைக்கலக் காதை
பணிவுடமை
பெரியோரைக் கண்டால் செருக்குற்று இராமல் தாழ்ந்து வணங்குவது உயரிய பண்புகளுள் ஒன்று. அவ்வாறே, மாடலன் என்னும் மறையவனைச் சோலையில் கண்டபோது, கோவலன் அருகில் சென்று மாடலனின் அடிகளை வணங்கினான்: -
“மாமறை முதல்வன் மாடலன் என்போன்...(12)
கவுந்தி இடவயின் புகுந்தோன் தன்னைக் (18)
என்பதனால், கோவலனின் பணிவு தெரிகிறது.
பெயர் சூட்டு விழா
கோவலன் மாதவியுடன் குடியும் குடித்தனமுமாய் இருக்கும் அளவுக்கு வந்து விட்டான். அதாவது, அவனுக்கு மாதவியால் ஒரு பெண் குழந்தை பிறந்தது மாதவிக்கு பிள்ளைப் பேற்றுத் தீட்டு கழிந்த பின், முதிய கணிகையர் சேர்ந்துகொண்டு, பெண் குழந்தைக்குப் பெயர் சூட்ட முனைந்தனர்:
“வேந்துறு சிறப்பின் விழுச்சீர் எய்திய
மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தனள் எடுத்து
வாலா மைந்நாள் நீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் மாதவி மகட்கு
நாம நல்லுரை நாட்டுதும் என்று
நாமின் புறுஉம் தகை மொழி கேட்டாங்கு
... .... .... ... ... ... ... .... .... ... ... ...
எம்குல தெய்வப் பெயரீங்கு இடுகென
அணிமேகலையார் ஆயிரம் கணிகையர்
என்பது பாடல் பகுதி. மாதவி, வேந்தனால் தலைக்கோல் விருதும் ஆயிரத்தெட்டுக்கழஞ்சுப்பொன்னும் பெற்றவள் என்பதை, வேந்துறு சிறப்பின் விழுச்சீர் என்னும் பகுதி அறிவிக்கிறது.
இந்தக் காலத்தில் பரத்தமைத் தொழில் தமிழ்நாட்டில் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் காலத்தில் இந்தத் தொழில் அரச ஒப்புதலுடன் நடந்துள்ளது என்பதை இதனால் அறியலாம்.
தாய் குழந்தை பெற்ற சிலநாள் கழித்துத்தான் பிள்ளைப் பேற்றுத்தீட்டு (புனிறு) கழியுமாம். இந்தக் காலத்தில் சில குடும்பங்களில் ஒன்பதாம் நாள் தீட்டு கழிப்பார்கள். நாள் கணக்கில் இடத்திற்கு இடம் மாறுதலும் இருக்கலாம்.இயற்கையாக வாய்த்த மற்றொரு செய்தியும் இங்கே எண்ணத்தக்கது. இக்காலத்தில் பெண் குழந்தையினும் ஆண் குழந்தையே விரும்பப்படுகிறது. எல்லாருக்குமே ஆண் குழந்தைகளே பிறந்தால், அவர்கள் மணம் செய்து கொள்வதற்குப் பெண் வேண்டாவா - என்பதை ஆண் விரும்பிகள் எண்ணிப் பார்ப்பதில்லை. சில இடங்களில் தொடக்கத்திலேயே பல வழிகளில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதாகச் செய்திகள் வருகின்றன.
மற்றையோர் பெண் குழந்தையை விரும்பாமல் ஆண் குழந்தையை விரும்பினும், வேசியர் ஆண் குழந்தையை விரும்பாமல் பெண் குழந்தையையே பெரிதும் விரும்புவர் என ஒரு செய்தி சொல்லப்படுகிறது. ஏன் எனில், எதிர்காலத்தில் வேசித் தொழில் நடத்திப் பொருள் ஈட்டுவதற்கு இந்தப் பெண் பிள்ளைகளே முதல் பொருளாகப் (மூலதனமாகப்) பயன்படுத்தப்படுகின்றனர் - அதனால் என்க. மற்ற வேசியர்களின் குழந்தைகளின் தந்தை பெயர் தெரியாது. மாதவி நிலைவேறு. அவள் கோவலனை மட்டுமே கொண்டிருந்ததனால் அவள் குழந்தை தகப்பன் பெயர் தெரிந்த குழந்தையாகும்.
பெண்குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா நடத்த வேண்டும் என்ற செய்தி கோவலனுடைய செவிக்கு எட்டியது, கோவலனின் முன்னோர்களுள் ஒருவர் நடுக்கடலில் கப்பலோடு அழியக் கூடிய சூழ்நிலை ஏற்பட, அப்போது ‘மணிமேகலா தெய்வம்’ என்னும் ஒரு பெண் தெய்வம் அவரையும் கப்பலையும் காப்பாற்றியதாம். அதிலிருந்து, கோவலனின் முன்னோர் தலைமுறையினர் மணிமேகலா தெய்வத்தையே தம் குலதெய்வமாகக்கொண்டு வழிபட்டு வந்தனர். இந்தக் காலத்திலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு குல தெய்வம் கொண்டாடப்படுவதைக் காணலாம். இவ்வாறே, கோவலனும் தன் குலதெய்வத்தின் பெயராகிய ‘மணிமேகலை’ என்பதையே தன் பெண் குழந்தைக்கு இடச் செய்தான்.
குழந்தை பிறந்ததும் பெயர் சூட்டு விழா, பின் முதல் முதல் தொட்டிலில் இடும் விழா, பின் முதல் முதலாகச் சோறுட்டும் விழா, பின் காதணி விழா, பின் எழுத்தறிவிக்கும் விழா எனப் பல விழாக்கள் நடக்கும். அவற்றுள் முதலாவதாகிய பெயர்சூட்டு விழாவைக் கோவலன் நடத்தினான்.
ஆயிரம் கணிகையர் சேர்ந்து ‘மணிமேகலை’ எனக் கூறிக் கூறிக் குழந்தையை வாழ்த்தினார்களாம். ஆயிரம் என்பது இங்கே மிகுதியைக் குறிக்கிறது. கணிகையர் தெருக்கள் தனியாக இருந்ததை இலக்கியங்களாலும், இப்போதும் இருப்பதை நேரில் பார்த்தும் அறியலாம். தான் பத்தினியாக இருந்தால் தேவடியாள் தெருவிலும் குடியிருக்கலாம் என்னும் பழமொழியிலும் தேவடியாள் தெரு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரம் கணிகையர் என்றால், பல கணிகையர் தெருக்களில் உள்ள கணிகையர் பலரும் ஒரு குலத்தார் போல் கூடிக் கொண்டாடியுள்ளனர் என்பது கருத்தாம். அவ்வளவு ஏன்? இளங்கோவே தம் நூலில் இரண்டு இடங்களில் கணிகையர் வீதி தனியே இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். அவை:
“பண்ணும் கிளையும் பழித்த தீஞ்சொல்
எண்ணெண் கலையோர் இருபெரு வீதி”
(ஊர் காண் காதை - 166:167)
“எண்ணான்கு இரட்டி இருங்கலை பயின்ற
பண்ணியல் மடந்தையர் பயங்கெழு வீதி”
(அழல்படு காதை - 138, 139)
எண் எண் = (8X8= 64) அறுபத்து நான்கு. எண் நான்கு இரட்டி = எண் நான்கு (8x4=32) முப்பத்திரண்டு; எண்நான்கு இரட்டி (32x2=64) அறுபத்து நான்கு. ஆய கலைகள் அறுபத்து நான்கும் வல்ல கணிகையர் இருக்கும் தெருக்கள் - என்பது கருத்து. எனவே, மணிமேகலையின் பெயர் சூட்டு விழாவில் ஆயிரம் கணிகையர் (மிக்க பலர்) இருந்ததில் வியப்பில்லை.
இங்கே, தற்செயலான வாய்ப்பாக நேர்ந்த ஒரு கருத்தைச் சொல்லாமல் விடுவதற்கு இல்லை. கணிகையர் ஒருவரோடு ஒருவர் பகைகொள்வதே இயற்கையாயிருக்க, ஆயிரவர் எங்ஙனம் ஒன்று சேர்ந்தனர். ஈண்டு, நீதி வெண்பா என்னும் ஒரு நூலில் உள்ள ஒரு பாடலின் கருத்து நினைவைத் தூண்டுகிறது. கணிகையரும் நாய்களும் மருத்துவரும் பார்ப்பனரும் கோழிகளும் ஒருவரை ஒருவர் - ஒன்றை ஒன்று கண்டவுடனே எந்தக் காரணமும் இன்றிப் பகைகொள்வது உண்டாம். இதற்குக் காரணம் பிறவிக் குணமேயாம். பாடல்:
“வேசியரும் நாயும் விதிநூல் வயித்தியரும்
பூசுரரும் கோழியும் பொன்னனையாய் - பேசிலொரு
காரணங்தான் இன்றியே கண்டவுடனே பகையாம்
நாய்களும் கோழிகளும் போரிடுவது அறிந்ததே. வேசியர் = கணிகையர். பூசரர் = பார்ப்பனர். கணிகையரும் மருத்துவரும் பார்ப்பனரும் (புரோகிதரும்) தம்வாடிக்கையை மற்றவர் பிடித்துக் கொண்டதாகப் பகை கொள்வர். இங்கே, இதுபோன்றதெனச் சொல்லப்படும் இந்தக் காலக் கருத்து ஒன்று நினைவுக்கு வருகிறது. அதாவது. “தமிழ்ப் புலவர்கள் இருவர் இருக்கும் இடத்தில் போர்மூளும்; அதனால் பக்கத்தில் ஒரு போலீசுகாரர் இருக்கவேண்டும்” எனப் பெரியார் ஈ. வெ. இராமசாமியவர்கள் கூறியதாகச் சொல்லிக்கொண்டு சிலர் தமிழ்ப் புலவர்களைத் தாழ்த்துகின்றனர். ஆனால், நீதி வெண்பா நூலில் உள்ள பட்டியலில் தமிழ்ப்புலவர்கள் இல்லை என்பதையும், எத்தரத்தினரும் - எத்தொழிலினரும் கருத்து வேற்றுமை கொள்வதுண்டு. அது போர் ஆகாது என்பதையும், தமிழ்ப் புலவர்களைத் தாழ்த்துபவர்கள் நினைவில் கொள்ளல் வேண்டும்.
கண்டவுடனேயே பகைகொள்ளும் ஆயிரம் கணிகையர்கள் எவ்வாறு ஒன்று கூடினர் என எண்ணத் தோன்றும். இதிலிருந்து உய்த்துணர்ந்து கொள்ளக் கூடியது. மாதவி கணிகையர் குழுவின் தலைவியாய் இருந்திருக்கவேண்டும், அவள் அரசனால் சிறப்பிக்கப்பட்டவள் ஆயிற்றே. மற்றும், மிகப் பெரிய செல்வனும் தேவடியாள் தோழனுமாகிய கோவலனைக் குளிரப் பண்ணி வைக்க வேண்டும் - என்பது குறிப்பாய்ப் புலனாகலாம். இக்கால நூலாசிரியர் ஒருவர், மாதவியின் தோழியாகிய வயந்த மாலை என்பவளுடனும் கோவலன் உடலுறவு கொண்டிருக்கக் கூடும் என்று எழுதியுள்ளார். பாதை மாறிச் சென்றதால், இந்தப் பழிச் சொற்களை ஏற்க வேண்டி வந்தது கோவலனின் தலைவிதியோ?
கருணை மறவன்
மணிமேகலைக்குப் பெயர் சூட்டு விழா நடத்திய ஞான்று, கோவலன் மாதவியுடன் சேர்ந்து கொண்டு சிவந்த கையால் சிவந்த பொன்மழை பொழிந்தானாம். மழைபோல் பொன்னைப் பொழிவதற்குப் பொன் ஏது? தன் வீட்டிலிருந்து முதல் முதலாக மாதவி வீட்டிற்கு வரும்போதே ஏராளமான செல்வத்தை எடுத்துக் கொண்டு வந்துவிட்டானா? அல்லது, இடையிடையே தன் வீட்டிற்குச் சென்று எடுத்து வந்திருப்பானா? அவ்வாறு போய்ப் போய் எடுத்து வந்திருந்தால் பெற்றோர் கண்டித்திருக்க மாட்டார்களா? இவன் பெயரில் வெளியில் வணிகம் தொடர்பான செல்வங்கள் இருந்திருக்கலாம். வணிக நிறுவனத்தை வற்றச் செய்திருக்கலாம். வீட்டிலிருந்து கொண்டுவரவும் செய்திருக்கலாம்.
கோவலனிடத்தில் பொருள்பெற வந்தவருள் அகவை முதிர்ந்த அந்தணன் ஒருவன், தளர்ந்த நடையுடன் கோலையே காலாக ஊன்றி (தண்டு கால் ஊன்றி) வளைந்த கூன் உடம்புடன் வந்து கொண்டிருந்தான். மதம் பிடித்த யானை ஒன்று அவனைத் துதிக்கையால் வளைத்து எடுத்துக் கொல்லப் பார்த்தது. அந்தக் காட்சியைக் கண்ட கோவலன், உடனே யானைமீது பாய்ந்து அந்தணனைத் துதிக்கையிலிருந்து விடுவித்து அதன் பிடரித் தலைமீதமர்ந்து அடக்கினானாம். இளங்கோவடிகள் இந்தப் பகுதியைச் சுவையாக அமைத்துள்ளார். ‘ஈண்டு, கோல் காலாகக் குறும்பல ஒதுங்கி’ என்னும் புறநானூற்றுப் பாடல் (159) பகுதியும், ‘முக்காலுக்கு ஏகா முன்’ என்று தொடங்கும் காளமேகத்தின் தனிப் பாடலும், இன்ன பிறவும், இளங்கோவின் தண்டு கால் ஊன்றி என்னும் பகுதியோடு ஒப்புநோக்கத் தக்கன. கோவலனின் கொடையையும், அந்தணக் கிழவன் சாகக் கூடாதே என்ற அருளினால் யானையை அடக்கிய துணிவையும் அடிப்படையாகக் கொண்டு, இளங்கோ, கோவலனை,
“கடக்களிறு அடக்கிய கருணை மறவன்” (53)
என்று சுட்டிக் கூறியுள்ளார்.
வீரன் என்னும் வடசொல்லுக்கு நேராக ‘மறவன்’ எனத் தமிழில் மொழி பெயர்த்த இளங்கோ, கருணை என்னும் வடசொல்லுக்கு நேராக ‘அருள்’ என்னும் தமிழ்ச் சொல்லைத் தர மறந்துவிட்டார். தொல்காப்பியர் வீரம் என்பதைப் ‘பெருமிதம்’ என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார். பெருமிதம் நான்கு வகைப்படும் எனப் பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியலில் கூறியுள்ளார். அதாவது: கல்வியால் வருவது, அஞ்சாத் துணிவால் வருவது, புகழால் வருவது, கொடையால் வருவது எனப் பெருமிதம் (வீரம்) நால்வகைப் படுமாம்:
“கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
என்பது தொல்காப்பிய நூற்பா. தறுகண் = அஞ்சாத துணிவுடைமை. இசைமை = புகழ். கோவலன் யாழ் மீட்டிப் பாடியதைக் கொண்டு கல்வி உடையவன் என அறியலாம். யானையை அடக்கியதால் தறுகணன் என்பது புலப்படும். மண்தேய்த்த புகழினான் - இசை போக்கிக் காதலால் கொண்டேத்தும் கிழமையான் என்னும் மங்கல வாழ்த்துப் பாடல் பகுதியால் இசைமை (புகழ்) உடையவன் என்பது பெறப்படும். மகளது பெயர்குட்டு விழாவின்போது,
என்று சொல்லியுள்ளபடி பொன் கொடை கொடுத்ததாலும் இன்னும் சிலர்க்கு உதவி செய்திருப்பதாலும் கொடை என்னும் பெருமிதம் (வீரம்) உடையவன் என்பது அறியப் படும். எனவே, ஆசிரியர் அடிகள், மாடலன் வாயிலாகக் கோவலனைக் கருணை மறவன் எனக் குறிப்பிட்டிருப்பது சாலவும் பொருந்தும்.
“அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அதே துணை”
என்னும் குறள் ஒப்பு நோக்கத்தக்கது.
இரட்டைக் காப்பியம்
சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இரட்டைக் காப்பியம் என்பர். அதற்கு ஏற்றாற்போல், சிலம்பிலுள்ள “தளர்ந்த நடையில் தண்டு கால் ஊன்றி வளைந்த யாக்கைமறையோன்” (15-44,45) என்னும் பகுதி மணிமேகலையிலும்,
“தளர்ந்த நடையில் தண்டுகால் ஊன்றி
என அமைந்துள்ளது வியக்கத்தக்கது. சிலம்பில், கோவலனிடம் பரிசு பெற வந்த அந்தணன் அவ்வாறு கூறப்பட்டுள்ளான். மணிமேகலையில், இந்திரன் ஆபுத்திரனிடம் தள்ளாத கிழ அந்தணனாக வந்தமை அவ்வாறு கூறப்பட்டுள்ளது. இளங்கோவும் சாத்தனாரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் எழுதியிருக்கக் கூடுமா? அல்லது, இயற்கையாக எழுதியிருக்கக் கூடுமா? என்பது எண்ணத்தக்கது.
செல்லாச் செல்வன்
தன் குழந்தையை அறியாது கொன்ற கீரிப்பிள்ளையைக் கொன்றுவிட்ட பார்ப்பணியின் கணவன், அவளது கொலைச் செயலைப் பொறுக்க முடியாதவனாய், அவள் கையால் உணவு பெற்று உண்ணவும் உடன்படாதவாைய், வடமொழி வாசகம் ஒன்று எழுதி அவள் கையில் தந்து இதை யாரிடமாவது காட்டுக என்று கூறி அவளைப் பிரிந்து வடநாடு சென்றுவிட்டான். அவள் பல தெருக்களிலும் சுற்றி அலைந்து - பல வீடுகட்கும் சென்று, தன் பழியைத் தீர்க்கும் வழி செய்து தன்னைக் காத்துக் கணவனோடு சேர்த்து வைக்க வேண்டும் எனக் கெஞ்சிக் குறையிரந்து கொண்டிருந்தாள். தெருவில் அவளைக் கண்ட கோவலன், அருகே வரச் செய்து அவளது குறையைக் கேட்டு, அவளது பழி தீர ஏராளமான அறங்கள் புரிந்து, அவளுக்குத் தூய்மை உண்டாகச் செய்து நிறைந்த பொருள் கொடுத்து அவளைக் கணவனோடு சேர்த்து வைத்தான்.
“தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானஞ் செய்து அவள்தன் துயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத்து உறுபொருள் கொடுத்து
என்பது பாடல் பகுதி. பெரிய அளவில் பொருளுதவி கோவலன் புரிந்ததால், மாடலன் வாயிலாகச் ‘செல்லாச் செல்வன்’ என்று குறிப்பிடப் பட்டுள்ளான். அழியாத - குறையாத - செல்லாத பெரிய செல்வம், பின்னர்க் கோவலனை விட்டுச் சென்றுவிட, அவன் பிழைப்புக்காக மதுரை ஏகியது இரங்கத்தக்கதாகும். கொடைச் செயலால் புகழ் நிலைத்ததால், அப்புகழே செல்லாச் செல்வமாகும் என்றும் கருத்து கொள்ளலாம். ஈண்டு, ‘நத்தம் போல் கேடு’ (235) என்னும் திருக்குறள் பகுதி ஒப்பு நோக்கத்தக்கது.
இந்தப் பகுதியில் வடமொழி வாடை மிகுதியாக வீசுகிறது. வடமொழி வாசகம் எழுதிய ஏட்டை அப்பெண்ணிடமிருந்து கோவலன் பெற்றிருக்க வேண்டும். வேதம் வல்ல அந்தணர்கள் எழுதியுள்ள நூல்களில், இன்னின்ன அறச் செயல்கள் புரியின் கொலைப் பழி நீங்கும் என்று எழுதப்பட்டுள்ளபடி கோவலன் செயல்பட்டான்:
“ஒத்துடை அந்தணர் உரைநூல் கிடக்கையில்
தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
என்பது பாடல் பகுதி. அந்தக் காலத்திலேயே ஆரியம் தென்னகத்தில் நிலைத்துவிட்டது என்பது தெரிகிறது.
இல்லோர் செம்மல்
கொடியவன் ஒருவன் ஒரு பெண்ணைக் கற்பு கெட்டவள் எனப் பொய்ச் சான்று புகன்று அவளுடைய கணவனை நம்பச் செய்து அவளது வாழ்க்கையைப் பாழ்படுத்தினான். இதை அறிந்த தெய்வப் பூதம் ஒன்று அவனைக் கொல்வதற்காகக் கைப்பற்றிக் கொண்டது. அதையறிந்த அவனது தாய் பூதத்திடம் ஓடி, என் உயிரை எடுத்துக் கொண்டு என்மகன் உயிரைக் காத்திடுக என வேண்டினாள். அப்பூதம் உடன்படாது அந்தத் தாய் எதிரிலேயே அவனை அடித்துக் கொன்றது.மகனிழந்த தாய் பிரிவுத்துயராலும் வறுமையாலும் வாடி வருந்தினாள். அவளுடைய சுற்றத்தினரும் அவளைக் காக்க முடியாத அளவுக்கு வறுமை வாய்ப்பட்டு அல்லல் உழந்தனர். இந்த நிலைமையை அறிந்த கோவலன், மகனிழந்த தாய்க்கும் சுற்றத்தார்க்கும் போதிய பொருளுதவி செய்து அவர்கட்குப் பல்லாண்டுகட்கு மறுவாழ்வு தந்தான். இல்லாதவர்க்கு உதவியதால் மாடலன் வாயிலாகக் கோவலன் “இல்லோர் செம்மல்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளான்.
“ஒழிககின் கருத்தென உயிர்முன் புடைப்ப,
அழிதரும் உள்ளத் தவளொடும் போந்தவன்
சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணி அறுத்துப்
காவிரிப்பூம்பட்டினத்தில் பூத சதுக்கத்தில் உள்ள பூதம், தீமை செய்தவர்களை அடித்துக் கொன்று விடுமாம். சிலம்பில் இந்திர விழவு ஊர் எடுத்த காதையில் பூத சதுக்கம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. சதுக்கம் = நால்சந்தி = நான்கு தெருக்கள் கூடும் இடம். தவக்கோலத்தில் மறைந்து நின்று கூடா ஒழுக்கம் கொள்ளும் பொய்த் தவசிகளையும், கற்பு கெட்டு ஒழுகும் தீய பெண்களையும், முறை தவறும் அமைச்சர்களையும், பிறர் மனைவியை விரும்பிக் கெடுப்போரையும், பொய்ச் சான்று புகல்வோரையும், புறங்கூறுபவரையும் கொல்வேன் என்று சதுக்கப் பூதம் எங்கும் கேட்க எச்சரிக்கைக் குரல் எழுப்பி, அவ்வாறு தவறு செய்பவர்களைக் கொன்று விடுமாம். பாடல் பகுதி:
“தவமறைங் தொழுகும் தன்மை யிலாளர்
அவமறைக் தொழுகும் அலவல் பெண்டிர்
அறையோ கமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்
காதம் நான்கும் கடுங்குரல் எழுப்பிப்
என்பது பாடல் பகுதி. இந்தப் பூதந்தான், ஒரு நல்ல பெண்ணைக் கற்புக் கெட்டுவிட்டாள் என அவளின் கணவனிடம் கூறி நம்ப வைத்தவனைக் கொன்றது.
அறிவியல் முறைப்படி நோக்கின், இது உண்மையாயிருக்க முடியுமா? உண்மையாயின், ஊர் - உலகத்தில் தீயவர் ஒருவரும் இருக்க முடியாதே. இது உண்மையாயின், இப்போது உலகில் இருக்கும் தீயவர்களைப் புடைத்துக் கொல்ல ஒரு பூதம் போதாதே - ஒரு கோடி பூதமாவது தேவையாயிற்றே. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த என்னென்ன விளம்பரமோ செய்கிறார்களே. இந்தப் பூதங்களைத் தேடிப் பிடித்துக்கொண்டு வந்தால் போதுமே!
இது உண்மையோ - பொய்யோ! அந்தக் காலத்தில் இது நடந்திருக்குமோ - இராதோ - இதிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதாவது: இந்தக் காலத்தில் இத்தகைய குற்றவாளிகள் ஒறுக்கப்படாமல் எப்படியோ தப்பித்துக் கொள்கிறார்கள். இவர்களை வாளா விடாமல் தேடிப் பிடித்துத் தக்க ஒறுப்பு தரவேண்டும் என்பதாகும்.
அருங்கலை ஆர்வலன்
கோவலன் புறஞ்சேரியில் தங்கியிருந்தபொழுது ஆங்கு வந்த பாணர்களுடன் சேர்ந்து கொண்டு, யாழ் மீட்டி இசைக் கலை நுட்பம் வழுவாமல் வாசித்தானாம். இதனால் அவன் அருங்கலை ஆர்வலன் என்பது புலனாகும்.
“பாடும் பாணரின் பாங்குறச் சேர்ந்து... (105)
என்பது பாடல் பகுதி. கோவலன் பாணர்களை நோக்கி, மதுரை இன்னும் எவ்வளவு தொலைவு உள்ளது என்று வினவினானாம். மதுரைக் காற்று வரத் தொடங்கி விட்டது - இன்னும் சிறிது தொலைவிலேயே மதுரை உள்ளது என்று அவர்கள் கூறினராம். இந்நிகழ்ச்சியால், கோவலன் எவருடனும் கலந்து பழகுபவன் என்பது புலப்படும்.
ஆறுதல் உரை
கோவலனை இவ்வாறு பலபடப் புகழ்ந்து பாராட்டிய மாடலன், இறுதியில் அவனுக்கு ஆறுதல் கூறுகின்றான். கோவலனே! யானறிந்த வரையும், நீ இந்தப் பிறப்பில் நல்வினைகளே செய்துள்ளாய். அங்ஙனம் இருக்கவும், வீட்டை விட்டுப் பிரிந்து, தனியொருவனாக நின்று, இந்தத் திருத்தகு மாமணிக் கொழுந்தாகிய கண்ணகியுடன் இங்கே வந்தது பழைய ஊழ்வினைப் பயனாக இருக்கலாம் - வருந்தாதே - என்றான்:
“இம்மைச் செய்தன யானறி கல்வினை
உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்துஇத்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது
என்பது பாடல் பகுதி.
இளங்கோவடிகள், காப்பியத்தின் தொடக்கத்திலேயே கோவலனைப் புகழ்ந்திருப்பினும், அவனுடைய வாழ்க்கையின் இடைப் பகுதியில், மனைவியையும் பெற்றோரையும் பிரிந்து கணிகை வீட்டில் காலத்தையும் செல்வத்தையும் கழித்து விட்டானாதலின், காப்பியம் படிப்போர்க்கு, அவன் இறந்தால்கூட அவன்மேல் பரிவு ஏற்படாது. அதனால், கொலைக்களக் காதைக்கு முன்காதையாகிய அடைக்கலக் காதையில் அவனுடைய சிறப்புகளையெல்லாம் மாடலன் வாயிலாக இளங்கோவடிகள் பொழிந்து தள்ளியுள்ளார். இஃது ஒருவகைக் காப்பியக் கலைத்திறனும் காப்பியச்
சுவையூட்டலுமாகும்.கற்பிக்கும் முறை
பாடம் கற்பிக்கும் ஆசிரியர், ஒரு மாணாக்கன் ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றால், அவனை மட்டப் படுத்தாமல் அவன் வேறு பாடங்களில் மிக்க மதிப்பெண் பெற்றிருப்பதைக் கூறிப் பாராட்டி, பின்னர், இந்தப் பாடத்தையும் இன்னும் சிறிது நன்றாகப் படித்திருந்தால் இதிலும் மிக்க மதிப்பெண் பெற்றிருக்கலாம் என்று கூறி ஊக்கப்படுத்த வேண்டும். இது ஒருவகைக் கற்பிக்கும் முறை (Method of Teaching) இது போல கோவலன் சோர்ந்திருந்தபோது முன் அவன் ஆற்றிய உயரிய செயல்களைக் கூறிக் கூறி மாடலன் ஆறுதல் செய்திருப்பது சுவைக்கத்தக்கது.
தெய்வம் வெல்லல்:
காட்டு வழியில், கோவலன் நீர் வேட்கையைத் தீர்க்க, கவுந்தியையும் கண்ணகியையும் ஓரிடத்தில் அமர வைத்து விட்டு ஒரு பொய்கைக் கரையில் போய் நின்றான். அப்போது, அந்தக் காட்டில் உள்ள பெண் தெய்வம் ஒன்று, மாதவியின் தோழியாகிய வயந்தமாலையின் வடிவுகொண்டு வந்து, கோவலனிடம், மாதவியின் துயர நிலையைக் கூறி, அவள் வெறுப்பால் வயந்தமாலையாகிய என்னையும் துரத்தி விட்டாள். எனக்கு வேறு போக்கிடம் இல்லை. நீ காடு நோக்கிச் செல்வதைக் கேள்வியுற்று உன்னை அடையலாம் என்று இங்கு வந்தேன். நீதான் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி மயக்கியது. வழியில் ஒரு பெண் தெய்வம் வந்து மயக்கும் என மறையவன் ஒருவன் முன்னரே கூறிய செய்தி கோவலனது நினைவுக்கு வந்தது. உடனே அவன் கொற்றவையின் மறைமொழியை (மந்திரத்தை) உரு வேற்றினான் (செபித்தான்). உடனே அத்தெய்வம் அவ்விடம் விட்டு அகன்று விட்டது. செல்லுமுன், இதைக் கவுந்திக்கும், கண்ணகிக்கும் தெரிவிக்காதே என்று சொல்லிச் சென்றதாம். இது ஒருவகைப் பெண்மை இயல்புபோலும்!
கானுறை தெய்வத்திற்குக் கோவலன் இளப்பமாய்த் தோன்றியிருக்கிறான். அதாவது - இவன் காமவேட்கை கொண்டவன் - கண்ணகியை விட்டு மாதவி பின்னால் திரிந்தவன் - வயந்த மாலையையும் ஒரு கை பார்த்திருப்பான் - அதனால் நமக்கும் இவன் படிவான் - என அத்தெய்வம் எண்ணியிருக்கிறது. ஒரு முறை கெட்ட பெயர் எடுத்துவிடின், அது மறையாது - மறைவதானாலும் நீண்ட காலம் பிடிக்கும் என்பது இதனால் புலப்படும். மறைமொழி உருவேற்றி வென்றானாம். தெய்வம் வயந்தமாலையின் உரு எடுத்தது - இவனை மயக்கிற்று - இவன் மறைமொழியால் வென்றான் - என்னும் செய்திகளைப் பகுத்தறிவாளர் - அறிவியலார் நம்புவது கடினம். இது அந்தக் காலக் காப்பிய நீரோட்டமாகும். இந்தச் செய்தி காடு காண் காதையில் சொல்லப்பட்டுள்ளது.
தனது நீர் வேட்கையைத் தவிர்த்துக் கொண்ட கோவலன் மனைவியை மறக்கவில்லை. காட்டிலே ஆண் மான், ஓரிடத்தில் சிறிதளவு இருந்த தண்ணீர் தனக்கும் பெண் மானுக்கும் போதாது என்று எண்ணித் தான் பருகி விட்டது போல் நடித்துப் பெண் மானைப் பருகச் செய்த பிணைப்பும் களிறு பிடிக்குச் செய்த உதவியும் தமிழிலக்கியங்களில் தண்ணீர் பட்ட பாடு. மானே அங்கனமெனில், கோவலன் மறப்பானா? ஒரு தாமரை இலையைச் சுருட்டி மடக்கிக் குவளை போல் செய்து அதில் தண்ணீர் கொண்டு போய்க் கண்ணகிக்குத் தந்தானாம். இதை எழுதிய இளங்கோவடிகள், கோவலன் கவுந்தியடிகட்குத் தண்ணீர் கொடுத்ததாகச் சொல்லாமையால், கோவலன் குறைபாடு உடையவனா அல்லது கவுந்தியடிகள் தேவையில்லை என்று சொல்லியிருப்பாரா? துறவி பசி தாகத்தைத் தாங்க முடியும் போலும்!
இங்கே இலக்கிய ஒப்புமை காண்டல் என்ற முறையில், கம்பராமாயணம் - ஆரணிய காண்ட ம் - அயோமுகிப் படலத்தில் உள்ள ஒரு செய்தி காண்போம்.
நீர் கொணரச் சென்ற கோவலனை ஒரு தெய்வம் காதலித்தது போலவே, காட்டில் இராமனுக்காக நீர் கொணரச் சென்ற இலக்குவனை வழியில் அயோமுகி என்பவள் காதலித்தாளாம். நீர் கொணரப்போன இடத்தில் காதலிக்கப்பட்டமை, இரண்டு காப்பியத்திலும் உள்ள பொதுச் செய்தியாகும்.
மாதவியின் மடல்கட்கு மயங்காமை:
மாதவி கோவலனுக்கு இரண்டு மடல்கள் அனுப்பினாள். அவன் ஒன்றுக்கும் மயங்கவில்லை. முதலாவது:- கோவலன் கானல் வரி பாடி மனமாற்றம் ஏற்பட மாதவியை விட்டுப் பிரிந்து வந்து விட்டான் அல்லவா? அவன் திரும்பவும் வர வேண்டும் என வேண்டி மாதவி வயந்தமாலை வாயிலாக ஒரு மடல் அனுப்பினாள். மடல் உருவாக்கப்பட்ட விதம் வியப்பானது. அணிந்திருந்த மாலையில் இருந்த தாழை மடலை எடுத்து விரித்து, பித்திகைப் பூவின் நுனியை எழுத்தாணியாகக் கொண்டு, செம்பஞ்சுக் குழம்பில் தோய்த்து எழுதினாள். என்ன என்று எழுதினாள்: இள வேனில் என்னும் இளவரசனும் திங்களாகிய செல்வனும் மன்மதனும் செய்யும் கொடுமைகள் வியப்பில்லை - வெளிப்படை. அன்பு கூர்ந்து வந்தருளுக - என்றெல்லாம் மழலை மொழி பல அமைத்து எழுதி வயந்தமாலையிடம் தந்து, மடலின் உட்பொருளை நன்கு அவருக்கு எடுத்துக் கூறி அழைத்து வருக என்று ஏவினாள். வயந்தமாலை கூல மறுகில் கோவலனைக் கண்டு இன்மொழி கூறி ஈய முயன்றாள். ஆடல் மகள் ஆதலின் இதுவும் செய்வாள் இன்னமும் செய்வாள் - என்னவும் செய்வாள் எனக் கருதி மடலை வாங்க மறுத்துவிட்டான் கோவலன். மறுப்பை யறிந்த மாதவி சொல்லொணாத் துயர் உழந்தாள். இந்தச் செய்தி வேனில் காதையில் உள்ளது.
பண்டு மடல்களில் எழுதியதால்தான் கடிதத்திற்கு ‘மடல்’ என்னும் ஒரு பெயர் தரப்பட்டது போலும்.
இரண்டாவது மடலாவது:-
கோவலன் நடு வழியில் ஒரு நாள் காலையில், ஒழுக்கம் வழுவிய பார்ப்பனர் இருக்கும் பகுதியில் கவுந்தியையும் கண்ணகியையும் தங்கச் செய்து, தான் காலைக்கடன் முடிப்பதற்காக ஒரு நீர்க்கரையை அடைந்தான். அவ் வேளையில், மாதவி தந்த மடலை எடுத்துக் கொண்டு கோசிகன் என்னும் பார்ப்பனன் பல இடங்களிலும் கோவலனைத் தேடிக் காண முடியாமல் இவ்விடத்தை அடைந்தான். கோவலன் அப்பக்கம் இருப்பதை, பல இடங்களிலும் தேடி அலைந்த களைப்பினால் கோசிகன் அறியவில்லை; அருகிலிருந்த ஒரு பந்தரில் மாதவி என்னும் கொடி (குருக்கத்திக் கொடி) வாடியிருப்பதைக் கண்டான். உடனே அவன், ஏ மாதவியே (குருக்கத்திக் கொடியே)! கோவலனைப் பிரிந்ததனால் வாடிக் கிடக்கின்ற மாதவி போல், நீயும் கோடை வெப்பம் தாங்க முடியாமல் வாடியுள்ளாயோ, என்று ஒரு பேச்சுக்குச் சொன்னான். இது கோவலனின் செவிக்கு எட்டியது. உடனே கோவலன் கோசிகனிடம் விவரம் கேட்டான். கோசிகன் கூறலானான்.
ஐயனே! உன்னைப் பிரிந்த உன் பெற்றோர்கள் அருமனி இழந்த நாகம் போலவும் உயிரை இழந்த உடல் போலவும் பொலிவற்றுக் கிடக்கின்றனர். உன் சுற்றத்தார்கள் துன்பக் கடலில் தோய்ந்து தவிக்கின்றனர். உன் தந்தை உன்னைத் தேடிக் கொண்டுவரும்படி ஏவலாளரைப் பல இடங்கட்கு அனுப்பியும் பயன் இல்லை. புகார் நகரம் இராமனைப் பிரிந்த அயோத்திபோல் பேதுற்றுக் கிடக்கிறது. இவற்றை வயந்தமாலை வாயிலாக அறிந்த மாதவி வருத்தத்தோடுள்ளாள் என்பதை அறிந்து யான் அவளைக் காணச் சென்றேன். அவள் இந்த மடலை எழுதிக் கூந்தலால் மண் முத்திரையிட்டு உன்னிடம் அளிக்கச் சொன்னாள். அவ்வாறே யான் தேடியலைந்து இங்கே உன்னைக் கண்டேன் என்று கூறி, மாதவி தந்த மடலைக் கோவலனிடம் கொடுத்தான். மாதவியின் கூந்தல் வாடை வீசிய அம்மடலைக் கோவலன் பெற்று விரித்துப் படித்துப் பார்த்தான். அதில் எழுதியிருந்ததாவது: - (புறஞ்சேரி யிறுத்த காதை)
“அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர் பணியன்றியும் குலப்பிறப் பாட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
என்பது மடலில் எழுதப்பட்டிருந்தது. இதன் கருத்தாவது:
அடிகளே (பெரியோய்) முதலில் உம் திருவடிகளை யான் வீழ்ந்து வணங்குகிறேன். யான் கூறும் எளிய செய்தியை நீங்கள் மனத்தில் கொண்டு ஏற்க வேண்டும். பெற்றோர்க்குத் தொண்டு செய்யாமல் உயரிய குடியில் பிறந்த கண்ணகியோடு இரவில் புறப்பட்டதற்குக் காரணமாகிய என் பிழையைப் பொருட்படுத்தாது, நெஞ்சம் செயலற்று வருந்துவதை நீக்கல் வேண்டும். குற்றமற்ற நல்லறிவுடைய மேலோய் போற்றி (வணக்கம்) — என்பது இதன் கருத்து, சிறிது மாற்றிப் பொருள் கொள்வாரும் உளர்.மடலில் முதலிலும் இறுதியிலும் இக்காலத்தில் வணக்கம் தெரிவிப்பது போலவே இந்த மடலிலும் வணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கண் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என இக்காலத்தில் கூறுவது போலவே, இம்மடலிலும் ‘முன்னர்’ என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. எனது தாழ்ந்த - எளிய உரையைச் செவிமடுக்க வேண்டும் என இக்காலத்தில் அவையடக்கம் கூறுவது போலவே, “வடியாக் கிளவி மனக் கொளல் வேண்டும்” என்பது கூறப்பட்டுள்ளது. ஈற்றில் போற்றி உள்ளது.
இந்த மடலைக் கோவலன் படித்துப் பார்த்ததும், மாதவி “தன் தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கிச்” (95) சொல்லலானான். தன் தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கினான் என்றால் என்ன? “மாதவி நம்மை இன்னும் வெறுக்கவில்லை — குல மரபின்படி வேறொருவனை வரித்துக் கொள்ளவும் இல்லை — நம்மேலேயே பித்தாக — உள்ளாள்” என்பதை அறிந்ததனால், அவள் தொடர்பான ஒருவகைத் தளர்ச்சி நீங்கினான் — என்பது கருத்து. ஆனால் மாதவியின் கடிதத்திற்கு மயங்கி அவள் பக்கம் சாய்ந்துவிடவில்லை.
கோவலனின் மூளை இங்கே சிறிது திறமையாகச் செயல்பட்டது. மாதவி தந்த மடலில் உள்ள செய்தியைத் தன் தந்தையார்க்கு அப்படியே அனுப்பினும் அது பொருந்தும்போல் தோன்றியது. எனவே, அந்த மடலைக் கோசிகனிடம் தந்து இதை என் தந்தையாரிடம் சேர்த்து விடுக எனக் கூறினான். மேலும், தன் பெற்றோர்க்குத் தன் வணக்கத்தைத் தெரிவிக்கும்படியும், அவர்களின் மனத்துயரைக் களைந்து ஆறுதல் கூறும்படியும் சொல்லி அனுப்பினான். பெற்றோரைப் பிரிதற்குக் காரணமாயிருந்த மாதவி தந்த மடலே, இப்போது பெற்றோரைப் பற்றி எண்ணத் தூண்டியுள்ளது. சுவையான கறபனை.கோவலனின் கடவுள் கொள்கை
கோவலனின் கடவுள் கொள்கை என்ன? - அவன் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவன்? - என்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூறக்கூடிய தெளிவான அகச்சான்று சிலப்பதிகாரத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. அவன் கண்ணகியுடன் மதுரைக்குப் புறப்பட்டபோது, இடைகழியைக் கண்ணகியுடன் கடந்து சென்றான். அப்பால், திருமால் கோயில், புத்தன் கோயில், அருகன் கோயில் ஆகியவற்றை வலம் வந்து வழிபட்டானாம். பாடல்:
“நீள்கில வாயில் நெடுங்கடை கழித்தாங்கு
அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து”
“பணைஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் கீழல் அறவோன் திருமொழி
அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர விகாரம் ஏழுடன் போகி” (8-14)
“ஐவகை கின்ற அருகத் தானத்து (18)
என்பது பாடல் பகுதி. பாம்பில் பள்ளி கொண்ட மணிவண்ணன் கோட்டம் என்பது திருமால் கோயில். “போதி - அறவோன் - இந்திர விகாரம் ஏழ்” என்பது புத்த விகாரம். “அருகத் தானத்து - சிலா தலம்” என்பது அருகன் இருப்பிடம். (நாடு காண் காதை)
வைணவம், பெளத்தம், சமணம் என்னும் முச்சமயத் தெய்வங்களையும் வேறுபாடின்றிக் கோவலன் வழிபட்டுள்ளான். சிவன் கோயில் இங்கே இடம் பெறவில்லை.
முதல்முதல் சமணப் பெண் துறவியாகிய கவுந்தியைக் கண்டபோது, கோவலன் அவரைக் கைதொழுது வணங்கியுள்ளான்.ஒரு சோலையில் சமணச் சாரணர் வந்தபோது அவர் காலில் விழுந்து கோவலன் வணங்கியுள்ளான்.
மாதரி வீட்டில், இரவு வருவதற்குள், சமணர் வழக்கப்படி உணவு கொண்டான்.
இவற்றையெல்லாம் ஒப்பிட்டு நோக்குங்கால், கோவலன் இன்ன சமயத்தான் எனத் தெளிவாகக் கூற முடியாவிடினும், சமண சமயத்தவன் எனக் குறிப்பாகக் கொள்ள இடமுண்டு. காரணங்கள்?
இந்தக் காலத்தில் அருகன் கோயில் இல்லாத ஊர்களில் எல்லாம் அந்தக் காலத்தில் அருகன் கோயில் இருந்துள்ளது. புகாரிலும் சமணம் பரவியிருந்தது. உடன் வழி கடந்த கவுந்தி சமணர். மதுரையில் உள்ள அருகன் கோயிலை வணங்கக் கவுந்தி சென்றுள்ளார். கோவலன் மதுரையில் பொழுது போவதற்குள் உணவு கொண்டான். மதுரையில் பெரிய அளவில் சமணம் பரவியிருந்தது. இந்த வரலாறு நிகழ்ந்த சில நூற்றாண்டுகட்குப்பின், மதுரையில் ஞானசம்பந்தர் சமணரோடு வாதிட்டு வென்று பாண்டிய மன்னனையும் சைவனாக்கியுள்ளார். தெற்கே இப்படியென்றால், வட தமிழ் நாட்டில், காஞ்சியில் ஆண்ட மகேந்திரவர்மப் பல்லவன் முதலில் சமணனாய் இருந்தமையும் நாவுக்கரசர் போராடினமையும் அறிந்த செய்தியே. தமிழ்நாடு முழுதும் சமணம் தலைவிரித்தாடிய காலத்தில் கோவலனும் சமணத்தைச் சார்ந்திருக்கலாம்.
மாமுது பார்ப்பான் மறை வழிப்படிக் கோவலனுக்குத் திருமணம் செய்து வைத்தான் எனில், சமணத்தில் மாறியவர்களும் பழைய முறையைப் பின்பற்றுவது உண்டு. புதுச்சேரியில் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் மாதாகோயிலில் திருமணம் முடித்துப் பின் வீட்டிற்கு வந்து பழங்கால முறைப்படி எல்லாம் செய்கின்றனர். சமணமும் பெளத்தமும் இந்து மதம் என்னும் குட்டையில் ஊறிய மட்டைகளே. இந்து மதத்திலிருந்தே இவை தோன்றின. இவர்கட்கும் இராமாயணமும் பாரதமும் உண்டு. நன்னூல் எழுதிய சமணராகிய பவணந்தி முனிவர், எழுத்ததிகாரத்தின் தொடக்கத்தில்,
“பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த
நான்முகன் தொழுதுகன்கு இயம்புவன் எழுத்தே”
என நான் முகனையும் (பிரமனையும்), சொல்லதிகாரத்தின் தொடக்கத்தில்,
“முச்சகம் கிழற்றும் முழுமதி முக்குடை
எனத் திருமாலையும் (அச்சுதனையும்) வணங்கியுள்ளார். இவர்கட்கும் நான்முகன், திருமால் முதலியோர் உண்டு. எனவே, கோவலன் திருமால் கோயிலை வணங்கியதைக் கொண்டு, அவன் சமணன் அல்லன் என்று கூறவியலாது.
கோவலனின் இறுதி உருக்கம்
கோவலன் மாதரி வீட்டில் கண்ணகி படைத்த விருந்தை உண்டு அவளுடைய சிலம்புகளுள் ஒன்றைப் பெற்றுக் கொண்டு விற்பதற்காகக் கடைத் தெருவிற்குப் புறப்படு முன் கண்ணகியைத் தழுவிக் கொண்டு, அவளைத் தனியாக விட்டுச் செல்வதற்காக மனம் உருகிக் கண்களில் துளிக்கும் கண்ணீரை மறைத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றான். பாடல்:
“கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
சீறடிச் சிலம்பின் ஒன்றுகொண் டியான்போய்
மாறி வருவன் மயங்காது ஒழிகெனக்
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னை
ஒருங்குடன் தழீஇ உழையோர் இல்லா
வருபனி கரந்த கண்ண னாகிப்
பல்லான் கோவலர் இல்லம் நீங்கி
வல்லா நடையின் மறுகில் செல்வோன்”
(கொலைக் களக் காதை 91-99)
என்பது பாடல் பகுதி, ஆற்றாமை காரணமாகக் கோவலன் கண்ணகியை ஒருங்குடன் - அதாவது - மார்போடு இறுக அணைத்துத் தழுவிக் கொண்டானாம். குடி முதல் சுற்றத்தார், குற்றிளையோர், அடியோர் பாங்கினர், ஆயத்தார் முதலியோருடன் இருந்த கண்ணகியை இப்போது தனியே விட்டுச் செல்வதாக உள்ளம் வெதும்பி உருகினானாம். கண்ணீரைக் கண்ணகி கண்டால் மிகவும் வருந்துவாள் என்பதற்காக, என்னவோ துடைப்பவன் போல் துடைத்து மறைத்தானாம். வல்லா நடையின் - அதாவது - நடக்க முடியாத தள்ளாட்டத்துடன் தெருவில் சென்றானாம்.
கண்ணகியைத் தனியாய் விட்டுச் சென்றான் என்பதில் ஒரு கருத்து மறைந்துள்ளது. இப்போது மட்டும் அன்று - இனியும் அவள் தனியாயிருக்கச் செய்து விட்டான் - மீண்டும் அவள் கோவலனோடோ அல்லது - அவர்களுடைய சுற்றத்தாரோடு கூடப்போவதில்லை - என்னும் கருத்து இதில் மறைந்து கிடக்கின்றதல்லவா?
கோவலன் குழப்பம்
கோவலன் கண்ணகியை விட்டு மாதவிபால் தாவினான். மாதவியின் கானல் வரிப்பாட்டைக் கேட்டு, அவள் வேறொருவன் மேல் காதல் கொண்டுள்ளாள் எனக் குழப்பம் எய்தி அவளைப் பிரிகிறான். கோவலன் இன்னொருத்தியிடம் உள்ளம் செலுத்தியிருப்பது போன்ற குறிப்பு புலப்படும் பாடலைப் பாடியதால், மாதவியும் இன்னொருவன் மீது எண்ணம் கொண்டவள் போல் பாடினாள். இருவர் பாடியனவும் உண்மையானவையல்ல. விளையாட்டாகப் பாடியவையே. ஆனால் விளையாட்டு வினையாயிற்று. முன்னர் இந்திர விழாவில் மாதவி ஆடல் பாடல் செய்ததையே பிடிக்காமல் வெறுத்தவன் கோவலன்.
இதில் ஆண்மையின் ஆட்சி புலப்படுகின்றது. ஆடவன் எத்தனைப் பெண்கள் மேலும் விருப்பம் கொள்ளலாம்; ஆணுக்குக் கற்பு தேவையில்லை. ஆனால், பெண் ஒருவனைத்தவிர இன்னொருவனை நினைக்கவும் கூடாது; பெண்ணுக்குக் கற்பு இன்றியமையாதது - என்ற கொள்கை - அதாவது - ஆண் ஆட்சிக் கொள்கை புலப்படுகிறது. கோவலனது குழப்பம் ஆண் ஆட்சியின் அடிப்படையில் ஏற்பட்டதே.
உண்மையிலேயே மாதவிக்கு மாற்றான் எவன்மீதும் எண்ணம் இல்லை என்பதற்குத் தக்க சான்று நூலிலேயே உள்ளது. கோவலன் பிரிந்து சென்ற பின்னர், தோழி வயந்த மாலை வாயிலாக மடல் எழுதிக் கோவலனுக்குக் கிடைக்கச் செய்ததே தக்க சான்றாகும். ஆண் ஆட்சியின் காரணமாகக் கோவலன் மடல் பெற மறுத்து விட்டான். இது கடைத் தெருவிலேயே (கூல மறுகில்) நடைபெற்ற மானக்கேடு.
கோவலன் மாதவியை நம்பாமை தகாதெனினும், அவன் கண்ணகியை அடைய இது வழி வகுத்துக் கொடுத்தது. ஆனால் கண்ணகியை அடைந்தமை, நன்மைக்குப் பதிலாக இறக்கும் அளவுக்குத் தீயதாய் முடிந்தது இரங்கத்தக்கது. எதிரதை யாரறிவார்!
கோவலனின் குறைபாடுகள்
கோவலன் பற்பல அறச்செயல்கள் புரிந்திருப்பினும், கலைகளில் ஆர்வமும் பயிற்சியும் உடையவனாய் இருந்திருப்பினும், பார்ப்பவர் கண்ணுக்கு அவனுடைய குறைபாடுகளே மிகுதியாய்த் தெரியும். முதல் குறை பெற்றோரைப் பிரிந்தமை. பெற்றோர்கள் இவனைத் திருத்தப் பல அறிவுரைகள் கூறினர் . இவன் பொருட் படுத்த வில்லை - பெற்றோர்க்கு அடங்காப் பிள்ளையாகவே இருந்தான் என்பது ‘இரு முது குரவர் ஏவலும் பிழைத்தேன்’ என இவனே பின்னோரிடத்தில் கூறியிருப்பது கொண்டு தெளியலாம்.
அடுத்தது கண்ணகியைப் பிரிந்த குற்றம், ஒரு பெண்ணின் வாழ்வைக் கெடுத்து ‘வாழா வெட்டி’ என்னும் பெயர் ஏற்படச் செய்தமை கொடியது. மற்றும், தந்தைக்கு உதவியாக உடனிருந்து வாணிகத்தைக் கவனிக்காமை குற்றம். வாணிகத்தைப் பெருக்கிப் பொருள் ஈட்டாவிடினும், இருந்த பொருளையெல்லாம் அழித்தமை இன்னும் பெரிய குற்றமாகும். பெற்றோருக்கும் உற்றார் உறவினர்க்கும் தெரியாமல், இருளில் கண்ணகியை அழைத்துக்கொண்டு தனி வழி சென்றமை குற்றத்தின் மேல் பெருங்குற்றமாகும்.
ஆகக் கோவலன் வாழ்வாங்கு வாழவில்லை. ‘சாகிற காலத்தில் சங்கரா - சங்கரா’ என்பது போல் இறுதிக் காலத்தில் தன் குறைபாடுகளை உணர்ந்து திருந்தினாலும், முடிவு கொல்லப்பட்டதேயாகும்.
கோவலனின் குறைபாடுகள், ஒரு வளமான காப்பியத்தைத் தமிழ் மொழிக்குத் தந்தது என்ற அளவில் ஆறுதல் கொள்ளலாம்.